மாதவராஜ் பக்கங்கள் 6

ஆதவாவின் குழந்தை ஓவியத்தில் ‘கடவுளைக் கொல்லுதல்’ கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் போதுதான்,  கடவுளின் பேரால் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு இருந்தார் அவர். உலகத்தின் வயிற்றில் அடித்தவரும், வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டவருமான புஷ்ஷின் ஆத்ம நண்பர் அவர். இதுவரையில் வந்த பிரதமர்களிலேயே இந்திய முதலாளிகளுக்கு மிகவும் பிடித்தமானவர் அவர். முன்னாள் உலகவங்கியின் இயக்குனர்களில் ஒருவர் அவர். வேறென்ன அவரைப் பற்றி சிறப்பாக குறிப்பிடலாம்?   ஆங்.. எந்த மக்களவைத் தொகுதியிலும் நின்று வெற்றி பெறாமல்,  இரண்டாவது முறை வெற்றிகரமாக பிரதமாரகும் சாதனையாளர் அவர்.

இந்த முறை அவருக்கு எந்தக் கடிவாளமும் இல்லை. இனி- இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் உயரும். வறுமையில் உழல்பவர்களின் எண்ணிக்கையும் உயரும். அப்போதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்திருக்கிறது என்று அவரால் மார்தட்டிக் கொள்ள முடியும்.

வாழ்வோடு முட்டி மோதி, எப்படியோ மூன்று வேளை சாப்பிட்ட மனிதர்கள் இனி இரண்டு வேளை மட்டும் சாப்பிடத் தயாராகுங்கள். இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டவர்கள், ஒருமுறை மட்டும் சாப்பிடத் தயாராகுங்கள். ஒருமுறை மட்டுமே சாப்பிட்டவர்கள்......   கடவுளிடம் முறையிடுங்கள். இங்கு எல்லாம் கடவுளின் பெயரால்!!!!

“ ............ ஆகிய நான் கடவுளின் பெயரால்.......”
குற்றம் செய்வதற்கு முன்பே பாவமன்னிப்பின் குரல் கேட்கிறது.

0000

முகத்தில் வெற்றியின் புன்சிரிப்போடு மடிப்புக் கலையாத தூய வெண்ணிற வேட்டிச் சட்டையில், சிவகங்கையிலிருந்து அவரும் பிரசன்னமாகி இருந்தார். இதற்காகத்தானே கடைசி நேர ‘கண்கட்டி’ வித்தை செய்து அந்த கனவான் வந்திருக்கிறார். மனசாட்சியின் பேரில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். துணிச்சல்காரர்தான்.

சும்மாவா கிளியிடம் சொன்னார் மகாகவி பாரதி,  வஞ்சனை செய்வாரடி என்றும் வாய்ச் சொல்லில் வீரரடி என்றும் இவர்களைப் பற்றி.

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!


  1. ஐந்து வருடங்களுக்கு முன்னர், (அப்போ நான் சின்ன பையன்ல...) அப்பா, மாற்று கட்சி அபிமானி, அக்கட்சியினர் முழுதாய் ஐந்துவருடம் ஆட்சி செய்ததையும், அதற்கு முன்னர் ஆட்சி செய்த சுதந்திரக் கட்சியையும் பற்றி விலாவாரியாகச் சொன்னார். நான் கிட்டத்தட்ட அவரோட ஃபேன். அந்த தேர்தலில் நான் வாக்களித்த அக்கட்சி தோல்வியை அடைந்தது.. கணிப்புகள் உடைந்து போயின.

    எனக்கு ஆச்சரியம்தான். அதன்பிறகு அப்பாவே சொன்னார்... இது கைப்பாவை ஆட்சி என்றூ.. அதிலிருந்தே எனக்குப் பிடிப்பதில்லை.... அவரையும்.!!!
    சிறுபான்மையினத்தவரொருவர் ஆள்கிறார் எனும் பெருமை இருந்தது... ஆனால் வெறும் பெருமையை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?


    பதிலளிநீக்கு
  2. ஆகா ......

    சார் .....
    ஆதவோட அந்த பதிவுக்கு லிங்க் தந்தால் நல்ல இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. நெத்தியடி ஆசானே... மந்திரிசபையில் இடம் பிடிக்க பதவிப்பிரமாணத்தை துச்சமென மதித்து வெளியேறிய கணவானைப் பற்றியும் ஒரு கிளறு கிளறிவிட்டிருக்கலாமே...

    பதிலளிநீக்கு
  4. பெயரை சொல்லாவிட்டாலும் நீங்கள் புரட்டியெடுக்கும் நபர்கள் யாரென உணர முடிகிறது.

    பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்...
    இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  5. சிவகங்கையிலிருக்கும் உறவினர் ஒருவரிடம் பேசும்போது சொன்னார். "அவர் எம்.பி-யாக இருந்தால் செய்திருக்கும் விஷயங்களை விட, நிதி அமைச்சராகவும் இருந்தபோது அதிகமாகவே செய்திருக்கலாம். இரண்டையும் வைத்துக் கொண்டு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மனிதர் அவர். இந்த தொகுதி பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே போலத் தான் இன்றும் இருக்கிறது"

    அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டைக் கொள்ளையடிக்க போவோர் பட்டியல் சிறிது சிறிதாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. கொளுத்து என் தோழனே.
    கொளுத்திப்போடு எங்கிருந்தாவது
    அது பற்றிக்கொள்ளும்.
    அதுவரை நமதுகடமை அமபலப்படுத்துதல்.

    பதிலளிநீக்கு
  7. தோற்றவர்கள் வென்றதாகவும் வென்றவர்கள் தோற்றதாகவும் அறிவிக்கப்படும் இந்தப் பாழும் அரசியல் நாசமாய்ப் போகட்டும். அதிகாரங்கள் ஆட்டுவிக்கும் கைப்பொம்மைகள்தானே மக்கள்?

    பதிலளிநீக்கு
  8. ஆதவா!
    பகிர்வுக்கும், இந்தப் பதிவை எழுதத் தூண்டிய உங்கள் கவிதைக்கும் நன்றி.

    mayvee!

    அனானி!

    வெங்கிராசா!

    அகநாழிகை!

    ஜோ!

    காமராஜ்!

    தமிழ்நதி!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
    புரிதலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!