நினைக்க மறந்த தமிழ்ச்சினிமா; சொல்ல மறந்த தமிழ்க்கவிஞர்கள்

PatKalyanImage

 

“பொறக்கும் போது-மனுஷன்
பொறக்கும்போது
இருந்த குணம் போகப் போக மாறுது”

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா”

“இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே”

“இந்தத்- திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் விழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்”

“ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங்கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே”

“தூங்காதே தம்பி தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே”

“வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!”

“உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா, உறவாடும் நேரமடா”

“திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே”

சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனைப் பாடல்கள்!! வாழ்வின் அனுபவங்கள் பற்றிப் படர்ந்திருக்கும் சொற்களில் கட்டிய வரிகள். இசையோடு தமிழ்க் குடும்பங்களுக்குள் எத்தனை காலம் வசித்து வந்திருக்கின்றன. தொலைக்காட்சிகளும், டிவிடி பிளேயர்களும் அறிமுகமாகாத நாட்களில், ஸ்பீக்கர் செட்களின் வழியாக நம் தெருக்களெல்லாம் நதிபோல ஓடிய வண்ணம் இருந்தன. ஒருதலைமுறையே இந்த பாடல்களில் நீந்திக் கிடந்ததே.

இன்றும், இந்தப் பாடல்களை எப்போதாவது கேட்கிறபோது எதோ செய்கிறது. பாடல்களில் இருக்கும் உண்மையின் சூடு இன்னமும் நம்மைத் தீண்டுகின்றன. சமூகத்தின் மீது அசலான கிண்டலும், விமர்சனமும், அன்பும் கொண்ட ஒரு இதயத்திலிருந்து பிறந்த கலையும், இலக்கியமும் ஒரு போதும் மடிந்து போவதில்லை.

ஆனால் பாடல்களைத் தந்தவனை நாமெல்லாம் மறந்தா போனோம்? வேதனையோடுதான் இதைப் பதிவு செய்கிறேன்.

தமிழ்ச்சினிமாவுக்கும், அதன் பாடல்களுக்கும் அர்த்தம் கொடுத்தவனை இன்று யாராவது பேசினார்களா என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். காலையில் கூட முகம், உடலெல்லாம் சிலாகித்து தயாநிதி மாறனை பாராட்டிப் பேசிய கவிஞர் வைரமுத்து கூட ‘இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்’ என்று ஒரு பேச்சுக்குக்கூட சொல்லவில்லை.

பாடல்கள் மட்டும் எழுதாமல் வாழ்வில் பதினேழுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்து, வாழ்வோடு மல்லுக் கட்டியவரைப் பற்றிப் பேசி இவர்களுக்கு பிரயோஜானம் ஒன்றும் இல்லையோ?

இதோ, “சத்தியமா, சாமர்த்தியமா” என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டும், ரம்யா கிருஷ்ணன் ஸ்ட்ராவில் ஜூஸ் உறிஞ்சும் போட்டியை காண்பித்து தங்கள் பிறவிப்பயனை ஆற்றிக் கொண்டு இருக்கும் தொலைக் காட்சிகளில் ஒரு வரிச் செய்தியாக போடக் கூட நேரமில்லை போலிருக்கிறது. இவர்கள்தான் நம்முடைய கலைகளை மொத்த குத்தகை எடுத்து இருக்கிறார்கள்.

நிலவுக்கும் ஆடை கட்டிப் பார்த்தவனை இவர்கள் எப்படி நினைப்பார்கள்.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலே இந்த நேரத்துக் கேள்வியாய் எழுகிறது...

உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா?
இருள் வேண்டுமா?

*

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா.. இந்தப் பாட்டை நினைத்து கொள்ளுங்கள்.. அதுதான் இன்றைய உலகம்.. இங்கே மனிதர்களை விட பணத்துக்குத்தான் மரியாதை.. உடுமலை நாராயண கவியின் பேரன் ஒருவர் கொடைக்கானலில் நான் வேலை பார்த்த கல்லூரியில் கக்கூஸ் கலுவபவராக இருந்தார்.. இதை எங்கே போய் சொல்ல?

  பதிலளிநீக்கு
 2. மன்னனுக்கும், மக்களுக்கும் இடையே, ஏன் எதிர் பார்கிறீர்கள், இடைதரகர்களை???

  பதிலளிநீக்கு
 3. //உடலெல்லாம் சிலாகித்து தயாநிதி மாறனை பாராட்டிப் பேசிய கவிஞர் வைரமுத்து கூட ‘இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்’ என்று ஒரு பேச்சுக்குக்கூட சொல்லவில்லை.//

  வறுத்தமான விசயம்தான்.
  அத்தனை பாடல்களும் அர்த்தம் உள்ள
  பாடல்கள் என்றைக்கும் பொருதிக் கொண்டேதானிருக்கின்றது!

  பதிலளிநீக்கு
 4. :( வருத்தமே மேலோங்குகிறது!
  நாக்க முக்க என்ற கருத்தாழமிக்க பாடல்கள்தானே அதிகம்..ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இவர் பற்றிய பாடம் இருந்ததுபோல் நினைவு. இப்போது பாடத்திட்டம் மாறியிருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 5. காலத்திற்கு மறதி அதிகம், வேதனையாக இருக்கிறது. இப்படித்தான் நம் ஊடகங்கள் இருக்கின்றன, அந்தத் துறையில் இருப்பவர்கள் கூட இப்படியிருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. :-((

  ஒன்றும் சொல்லத் தோணவில்லை. உங்கள் வேதனையில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிச்செல்வதைத்தவிர...

  பதிலளிநீக்கு
 7. அண்ணே யாருகிட்ட என்ன எதிர்பாக்குறீங்க. உங்கள நினைச்சா சிரிப்பா வருது்ங்க.

  அவரு எழுதுனது ரெண்டே புத்தகம். ஒன்னு இதிகாசம், இன்னொன்னு காவியம். உங்களால முடியுமா?

  பிற கவிஞன நினைவுகூர்ந்தாலோ \, உயர்த்திப் பேசினாலோ அவருக்கு என்ன ஆகப் போகுது.

  பதிலளிநீக்கு
 8. நன்றி சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. மக்களுக்காகவே கலை என்று வாழ்ந்த இவர்களை நினைவுபடுத்த இன்னும் 100 மாதவராஜ்கள் பிறந்து வர வேண்டும் போலிருக்கிறது. இந்த நாட்டில்.

  பி.கு: இவ‌ர‌து "கையில் வாங்கினேன் பையில‌ போட‌ல, காசு போன‌ எட‌ம் தெரிய‌லை" பாட்டை எப்போது கேட்டாலும் எனக்குக் கண்ணீர் வரவழைக்கும்.

  பதிலளிநீக்கு
 9. //
  குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
  குருட்டு உலகமடா - இது
  கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
  திருட்டு உலகமடா - தம்பி
  தெரிந்து நடந்துகொள்ளடா - இதயம்
  திருந்த மருந்து சொல்லடா”
  //

  எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... யூ ட்யூப்ல இந்த பாட்டு இருக்கதுனால இப்பெல்லாம் அடிக்கடி கேட்கிறேன்...

  பதிலளிநீக்கு
 10. இரண்டு பாடல் தவிர மற்றவை நன்கு பரிச்சயமான பாடல்கள்.. மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது உங்கள் பதிவு. பொதிகையில் சிறப்பு நிகழ்ச்சி இல்லாவிட்டாலும் எப்போதாவது பழய ஆட்களைப் பற்றி வருவது உண்டு.. ஆனால் பொதிகை பார்ப்பவர்களும் குறைவு .. :(

  பதிலளிநீக்கு
 11. மாதவராஜ்,

  அவர்களை விடுங்கள். அந்த மகாகவியை இங்கு நினைவு கூர்ந்ததற்கு நன்றிகள்!!!

  பதிலளிநீக்கு
 12. கார்த்திகைப் பாண்டியன்!
  வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லிய தகவல் அதிர்ச்சிய்ம், வருத்தமும் அளிக்கிறது.

  அப்பாவி முரு!
  நான் இடைத்தரகர்களை எதிர்பார்க்கவில்லை. தங்கள் முன்னோடிகளை மதிக்கும் மன்சாட்சியை எதிர்பார்த்தேன்.

  முத்துராமலிங்கம்!
  உண்மைதான். அவர் சுட்டிகாட்டிய சீரழிவுகள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன.

  சந்தனமுல்லை!
  அர்த்தமற்ற பாடல்களுக்குத்தான் இங்கு செல்வாக்கை ஏற்படுத்துகிறார்கள்.

  யாத்ரா!
  காலம் மறந்து விடுமா என்ன.. மக்கள் மறக்கடிக்கப்படுகிறார்கள்.

  சென்ஷி!
  வருத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி.


  சைரா பானு!
  பதிலை யோசிப்போமே!


  வேலன்!
  என்ன செய்ய... உங்கள் நையாண்டியில் சமூகத்தின் விமர்சனம் இருப்பதை உணர்ந்து கொள்கிறேன்.


  வெட்டிப்பயல்!
  மிக்க நன்றி.


  தீபா!
  நாமெல்லோரும் இருக்கிறோம்.
  எனக்கும் அந்தப் பாட்டு பிடிக்கும்.


  அதுசரி!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  முத்துலட்சுமி கயல்விழி!
  வருகைக்கு நன்றி. ஆமாம்.. பொதிகை பார்ப்பவர்கள் மிகக் குறைவாகிவிட்டார்கள்.


  நரேஷ்!
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!