கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை

drama stage

சின்ன வயதில் எங்கள் பள்ளியில் பெரும்பாலும் எனக்கு பெண் வேடம்தான். ஆண்டுவிழா, சுதந்திரவிழா கொண்டாட்டங்களில் ஆடுவதற்கு ஜெயராமன் வாத்தியார் அழைத்துக் கொள்வார். கூச்சம் இருந்தாலும், அதுகுறித்து ஒரு பெருமையும் உள்ளுக்குள் இருந்தது.  ஆறுமுகனேரி இந்து நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இது நடந்தேறியது. எட்டாம் வகுப்பில் பெண்வேடம் போடக்கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். நாம் இனிமேல் எல்லாம் பெரிய மனிதன் என்ற எண்ணம் குடியேறியிருந்தது.

அந்த வருடமும் அழைக்கப்பட்டேன். வேண்டாம் எனச் சொல்லிப் பார்த்தேன். ஜெயராமன் வாத்தியார் “சும்மா இருல..” என்றே மிக அலட்சியமாக அதை உதறிவிட்டு, “ஒனக்கு என்ன வேடம் தெரியுமால.. டெஸ்டிமோனா!” என்று அவரே ஆச்சரியப்பட்டு என்னைப் பார்த்தார். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்த மாதிரி. யார் அந்த டெஸ்டிமோனா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. “சார்.. என்னய விட்ருங்க..” என்றேன். “ஏலே..நீதாம் பொம்பளப்பிள்ளை மாதிரி அழகாயிருக்கே.. இங்கிலீஷும் நல்லாப் பேசுற” என்று தோளில் தட்டினார். விழ ஆரம்பித்தேன். “ரத்தத்திலகம் படம் பாத்துருக்கியா... அதுல சிவாஜி ஒத்தல்லாவாக வருவாரே..” என்று சொல்லிக்கொண்டே போனார். தோள் மீது அவர் வைத்திருந்த கைகளைத் தட்டிவிட முடியவில்லை.

ஒரு வாரம் மொட்டை மாடியில் நடந்து நடந்து ஹெட்மாஸ்டர் எழுதிக் கொடுத்திருந்த வசனங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். பரீட்சைக்குக் கூட அப்படி படித்ததில்லை. மகன் ஆங்கிலம் பேசும் அழகைக் கண்டு அம்மா காப்பியெலாம் மாடிக்குக் கொண்டு வந்து தந்தார்கள். வசனங்கள் எனக்குக் கம்மிதான். விஸ்வநாதனுக்குத்தான் அதிகம். ஒத்தல்லோ அவன். மூலக்கரையிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்தான். என்னைவிட குள்ளமாகவும், கருப்பாகவும் இருப்பான். ஆங்கிலம் அழகாய் பேசுவான். ஒத்திகை பார்க்கும் முன்னாலேயே வகுப்பில் “மை லவ்வர், மை லவ்வர்” என்று எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்து விட்டான். கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஜெயராமன் வாத்தியாரிடம் போய் விஸ்வநாதன் கிண்டல் பண்ணுவதாகச் சொல்லி, நடிக்க மாட்டேன் என்றேன். அவர் அவனை சிரித்துக்கொண்டே அதட்டி, என்னையும் பார்த்து சிரித்து “சரி. விடுல” என்றார். இதற்கிடையில் ஹெட்மாஸ்டர் வசன உச்சரிப்புகளையும் சரி செய்து கொண்டிருந்தார்.

ஒத்திகையின் போதுதான் ஒரளவுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புலப்பட்டது. நான் படுத்துக்கொண்டிருப்பேன். விஸ்வநாதன் கையில் ரோஜோவோடு உள்ளே நுழைந்து, காதல் வசனங்களைப் பேசி, என்னை முத்தமிடுவான். உதடு அருகே உதடு கொண்டு வருவான். அவ்வளவுதான். அப்புறம் நான் எழுந்து பேச வேண்டும். அவனும் பேசுவான். கடைசியில் கத்தியால் என்னைக் குத்திக் கொன்று விட்டு கதறுவான். எல்லோரும் ஒத்தல்லோவாக விஸ்வநாதன் சிறப்பாக நடிப்பதாகச் சொன்னார்கள். என்னையும் சொன்னார்கள். வீட்டில் என்னை டெஸ்டிமோனா என்று அண்ணன்களும், தங்கையும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆண்டுவிழா அன்று மதியத்திற்கு மேலேயே என்னை வரச் சொன்னார்கள். திருச்செந்தூரிலிருந்து மேக்கப் போட ஒருவர் வந்திருந்தார். வயதானவர். மூடிய அறைக்குள் அவரும் நானும் மட்டுமே இருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது யார் பையன், பேரன் என எல்லாம் விசாரித்து, “நீ ஜோதி பையனா!” என்று ஆச்சரியமாகக் கேட்டார். ஆமாம் என்றேன். “ம்... ஒங்கம்மாவுக்கு சின்ன வயசுல நான் கிருஷ்ணர் வேடம் போட்டிருக்கேன்” என்று முகத்தில் பவுடரை எதிலோ குழைத்து அள்ளிப் பூசினார். இதற்கு முன்னால் பெண்வேடம் போட்ட போதெல்லாம் இந்த மாதிரியெல்லாம் இல்லை. பாவாடைத் தாவணி கொண்டு போக வேண்டும். சடை, ஒட்டுக்கம்மல் எல்லாம் போட்டு எளிதாக பெண்ணாகி விடுவேன்.

சடை போடாத முடியாகக் கொண்டு வந்து தலையில் வைத்து கிளிப்களை குத்தினார். அப்புறம் அவர் பையிலிருந்து இரண்டு சிரட்டைகளை எடுத்து, அதில் கட்டியிருந்த கயிறுகளைச் சரி செய்தார். என்னச் செய்யப் போகிறார் என்பது புரிந்து, வெட்கத்திலும், கூச்சத்திலும் தத்தளித்தேன். எந்த இடத்தில் வைப்பது என கைகளை என் மார்பருகே கொண்டு வந்து கணக்கு வேறு பார்த்தார். ஐயோ என்றிருந்தது. அப்புறம் வைத்துக் கட்டினார். அதன் மீது ஒரு பிராவையும் அணிய வைத்தார். என் மார்பு என்னவோ போலிருந்தது. சம்பந்தமில்லாமல் துருத்திக்கொண்டிருந்தது. சிரட்டைகள் வேறு தசைகளை அழுத்தின. நாக்கெல்லாம் வறண்டு போனது. என் நிலமை புரிந்திருக்க வேண்டும்.
“இப்படியேவா இருக்கப் போற.. இன்னும் கொஞ்ச நேரந்தான்” என்றார். கண்ணாடியில் என்னைப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது. தள்ளி முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருந்தாலும், அந்த மனிதர் என்ன நினைப்பாரோ என்று அடக்கிக் கொண்டேன்.

பிறகு முட்டை ஒன்றை மிக கவனமாக எடுத்தார். அதுவும் எதற்கு என்று புரிந்தது. ஜெயராமன் வாத்தியார் சொல்லியிருந்தார். முட்டையில் சிறு துவாரம் போடப்பட்டு உள்ளிருந்து மஞ்சள் கரு, வெள்ளைக்கரு உறிஞ்செடுத்துவிட்டு, அதற்குள் சிவப்புச் சாயத்தை நிரப்பியிருந்தார்கள். வயிற்றின் ஓரத்தில் மெல்லிய துணியை உடம்போடு கட்டப்பட்டது. ஒத்தல்லோ கத்தியால் குத்தியதும், முட்டையில் கை வைத்து அழுத்தி உடைத்து ரத்தத்தை வரவழைக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலே மிக லாவகமாக அந்த பஞ்சு போன்ற கவுன் அணிந்தேன். ஜன்னலில் இருந்து நான்கைந்து பையன்களின் சிரிப்புச் சத்தம். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் வகுப்பு மாணவர்கள். சாதாரண காலங்களிலேயே என்னை கிண்டல் செய்யும் எங்கள் தெரு துஷ்டன் முத்துராமனும் இருந்தான். அவமானமாய் இருந்தது. மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர் “ச்சீ பசங்களா” என்று விரட்டினார். ஜன்னலை மூடினார்.

“ஏலேச் சிரட்டை” என்று கத்திக் கொண்டே ஓடினார்கள். செத்தேன். உடம்பில் எந்த ஜீவனும் இல்லாதது போலாகி விட்டேன். வெளியே ஸ்பீக்கர் சத்தம் கேட்க ஆரம்பித்தது. நாடகம் ஆரம்பிக்க இன்னும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகும் என்றார்கள். தலைகாட்டவே இல்லை. அம்மா தேடி வந்து காபி தந்து, என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அழுகை வரும் போலிருந்தது. இடையில் ஜெயராமன் வாத்தியார், ஹெட்மாஸ்டர் எல்லோரும் வந்து வந்து பார்த்து விட்டுப் போனார்கள். அப்புறம் விஸ்வநாதனும் வந்து பார்த்தான். மேக்கப் போட்டு ஜாக்‌ஷன் துரை போலிருந்தான். “ஹலோ மை லவ்வர்” என்றான். ச்சீ என்றேன். “ஏன் கோபம் மை டியர்” என்றான். நான் பேசாமல் முறைத்தேன். பக்கத்தில் வந்தான். “இதென்ன மாது” என்று கையை நீட்டினான். “ச்சீ” என்றூ திரும்பிக் கொண்டேன். போய்விட்டான்.

அவன் பாட்டுக்கு வெளியே நடமாடிக் கொண்டிருந்தான். என் மார்பை நான் பார்த்துக் கொண்டு அமைதியாய் அங்கேயே இருந்தேன்.

(அடுத்த பதிவில் அனுபவம் முடியும்)

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. காட்சிகளை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.தொடர்ச்சியை எதிர் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. சார் சுவராசியமாக செல்கிறது. விரைவில் அடுத்த பகுதியை போடுங்கள்

  பதிலளிநீக்கு
 3. mikka nandragha irukirathu. ithan adutha pathivu yepothu, mikka aavalaha irukirathu

  பதிலளிநீக்கு
 4. :-))விரைவில் அடுத்த பகுதியை போடுங்கள்

  சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகளில் இதே அனுபவத்தை எழுதியிருப்பார்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல நேரம் வந்ததும் இப்படி தொடரும் போட்டுட்டீங்களே... பள்ளியில் நாடகம் போடுவது என்பது ரொம்ப சுவாரசியமான விஷயம். நான் இரு நாடகங்களில் நடித்து, ஒன்றில் எங்கள் குழு முதல் பரிசையும் தட்டிச் சென்றது... (திருப்பூர் பள்ளிகள் லெவல் 1999) ஒரு நாடகம் எங்கள் பள்ளி சார்பாக நடந்தது.. அது கிறிஸ்துவப் பள்ளி... அதனால் மோசஸ் (என்று நினைக்கிறேன்) பற்றிய நாடகம் ஒன்றும்.... முதல் பரிசு பெற்றது கொடிகாத்த குமரன் நாடகத்திற்கும்.... இரண்டிலும் முக்கிய வேடம் ஏதும் எனக்கு இல்லை..

  உங்களைப் போன்றூ பெண் வேடமணிய என்று யாரும் எங்கள் குழுவில் இல்லை. அப்படி எந்த நாடகமும் போடவில்லை..

  சிரட்டை அவஸ்தை.... ஆண்களுக்குரிய நாணம் அது!

  நல்ல அனுபவப் பகிர்வு டெஸ்டிமோனா... ஓ சாரி!!! மாதவராஜ் அவர்களே!!!!

  பதிலளிநீக்கு
 6. அடுத்த பதிவில் என்னமோ சொல்லப் பொறீங்கனு தெரியுது....

  பதிலளிநீக்கு
 7. ரொம்ப சுவாரசியமா இருக்கு ! ஆவலுடன் அடுத்த பகுதிக்கு waiting ! இந்த "ஒதெல்லோ" டிரமா எல்லா பள்ளிகளிலும் உண்டு போல.

  அன்புடன்
  மாசற்ற கொடி

  பதிலளிநீக்கு
 8. வருகை புரிந்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.
  இந்த நேரத்தில் இதன் தொடர்ச்சியையும் படித்து முடித்து இருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!