வீடு என்ன ஸ்கூலா?
வாஷ் பேசின் முன்னால் நின்று கண்ணாடியை எட்டிப் பார்த்து பிரஷ் துலக்கும் போது ஈயென்று சிரித்துப் பார்த்தேன். “சும்மா ரெண்டு தேய் தேய்ச்சுட்டு வாயக் கொப்பளிக்காம அப்படியே வந்துராத” என்பது கேட்டது. இந்த அம்மா எங்கிருந்தாலும் என்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள். எரிச்சல் வந்தது. திரும்பவும் ஹாலுக்கு வந்து சோபாவில் படுத்துக் கொண்டேன்.
பேப்பரில் இருந்து தலை நிமிர்ந்த அப்பா, “சித்தார்த், குட்மார்னிங்” என்றார்.
“ம் ” என்றேன்.
“குட்மார்னிங் சொன்னா குட்மார்னிங்னு சொல்ல மாட்டியா. அது என்ன ம்முன்னு சொல்ற. இப்படி சொல்லக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்”. அப்பா குரல் கண்டிப்பாய் ஒலித்தது.
“இப்படித்தாங்க. நாம என்ன சொன்னாலும் காதுலயே வாங்க மாட்டேங்கிறான். அவஞ் செய்றதயே செய்றான். நல்ல புத்தி கெடையாது இவனுக்கு”. அம்மா சமையலறையிலிருந்து பாய்ந்து வந்தாள். எதுவும் நடக்கலாம் என வேகமாக எழுந்து உட்கார்ந்தேன்.
“சரி சரி. விடு. சித்தார்த்! குட்மார்னிங்னு அழகாச் சொல்லணும். என்ன?” என்றார் அப்பா. சரியென்பதாய் தலையாட்டினேன்.
“இந்த தலைய ஆட்டுறதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை. நீங்க வேண்னா பாருங்க. நாளைக்கும் ம்முன்னுதான் சொல்வான். மொதல்ல அப்பாக்கு குட்மார்னிங் சொல்லுடா.” அம்மா அருகே வந்து நின்றாள்.
பதற்றத்துடன் வேகமாய் “குட்மார்னிங்பா” என்றேன். கொஞ்ச நேரம் என்னையும், கண்களையும் உற்றுப் பார்த்துவிட்டு அம்மா சென்றாள். அப்பா என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார். உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டேன். இந்த வீட்டில் என்ன செய்தாலும் தவறாகவே இருக்கிறது. இங்கு மட்டுமில்லை. ஸ்கூலிலும்தான்.
அம்மா தந்த காபி டம்ளர் சூடாயிருந்தது. பக்கத்தில் இருந்த கம்யூட்டர் டேபிளில் வைத்தேன். “குடிச்சுரு. ஆறிப் போயிரும்” என்று சொல்லிக்கொண்டே போனாள்.
எடுத்துக்கொண்டு பின்னாலேயே சென்றேன். “ஏம்மா, காலைலயிருந்து கோபப்படுற.... நாஞ் சின்னப்பையந்தான..” என்றேன்.
“ஆமா. சின்னப் பையன். ஃபோர்த் முடிச்சு ஃபிஃப்த் போகப் போற. இன்னும் ஒரு நல்ல பழக்கம் பழக மாட்டேங்குற”
“பழகிட்டுத்தான இருக்கேன்” முணுமுணுத்தேன்.
“என்ன பழகிட்ட. ஸ்கூல்ல ஒங்க மிஸ்ஸுக்கு குட்மார்னிங் சொல்வியா இல்லியா. ஆனா அப்பாவுக்கு, அம்மாவுக்குல்லாம் சொல்ல மாட்டேங்குற?”
“வீடு என்ன ஸ்கூலா?”
வேடிக்கை கதைகள் - 1
இந்த சம்பவத்தை சத்தமாய் பேசிக்கொள்ள முடியாது. கொஞ்சம் இறங்கிய குரல் தேவை. அப்படியேதான் நாங்கள் இப்போதும் பேசிக்கொள்கிறோம். முக்கியமாக அழகப்பனைப் பார்க்கிற சமயங்களிலெல்லாம் எங்கள் உரையாடலில் கண்டிப்பாக இடம்பெறும். அப்படி அவனுடைய நினைவோடு கலந்து விட்டிருக்கிறது. .
அழகப்பனுக்கு காரைக்குடி சொந்த ஊர். வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகள்தான் கொடி கட்டும். என்ன இடம், பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. சூனா, பூனால்லாம் தங்கு தடையில்லாமல் வரும். ‘யப்பா, கொஞ்சம் பாத்துப் பேசு..” என்று சொன்னால் போதும் “போடா மயிரு. இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்..”என மேலும் சத்தமாய் ஆரம்பிப்பான். சொன்னவருக்குத்தான் நாடியறுந்து போகும். அவனுக்கு இயல்பே அதுதான். முகம் சுளித்தாலும், அவன் பேச்சுக்கும், கதைக்கும் ஒரு தனி ரசிகக் கூட்டமே இருந்தது.
சாத்தூரில் பிரம்மச்சாரிகளாய் நான், காமராஜ், ஜீவா, பெருமாள்சாமி தங்கியிருந்த அறைக்கு ஒருநாள் வந்து சேர்ந்தான். வங்கியில் கடைநிலை ஊழியர் அவன். ஆள் ஒரு தெனாவெட்டாய் இருப்பான். அதை திருட்டு முழி என்று சொல்ல முடியாது. ஆனால் கண்கள் நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். கிராமத்து வழக்கும், சொலவடைகளுமாய் ததும்பும் அவன் மொழிதான் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அலுவலகம் விட்ட பிறகு ஒன்றாகவே அரட்டையடித்துக் கிடப்போம். சினிமா, பஜார் என கூடவே அலைந்து திரிவோம். எங்கும் நிலையாகத் தங்க முடியாமல் கடைசியாக நாங்கள் எல்லோரும் சங்க அலுவலகம் போய்ச் சேர்ந்தோம்.
பாரதி கிருஷ்ணகுமார்தான் அப்போது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். மின்சாரம் இல்லாத ஒருநாள் இரவில் சங்க உறுப்பினர் ஒருவருக்கு எழுத வேண்டிய கடிதத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய மேஜையின் ஒருபுறத்தில் உட்கார்ந்து கிருஷ்ணகுமார் டிக்டேட் செய்ய, எதிர்ப்புறத்தில் நான் எழுதிக்கொண்டு இருந்தேன். அழகப்பனும், ஜீவாவும் அடுத்த அறையில் படுத்து பேசிக்கொண்டு இருந்தனர். பெருமாள்சாமி எங்களுக்குக் கொஞ்சம் தள்ளி வாசலில் தலை வைத்துப் படுத்திருந்தான்.
“தனக்குத் தனக்குன்னா புடுக்குக் கூட எறங்கி களை வெட்டும்” என்று அழகப்பன் சொன்னது எங்களுக்கும் கேட்டது. “அழகப்பா!” எனக் கத்தி கிருஷ்ணகுமார் பலமாகச் சிரித்தார். எல்லோரும் “அது எப்படி, அது எப்படி..” என கேட்டுச் சிரிக்க, குஷியாகிப் போனான் அழகப்பன். “பொல்லாத வேளைன்னா பூளு கூடப் பாம்பாயிரும்” என அடுத்த வெடியை வைத்தான். ஹோவென பெரும் இரைச்சலோடு சிரித்தோம். கிருஷ்ணகுமாருக்கு கண்ணில் நீரே வந்துவிட்டது. மெல்ல அடங்கிப் போக ஒரு அமைதி இறங்கியது.
சரியாக அந்த நேரம் பெருமாள்சாமி “இது என்ன..” என தலை உயர்த்தி மங்கிய வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்து, “யம்மாடி உண்மையிலேயே பாம்பு!” எனக் கத்தினான். நான் துள்ளி எழ, கிருஷ்ணகுமார் மெழுகுவர்த்தியை எடுத்து, அருகில் போய் உயரத்தில் வைத்துப் பார்க்க, பாம்புதான்! நெளிந்து கதவுக்குப் பின்னால் சென்றது. ஜீவாவும், அழகப்பனும் பாய்ந்து வந்தனர். பக்கத்து அறையில் இருந்து டார்ச் லைட் வாங்கி வந்து, கம்பு தேடி, ஆள் ஆளுக்காய் “அங்க,”, “இங்க” எனக் கத்தி, ஒடி , அடித்து முடித்தோம்.
அழகப்பன்தான் பாம்பின் வாலைப் பிடித்துத் தூக்கினான். வெளியே கொண்டு போடப் போனவன் எதோ யோசித்தவனாய் திரும்பி எங்களைப் பார்த்து, “அது சரி. எல்லோரும் தூக்கிக் காட்டுங்க. யாருக்கு பொல்லாத வேளைன்னு பாக்கணும்” என்றான். பத்தாயிரம் சர வெடி அது.
கோபங்களை ஒருமுகப்படுத்துவோம்!
“நாளைக்கு நான் வேலைக்கு வருவேன்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார் எங்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் நேற்று. இதுவரை நடந்த எல்லா வேலைநிறுத்தங்களிலும் பங்கு பெற்றவர் அவர். சங்கத்தின் நடவடிக்கைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்தான். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன்.
“நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி..” என்று ஆரம்பித்து நான் அவரிடம் பிப்ரவரி 28 பொதுவேலை நிறுத்தம் ஏன் என்று விளக்க ஆரம்பித்தேன். நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டேயிருக்கும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், ஓய்வூதியச் சலுகையான பென்ஷன் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10000/- கொடுக்கப்பட வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முழுக்க முழுக்க ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து தனியார் நிறுவனங்கள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொன்னேன். நாடு முழுவதும் அனைத்து பெரிய சங்கங்களும் இணைந்து நடத்தும் மபெரும் வேலை நிறுத்ததில் தாங்கள் பங்கு கொள்ளாமல் இருப்பது எப்படிச் சரியாய் இருக்கும் என கேட்டேன்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு “சரி. இந்த வேலை நிறுத்தம் செய்வதால் எல்லாம் சரியாகிவிடுமா? அட போங்க தோழர்” என மிகச் சாதரணமாகச் சொன்னார்.
“ஒருநாளில் எப்படி சரியாகி விடும். சரியாகாதுதான். அதற்காக பாதிக்கப்படுகிற நாம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தால்...?” என்றேன்.
”இல்ல தோழர். இதெல்லாம் வேஸ்ட். இப்படி வருசத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ ஸ்டிரைக் செய்வோம். அவ்வளவுதான். கவர்ன்மெண்ட்டு அது பாட்டுக்கு செய்றத செஞ்சுக்கிட்டே இருக்கும்” என்றார்.
“ஒருத்தன் உங்களை விடாம அடிச்சுக்கிடே இருக்கான். எதுத்து ஒரு அடி கூட அடிக்க மாட்டீங்களா. தடுக்கக் கூட மாட்டீங்களா. அல்லது சத்தமாவது போட மாட்டீங்களா?” என்றேன். அமைதியானார். “இது பெரிய விளைவை ஏற்படுத்தாது. ஆனா கவர்மெண்ட்டுக்கு இத்தனை பேர் நம்மை எதுக்குறாங்கன்னாவது தெரியுமா இல்லியா. இது போன்ற ஸ்ட்ரைக்தானே அதை சொல்லும்?” என்றேன்.
“சரிதான் தோழர், ஆனா இந்த கவர்ன்மெண்டை நாம எதுத்து ஒண்ணும் ஆகப் போறதில்ல....”என திரும்பவும் இழுத்தார்.
“ஆகும் தோழர். நிச்சயம் ஒருநாள் நல்லது நடக்கும். இப்போ புகையுது. ஒருநாள் பற்றும். அதுவரைக்கும் நெருப்ப அணையாம நாம வச்சிருக்கணும். அதுக்காகத்தான் இந்த ஸ்டிரைக்” என்று நம்பிக்கையாய் சொல்லி, தொடர்ந்து பேசி , ஒருவழியாய் அவரை சம்மதிக்க வைத்தேன்.
அரசுக்கு எதிராக கோபம் மக்களிடம் இருக்கிறது. அதை தீவீரமடைய விடுவதில்லை இந்த அமைப்பு. உடனுக்குடன் நீர்த்து போகச் செய்யுமாறு நம் சிந்தனைகளை வடிவமைக்கிறது. பஸ் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு எல்லாம் அன்றாட வாழ்வைப் பாதித்தாலும் அன்றாடம் நாம் கோபப்படுவதில்லை. பெட்ரோல் விலை கூடினால் கோபம் பொத்துக்கொண்டு வரும். இரண்டு நாளைக்குத்தான் அதன் ஆயுள். பிறகு பழகிவிடுகிறது. நண்பர்களுடனான உரையாடலின் போது, மாத ஊதியம் பற்றாமல் தவிக்கும்போது செத்துப் போன கோபங்கள் வயிற்றெரிச்சலாய் வெளிவரும். அவ்வளவுதான். எனவேதான் தைரியமாக மக்களுக்கு எதிரான காரியங்களை அதிகார வர்க்கம் ஓய்வில்லாமல் அடுக்கடுக்காய் செய்துகொண்டே இருக்க முடிகிறது.
சிந்திச் சிதறும் இந்தக் கோபங்களை ஒருமுகப்படுத்தவும், அடைகாக்கவுமே இது போன்ற வேலைநிறுத்தங்கள்.
பிப்ரவரி 28, பொதுவேலை நிறுத்தம் வெல்லட்டும்!
கதாபாத்திரங்கள்
பலமாய் சத்தம் எழும்பி, கனகனவென வீடே அதிர்ந்து சுருளும். உள்ளிருப்பவர்கள் அதிர்ச்சியோடும், பதற்றத்தோடும் தலை நிமிர்வார்கள்.
“பார்த்து..” குரலொன்று எழும்பும்.
மௌனம் கொண்டு வீடு தன்னிலைக்குத் திரும்பும். அவ்வளவுதான். பிறகு அது பற்றிய நினைவு யாருக்கும் எப்போதும் இருக்காது.
பாத்திரங்கள் கை தவறும் போதெல்லாம் இந்தக் கதை தவறாமல் நடக்கிறது.
ஜெயமோகன் செய்யும் அரசியலும், சு.வெங்கடேசன் செய்யத் தவறிய அரசியலும் - 2
இந்த விவாதங்கள் அலுப்பூட்டுகிறது என்றும், தேவையற்றது என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள். பரவாயில்லை. நாவலைப் படிக்காமல் இருந்தால் நானும் இதுபோலவே கருத்தைக் கொண்டு இருப்பேன். பிரக்ஞையற்றவர்கள் பாக்கியவான்கள்! இருப்பினும் சுருக்கமாகவும், இறுதியாகவும் இப்படி சொல்லி முடிக்கிறேன்.
காவல் கோட்டம் நாவல் குறித்த விமர்சனங்களில் பொதுவான அம்சங்களாக சில காணப்படுகின்றன.
1. அதிகமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனதில் பதியும் கதாபாத்திரங்கள் ஒன்றிரண்டே. தொகுக்கப்பட்ட ஆவணங்களும், கதையாடல்களும் தனித்தனியாகவே இருக்கின்றன. ஒரு இயல்பான சித்திரத்தை எழுப்ப முடியவில்லை. காட்சிகளாக சொல்லப்படுகிற கதைகளில் மன ஓட்டங்கள் இல்லை. இவைகளின் மூலம் ஒரு தெளிவு கிடைக்கிறது. அது, நாவலில் உயிரோட்டம் இல்லை என்பதே.
2. நாவல்களில் கள்ளர் பற்றிய சித்திரம், அவர்களின் பார்வையிலேயே இருக்கிறது. மற்ற சமூகங்களின் கருத்துக்களும் , மன ஒட்டங்களும் இல்லை. மதுரையின் வரலாறு என்றாலும், கள்ளர் வரலாறு என்றாலும் சொல்லப்படாத விஷயங்கள் பல இருக்கின்றன. இதனால் நாவல் முழுமையானதாக இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது.
3. அடுத்தது நாவலின் மொழி. உரையாடல்கள் மிகச் சரியாகவும், நேர்த்தியாகவும் கையாளப்பட்டு இருக்கின்றன (எஸ்.ராஅவுக்கு இதிலும் உடன்பாடில்லை). ஆங்காங்கே சில இடங்கள் ரசிக்கும்படியாக இருப்பினும் பொதுவாக நாவலில் வருணனையாக வரும் புனைவு மொழி வலிந்து வலிந்து எழுதப்பட்டதாகக் காணப்படுகிறது. அது நாவலோடு இணைந்து, இயைந்தும் இல்லை. தனியாக எழுத்தாளரின் குரலாக ஒலிக்கிறது. எனவே நாவலில் பொதுவான குரலே இல்லை.
இனி முரண்பாடான விஷயங்களைப் பார்ப்போம்.
1. எஸ்.ராமகிருஷ்ணன், இந்த நாவலின் பல பகுதிகள் அப்படியே ‘கட்டிங் அண்ட் பேஸ்டிங்’ என சொல்கிறார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிடுகிறார். இதுகுறித்து வெங்கடேசனும், வக்காலத்து வாங்கும் இன்ன பிறரும் எங்கேயும் மறுத்ததாகத் தெரியவில்லை. பெத்தானியபுரம் முருகானந்தமும் இதைத்தான் முதன்மைப்படுத்துகிறார். நாவல் எழுதுவதற்கு உத்வேகமளித்த தனது துணைவியார், குழந்தைகள் என அனைத்து உறவினர்களின் பெயர்களையும் மறக்காமல் குறிப்பிட முடிகிறது சு.வெங்கடேசனுக்கு. அதேவேளையில், ஒரு வரலாற்று நாவலுக்கான ஆதார மனிதர்களையும், நூல்களையும், குறிப்புகளையும் சொல்லாமல் விட்டது பெரும் தவறு. அது படைப்பாளியின் நேர்மையும் ஆகாது. அந்த வகையில் காலத்தின் முன்னே படைப்பாளி தலைகுனிந்தேயாக வேண்டும்.
2. ஜெயமோகனோ, ஒரு வரலாற்று நாவலுக்கு தகவல்களும், சொல் நுட்பங்களுமே முக்கியமானவை என்கிறார். இந்த நாவலில் தகவல்கள் முழுமையாக இல்லை. சொல் நுட்பங்களும் சரியாக இல்லை. ஆனாலும் இதனை ‘நல்ல நாவல், ஆனால் மகத்தான நாவல் இல்லை’ என்கிறார். வழக்கம் போல அவரது தெளிவின்மையும், அரசியலும் நமக்குப் புரிகிறது. அவர் நேர்மையற்றவர் என்பதை அறிய அவரது ஐந்து பாக விமர்சனங்களைப் படித்தால் போதும். தமிழினியின் நாவல் என்கிற விசுவாசமே அவரை இது நல்ல நாவல் எனச் சொல்ல வைக்கிறது. அதே நேரம் பிராமணர்களை இந்த நாவல் கேலி செய்வதை அவரால் தாங்க முடியவில்லை. கிறித்துவ மிஷனரிக்கு நாவலில் ஒரு மனித முகத்தைக் கொடுப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவைகளை வெளிப்படையாக அவரது விமர்சனங்களில் வைக்கிறார். மகத்தான நாவல் எனச் சொல்ல முடியாமல் போவதற்கு இவைகளே காரணம். அவரது ‘இந்துத்துவா அரசியலை’ காவல் கோட்டத்திலும் நுழைக்கிறார்.
3. என்னைப் பொறுத்த வரையில், இந்த நாவல் உருவத்தில் பலவீனமாக இருக்கிறது. உள்ளடக்கத்தில் மோசமாக உள்ளது. மதுரையின் வரலாற்றில் அன்றும், இன்றுமாக இருக்கும் இரு ஆதிக்க சக்திகளின் வரலாற்றையே பேசுகிறது. காவியப்படுத்துகிறது. நாயக்கர் மற்றும் கள்ளர் சமூகங்களின் வரலாறே, மதுரையின் வரலாறு என்று பதிவு செய்கிறது. இதர சமூகங்கள் எதோ துணுக்குச் செய்திகளாக வருகின்றன. தலித் சமூகம் அதற்கான இருப்பை இந்த நாவலில் ஏறத்தாழ இழந்தே போகிறது. அரசியல் தெளிவும், இடதுசாரி சித்தாந்தமும் கொண்ட ஒரு எழுத்தாளர் எழுதியிருப்பதால்தான் இவ்வளவு தீவீரமான விசாரணைக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. ‘தடித்த உங்கள் இதிகாசங்களில் எந்தப் பக்கம் எங்கள் வாழ்க்கை?’ என்னும் ஆதவன் தீட்சண்யாவின் கேள்விக்கு , சு.வெங்கடேசனால் ஒரு போதும் பதில் சொல்ல முடியாது. அந்த மௌனம் கசப்பாகவே இருக்கும்.
பத்து வருடம் உழைப்பு என்பதும், ஆயிரம் பக்கங்கள் என்பது மட்டுமே பிரமிக்கக் கூடிய விஷயங்கள் அல்ல! உண்மையும், நேர்மையும் அதைவிட பிரமிப்பானது. பிரம்மாண்டமானது.
ஜெயமோகன் செய்யும் அரசியலும், சு.வெங்கடேசன் செய்யத் தவறிய அரசியலும் - 1
ஒரு காட்சி, ஒரு சொல் போதும் ஜெயமோகனுக்கு. அதை வைத்து யாரைப் பற்றியும் அக்கு வேறாக ஆணி வேறாக அலசி விடுவார். மகா ஞானிதான். இது ஒன்றும் சாதாரணமாக வாய்த்துவிடவில்லை அவருக்கு. இந்திய, உலக தத்துவங்கள், வரலாறுகள், இலக்கியங்கள், ஆதியிலிருந்து கிடைத்த தகவல்கள் எல்லாவற்றையும் கரைத்துக் கரைத்து ஞானப்பாலாகக் குடித்தவர். அப்படியிருக்கும்போது ‘குதிரையில் வந்தியத்தேவன் வருகிற காட்சியிலிருந்து’ எனது வரலாற்று நாவல் அறிவைப் பீற்றியிருக்கக் கூடாது. மகாகனம் பொருந்திய இலக்கிய பீட ஞானசிகாமணி ஜெயமோகன் அதை வைத்துக்கொண்டு பிடிபிடியென பிடித்து விட்டார். ‘மாதவராஜ் குழந்தையின் ஆரம்பக்கட்ட வாசிப்பில் இருக்கிறார்’, ‘மாதவராஜ் போன்ற எளிய வாசிப்பு கொண்டவர்’ என பொட்டில் அறைகிற மாதிரி சொல்லிவிட்டார். பாவம் கல்கி. பொன்னியின் செல்வன் முதற்கொண்டு யாவுமே வரலாற்று நாவல்களே இல்லையென அவருக்கும் பலத்த அறை விழுந்திருக்கிறது.
சரிதான். ஒப்புக்கொள்கிறேன். ஜெயமோகன் ஒரு நிறைகுடம். நான் ஒரு குறைகுடம். ஜெயமோகன் ஒரு பண்டிதர். நான் ஒரு பாமரன். ஜெயமோகன் ஒரு மேதை. நான் ஒரு பேதை. ஜெயமோகனுக்கு இனி தெரிய வேண்டியது என எதுவுமில்லை. எனக்குத் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன.
அலுவலகப்பணி, தொழிற்சங்கப் பணி, இயக்கப்பணிகளின் ஊடேதான் எழுதவோ, வாசிக்கவோ முடிகிறது. என்னைப் போன்றுதான் ஓராயிரம் பேர்கள் எழுத்தாளர்கள் சங்கத்தில் இருக்கிறார்கள். இயங்குகிறார்கள். வாசிக்கிறார்கள். எழுதுகிறார்கள். உரையாடுகிறார்கள். எல்லாம் அவரவர்களால் முடிந்த அளவில்தான். ஜெயமோகனுக்கு உடல், மூளை, ரத்த நாளம் எல்லாம் தகவல்களால் நிரம்பி வழிகிறது என்றால் எங்களுக்கு கனவு, இலட்சியம், நம்பிக்கைகளால் அவை உத்வேகம் பெறுகின்றன. இது ஜெயமோகனுக்கு அற்பமாகவும், மடத்தனமாகவும் படுகிறது. எதற்கும் லாயக்கற்றவர்களாய், உருப்படியில்லாதவர்களாய் குறிப்பிட வைக்கிறது. காவல் கோட்டம் குறித்த சர்ச்சையின் ஊடே புகுந்து, ‘உடனே தோழர்களுக்கு பொறுக்கவில்லை’, ‘சு.வெங்கடேசனுக்கு இது வேண்டும்’ என சொல்லியபடி ஒட்டுமொத்த அமைப்பையே அறைகிறார். இதுதான் சமயம் என எழுத்தாளர் சங்கத்தின் இருக்கும் உறுப்பினர்கள் எல்லாம் இலக்கியத்துக்காக என்ன கிழித்துவிட்டார்கள் என சவால் விடுகிறார்.
மெத்தப் பணிவோடு ஒன்று சொல்லிக்கொள்கிறோம். இந்த அமைப்பிலிருந்தும் ஏராளமான படைப்புகள் வந்திருக்கின்றன. படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவரில் ஒருவர்தான் சு.வெங்கடேசனும். டி.செல்வராஜ், கு.சின்னப்பபாரதி, கே.முத்தையா, அருணன், எஸ்.ஏ.பெருமாள், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், உதயசங்கர், கந்தர்வன், இலட்சுமணப்பெருமாள், பிரளயன், ஆதவன் தீட்சண்யா, பவா.செல்லத்துரை, ஷாஜஹான், தேனீ சிரூடையான், காமுத்துரை என நீளும் வரிசையில்தான் சு.வெங்கடேசன் இருக்கிறார். கவியரங்கங்களில் பங்குபெற்றுக்கொண்டும், அவ்வப்போது கவிதை எழுதிக்கொண்டும் இருந்தவரை, ஈர்த்ததும், வார்த்ததும் எங்கள் அமைப்பே. இப்படியொரு நாவல் எழுத கனவு காண வைத்ததும், களம் காட்டி நின்றதும் எங்கள் எழுத்தாளர் சங்க அமைப்பே. அவரைக் கொண்டாடவும், விமர்சனம் செய்யவும், செம்மைப்படுத்தவும் அமைப்பும், தோழர்களும் கூடவே இருக்கிறார்கள். ஜெயமோகனின் வக்காலத்து ஒன்றும் அவருக்குத் தேவையில்லை. பண்டிதர்களின், இலக்கிய பீடங்களின் அருள்வாக்குகளுக்காக நாங்கள் இல்லை. எங்கள் இலக்கியமும், கலையும், வாழ்வும் மக்களுக்கானது.
காவல்கோட்டம் வந்த புதிதில் அதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தன. எஸ்.ராமகிருஷ்ணன் ஆயிரம் பக்கம் அபத்தம் என்றார். தோழர்கள் சொன்னார்கள். அவரது விமர்சனத்தை கொஞ்சம் வாசித்ததோடு நிறுத்திக்கொண்டேன். நாவலை அப்போது படிக்காததால் பெரிதாய் ஒன்றும் புரியவில்லை. அதிலிருந்த தொனி கடுமையானதாய் இருந்தது மட்டும் புரிந்தது. அதுகுறித்து எஸ்.ராமகிருஷ்னனிடம் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவுதான். நாவல் குறித்த சர்ச்சைகள் அங்கங்கே கேட்கத்தான் செய்தன. நான் ஆர்வம் காட்டவில்லை.
சாகித்திய அகாதமி பரிசு, சு.வெங்கடேசனுக்குக் கிடைத்தவுடன் அந்த பழைய சர்ச்சைகள் நினைவுக்கு வந்தன. நம்மக்கள் இதற்கு பெரிதாய் ஆரவாரிப்பது அமைப்பின் மீது ஒருவித எரிச்சலை ஏற்படுத்துமே, கொஞ்சம் அடக்கியே வாசிப்பது சரியாய் இருக்குமே என்று நினைத்தேன். மூத்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டி சு.வெங்கடேசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஏன் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு இதுபோல சொல்லவில்லை என ஜெயமோகன் இப்போது கேட்கிறார். கூடவே அவருடைய ஒரு கதையும் சரியில்லை என அவருக்கும் அறை விடுகிறார்.
இலக்கியப் பரப்பில், மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்கள் குறித்து பெரிதாய் சர்ச்சைகள் எதுவும் வந்திருக்கவில்லை. தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிற ஒரு மூத்த எழுத்தாளராகவே அவரைப் பற்றிய ‘அபிப்பிராயம்’ இருந்தது. ஆனால் அமைப்பில் இருக்கும் பல தோழர்கள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தே வந்திருக்கிறார்கள். இதனை அவருக்கு வாழ்த்து தெரிவித்த போதே பதிவு செய்திருக்கிறேன். விருது பெற்ற பிறகு அவரைப் பற்றிய கட்டுரையொன்றில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனும் பதிவு செய்திருக்கிறார். ஜெயமோகனுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் கிடைக்கவில்லை போலும்.
அடுத்ததாக, ‘நாவல் வந்த போதே மாதவராஜ் இது போன்ற மேலான கருத்தை ஏன் தெரிவிக்கவில்லை’ என இன்னொரு கேள்வியும் எழுப்புகிறார் ஜெயமோகன். ஐயா, எத்தனை தடவைதான் சொல்வது இதற்கான பதிலை. அப்போது நான் நாவலைப் படிக்கவில்லை. பெத்தானியாபுரம் முருகானந்தம் திரும்பத் திரும்ப எழுப்பிய கேள்விகளே விருது மற்றும் விழாக்கள் பற்றி பேச வைத்தது. நாவலைப் படிக்க வைத்து விமர்சனம் செய்ய வைத்தது. மற்றபடி ‘காவல்கோட்டமே உழைப்புத் திருட்டு’ என்றும், ‘காவல் கோட்டத்திற்கான சாகித்திய அகாதமி விருது விலை பேசப்பட்டது’ போன்ற எந்த குற்றச்சாட்டுக்களிலும் எனக்கு இன்றுவரை உடன்பாடில்லை. அதை மறுத்தே வந்திருக்கிறேன். இதையும் தங்கள் தகவல் கிடங்கில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால், நாவலைப் படித்த பிறகு மிக முக்கியமான விஷயம் ஒன்று எனக்கு தட்டுப்பட்டது. அதுகுறித்த ஒரு வெளிப்படையான உரையாடல் பொதுவெளியில் நடத்தப்பட வேண்டும் என விரும்பினேன். முழுக்க முழுக்க படைப்பு சார்ந்த காரணம் மட்டுமே அதில் இருந்தது. மிகத் தந்திரமாக அவைகளை ஒதுக்கி தனிநபர் சார்ந்த பிரச்சினையாகவும், அமைப்பு சார்ந்த பிரச்சினையாகவும் இதனை உருமாற்றும் வேலையில் தகவல்களின் நாயகர் ஜெயமோகன் தாயத்துகளை உருட்டிக்கொண்டு இருக்கிறார்.
நாவலின் உள்ளடக்கத்தையும் , உருவத்தையும் விவாதிப்போம் என்றவுடன் நண்பர் அரங்கசாமி, ஏற்கனவே ஜெயமோகன் இதுகுறித்து 5 பாகங்கள் எழுதியிருப்பதாகவும் அதைப் படித்துப் பாருங்கள் என்றார். படித்தேன். இன்னொரு நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனத்தையும் படியுங்கள் என்றார். படித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நாவலை அபத்தம் என்றே சொல்லி, அதற்கான வாதங்களை கடுமையாக அடுக்கிக்கொண்டே போகிறார். ஜெயமோகன் கோனார் நோட்ஸ் போல பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையென சொல்லிக்கொண்டே போகிறார். ஒரிடத்தில் ஒன்று சொல்கிறார். இன்னொரு இடத்தில் அதற்கு நேர்மாறாக சொல்கிறார். வளவளவென்று பேசும் பண்டித வியாதி அது. தன் கருத்துக்களே மேலானவை என்று அவரே சொல்லிக்கொள்கிறார்.
ஆச்சரியமளிக்கும் விதத்தில் சில கருத்துக்கள் மூவருக்கும், சில கருத்துக்கள் எனக்கும் ஜெயமோகனுக்கும் ஒன்று போல அல்லது நெருங்கிய அர்த்தத்தில் இருந்தன. அட, எனக்கும் கூட காவல் கோட்டம் கொஞ்சம் பிடிபட்டு இருக்கிறது. இரும்புக்கடலைக்குள் சில அவிந்த கடலைகளும் இருந்திருக்கும் போலும்.
ஜெயமோகன்: நாம் ஒரு நாவலில் வாழ்வை பார்க்கிறோம். கூடவே வாழ்கிறோம். ஆனால் அந்த உச்சத்தில் நாமே நாவலாசிரியராகிறோம். அவன் எழுதாத இடங்களுக்குக்கூட நாம் பறந்து செல்லமுடியும். அத்தகைய உச்சம் இந்நாவலில் எங்குமே நிகழவில்லை.
எஸ்.ராமகிருஷ்ணன்: நாவலில் பழமையான மதுரை நகரின் முழுமையான தோற்றம் வரவேயில்லை. திருப்பரங்குன்றமும் மீனாட்சி கோவிலும் அதைச் சுற்றிய சாவடி தெருக்களும் நாயக்கர் மண்டபமும், புது மண்படமும் வருகின்றதேயன்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் பகலிரவுகள், அங்கு வந்து போன வணிகர்கள், ஊரின் செம்மையான பழஞ்சடங்குகள், விழாக்கள், குடியிருப்புகள், மின்சாரம் வந்து சேராத நாட்களில் பந்த வெளிச்சத்தில் பாதி இருளில் அவிழ்ந்த இரவுப் பொழுதுகள் எதுவும் நாவலில் தெளிவாக இல்லை.
மாதவராஜ்: பார்த்துப் பழகிய மதுரையை மையமாகக் கொண்ட காவல்கோட்டம் இதுபோன்ற அனுபவத்தை ஏற்படுத்தவில்லை.
ஜெயமோகன்: படிப்படியாக விரிந்து வளரும் கொள்ளும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்பது இந்நாவலின் இன்னொரு பெரும் குறை. அழுத்தமான கதாபாத்திரங்கள் பல உள்ளன. மாயாண்டி பெரியாம்பிளை போல.
எஸ்.ராமகிருஷ்ணன்: நாவலைப் படித்து முடித்த பிறகு ஒவ்வொரு அத்தியாயத்திலும் வந்து போகும் பத்து பதினைந்து பெயர்கள், சம்பவங்கள் எதுவும் நினைவில் இருப்பதில்லை. எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். துண்டு துண்டான அத்தியாயங்கள்.
மாதவராஜ்: நாவலின் பெரும்பகுதி வரும் மாயாண்டிப் பெரியாம்பிள என்னும் பேர் மட்டுமே நினைவில் இருக்கிறது. அவர் காணாமல் போய்விடுகிறார். இப்படி செதில் செதிலாக நாவலின் பக்கங்கள் முழு உருவமற்று பிய்ந்து கிடக்கின்றன.
ஜெயமோகன்: இதற்கு வெளியே குடிமக்களான நாயக்கர்களின் அன்றாட வாழ்க்கைச் சித்திரங்கள் அனேகமாக இந்நாவலில் இல்லை. நாயக்கர்களின் குலங்களான கொல்லவாருகளும் கம்மவாருகளும் எப்படி புதிய மண்ணில் வேரூன்றினர் எப்படி ஆதிக்கத்தை அடைந்தனர் எப்படி தங்களுக்குள் உள்ள சாதி ஏற்றத்தாழ்வை தக்கவைத்துக்கொண்டனர் எதுவுமே இல்லை.
எஸ்.ராமகிருஷ்ணன்: கம்மவாருகளை விடவும் கொல்லவாருகளே வீரமானவர்கள். கம்மவார்கள் ஒன்றும் பெரிய வீரர்கள் இல்லை என்று ஜாதிஉட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர பெரிதாக நாயக்கர் வரலாற்றில் எந்த வெளிச்சத்தையும் நாவல் உருவாக்கி சாதித்துவிடவில்லை.
மாதவராஜ்: நாயக்கர் காலத்தில் பெரும்பாலும் போர்வீரர்களாயிருந்தவர் கொல்லவாருகள். ‘இது தவறு, கம்மவாருகள்தாம் போர்வீரர்களாயிருந்தனர்’ எனவும் நாவலைப் படித்த சிலர் சொல்கிறார்கள். எந்த வாருகளோ, ஆனால் அவர்கள் களவுத்தொழிலில் ஈடுபடவில்லை. சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழவும் இல்லை. இந்த முரண்பாட்டை ஆராய்ந்திருந்தால் நாவலின் திசை வழியும், களவு குறித்த பார்வைகளும், வரலாற்றுத் தெளிவும் சாத்தியமாகி இருக்கலாம்.
ஜெயமோகன்: நமக்கு இருவகை வரலாறுகள் உள்ளன. ஒன்று வாய்மொழி வரலாறு. தொன்மங்களும் வீரகதைகளும் அடங்கியது. இன்னொன்று நவீன காலத்தின் கால வரிசை வரலாறு. அட்டவணை வரலாறு என்றும் அதைக்கூறலாம். நமது பிரம்மாண்டமான தேசத்தின் வரலாறு நமக்கு உதிரித் தகவல்களாகவே இன்று வரை கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே சீரான ஒரு ஓட்டத்தில் வரலாற்றை விவரிப்பதென்பது இன்றுவரை நமது வரலாற்றாசிரியர்களுக்கே சாத்தியப்படவில்லை. நமது எல்லா வரலாறுகளும் துண்டுபட்ட சித்தரிப்புகளே. அதனால்தான் போலும் காவல் கோட்டமும் ஒரு இயல்பான, சகஜமான வரலாற்று பரிணாம சித்திரத்தை அளிக்கவில்லை.
எஸ்.ராமகிருஷ்ணன்: நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்தக் கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.
மாதவராஜ்: மிஷனரியின் ஆவணங்கள், ஆவணக்காப்பகங்களின் தரவுகள், மக்களின் நினைவுகளில் கொட்டிக்கிடந்ததை எல்லாம் சேகரித்து அவைகளுக்குள்ளிருந்து ஒரு பெருங்கதையைச் சொல்ல வருகிறபோது திணறியிருக்கிறார். சு.வெங்கடேசன் சொல்கிற பத்து ஆண்டு உழைப்பின் சோதனையான இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அதற்கென்ற மொழியும், தெளிவும் ஒன்றுபோல் அவருக்கு காவல் கோட்டத்தின் கடைசிப்பக்கம் வரை கிடைக்கவில்லை.
ஜெயமோகன்: வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே.
மாதவராஜ்: கதை சொல்கிறவர்கள், தங்கள் வார்த்தைகளின் மூலம் எல்லாவற்றுக்கும் உயிரூட்டி விடுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் ‘கன்னிநிலத்தின்’ கஸாக்குகள் ஸ்தெப்பி புல்வெளிகளுக்குள்ளிருந்து எதிரே வருகிறார்கள். படித்து முடிக்கும்போது ‘ஏழு தலைமுறை’யைச் சொல்லிக்கொண்டு வந்தவனும், ஆப்பிரிக்கக் கிராமத்தின் அந்த கறுப்பு மனிதனும் மட்டுமா ஒரேயாளாகிப்போகிறார்கள்? வாசிக்கிறவர்களும்தானே.
ஜெயமோகன்: நாவல் மறவர்களிடம் திருட்டுக் கொடுக்கும் கோனார்கள், நாயக்கர்களின் பார்வையில் விரிந்திருக்கும் என்றால் கள்ளர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருப்பார்கள் என்ற வினா வாசகன் மனதில் எழாமலிருக்காது
மாதவராஜ்: கள்ளர்கள் குறித்து பிற சமூகங்கள்என்ன கருத்து கொண்டு இருந்தனர் என்பது நாவலில் தெளிவாகச் சொல்லப்படவேயில்லை.
ஜெயமோகன்: இந்தப் புறவயப் பார்வையின் விளைவாக இருக்கலாம், இந்நாவலில் கவித்துவ உச்சம் என்பதே சாத்தியமாகவில்லை. இத்தனை பெரிய நாவலுக்கு இது மிகப்பெரிய குறையேயாகும். இத்தனை மானுட வாழ்க்கை கூறப்படும் இடத்தில் நாம் மானுட உச்சம் என்று கருதும் இடம், நெகிழ வைக்கும், மனம் விம்மச் செய்யும் இடம் எதுவும் நிகழவில்லை.
மாதவராஜ்: மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது நாவல் முழுக்கவும் உணர்வற்று கடக்க வைக்கும் ஒரு எழுத்தாக இருக்கிறது. ஆந்தையின் கண்களை வாசகனுக்கும் கொடுத்து விடுகிறார் சு.வெங்கடேசன். சோகம், வலி, சிரிப்பு, கோபம் என எதுவும் நமக்குள் பரவவில்லை.
ஜெயமோகன்: ஆனால் கதாபாத்திரங்களின் அகத்திற்குள் செல்வதும் அந்த அகம் கொள்ளும் பரிணாம மாற்றத்தைச் சித்தரிப்பதும்தான் கதாபாத்திரங்களை பெரிதாக்குகிறது. அவர்களுடன் வாசகர்கள் நெருங்கும்படிச் செல்கிறது. அதாவது அவர்களை வாசகன் வெளியே பார்ப்பதில்லை; மாறாக உள்ளே நுழைந்தே பார்க்கிறான். இந்த அனுபவம் இந்நாவலில் விடுபடுகிறது. எல்லா கதாபாத்திரங்களையும் நாம் வாசகனாக நின்று பார்க்கிறோம், ஒரு கதாபாத்திரத்துடனும் சேர்ந்து வாழவில்லை. ஆகவேதான் ஒட்டுமொத்தமாக நாவல் முடியும்போது எந்த மனித முகமும் வலுவாக நிற்கவில்லை.
மாதவராஜ்: முழு இருளுக்குள் நடந்து செல்கிறவருக்கு முன்னும் பின்னும் இருளே அடைந்துகிடக்கும். கடக்கும் இடத்தில் தெரிவது கடந்தபின் தப்பிவிடும். அப்படித்தான் இருக்கிறது நாவல் குறித்த வாசிப்பனுபவமும். எவ்வளவோ சம்பவங்கள், பாத்திரங்கள் என நிறைந்திருந்தும் நினைவில் இருட்டு மட்டுமே நிலைத்த மாதிரியிருக்கிறது.
ஜெயமோகன்: ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நவாலில் மிக உத்வேகமான பகுதி என்பது இந்த இறுதிக்கட்டப் போர்தான். மிகவிரிவான தகவல்களுடன் செவ்வியல் யதார்த்தவாதத்திற்குரிய விரிவான காட்சிச் சித்தரிப்புடன் ஒரு ‘தல்ஸ்தோயிய யதார்த்தத்துடன்’ எழுதப்பட்டிருக்கும் இப்பகுதிதான் இந்நாவலின் மகுடம். தமிழ்ப் புனைவிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று என்பதை எந்த வாசகரும் உணர்ந்து கொள்ள இயலும்.
மாதவராஜ்: ஆழ்ந்து பார்க்கிறபோது, நாவலின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் நமக்குள் அப்படியே தங்கிவிடுகின்றன.
ஜெயமோகன்: எவ்வளவு தேவையோ அவ்வளவே உரையாடலைக் கையாளும் நாவல் இது. தாதனூர் கள்ளர்களின் பேச்சுமொழி குறையில்லாமல் அமைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் இத்தகைய ஒரு பெருநாவல் கோருவது இன்னமும் வண்ணங்கள் கொண்ட உரையாடலை. தாதனூர்க்கள்ளர்களின் பேச்சுநடை அல்ல, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய தனித்த பேச்சுநடையை நாவல் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட தொழிற்களத்தில் உள்ளவர்கள் அதற்கே உரிய பேச்சுமொழி ஒன்றை மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அதன் தனித்தன்மைகள் பலவகையான சொலவடைகளாகவும், நகைச்சுவைகளாகவும் வெளிப்படும். அத்தகை அபூர்வமான உரையாடல்தருணங்கள் ஏதும் இதில் உருவாகவில்லை, விதிவிலக்கு பெண்கள் தானியம் இடிக்குமிடத்தில் பாலியல் கதைகளைப் பேசிக்கொள்ளும் தருணம் மட்டுமே.
மாதவராஜ்: நாவலின் உயிர்ப்புள்ள இடங்களென்றால், பிற்பகுதியில் வரும் உரையாடல்களே. அவ்வளவு இயல்பாக அந்த மண்ணையும் வாழ்வையும் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சிந்துகிற பழமொழிகளும், சொலவடைகளும் இந்த நாவலின் வசீகரமான பகுதிகள். எழுத்தாளனால் மனிதர்களுக்குள் இறங்கி அறிய முடிந்திருக்கிறது. பெண்கள் நம்முன் நடமாட ஆரம்பிக்கிறார்கள். அதிலும் உரலை இடித்துக்கொண்டு அவர்கள் பேசும் உரையாடல்கள்... அடேயப்பா!
ஜெயமோகன்: “எட்டுபேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக் கருப்பன் இறங்கியபோது கோட்டையே பிய்த்துக் கொண்டு வருவதுபோல் இருந்தது. அவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.” வெங்கடேசனின் புனைவுத்திறனும் மொழித்திறனும் உச்சம் கொள்ளும் இடம் இதுவே. இத்தெய்வங்கள் வாழும் இந்த அகயதார்த்தத்தில் தான் நம்முடைய நாட்டார்மரபின் எல்லா கதைகளும் வேரூன்றி நிற்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாதவரை நாம் நம் நாட்டார் பண்பாட்டின் கவித்துவத்திற்குள் செல்ல இயலாது. மாந்தீரிக யதார்த்தம், மீயதார்த்தம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆனால் அந்த புனைவு உத்திகளுக்கு நிகரான, நமது மண்ணுக்கே உரிய புனைவு உத்தி இது. இதன் தீவிரமான கவித்துவம் மூலமே இந்த மண்ணின் வரலாற்றை ஒருவர் கூறமுடியும். இங்கு வாழ்ந்து இறந்த தலைமுறைகளின் அக ஆழத்திற்குள் சொல்லமுடியும்.
மாதவராஜ்: மதுரைக் கோட்டை இடிக்கப்படுவதை சித்தரிக்க சு.வெங்கடேசன் கையாளும் புனைவு மொழி அதிர அதிர ஒலித்து கற்களை விழ வைத்து, புழுதியை வெளியெங்கும் நிரப்பி விடுகிறது. அந்த வீரியம் நாவலிலிருந்து தனித்தே ஒலிக்கிறது. புறாக்கள் மூலமும், பச்சை குத்துவது மூலமும் அதைச் சொல்லும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. நாவலோடு சேர்ந்தே காட்சிப்படுத்துகின்றன. அதுதான் முக்கியம் என எனக்குத் தோன்றுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன்: கற்பனையே இல்லாத வறட்டு விவரணைகளும், கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கபட்ட இருளைப் பற்றிய, நிசப்தம் பற்றிய, ஊரைப் பற்றிய, களவு, வேட்டை குறித்த வர்ணனைகளும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், தொடர்ந்து வெங்கடசனே நாவலில் நுழைந்து செய்யும் பிரசங்கங்களும் நாவலை மிகப் பலவீனமானதாக ஆக்குகின்றன.
மாதவராஜ்: எழுத்தாளர் கோணங்கியின் மொழியில் சம்பந்தமில்லாமல் சிலாவரிசை போட்டு ‘இரவுகள் ஆலமரத்து விழுதுகளின் வழியாக இறங்கின’ என்றும், ‘இரவு சொக்கநாதரின் தேர்சிற்பங்களில் இருந்து வருகிறது’, ‘இரவு பாம்புப் புற்றுக்குள் இருந்து வருகிறது’, ‘இரவுகளை பாயாய் சுருட்டிக்கொண்டு தாதனூர்க்காரர்கள் சென்றார்கள்’ என பக்கத்துக்கு பக்கம் எழுதும்போது ‘கவிதை’, ‘கவிதை’ எனவா ஆர்ப்பரிக்க முடியும்?
எஸ்.ராமகிருஷ்ணன்: அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையைப் பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்து வருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.
மாதவராஜ்: ஆழமாய் எழுந்த கேள்வி ஒன்றுண்டு. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, சமூகத்தின் பெருங்குற்றவாளிகள் போல சித்தரிக்கப்பட்ட மனிதர்களுக்குள் எப்படி இந்த ஜாதீய பெருமிதமும்,இறுக்கமும் அடர்ந்திருக்கிறது, இவர்கள் எப்படிசகமனிதர்களை சமமாக மதிக்காமல் இப்படி வெறி கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் அது.நாவலில் இவையெல்லாம் எங்கும் காணோம்.
இந்த கண்ணோட்டங்களோடு முரண்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. அவை முக்கியமானவை. எஸ்.ராமகிருஷ்ணன் அதை வைத்து அபத்த நாவல் என்கிறார். ஜெயமோகன் ‘நல்ல நாவல், ஆனால் மகத்தான நாவல் இல்லை’ என்கிறார். நான் ‘ஆதிக்க சக்திகளின் வரலாற்று நாவல்’ என்கிறேன். இதில் ஜெயமோகன் செய்யும் அரசியலும், சு.வெங்கடேசன் செய்யத் தவறிய அரசியலும் இருக்கிறது. அடுத்த பதிவில் அதை விவாதிப்போம்.
எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் குமுதம் பத்திரிகைக்கும்….
இந்த வாரம் 29.2.1012 தேதியிட்ட குமுதம் பத்திரிகையில், காவல் கோட்டம் நாவல் குறித்த சில செய்திகள் வெளியாகி இருக்கிறது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோரைத் தொடர்புகொண்டு கருத்துக்கள் கேட்டு இருக்கின்றர். அதில் தீராத பக்கங்களில், கடந்த ஒரு வார காலமாக காவல் கோட்டம் குறித்து எழுதியவைகளிலிருந்து குமுதம் பத்திரிகை கீழ்க்கண்டவாறு எடுத்துச் சொல்கிறது:
மாதவராஜ் என்ற தோழரும் அடுக்கடுக்காக பல தகவல்களை முன்வைத்து ‘காவல்கோட்டத்தை விமர்சித்து வருகிறார். ‘சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது போன்றவை இந்திய அரசின் விருதுகளே. ஒரு முதலாளித்து அரசின் கைகளில் இருந்து நீட்டப்படும் விருதை தனக்கும், தன் எழுத்துக்கும் கிடைத்த உயர்ந்தபட்ச அங்கீகாரம் என இடதுசாரிக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் பெருமிதம் கொள்ள மாட்டர்கள். பிரமைகளிலும் மயக்கங்களிலும் மூழ்கிட மாட்டார்கள். அப்படி ஆகிறவர்கள் நிச்சயம் இடதுசாரி எழுத்தாளர்களாக இருக்க மாட்டார்கள்’ என்கிறார் மாதவராஜ்.
‘தன் கட்டுரையில் ஜெயகாந்தன் பற்றி உயர்வு நவிற்சியிலேயே அணுகும் மாதவராஜ், வெங்கடேசனை சாமானியனைப் போல பேசியிருப்பது நல்லதாகப்படவில்லை. மாதவராஜ், ஜெயகாந்தனின் மருமகன் என்பதால் இந்தப் பாச உணர்ச்சி மேலிடுகிறது’ என்கிறார் இன்னொரு மார்க்சிஸ்ட் ஊழியர்.
காவல்கோட்டம் நாவல் பற்றிய அடுக்கடுக்கான பல தகவல்களில், குமுதம் பத்திரிகைக்கு எது முக்கியமானதாகப் பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. காவல்கோட்டம் என்ற நாவலின் உருவம், அதன் எழுத்துநடை, எழுதப்பட்ட விதம், எதைப் பேசுகிறது, எதைப் பேச மறுக்கிறது, அதற்குள் புதைந்திருக்கும் அரசியல் என விரிவாக எழுதப்பட்ட யாவும் குமுதத்திற்கு முக்கியமானதாகப் படவில்லை.
பொதுவாக விருதுகள் பற்றியும் இடதுசாரி எழுத்தாளர்கள் பற்றியும் சொல்லப்பட்ட ஒரு கருத்தை மட்டுமே (அதுவும் அரைகுறையாக) தெரிவிப்பது, குமுதம் இந்த மொத்த விவாதங்களையும் திசை திருப்பவுதாக மட்டுமல்ல, நோக்கத்தையே கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயகாந்தனை முன்வைத்து சொன்ன விஷயம் ‘யாராயிருந்தாலும் உண்மை தெரியாமல் பேசவும் கூடாது, யாராயிருந்தாலும் அதற்கு தலையாட்டவும் கூடாது’ என்பதுதான் ஒழிய இதில் உயர்வுநவிற்சி என்ன இருக்கிறது? ஜெயகாந்தனின் மருமகன் என்று ஏன் சொல்லப்படவேண்டும்? மேலும் காவல் கோட்டம் நாவல் பற்றிய பிரதான விஷயமா அது? அதையும் எதோ கிசிகிசு பாணியில் எழுதியிருப்பதைப் படிக்கும் குமுதத்தின் வாசகர்கள் விஷயம் தெரியாமல் அவரவர்க்கேற்ப அர்த்தம் கொள்ளச் செய்வதாகவும் இருக்கிறது. இது தரமானது அல்ல. நேர்மையானதும் அல்ல. எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
இச்சர்ச்சைகள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன், “இன்றைக்கு விருது கிடைத்த பின்னால் இந்நாவலை விமர்சிக்கும் அவரது சக கட்சிக்காரர்கள் நாவல் வெளிவந்தபோது, மௌனமாயிருந்தார்களே. அது ஏன்? நாவல் வெளிவந்தபோது இந்த வசையை வெளியிட்டு இருந்தால் அதில் ஒரு நியாய உணர்ச்சி இருப்பதாக நான் நம்பியிருப்பேன்” என்று ஓரிடத்தில் சொல்வதாக வருகிறது. விருது கிடைத்த பிறகு எழுந்த சர்ச்சையையொட்டித்தான் நாவலைப் படித்தேன். படித்தபிறகுதான் விமர்சனம் செய்யத் துணிந்தேன். இதில் என்ன தவறு? ஒரு படைப்பைப் பற்றிய விமர்சனம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். இந்த காலத்திற்குள் வந்து சொல்ல வேண்டுமென்பதற்கு, இங்கு என்ன ஏலமா நடக்கிறது? நீங்கள் நம்புங்கள் அல்லது நம்பாதிருங்கள். அது பிரச்சினையில்லை. ஆனால் ‘வசை’ என்று எப்படிச் சொல்கிறீர்கள். இதே ‘வசை’ என்ற சொல்லைத்தான் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் பயன்படுத்துகிறார்.
மேலும் எழுத்தாளர் ஜெயமோகன், “எழுத்தாளர்களுக்கென்று கம்யூனிஸ்ட் கட்சியில் 1770 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது இதுவரை காவல்கோட்டத்தைப் போல ஒரு உருப்படியான வேலையைச் செய்திருக்கிறர்களா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார். சு.வெங்கடேசனையும், காவல்கோட்டத்தையும் முன்வைத்து ஒட்டுமொத்த எழுத்தாளர் சங்க அமைப்பையே ஜெயமோகன் கேலி செய்திருப்பதாகவும், இழிவுபடுத்தியிருப்பதாகவுமே உணர்கிறேன். எழுத்தாளர் கு.அழகிரிசாமி எங்கள் பிதாமகனாக இன்னும் தன் எழுத்துக்களில் வாழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்கு ஒரு மகத்தான அத்தியாயம். மலரும் சருகும் எழுதிய எழுத்தாளர்.டி.செல்வராஜிலிருந்து, தாகம், சங்கம் போன்ற நாவல்களைப் படைத்த எழுத்தாளர் கு.சின்னப்பாரதியிலிருந்து அது ஆரம்பிக்கிறது. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் வழியே பயணிக்கிறது. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, பவா.செல்லத்துரை, ஷாஜஹான் என , இன்னும் பல எழுத்தாளர்களாய் அது தன் எல்லைகளை அழகாக விரித்திருக்கிறது. இவர்களின் படைப்பு யாவும் உருப்படாதவை என ஒற்றை வார்த்தையில் நிராகரிக்கிறீர்கள். முற்போக்கு எழுத்தாளர்கள் குறித்த உங்கள் அபிப்பிராயம் இதுவே எனில், கோணலான உங்கள் இலக்கியப் பார்வையை சொல்லும் அளவுகோலும் அதுவேயாகட்டும். இப்பேர்ப்பட்ட நீங்கள் பாராட்டுவதாலும் நாங்கள் காவல்கோட்டத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்தை விலாவாரியாகச் சொல்லி, எழுத்தாளர் சு.வெங்கடேசன் அதுகுறித்து மட்டுமே பேசுவதாக முடிப்பதில் குமுதத்தின் பார்வையும் சார்பும் மிகத் தெளிவாக இருக்கிறது. நாவலைப் பற்றி எழுகிற ஆரோக்கியமான, தீவிரமான உரையாடல்களையெல்லாம் குமுதமும் சேர்ந்து சிதைக்கப் பார்க்கிறது. இதற்கு ‘இலக்கிய சர்ச்சை’ என்று தலைப்பு வேறு. இலக்கியமும் இல்லை. சர்ச்சையுமில்லை. எழுதியவர் இணையத்தில் நன்கு அறிமுகமான ‘கடற்கரய்’. கஷ்டம்தான்.
வம்சி சிறுகதைப் போட்டி நூல் வெளியிடும், பரிசளிப்பும்!
வம்சி சிறுகதைப் போட்டி சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் நடத்துவது என பிப்ரவரி 25ம் தேதி முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது இப்போது மார்ச் 3 ம்தேதி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வம்சி சார்பாக மேலும் சில நூல்கள் அன்று வெளியிடப்பட்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்து, ஒரு முக்கிய இலக்கிய நிகழ்வாக இந்த விழா அமையும். அதற்கான நிகழ்ச்சி நிரல்:
மார்ச் 03 சனிக்கிழமை மாலை 6.00 மணி
சுப்ரீம் ஹோட்டல், மதுரை
வரவேற்புரை
கே.வி. ஷைலஜா
வம்சி புக்ஸ்.
விலகி ஓடிய கேமிரா - மின்னல்
வெளியிடுபவர்
கலாப்ரியா
பெற்றுக் கொள்பவர்
டாக்டர். ஆமானுல்லா
உரை
சுபகுணராஜன்
வேல ராமமூர்த்தி கதைகள் - வேலராமமூர்த்தி
பிரபஞ்சன்
ஏஸ்.ஏ. பெருமாள்
உரை
பாரதி கிருஷ்ணகுமார்
முன்னொரு காலத்தில் கண்ணாடிச்சுவர்கள் - உதயசங்கர்
வெளியிடுபவர்
இரா. நாறும்பூநாதன்
பெற்றுக் கொள்பவர்
ஜே. ஷாஜகான்
உரை
கிருஷி, மணிமாறன்
ஆதி இசையின் அதிர்வுகள் - மம்மது
வெளியிடுபவர்
திரு. சீத்தாராமன்
பெற்றுக் கொள்பவர்
ஏம்.ஜே. வாசுதேவன்
ஐ.ஏம். கம்யூனிகேஷன், மதுரை.
உரை
பூர்ணகுமார்
அகில இந்திய வானொலி நிலையம், மதுரை.
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்- ஜா. மாதவராஜ்
வெளியிடுபவர்
வேல ராமமூர்த்தி
பெற்றுக் கொள்பவர்
செ. சரவணகுமார்
உரை
ஜெ. ஷாஜகான்
பதிவர்களுக்கான வம்சி சிறுகதை போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
பரிசளிப்பவர்
ஏழுத்தாளர். பிரபஞ்சன்
முதல் பரிசு
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - ஏம். ரிஷான் ஷெரீப்
இரண்டாம் பரிசு - 1
இரைச்சலற்ற வீடு - ரா. கிரிதரன்
இரண்டாம் பரிசு 2
யுக புருஷன் – அப்பாதுரை
மற்றும் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் எழுதியவர்களுக்கும்
நிகழ்வு ஓருங்கிணைப்பு
ஆ. முத்துகிருஷ்ணன் – பவாசெல்லதுரை
நண்பர்களே! பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பை எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி வெளியிட நமது பதிவர் செ.சரவணக்குமார் பெற்றுக்கொள்கிறார். எழுத்தாளர் ஷாஜஹான் தொகுப்பு குறித்து பேசுகிறார். பரிசு பெறும் அனைவருக்கும் வம்சியிலிருந்து இ-மெயில் மூலம் அனுப்பபடும். பரிசுபெறும் படைப்பாளிகள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென அழைக்கிறோம். அருகில் இருக்கும் நமது பதிவர்கள் இதையே அழைப்பாய் ஏற்று வருகை வந்து ஆதரவு தாருங்கள். நேரில் சந்திப்போம்.
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 4
பிறமலைக் கள்ளர்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது 1914ம் ஆண்டு. பெருங்காம நல்லூரில் கள்ளர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திகொடூரமாக தாக்கியது 1920 ஆண்டு. காவல்கோட்டம் இந்த இடத்தில்தான் முடிவுறுகிறது. 600 ஆண்டு கால வரலாறு சொல்லும் நாவலில் இந்த 6 ஆண்டுகள்தாம் கள்ளர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கும்,சொல்லமுடியாத துயரங்களுக்கும் ஆளாகிய காலமாக இருக்கிறது. கடைசி சில அத்தியாயங்கள் மட்டுமே இந்தப் பகுதிகளைப் பேசுகிறது. இந்தச் சட்டம் கொண்டு வருவதற்கான சூழல் எப்படி மதுரையில் உருவாகியது என்பதை நாவல் அதற்கு முந்தைய சில பகுதிகளில் பேசுகிறது. ஆங்கிலேய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மதுரை நகரக்காவலில் ஈடுபட்டிருந்த கள்ளர்களை விலக்கிவைக்க செய்யும் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறுகின்றன. சிவகாசிக் கொள்ளையும் பண்டு கலகமும் நிகழ்ந்தபிறகு அவை தீவிரமாகின்றன. காவல் கூலி கள்ளர்களுக்கு கிடைக்கவில்லையென்றாலும், களவுகள் நடக்கின்றன. துப்புக்கூலி கிடைக்கிறது. இறுதியாக யாவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அரசு இரக்கமற்று முடிவெடுக்கிறது.
இதைச் சொல்வதற்கு, ஏன் நாயக்கர் காலத்திலிருந்து கதையை ஆரம்பிக்கவேண்டும் என நிச்சயம் தோன்றும். “எங்களுக்கு திருமல நாக்கரு கொடுத்த காவடா.... அத என்னடா நீங்க வரக்கூடாதுன்னு சொல்ரது” என போலீஸை நோக்கி தாதனூர் பெரியாம்பிள ஒச்சு சீறுவதன்மூலமாக நியாயம் கற்பிக்கிறார் நாவலாசிரியர். சரி, அந்த நாயக்கர் வரலாற்று நிகழ்வுகளிலும் மிகக் கொஞ்சமாகவே தாதனூரும், கள்ளர்களும் காட்டப்படுகின்றனர். விஜயநகரப் பேரரசு, அதன்எல்லைகளும், தஞ்சாவூர், கர்நாடகம், ஆந்திரா என அதன் மொத்த அரசியல் களங்களும், நிகழ்வுகளும் ஏன் இவ்வளவு விரிவாக சொல்லப்படுகின்றன என்பது கடைசிவரை விளங்கவேயில்லை. இந்த இருநூறு முன்னூறு பக்கங்களைத் தாண்டி படித்தாலும் வாசகனுக்குஎந்த பங்கமும் வந்துவிடப் போவதில்லை. மதுரையை ஆண்ட நாயக்கர் எப்படி தங்கள் அதிகாரத்தை இழந்தனர் என்பதும், மதுரையைக் காவல் செய்த கள்ளர்கள் எப்படி தங்கள் உரிமையை இழந்தனர் என்பதுமாக இரு குறிப்பிட்ட சமூகத்தை முன்னிறுத்தி மதுரையின் வரலாற்றைப் பேசுவதுதான் நாவலின் நோக்கமா? அதற்காகத்தான் முடி அரசு,குடி மக்கள் என இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு இருக்கிறதா? யாவும் நாவலைப் படைத்த சு.வெங்கடேசனுக்கே வெளிச்சம்.
நாவலின் தலைப்பு ‘காவல் கோட்டம்’ என வைத்திருப்பதால் ‘நாயக்கர்களை மறந்து’ காவல் தொழில் செய்த கள்ளர்களின் வாழ்வையே பிரதானமாகப் பேசும் நாவலாகவே அர்த்தப்படுத்திக் கொள்வோமாக. ஆனால் அதையும் முழுமையாகவும், நேர்மையாகவும் இந்தநாவல் பேசவில்லை. கள்ளர்களின் பூர்வீகம் குறித்து பல தரவுகள் இருக்க, அவர்கள் களப்பிரர்களின் போர் வீரர்கள் பிரிவாக இருக்கலாம் என போதகர் சாம்ராஜ் மூலம் போகிற போக்கில் ஒரு ஆய்வுத்தகவலாக சொல்லப்படுகிறது. முதலில் சமணமதத்தைச் சார்ந்தவர்களாயிருந்திருக்க வேண்டும் என கருத்தை முன்வைப்பதிலிருந்து, அமணமலை எதன் குறியீடாக நிற்கிறது என்பது புலப்படுகிறது. பின்னர் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் இவர்கள் தண்டிக்கப்படும்போது சமணர்களை கழுவேற்றிய காட்சிகளை நினைவுபடுத்துவதன்மூலம் வரலாற்றில் அவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட மனிதர்களென ஒரு சித்திரத்தை நாவல்நிறுவ முயல்கிறது. ஆனால் நாவலின் ஆயிரம் பக்கங்களில், கடைசி சில பக்கங்களைத் தவிர வேறெங்குமே கள்ளர்களுக்கென்ற தனித்த துயரமான வாழ்க்கை மனதை அழுத்தவே இல்லை. சாகச வீரர்களாகவே இரவெல்லாம் வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்.
‘படைவீரர்களான இவர்கள் தொழில் அற்று நத்தம் மற்றும் அதற்குவடக்கிருந்த பிறமலைகளில் ஒதுங்கி வாழ நேர்ந்தது. பின்னர் பிறசமூகத்தினர் இவர்களுக்குச்சூட்டிய கள்ளர் என்பதே காலத்தில் நிலைத்துவிட்டது’ என்பவை நாவலில் வரும் வரிகள். அவர்கள்களவுத் தொழில் செய்ததால் கள்ளர் என்று அழைக்கப்பட்டனர் என்று சொல்வதற்குப் பதிலாக,அவர்களை அப்படி அழைத்தது பிறசமூகத்தினரே எனபழி கட்டுகிறது நாவல். களவை நியாயப்படுத்தும் விதமாக எழுத்துக்கள் மிகக் கவனமாக கையாளப்பட்டு இருக்கின்றன. கன்னம் வைத்து களவுக்கு நுழையும் வீட்டில் சுற்றி நடப்பது அறியாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருப்பவர்கள்தான் தனது வாசகர்கள் என எழுத்தாளர் நினைத்துவிட்டார் போலும். நாயக்கர் காலத்தில் பெரும்பாலும் போர்வீரர்களாயிருந்தவர் கொல்லவாருகள். ‘இது தவறு, கம்மவாருகள்தாம் போர்வீரர்களாயிருந்தனர்’ எனவும் நாவலைப் படித்த சிலர் சொல்கிறார்கள். எந்த வாருகளோ, ஆனால் அவர்கள் களவுத்தொழிலில் ஈடுபடவில்லை. சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழவும் இல்லை. இந்த முரண்பாட்டை ஆராய்ந்திருந்தால் நாவலின் திசை வழியும், களவு குறித்த பார்வைகளும், வரலாற்றுத் தெளிவும் சாத்தியமாகி இருக்கலாம்.
களவுக்கும், காவலுக்குமாகவே இரவுகள் வருகின்றன என்பதன் மூலம்களவுத் தொழிலை மிக இயல்பானதாகவே நாவல் முன்வைக்கிறது. கள்ளர்கள் குறித்து பிற சமூகங்கள்என்ன கருத்து கொண்டு இருந்தனர் என்பது நாவலில் தெளிவாகச் சொல்லப்படவேயில்லை. களவு செய்யும்பொருட்களை யார் வாங்குகிறார்கள், அவர்கள் கள்ளர்களை எப்படி பயன்படுத்தினார்கள், அவர்களுக்கும் கள்ளர்களுக்குமான உறவு எப்படி இருந்தது போன்ற விவரிப்புகள் இல்லை. மொட்டு போல் இருந்த மதுரையை ஆங்கிலேயன் விரித்துவைத்தாகச் சொல்கிற எழுத்தாளர், அங்கு அய்யர், பிள்ளைமார், நெசவாளர், செட்டியார்,கோனார், நாடார் என பிற சமூகங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதை அங்கங்கு சிறு சிறுகுறிப்புகளாய்த் தருகிறார். ஆனால் கள்ளர்கள் நகருக்குள் இருப்பிடங்கள் கொண்டதாகச் சொல்லப்படவில்லை. அது ஏன் என நாவல் ஆராயவுமில்லை. அடுத்தது, கள்ளர்களில் அனைவருமே களவுத்தொழிலில் ஈடுபட்டு இருக்கவுமில்லை. அவர்களிலும் சம்சாரிகள் இருக்கிறார்கள். வேறு தொழில் செய்கிறவர்களும்இருக்கிறார்கள். அதுகுறித்தெல்லாம் நாவல் பெரிதாய் கவலைப்படவுமில்ல. பக்கங்களை ஒதுக்கிகவனம் செலுத்தவுமில்லை. கள்ளர் சமூகங்களுக்கும், பிற சமூகங்களுக்கும் உள்ள உறவுகளைமிகக் கவனமாக தவிர்த்து, அல்லது முக்கியத்துவம் அளிக்காமல் நகர்கிறது நாவல். சிவகாசிக் கலவரம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற சமூகங்கள் சேர்ந்து கள்ளர்களுக்கு எதிராக நடத்திய பண்டு கலவரம் குறித்து நாவல் குறிப்பிட்டாலும்,அதன் பௌதீக காரணங்களை வேண்டுமென்றே தாண்டிச் செல்கிறது.
நாவல் என்பது விரிந்த எல்லைகளைக் கொண்டது. ஒரு பொருளின் பரிணாமங்களையும், சகல பரிமாணங்களையும் காட்டுவதற்கானவெளி கொண்டது. ஆனால் இந்த நாவல் முழுக்க முழுக்க களவுத் தொழில் செய்கிற கள்ளர்களின் வயப்பட்டு ஒற்றை நோக்கில் தட்டையாக இயங்குகிறது. களவை மொத்த சமூகம் சார்ந்த ஒரு பிரச்சினையாக பார்க்க வேண்டிய ஒரு பொறுப்புள்ள எழுத்தாளர் அதனையே பாடுபொருளாக்கி, மெய்மறந்து சிலாகித்துக்கொண்டு இருக்கிறார். அதற்காக பத்தாண்டுகளாக கடும்தவமும், உழைப்பும் செலுத்தியிருக்கிறார். அச்சமூகத்தின்மீது எந்தவித விமர்சனமுமின்றி ஒரு காவியத்தன்மையை பூசிக்கொண்டு இருக்கிறார். களவுகொண்ட ஒரு சமூகம் எப்படி உருவானது, அதற்கான புறக்காரணங்கள் என்ன , களவில் ஈடுபட்ட மனிதர்கள் மீட்க என்ன அரசு காரியங்கள் செய்தது, அதில் என்ன தவறுகள் இருந்தன,களவில் ஈடுபட்டவர்களை பொது சமூகத்தில் கலக்கவிடாமல் தடுத்தது எது என வரலாற்றை எந்தவித மீள்வாசிப்பும் செய்யாமல் இப்படியெல்லாம் கதைகள் அளப்பது வருங்காலத்துக்கு செய்கிற துரோகம். குருபூஜைகளுக்குச் செய்யும் ஒரு இலக்கியத்தொண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் தூக்கிப் பிடிக்கிற சோஷலிச யதார்த்தவாதம் இந்த நாவலின் இருளில் புதையூண்டு போன எத்தனையோ விஷயங்களில் ஒன்று.
மதுரையைச் சுற்றி பிறமலைக்கள்ளர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி,நாட்டார்மங்கலம் போன்ற கிராமங்கள் இருக்கின்றன. பத்தாண்டுகளாக ஜனநாயக நெறிகளை மதிக்காமல், ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் தங்கள் பஞ்சாயத்துகளுக்குத் தலைவராவதா என கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தேர்தலே நடத்தவிடாமல் செய்த பராக்கிரமங்களை உலகம்அறியும். மேலவளவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட முருகேசனோடு இன்னும்பலரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் வெளியில் தெரிந்தவை. இன்னும் சுற்றியுள்ள கிராமங்களில் தாழ்த்தப்பட்ட பகுதியினர் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் என ஆய்வுகள்சொல்கின்றன. இவை குறித்து ‘இதுவேறு இதிகாசம்’ என நாங்கள் தயாரித்த ஆவணப்படத்திற்காக,அந்தப் பகுதிகளுக்கு எங்கள் குழுவினர் சென்றிருக்கிறோம். சு.வெங்கடேசன்தான் முதலில் அழைத்துச் சென்றார். அதுபற்றி தீராதபக்கங்களில் எழுதியுமிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆழமாய் எழுந்த கேள்வி ஒன்றுண்டு. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, சமூகத்தின் பெருங்குற்றவாளிகள் போல சித்தரிக்கப்பட்ட மனிதர்களுக்குள் எப்படி இந்த ஜாதீய பெருமிதமும்,இறுக்கமும் அடர்ந்திருக்கிறது, இவர்கள் எப்படிசகமனிதர்களை சமமாக மதிக்காமல் இப்படி வெறி கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் அது.
பேரா.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன் ஆகியோர் இதற்கான கருத்தியல் விளக்கங்கள் கொடுத்திருப்பார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் மிக முக்கியமான ஒரு தகவலைச் சொன்னார். பிரிட்டிஷ்காரன் செய்த தந்திரம் இதில் உண்டு என்றும் ரேகைச் சட்டத்தால் பிடிக்கப்பட்ட கள்ளர்களின் முதுகு மீது மீது தாழ்த்தப்பட்ட மக்களை உட்கார வைப்பது போன்ற தண்டனைகள்கொடுத்து பகைமையை வளர்த்தான் என்றும் சொன்னார். சு.வெங்கடேசனின் ஆயிரம் பக்க நாவலில்இவையெல்லாம் எங்கும் காணோம். தாழ்த்தப்பட்ட மனிதர்களே காணோம். நாயக்கர் காலத்தில் முதலில் கள்ளர்களை ஒடுக்கிய சக்கிலியரான மதுரைவீரன்,பிறகு மன்னனால் குற்றம்சுத்தப்பட்டு மாறுகால் மாறு கை வாங்கப்பட்ட கதையைச் சொல்ல நமது எழுத்தாளரை எது தடுத்தது என்று தெரியவில்லை. நிச்சயம் தற்செயலானதாக இருக்க முடியாது.நாவலின் முக்கியமான அரசியல் இது. ‘தடித்த உங்கள் இதிகாசங்களில் எந்த பக்கம் எங்கள் வாழ்க்கை’ என கவிஞர்.ஆதவன் தீட்சண்யா பத்து வருடங்களுக்குமுன்னரே கவிதை எழுதி வைத்து விட்டார்.
முடித்துக்கொள்கிறேன்.
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 3
காவல் கோட்டம் என்னும் நாவல் குறித்த விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. அதுவே இங்கு பெரும் சர்ச்சைகளாய் ஊதப்படுகின்றன. சிலர் படிக்க ஆரம்பித்து நூறு பக்கங்களைத் தாண்ட முடியாமல் கைவிட்ட கதைகளை அறிவேன். நாவல் வெளிவந்தவுடன் வாங்கி, முக்கி முக்கிப் படித்துப் பார்த்து நானும் அப்படியே வைத்திருந்தேன். எழுத்தாளர் தமிழ்ச்செல்வனிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, “இருநூறு பக்கங்களை அப்படியேத் தாண்டி படிக்க ஆரம்பியுங்கள். அப்புறம் பிரமாதமா இருக்கும்” என்றார். மனம் வராமல் நாவல் பத்திரமாக இருக்கட்டும் என விட்டுவிட்டேன். இப்போது காவல் கோட்டம் விருது குறித்த என் கருத்துக்களை தீராத பக்கங்களில் தெரிவிக்க நினைத்ததும், முதல் வேலையாக நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பெத்தானியாபுரம் முருகானந்தத்திற்கு நன்றி.
மதுரையை மையமாக வைத்து முகம்மதியர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என மூன்று ஆட்சிமுறைகளின் ஊடே கள்ளர்களின் கதை நிகழ்கிறது. அதிகாரங்கள் ஒவ்வொன்றின் எழுச்சியிலும், சிதைவிலும் அவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறது என்பதைச் சொல்கிறது. தொடங்கும் இடமும், முடியும் இடமும் அப்படியொரு முடிச்சைப் போட்டு வைத்திருக்கிறது. வேப்பங்குளத்தின் அழிவாக முதல் அத்தியாயமும், தாதனூரின் அழிவாக கடைசி அத்தியாயமும் இருக்கின்றன. பிள்ளைத்தாய்ச்சியாய் வேப்பங்குளத்திலிருந்து தன்னந்தனியாய் கிளம்பிச்சென்ற சடச்சி அமணமலை அடிவாரத்தில் தாதனூரின் குலமாக விரிகிறாள். விஜயநகரப் பேரரசு, மதுரையில் அவர்களது ராஜ்ஜியம், கோட்டை கட்டப்படுவது, தென்பகுதியில் பாளையங்கள் உருவாதல், அவர்களுக்கிடையேயான முரண்பாடுகள், கும்பினியாரின் தலையீடுகள், படையெடுப்புகள், கட்டபொம்மு, ஊமைத்துரை முதலானோர் அழிவில் பாளையங்கள் சிதைவு என மாறும் பக்கங்களில் தாதனூர் அவ்வப்போது வந்து செல்கிறது. சடச்சியின் பேரக்குழந்தைகளுக்கு கைவளையல்களைத் தருகிறாள் விஜயநகர மன்னன் குமார கம்பணின் அரசி கங்கா தேவி. சில தலைமுறைகளுக்குப் பிறகு விஸ்வநாதர் காலத்தில் மதுரையில் கோட்டை கட்டும்போது தாதனூர்க்காரர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். பிறகு அரியலூர் ஜல்லிக்கட்டில் காளையடக்கும் அவர்தம் வீரமும், மானமும் காட்டப்படுகிறது. திருமலையப்ப நாயக்கர் காலத்தில் அவர்களது களவு அதிசயம்போல போற்றப்பட்டு காவல் உரிமை பெறுகிறார்கள். சொக்கநாதர் காலத்தில் படையின் போர்க்களத்தில் தாதனூரைச் சேர்ந்தவர்கள் வளரி வீசுகிறார்கள். ஒருநாள் மன்னன் முத்து வீரப்பன் தாதனூர் வந்து ஆச்சரியம் தந்து அந்த எளிய மக்களின் வாழ்வுக்காக வாக்குறுதிகள் தந்து சிலகாலத்தில் இறந்து போகிறான். ராணி மங்கம்மா காலத்திலும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாவிட்டாலும், காவல் உரிமை மட்டும் பெறுகிறார்கள். ஏறத்தாழ நானூறு ஆண்டுகால வரலாறாக இவையாவும் முதல் இருநூறு முன்னூறு பக்கங்களுக்குள் முடிந்துவிடுகின்றன.
வெள்ளைக்காரன் ராஜ்ஜியத்தில் பெரியாம்பிள மாயாண்டி சொல்லும் பேய்க்காலம் தாதனூருக்கு ஒவ்வொன்றாக ஆரம்பிக்கிறது. கோட்டை இடிக்கப்படுகிறது. கள்ளர்கள் முக்கியத்துவம் இழக்க ஆரம்பிக்கின்றனர். கச்சேரியில் காவல்நிலையம் அமைக்கப்படுகிறது. மதுரை நகரக் காவல் பறி போகிறது. தாதனூருக்கு கிராமக்காவலும், களவும் வழிகளாகின்றன. தாது வருஷப்பஞ்சம் வாழ்வை நிலைகுலைய வைக்கிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்படுகிறது. மிஷினரிகள், சீர்திருத்தப்பள்ளிகளின் வருகை வாழ்விற்கு வேறு அர்த்தம் கற்பிக்கின்றன. இந்த கால ஓட்டங்களுக்குள் நிகழ்த்தப்படும் களவுகள் வண்டி வண்டியாய் சொல்லப்படுகின்றன. கன்னம் வைப்பது, கருது கசக்குவது, மாடு ஒட்டுவது, ஆடு பிடிப்பது, சரக்கு ரயிலில் மூடை இறக்குவது என வகை வகையான களவுகளில் ஒருமுறை வரும் நகைக் களவு அவர்களின் வாழ்வையே பதம் பார்க்கிறது. ரோடுகள், சிறைச்சாலை என ஒவ்வொன்றாகத் தோன்றி தாதனூரின் குரல்வளையை நெறிக்கிறது. மலைக்குள் போய் ஓளிந்து கொள்கிறார்கள். குற்றப்பரம்பரைச் சட்டம் ஒருவர் விடாமல் ரேகை புரட்ட வைக்கிறது. வலி தாங்காமல் எழும் எதிர்ப்பை அரசு மூர்க்கத்தோடு துப்பாக்கிச்சூடு நடத்தி துடைத்தெறிகிறது. தாதனூர் நினைவுகளுக்குள்ளிருந்து வாழ்வை மீட்டெடுத்துக் கொண்டு இருக்கிறது. நாவல் இப்படியாக முடிகிறது. தாதனூரே முழுக்க நிறையும் எழுநூறுக்கும் மேலான பக்கங்களுக்கிடையே அவ்வப்போது பிரிட்டிஷ் அரசின் காரியங்கள் குறிப்பிடப்படுகின்றன.
கைகளில் எடுத்து வைத்துப் படிக்க முடியாதபடி தண்டியாக இருக்கும் காவல் கோட்டத்தின் பாரமும் பருமனும் மட்டும் இந்தச் சிரமங்களுக்கு காரணமாக இருக்க முடியாது. நாவல் எழுதப்பட்ட விதமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. சரித்திர நாவல் படிப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். நமக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் கதைகளை அறிவதில் யாருக்கும் ஒரு அலாதியான விருப்பம் உண்டு. சுற்றி இருப்பவை மறைந்து, வாசிப்பவர்களுக்கு பக்கங்களில் தங்களைக் கரைத்துக் கொள்ளும் மாயம் நிகழும். புதையுண்ட காலங்கள் மெல்ல மெல்ல புலப்பட, அந்த வெளிகளில் உயிர்கொண்டு திரியும் அற்புதம் கைகூடும். காவல் கோட்டத்தில் அது நேரவில்லை. நாவலின் உருவம் மற்றும் உள்ளடக்கம் இரண்டுமே அரைகுறையாய் இருக்கிறது. முதலில் உருவம் குறித்து பேசலாம்.
காவிரிக்கரையோரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் செல்வதில் இருந்து விரிகிற ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் காட்சிகள் முப்பது வருடங்களுக்குப் பின்னரும் மறையவில்லை. ’‘சிவகாமியின் சபதத்’தை நினைத்த மாத்திரத்தில் மாமல்லபுரத்தின் சிற்பக்கூடங்களில் இருந்து உளியின் சத்தம் கேட்க ஆரம்பித்து விடுகிறது. கதை சொல்கிறவர்கள், தங்கள் வார்த்தைகளின் மூலம் எல்லாவற்றுக்கும் உயிரூட்டி விடுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் ‘கன்னிநிலத்தின்’ கஸாக்குகள் ஸ்தெப்பி புல்வெளிகளுக்குள்ளிருந்து எதிரே வருகிறார்கள். படித்து முடிக்கும்போது ‘ஏழு தலைமுறை’யைச் சொல்லிக்கொண்டு வந்தவனும், ஆப்பிரிக்கக் கிராமத்தின் அந்த கறுப்பு மனிதனும் மட்டுமா ஒரேயாளாகிப்போகிறார்கள்? வாசிக்கிறவர்களும்தானே. ஆனால் பார்த்துப் பழகிய மதுரையை மையமாகக் கொண்ட காவல்கோட்டம் இதுபோன்ற அனுபவத்தை ஏற்படுத்தவில்லை. நாவலில் அடிக்கடி வரும் ராமாயணச்சாவடி, காவல்காரர்கள் கூடும் புதுமண்டபம், மந்தை, அந்த ஆல மரத்தடி, அமணமலை என எதுவும் ஒரு சித்திரமாய் நிலைக்கவில்ல. இது விநோதம்தான்.
முழு இருளுக்குள் நடந்து செல்கிறவருக்கு முன்னும் பின்னும் இருளே அடைந்துகிடக்கும். கடக்கும் இடத்தில் தெரிவது கடந்தபின் தப்பிவிடும். அப்படித்தான் இருக்கிறது நாவல் குறித்த வாசிப்பனுபவமும். எவ்வளவோ சம்பவங்கள், பாத்திரங்கள் என நிறைந்திருந்தும் நினைவில் இருட்டு மட்டுமே நிலைத்த மாதிரியிருக்கிறது. ஆழ்ந்து பார்க்கிறபோது, நாவலின் கடைசி இரண்டு அத்தியாயங்கள் நமக்குள் அப்படியே தங்கிவிடுகின்றன. மற்றபடி, களவுக்கு இறங்கிய வீட்டில் தூக்கில் தொங்கிய பெண்ணின் பாதம் காணும் சின்னான், முதன் முதலாக போலீஸ் உடை உடுத்தி சங்கடப்படும் கோபால் ஐயர், குஸ்தி பயில்வான் வீட்டில் கன்னம் வைக்கிற விட்டிப் பெரியாம்பிள, குரங்குகளைப் பிடித்து வரும் களவு, பிளாக்பெர்ன் மதுரையைவிட்டு விடைபெறும் தருணம், அமணமலையில் உட்கார்ந்து சுடச்சுட ஆட்டுக்கறி சாப்பிடுவது என அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு ஒழுங்கில்லாமல் வந்து போகின்றன. நாவலின் பெரும்பகுதி வரும் மாயாண்டிப் பெரியாம்பிள என்னும் பேர் மட்டுமே நினைவில் இருக்கிறது. அவர் காணாமல் போய்விடுகிறார். இப்படி செதில் செதிலாக நாவலின் பக்கங்கள் முழு உருவமற்று பிய்ந்து கிடக்கின்றன.
நாவல் எழுதும் கலை சு.வெங்கடேசனுக்கு கைவரவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ‘அது வந்து வெங்கடேசா.....” என மக்கள் சொன்ன கதைகளை காலநேரமில்லாமல் கேட்டு அலைந்தவர், அவைகளை செரித்து, திரும்ப மக்களிடம் சொல்ல சிரமப்பட்டு இருக்கிறார். மிஷனரியின் ஆவணங்கள், ஆவணக்காப்பகங்களின் தரவுகள், மக்களின் நினைவுகளில் கொட்டிக்கிடந்ததை எல்லாம் சேகரித்து அவைகளுக்குள்ளிருந்து ஒரு பெருங்கதையைச் சொல்ல வருகிறபோது திணறியிருக்கிறார். சு.வெங்கடேசன் சொல்கிற பத்து ஆண்டு உழைப்பின் சோதனையான இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அதற்கென்ற மொழியும், தெளிவும் ஒன்றுபோல் அவருக்கு காவல் கோட்டத்தின் கடைசிப்பக்கம் வரை கிடைக்கவில்லை. அங்கங்கு கிடைக்கிற மாதிரி இருக்கிறது. சட்டென்று தொலைத்து விடுகிறார். கதை சொல்கிறவருக்கு என்று தனித்த ஒரு குரலும், தொனியும் இருப்பதை வாசிக்கிறவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அவைதாம் கதைகளின் ருசியறிய வைக்கிறது. அதனைத் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். காவல்கோட்டத்தில் அது அறுந்து அறுந்து ஒலிக்கிறது. சரித்திர நிகழ்வுகள் ஒன்றாகவும், ஆவணங்கள் ஒன்றாகவும், புனைவுகள் ஒன்றாகவும், உரையாடல்கள் ஒன்றாகவும் துருத்திக்கொண்டு இருக்கின்றன. வாசிக்கிறவனை அவை தடுத்து நிறுத்தி நிறுத்தி உள்ளே அனுப்புகிறது. எனவே நாவலுக்குள் ஒரே மூச்சில் பயணம் செய்ய முடியவில்லை.
ஏனென்றால் நாவல் ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து எழுதப்பட்டதாக இருக்கவில்லை. அவ்வப்போது தோன்றியவைகளை, முக்கியமானவை எனக் கருதியவற்றை, நினைவில் நிழலாடியவைகளை, புனைவாக உள்ளுக்குள் ஊறியவைகளை எழுதி வைத்து அவைகளோடு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணக்குறிப்புகளை சேர்த்து அங்கங்கு சொருகியது போலிருக்கிறது. அடுத்து, தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லித் தீர்த்து விடவேண்டும் என்கிற வேகம் கதையின் அடர்த்தியை சிதைக்கிறது. ஆவணங்களின் அடிப்படையிலான வரலாற்று நாவலை எழுதும்போது, நிகழ்வுகளை வசப்படுத்தி, ஒழுங்கமைத்துச் சொல்கிற செறிவான மொழியொன்றை எழுத்தாளன் கொண்டு இருக்க வேண்டும். சு.வெங்கடேசன் மிக மோசமாக தோற்றுப்போன இடம் இதுதான் என்று தோன்றுகிறது.
மதுரை, கம்பம், நத்தம், இராமநாதபுரம், திருமங்கலம் என விரியும் இடங்கலெல்லாம் நிறைந்திருக்கும் பரப்பினை ஒட்டுமொத்தமாக விரித்துவைத்து அதில் மனிதர்களை நடமாடவிட முடியவில்லை. மதுரை வீதிகள், வைகையாறு, காடுகள், மலைகள் என கதை அற்புதமான வெளிகளில் கொண்டு போய் நிறுத்த முடியவில்லை. மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது நாவல் முழுக்கவும் உணர்வற்று கடக்க வைக்கும் ஒரு எழுத்தாக இருக்கிறது. ஆந்தையின் கண்களை வாசகனுக்கும் கொடுத்து விடுகிறார் சு.வெங்கடேசன். சோகம், வலி, சிரிப்பு, கோபம் என எதுவும் நமக்குள் பரவவில்லை. அதற்கான தருணங்கள் எவ்வளவோ இருந்தும் எல்லாவற்றையும் வீணடித்திருக்கிறது சு.வெங்கடேசனின் எழுத்து நடை.
கதை எழுதுகிறவனுக்கு மாக்ஸிம் கார்க்கியினுடைய இந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை: “சொற்களினுடைய சாரம், தெளிவு கம்பீரம் ஆகியவற்றின் மூலம் மொழியுடைய உண்மையான அழகு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு புத்தகத்தினுடைய காட்சிகளையும், குணங்களையும் மற்றும் கருத்துக்களையும் வடிவுறச் செய்கிறது. எழுத்தாளர் ஒரு உண்மையான கலைஞராக இருக்கிறார். அவர் தம்முடைய மொழி ஞானத்தின் அகராதி ரீதியான ஆதாரங்கள் பற்றிய விரிவான அறிவை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மிகவும் திட்டமான, தெளிவான, சக்தி பொருந்திய சொற்களை தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் அவருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு சேமாண்டிக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், அத்தகைய சொற்களின் கலவைகளாக மட்டுமே, மற்றும் சொற்றொடர்களில் அவற்றினுடைய சரியான விநியோகமாகவும் அது இருக்கிறது. ஆசிரியருடைய கருத்துக்களுக்கு ஒரு உயர்ந்த ரீதியிலான வடிவத்தை அது வழங்க முடியும். மிகவும் தத்ரூபமான முறையிலான காட்சிகளை அது உருவாக்க முடியும். மேலும் ஆசிரியர் எதைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை வாசகர் தனக்குள் கற்பனை செய்து கண்டறிவதற்கு, மிகவும் திருப்திகரமான நினைவில் நிற்கக்கூடிய சொல்லாரங்களை அது வடித்தெடுக்க முடியும் வெறுமனே அவருடைய பேனாவை காகிதத்தில் செலுத்தவில்லை என்பதை எழுத்தாளர் கண்டிப்பாக உணர வேண்டும்”. சு.வெங்கடேசன் உணரவில்லை போலும்.
இருள், களவு, கோட்டை இடிப்பு, துயரங்கள், வெயில், கதைகள், எல்லாம் நாவலின் அடிநாதமெனக் கருதி அவைகளைக் கவித்துவமான மொழியில் சொல்ல எழுத்தாளர் கடும் பிரயத்தனம் செய்திருப்பது தெரிகிறது. வலிந்து வலிந்து எழுதியிருக்கிறார். சில இடங்களில் அற்புதமாகவும் வெளிப்பட்டு இருக்கிறது. ‘திரியிலிருந்து சிறுத்துச் சிந்திய ஒளி வாசனையைப் போல கண்ணுக்குத் தெரியாமல் அந்த அறையின் இருளுக்குள் மிதந்தது’, ‘பெண்கள் வீட்டின் சிறுவிளக்கை ஏற்றியபின் ஆண்கள் தீச்சுடரின் கரும்புகை போல் இருட்டுக்குள் ஊர்ந்து சென்றனர்’, ‘விடைத்த நாசிக்கு மிக அருகில் வேட்டை இருந்தும் அது பிடிபடாதபோது வெறி உச்சத்தில் ஏறிவிடுகிறது’, ‘பொழுது மறைவதற்கு முன்பு கடைசி வெளிச்சம் மஞ்சள் பொடி போல காட்டின் மீது பரவிக்கொண்டு இருந்தது’, ‘ஊரின் நாக்கு கிணற்றுக்குள்தான் இருக்கிறது’ ‘ஒவ்வொரு அதிகாலையிலும் சூரியனின் ஓளி கோட்டை அகற்றப்பட்ட இடத்தை ஆர்வத்தோடு பார்த்தது’ போன்றவற்றை ரசிப்பதற்கும், உள்வாங்கி காட்சிப்படுத்துவதற்கும் முடிகிறது. மாடங்களைப் பற்றிச் சொல்லும் இடமும், மாயாண்டியின் உடல் காயத்தை பூரானின் வடிவத்திற்கு ஒப்பிடுவதும், ‘காத்தாயி தாதனூர்க்காரியானாள்’ என்னும் இரண்டு வார்த்தைக்குள் விரியும் அர்த்தங்களும் சொற்களின் வசியமாக இருக்கின்றன.
இதுபோன்ற சில அழகுகளுக்காக ஏராளமான அபத்தங்களை நாவல் முழுக்க தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ‘ஐயோ’ என யாருக்கும் தெரியாமல் தலையில் அடித்துக்கொள்ள நேர்கிறது.வெயிலை ‘உஷ்ணக்குஞ்சுகள்’ என அவர் ஒரு பத்தி முழுக்க விவரிப்பதை வாசிப்பது அந்த வெயிலை விடக் கடும் அவஸ்தையாய் இருக்கிறது. அது பரவாயில்லை. இரவுகளை சு.வெங்கடேசன் விவரிக்க ஆரம்பித்துவிட்டால், புத்தகத்தைத் தள்ளி வைத்து கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. விவரணைகளும், காட்சிப்படுத்துதல்களும் அவ்வளவு எரிச்சலாக இருக்கின்றன. சு.வெங்கடேசனை எந்த லிஸ்ட்டில் வைக்க? எழுத்தாளர் கோணங்கியின் மொழியில் சம்பந்தமில்லாமல் சிலாவரிசை போட்டு ‘இரவுகள் ஆலமரத்து விழுதுகளின் வழியாக இறங்கின’ என்றும், ‘இரவு சொக்கநாதரின் தேர்சிற்பங்களில் இருந்து வருகிறது’, ‘இரவு பாம்புப் புற்றுக்குள் இருந்து வருகிறது’, ‘இரவுகளை பாயாய் சுருட்டிக்கொண்டு தாதனூர்க்காரர்கள் சென்றார்கள்’ என பக்கத்துக்கு பக்கம் எழுதும்போது ‘கவிதை’, ‘கவிதை’ எனவா ஆர்ப்பரிக்க முடியும்? இதுபோல ஆயிரம் இரவுகளையாவது இந்த நாவலை வாசிக்கிறவன் சந்தித்தே ஆக வேண்டும்.
சில வார்த்தைகளை கவிஞரான சு.வெங்கடேசன் தன் கைவசம் வைத்திருக்கிறார். அவைகளையே உருட்டி உருட்டி விதவிதமாய் ஆயிரம் பக்கங்களிலும் தந்துகொண்டே இருக்கிறார் . அவை யாவன: 1. வழியே. 2. குடித்து 3.ரகசியம் 4.சுருட்டி 5.உள்ளங்கை 6.தொப்புள்கொடி இன்னும் சில. ‘இரவுகளின் வழியே’, ‘வார்த்தைகளின் வழியே’, ‘ஆந்தைகளின் வழியே’. ‘கால்களின் வழியே’, ‘ஓசைகளின் வழியே’, ‘வேர்களின் வழியே’, ‘மூச்சுக்காற்றின் வழியே’, ‘மதுக்கோப்பைகளின் வழியே’, ‘ஓம்பெர்ட்டின் ரத்தத்தின் வழியே’ என வழிய வழிய வார்த்தைகளை ஒட விடுகிறார். ‘காற்றைக் குடித்து’, ‘ரத்தத்தைக் குடித்து’, ‘கதைகளைக் குடித்து’, ‘வெயிலைக் குடித்து’, ‘இருளைக் குடித்து’ என அதையும் இதையும் குடிக்கத் தந்துகொண்டே இருக்கிறார். இப்படி சில வார்த்தைகளைக் கொண்டு பல பக்கங்களை நிரப்பும்போது, வாசிக்கிறவனுக்கு அலுப்பும், அயற்சியும் ஏற்படுகிறது. எழுத்துக்களிலிருந்து கதைகள் வெளியேறி வெங்கடேசனே புரண்டு கொண்டு இருக்கிறார்.
மதுரைக் கோட்டை இடிக்கப்படுவதை சித்தரிக்க சு.வெங்கடேசன் கையாளும் புனைவு மொழி அதிர அதிர ஒலித்து கற்களை விழ வைத்து, புழுதியை வெளியெங்கும் நிரப்பி விடுகிறது. அந்த வீரியம் நாவலிலிருந்து தனித்தே ஒலிக்கிறது. புறாக்கள் மூலமும், பச்சை குத்துவது மூலமும் அதைச் சொல்லும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. நாவலோடு சேர்ந்தே காட்சிப்படுத்துகின்றன. அதுதான் முக்கியம் என எனக்குத் தோன்றுகிறது.
நாவலின் உயிர்ப்புள்ள இடங்களென்றால், பிற்பகுதியில் வரும் உரையாடல்களே. அவ்வளவு இயல்பாக அந்த மண்ணையும் வாழ்வையும் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சிந்துகிற பழமொழிகளும், சொலவடைகளும் இந்த நாவலின் வசீகரமான பகுதிகள். எழுத்தாளனால் மனிதர்களுக்குள் இறங்கி அறிய முடிந்திருக்கிறது. பெண்கள் நம்முன் நடமாட ஆரம்பிக்கிறார்கள். அதிலும் உரலை இடித்துக்கொண்டு அவர்கள் பேசும் உரையாடல்கள்... அடேயப்பா! சு.வெங்கடேசனை மனமாரப் பாராட்டத் தோன்றியது இந்த இடங்களில்தான். நாவலில் மனிதர்கள் அவர்களது மொழியால்தான் அறியப்படுகிறார்கள், எழுத்தாளனின் மொழியால் அல்ல என்பதை உணர்த்துவதும் இந்த இடங்கள்தாம்.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தூத்துக்குடியில் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்ற வந்திருந்தார். அன்று கவிதைகள் குறித்த அனுபவங்களை கவிஞர்.சு.வெங்கடேசன் பேசினார். நான் ஜெயகாந்தன் அருகில் உட்கார்ந்து எங்கள் இயக்கத்தின் கவிஞன் இவன் எனும் இறுமாப்பில் ரசித்துக்கொண்டு இருந்தேன். உணர்ச்சிகரமாக கவிதையின் வரிகளை விவரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் காதல் கவிதைகளுக்குள் நுழைந்தார். கூட்டம் முழுவதும் அவரது விவரிப்பில் தன்னை மறந்து கைதட்டி பாராட்டிக்கொண்டு இருந்தது. ஒரு தருணத்தில், ‘தாஜ்மஹால் பற்றி கவிதைகளை எழுதாத இந்தியக் கவிஞன் யார்?’ எனக் கடும் வேகத்தில் கேள்வியெழுப்பி, தாஜ்மஹால் கவிதைகள் ஒவ்வொன்றாக சு.வெங்கடேசன் சொல்லச் சொல்ல எங்கும் ஆரவாரம் எழுந்தபடி இருந்தது. நானும் கைதட்டிக்கொண்டு இருந்தேன். ஜெயகாந்தன் எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். கொட்டித் தீர்த்து பெருமிதமாக இறங்கியவரை, “வெங்கடேசன்!” என ஜெயகாந்தன் அழைத்தார். இயக்கத் தோழர்களின் பாராட்டுக்களிலும், கைகுலுக்கல்களிலும் பூரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் மெத்தப் பணிவோடு ஜெயகாந்தனின் அருகில் வந்தார். “வெங்கடேசன்! தாஜ்மஹாலைப் பற்றி பாரதி எழுதவில்லைத் தெரியுமா?” என்றார் அவர். சட்டென்று வலியையும், குற்ற உணர்வையும் சுமந்த சு.வெங்கடேசனின் முகத்தைப் பார்த்தேன். அவரைவிட நான் சிறுத்துப் போனேன். கைதட்டி மகிழ்ந்த என்னையும் ஜெயகாந்தன் பார்த்திருப்பார். யாராயிருந்தாலும் உண்மைகளை முழுவதும் அறியாமல் பாராட்டுவது அல்லது ஆமோதிப்பது சரியல்ல என்பது எனக்கான பாடம். எல்லாம் தெரிந்த மாதிரி அளந்துவிடுவது சரியல்ல என்பது சு.வெங்கடேசனுக்கான பாடம். ஆனால் அவர் அதை கற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரது எழுத்துக்கள் சொல்கின்றன.
இனி நாவலின் உள்ளடக்கம் குறித்து.....
(இன்னும் சொல்வேன்)
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் – 1
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 2
சினிமா: தோனி
எஸ்.வி.வேணுகோபாலன்
நேற்று இரவு எதிர்பாராமல் ஒரு திரைப்படத்திற்கு எனது குடும்பத்தோடு செல்ல நேர்ந்தது. பிரகாஷ் ராஜ் முதன்முதல் இயக்குநர் பொறுப்பேற்றுத் தாயரித்து வழங்கியிருக்கும் தோனி படம் அது. இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்தும் அந்தப் படம் என்னை மேலும் உணர்ச்சிமயமான சிந்தனைக்குள் சுழல வைத்துவிட்டது.
அமீர்கானின் தாரே ஜமீன் பர், டிஸ்லெக்சியா என்ற கற்பதில் சிரமம் எதிர்கொள்ளும் பிரச்சனையை உருக்கமாகக் கையாண்டது. த்ரீ இடியட்ஸ், (இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு மறு உருவாக்கமாக வந்திருக்கும் நண்பன்) நட்பின் மகோன்னத வலைப்பின்னலின் பின்புலத்தில் கல்வி முறையின் அபத்தங்கள் குறித்து நையாண்டி செய்திருக்கிறது. தோனி சமகாலத்தில் பெற்றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணுகுமுறை குறித்துச் சாட்டையடியாக விவாதங்களை முன்வைக்கிறது.
பதினேழாம் வாய்ப்பாடு தெரியாது. இரண்டு பக்க அறிவியல் பாடத்தை எந்தக் காலத்திலும் மனப்பாடம் செய்ய முடியாது. ஒரு பாடத்திலும் பாஸ் மார்க் கூட அல்ல, ஒற்றை இலக்கத்திற்கு மேல் மார்க் வாங்க இயலாது. இப்படியான மாணவனை ஒன்பதாம் வகுப்பு வரை அரசு விதிகளின் படி தாங்கிவந்த பள்ளிக் கூடம் அதற்குமேல் படி ஏறாவிட்டால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பாஸ் சதவீதத்தைக் குறைத்து பள்ளியின் பெருமையைச் சிதைத்து அடுத்தடுத்து புதிய மாணவர் சேர்ப்பு விகிதத்திலும் கை வைத்து விடும் அபாயம் உண்டு என்பதால் பெற்றோர் அவர்களாகப் பையனை ஒன்பாதம் வகுப்பிலேயே பையனைத் தங்க வைத்துவிட விண்ணப்பம் கொடுக்க வேண்டும் அல்லது டி சி வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு ஓடிவிட வேண்டும். ஏன் என்றால் அவன் மண்டு, மடையன், முட்டாள், படிப்பு ஏறாத ஜடம்....
அவனால் ஏன் இந்தக் கல்வித் திட்டத்தின் படிக்கட்டுகளை ஏறமுடியாது என்றால், படத்தின் தலைப்பிலேயே சொல்லி இருப்பது மாதிரி அவன் தோனியின் தீவிர பக்தன். கிரிக்கெட் அவனது உயிர். அபாரமான ஆட்ட நாயகனாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் அவனது விளையாட்டுத் திறமை பற்றி கிரிக்கெட் கோச் என்ன சத்தியம் செய்தாலும் அதைக் கேட்பதற்கான காதுகள் கல்வித் திட்டத்தில் இல்லை. அதன் வழி மூளையை வடிவமைத்து விட்ட பள்ளி முதல்வருக்கோ, வகுப்பு ஆசிரியருக்கோ இல்லை. மனைவியைப் பறிகொடுத்துவிட்டு இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசுப் பணியில் இருந்து கொண்டே ஓவர் டைம் வேலையும், வீட்டில் ஊறுகாய் தயாரித்து பாட்டில்களில் அடித்துத் தெருத்தெருவாய் அலைந்து விற்றபடி வருவாயையும், தனது உளவியல் விடுதலையையும் தேடியபடி அல்லும் பகலும் அலையும் தந்தைக்கும் பிடிபடுவதில்லை. டியூஷன் உலகமும் ஏற்கெனவே படிப்பில் மின்னுபவர்களுக்கே கை கொடுத்து தூக்கிவிடும் எந்திரபுரியாகவும், எழுந்து நடக்க முடியாதவர்களுக்குப் பழக்கித் தரும் சரணாலயம் இல்லை என்றும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து தெரிந்து கொள்ள வேண்டியாதாக இருக்கிறது.
மகனின் கல்வி வேட்டைக்கு ஒருபுறமும், தங்கை வீட்டு விசேஷம் போன்ற திடீர் செலவுகளுக்கு மறுபுறமும், இடையே வயதுக்கு வந்துவிடும் மகளின் சடங்குச் செலவுகளுக்காகவும்...நிரந்தரமாகவே கந்துவட்டிக்காரனின் தயவிற்கும், துரத்தலுக்கும் இடையே நிம்மதியற்றுத் துடிக்கும் நாள் ஒன்றில் நடந்துவிடும் அதிர்ச்சி நிகழ்வில் பெற்ற மகனையே தந்தை அடிக்கும் அடியில் தரையில் விழுந்து ஏற்படும் காயத்தில் கோமா நிலைக்குப் போய்விடும் மகன், அதுவரை கோமா நிலையில் இருக்கும் தந்தையையும் கல்வி உலகத்தையும் சமூகத்தையும் உலுக்கி எழுப்புவது தான் தோனி திரைப்படம்....
குழந்தைக்குப் பிடித்த துறையில் அவனுக்கு இருக்கும் திறமையை வெளிக்காட்ட இடம் தராது அவனை எதற்கும் உதவாதவனாகப் பட்டம் சுமத்த நாம் யார் என்பது தான் மையக் கேள்வி. தன்னை ஓரளவு புரிந்து கொண்டு தனக்கு உதவி செய்யும் தங்கையோடு கணிதம் கற்கும் முயற்சியில் பதினேழாம் வாய்ப்பாடு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா என்று அவள் பொறுமை இழந்து கேட்பதும், தனக்கு கணக்கு தெரியாது கிரிகெட் தெரியும் என்று கோபமாகப் பேசத் தொடங்கும் அந்தச் சிறுவன் கிரிகெட் நாயகன் தோனியின் சாதனை மைல் கற்களின் துல்லியமான புள்ளிவிவரங்களையும், கிரிகெட் ஆட்டக் களம், பந்தின் சுற்றளவு, மட்டையின அதிகப்படி நீளம், இன்ன பிற அடிப்படை கணக்குகளையும் இமை மூடித் திறக்கும் நேரத்தில் சரமாரியாக மனத்திலிருந்து எடுத்துக் கொட்டுவதும், நான் ஒன்றும் முட்டாள் அல்ல என்று நிறுத்துவதும் அதிர வைத்துக் கண்ணீரைப் பெருக்கும் இடம்.
படம் கல்வியை மட்டுமல்ல, விலைவாசி உள்ளிட்ட வேறு சில பிரச்சனைகளையும், இது எது பற்றியும் வெறும் புலம்பல் மட்டும் செய்துவிட்டுப் பொது வெளியில் குரல் கொடுக்காது தனது அன்றாடத்தில் உழலும் நடுத்தர வர்க்கம் பற்றியும் அற்புதமாக விமர்சனம் செய்கிறது. எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வந்தால் சந்திக்க வேண்டிய தாக்குதலையும் ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்கிறது. ஆனால் தொடர் போராட்டத்திற்கான சாதகமான விளைவுகள் குறித்த நம்பிக்கையையும் முன்வைக்கிறது.
நில அபகரிப்பு முதற்கொண்டு கம்ப்யூட்டரையும் டி வி யையும் விலைகள் குறைத்து காய்கறி விலையை உயர்த்திக் கொண்டிருக்கும் மோசமான பொருளாதாரக் கொள்கை வரை நடப்பு கால விஷயங்கள் வசனங்களில் கூராகத் தெறிக்கிறது. இன்னிக்கு என்ன டிபன் என்று கேட்கும் மகனுக்கு FRIED இட்லி என்று சொல்லும் அப்பன், மிஞ்சி இருக்கும் இட்லியை வைத்து இட்லி உப்புமா செஞ்சுட்டு ஸ்டைலா பேரு வேறையா என்று மகன், ஆமா வித விதமா டிபன் சாப்பிடனும்னா அம்பானி வீட்டில் பிறந்திருக்கணும் - இது தந்தை, நீங்க அம்பானியா ஆனப்புறம் எங்களைப் பெத்திருக்கணும் என்று மகன் சொல்லும் இடமும், சின்ன ஸ்கூட்டி வாகனத்தில் இரண்டு வளர்ந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் இடத்தில், உட்கார்ந்துட்டியா என்று தந்தை கேட்கும் கேள்விக்கு மகன் நின்னுட்டியா அப்படீனு கேளு, எங்கே உக்கார என்று சொல்வதும்....இப்படியாக நடுத்தர வாழ்க்கையின் அன்றாடத் தடுமாற்றங்களை ரசமாக சித்தரிக்கிறது படம்.
பிரகாஷ் ராஜ் (சுப்பிரமணி என்கிற சுப்பு பாத்திரம்) ஓர் உணர்ச்சி ஜீவி. கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சியை அவர் அபியும் நானும் படத்திலேயே வெளிப்படுத்தியவர். இதிலும் அதே தன்மைகள் உண்டு. ஆனால் தோனி படம் அதை மன்னித்து அவரது நடிப்பை மதிக்கவே தூண்டுகிறது. கிரிகெட் விளையாட்டில் உயிரை வைத்திருக்கும் மகன் வேடத்தில் ஆகாஷ் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் தங்கையாக வரும் ஸ்ரீ ஜா நடிப்பு நிறைய எதிர்பார்புகளை வழங்குகிறது. ராதிகா ஆப்தே, வாழ்க்கையின் போக்கில் உடலை முன்வைத்துக் குடும்பத்தை நகர்த்த வேண்டிய துரதிருஷ்ட இளம் பெண் (நளினி) வேடத்தில் (அது அத்தனை காத்திரமாக நிறுவப்படவில்லை என்றாலும்..) மிக அருமையாக நடித்திருக்கிறார். சுப்பு-நளினி சந்திப்புகள் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு பின்புலத்தில் வெவ்வேறு உணர்வுகளின் தளத்தில் படம் முழுக்க சிறப்பாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. கிரிகெட் கோச் வேடத்தில் நாசருக்கு வாய்ப்பு குறைவு. அதற்கு நிறைவான பங்களிப்பு. நா முத்துக்குமார் எழுத்தில் 'வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்ல, பட்டப் படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்ல' என்கிற பாடல் எஸ் பி பி குரலில் பிரபுதேவா நடிப்பில் கவனம் ஈர்க்கிறது. இந்த இடத்தில் முத்துக்குமார் பற்றியும் சொல்லத் தூண்டுகிறது. தமிழ் ஆர்வத்தில் சிறுவயதில் இருந்தே கதையும் கவிதையும் எழுதி வளர்ந்தவரை அவரது விருப்பபடி எம் ஏ தமிழ் படிக்கும் வரை அனுமதிக்கும் அவரது தந்தை அதற்குப் பிறகு மூன்று லட்ச ரூபாய் சம்பளத்தில் அமெரிக்காவில் கிடைக்கும் வேலையையும் மறுத்துக் கொண்டு திரை உலகில் நுழையவே விரும்பும் அவரது வேட்கைக்கும் தடை போடாது ஏற்பது வரை அவரது வாழ்வில் அவருக்குத் திறக்கப்பட்ட வெளிச்ச வாசல் இந்தப் படத்தின் கதையோடு பொருத்திப் பார்க்கத் தக்கது. படம் நெடுக இளையராஜா பின்னணி இசை முக்கியமானது.
அதிக உணர்ச்சிமய கொந்தளிப்பு, ஊரை அடித்து உலையில் போடும் கந்துவட்டிக்காரன் மனசாட்சி உள்ளவனாகவும் காட்சி தருவது போன்ற சினிமாத் தனம், கிளைமாக்சில் வலிய ஓர் அதிரடி கிரிகெட் சாதனை போன்ற நெருடல்களைக் கழற்றி தூர வைத்துவிடலாம். படம் அதற்கு அப்பால் மிக அடிப்படையாகச் சில கேள்விகளைப் பார்வையாளர் முன் வைக்கிறது. சமூக கோபத்தை விசிறுகிறது. அதை உணர்ச்சிவயப் பின்புலத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருந்தாலும் சிந்தனைகளைத் தூண்டித்தான் விடை பெறுகிறது.
கல்வி முறை, ஆசிரியர்-மாணவர் உறவு, பெற்றோர் கடமை, சமூகத்தின் பொறுப்பு என அனைத்தையும் இன்று விவாதிக்க வைத்திருப்பது ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களது குரூர மரணம். தனது பாதுகாவலனே தனக்கு எதிராகத் துப்பாக்கி தூக்குவான் என்று எந்தக் காலத்திலும் எதிர்பார்த்திராத மிரட்சியோடு க்யா கர் ரஹே ஹோ என்று கடைசி சொற்களை உதிர்த்தபடி மரணத்தைத் தழுவினார் பிரதமர் இந்திரா காந்தி. அதைவிடவும் அதிர்ச்சியாக தான் சொந்தப் பொறுப்பில் தவறு இழைக்காத ஆனால் சூழலின் வெப்பக் குவி மையமாக ஆக்கப்பட்டு நின்ற இடத்தில் தமது மரணத்தை சந்தித்திருக்கிறார் உமா. உமா மரணம் நிகழ்ந்த அதே தினத்தில் பல்லாவரம் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அடுத்த நாளில் டான் பாஸ்கோ மாணவர் ஒருவர். நாலாம் நாள் மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்திருக்கிறார். தற்கொலைகள் தனி மனித, தனிக் குடும்ப சோகமாகவும், பரிதாபப் பார்வையைத் தாண்டி வேறு யாரும் அதற்குப் பொறுப்பில்லை போலவும் பழகிப் போகிற அளவு பொது புத்தி கட்டமைத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் கொலை அதிர்ச்சியுற வைக்கிறது. கோணங்கள் தவறான மூலையில் இருந்தும் கூட வைக்கப் படுகின்றன.
ஒரு மாணவனின் தோல்வி அவனது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்றும், சமூகத்தின் பொறுப்பு என்ன என்பதையும் சொல்லும் இடித்ததில் தோனி திரைப்படம் இப்போதைய தமிழக கல்விச் சூழலில், மேற்படி அதிர்ச்சி நிகழ்வின் பின்புலத்தில் மிகப் பெரிய கவன ஈர்ப்பாக உருப்பெறுகிறது. பார்க்கவும், விவாதிக்கப்படவும் முக்கிய கருப்பொருளையும் நமது கையில் வைக்கிறது.
த செ ஞானவேல், பிரகாஷ் ராஜ் கூட்டு உழைப்பு கதை, வசனத்தில் முக்கிய பாராட்டுக்கு உரியது. விஜய் டி வி பிரபல நிகழ்ச்சியான நீயா நானா மேடையை திரைக்கதை அழகாக பயன்படுத்துகிறது. கோபிநாத் பாராட்டுக்குரியவர்.
மேடை நாடகம் போன்ற வசனக் கத்தல்கள், வழக்கமான முறையில் செல்லாத திரைக்கதை போன்றவற்றை பலவீனமாக நினைப்பவர்கள் மதிப்பெண்களைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் படம் மதிப்பெண்களுக்கு எதிரானது.
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 2
"நான் ஏராளமான இலக்கியப் பரிசுகள் வாங்கிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப்பூச்சியைப் போல அற்பாயுள் படைத்த பரிசுகள். ஆனால் நான் சம்பாத்தியம் செய்த பரிசு மகத்தானது. அந்தப் பரிசை பலர் ஏளனம் செய்கிறார்கள். எனினும் அதை அவர்களால் அடைய முடியாது. கலைப்பணி வேள்வியாலும் சொந்தத் தேடுதலாலும் எழுத்து மணிகளைக் கோர்த்து ஜீவ கீதமிசைப்பதாலும் நான் மக்களின் கவிஞனாக உருவானேன். அதுதான் நான் பெற்ற மிகச் சிறப்பான அரும்பெரும் பரிசாகும். பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட என்னுடைய வெவ்வேறு காவியப் படைப்புகளை விட, என்னுடைய கவிதைகளின் மறுசீரமைப்பும் விரிவுரைகளும் உட்கொண்ட அனைத்து நூல்களையும் விட மகத்தானதும் இந்தப் பரிசே ஆகும். ஆம், எனக்குரிய பரிசு வாழ்க்கையின் சில நிமிடங்கள்தாம். அதாவது, ‘லோட்டாவின்’ பாதாளத்திலிருந்து நைட்ரேட் சுரங்கத்திலிருந்து அல்லது செம்புக் கம்பிக்கிடையிலிருந்து, அதுவுமில்லாவிட்டால் அசல் நரகத்திலிருந்தே முழங்காலில் ஊர்ந்தவாறு மேலே வந்து, விகாரமான முகமும், கலங்கிச் சிவந்த கண்களும், பம்பாஸின் வாடையுடன் ஒவ்வொருவராக உலோகத்தண்டு போன்ற கரங்களை நீட்டி, உங்களை எங்களுக்கு முன்னரே தெரியும் உடன்பிறப்பே, என்று கூறும் அரிய நிமிடங்கள்!”
பாப்லோ நெருடாவின் ஓளிபொருந்திய இந்த வார்த்தைகள் காலவெளியில் இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கின்றன. முற்றிலுமாக மக்களிடம் தன்னை கரைத்துக்கொள்கிற ஒரு கலைஞனின், எழுத்தாளனின் குரலில் இருக்கும் வேட்கை அசாதாரணமானது. அவனுக்குரிய அங்கீகாரத்தையும் , அடையாளத்தையும் பூவுலகின் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்திகளாலும் தந்துவிட முடியாது. அவன் அதையெல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ தாண்டிப் போய்க்கொண்டே இருப்பான்.
இது ஒரு அடிப்படையான விஷயம். ஒரு கலைஞைனுக்கும், எழுத்தாளனுக்கும் இந்த நேர்மையும், துணிவும் எப்போதும் வேண்டும். படைப்பை மட்டுமே முன்வைத்து இயங்குகிறவர்களுக்கும், தன் படைப்பின் மீது நம்பிக்கை உள்ளவருக்கும் மட்டுமே இது சாத்தியமாகும். சு.வெங்கடேசன் நிச்சயமாய் பாப்லோ நெரூடா இல்லை. ஆனால் ஒரு இடதுசாரி எழுத்தாளனாக தன்னை அறிவித்துக்கொள்கிற அவரிடம் இந்த நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். ஆனால் சாகித்திய அகாதமி விருது கிடைத்ததும், “இந்நாவலை ஆயிரம் பக்கம் அபத்தம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் காலம் இப்போது அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டது” என்று எஸ்.ராமகிருஷ்ணனை ‘ஜஸ்ட் லைக்’ தாண்ட முடியாமல் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். சாகித்திய அகாதமி விருதுதான் இறுதித் தீர்ப்பா?
சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது போன்றவையெல்லாம் இந்திய அரசின் விருதுகளே. முதலாளித்துவ சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கிற, அதிகாரவர்க்கத்தின் பார்வைகள் கொண்ட ஒரு அரசே இந்திய அரசு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உழைக்கும் மக்களுக்கு நிச்சயமாக எதிரான அரசு இது. லஞ்சத்திலும், ஊழலிலும் திளைக்கிற ஒரு அரசுதான் இது. இப்படிப்பட்ட ஒரு அரசின் கைகளில் இருந்து நீட்டப்படும் விருதுதான் தனக்கும், தன் எழுத்துக்கும் கிடைத்த உயர்ந்தபட்ச அங்கீகாரம் என இடதுசாரிக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் பெருமிதம் கொள்ள மாட்டார்கள், மார்தட்டிக்கொள்ள மாட்டார்கள். அவைகள் குறித்து பிரமைகளிலும், மயக்கங்களிலும் முழ்கிட மாட்டார்கள். அப்படி ஆகிறவர்கள் நிச்சயம் இடதுசாரி எழுத்தாளர்களாக இருக்க மாட்டார்கள்.
அதேவேளையில் இந்த விருதுகளை ஒரேயடியாக தட்டிக்கழிப்பதும், புறக்கணிப்பதும் சரியில்லை. இந்த அரசுகள் தங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை அல்லது நல்ல அபிப்பிராயங்களை ஏற்படுத்தும் முகமாக தவிர்க்க இயலாதபடிக்கு எப்போதாவது தகுதிவாய்ந்த படைப்புகளுக்கு விருதுகள் கொடுத்து கண்துடைப்பு செய்கின்றன. இதனை நோபல் பரிசிலிருந்து ராஜராஜன் விருதுவரை சுட்டிக்காட்டலாம். இந்த அரசியலை இடதுசாரி இயக்கங்கங்களும், அமைப்புகளும் உணர்ந்தே இருக்கின்றன. ஆனாலும் இந்த அழுகிப்போன அமைப்புக்குள்ளே இருந்துகொண்டுதான் அமைப்புக்கு எதிராக போராடவும் வேண்டியிருக்கிறது. எனவே இந்த விருதுகளையும் முற்போக்கு இயக்கங்கள் தங்களுக்கு சாதகமாக்கி, தங்கள் படைப்புகளை அதிகமாக மக்களிடம் கொண்டு செல்ல எத்தனிக்கின்றன. விருதைக் காட்டிலும் படைப்புக்கும், அரசைக் காட்டிலும் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதே நோக்கமாகவும், நடைமுறை தந்திரமாகவும் இருக்கிறது. சாகித்திய அகாதமி விருது பெற்றதையொட்டி தொடர்ந்து விழாக்கள் நடத்தப்படுவதை நான் இப்படித்தான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். “ஆனால் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த போது இப்படியெல்லாம் விழாக்கள் நடத்தவில்லையே ஏன்?” என்று பெத்தானியாபுரம் முருகானந்தம் கேட்கிற போது, ‘தவளையை விழுங்கிய பாம்பின் உப்பிய பகுதி தட்டுப்படுகிறதே எல்லோருக்குள்ளும்’ என்னும் சு.வெங்கடேசனின் கவிதை வரிகளே நினைவுக்கு வந்து பதில்சொல்ல முடியாமல் வழி மறிக்கின்றன.
சாகித்திய அகாதமி விருது வழங்கப்படும் போதெல்லாம் அதுகுறித்து சர்ச்சைகளும், சச்சரவுகளும் எழுந்துகொண்டே இருந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு பக்கம் அது. 1975ல் தண்டாயுதம் என்பவர் எழுதிய ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ எனும் நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் கிருஷ்ணன்நம்பி அதுகுறித்து எழுதியதை இப்போது படித்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. “தண்டாயுதபாணியின் த.த.இலக்கியம் படிக்க விரும்பி, ஒரு நண்பரிடம் இரவல் வாங்கி வந்தேன். (அடிக்கடி நான் எதாவது தவறுகள் செய்துகொண்டே இருக்கிறேன்) என் ஜாதகப்படி இப்போது டயம் சரியில்லை. டாக்டர் தண்டாயுதத்தின் ஜாதகம் ஜெகஜ்ஜோதி. சாகித்திய அகாதமி நடத்திய லாட்டரிக் குலுக்கலில் ஐயாயிரம் பரிசு பெற்றிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்”.
சாகித்திய அகாதமியின் விருது அறிவிப்பு இப்படி கடும் கிண்டலுக்கும், கேலிக்கும் அந்தக் காலத்தில் இருந்தே ஆளாகிக்கொண்டு இருக்கிறது. அதன் தேர்வுமுறையில் வெளிப்படைத் தன்மையும், தெளிவான வரையறைகளும் இல்லாததே இதற்கு காரணமாகிறது. அதன் உள்ளரசியல் குறித்து அவரவர்க்கான நிலைபாடுகளிலிருந்து கற்பிதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆத்திரங்களும், பகைமையும் சுமந்து அவை கனத்துப் போகின்றன. விமர்சனங்களுக்கு ஒரு உள்நோக்கம் கற்பிக்கிற மனோநிலை உருவாகி விடுகிறது. அகாதமி விருதுக்கான போட்டியில் எந்த நாவல்கள் எல்லாம் தகுதி பெற்றிருக்கின்றன, ஒவ்வொரு சுற்றுக்கும் எவையெல்லாம் முன்னேறியிருக்கின்றன, இறுதியாக ஏன் இந்த நாவல் விருது பெறுகிறது என்கிற குறிப்புகளும் முறையாகத் தெரிவிக்கப்படுமானால் தேவையற்ற சர்ச்சைகள் குறைய வாய்ப்புண்டு. அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும் அற்று திறந்த மனதோடு கருத்துக்கள் வெளிவரக்கூடும்.
இப்படியான பின்னணியில்தான் காவல்கோட்டத்திற்கான விருதும், விழாக்களும் விவாதங்களாக உருவெடுத்திருக்கின்றன. பெத்தனியாபுரம் முருகானந்தத்தை இப்படி இணையத்தில் பதிவிடவும் வைத்திருக்கிறது. படைப்பை முன்னிறுத்தி பேச ஆரம்பித்து கரசேவைக்கு செங்கல் பூஜை நடத்தியவர், தனக்குப் போட்டியாக கருதுபவர்களை இயக்கத்தில் இருந்து ஒரங்கட்டியவர், எம்.பியாக நிற்பதற்கு இப்போதே திட்டமிடுபவர் என படைப்பாளி மீது காரமாக கொட்டித்தீர்க்க வைத்திருக்கிறது. அவையெல்லாம் இங்கு தேவையற்ற விவாதப்பொருள்கள். அதனை ஆராய்வது நமக்கு வேலையுமில்லை. அதேவேளையில், காவல் கோட்டம் என்ற நாவல் குறித்து, அதன் உள்ளடக்கம் குறித்து, அதன் அரசியல் குறித்து பெத்தானியபுரம் முருகானந்தம் சில விஷயங்களை முன்வைத்திருக்கிறார். அந்த நாவல் எழுதப்பட்ட விதத்தில் அடுத்தவரின் உழைப்பை சு.வெங்கடேசன் திருடியிருக்கிறார் என்று குற்றமும் சுமத்தியிருக்கிறார். அவையெல்லாம் விவாதிக்க வேண்டியவையே.
எழுத்தாளர் பொன்னீலனுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோது அப்போது எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராய் இருந்த அருணன் “சாகித்திய அகாதமி விருது பெற பொன்னீலன் தகுதியானவர்தான். அதனால்தான் அவர் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தோம். ஆனால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் ‘புதிய தரிசனங்கள்’ நாவல்தான் பிரச்சினைக்குரியது. மார்க்சியத்தின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.” என்று விமர்சனங்களை வைத்தார். அது ஒரு ஆரோக்கியமான உரையாடலாக இருந்தாலும், “கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த ஒருவருக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்ததைத் தாங்க முடியாமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் பொருமுகின்றனர் ” என்று சொல்லியவர்களும் உண்டு. இது மேற்கொண்டு விவாதங்கள் செய்ய தயாரில்லாமல், அடுத்தவரின் வாயடைத்து விடுகிற ஒரு மோசமான வித்தை. அதையே இப்போது நாமும் கையாளக்கூடாது.
விருது பெற்றதாலேயே ஒரு நாவல் விவாதங்களுக்கு அப்பாற்பட்டதாகிவிடாது.
(இன்னும் சொல்வேன்)
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1
காவல் கோட்டம்: விருது, விழாக்கள், விவாதங்கள் - 1
ஏற்கனவே இந்த சுட்டி எனது இ-மெயிலுக்கு இரண்டு முறை பகிரப்பட்டு இருந்தது. ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டும் இருந்தது. இப்போது தீராத பக்கங்களிலும் “இது குறித்து நீங்கள் ஏன் பேசவோ, விவாதிக்கவோ மறுக்கிறீர்கள்?” என nellaiconspiracy கேட்டிருக்கிறார். பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவரே ஒரு புனைவாகவும் அல்லது அந்த கேள்வி எழுப்பிய நண்பரே ஒரு போலியாகவும் இருக்கக்கூடும். அப்பதிவில் உள்ள விஷயங்கள் வெறும் புனைவாக மட்டும் இருக்கவில்லை. அதில் உண்மைகளும், தனிப்பட்ட அனுபவங்களும், அனுமானங்களும் கூடவே இயக்கத்தை காயப்படுத்தும் சில முயற்சிகளும் இருப்பதாக உணர்கிறேன். அவ்வகையில், எனக்குத் தெரிந்த சில விஷயங்களை முதலிலிருந்து இங்கே பகிரத் தோன்றுகிறது.
காவல்கோட்டம் நாவல் வெளிவருவதற்கு முன்பே அதுகுறித்த தகவல்களும், அந்நாவல் அடியெடுத்து வைத்திருக்கும் புதிய களங்கள் குறித்தும் செய்திகள் வந்துகொண்டு இருந்தன. முக்கியமாக எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கொண்டாடி மகிழ்ந்தார். “இது சு.வெங்கடேசனின் வாழ்நாள் சாதனை” என்று பூரித்துப் போனார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கிய படைப்பாக இருக்கப் போகிறது என எதிர்பார்த்தது. வெளிவந்ததும் ஆரவாரத்தோடு வரவேற்றது. சில நாட்களில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அந்நாவலை“ஆயிரம் பக்க அபத்தம்’ என கடுமையாக விமர்சனம் செய்து அவரது இணையதளத்தில் எழுதினார். எதிர்ப்பு தெரிவித்தும், உடன்பாடு தெரிவித்தும் கருத்துக்கள் தமிழ் இணைய உலகில் கொட்டத் துவங்கின.
“என்ன இப்படி எழுதிவிட்டீர்கள் ?” என சிறு வருத்தத்துடன் தொலைபேசியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். “அந்த நாவல் அப்படித்தான் இருக்கிறது. நீங்களே படித்துப் பாருங்கள். பல ஆவணங்களை அப்படி அப்படியே தொகுத்துப் போட்டு இருக்கிறார்கள். களவு குறித்த பெருமிதங்களே மிஞ்சுகின்றன.” என்று ஆரம்பித்து நிறைய பேசினார். பரந்து விரிந்திருந்த அவரது வாசிப்பின் ஆழங்களை அப்போதும் உணர முடிந்தது. “சரி தோழர், இருக்கட்டும்.. ஆனால் உங்கள் விமர்சனத்தில் இப்படியொரு கடுமையான தொனி தேவையில்லையே” என்றேன். “இல்லை மாது, இப்படியொரு குறைபாடுகள் உள்ள நாவலை எழுதிவிட்டு அங்கங்கு பாராட்டுக்கூட்டங்கள் நடத்தி, இதுவரையிலான தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளர்களையெல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ சு.வெங்கடேசன் தாண்டிச் சென்றுவிட்டார் என்று மேடையில் பாராட்டுவதும் அதை எந்தவித மறுப்புமின்றி பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வதும் எப்படிச் சரி?” என்றார். எனக்கும் அது உறுத்தியது. ஆனாலும், “தோழர்! தமுஎகசவில் பல படைப்பாளிகள் இருந்தபோதிலும் நாவல்களை மிகச் சிலரே எழுதுகிறார்கள். அதிலொன்று மிகச் சிறப்பாக வெளிவந்திருப்பதைக் கொண்டாடுவதன் மூலம் மேலும் பல நாவல்கள் இப்படி வெளிவரும் என்பதுதானே இதன் நோக்கமாக இருக்க முடியும்?. அதில் கூட குறைய வார்த்தைகள் வெளிப்பட்டு இருக்கலாம்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டு, “அதற்கான தகுதி நாவலுக்கு இல்லையே..” என்றார்.
ஒருமுறை “வீரசுதந்திரம் வேண்டி....” எனும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து சாத்தூர் தமுஎகச சார்பில் வெளியிட்ட புத்தக தயாரிப்பு வேலையில் நான் இருந்தேன். ஆவணங்கள், தகவல்களை எல்லாம் எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர் போன்றோர் தர அவற்றைப் படித்து தொகுத்து எழுதிக்கொண்டு இருந்தேன். அதன் கையெழுத்துப் பிரதிகளை எடுத்து வாசித்துக்கொண்டு இருந்த எஸ்.ரா சில வாக்கியங்களை மாற்றி அமைத்தார். எழுத்துப் பிழைகளை சரிசெய்தார். பிறகு அந்த புத்தகம் வெளிவரும்போது, அந்த புத்தகத்திற்கு யார் யாரெல்லாம் பங்காற்றினார்களோ, அது மிகச் சிறியதாய் இருந்தால் கூட , அவர்களது பெயர்களைக் குறிப்பிட வேண்டும் என தமிழ்ச்செல்வன் சொன்னார். எஸ்.ராவிடம் கேட்க சிறு தயக்கம் இருந்தது. பிரபலமாகிவிட்ட அவர், அந்த நீண்ட லிஸ்ட்டில் அவர் பெயரைக் குறிப்பிட விரும்புவாரா என யோசித்தேன். ஆனால் அவர் எந்த ஈகோவும் இல்லாமல் சரியெனச் சொன்னார். அதுகுறித்து திருநெல்வேலியில் நடந்த கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். அப்படியொரு எஸ்.ராவின் சித்திரம் என்னிடமிருந்தது. எனவே எஸ்.ராவின் வார்த்தைகளில் பொறாமையும், சிலர் சொல்வதுபோல் வயிற்றெரிச்சலும் எனக்குத் தெரியவில்லை. அவர் அப்போதே பல நாவல்கள், சிறுகதைகள் எழுதிவிட்டார். தமிழ் இலக்கிய உலகில் அதிகமான வாசகர்களைக் கொண்ட எழுத்தாளராகவும் உயர்ந்திருந்தார். அப்போதுதான் நாவலை எழுதி இருக்கிற சு.வெங்கடேசன் மீது என்ன காழ்ப்புணர்ச்சி வந்துவிடப் போகிறது.
எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதும், இது ஆரோக்கியமானதில்லை எனவும் புரிந்தது. தமிழ் இலக்கிய உலகில் படைப்பாளிகளை அரவணைத்து, அவர்கள் படைப்புகளில் மனித சமுகத்திற்கான வெளிச்சங்களைக் காட்டும் மகத்தான் பணிக்கு இது உதவாது . ஆரவாரங்களும், கொண்டாட்டங்களும் நமக்கு வெளியே இருப்பவர்களையும், நம் பக்கம் கொண்டு வருவதாக இருக்க வேண்டும். அருகில் இருப்பவர்களையும் விலக வைத்துவிடக் கூடாது. காவல்கோட்டத்திற்கு பரிசு கிடைத்ததும் என் மனதில் இந்த விஷயங்களே உறுத்த ஆரம்பித்தது. நம் தோழர்கள் சந்தோஷத்திலும், அதிகப்படியான உற்சாகத்திலும் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்கிற ஆதங்கமே தலை தூக்கியது. தமுஎகசவின் அறிக்கை அப்படி இல்லை.
தமிழில் சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது எல்லாம் பெறுவதற்கான தகுதி பலருக்கு இருந்தும், தன் முதல் நாவலுக்கு நமது எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற தொனி அந்த அறிக்கையில் இல்லை. மாறாக, “இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்” என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை சுட்டிக்காட்டுவதாகத்தான் சு.வெங்கடேசனுக்கு பாராட்டு தெரிவித்திருந்தேன். பிறகு தோழர்.தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசியிலும் இதனைத் தெரிவித்தேன். அவரும் என் வார்த்தைகளில் இருந்த நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் சில தோழர்களுக்கு இதில் வருத்தமும் இருந்தது. ‘பரிசு பெறுகிற வேளையில் வாழ்த்தோடு முடித்துக்கொள்ள வேண்டியதுதானே இதையெல்லாம் சொல்ல வேண்டுமா?’ என கேட்டார்கள். அதுதானே இங்கு பிரச்சினையே!
“இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்” எனச் சொன்ன பிறகுதான் அதில் உள்ள தகவல் பிழை புரிந்தது. உடனே “எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக இளைய எழுத்தாளர்” திருத்தப்பட்டது. இந்த வயது, இளையவர் என்பதில் ஏன் அதிக அக்கறையும் அழுத்தமும் கொடுக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் சாகித்திய அகாதமி வாங்கும்போது, அவரது உயரம் எங்கே, சாதனைகள் எங்கே, படைப்புலகம் எங்கே? அவருக்கு அடுத்தபடியாக என ஒரு இடத்தைப் பிடிக்கும்போது இத்தனையும் நிழலாடியிருக்க வேண்டும். படைப்பை முன்னிறுத்துவதை விடவும் படைப்பாளியை முன்னிறுத்துவதால் வருகிற வினை இது. காவல்கோட்டம் குறித்த சர்ச்சைகளின் அடிநாதமே இதுதான் என எனக்குத் தோன்றுகிறது.
பெத்தானியாபுரம் முருகானந்தமும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறார். மதுரையில் நடந்த சாகித்திய அகாதமி விருது பெற்றதற்கான பாராட்டு விழாவில் நண்பர் சு.வெங்கடேசனுக்கு தலையில் மலர்க்கீரீடமும், கையில் வீரவாளும் சூடப்பட்டது என்பது உண்மைதான். எவ்வளவோ விருதுகள் பெற்ற எழுத்தாளர் மைக்கேல் ஷோலக்கேவுக்கும் கவிஞர் பாப்லோ நெரூடாவுக்கும் கூட இப்படியெல்லாம் அபூர்வமான கணங்கள் நிகழ்ந்திருக்காது. சு.வெங்கடேசனை விட வயதில் குறைந்த ஒரே ஒருவராக தமிழில் இதே விருது வாங்கிய எழுத்தாளர் ஜெயகாந்தன் தலையில் மலர்க்கீரிடத்தையும் கையில் வீரவாளையும் கொடுக்கிற தைரியம் யாருக்கு வரும்? அப்படியொரு ஆளுமையும், ஆகிருதியும் அவர் கொண்டு இருந்தார். நாம் கற்றுக்கொள்ளவும், முன்மாதிரியாகக் கொள்ளவும் எவ்வளவு இருக்கின்றன!
முதலில் இந்த விருதுகள் குறித்த தெளிவான அபிப்பிராயங்களும், மதிப்பீடுகளும் நமக்கு வேண்டும். அதுவும் ஒரு இடதுசாரி அமைப்புக்கு தெள்ளத் தெளிவாய் வேண்டும்.
(இன்னும் சொல்வேன்...)