தமிழ்ச் சினிமாவில் ரசித்த காட்சிகள் - 1

எப்போதோ பார்த்த ஒரு தெலுங்கு திரைப்படம் அது. படம் முழுக்க துப்பாக்கிச் சத்தங்களும், துரத்திப் பிடிக்கும் காட்சிகளும்தான். பாடல்களும் சகிக்க முடியவில்லை. சம்பந்தமில்லாமல் ஒரு காட்சி அதில் இருந்தது. தூரத்தில் டிரெயின் ஒன்று வரும். இரண்டு குழந்தைகள் ஒடிப்போய் தண்டவாளத்தில் காசு வைத்து, தள்ளிநின்று நிகழப்போகும் ‘அதிசயத்திற்காக’ காத்திருப்பார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அந்தக் காட்சி மறக்க முடியாததாய் இருக்கிறது. தனது விருப்பங்களுக்கு மாறாகவே முழுப்படத்தையும் எடுத்துவிட்டு, தன்னை ஒரு சின்னக் காட்சியில் வெளிப்படுத்திய ஒரு இயக்குனரின் சந்தோஷமாக இருந்திருக்கலாம். கனவுகளோடும், இலட்சியங்களோடும் திரையுலகத்திற்குள் நுழைந்து இணை இயக்குனராக பணிபுரிந்து காணாமலேயே போன ஒரு இளைஞனின் சிந்தனையாகவும், பங்களிப்பாகவும் கூட அந்தக் காட்சி இருந்திருக்கலாம். சினிமாவின் மொழியை, ஆன்மாவை இதுபோன்ற காட்சிகளே பத்திரப்படுத்திக்கொண்டு இருக்கின்றன.

மொத்தமாய் ஒரு படம் பிடித்துப் போவது என்பது அரிதாகவே இருக்கிறது. அதில் வரும் சில காட்சிகள் காலங்களைத் தாண்டியும் நமக்குள் அலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு தனிப்பட்ட ரசனைகள், காட்சி எடுக்கப்பட்ட விதம், கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மை என பல்வேறு காரணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் இந்தக் காட்சிகள் வேறு வேறாகவும் புலப்படக்கூடும். சினிமாவின் வசீகரவெளியாக இந்தக் காட்சிகளே அவரவர் புரிதலில் விரிந்து கிடக்கின்றன. அதுபோன்ற காட்சிகளை அசைபோட்டுப் பார்க்கத் தோன்றியது.

(1)

தமிழில் மிகவும் நெருக்கமான இயக்குனராக நான் உணர்வது மகேந்திரன் அவர்களைத்தான். மிகச் சில படங்களே இயக்கியிருந்தாலும், தமிழ்ச் சினிமாவின் அர்த்தமுள்ள பரிணாமமாக அவரது இடம் இருக்கிறது. அவரைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பேசுவோம்.

அதென்னமோ, அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் கூட பிடித்துப் போயிருப்பார். ஸ்ரீதேவியும் அற்புதமாய் நடித்திருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஜானி படத்தில் வரும் ஒரு காட்சி மிக அற்புதமானது. நுட்பமான மனித உணர்வுகளால் ஆனது.

ஸ்ரீதேவி ஒரு மேடைப்பாடகியாக இருப்பார். ரஜினி திருட்டுக்கள் நடத்தி அப்பாவின் கடன்களை அடைத்துக் கொண்டிருப்பார். “என்னை மனைவியாக ஏற்றுக்கொள்வீர்களா?” என ரஜினியிடம் ஸ்ரீதேவி தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி அது. முதலில் இருக்கும் தயக்கம், மறுக்கப்பட்டதும் அவமானம், கூடவே கோபம், உரையாடலில் ஏற்படும் குழப்பம், காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சந்தோஷம், இறுதியில் காட்டும் குழந்தையின் பாவம் என ஸ்ரீதேவியின் ஒவ்வொரு அசைவையும், கண்களின் துடிப்புகளையும் பார்க்கும்போது நாம் சினிமா பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து லயித்து போயிருப்போம்.

ரஜினி தன் பங்கைச் சரியாக செய்திருந்தாலும், ஸ்ரீதேவியின் இயல்புக்கு முன் திக்கு முக்காடி, திணறிப் போயிருப்பார். ஸ்ரீதேவிக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒரு பெண்ணின் முகம் இந்தக் காட்சிகளுக்கு இடையே இருமுறை காட்டப்படும். பார்வையாளனின் மனோநிலையை அந்த முகத்தில் பார்க்கலாம். உரையாட்ல்கள் அமைதியாகவும் அழுத்தமாகவும், மிகச் சரியாகவும் இருக்கும். இயக்குனர் மகேந்திரன் என்னும் கலைஞரின் சிந்தனையில் சினிமா எப்படி இருந்திருக்கிறது என்பதையறிய இது ஒரு துளி.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மகேந்திரனின் எல்லா படங்களுமே ரசிக்க கூடிய படங்கள்தான் மாதவ் சார்.

    பதிலளிநீக்கு
  2. Please share the full feed for our kind of Readers who reads the blogs thro Reader. Thanks

    பதிலளிநீக்கு
  3. //மொத்தமாய் ஒரு படம் பிடித்துப் போவது என்பது அரிதாகவே இருக்கிறது//

    உண்மை... நான் அவ்வளவாக படங்கள் பார்ப்பதில்லை... சில திரைப்படபாடல்களில் மட்டும் மனம் லயித்துப்போகும், காட்சிகளிலும் சரி, ஒலியமைப்பிலும் சரி... ஜானியில் வரும் ஒரு பாடலும்...

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் தோழர் ஜானி படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உசுப்பிவிடும் காட்சிகள் ஏராளம்.

    பதிலளிநீக்கு
  5. இந்தக் காட்சியை இங்கே காணக் கிடைக்கவில்லை மாது சார்

    ஆனால் மகேந்திரன் உதிரிப்பூக்களில்
    என்று நினைக்கிறேன் என்றும் இல்லாமல் வெளியே கிளம்பச்சொல்லும் கணவனின் உத்தரவுக்கு மழை வருகிறதா என்ற பாவனையில் ஆகாசம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழையும் கதைநாயகியின் காட்சி ஆகட்டும்

    ஜானியில் ”உங்க கையால ஒத்த ரூபா காசையாச்சும் குடுத்தீங்கன்னா
    ஆயுள் முடியிற வரை அத பத்ரமா வச்சுக்குவேன் என்பதற்கு உங்க் தாய மதிக்குற அளவுக்கு என்னை மதிச்சு என்று நாயகி பேசுவதாகட்டும் .. அதே ஜானியில் தீபா விடம் ரஜினி தன் பிரியத்தை சொல்லும் இடமாகட்டும்

    முள்ளும் மலரும் இறுதிக் காட்சியில் வசனமே இல்லாமல் அண்ணனுக்கும் தங்கைக்கும் நிகழும் உணர்வு போராட்டம் ஆகட்டும்

    சாசனம் படத்தில் ரஞ்சிதாவுக்கும் அரவிந்த சாமிக்குமான உறவை சித்தரித்த விதமாகட்டும்

    மகேந்திரன் இடத்தை மகேந்திரன் மட்டுமே நிரப்ப முடியும்

    விமர்சனங்கள் நிறைய இருந்தாலும் கூட :)

    பதிலளிநீக்கு
  6. நானும் மிகவும் ரசித்தேன் . சிறப்பாக உள்ளது உங்களின் ரசனை . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  7. அருமையான காட்சி... நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  8. மதியம் ஓட்டு மட்டும் போட்டுப் போனேன் மக்கா. இப்பதான், வாசித்து வீடியோவும் பார்க்கிற போது,

    என்ன சொல்லட்டும் மாது..

    இவையெல்லாம் உம்ம மில்லிக் கண்ணில் சிக்காமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம். :-)

    ரசனையான, தேர்ந்த பகுதி மாது. (ஸ்ரீதேவியின் மல்லிப் பூ வாசனை, சவுதி எட்டியது கேட்டீரா?) :-))

    பதிலளிநீக்கு
  9. மகேந்திரனின் படங்களில் எனக்குப் பிடித்தது "உதிரிப் பூக்கள்" . அழுத்தமான, கனமான , சோகமான கதை. அதில் அஸ்வினியின் புன்னகையும், அந்தப் புன்னகை தேக்கிவைத்திருக்கும் சோகத்தையும் பார்க்கும் போதெல்லாம் ஒரு துயரமான கவிதையை வாசித்த உணர்வை உருவாக்கும்.

    பதிலளிநீக்கு
  10. மகேந்திரன் இடத்தை மகேந்திரன் மட்டுமே நிரப்ப முடியும்

    பதிலளிநீக்கு
  11. மகேந்திரன் படங்கள் அனைத்துமே ரசிக்கக் கூடியவை தான்.
    சமீபத்தில் கவீஷ் பார்த்து ஆச்சர்யப் பட்ட படம் ஜானி.
    இன்றைய தலைமுறையினரும் விரும்பும் வண்ணம் அமைந்திருக்கும்.
    அத்தனை பாடல்களும் அருமையாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. // தனது விருப்பங்களுக்கு மாறாகவே முழுப்படத்தையும் எடுத்துவிட்டு, தன்னை ஒரு சின்னக் காட்சியில் வெளிப்படுத்திய ஒரு இயக்குனரின் சந்தோஷமாக இருந்திருக்கலாம். கனவுகளோடும், இலட்சியங்களோடும் திரையுலகத்திற்குள் நுழைந்து இணை இயக்குனராக பணிபுரிந்து காணாமலேயே போன ஒரு இளைஞனின் சிந்தனையாகவும், பங்களிப்பாகவும் கூட அந்தக் காட்சி இருந்திருக்கலாம்//

    அழகான சிந்தனை. நீங்களும் அம்முவும் சொல்லித் தான் நான் ஜானி படம் பார்த்து ரசித்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!