500வது பதிவு!

இது எனது 500வது பதிவு.

எழுதியது இவை. வாசித்தது எத்தனை பதிவுகள் இருக்கும் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பித்த இந்த ஒன்றரை வருடத்தில் எதை சாதித்து இருக்கிறேன் என்று தெரியவில்லை. நிறைய நிறைய சம்பாதித்து இருக்கிறேன். எவ்வளவு நண்பர்கள், எவ்வளவு கருத்துக்கள், எவ்வளவு பார்வைகள்! இதைவிட வேறென்ன ஒரு மனிதனுக்கு சொத்தும், சொந்தமும் ஆகிவிடும்!

முதலில் நன்றி தெரிவிக்க வேண்டியது என் மனைவி (அம்மு) காதம்பரிக்குத்தான். ஒரு மாலுமி போல அவள் வீட்டை செலுத்திக்கொண்டு இருக்கும் போது நான் என் பால்யத்தை பற்றி தொடர் பதிவு எழுதிக்கொண்டு இருப்பேன், அன்புருகும் ராகவனின் கவிதைக்கு பின்னூட்டமிட்டுக்கொண்டு இருப்பேன் அல்லது வால்பையனின் எழுத்தைப் படித்து சிரித்துக்கொண்டு இருப்பேன். அந்த சமயங்களில் அவளுக்கு என்னைப் பார்க்க எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. சாயங்காலம் பணிபுரியும் பள்ளி விட்டு வந்தபிறகு ‘இன்னிக்கு என்ன எழுதியிருக்கீங்க’ என்று சாவகாசமாக உட்கார்ந்து சில நேரங்களில் பதிவுகளை படிப்பாள். கருத்து சொல்வாள். ‘நானும் ஒரு பிளாக்  ஆரம்பித்து எழுதி உங்களை கிழிக்கிறேன்’என்று சொல்வாள். அவளுக்கு என் நன்றி.

அடுத்தது, பிரியத்தோடும், சகிப்புத்தன்மையோடும் என் பதிவுகளைப் படித்து ஆதரவு காட்டி வரும் அனைவருக்கும் நன்றி.

படித்து, பின்னூட்டமிட்டு செழுமைப்படுத்திக்கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு நன்றி.

என்னோடு  தீராத பக்கங்களில் இந்தக் கணம் வரை வந்துகொண்டு இருக்கும்  483 சகபயணிகளுக்கு நன்றி.

இந்த நேரத்தில் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.

இப்போதெல்லாம் ‘தீராத பக்கங்களை’ ஒருநாளைக்கு ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். எழுதவந்த புதிதில் முதல் இரண்டு மாதங்களுக்கும் சேர்த்தே ஆயிரம் பேருக்கு மேல் படித்திருக்கவில்லை. நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டு இருப்பேன். பழக்கமான சில நண்பர்கள், தெரிந்தவர்கள் வந்து கருத்து தெரிவித்துவிட்டுப் போவார்கள். தமிழ்மணம், தமிழிஸ் போன்ற திரட்டிகளில் இணைந்த பிறகு பலர் வந்து படிக்க ஆரம்பித்தார்கள். இதே வலைப்பக்கங்களில் மிகச் சொற்பமான கவனம் பெற்றபடி நல்ல பதிவுகளை எழுதிக்கொண்டு பலர் இருக்கிறார்கள் என்பது எப்போதும் நமக்குள் உறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுக்கு கூடுதல் கவன்ம் கிடைக்க வேண்டுமென்றுதான் ‘வாடாத பக்கங்கள்’ ஆரம்பிக்கப்பட்டது. அவரவர்க்குப் பிடித்தமான பதிவுகளைச் சுட்டிக் காட்டுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஒரு சில நண்பர்களே அதைச் செய்தார்கள். மெல்ல மெல்ல அந்த வட்டமும் தேய்ந்தது. எனக்குப் பிடித்த பதிவுகளால் மட்டுமே வாடாத பக்கங்கள் நிரம்புவது எப்படி சரியாக இருக்கும்? நண்பர்களே, வாடாத பக்கங்கள் நமது பக்கங்கள். ஊர் கூடித் தேர் இழுப்போம். கைபிடிக்க வாருங்கள்.

இன்னொன்று, எழுதும் ஆர்வத்தில் தினம், தினம் புதிய பதிவர்கள் வலைப்பக்கங்களில் காலடி எடுத்து வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை, அவர்களது எழுத்துக்களை வலையுலகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. அவர்களுக்கு திரட்டிகளில் இணைவது எப்படி என்று தெரிவதில்லை. சின்னச் சின்ன தொழில்நுட்ப விஷயங்களும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். இனி தீராத பக்கங்களில், வாரத்தில் ஒருநாள் புதிய பதிவர்களை அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன். புதியதாக வலைப்பக்கங்களில் எழுத ஆரம்பித்து இருப்பவர்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன், வலைப்பக்க முகவரியையும், அவர்களுக்கு எதில் ஈடுபாடு போன்ற தகவல்களையும் jothi.mraj@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். நண்பர்களும்  தெரிந்த புதிய பதிவர்களைப் பற்றிய குறிப்புகளை எனது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம்.

சேர்ந்து பயணிபோம்... நண்பர்களே!

கருத்துகள்

62 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஐநூறு விரைவில் ஆயிரம் ஆக என் வாழ்த்துக்கள்.

    வாடாத பக்கங்களைத் தொடருங்கள்!

    புதிய பதிவர் அறிமுகம் நல்ல முயற்சி. என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் மாதவராஜ். ரொம்ப சந்தோஷாமா இருக்கு.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் தோழர். இன்னும் எழுதுங்கள், 483 ல் நானும் ஒருவனாய் தொடர்ந்து வருவேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் சார். நிறைய எழுதுங்க படிக்க நாங்க இருக்கோம் .உங்கள் வாடாத பக்கங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் மாதவராஜ் சார்.. உங்களோடு பயணிக்கும் அந்த 400த்தி சொச்ச பெருக்கும் என் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள், தொடருங்கள் சிறப்பாக

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள்..

    வாடாத பக்கங்கள் தொடர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  8. அன்பு மாதவராஜ்,

    வாழ்த்துக்கள்!! வேறு என்ன சொல்வது மாதவராஜ்!! எல்லாவற்றையும் தெரிந்த வார்த்தைகளுக்குள் முடக்க ஆசைப்படுகிறோம்... வார்த்தைகள் மட்டும் போதுமா... கை பிடித்து அரிச்சுவடி எழுத கற்று கொடுத்த ஆசானுக்கு... என் அன்பும் நன்றியும்... எத்தனை விதமான பதிவுகள்... எத்தனைவிதமான கவிதைகள், கட்டுரைகள், கோபங்கள், உணர்வுகள் என்று ஒரு தீரா ஊற்றுக்கண்ணாய் இருக்கிற உங்கள் பக்கங்களில் இன்னும் பெருகுகிறது ஒரு சமுத்ரபிரவாகம்... மலைப்போது கையேந்தி நிற்கிறேன் கரையோரம்... காற்று வீசட்டும்... எனக்குள்ளும் என்ற மாறா வீம்போடு நிற்கிறேன்... வெற்றிடங்களை நிரப்பவும் ஒரு காற்புள்ளிக்கும், அரைப்புல்லிக்குமான துல்லிய வித்தியாசங்களை கற்று கொடுத்தது இந்த பதிவுலகம்... எனக்கு அங்கீகாரமாய் இருந்த உங்களின் பின்னூட்டங்கள் வராத பொழுதுகளில் பதறும் மனசு, கை பிசைந்து நிற்பேன் சில நேரம்... உடனே உங்களுடன் பேசி யோவ் பாருய்யா... என்று மனசுக்குள் கேவிக் கொண்டே உங்களுடன் பேசுவேன்... மாதவராஜின் பதிவுகள் படித்து எத்தனை பேர் பதிவுலகில் நுழைந்திருப்பார்கள், அல்லது தொடர்ந்திருப்பார்கள்... எல்லோருக்கும் அன்கீஹரங்களும், அன்பும் கிடைக்க பெற ஒரு வல்லாலாராய் பார்த்திருக்கிறேன் உங்களை... எத்தனை பேருக்கு குழி வெட்டி இருப்பீர்கள் நீங்கள்... நல்ல விலை மண்ணில் விருட்சமாய் நிறுத்த... வாடாத பூக்களாய் இருக்கட்டும் அல்லது தீராத பக்கங்களை இருக்கட்டும்... எத்தனை அன்பு இந்த ஜன சமுத்ரத்தின் மீது உங்களுக்கு... என் அன்பை பற்றி பேச உங்களுக்கு எத்தனை அன்பு வேண்டும் மாதவராஜ் உங்களுக்கு... நான் ஒரு வேஷக்காரன் மாதவராஜ்... என்னால் தீவிரமான அன்பையோ அல்லது வார்த்தைகளை செயலை காட்டவோ தெரியாத அன்பு என்னுடையது... சர்க்கரையா பேசுவேன்... ஆனால் சர்க்கரையா இருப்பேனா என்றால் இன்று வரை தெரியாது... நிறைய பேருக்கு தேவை படும் நேரத்தில் உதவாமல் இருந்திருக்கிறேன்... என்ன தான் சூழ்நிலை மீது சாக்கு சொன்னாலும் நிஜமாகவே எனக்கு அன்பு செய்ய தெரியாது... மாதவராஜ்...
    நான் எல்லா பதிவுகள் போடும்போதும்... பின்னூட்டங்கள் இடும் போதும் மூன்று புள்ளிகள் வைப்பேன்... வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை... அதன் அர்த்தம் பாராவுக்கு ஒரு மாதிரி புரிதலில்... ஆனால் எனக்கு அதை வேறு மாதிரி தான் அர்த்த படுத்துகிறேன்... மாதவராஜ், காமராஜ் மற்றும் பாரா என்ற மூன்று இணைப்பு கோடுகளில் எனக்கான முப்பரிமாணம் வளர்ந்து தனக்கு ஊடாக பாயும் கதிர்களை பல வண்ணங்களாய் பீய்ச்சுகிறது. அன்பும், நன்றியும், வாழ்த்துக்களும்...

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  9. //நிறைய நிறைய சம்பாதித்து இருக்கிறேன். எவ்வளவு நண்பர்கள், எவ்வளவு கருத்துக்கள், எவ்வளவு பார்வைகள்! இதைவிட வேறென்ன ஒரு மனிதனுக்கு சொத்தும், சொந்தமும் ஆகிவிடும்!//

    சத்தியமான வார்த்தைகள்.

    நிஜமாகவே இது மிகப் பெரிய சந்தோஷம்.

    வாழ்த்துக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  10. 500க்கு வாழ்த்துக்கள் மாதவராஜ் சார். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள்.

    'வாடாத பக்கங்கள்' & 'புதிய பதிவர் அறிமுகம்' - இரண்டுமே நல்ல,தேவையான முயற்சி.
    கை கூடட்டும்.

    பதிலளிநீக்கு
  11. No words to share my happiness...you are capable writer to write more..My request is>>>you must write in the Mass journals also...your writings must reach millions of readers---

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் .... உங்கள் எழுத்து பயணம் தொடர்வதற்கு...

    பதிலளிநீக்கு
  13. "கை பிடித்து அரிச்சுவடி எழுத கற்று கொடுத்த ஆசானுக்கு... என் அன்பும் நன்றியும்... எத்தனை விதமான பதிவுகள்"

    உங்களுடைய இந்த எழுத்து பனி சிறப்பாக தோடர என் மனமர்த்த வாழ்த்துக்கள்
    தொடர்ந்து எழுதுங்கள்
    azeem

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள்!!!

    வாழ்த்துக்கள் !!!

    உங்களுக்கு அல்ல...

    அம்மு அக்காவுக்கு!!!

    பதிலளிநீக்கு
  15. ////////இது எனது 500வது பதிவு.

    எழுதியது இவை. வாசித்தது எத்தனை பதிவுகள் இருக்கும் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பித்த இந்த ஒன்றரை வருடத்தில் எதை சாதித்து இருக்கிறேன் என்று தெரியவில்லை. நிறைய நிறைய சம்பாதித்து இருக்கிறேன். எவ்வளவு நண்பர்கள், எவ்வளவு கருத்துக்கள், எவ்வளவு பார்வைகள்! இதைவிட வேறென்ன ஒரு மனிதனுக்கு சொத்தும், சொந்தமும் ஆகிவிடும்!
    /////////


    வாழ்த்துக்கள் நண்பரே .

    பதிலளிநீக்கு
  16. 500-க்கு வாழ்த்துக்கள்

    வாடாத பக்கங்களும் புதியவர் அறிமுகமும் நல்ல முயற்சி. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  17. தித்திக்கும் ஐநூறு அருமை விருந்து
    புத்திக்கும் பூரண மருந்து!!!

    பதிலளிநீக்கு
  18. புதிய பதிவர்களை வரவேற்கும் நீங்கள்,முதலில் புதியதாக வந்து இருக்கும் பதிவர்களின் பதிவை பார்த்து உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள்!!! நன்றி!!

    பதிலளிநீக்கு
  19. மாதண்ணா,
    படிக்கும் போதே சந்தோஷமாய் இருக்கிறது.

    இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நூறாவதற்குள் எனக்கு சளிப்பும் வெறுப்பும் தூக்கலாக இருக்க, 500 உங்கள் திடத்தையும் திறத்தையும் காட்ட- மேலும் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. அதுக்குள்ள 500 பதிவுகளா..?

    ரொம்ப வேகம்..!

    பதிலளிநீக்கு
  22. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ரொம்ப பெரிய சாதனை தான் இவ்வள்வு பேர பெற்றிருப்பது , பெரிய பலம் போல். ரொம்ப சந்தோஷம், பதிவ படிச்சி சிரித்து கொண்டிருகும் போது என்ன நினைப்பாளோ// அப்பரம் பிற்கு என்ன எழுதினீங்கன்னு வந்து கேட்பது, நீங்க ரொமப் கொடுத்து வைத்தவங்க தான், உங்கள் மனைவிக்கும் பொறுமை அதிகம் தான். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. //இனி தீராத பக்கங்களில், வாரத்தில் ஒருநாள் புதிய பதிவர்களை அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன்.//

    நல்ல முயற்சி, பாராட்டுக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துக்கள் மாதவராஜ் சார் !

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துக்கள் மாதவராஜ் சார்.. !!

    483 ல் நானும் ஒருவனாய்

    பதிலளிநீக்கு
  26. தோழர் வாழ்த்துக்கள்..ராகவனின் பின்னூட்டத்திற்கும்..

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்களும் எனது வணக்கங்களும்.... தங்களின் பணி தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  28. 500க்குப் பூங்கொத்து!
    தீராத பக்கமும்,வாடாத பக்கமுமாய் எழுதி எழுதி எங்களை மகிழ்வித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  29. மாத‌வ்,
    500 ப‌திவுக‌ள், பாதியாவ‌து ப‌டித்திருப்பேன்.
    ம‌லைக்க‌ வைக்கும்,ம‌லைய‌ள‌வு ப‌திவு.
    அவை ஒவ்வொன்றும் ஒரு வ‌கை, த‌னிச் சுவை, த‌னி வ‌கை.
    துளைக்கும், க‌ண்ணீர் துடைக்கும்,
    துவைக்கும், ப‌ன்னீர் தெளிக்கும்,
    தெரிவிக்கும், தெளிவிக்கும்,
    வ‌ண‌ங்கும், வாழ்த்தும், வாரும்,
    சேர்க்கும், சிக்கெடுக்கும், த‌லை சீவும்,
    த‌லையைச் சீவும் சில‌, ப‌ணியும்,
    ப‌ணி செய்யும், ப‌ட‌ம் எடுக்கும், காட்டும்.
    தீ மூட்டும், திசைக‌ள் காட்டும்,
    திக்கெட்டும் அலையும்,அலைக்க‌ழிக்கும்.

    முண்டாசும் நெற்றி சூரிய‌னில்லா
    ப‌திவுப் பார‌தி.
    என் போன்ற‌ எத‌த‌னையோ
    ஏ...க‌லை(வ‌லை)ய‌ன்க‌ளுக்கு
    சார்பு பூனூல் அணியா துரோண‌ர்.
    வாழ்த்துக்க‌ள் (வ‌ய‌திருக்கிற‌து)

    (நான் உங்க‌ளுக்கு பின்னோட்ட‌ம்
    போட்டு, பின்பு பிளாக்குக்கு வ‌ந்த‌வ‌ன்)

    `தீராத‌ ப‌க்க‌ங்க‌ள் நீராத‌ தாக்க‌ங்க‌ள்`

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துகள் ஐயா. தங்களின் முயற்சிகள் அயர்ச்சி இன்றி தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. ஆஹா!

    ரொம்ப சந்தோசமாய் இருக்கு மாது...

    அடிச்சு ஆடுங்க மக்கா.நாங்க இருக்கோம்ல...

    நேசா,

    உன் சோர்வுக்கு இந்த கட்டுரை,இந்த மனுஷன் மருந்து.

    நீராகாரத்துல உங்களை கரைச்சு குடிச்சுட்டா தேவலாம் போல இருக்கு மாது. அம்மு திட்டுவாங்க என்பதால் அப்படியே விட்டுட்டு போறேன் :-)

    கிரேட்! வாழ்த்துக்கள்...

    வாழ்த்துக்களுக்கு அப்புறம் எனக்கும் மூணு புள்ளி வைக்க தோணுது,ராகவன் மாதிரி.:-)

    இந்த ஒரு ஆள்,எம்புட்டு இடத்தை ஆக்கிரமித்து விடுகிறார்,மாது!

    மனசுல...

    பதிலளிநீக்கு
  32. // இனி தீராத பக்கங்களில், வாரத்தில் ஒருநாள் புதிய பதிவர்களை அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன்.//

    நான் ராஜாராம்.கருவேலநிழல் என்று ஒரு ப்ளாக் வச்சிருக்கேன்.எழுதுவதை விட,அன்பில் ஆர்வம் அதிகம்...(ராகவன்,இங்கும் உங்க மூணு புள்ளி...) :-)

    பதிலளிநீக்கு
  33. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழனே.இன்னும் நிறய்ய சிகரங்களை எட்ட எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. தோழரே

    வாழ்த்துக்கள்... 500 என்கிற எண்ணிக்கையின் பின்னால் உங்களுடைய பலமணிநேர உழைப்பு அடங்கியிருக்கிறது...

    நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, உற்று நோக்கும் பழக்கத்தை உங்கள் எழுத்துக்கள் பலருக்கு கற்றுக் கொடுத்திருக்கும்..

    சில சர்ச்சைகள் குறித்த தெளிவான பார்வையை உங்கள் பதிவுகள் வழங்கியிருக்கின்றன..

    பன்முகத்திறமை கொண்ட உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு பதிவுலகிற்கு அவசியம்...

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. Congratulation. Keep it up. It is a spl experience in reading your blog everyday, though I joined very late.

    Next topic could be on IPL cricket. One must write about it. Surprising to know they haven't paid tax for 2 years, but each team franchise is about 1500 crore.

    Swami

    பதிலளிநீக்கு
  36. தீராத பக்ககங்களை முதல் 500 -ஐ நல் கருத்துக்களால் நிரப்பியதர்க்கு, எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  37. வாழ்த்துக்கள் நண்பரே..
    500 வது பதிவு 1000 வது பதிவை எட்ட வாழ்த்துக்கள்..

    வலைப்பதிவில் நான் கண்ட முத்தான பதிவுகளுள் தங்கள் பதிவும் ஒன்று.
    தாங்கள் 500வது பதிவை எட்டியது மகிழ்வளிப்பதாகவுள்ளத நநண்பரே..

    பதிலளிநீக்கு
  38. ஒன்றரை வருடத்தில் 500 பதிவுகள் என்பது நிச்சயமாக ஒரு சாதனை தான்!

    பதிலளிநீக்கு
  39. விரைவில் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்!

    நாங்க கிட்ட வந்துட்டாலே 500ன்னு தான் சொல்லிகுவோம்!

    பதிலளிநீக்கு
  40. அன்பு மாதவ்

    நூறுகளைத் தாண்டுகின்றன பதிவுகள்.
    வேறு வேறு ரசனை மிக்கவையும், உணர்வுகளைத் தீண்டுபவையும், உணர்ச்சிகளைத் தூண்டுபவையுமாக..

    ஒரு சிற்றூரின் கோடைத் திருவிழாவில்
    மொண்டு மொண்டு எடுத்து ஊற்றும் பானகமாக,
    நீர் மோராக
    முடிவற்ற கொடையாக
    வாசக உள்ள வேட்கைக்குப் பரிமாறிக் கொண்டே இருங்கள் மாதவ்....

    வாழ்த்துக்கள்...

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  41. பெயருக்கு ஏற்ப வாடாமல் இருக்கட்டும் இந்த பக்கங்கள். உங்கள் எழுத்துக்களில் உந்தப்பட்டு, உங்களை போல், எழுத கூட சில நேரங்களில் முயற்சித்திருக்கிறேன். ஆனால் அந்த முயற்சியை கைவிட்டு எனது பாணியிலேயே இப்போது வலை பக்கத்தில் எழுத துவங்கியிருககிறேன்.
    உங்கள் வலைப்பக்கம் எத்தனை எத்தனை தாக்குதலை சந்தித்தது--- எத்தனை விளைவுகளை உருவாக்கியது என்பதை கண்டுகொண்டு இருக்கிறோம். வர்க்க விரோதிகளுக்கும், திரிபுவாதிகளுக்கும் தக்க பதிலடி கொடுப்பதுமட்டுமல்ல, சமூக அவலங்களையும், இலக்கிய சர்ச்சைகளும் தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  42. தீவிர தன்மையோடு 500 கட்டுரைகள் எழுதுவதென்பது சாதாரணமான விஷயமல்ல. தீராத தன்முனைப்பிற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  43. Valthukkal. Unkalathu muyarchiyal men mellum valara iyakkam kai kottukkum.

    பதிலளிநீக்கு
  44. ஐனூறூ பதிவு என்பதைவிட ஐனூறு விஷயங்கள் போனதுதன் முக்கியம்.எல்லாருமே புகழ்கிறார்கள்.அதனை எடுத்துக்கொள்ளாதீர்கள்.மக்கள் சார்ந்த ஆழமான பிரச்சனைகளை எழுதுங்கள் மாதவ்ஜி....காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  45. மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். 500 பதிவுகளை எழுதுவது என்பது சாதாரண விசயமல்ல.. இய்ந்திரமயமான இந்த வாழ்நிலைச் சூழலில் ஒரு கவிதையை யோசிக்க, வரிகளை கோர்க்கவே அயர்ச்சியாக இருக்கிறது. ஆனால் நீங்கள் 500 பதிவுகளை எழுதிவிட்டீர்கள். ஒவ்வொன்றும் சமூகத்தை ஆராய்ந்து அலசி எழுதப்பட்டவை என்பது தான் சிறப்பு..எப்படி தான் உங்களுக்கு நேரம் கிடைத்ததோ? காலதேவன் எங்களுக்கு தெரியாமல் உங்களுக்கு மட்டும் கடிகார மணித்தியாலங்களில் ஏதாவது சலுகை தந்திருக்கிறாரோ??:):)

    வாடாமலர் சேவை மிகவும் நல்லது. நல்ல முயற்சி. உங்கள் சேவை நல்லவிதமாக தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்..!

    அன்புடன்
    சிநேகன் & சுவாதி.

    பதிலளிநீக்கு
  46. பிரமித்து நிற்கிறேன் மாது. தாங்கள் எழுதுவதை முழுதும் படிக்க முடியாமல் நான். ஆனால் பல பணிகளுக்கு இடையே இவ்வளவு எப்படி எழுத முடிகிறது என வியக்கிறேன். எழுத்து கருக்கொள்ள வேண்டும் பின்பு எழுத வேண்டும்...நிச்சயமாக அசாத்தியமான காரியம்தான்.
    உண்ணாவிரத பந்தலிலும் தாங்கள் மடி கணிணியோடு இருந்தது கண்டு,தங்களின் எழுத்தின் மேலான ஆர்வத்தை புரிந்து கொண்டேன். வீட்டில் எதாவது சின்ன பிரச்சனை என்றால் கூட, மனம் வெறுத்து போகும் என்போன்றவர்களுக்கு...ஆனால் மிகவும் கஷ்ட்டமான பல நிகழ்வுகளை சந்தித்துகொண்டிருக்கும் சங்க வேலைகளுக்கு மத்தியில், தாங்கள் எழுதுவது கண்டு மீண்டும் பிரமித்து நிற்கிறேன்...

    அழகுமுகிலன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!