Type Here to Get Search Results !

தர்மம் மறுபடியும் வெல்லும்!

அதிகாரத்தின் பீடங்களில், தோழர்கள் காமராஜ், அண்டோ ஆகிய இருவரும் தொழிற்சங்க பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக 20.7.2009 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தெரியப்படுத்தி இருந்தேன்.  வருத்தங்களை பலர் பகிந்து கொண்டதோடு, போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அன்று மாலையே, வங்கியின் சேர்மனிடம் பேச்சுவார்த்தைக்கு சங்கத் தலைவர்கள் சென்றோம். அவர் மறுக்கவே, அங்கேயே தரையில் உட்கார்ந்துவிட்டோம். அவரால் வெளியே செல்ல முடியவில்லை. கேள்விப்பட்டு கிளையிலிருந்து தோழர்களும் வந்து எங்களோடு அமர்ந்து கொண்டனர். நான்கு மணி நேரத்துக்குப் பிறகு மாவட்ட டி.எஸ்.பி வந்து எங்களை கலைந்து போகச் சொன்னார். நாங்கள் நடந்ததைச் சொல்லி, ஒரு தொழிற்சங்கப் பத்திரிகையில் எங்கள் பிரச்சினையைச் சொல்ல உரிமையில்லையா, ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் எனவும், நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கே மறுக்கிறது என்பதையும் அவரிடம் விவாதித்தோம். அவர் சேர்மனிடம் சென்று பேசிவிட்டு 23.7.2009 அன்று பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம், தானும் வந்து கொள்வதாகவும் தெரிவித்ததால், கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாங்கள் கலைந்து சென்றோம்.

தலைமையலுவலகம் முன்னால் தொடர் உண்னாவிரதம் இருக்க முடிவெடுத்தோம்.  சஸ்பென்ஷனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கருத்துரிமை, பேச்சுரிமைக்கு போன்ற அடிப்படை உரிமைகளின் மீது தாக்குதல் என பிரச்சாரம் செய்தோம். அகில இந்திய அளவில் பல மாநிலங்களிலிருந்து கிராம வங்கி ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தந்திகள் அடித்த வண்ணமிருந்தனர். பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனங்களை எழுப்பின. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தோழர்களோடு 40க்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைக்குச் செல்லாமல், வீடுகளுக்கும் செல்லாமல் சங்க அலுவலகத்தில், அவர்களோடு கூடவே இருந்தனர்.

23.7.2009 காலையில் சஸ்பென்ஷனை எதிர்த்து தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தது நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மாலையில் டி.எஸ்.பி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. நிர்வாகம் . சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரும் மீண்டும் கிளைகளில் பணிசெய்யலாம் என்றது.

இதோ.... தோழர்கள் காமராஜ், அண்டோ இருவரும் இன்று காலையில் தத்தம் கிளைகளில் பணிக்குச் சேர்ந்து விட்டனர்.! தர்மம் மீண்டும் வென்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி நாம் வலைப்பக்கங்களில் வழக்கம் போல் சந்திப்போம்!

 

பி.கு:   

1) பதிவர் வெயிலான் அவர்கள் என்னையும், தோழர் காமராஜையும் பார்க்க விருதுநகரில், எங்கள் சங்க அலுவலகத்திற்கு 23.7.2009 அன்று காலை வந்திருந்தார். அந்த சமயம்தான் சஸ்பென்ஷனை எதிர்த்த தடையுத்தரவு கிடைத்த செய்தி வந்திருந்தது. தோழர்கள் பெரும் சந்தோஷத்தில் திளைத்திருந்த கணங்களாய் அவை இருந்தன. கிளைகளிலிருந்து தோழர்கள் வர ஆரம்பித்தனர். வெயிலான் அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு  உற்ற சமயமாக அது இல்லை. அவர் விடைபெற்றார். குதூகலமான மனநிலையிலும் வருத்தம் படர்ந்தது. வெயிலான் மன்னிப்பாராக!

2)  இந்நிகழ்வு தந்த பாதிப்பில் தோழர். எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் இந்தக் கவிதையை எழுதி மெயிலுக்கு அனுப்பியிருந்தார்.

எப்போதும் ரத்தவெறிக்கு அலைவதாகத்
தவறாகப் புரிந்துகொள்ளப்படும்
கானக விலங்குகளுக்குப்
பசி நேரத்தில் மட்டுமே இரை
மீதி வேளைகளில் அவை உயிர்கள்
கொடிய கானக விலங்குகளாகத்
தவறாக வருணிக்கப்படும்
அதிகார பீடங்களுக்கு
உணர்வற்று இருக்கும்வரையே ஊழியர்கள்
போர்க்கொடி தூக்கும்போது பலிகள்!

பசிக்கான போராட்டத்திலேயே
உருவாகிறான் வேலையாள்
ஊதியத்தில் அடங்கிவிடாத பசிக்கு
உணர்வை ஊட்டுகிறது தொழிற்சங்கம்
ஆவேசக்காரர்களின் பசி இப்போது
வேகம் பெறுகிறது மேலும் -
அதிகார பீடங்களின் கொழுப்பை
இரையாக்கிக் கொள்ள......

*

கருத்துரையிடுக

19 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. தங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!! :-)

  பதிலளிநீக்கு
 2. இது தனிமனித எழுதுஉரிமைக்கு கிடைத்த வெற்றி.

  பதிலளிநீக்கு
 3. மாதவராஜ் அவர்களே வணக்கம். உங்களுடைய எண்ணங்களையும் எழுத்துக்களையும் ரசித்து படிப்பவன். எண்ணன்களில் வாலிபன், வயதில் இன்றைய இளைய தலைமுறைக்கு பிந்தைய தலைமுறையினன் நான். நம்மை சுற்றி அநீதிகள் நடக்கிறது . நம்மால் அதை எதிர்த்து பெரும்பாலும் வெற்றி பெற முடியவில்லை. காரணம் நாம் பிளவுபட்டு இருக்கிறோம். யாரால், எதற்காக எப்படி என்று நாம் சிந்திது செயல் ப்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுபற்றி தன்களுக்கு ஒரு பதிவி எழுதி அனுப்ப விரும்புகிறேன். எப்படி அனுப்புவது என்பதை தெரியப்படுத்துவீர்களா?

  கிராமத்தான்

  பதிலளிநீக்கு
 4. உங்கள் போராட்டத்தின் வெற்றி, எழுத்துக்குக் கிடைத்த மாபெரும் மரியாதை... தோழர், காமராஜ் மற்றும் அண்டோ ஆகியோர் பணி திரும்பியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

  அன்புடன்
  ஆதவா!!

  பதிலளிநீக்கு
 5. //. 23.7.2009 காலையில் சஸ்பென்ஷனை எதிர்த்து தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது. //

  :) :)

  பதிலளிநீக்கு
 6. // வெயிலான் அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு உற்ற சமயமாக அது இல்லை. அவர் விடைபெற்றார். //

  இனிய செய்தியோடு இனிப்பையும் பகிர்ந்தது மகிழ்ச்சி! நன்றி!

  இனியொரு முறை நிச்சயம் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 7. மகிழ்ச்சியான செய்தி!

  ஒரு செய்தியை பத்திரிகையில் வெளியிட்டால் கூட இப்படி ஒரு தண்டனையா? மீண்டும் பணிக்கு திரும்பியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  எதற்கும் அஞ்சாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க போராடிய உங்களுக்கும், மற்ற தோழர்களுக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இப்படியான தருணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது என் கடந்த கால பணி குறித்த அனுபவங்கள் எல்லாம் நினைவு வருகிறது.மிக்க மகிழ்ச்சி, தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. தங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!! :-)

  பதிலளிநீக்கு
 10. மீண்டும் பணிக்கு திரும்பியவர்களுக்கும், உங்கள் போராட்டத்திற்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. happy to hear this news.

  But what about the fundamental issue, that outsourced staff, have they got job again?

  பதிலளிநீக்கு
 12. நினைவுகளிலிருந்து நீங்காத
  நட்பின் பெருமிதம் இன்னும் தேங்கிக்கிடக்கிறது கண்களில்.

  பதிலளிநீக்கு
 13. //
  தோழர்கள் காமராஜ், அண்டோ இருவரும் இன்று காலையில் தத்தம் கிளைகளில் பணிக்குச் சேர்ந்து விட்டனர்.! தர்மம் மீண்டும் வென்றிருக்கிறது. இந்த சந்தோஷத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

  //

  சந்தோஷமாக இருக்கிறது....

  அதே போல, இந்த பிரச்சினை யாருக்காக ஆரம்பித்ததோ, அவர்களுக்கும் நல்லது நடக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 14. தங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் நண்பரே

  பதிலளிநீக்கு
 15. இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

  குப்பன் யாஹூ அவர்கள் கேட்டிருக்கும், அவுட்சோர்சிங்கில் பணிசெய்து கொண்டு இருக்கும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் எங்கள் முயற்சி தொடர்கிறது.

  பதிலளிநீக்கு
 16. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காமராஜ் அங்கிளுக்கும் அண்டோ வுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. தங்களது போராட்டம் வெற்றி பெற்றது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 18. “அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ என் தோழன்”-சே.

  எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டு ஆத்திரப்பட்டு அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த அத்துணை தோழர்களோடும் எங்கள் வெற்றியை பகிர்ந்து கொள்கிறோம். நன்றி தோழர்களே....

  பதிலளிநீக்கு
 19. happy abt your struggle and success>>>Let AIBEA AND BEFI UNIONS OF Nationalised banks LEARN LESSION FROM YOUR STRUGGLE--VIMALAVIDYA-cHALAKKUDY

  பதிலளிநீக்கு