-->

முன்பக்கம் � அடியோடு ஒழிப்போம் அடிக்கும் வழக்கத்தை....

அடியோடு ஒழிப்போம் அடிக்கும் வழக்கத்தை....

வலைத்தளப் பதிவொன்றில் ஒரு பெண்மணி ஒரு சுவாரசியமான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார்.  ஒரு மூன்று மாதம் மட்டும் தனியார் துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த அனுபவம் அதில் முக்கியமானது. அவர் வகுப்பறையில் நுழைந்த மாத்திரத்தில் குழந்தைகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, டீச்சர், டீச்சர் என்று குதூகலித்துக் கூவுவார்களாம்.  ஒரே பாட்டும் சத்தமும் பறக்குமாம் வகுப்பில்.  மற்ற ஆசிரியைகள், சரிதான் அந்தப் புதுக் கிறுக்குடைய வகுப்பாகத்தான் இருக்கும், என்ன வேண்டிக் கிடக்கிறது வகுப்பறைக்குள் கும்மாளம் என்று அலுத்து சலித்துக் கொண்டு நகர்வார்களாம்.  இந்தப் பெண்மணி ஒருநாள் அந்தக் குழந்தைகளிடம் நேரே கேட்டிருக்கிறார், ஏன் என்னைக் கண்டால் மட்டும் இத்தனை உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று.....அந்த இளந்தளிர்கள் ஒரே குரலில் சொன்ன பதில் என்ன தெரியுமா: 'வகுப்பறைக்குள் கையில் குச்சி இல்லாமல் நுழையும் ஒரே ஆசிரியை நீங்க தானே மிஸ்' என்பதுதான்.


கோலெடுத்தால் குரங்காடும் என்பதுதானே பழமொழி - குழந்தைகளுக்கு எதிராகக் கோலாட்டம் என்ன வேண்டியிருக்கிறது ? ஆசிரியை என்பவர் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வழிகாட்டுபவர்தானே, அவர் எதற்கு இராணுவ அதிகாரிபோல் தன்னைச் சித்தரித்துக் கொண்டு, வகுப்பறைக்குள் சதா சர்வகாலமும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் துடிக்க வேண்டும்?
அண்மையில் நம்மைத் துடிதுடிக்க வைத்த ஒரு நிகழ்வு நாட்டின் தலைநகரத்தில் நடந்தது. வருங்கால இந்தியாவில் ஏதாவதொரு சாதனையைச் செய்திருக்கக் கூடிய வாய்ப்புள்ள ஒரு பெண் குழந்தையின் உயிரைப் பள்ளிக்கூடமொன்றின் அலட்சியம் காவு வாங்கிவிட்டது.


ஏப்ரல் 17 அன்று தில்லி மாநகராட்சி பள்ளி ஒன்றில், ஷானுகான் என்ற பதினோரே வயது நிரம்பிய சிறுமி ஏதோ ஆங்கிலச் சொல் ஒன்றை எழுத்துக் கூட்டி வாசிக்கவில்லை என்பதற்காகவோ, ஏ பி சி டி தெரியவில்லை என்பதற்கோ ஆசிரியையால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்.சுட்டெரிக்கும் வெயிலில், கோழியைப் போல் உடம்பு வளைத்துக் கூனிக் குறுகி (முர்கா நிலை என்று இந்தியில் சொல்வார்களாம்.) நிற்க வைத்து அவள் முதுகில் செங்கல்களையும் ஏற்றி சுமக்க வைத்திருக்கிறார் அந்த கிராதக ஆசிரியை.  சில மணித்துளிகளுக்குப் பின் மயங்கி விழுந்த ஷானு வீட்டிற்கு அனுப்பப்பட்டபோது அவள் மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறத் துவங்கியிருக்கிறது.  ஏழை தகப்பன் அயூப்கான் ஏதோ காற்று கருப்பு அடித்துவிட்டது என்று கருதி இங்கே அங்கே அலைந்து கடைசியில் மருத்துவமனைக்குச் சென்று சேர்த்தபின் அடுத்த நாள் ஷானுவின் உயிர் பிரிந்துவிட்டது.  ஆசிரியை உடனே தலைமறைவாகி விட்டார்.

 
பள்ளியில் குழந்தைகளைக் கடுமையாகத் தண்டிக்க சட்டபூர்வமாக இருந்த ஏற்பாடு ரத்து செய்யப்பட்ட பிறகும், அடிதடிகள், முரட்டு தண்டனை முறைகள் நின்றபாடில்லை என்பதன் நேரடி நிரூபணம் இது.  ஜனவரி 2007ல் திருநெல்வேலியில் சுடலி என்ற ஒன்பது வயது சிறுமி வகுப்பில் கவனம் செலுத்தாமலிருந்தார் என்று ஆசிரியை அவரை நோக்கி எறிந்த தம்ளர் அந்தக் குழந்தையின் கண்ணைப் பதம்பார்க்க, நிரந்தரமாகவே கண்ணில் பார்வை போய்விட்டது. அக்டோபர் 2007ல் அகமதாபாத் மாநகரில், பத்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக பள்ளி மைதானத்தைச் சுற்றி ஐந்து சுற்று சுற்றுமாறு அவமான தண்டனை வழங்கப்பட்டவுடன், இரண்டாவது சுற்றிலேயே மயங்கிவிழுந்த 11 வயது மாணவர் மிலான் தாணா பரிதாபகரமாக இறந்து போனார்.
இந்த ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி மாணவியான ஐந்தே வயதுக் குழந்தை ஸ்ரீ ரோகிணி வீடு திரும்பவில்லை.  தேடிச் சென்ற பெற்றோரிடம் குழந்தை அன்றைக்குப் பள்ளிக்கே வரவில்லை என்று வகுப்பு ஆசிரியை சாதித்து அனுப்பி விட்டார். அவர்கள் புகார் செய்து சண்டை போட்டுச் சென்ற மூன்றாம் நாள் குழந்தையின் உடல் பள்ளியின் அருகிலிருந்த குளத்திலிருந்து கிடைத்திருக்கிறது.  ஆசிரியை மற்றும் பள்ளி ஊழியர்கள் இருவரை அழைத்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது.  வகுப்பில் ஸ்ரீ ரோகிணி தலையில் குச்சியால் ஓங்கி அடித்திருக்கிறார் ஆசிரியை.   குழந்தை மயங்கிவிழவும் அச்சமேற்பட்டு பீரோவில் வைத்து மூடி விட்டிருக்கிறார். பின்னர் ஊழியர்கள் உதவியுடன் குழந்தையைக் கொண்டுபோய்க் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடவாதது மாதிரி வந்துவிட்டார் என்கின்றன பத்திரிகை செய்திகள்.


தங்களது மூன்றாவது கையாகக் குச்சி, பிரம்பு, ஸ்கேல் இவற்றோடு வகுப்பறைக்குள் நுழைவது ஏதோ மிடுக்கும், மரியாதையுமான தோற்றம் என்று ஆசிரிய உலகம் நம்புகிற போக்கு மாற வேண்டும்.  கார்ப்பொரல் தண்டனை என்று இராணுவச் சொல்லாட்சி நிறைந்த தண்டனை முறையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.  அதற்கான சட்டம் பல மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.  எச்சரிக்கை  செய்து பார்த்தும்  தொடர்ந்து தவறிழைக்கும் மாணவரின் கையில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் மூன்று வெட்டுக்கள் வரை ஏற்படுமாறு தண்டனைகள் வழங்க அந்தச் சட்டத்தில் இடமிருந்தது..  இப்படியான சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும் நடைமுறை பழக்க வழக்கங்கள் மாறவில்லை.  ஆசிரிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர் இரண்டு மாதங்களுக்குமுன் தினமணி நாளேட்டின் நிருபரிடம் பேசுகையில் அடிதடி இருக்கக் கூடாதென்பதால் தான் மாணவர்களை ஒழுங்குபடுத்த முடிவதில்லை, தண்டனை வழங்காமல் எப்படி கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றைக் கற்பிக்க முடியும் என்கிற ரீதியில்    சொல்லியிருந்தது அதிர்ச்சியானது.


அறிவியல்பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பார்த்தால் அடிதடிகளாலோ கடுமையான தண்டனை முறைகளாலோ மாணவரை நேர்வழிப்படுத்த முடியாது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.  தமிழகத்தின் முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான டாக்டர் எஸ் எஸ் ராஜகோபாலன் அடிதடிகளால் மாணவரைத் திருத்த முடியாது என்பதைத் தனது சொந்த ஆசிரிய வாழ்க்கை அனுபவத்திலிருந்து அடிக்கடி எடுத்துக் கூறுவதுண்டு. தனது துவக்க காலப் பணியின்போது ஒருமுறை நிறுத்தாமல் ஒரு மாணவரை அடி அடியென்று அடித்து அவன் அசராது நிற்க, இவர் மயங்கி விழுந்துவிட்டாராம். மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, அந்த மாணவர், 'அய்யா, நீங்க அடிச்சி முடிச்žங்களான்னு தெரியல.  அதுதான் நீங்க எழுந்திருக்கிறவரை காத்திருந்தேன்' என்று சொல்லவும் அதிர்ந்துபோன இவர் எத்தனையோ பாடங்களை அன்றைய ஒரு நிகழ்வில் கற்றுக் கொண்டாராம்.  அதற்குப் பின் பல்லாண்டுக் கால வெற்றிகரமான ஆசிரியப் பணியில் அன்பாலும், அரவணைப்பாலுமே மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலைத் தரமுடிந்தது என்கிறார் எஸ் எஸ் ராஜகோபாலன்.


அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மாணவரை இப்படி அடிக்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். பெற்றோர் குழந்தையை அடிப்பதாக அண்டை வீட்டுக்காரரிடம் புகார் வந்தால் அதற்கே நடவடிக்கை எடுக்கும் வழக்கம் உள்ள நாடுகள் தான் அங்கே இருக்கின்றன. ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 88வது பிரிவு  பெற்றோரும் மற்றோரும், குழந்தையின் 'நன்மைக்காக'த் தண்டித்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது, 89வது பிரிவு 12 வயதிற்குட்பட்டோருக்கு எதிரான 'நடவடிக்கைகளை'ச்                     செய்வோருக்கு பாதுகாப்பு வழங்குகிறது என்று சமூக இயக்கத்தினர் சுட்டிக் காட்டி இந்தப் பிரிவுகள் உடனே திருத்தப்பட்டுக் குழந்தைகளின் உண்மையான நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர்.


குழந்தைகளின் நலனுக்காக என்று செய்யப்பட்ட வன்கொடுமைகள்தான் அதிகம்.  அக்கறை என்ற பெயரால் வன்முறைகள் அதிகம் நிகழ்கின்றன.  அந்தக் காலங்களில் கிராமப்புறங்களில் வாத்தியாருக்கு குச்சி ஒடித்துக் கொண்டு தருவதற்கே வகுப்பிலேயே உயரமான மூத்த மாணவர்கள் சிலர் பொறுப்பு வகிக்கிற கதையெல்லாம் நடக்கும்.  பேசுகிறவர்களின் பெயர்களை எழுதித் தருவதற்கென்றே சில அடக்கமான நல்ல மாணவச் செல்வங்களை ஆசிரியர்கள் உரிய பதவியில் நியமிப்பதும் ஓர் ஒழுக்க விதியாக நிறைவேற்றப்படும்.  ஆசிரியர்களின் அடி, உதைக்குப் பயந்து பள்ளியைவிட்டு நின்றவர்களின் எண்ணிக்கையும், மாற்றப்பட்ட அவர்களது விதியையும் யார் பதிவு செய்ய முடியும்?  வாழ்க்கையில் முடங்கிப் போகிற, முரடாக மாறுகிற, மிரள மிரள விழிக்கிற எத்தனையோ மனிதர்களின் கடந்த கால வாழ்க்கையில் அராஜகக் கம்பு வீசிய ஆசிரியர்கள், பெற்றோர், உற்றார், உறவினர் யாராவது இருக்கவே செய்வர்.


இரா.நடராசன் அவர்களின் ஆயிஷா என்ற சிறு குறு தமிழ் நாவல் இந்தியாவின் ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் பல பதிப்பகங்கள் அதை மறு வெளியீடு செய்ததில் பல லட்சம் வாசகர்கள் கவனத்திற்குப் போன அந்தக் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? பள்ளி மாணவியான ஆயிஷா என்ற சிறுமியின் அறிவுத் தேடலை ஆசிரிய உலகம் அடி உதை தந்து எதிர்கொள்கிறது.  வகுப்புக்கு மீறிய கணக்குகளை அவளால் போட முடிகிறபோது அவளது அதிக பிரசங்கித் தனத்திற்கு அடி விழுகிறது.  வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை ஒழுங்காய் சவம் மாதிரி கேட்டுக் கொண்டிராமல் அதில் எதிர்க் கேள்வியை அவள் கேட்கிறபோது அடி விழுகிறது.  தமிழில் ஏன் அறிவியல் சொல்லித் தரக் கூடாது, ஏன் உலகில் நிறைய பெண் விஞ்ஞானிகள் உருவாகவில்லை என்கிற மாதிரியான உறுத்தலான கேள்விகளை சமூகத்தின் பார்வைக்கு வைக்கிற அந்தச் சிறுமி அடியுதைகள் உறைக்காமல் மரத்துப் போகவேண்டுமென்று ஊசியிலேற்றிக் கொள்கிற நச்சு வேதியல் மருந்து அந்த இளம் விஞ்ஞானியின் கதையை முடித்துவிடுகிறது என்ற இந்தக் கற்பனைக் கதை பெற்றோரை, ஆசிரிய சமுதாயத்தை, முற்போக்குச் சிந்தனையாளர்களை உறைய வைத்தது.  ஆனாலும், உலகம் வழக்கம் போலவே அவ்வப்போது உச்சு கொட்டுவதும், பிறகு தன்போக்கில் அதே அராஜக சமூகமாகவே தொடர்வதுமாக நகர்கிறது.


குழந்தைப் பருவம் துள்ளலோடும், தேடலோடும் பரிணமிப்பது. அதை ஈவிரிக்கமின்றி பிய்த்துப் போடும் வேலையைச் செய்ய யாருக்கும் உரிமை இருக்கமுடியாது.  முந்தைய சோவியத் அமைப்பில், மாணவர்களை மோசமாக உற்று நோக்கினாலே ஆசிரியர்களின் வேலை கேள்விக்கு இடமாக்கப்பட்டு விடுமாம்.  மோப்பக் குழையும் அனிச்சமாக இருக்கும் பருவத்தில் அவர்களின் திறமைகளை உசுப்பிவிடும் வேலைதான் ஆசிரியருக்கு இருக்க முடியும்.  பல்வேறு சமூகப் பின்புலம், பொருளாதார பின்னணி, உடல்கூறு, மனப்பக்குவம் போன்றவற்றோடு பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள்மீது சமூகம் உற்சாகக் கோட்டை கட்டவேண்டும்.  ஒரு குழந்தையை வெல்ல முடியாதவர்களது தோல்வி குழந்தைக்கு எதிரான தண்டனையாக மாறுகிறது என்பதைப் புரிந்து  கொள்ளவேண்டும். குழந்தைகளின் வெற்றி, தோல்விகளை சகஜமாக ஏற்கும் பக்குவம் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் ஏற்பட வேண்டும்.  தங்களது கனவுகள், எதிர்பார்ப்புகளின் பளுவை குழந்தைகளது தோள்களில் பெற்றோர் ஏற்றிவைக்கக் கூடாது.
எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, பாட்டுத் திறமை எதிலும் முதல் வகுப்பு பெற முடியாத ஒரு குழந்தை விளையாட்டில் பின்னி எடுக்கத் தக்கதாக இருக்கக் கூடும்.  கலை, இலக்கியங்களில் தேர்ச்சி பெறக் கூடும். பன்முகத் திறமை கொண்ட குழந்தைகள் தான் ஒரு நறுமணம் வீசும் வண்ணப் பூந்தோட்டமாகத் திகழ முடியுமே தவிர ஒற்றைப் பரிமாணத்தில் அலுப்பு தட்டும் காட்சி தருவோர் அல்ல.


வலைத்தளப் பதிவில் தனது மூன்று மாத ஆசிரியை அனுபவம் பற்றிப் பேசியிருக்கும் அந்தப் பெண்மணி முடிக்கையில் இப்படி சொல்கிறார்.  கடைசி வேலை நாளில் குழந்தைகளுக்காகப் பரிசுகள் கொண்டு போயிருந்தாராம் அவர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த வித்தியாசமான ஆசிரியைக்குத் தத்தமது எளிய பரிசுகளோடு காத்திருந்தார்களாம்.  தண்டனைகள் அளிக்காத மகிழ்ச்சியான ஆசிரியரின் உலகில் பரிசுகளாகக் குழந்தைகளே நிரம்பிவழிகிற அந்த ஆனந்தத்திற்கு ஈடு என்ன இருக்க முடியும்?

(கட்டுரையாளர்- எஸ்.வி.வேணுகோபாலன். ஈமெயில்: sv.venu@gmail.com)

*

Related Posts with Thumbnails

16 comments:

 1. வெகு அற்புதமான கட்டுரை.
  வேரெதுவும் சொல்ல முடியவில்லை
  வார்த்தைகள் உணர்ச்சி மிகுதலில் வற்றிவிடுகின்றன.

  ஒன்றே ஒன்று இதை நிறைய பேர் படிக்க வேண்டும்!!

  ReplyDelete
 2. 1.அந்த மாணவர்,'அய்யா, நீங்க அடிச்சி முடிச்žங்களான்னு தெரியல. அதுதான் நீங்க எழுந்திருக்கிறவரை காத்திருந்தேன்' என்று சொல்லவும் அதிர்ந்துபோன இவர் எத்தனையோ பாடங்களை அன்றைய ஒரு நிகழ்வில் கற்றுக் கொண்டாராம்.


  2.கடைசி வேலை நாளில் குழந்தைகளுக்காகப் பரிசுகள் கொண்டு போயிருந்தாராம் அவர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த வித்தியாசமான ஆசிரியைக்குத் தத்தமது எளிய பரிசுகளோடு காத்திருந்தார்களாம். தண்டனைகள் அளிக்காத மகிழ்ச்சியான ஆசிரியரின் உலகில் பரிசுகளாகக் குழந்தைகளே நிரம்பிவழிகிற அந்த ஆனந்தத்திற்கு ஈடு என்ன இருக்க முடியும்?

  Manathai Naegila vaitha intha irandu Nigalchigalaiyum anaithu Aasiriyargalum arinthu Purinthu Nadanthu kondal varugala samuthayam sirapaga irukkum..

  ReplyDelete
 3. பின்னூட்டம் இட முடியவில்லையே..??

  ReplyDelete
 4. அருமையான பதிவு.

  ReplyDelete
 5. மிக நல்ல பதிவு ஸார். என் கருத்தும் இதுவே

  ReplyDelete
 6. /
  வகுப்பில் ஸ்ரீ ரோகிணி தலையில் குச்சியால் ஓங்கி அடித்திருக்கிறார் ஆசிரியை. குழந்தை மயங்கிவிழவும் அச்சமேற்பட்டு பீரோவில் வைத்து மூடி விட்டிருக்கிறார். பின்னர் ஊழியர்கள் உதவியுடன் குழந்தையைக் கொண்டுபோய்க் குளத்தில் போட்டுவிட்டு ஒன்றும் நடவாதது மாதிரி வந்துவிட்டார் என்கின்றன பத்திரிகை செய்திகள்.
  /

  ஆசிரியர் என்ற தொழிலுக்கே கேவலம். நடு ரோட்டில் வைத்து சுட்டு கொல்ல வேண்டும் இதை போன்றவர்களை
  :((

  ReplyDelete
 7. பள்ளி நிர்வாகங்கள் மிக முக்கிய காரணம்.

  குறைவான சம்பளத்திற்கு ஆசிரியர்களை நியமித்தல்.

  பள்ளியின் பெயர் சந்தையில் சிறக்க வேண்டும், நூறு சதவீதம் தேர்ச்சி வேண்டும் என்ற வணிக நோக்கம்

  எந்த ஆசிரியர் அடிக்காமல் அன்பாக சொல்லி கொடுக்கிறாரோ அவர் மீதே நிரந்தர நெஞ்சார்ந்த மரியாதை அன்பு ஏற்படும்.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 8. Good article about the violence and what it could acheive except loss of lives whether at a school if violence is the means or in a major anti-govt level actions like in Afghan,Lanka.
  But people make so sound noises is some one quotes Gandhi and non-violence, what to do?
  Sinekhidi

  ReplyDelete
 9. என் குறைவான வாசிப்பில் ஆயிஷாவை எப்படியோ படித்திருக்கிறேன். என் நண்பர்களுக்கெல்லாம் கொடுத்துப் படிக்கச்சொன்னேன். நல்ல வரவேற்புமிருந்தது. அனைவர்ய்ம் தவறாமல் படிக்கவேண்டும் என்பது என் சிபாரிசு.

  ReplyDelete
 10. அற்புதமான கட்டுரை - பகிர்வுக்கு நன்றி!! என்ன சொல்வதென்றே தெரியவில்லை..Very touchy and very sensible post! எனது நண்பர்களுக்கு கண்டிப்பாக படிக்கக் கொடுக்க வேண்டும் - இந்த இடுகையை!!

  ReplyDelete
 11. சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?
  சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
  ”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”


  http://maanamumarivum.blogspot.com/

  ReplyDelete
 12. மிகவும் நெகிழ வைத்த மற்றும் அவசியமான கட்டுரையும் கூட..

  ReplyDelete
 13. மிக அற்புதமான கட்டுரை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை. இங்கு குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்கிற அடிப்படை தெரியாத அறியாமையில் இருக்கிறார்கள், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது குறித்த கருத்தரங்குகளை நடத்தினால் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அமையும்.

  ReplyDelete
 14. திலிப் நாராயணன்June 15, 2009 at 10:21 AM

  அடிக்கும் வழக்கம் ஆசிரியர்களிடமிருந்து ஒழிக்கப்பட வேண்டும். போலிஸ்காரர்களுக்கு மனிதாபிமானப்பயிற்சி எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு மாணவர்களை அடிக்காமல் இருப்பதற்கும் பிரத்தியேகப்பயிற்சி ஆசிர்யர்களுக்கும் அவசியம். பொதுவாக மாணவர்கள் அடிபடுவதைக்குறிப்பிடுகிறது பதிவு. அல்லாமல் சேலம் அருகே தனம் என்ற தலித் சிறுமி பொதுக்குடத்தில் தண்ணீர் மொண்ட காரணத்தினால் கண்பார்வை போகும் அளவுக்கு அடிபட்டார். அருந்ததியர் சமூகத்திலிருந்து கல்வி கற்க வந்தவர்களை விருதுநகர் மாவட்டத்தில் கக்கூஸ் கழுவச்சொன்ன ஆ(சி)ரியப்பெருசுகளை என்னவென்பது? எனது பள்ளி நாட்களில் கூட ஒட்டப்போட்டியின் தொடுகல்லாகவே என்னை அமர்த்தியிருந்தார் எனது ஆசிரியர். நாடகங்களிலும் மற்ற ஆண்டுவிழாக்களிலும் கூட மைதானத்தைச்சுத்தப்டுத்துவது போன்ற வேலைகளில் பெரிய மனது பண்ணி ஈடுபடுத்துவார்கள்.

  ReplyDelete
 15. இந்தப் படைப்பின் மீது கருத்து சொல்லியிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. நிறைய பேரை பாதித்துள்ளது. காரணம், பிரச்சினையும் நம்மில் பலரையும் பாதித்திருக்கிரது.

  2. குப்பன் யாகூவின் குரல் சரியானது தான்: வர்த்தக நோக்கத்தில் மலிவாக்கப்படும் உழைப்பு கூட ஆசிரியர்களை இயந்திரமாகச் செயல்பட வைக்கிறது. அன்பைப் பெறாதவர்கள் அன்பை அளிக்க முடியாதவர்களாகவும் ஆகி விடுகிறர்கள்.

  3. இயல்பாகவே நமது சமூகத்தில், குழந்தைகளைப் பற்றிய மதிப்பீடு, பார்வை போன்றவற்றில் உள்ள சிக்கல் வீட்டில், வீதியில், பள்ளியில், விளையாட்டு மைதானத்தில்...என்று எங்கும் வெளிப்படுகிறது. குற்றவாளி, நிச்சயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல. ஆனால், பள்ளியில் நடக்கும் வன்முறை உளவியல் ரீதியாக மிகப் பெரிய எதிர்வினைகளை குழந்தைகளின் வாழ்வில் உருவாகுகிறது. அதனால் தான் இந்தக் கட்டுரை.

  4. திலீப் நாராயணன் குரலில், சாதீயப் பார்வை நிகழ்த்தும் வன்முறை குறித்த நினைவுகள் ஒலிக்கிறது. சேலம் தனம் பொது தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடித்ததற்காகத் தனது பார்வையையே பறி கொடுத்ததை, ஞான ராஜசேகரன் ஒரு கண், இரு பார்வை என்று அதிர்ச்சியான குறும்படமாக எடுத்திருந்தார். கடந்த ஆண்டு, அதே தனத்தை விகடன் இதழ் நேர்காணல் செய்திருந்தது. தனம் இப்போது வளர்ந்து விட்டாள். அந்த கிராமம் அப்படியே இருக்கிறது என்பது அதில் வெளிப்பட்டிருந்தது.

  5. நன்றி முத்துவேல். இரா நடராசனின் ஆயிஷா அபாரம் என்றால், அவரது ரோஜா அற்புதம். அதையும் வாசியுங்கள். வாசிக்கத் தூண்டுங்கள். ரோஜா கதை, இயந்திரகதியான நகர வாழ்வில், தேடல் மிகுந்த தங்கள் மகனின் சின்னஞ்சிறு கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல நேரமற்ற, வேலைக்குப் போகும் பெற்றோர், நொந்து போகும் குழந்தைமனம்....ஆசிரிப்பணியில் இருக்கும் இரா.நடராசன் ஒரு நேர்காணலில் இப்படி சொல்லியிருந்தார்: ஆயிஷா ஒரு ஆசிரியனின் Confessions. ரோஜா ஒரு தகப்பனது Confessions...

  6. நெகிழ்ந்து எழுதியிருக்கும் நெஞ்சங்களுக்கும், வாய்ப்பளித்த மாதவராஜ் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 16. வாசித்த நண்பர்களுக்கும் நன்றி. கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி.

  எஸ்.வி.வி, நானா வாய்ப்பளித்தேன்.... நீங்கள் அல்லவா எனக்கும், தீராத பக்கங்களுக்கும் வாய்ப்பளித்துக் கொண்டு இருக்கிறீர்கள்!

  ReplyDelete