-->

முன்பக்கம் , � சினிமா, அறிவு, ரசனை குறித்து உரையாடல்

சினிமா, அறிவு, ரசனை குறித்து உரையாடல்

nights will be break 2006 செப்டம்பரில் திருவனந்தபுரத்தில் ஜான் ஆபிரஹாம் நினைவு ஆவணப்பட, குறும்பட தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் நான் இயக்கியிருந்த இரவுகள் உடையும் திரைப்படமும் (படம் பார்க்க விரும்புவர்கள் இங்கு செல்லவும்) பங்கு பெற்றது. முழுமையாக ஐந்து நாட்கள் உட்கார்ந்து நுற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து வலைப்பக்கம் ஆரம்பித்த புதிதில் எத்தனை கோணம் எத்தனை பார்வை என்று பதிவிட்டிருந்தேன். திரைப்பட விழா குறித்தும், திரையிட்ட படங்கள் குறித்தும் அதில் விரிவாக எழுதியிருந்தேன்.

விரிவாக எழுதாத ஒரு விஷயத்தை சுருக்கமாகவேனும் இப்போது சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. திரைப்பட விழாவின் ஒவ்வொரு நாள் மாலையிலும் திரைப்படங்களை இயக்கியவர்களோடு பார்வையாளர்களின் சந்திப்பு என்னும் நிகழ்ச்சி நடந்தது. சினிமா குறித்த அறிவும், ரசனையும் எவ்வளவு முக்கியமானவை என்பதை அங்கு நடந்த உரையாடல்கள் உணர்த்தின. பொழுது போக்காக எடுத்த ஒரு குறும்படத்தின் இயக்குனரை வறுத்து எடுத்து விட்டனர். இத்தனைக்கும் படம் ஒன்றும் மோசமில்லை. ”இந்தப் படம் எதற்கு எடுத்தீர்கள்’ என்று ஆரம்பித்து அவரிடம் தொடர்ந்த விவாதங்களில் கடும் கோபம் இருந்தது. இயக்குனரும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். ம்ஹூம்... கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. சினிமா குறித்த அறிவும், ரசனையும் படம் எடுத்தவர்களைக் காட்டிலும், பார்வையாளர்களிடமே அதிகம் இருந்ததை பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள்! டூயட் பாட்டெல்லாம் எடுத்திருந்த இன்னொரு இயக்குனர் இதையெல்லாம் பார்த்துவிட்டு அடுத்தநாள் அவருடைய அமர்வுக்கு வராமலேயே மாயமாகிவிட்டார்.

அவர்கள் திரும்ப திரும்பச் சொல்லியதில் இவைகள்தாம் முக்கியமானவை. சினிமா என்பது மற்ற எந்தத் துறையை விடவும், தொழிலை விடவும் முக்கியமானது, நுட்பமானது. வித்தியாசமானது. ஒரு சமூகத்தில் மிகப் பெரும் விளைவுகளை சலனமற்று உள்ளுக்குள் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. மனித மனங்களில் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இறுதி நாளில் படங்களைத் தேர்வு செய்து அறிவித்த சிறப்பு மிக்க இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனும் இதையேச் சொன்னார். சினிமாக் கலைஞர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி, மிகுந்த கவனத்தோடு சினிமாவை உருவாக்க வேண்டியுள்ளது. பொழுது போக்கிற்காக வருகிறவர்கள், பொழுது போக்காக மட்டும் பார்த்துச் செல்வதில்லை. அவர்களை அறியாமல் சினிமா அவர்களைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது. படம் பார்க்க வருகிறவர்களை மதிக்கிற பண்பு வேண்டும்.  ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பூசு’ என்று சொல்வதற்கும், அதைக் கேட்பதற்கும் என்ன அறிவும், ரசனையும் தேவைப்படுகிறதோ?  அப்படி என்ன பொழுது போக்கு இருக்கிறதோ?

சினிமா, மற்றும் அதில் அறிவுக்கும், ரசனைக்கும் என்ன பதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் ஜான் ஆபிரஹாமைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரேவோடு பயணம் செய்ய வேண்டும். ஷியாம் பெனகலின் கண்களுக்குள் ஊடுருவ வேண்டும். எது அறிவு என்று தெளிந்தால், யார் அறிவற்றவர்கள் எனச் சொல்ல வேண்டியதில்லைதான்.

அந்த உரையாடலை இனி நாம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.....

 

*

Related Posts with Thumbnails

18 comments:

 1. "இரவுகள் உடையும்" நீங்கள் இயக்கிய குறும்படத்தை கீற்று இணையதளத்தில் கண்டேன், உலகமயத்தின் விளைவுகள் தான் சாலைப்பணியாளர்களின் பணி நீக்கம் என்ற தகவல் அக்குறும்படத்தின்
  மூலமாகத்தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 2. /நான் இயக்கியிருந்த இரவுகள் உடையும் திரைப்படமும் /

  ஐயா, தோழரே.உண்மையிலயே நீங்க யாருதான்யா? இன்னும் எத்தனை முகங்கள் உமக்கு.
  :)

  ReplyDelete
 3. அன்பின் நண்பருக்கு,

  'இரவுகள் உடையும்' முன்பே கீற்றில் நான் பார்த்து அதிர்ந்த குறும்படம். நீங்கள் எடுத்ததென இன்றுதான் அறிந்தேன். பாராட்டுக்கள்.

  பத்திரிகை வெளியீடு, திரைப்பட இயக்கமென ஆச்சரியத்துக்குள்ளாக்கியபடியே இருக்கிறீர்கள்.. தொடரட்டும் நண்பரே !

  ReplyDelete
 4. நீங்கள் இயக்குநர் என்று தெரியாமலேயே நடிகர்கள் பற்றிய முந்தைய பதிவுக்கு அதுசரி அண்ணன்கிட்ட எதிர்வாத வக்கீலாக வேண்டியதாயிற்று இன்று.தெரிந்திருந்தால் உங்கள் பதிவாச்சு உங்கள் வாதமாச்சுன்னு உட்கார்ந்து வேடிக்கை பார்த்திருக்கலாம்:)

  ReplyDelete
 5. //அந்த உரையாடலை இனி நாம் ஆரம்பிக்க வேண்டியதுதான்..... //

  நிச்சயம் ஆரம்பியுங்கள் நானும் கலந்துகொள்கின்றேன். உன்மையில் சினிமா ஒரு சக்திதான் எதை விடவும் அதன் மூலம்தான் விரைவான மாற்றம் நிகழ்கின்றது அது ரஜினி சிகரட் சுற்றினாலும் சரி விஜை பேண்டை கிழித்துக் கொண்டாலும் சரி.
  உங்களுடைய 'இரவுகள் உடையும் திரைப்படத்தை' பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது அதைபார்க்க
  வாய்ப்பளித்தற்கு நன்றி மாதவராஜ் சார்

  ReplyDelete
 6. சார் படம் பார்த்தேன், மனம் கனத்தது, கடைசி சில நிமிடங்களில் தொகுக்கக்பட்டிருக்கும் மாண்டேஜ் ஷாட்ஸ் இயல்பாகவும் தேர்ந்த கலைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களுடனும் அருமையாயிருந்தது.

  ஜான் ஆபிரகாம் பற்றி கலகக்காரனின் குரல் எனும் பிரதியை வாசித்திருக்கிறேன், அக்ரகாரத்தில் கழுதை படம் பார்க்க ஆவல், மக்களிடம் பணம் திரட்டி மக்களிடமே திரையிட்டு விளிம்பு நிலையிலேயே வாழ்ந்து மறைந்த புனே பிலிம் இன்ஸ்டிடியூட் கோல்ட் மெடல் ஸ்காலர்,

  ரே, ஷியாம் பெனகல்,,,,
  எழுதுங்கள் ஆவலாக இருக்கிறோம்.

  ReplyDelete
 7. //சினிமா - ஒரு சமூகத்தில் மிகப் பெரும் விளைவுகளை சலனமற்று உள்ளுக்குள் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது//

  நீங்க சரியாத்தான் சொல்லியிருக்கீங்க, சில (எல்லோரும் அல்ல) இயக்குனர்களும் நடிகர்களும் அதை மேலும் சரியா புரிஞ்சிகிட்டு சலனமே இல்லாம் இந்த சமூகத்தை சாக்கடையாய் மாற்றி கொண்டுள்ளனர்

  ReplyDelete
 8. //வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி, மிகுந்த கவனத்தோடு சினிமாவை உருவாக்க வேண்டியுள்ளது. பொழுது போக்கிற்காக வருகிறவர்கள், பொழுது போக்காக மட்டும் பார்த்துச் செல்வதில்லை. அவர்களை அறியாமல் சினிமா அவர்களைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது//

  வெற்று வாதங்களை வைத்துக் கொண்டு மேம்போக்காக விதண்டாவாதம் செய்தவர்களுக்கு மிக அழகாக நிதானமாக விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் கூடப் புரியவில்லையென்றால், பாவம் அவர்கள் நீங்கள் சொன்ன கதாநாயகர்களை விட அறிவற்றவர்கள் என்று கொள்ள வேண்டியது தான்.

  ReplyDelete
 9. சினிமா என்பது போர்வாள்
  நாமோ அதைக் கொண்டு
  அக்குள் மழிக்கிறோம்

  -எங்கோ படித்தது

  ReplyDelete
 10. இரவு உடையும் பாத்தேன் என்னத்த சொல்லங்க, என்னையே நினைத்தே எனக்கு வெட்கமாக இருக்குங்க..அந்த பிரச்சின நடக்கும் பொது கலசலிங்கத்தில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டு இருந்தேன்.. ஏதோ மேலோட்டமா தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பாத்தேங்க..அதோட பின்னணி பிரச்சினைக் குறித்து சிந்திக்க அப்போது மனம் போகவில்லை, உங்கள் குறும்படத்தை பார்த்து மனது உடைந்தே போச்சுங்க இன்னும் எவ்வளவு கொடுமைக்கு இந்த பொறுப்பற்ற அரசாங்கத்தால் நமது சகோதர்களின் குடும்பம் தள்ளப்பட்டுள்ளதோ?..இந்த படத்தை என்னுடைய நண்பர்களிடமும் பகிர்ந்து உள்ளேன்..

  நீங்கள் மற்றும் உங்கள் சக தோழர்களின் உழைப்புக்கு நன்றி அண்ணா. நல்ல படைப்புகள் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்..சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனிதர்களே மனிதம் உள்ள மனிதர்கள் மற்றவர்கள் மனித உருவில் திரியும் சதை பிண்டங்கள்..

  தோழமையுடன் தம்பி

  முகமது பாருக்

  ReplyDelete
 11. இரவுகள் உடையும் - கண்ணீர் மல்க பார்த்து முடித்தேன் .

  ReplyDelete
 12. ஹரிஹரன்!

  ரிஷான் ஷெரிப்!

  இரவுகள் உடையும் படம் பார்த்த கருத்தினை பதிவு செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 13. முத்துவேல்!

  profile2ல் பார்க்கும் அதே முகம்தான்.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 14. ராஜராஜன்!

  உங்கள் பின்னூட்டத்தை அதுசரி அவர்களின் பதிவில் பார்த்தேன்.

  மூன்று ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறேன். அதனால் இயக்குனர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியாது என நினைக்கிறேன்.

  இன்னும் எதாவது செய்யணும் என்கிற வேகம் இருக்கு.

  ReplyDelete
 15. ஆ.முத்துராமலிங்கம்!

  வருகைக்கு நன்றி. படம் பார்த்துச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 16. யாத்ரா!

  அந்த கலகக்காரனை நீங்கள் ஞாபகப்படுத்தியதும் சிலிர்த்தது. அந்த கலகக்குரல் நமக்கு வேண்டும்.
  நிச்சயம் உரையாடுவோம்...
  நட்சத்திர வாரம் முடியட்டும்....

  ReplyDelete
 17. அரசூரான்!

  தீபா!

  அனானி!

  அனைவருக்கும் நன்றி. அனானியின் கவிதை கூர் வாள்.

  ReplyDelete
 18. முகமது பாருக்!

  ஜோ!

  உண்மைக்கு இருக்கும் வலிமை எதற்கும் இல்லை. அதுதான் இந்தப் படத்தின் உயிரோட்டமே!

  ReplyDelete