கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை (தொடர்ச்சி...)

place of women

 

“அடுத்து நம்ம நாடகம். ரெடியாகு” என்று ஜெயராமன் வாத்தியார் அழைத்தார். அதுவரை இருந்த களைப்பு போய் பயம் வந்தது. எழுந்து கவுனை சரி செய்தேன்.சிரட்டைகள் கொஞ்சம் கீழே இறங்கிய மாதிரி உணர்ந்தேன். கலங்கினேன். தூக்கி வைத்து, கவுனை கீழே இறக்கி இறுக்கமாக்கிக் கொண்டேன். முட்டையையும் பதமாக தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “கொஞ்சம் இரு” என்று மேக்கப் போட்டவர் அருகில் வந்து உதட்டில் லிப்ஸ்டிக் பூசினார். எதோ பூச்சி உதட்டில் ஒட்டிக்கொண்டது போல விறுவிறுவென  வந்தது. கையை உதட்டருகே கொண்டு போய் தொட்டுப் பார்த்தேன். “ம்.. எதுக்குத் தொடுறலே” என்று சத்தம் போட்டார்.

விசில் சத்தம் கேட்டது. திரை இறக்கி விட்டார்கள். மேடைக்குச் சென்றேன். உள்ளே நான் படுத்திருப்பதற்கு இரண்டு பெஞ்சை சேர்த்துப் போட்டு போர்வை விரித்தார்கள். தலையணை வைத்தார்கள். விஸ்வநாதன் ஒரு மூலையில் நின்று வசனத்தைச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே என் மார்பை வேறு பார்த்து சிரித்துக் கொண்டான். எப்போது இந்த நாடகம் முடிந்து எல்லாவற்றையும் கழற்றி எறிவோம் என்றிருந்தது. ஜெயராமன் வாத்தியார், வசனம் எழுதப்பட்ட காகிதங்களோடு மேடையின் பக்கவாட்டில் போய் நின்று கொண்டு “மாது ம்..படு” என்றார். சிரட்டைகள் சரியாக இருக்கின்றனவா என்று ஒருதரம் தொட்டுப் பார்த்துக்கொண்டு அலுங்காமல், குலுங்காமல் படுத்துக் கொண்டேன்.

விசில் ஊதப்பட்டது. திரை விலக்கப்படவும் கணகளை மூடிக்கொண்டேன். ”ஷேக்ஸ்பியரின் அற்புதமான நாடகம் இது...” என்று ஜெயராமன் வாத்தியார் நாட்கம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வெளியே கூட்டத்தின் கசகச கேட்டது. “இதோ ஒத்தல்லோ டெஸ்டிமோனாவைப் பார்க்க கடைசி முறையாக வருகிறான்” என்று முடிக்கவும், ஆரவாரமானது. விஸ்வநாதன் மேடைக்குள் ரோஜாவோடு நுழைந்து விட்டான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வசனங்களை உருக்கமாக பேச ஆரம்பித்தான். மெல்ல மெல்ல அவனது குரல் என்ன நோக்கி வர ஆரம்பித்தது. “ஏய்... சிரட்டை..” என்று முத்துராமன் குரல் கேட்டது. பெரும் சிரிப்பு எழுந்தது. ‘ஐயோ, மேடைக்கு முன்னாலேயே வந்து உட்கார்ந்திருக்கிறானே’ என்று படபடப்பாய் இருந்தது. என்னவெல்லாம் செய்யப் போகிறானோ என்று நினைத்ததும்,  இப்படியே எழுந்து ஓடிவிடலாமா என்றும் தோன்றியது.

விஸ்வநாதன் குரல் அருகில் கேட்டது. முத்தம் கொடுக்கப் போகிறான் என்று தெரிந்து கொள்வதற்குள், அவனது மூச்சுக்காற்று என் முகத்தில் விழுந்தது. உதடுகளில் ஈரமான கனத்தை உணர்ந்தேன். ‘அடப்பாவி... முத்தமே கொடுத்துவிட்டான்’. கிழே ஒரே சிரிப்புச் சத்தம். உதடுகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும் என பரபரத்தது. அடக்கிக்கொண்டேன். விஸ்வநாதன் மீது எரிச்சலும் கோபமும் கடுமையாய் வந்தது. ரொம்ப நேரம் போகாததால், இயற்கையின் முதல் அழைப்பு அடிவயிற்றில் கனத்துக்கொண்டு தொந்தரவு செய்தது.

எழுந்து உட்கார்ந்து எனக்குரிய வசனங்களை சொன்னேன். விஸ்வநாதன் முகத்தில் புன்னகையும், தீவீரமும் மாறி மாறி வர பேசி, சுற்றி, சுற்றி நடந்து கொண்டே இருந்தான். ”ஏலே மைக்குக்கிட்ட போயிப் பேசிலே” என்று ஜெயராமன் வாத்தியார் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். இருளில் மொதுமொதுவென தலைகளாய் வெளியே  தெரிந்தன. சிரட்டைகள் கிழே நழுவுவது போல வேறு தோன்றியது. தொட்டுப் பார்த்தேன். பக்கவாட்டில் இருந்து ஜெயராமன் வாத்தியார் “எலே கையை அங்கனயிருந்து எடுல”என்று மெல்லிய சத்தம் போட்டார். முட்டை இருந்த இடத்தையும் லேசாய் தொட்டுப் பார்த்தேன். “பாத்து, பாத்து” என்று கீழேயிருந்து முத்துராமன் கத்தினான். காய்ச்சலில் மயக்கம் வரும் நிலையில் இருந்தேன். எப்போது விஸ்வநாதன் கத்தியால் குத்துவான், விசில் சத்தம் கேட்கும் என்று துடித்தேன்.

நேரம் ஆக ஆக, முட்டையை எப்போது அமுக்குவது என்பதில் கவனமாய் இருந்தேன். வெளியிலிருப்பவர்களுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நான் நிற்க வேண்டும். விஸ்வநாதன் கத்தியால் என்னைக் குத்த வேண்டும். முட்டையை அழுத்தியவாறு நான் கூட்டத்தைப் பார்த்து திரும்பி இரத்தத்தோடு துடித்துக் கீழே விழ வேண்டும். இதுதான் சொல்லித்தரப்பட்டிருந்தது. எல்லாம் சரியாகச் செய்து, விசில் சத்தம் கேட்கவும் “அப்பாடா” என்று எனக்கு உயிர் வந்தது.

திரை விழுந்ததும் எழுந்து உள்ளே அறைக்கு ஓடி கவுனைக் கழற்றினேன். பிராவைக் கழற்ற முடியவில்லை. விஸ்வநாதன் பின்னாலிருந்து கழற்ற உதவி செய்தான்.  “எதுக்குல்லே, முத்தம் கொடுத்தே” என்றேன். “பொம்பளை மாதிரியே இருந்தே” என்றான். ”ச்சீ” என்று உதட்டை துடைத்தேன். கையெல்லாம் லிப்ஸ்டிக். சிரட்டைகளை கழற்றினேன். உள்ளே வந்த மேக்கப் போட்ட பெரியவர், டெஸ்டிமோனாவின் மார்புகளை எடுத்து பையில் பத்திரமாக வைத்துக் கொண்டார். கிளிப்புகளை அகற்றி முடியை எடுத்தார். “நல்லா நடிச்சே தம்பி” என்றார். சின்ன சந்தோஷம் வந்தது. மேல்ச்சட்டை, கால்ச்சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

தெரிந்தவர்களெல்லாம் “மாது!, அப்படியே வெள்ளக்கார பொம்பள மாதிரியே இருந்தே” என்று ஆச்சரியப்பட்டு கைகொடுத்தார்கள். சிலர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டு அக்காக்கள் புன்னகையை ஒளித்து வைத்தபடி சிரித்ததில் நிறைய அர்த்தங்கள் இருந்தன.  ஒதுங்கி இயறகையின் அழைப்பை நிறைவேற்றும் போது அருகில் வந்து முத்துராமன் “என்னலே, சிரட்டை..!” என்றான். போடா மயிரு!” என்று கத்தினேன். ஒரு கல்லை எடுத்து எறியப் போனேன். ஓடிவிட்டான்.

தனியே ஒரு இடத்தில் உட்கார்ந்த போது நிம்மதியாய் இருந்தது. கூடவே எதையோ இழந்தது போலவும் இருந்தது.

பி.கு: தீராத பக்கங்களின் மகளிர் தின வாழ்த்துக்கள்.

 

*

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஹா ஹாஅஹா.... கலக்கல் இலக்கியப் பதிவு... ரொம்ப அருமையான எழுத்து நடை..

    எல்லா சரியா சொன்னீங்க, நாடகம் நடக்கறப்ப நடந்ததை சட்டுனு சொன்னமாதிரி இருந்தது! அந்த சூழ்நிலையை அப்படியே எண்ணிப் பார்த்தேன்... சிரிப்பா இருந்தது!!! என்றாலும் இதெல்லாம் ஒரு வித அனுபவம்தானே!!!!

    பதிலளிநீக்கு
  2. dear mathav,

    I was in VIII standard that time, stydying in Pachaiyappa's middle school at Kancheepuram. Friends compelled me to take a role in the play for annual day celebrations. I was new to Kancheepuram then.

    As fate would have it, I was given the 'maid servant' role. I became 'Ranjitham' assisting the Queen character. The rehearsal was all ok.

    On the d-day, I had to take a saree, blouse and the coconut shells for the make up. I was staying at my Grandmother's house and fortunately, my niece had arrived at the house during the period. Otherwise, I would have had to go begging for the garments elsewhere and turned further shameful.

    I was determined that I would not carry the coconut shells, come what may!

    At school, the make-up man, an old fellow, veteran artist, glared at me with a ridiculing smile, "so, you would not wear 'them', is it..?" he asked. I did not reply anything.

    The make up was completed without the important formality completed as above. I played my part tremendously well. I do not remember to have come across any teasing from my friends. May be, it was a better atmosphere.

    The play was over, I did not wash off my make up. As usual, I walked back towards my home, less than a kilo metre. It was dark night, touching 9 pm. Kancheepuram, those days, went to bed at sharp 8 30 pm.
    Way back, somebody shouted at me near a bunk shop.
    some two or three elders were taking milk there. The called me, calmly enquired about my make up and as a true boy, I narrated everything, including some dialogues from the play.
    they happily laughed off their pains. someone amongst them offerred me milk. I didn't feel like taking it. But they forced me affectionately to accept a couple of banana fruits. they told me I must keep it up and keep acting.
    I reached home dreams-packed. I may reach the big screen one day, I was telling myself.
    I had lot of stories to tell my grandma.
    I just checked for the saree, blouse and other articles to return to my niece.
    As I reached home, my grandmother was waiting on the road in front of our house. there were tears in here eyes. after all, she had been bringing me up ever since I lost my mother when I was just 2 years old. she would be upset everytime I return late.
    she did not wait for hearing my stories.
    what is there in your face, she screamed.
    I told, "patti, it is all make up. I acted in the play, you know"
    She just quietly took me inside, poured a palmful of coconut oil in her hand and quickly cleaned my face and took me to the kitchen to make me eat the food waiting for me.
    All she had to was, ensure my food, ensure my sleep and never ever feel the loss of my mother.
    drama, poetry, games, fights,...nothing affected her.
    because she was a mother to me, not patti!

    2.I enjoyed reading your experience, every word, every bit of it, every syllable! greetings to to you, mathav.


    S V Venugopalan

    பதிலளிநீக்கு
  3. அன்பின் மாதவராஜ்

    அருமையான கொசுவத்தி சுத்தி இருக்கீங்க - பள்ளி நாட்களை நினைத்து அசை போடுவது ஆனந்தத்தைத் தரும் செயல். நாடகத்தில் பெண் வேடமிடுவது என்பது எல்லோருக்கும் கிடைக்காது. நல்வாழ்த்துகள்.

    இரு பகுதிகளுமே சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. ஆதவா!

    //நாடகம் நடக்கறப்ப நடந்ததை சட்டுனு சொன்னமாதிரி இருந்தது! //

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  5. வேணுகோபால்!

    உங்கள் அனுபவத்தை ரசித்து படித்தேன்.
    உங்கள் தமிழ் எனக்குத் தெரியும்.இணைய நண்பர்களும் ரசிப்பார்களே என் விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சீனா!

    வாங்க. ரொம்ப நாளாச்சு.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தனியே ஒரு இடத்தில் உட்கார்ந்த போது நிம்மதியாய் இருந்தது. கூடவே எதையோ இழந்தது போலவும் இருந்தது. அழகிய உணர்வு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!