ஓ.டி.டியில் வருவதற்கு முந்தைய நாள் ‘பத்தா’வை தியேட்டரில் பார்த்தோம். மூன்று நாட்களாகின்றன. தன்னை மறந்து வேறு காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், எதொவொரு சந்தர்ப்பத்தில் படத்தின் காட்சிகள், உரையாடல்கள் நினைவுக்கு வந்து, அதைத் தொடர்ந்த சிந்தனைகள் எழும்பி, நம்மை ‘பத்தாவுக்குள்’ இழுத்துச் செல்கின்றன.
ஊர், குடும்பம் எல்லாம் பார்த்து மிரளும் ஒரு ரவுடியைப் பார்த்து அந்த ஊரின் சிறுவன் ஒருவனும் பயப்படுகிறான். அந்த பயம் அந்த ரவுடியையும், அந்த சிறுவனையும் என்ன செய்கிறது என்பதுதான் கதை. மனித மனங்களின் விசித்திரங்களில் லயித்து, ரசித்து, நெகிழ்ந்து தியேட்டரை விட்டு வெளியே வருகிறோம்.
ஊரின் சில மனிதர்கள், ரவுடியின் குடும்பம், சிறுவனின் குடும்பம், சில தெருக்கள், பள்ளிக்கூடம் அவ்வளவுதான் படத்தின் காமிரா சஞ்சரிக்கும் பிரதேசங்கள். பெரும்பகுதி அந்த பள்ளியின் பூட்டப்பட்ட கழிப்பறைக்குள் நடக்கிறது. தியேட்டரே வெடித்து சிரிக்கிறது. அவ்வப்போது சிறு பதற்றம் தொற்ற உன்னிப்பாய் கவனிக்கிறது. முக பாவங்களை, உரையாடல்களை ரசிக்கிறது. உருகும் மனித மனங்களைப் பார்த்து பூத்து சிரிக்கிறது. தொய்வே இல்லாமல் காட்சிகள் விறுவிறுப்பாய் நகர்கின்றன.
நம் கண்முனே சாதாரணமாய் நிகழும் கதை முடிந்த பிறகு, சொல்லாத நிறைய கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. நம்மைப் பிடித்து நிறுத்தி யோசிக்க வைக்கிறது. உலகம் போற்றும் ரஷ்ய எழுத்தாளர் செகாவ் கதையைப் போல அடர்த்தி கொண்டிருக்கிறது. அதுதான் இந்தக் கதையின், சினிமாவின் அற்புதமே.
பூட்டப்பட்ட பள்ளியின் கழிப்பறை ரவுடிக்கும், சிறுவனுக்கும் போதி மரமாகிறது. அந்த இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதோடு, தங்களையும் புரிந்து கொள்கிறார்கள். நாமும் மனிதர்களைப் புரிந்து கொள்ள முயல்கிறோம். சூழல்கள் காலமாகி மனிதர்களுக்குள் எப்படி உறைந்து இருக்கின்றன, மனிதர்களை அவை எப்படி ஆக்குகின்றன, அதை அறியாமல் சமூகம் அவர்களை எப்படி அணுகுகிறது என்பதெல்லாம் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ‘செல்லமே, மகளே’ பாடல் எவ்வ்வளவு அழகாய் நமக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
ரவுடியாக வரும் விஜய் சேதுபதியும், சிறுவனாக வரும் மாஸ்டர் பிரித்விராஜும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவரையும் கொண்டாடலாம். இந்தப் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரனால் மனித மனங்களின் நுட்பங்களைப் பார்க்க முடிகிறது, சொல்ல முடிகிறது. அதனால்தான் பார்வையாளர்களை எளிதாக தன்னோடு இணைத்துக் கொள்ள முடிகிறது. பத்தாவில் ‘நடுவுலக் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தில் இருந்த நகைச்சுவையும் இருக்கிறது. அதைத் தாண்டி ஒரு படி மேலே சென்று மனித மனங்களை விசாரிக்கவும் செய்கிறது.
தமிழில் அழகான, அர்த்தமுள்ள ஒரு சினிமா ‘பத்தா’.



நானும் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்த்து, ரசித்து கொண்டாடி விட்டு வந்தேன். படத்தில் கதை தான் ஹீரோ. கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்தியிருந்தனர். காலமும் சூழலும் மனிதனின் மனதில், இயல்பில் எவ்வளவு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இவ்வளவு ரசிக்கும்படியாக இயக்குநர் சொல்லியுள்ளார்.
ReplyDelete