அது பிளாகர்கள் காலம்.
2009ம் ஆண்டு. ‘தீராத பக்கங்கள்’ என்னும் இந்த வலைப்பக்கம் ஆரம்பித்து
எழுத ஆரம்பித்தேன். யாராவது வருகிறார்களா, படிக்கிறார்களா என்று எதுவும் தெரியாது.
‘யாராவது இங்க இருக்கீங்களா?’ என்று கத்தாததுதான் குறைச்சல்.
பிறகு நண்பர்கள் மூலம்தான் தெரிந்தது.
‘தமிழ்மணம்’, ‘தமிழிஸ்’ போன்ற திரட்டிகள் இருக்கின்றன. அதில்
‘தீராத பக்கங்கள்’ வலைப்பக்கத்தை இணைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பதிவுகளை அந்த திரட்டியில் காண
முடியும்’ என்றார்கள். இப்படியொரு பிளாக் இருப்பதும், நீங்கள் எழுதுவதும் அப்போதுதான் வெளியே
தெரியும் என்று வழி காட்டினார்கள்.
‘தமிழ்மணம்’ திரட்டியில் இணைத்துக் கொண்ட பின்னர்தான், வலையுலகம் என்றால் என்ன என்பதே புரிந்தது.
வலைப்பதிவர் மதுமிதா அவர்களை மட்டுமே ஆரம்பத்தில் அறிந்திருந்த நான், இரண்டு வருடத்திற்குள் ஒரு பெரும் வெளியில், நெருக்கமான எவ்வளவோ நண்பர்களோடு சஞ்சரித்துக்
கொண்டிருந்தேன். தினமும் எழுதுவது, வாசிப்பது என பொங்கிக் கிடந்த
நாட்கள் அவை. எல்லாம் அதிசயம் போல் இருந்தது. அதுவரை அறிந்திராத புதியவர்களின் எழுத்துக்கள்
வசியம் செய்தன.
ஸ்மார்ட் போன் அறிமுகமாகி, ஃபேஸ்புக் புழக்கத்திற்கு வந்த பிறகு
பிளாக் எனப்படும் வலைப்பதிவர்களின் காலம் களையிழந்து போக ஆரம்பித்தது. தொடர்ந்து வாட்ஸ்
அப், இன்ஸ்டா என படையெடுக்கவும் , பிளாகர்கள் குறைந்து போனார்கள். தமிழ்மணம்
போன்ற திரட்டிகள் நின்று போயின. பிளாகர்களின் காலம் மங்கிப் போனது. பழங்கதையாய் ஆனது.
இப்போதும் சிலர் விடாமல் எழுதிக்கொண்டுதான்
இருக்கின்றனர்.ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்றவை பெரும்பாலும், நுனிப்புல் மேய்வதைப் போல இருக்கின்றன
என்று, ஆழ்ந்த வாசிப்புக்கும், எழுத்துக்கும் வலைப்பக்கங்களே
சரியானவை என பிளாகில்அவர்கள் முனைப்போடு எழுதுகின்றனர். பெரும்பாலும் அவை டைரி எழுதுவது
போலாகி விடுகிறது. முன்னைப் போல் அவரவர்க்கென்ற வாசகர்கள் இருக்கிறார்களா, எழுதும் பதிவுகள் அவர்களுக்குச் சென்றடைகிறதா
என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
இவையெல்லாவற்றையும் கவனத்தில் கொண்டுதான், ‘தமிழ் திரட்டி’ ஆரம்பிக்கப்பட்டுகிறது. முன்னைப்போல்
பிளாகர் காலத்தை மீட்டு எடுத்து விடலாம் என்றெல்லாம் எந்தக் கனவுமில்லை, கருதவுமில்லை.
வலைப்பக்கங்களில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள்
மீதும், அந்த வலைப்பக்கங்கள் மீதும் ஒரு குறைந்தபட்ச
கவனத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் விருப்பம். யார் யாரெல்லாம் எழுதிக்கொண்டு
இருக்கிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதை ‘தமிழ் திரட்டி’ மூலம் சட்டென்று தெரிந்து கொள்ள முடியும்.
வாசிக்க முடியும். தொடர முடியும். அந்தப் பெரும் வெளியில் மனிதர்களின் நடமாட்டத்தைக்
கொஞ்சமாவது உறுதி செய்ய முடியும் எனத் தோன்றுகிறது. பார்ப்போம். வலைத்தளப் பதிவர்களையும், வாசகர்களையும் இணைக்கும் ஒரு முயற்சி.
தமிழ் திரட்டி என்பது ஒரு இணையச் செயலி
(web app). தீராத பக்கங்கள் வலைத்தளத்தில் இந்தத் திரட்டி இயங்கும்.
வலைப்பக்கம் மற்றும் வலைத்தளம் எழுதும் நண்பர்கள் இந்த தமிழ் திரட்டியில் தங்களை இணைத்துக்
கொள்ள முடியும்.
முதலில் தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க
வேண்டுகிறோம். தங்கள் வலைப்பக்கத்தின் பெயர் (Name of the blog / website) , வலைத்தள முகவரி (Blog / website address) விபரங்களை jothi.mraj@gmail என்னும் இமெயிலுக்கு தெரியப்படுத்துங்கள். இனி எழுதும் பதிவுகளுக்கு அவசியம் ‘தமிழ் திரட்டி’ என்னும் லேபிளையும் சேருங்கள். அவ்வளவுதான்.
தமிழ் திரட்டி தங்களின் பதிவுகளைக் காட்ட ஆரம்பிக்கும்.
இப்போதைக்கு 100 வலைப்பக்கங்களை தமிழ்
திரட்டியில் இணைத்துக் கொள்ள முடியும். ஒரு பதிவரின் சமீபத்திய ஒரு பதிவை மட்டுமே ‘தமிழ் திரட்டி’ காட்டும். அவர் புதிய பதிவு வெளியிட்டதும்
அதுவரை இருந்த அவரது பதிவு தெரியாது. புதிய பதிவு மட்டுமே தெரியும்.
‘தமிழ் திரட்டி’யின் லேபிள்கள் – இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், அனுபவம், புத்தகம், நிகழ்வுகள் என அமைக்கபட்டு இருக்கின்றன.
பதிவுகளுக்கு அந்த லேபிள்கள் இருந்தால், தமிழ் திரட்டியில் அந்த லேபிள்களிலும் பதிவுகளைக் காட்டும்.
திரட்டியின் வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக
மேம்படுத்தவும் உத்தேசித்திருக்கிறோம்.
உங்கள் யோசனைகளும், ஆதரவும் இந்தக் காரியத்தைத்
தொடர வைக்கும்.
அன்பும், நன்றியும்.


வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்