காலை வேளையில் முதல் அழைப்பாக "தோழர்..." என்ற அன்பு கலந்த அழைப்போடு சில நாட்கள் துவங்கும். மறுமுனையில் பிரியத்துடன் நலன் விசாரிக்கும் குரல் தோழர் மாதவராஜின் குரலாகத்தான் இருக்கும். ஏராளமான விஷயங்களை பரிமாறிக் கொண்டுள்ளோம். ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வங்கியின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள், தற்காலிக ஊழியர்களின் நிலை, இன்னும் இன்னும். பிரச்சனைகளை காலத்தே தீர்த்து வைக்காத நிர்வாகத்தின் மீது அவருக்கு தார்மீக கோபம் இருக்கும். ஆனால் எதுவுமே அவரின் இயல்பான இன்முக அணுகு முறையை பாதிக்காது.
தமிழகத்தில் உள்ள மாதவராஜின் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரின் எழுத்தும், பேச்சும் படிப்பவர்களை, கேட்பவர்களை அப்படியே கட்டிப் போட்டு விடும். இந்த வருடம் ஜனவரி மாதம் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அவர் "சிலந்தியையும், ஈயையும்" உதாரணமாக வைத்து தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை சித்தரித்த விதம் இன்னும் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. சாலைப் பணியாளர்களைப் பற்றிய அவரின் "இரவுகள் உடையும்" குறும்படம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் வலியை உலகுக்கு உணர்த்தியது.
முன்னாள் பாண்டியன் கிராம வங்கியின், இந்நாள் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியர்களை
அணி திரட்டுவதில், சங்கமயப்படுத்துவதில், உரிமைகளுக்காக போராடக் கற்றுக் கொடுப்பதில், புரிய கடமையை வைப்பதில் ஒரு தன்னிகரற்ற
பாத்திரத்தை அவர் வகித்துள்ளார்.
சங்கத்தை ஜனநாயகத் தன்மையோடு நடத்துவதில், சளைக்காமல் ஊழியர்களை சந்திப்பதில், தொடர்ந்து தொழிலாளர் களிடமிருந்து கற்றுக் கொள்வதில், கற்றுக்கொடுப்பதில் பங்குமிகச் சிறப்பானது. அவருடைய பங்கு மிகச் சிறப்பானது.
பாண்டியன் கிராம வங்கியின் பணியில் சேர்ந்த இளம் வயதிலேயே தோழர் மாதவராஜிக்கு
தொழிற்சங்கத்தின் பால் ஈர்ப்பு உண்டாயிற்று. பிறருக்கு உதவும் குணம், தன்னலமற்ற உழைப்பு, அநியாயத்தை தட்டிக் கேட்கும் மாண்பு
ஆகியவையெல்லாம் அவரிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்ததால் தொழிற்சங்கம், கூட்டுழைப்பு இவையெல்லாம் அவரின் இயற்கையான தேர்வாக அமைந்தன.
ஆரம்ப வருடங்களில் வங்கிப்பணி நேரம் போக மற்ற நேரமெல்லாம், பல நாட்கள் இரவு முழுவதும் கூட, அயராது தொழிற்சங்கப்பணி ஆற்றியவர் அவர். கிராம வங்கி ஊழியர்களை வணிக வங்கி ஊழியர்களோடு ஒப்பிட்டு, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் போக்கு, அதற்கு பிரதான காரணமாக இருந்த “கிராம வங்கி ஊழியர்களின் குறைந்த சம்பளம், மோசமான பணி நிலைமைகள்" ஆகியவற்றை எதிர்த்து நடந்த அகில இந்திய போராட்ட இயக்கத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் மாதவராஜ்.
எடுத்த விஷயத்தை முடிப்பதில், தொய்வில்லாமல் அதை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு திகழ்பவர். அவரின் போராட்ட குணம் அவரை இடதுசாரிகளின் கவர்ந்திருந்தது. பக்கம் மார்க்சிய சிந்தனை, செயல்பாடு என்பது அவரின் உணர்வில் ஒன்றிப் போனது. அவரின் இடைவிடாத வாசிப்பு உயிர்ப்புடனும், அவரை எப்போதும் உற்சாகத்துடனும் வைத்திருக்கும். பல பிரச்சனைகளுக்கு அவரின் சித்தாந்தரீதியான அணுகு முறை வித்தியாசமாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியும் அமையும்.
அவரால் இயற்கையாகவே இளைஞர்களுடன் மிக சுலபமாக சங்கமிக்க முடிந்தது. இளைஞர்களை குறிப்பாக இளம் பெண் தோழர்களை தொழிற்சங்க இயக்கத்தின் பால் ஈர்த்ததில் அவருக்கு தனிப்பட்ட பங்குண்டு. சக தோழர்களின் குடும்ப உறுப்பினர்களுடனும் அவருக்கு நெருங்கிய பழக்கமிருந்ததால் பலரும் அவரைத் தம் குடும்ப உறுப்பினராகவே பார்ப்பார்கள். பல முக்கிய குடும்ப பிரச்சனைகளுக்குக்கூட தோழர் மாதவராஜின் ஆலோசனையைப் பெற்றே முடிவெடுப்பார்கள். இளம் தோழர்களுக்கு சங்கமாக பல பயிற்சி வகுப்புகள் எடுத்து தலைமைக்கு தயார் செய்ததில் அவரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.
மாதவராஜ் எப்போதுமே குடும்பத்தை நேசிப்பவர். அம்முவை காதலித்த கதையை சுவாரசியமாக பல முறை சொல்லி மகிழ்வார். அவரின் மனைவி அம்மு என்கிற காதம்பரியும் சங்கத்தின் எல்லா பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். மாதவராஜின் பல படைப்புகளுக்கு முதல் விமர்சகர் அவரின் மனைவி தான். தோழர் அஸ்வத் - குளோரி திருமணத்தை ஒட்டி எங்கள் இரு குடும்பமும் சேர்ந்து சில இடங்களுக்கு பயணிக்கும் போது தோழர் காதம்பரி அவர்களின் இனிமையாக பழகும் தன்மை இயல்பாக வெளிப்பட்டது. அவரின் உற்சாகமே மாதவராஜின் பொதுப்பணிக்கு அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு கிராம வங்கியின் தலைமையகம் சேலத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து தோழர் மாதவராஜ் விருதுநகரிலிருந்து குடும்பத்தை விட்டு சேலத்திற்கு மாற்றல் கேட்டு வந்து விட்டார். குடும்பத்தின் முழுபொறுப்பையும் அவரின் மனைவி மனமுவந்து ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே இது சாத்தியமானது.
பரந்துபட்ட ஒற்றுமையை கட்டுவதில் முன்னணிப்பாத்திரம் வகிப்பவர் தோழர் மாதவராஜ். 25 ஆண்டுகளாக பிளவு பட்டிருந்த ஊழியர்கள் AIRRBEA மற்றும் BEFI-யின் குடையின் கீழ் ஒன்றிணைய வித்திட்டதில் அவருக்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஒரு பிரச்சனை எழுந்தது. "எம்ப்ளாயீஸ்யூனியன்" என்ற பெயருக்கு பதில் அந்த சங்கத்தின் பெயரான "ஒர்க்கர் ஸ்யூனியன்" என்ற பெயரை ஏற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதை ஒட்டி பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டன. ஆனால் தோழர் மாதவராஜ் புரட்சிகரமான அமைப்பின் கீழ் தோழர்கள் ஒன்றிணைய நாம் நமது பெயரை விட்டுக் கொடுத்து "ஒர்க்கர்ஸ்யூனியன்" என்ற பெயரை ஏற்பது தான் சரி என்று தெளிவாக கருத்துரைத்தார். அதுவே செயற்குழுவின் ஆகப்பெரும்பான்மையான கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ஒற்றுமைதான் பின்னர் அதிகாரிகள் ஒற்றுமைக்கும், முகவர்களை, தற்காலிக ஊழியர்களை, நகை மதிப்பீட்டாளர்களை, ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைப்பதற்கும் மிகவும் உதவிகரமாக அமைந்தது. இன்று ஆகப்பெரும்பாலான ஊழியர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள்வதற்கு அந்த முடிவே அடித்தளமாக அமைந்தது.
35 ஆண்டுகளுக்கும் மேல் பழுத்த தொழிற்சங்க அனுபவம் உள்ள தோழர் மாதவராஜ் அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகும் அவரின் வழிகாட்டுதல் தொடரும். தொழிற்சங்க பளுவின் காரணமாக சற்று ஓய்வெடுத்து இருந்த எழுத்துப்பணியும், குறும்படப்பணியும் மேலும் சிறக்கும். அவர் தொடர்ந்து சமூகப்பணியில் ஈடுபட எல்லோரையும் போல் நானும் விழைகிறேன்.
அன்புத் தோழருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்!
( அருமைத் தோழரும் BEFI-யின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் சி.பி,கிருஷ்ணன் அவர்கள் 2021-ல் நான் பணி ஓய்வு பெற்ற போது வெளியிட்ட மலரில் வாழ்த்தி எழுதிய பதிவு இது. வங்கித்துறையில் அதிகார வர்க்கத்தின் ஒவ்வொரு அசைவையும் நுட்பமாக அறிந்து அம்பலப்படுத்தும் செயற்பாட்டாளரான அவரின் இந்த வார்த்தைகள் மதிப்பு மிக்கவை.)


அருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete