குருவிச் சத்தம்

 

கார் ஷெட்டிற்கு மேலே தாழ்வான மரக்கிளை ஒன்றில் அந்தக் குருவியை வீட்டு மனிதர்கள் அடிக்கடி பார்த்தார்கள்.  

சின்னச் சின்னத் துரும்புகளைக் கொண்டு வருவதும், விர்ரென பறப்பதுமாய் இருந்தது. குருவிச்சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.  

கிளையொன்றின் கக்கத்தை தோதான இடமாகப் பார்த்து கூட்டை கட்டிய பிறகு அதன் வருகையும், இருப்பும், பறத்தலும் அவ்வளவாய் சத்தமில்லாமல் இருந்தது. விட்டு விட்டு கேட்டது.  

சில நாட்கள் கழித்து வீட்டு மனிதர்களின் நடமாட்டங்களைப் பார்த்து வால் துடிக்க அந்தக் கிளையில் அங்குமிங்கும் சடசடத்து குருவி கத்த ஆரம்பித்தது.  

குருவிகளின் சத்தம் வீட்டின் பாடலாகியது.  

ஒருநாள் காலையில் வீட்டில் இருந்து மனிதன் வெளியே வரவும் கார் ஷெட் மேலிருந்து சின்னதாய் குருவிக்குஞ்சு அருகே விழுந்தது. காம்பவுண்டுச் சுவரிலிருந்து தாய்க்குருவி மனிதனைப் பார்த்து துடித்து சத்தமிட்டது.  

பூப்போல எடுத்து கார் ஷெட்டின் மீது விட்டு விடலாம் என சின்னச் சிறகை அசைத்துக் கொண்டிருந்த அந்த உயிரை நோக்கி மனிதன் குனிந்தான்.  

காருக்கு அடியிலிருந்து சாம்பல் நிறப் பூனை ஒன்று சட்டென பாய்ந்து அந்த குருவிக் குஞ்சை கவ்வி, வெளி கேட்டைத் தாவித் தாண்டி கண் இமைப்பதற்குள் மறைந்தது.  

செய்வதறியாமல் திகைத்து நின்றான் மனிதன். எடுக்கப் போன கைகள் நடுங்கின.  

குருவி அங்குமிங்கும் மாய்ந்து மாய்ந்து கதறிக் கொண்டிருந்தது.  

பெரும் துயரத்தின் ஓலமாகிப் போனது வீடு. 

Comments

0 Comments

You can comment here!