2011 டிசம்பரிலிருந்து ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதோ 15 வருடங்கள் ஆகப் போகிறது.
ஃபேஸ்புக்கில் என்ன எழுதி இருக்கிறோம் என்று இப்போது திரும்பி
பார்த்தால், அந்தந்த நேரத்து பகிர்வுகள், வினைகள் என எவ்வளவோ கொட்டிக் கிடக்கின்றன. பொறுமையாய் வாசித்தால் நம்மை நாமே
கோபம் கொள்ளவும், ‘அட கிறுக்கா’
என சிரிக்கவும், ‘ஆஹா!’ என ரசிக்கவும், பத்திரப்படுத்தவும் அங்கங்கு தென்படத்தான்
செய்கின்றன.
அவ்வளவு மோசமில்லை என்று சமதானமும் கொள்ளத் தோன்றியது. இப்போதும் கவனிப்பதற்கு, ரசிப்பதற்கு, தொகுப்பதற்கு தகுதியானவையாய் கொஞ்சம் தேறத்தான் செய்கிறது.
தனியாய் தொகுத்துப் பார்க்கவோ, சேகரித்துப் பார்க்கவோ ஃபேஸ்புக் பொருத்தமானதில்லை. அதற்கு வலைப்பக்கங்களே பொருத்தமானவையாய்த் தெரிகின்றன.
‘முகப் புத்தகத்தின் சில பக்கங்கள்’ எனும்
தொடராக இங்கு சேமித்துக் கொள்கிறேன்.
2011, டிசம்பர் 23
"பெரிய படங்கள் மட்டுமல்ல, சிறிய படங்களும் கவனிக்கப்பட வேண்டும். காட்டில் குயில் மட்டும் கூவினால் காடு நிசப்தமாகிவிடும். எல்லாச் சத்தங்களும் நிறைந்திருந்தால்தான் காடாக இருக்கும்” இப்படி கருத்தினை உதிர்த்திருப்பவர் வைரமுத்து. பெரிய படங்கள் என்றால் குயிலாம், சிறிய படங்கள் என்றால் எதோச் சத்தங்களாம், சினிமா என்றால் காடாம். எப்படி பார்க்கிறார், என்ன பேசுகிறார் இந்தக் கவிப்பேரரசு.
ஓ, பேரரசு அல்லவா.
2012, நவம்பர் 22
எம்.எல்.ஏ பாலபாரதி அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு வரவிருக்கிறது. அச்சில் வருமுன்பே அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘சில பொய்களும் சில உண்மைகளும்’ படித்தபோதும் இதே சந்தோஷம் வந்தது. பொதுவுடமை இயக்கத்தின் ஒரு முன்னணி ஊழியராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கவிதை எழுதுவதற்கும் பாலபாரதியால் நேரம் காண முடிந்திருக்கிறதே என்னும் சந்தோஷம்தான் இது. பல்வேறு பணிகளுக்கு இடையேயும் ‘கால் பதிக்க மனம் கூசுகிறது. தரையெங்கும் சிதறிக்கிடக்கிறது உன் சிரிப்பூ’ எனச் சொல்ல முடியும் கவிதை மனத்தை தக்க வைத்துகொள்ள முடிகிறதே இவரால் என்னும் சந்தோஷம்தான் இது. நம்மைச் சூழ்ந்திருக்கும் அல்லது நாம் எதிர்கொள்ளும் சமூக அவலங்களை தனக்குரியதாக பாவிக்க ஒரு உணர்வுபூர்வமான புரிதல் வேண்டும். கவிஞர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அது. அதைக் கண்டு கொண்ட சந்தோஷம்தான் இது.
கவிதைத்தொகுப்பு குறித்து விரிவாக எழுதுவேன். அதற்குமுன் எனக்குப் பிடித்த அவரது கவிதைகளில் ஒன்று இங்கே:
“அமராவதி ஆற்றை
கடந்து செல்கையில்
அம்மா கூறினாள்
இங்கே நடந்த
திருவிழா
கூட்டத்தில்தான்
நீ காணாமல்
போனாய்
மாரியின்
அருளால்
மீண்டும்
கிடைத்தாய்!
ஆளில்லாத
ஆற்றங்கரையை
கண்ணால் தேடிய
குழந்தை
கேட்டாள்
“என் பலூன் மட்டும்
கிடைக்கவே
இல்லையே அம்மா!”
பாலபாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு
பாலபாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு




You can comment here!