ஜந்தர் மந்தர் ஒரு இடம் மட்டுமல்ல, ஒரு தருணமும் கூட!


முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தின் மூலை முடுக்கிலிருந்து பயணம் செய்து டெல்லிக்கு வந்து தங்கள் பிரச்சினைகளை நாட்டுக்கும் அரசுக்கும் கேட்கும்படி சொல்வதற்கான இடமாக ஜந்தர் மந்தர் இருந்தது. அலை அலையாய் முழக்கங்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்த இடத்தில் இப்போது கனத்த அமைதி திணிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் பொழுதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இடத்தில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி தடுப்பு அரண்களும், காவல்துறையும், இராணுவமும் சூழ்ந்திருக்கிறது. 

 

இந்த நாட்டில் 13 கோடி மக்களின் ஒட்டைத் திருடிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதில் விலக வேண்டும் என்ற கோரிக்கையை காக்ரோச் ஜனதா கட்சியினரும், இடதுசாரி மாணவ அமைப்புகளும் முன்வைத்தனர். அக்டோபர் 10 முதல் டெல்லியில் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்தவும் அறைகூவல் விடுத்திருந்தனர். மோடியின் பாசிச பாஜக அரசு ஞானேஷ்குமாரைப் பாதுகாக்க தன் நாட்டின் இளைய தலைமுறையை மூர்க்கத்தனத்தோடு எதிர்கொண்டது.

 

ஜூலையில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தமேந்திரா பிரதானின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி, அவர் பதவி விலக வேண்டும் என இதே அமைப்புகள் ஜந்தர் மந்தரில் கூடி முழங்கின. தேசமெங்கும் இளைஞர்களின் எதிர்ப்பு எதிரொலிக்க, வெப்பம் தாளாமல் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டி வந்தது.  அப்படியொரு நிலைமை ஞானேஷ்குமாருக்கு வந்துவிடக் கூடாது என்று ஒன்றிய அரசு கடும் தீவீரத்தோடு இருக்கிறது.

 

மொத்தமிருந்த 97 கோடி வாக்காளர்களில், 13 கோடி பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என நினைக்கும்போதே பதக்கென்று இருக்கிறது. ரொம்பச் சரியாகச் சொல்லப் போனால் 15 பேருக்கு இரண்டு பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு நெருக்கமாக இந்தப் பிரச்சினையைப் பார்த்தால்தான் இது எதோ விபரீதம் என்பது புரிய வரும். நீக்கப்பட்டவர்கள் யார்? எப்படி நீக்கப்பட்டார்கள், என்று அங்கங்கு உண்மைகள் வெளியே வர வர, ஒரு பெரும் சதி அதில் அடங்கி இருப்பது வெளியே வந்தது. நீக்கப்பட்டவர்களின் கதி என்னாகும், ஏன் அந்த சதிச்செயல் திட்டமிடப்பட்டது என்பதுதான் இந்தியாவின் இளைய தலைமுறையை போராட்டத்தை நோக்கி தள்ளியிருக்கிறது.

 

அராஜகமும், அநியாயங்களும் நிறைந்த பாஜகவை இந்தியாவின் இளைய தலைமுறையும், துணிச்சலும், அறச்சீற்றமும் கொண்ட இளைய தலைமுறையின் ஒரு பகுதியினரை பாஜகவும் புரிந்து கொண்டு விட்டனர். அதனால்தான் பாசிச பாஜக அரசு அத்தனை  பதற்றமடைந்திருக்கிறது. ஜந்தர் மந்தரை சுற்றி வளைத்திருக்கிறது. வரலாற்றில் இது ஒரு இடம். இது ஒரு தருணம்.

 

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று நிகழ்ந்தது. அப்போது ஒன்றிய அரசாக இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. அதிகாரத்திலிருந்தவர்களுக்கு தங்கள் கையை விட்டு அதிகாரம் போய் விடுமோ என்ற அச்சமும் பதற்றமும் ஏற்பட்டது. எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டன. போராடியவர்கள் ஒடுக்கப்பட்டனர்.  பாசிச நடவடிக்கையாக எம்ர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள் தலைமையில் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. பாராளுமன்றத்துக்கு எதிரில் இருந்த போட் கிளப்பில் முழக்கங்கள் அதிர்ந்தன. நாடெங்கும் எதிரொலித்தது.

 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அதிகாரத்தை இழக்க நேரிட்டது. பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. காங்கிரஸ் திரும்ப ஆட்சிக்கு வந்த போதும், மக்களிடம் செல்வாக்கை இழந்து கொண்டே இருந்தது. எதிர்ப்புக்குரல்களை கேட்கப் பிடிக்காமல் 1993ல் போட் கிளப்பில் போராட்டம் நடத்த தடை விதித்து, கொஞ்சம் தள்ளி ஜந்தர் மந்தரில் மக்களின் போராட்டம் நடக்கும் இடமாக அறிவித்தது. செல்வாக்கு பெற்ற மாநிலக் கட்சிகளின் கூட்டணியால் திரும்பவும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. மாறி மாறி ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து கோண்டே இருந்தன.

 

இந்துத்துவா சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் கூட்டுக் களவாணித்தனத்திற்கு தயாராக இருந்த கார்ப்பரேட்களின் பின்னணியில் பா.ஜ.க 2014ல் ஆட்சிக்கு வந்தது. வந்த சில காலத்திலேயே அதன் இயல்பு வெளிப்பட்டது.  முஸ்லீம், பெண்கள், தலித் மக்கள், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் அப்பட்டமாக இறங்கியது. கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு வழி செய்தது. அம்பலப்பட ஆரம்பித்த பா.ஜ.கவை எதிர்த்த சரியான வியூகம் எதிர்க்கட்சிகளிடையே இல்லாததால், 2019ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.  வாக்கு இயந்திரங்களில் முறைகேடு என்பது முதன்முறையாக பேசப்பட்டது.

 

மீண்டும் மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான நடவடிக்கைகளைத்தான் செய்தது. கட்டுக்கடங்காத அளவில் தனியாருக்கும், கார்பப்ரேட்களுக்கும் நாட்டின் வளத்தை வாரி இறைத்தது. ஜனநாயக அமைப்புகளை, சுயேச்சையான அமைப்புகளை எல்லாம் நீர்த்துப் போகச் செய்து தன் சொல்லுக்கு ஆடும் பொம்மைகளாய் ஆக்கியது. மாநிலக் கட்சிகளை உடைத்து, சிதைத்து, உருட்டி, மிரட்டி, ஈடுபட்டு 2024 தேர்தலை சந்தித்தது. பெரும்பான்மை இழந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தது. பாஜகவின் தேர்தல் மோசடிகள் நிறைய வெளிவந்தன.

 

2029 பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் மக்களாக தங்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பது பாசிச பாஜகவுக்குத் தெரியும்.  அவ்வளவு மக்கள் விரோதக் காரியங்களை இந்த பனிரெண்டு ஆண்டுகளில் செய்து விட்டனர். திரும்பவும் தாங்களே ஆட்சிக்கு வரவேண்டும் என்னும் வெறி தலைக்கேறி விட்டது. ஆட்சி மாற்றம் மட்டும் நிகழ்ந்து விடவேக் கூடாது, அதற்கு எதையும் செய்யலாம் என்னும் மூர்க்கத்தனத்தோடு நிற்கிறது. அதற்காகச் செய்த ஆகப்பெரும் மோசடி வேலைதான் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை வைத்து  13 கோடி பேரின் வாக்கைத் திருடியது.

 

காக்ரோச் ஜனதா கட்சியும், இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகளும் ‘அந்த ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்’ என்று பெரும் திரளாய் முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்ததும், அடி மடியில் கை வைத்ததைப் போல பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸும்  துடிக்கின்றன. காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு வந்து மக்களுக்கு எதிராக பாஜக அரசு நிறுத்துகிறது. இந்துத்துவா குண்டர்களை மக்களுக்கு எதிராக  ஆர்.எஸ் நிறுத்துகிறது. கடந்த இரண்டு வார காலமாக போர்க்கோலம் பூண்டிருந்த டெல்லியை நாடே பார்த்தது. ஜந்தர் மந்தரில் கூடுவதற்கு தடை விதித்து, டெல்லியை விட்டுத் தள்ளி இடங்களை ஒதுக்குகிறது. மக்களின் விரோதிகள் இங்கு மக்களுக்காக போராடுகிறவர்களைப் பார்த்து தேச விரோதிகள் என முத்திரை குத்துகின்றனர்.

 

இதனால் எல்லாம் அதிகாரம் தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியாது. மக்களின் ஆவேசமும், கிளர்ச்சிகளும் காற்றைப் போன்றது. அடக்கி வைக்க வைக்க, அது உக்கிரமாகச் சீறும், வெடிக்கும். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்த மண்ணில் நிகழ்ந்த  வரலாறு மீண்டும் திரும்புகிறது.

 

இம்முறை இடதுசாரி இளைஞர்கள் தலைமை வகிக்கும் போராட்டங்கள் மக்களின் கவனம் பெற்று வருவதை அதிகார வர்க்கத்தால் சகித்துக் கொள்ளவே முடியாது.  போராட்டத்தை ஒடுக்குவதற்கான அத்தனை கேடு கெட்ட செயல்களிலும் அரசை ஈடுபடச் செய்யும். அதையும் மீறி போராட்டங்கள் வெடித்தால், தங்களுக்கு தோதான இன்னொருவரை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்கவும் துணியும்.

 

ஜந்தர் மந்தர் என்பது ஒரு இடம் மட்டுமல்ல, ஒரு தருணமும் கூட. 

Comments

0 Comments

You can comment here!

Header


LATEST