முகப்புத்தகத்தின் சில பக்கங்கள் - 2



2012, டிசம்பர் 2  

1932ல், பெரியாரின் அழைப்பை ஏற்று, தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் பெயரில் ஒட்டி இருக்கும் ஜாதியை விட்டு விலகியதாகச் சொல்கிறது புள்ளிவிபரங்கள். 80 வருடம் கழித்துப் பார்க்கும்போது அதன் தொடர்ச்சியாக அல்லது வளர்ச்சியாக எதை நம்மால் பார்க்க முடிகிறது?  

பொதுவான நியதிகள், ஜாதியம் குறித்த வரலாற்றுக் கண்ணோட்டங்கள், வர்க்கரீதியான பார்வைகள் என் எவ்வளவோ, எவ்வளவோ இங்கு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஔவையாரிலிருந்து, பாரதி வழியாக இன்று வரை அறிவுலகம் ஜாதியை எதிர்த்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும்?  

ஜாதியற்று நிறைய பேச முடிகிற நாம், ஜாதியற்று எப்படி வாழ்க்கை நடத்துகிறோம் என யோசிக்க ஆரம்பித்தால் இந்த சமூகம் சரியான திசையில் நகர ஆரம்பிக்கும் எனத் தோன்றுகிறது. நமது குடும்பங்களிலும், குடும்ப அமைப்புகளிலும் ஜாதியின் மூச்சுக்காற்றும், வேர்களும் இருக்கின்றன. நல்லது கெட்டது என்றால் உடன் வந்து, கூடவே இருக்கிறவர்கள் யார் எனப் பார்த்தால், ஜாதியின் மகிமை புரியும். நாம் தினமும் பார்த்துப் பழகும் நட்புகளும் தோழமைகளும் வரவேற்பு அறையைத் தாண்டி  நமது வீடுகளுக்குள் இயல்பாக எட்டிப் பார்க்க முடிவதில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சரியாக நேரத்துக்கு வந்து, மொய் எழுதி சாப்பிட்டுச் செல்ல மட்டுமே நட்புகளாலும், தோழமைகளாலும் முடிகிறது.  ஆனால் ஒருநாள் இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்து, திருமணம் முடிந்த பின்னரும் கூடவே இருக்க முடிவது உறவினர்களால் மட்டுமே. முன்பின் பார்த்தறியாத ஒருவரை,  “இவரைத் தெரிகிறதா, இன்னாரது பெரியம்மா இருக்காங்களே அவங்களோட மூத்த மருமகன்” எனச் சொல்லிய கணத்தில் அந்த அந்நியர் பல வருடம் பழக்கமுள்ளவனாக அன்னியோயம் ஆகிறார். வரவேற்பறை தாண்டி இயல்பாக புழங்குகிறார். 

சொல்லிக்கொண்டே போகலாம். வீடுகளில் உறவினர்களின், சொந்தங்களின் இடத்தை நட்புகளும் தோழமைகளும் பிடிக்கிற ஒரு காலத்தை நாம் கனவு காண வேண்டும். (அப்படியான அற்புதமான வாழ்வை சில இடதுசாரித் தோழர்களின் குடும்பத்தில் என்னால் காண முடிந்திருக்கிறது). ஜாதியின் ஆணி வேரை அசைக்கும் இடம் அதுவாகவேத் தோன்றுகிறது. 


2012, டிசம்பர் 3  

மிக நெருக்கமான நண்பர் ஒருவர். காதல் திருமணம் செய்து கொண்டவர். அவர் ஒரு ஜாதி. அவர் மனைவி வேறு ஜாதி. ஆரம்பத்தில் இரு குடும்பத்தாருக்கும் இருந்த பிரச்சினைகள் நாளடைவில் சரியாயிற்று. இருவரும் நல்ல உத்தியோகத்தில் இருந்ததால் உறவுகளும், சமூகத்தில் மரியாதையும் சாத்தியமாயிற்று. இன்று அவரது பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய முயற்சி செய்து வருகிறார். தாய் வழி, தந்தை வழி இரண்டு ஜாதியிலுமே மாப்பிள்ளை கொடுக்கத் தயங்குகிறார்கள். அவ்வப்போது அலுத்துக் கொள்வார். மிகுந்த எரிச்சலில் அவர் பேசிய ஒருநாள், “ஏன் அந்த இரண்டு ஜாதியில் மட்டுமே மாப்பிள்ளை பார்க்க வேண்டும். எந்த ஜாதியும் தடையில்லை என்று முயற்சி செய்யலாமே” என்றேன். சட்டென்று, “எனக்கு வந்த நெலமை என் மகளுக்கும் வேண்டுமா?’ என்று கேட்டார். “ஏன் அவநம்பிக்கை வேண்டும். அப்போது நிலைமைகள் இன்னும் மாறியிருக்கும்” விடாமல் பேசினேன். “எல்லாம் பேச நல்லாயிருக்கு. எதுவும் மாறாது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். “இதற்கு நான் சம்மதித்தாலும் என் மனைவி சம்மதிக்கவே மாட்டாள். நம்மோடு இந்த பிரச்சினை போதும் என்றுதான் சொல்வாள்” என்றார். ஒரு பொழுதில் தன்னை மீறியவர்களையும், தன் வசப்படுத்தி உள்ளுக்குள் இழுத்துக்கொள்ள முடிகிறது ஜாதியால்! 


2012, டிசம்பர் 3  

சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது நண்பருக்குத் தெரிந்த பிரமுகர் ஒருவர் அங்கு வந்தார். நண்பர் அவரிடம் ஷேமநலங்களை விசாரித்துக்கொண்டு இருந்தார். பேச்சின் நடுவே அந்த பிரமுகர், தானும் தனது குடும்பமும் அன்று மாலை லக்னோவுக்குச் செல்வதாகச் சொன்னார். நண்பர் என்னவென்று விசாரிக்கவும், “இரண்டாவது பையன் டெல்லில வேல பாக்குறான்ல. அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கான். மாறி மாறி இரண்டு குடும்பமும் பேசி கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு முடிவு பண்ணினோம். வர்ற வெள்ளிக்கிழமை லக்னோவுல வச்சி கல்யாணம். வெளில யாருக்கும் சொல்லல. இரண்டு பேரு குடும்பத்தார் மட்டும்தான்.” என்றார். நண்பர் தயங்கியபடியே “அவங்க.....” என்றார். “அவங்களா பிராமின்.” என்ற பிரமுகர் என்னையும் சேர்த்து பார்த்தபடியே , “ஜாதி என்ன பெரிசா வேண்டிக் கெடக்கு. நம்ம புள்ளைங்க நல்லாயிருந்தா போதும்.” என்றார் பொதுவான ஒரு புன்னகையுடன். 

கேட்பதற்கு ஒன்று வந்தது. எதற்கு முன்பின் தெரியாதவரோடு எடுத்தவுடன் விரோதமும், விபரீதமும் என அடக்கிக்கொண்டேன்.

Comments

0 Comments

You can comment here!

Header


LATEST