நேசம் மறக்காத நெஞ்சம்



சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நண்பர் ஒருவரை வழியனுப்பி விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது, தோழர் சுபொ அகத்தியலிங்கம் அவர்களை  தற்செயலாகப் பார்த்தேன், அவரை சில மாதங்களாகத்தான் அறிவேன். ஏதோ ரயிலைப் பிடிக்க வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்.  

எண்பதுகளின் மையப்பகுதி அது. தொழிற்சங்க ஆர்வத்தோடு சென்னை மாநகருக்கு மாற்றலில் வந்திருந்தாலும், இலக்கிய வேட்கை குறையாதிருந்தது. சு.பொ.அ அவர்கள் நடுவராக இருந்த பட்டிமன்றம் ஒன்றில் திருவொற்றியூரில் பேசச் சென்றிருந்தேன். அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளராக இருந்தார். அவரது உரை ஈர்த்திருந்தது.  

அன்று செண்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வெளியே போய்க்கொண்டிருந்தவனை தோழர் அகத்தியலிங்கம் நிறுத்தி விட்டார். 'கையில் இரண்டு பயணச்சீட்டுகள்

இருக்கின்றன, இன்னொரு தோழர் வருவதாக இருந்தது, ஆனால், அவர் வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது, நீங்கள் என்னோடு வாருங்களேன்' என்று பதில் சொல்ல இடம் தராமல் ரயிலை நோக்கி அழைத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார்.  

ரயில் புறப்பட்ட பிறகும் எந்த ஊர் போய்க்கொண்டிருக்கிறோம், என்ன வேலை என்று சொல்லவில்லை அவர். 'சும்மா போய்விட்டு வரலாம், வாங்க தோழர்' என்று சொல்லிவிட்டார். அது பெங்களூர் போய்க்கொண்டிருந்த ரயில், வழியில் ஆண்டர்சன்பேட்டையில் இறங்கிவிட்டோம். கோலார் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் உழைப்பாளிகள் குடியிருப்பில் மறுநாள் காலை இலக்கிய கூட்டம் ஏற்பாடு ஆகி இருந்தது. யார் யார் யாரெல்லாம் பேச இருக்கின்றனர் என்று கேட்க, 'நான் சும்மா அறிமுகம் செய்வேன், நீங்கள் தான் சிறப்புரை' என்று சிரித்தார் அகத்தியலிங்கம். 

மறுநாள், 'இன்றைய இலக்கிய போக்கு' என்ற தலைப்பில் பேசுவார் என்று என்னைத் தள்ளிவிட்டு விட்டார். என் எதிரே மிக எளிய மக்கள் அமர்ந்திருந்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை. நல்ல வெயில் படர்ந்திருந்த காலை 11 மணி நேரம் அது. திறந்த வெளியில் கூட்டம், அவரவர் வீடுகளில் இருந்தபடியும், எதிரே நாற்காலிகள் சிலருமாக. எந்தப் பெரிய மேடை அனுபவமும் அற்ற ஓர் இளந்தோழன் அவர்கள் எதிரே நிற்கிறேன், ஆனால், ஐம்பது நிமிடங்களுக்கு மேல் பேசியதில், ஒரே ஒரு சிறுகதையைப் பற்றி மட்டும் அப்படி விவரித்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  என்னை அந்த நாட்களில் தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஒரு சிறுகதை அது.  

குடி தண்ணீருக்குக் கதியற்ற மக்களது அவல வாழ்க்கையை ஒரு மண்குடம் வாசகர்களுக்கு சொல்லிச் செல்லும் கதை அது. தன்னை எடுத்துக் கொண்டு ஒயிலாக நடைபோட்டு ஆற்றுக்குச் சென்று நீர் மொண்டெடுத்துத் தன்னை அந்தப் பெண் ஏந்திக் கொள்ளும் இடுப்பு பற்றியெல்லாம் பேசிப் போகையில், இப்போதெல்லாம் தான் வீட்டிலேயே முடங்கி இருப்பதும், எங்கும் தண்ணீர் இல்லாமல் போய்விட்ட கொடுமையும், அதற்கு எதிராக போராட்டத்தில் அந்தப் பெண் தன்னையும் இடுப்பில் ஏந்தி வெளியே செல்வதையும் சொல்லும் கதை. 

ஒரு கட்டத்தில், தண்ணீர் கேட்டு, காலிப் பானைகளை உடைக்கும் அந்த நிகழ்வு நடக்க இருப்பதை அறிந்ததும், அந்த மண்குடம் மிகவும் பெருமிதம் கொள்வதை, வீட்டில் உள்ள உலோகக் குடங்களுக்குக் கிடைக்காத பாக்கியம்

தனக்கு வாய்த்திருப்பதாக அது செம்மாந்து போவதை, 'தாயே, ஏ ஆத்தா என்னை உன் ஆவேசக் கரங்களால் தலைக்கு மேல் தூக்கிப் போட்டு உடை, உங்களுக்கெல்லாம் தண்ணீர் கிடைக்க நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராகி விட்டேன், ஒரு வருத்தமும் இல்லை, எங்கோ யாரோ  கைபட்டு, கால் பட்டு உடைந்து போவதை விட, ஒரு போராட்டத்தில் என் உயிர் தியாகம் நடப்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்....'.என்று மண்குடம் பேசுவதாக நிறைவை நோக்கி நகரும் அந்தக் கதையை செம்மலர் இதழில் தான் வாசித்திருந்தேன்.  

அந்தக் கதையை எழுதியவரை நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. ஆனால், எப்படியோ யாரையோ கேட்டு விசாரித்து முகவரி வாங்கி அவருக்கு என் அன்பை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்த பரவசம் என் பேச்சில் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. ஜா.மாதவராஜ் என் மனத்தில் நிறைந்து விட்டிருக்கிறார் அன்றிலிருந்தே. . . . . .  

மனத்திற்குப் பிடித்த சிறுகதையை எழுதியவர் ஒரு வங்கி ஊழியர் என்றறிந்ததும் கிறுகிறுப்பு மேலும் கூடிவிட்டது. மாதவ், மாது, மாதவராஜ் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம், ஆனால், அவரிடமிருந்து பெயரை வைத்து அழைப்பு வராது, தோழா....தோழர்.. இது தான் அந்த அன்பின் பிழிவு.... அது இன்னும் அதிகபட்சம் கனியும் போது, அந்தத் தோழா என்பது அடுக்குத்தொடர் போல, தோழா...தோழா... தோழா என்று உருகிக் கரையும், மனத்திற்கு மிகவும் பிடித்த இனிப்பின் ருசி வாய்த்தது போலிருக்கும்.  

நேரில் பார்த்த முதல் சந்திப்பு அத்தனை துல்லியமாக நினைவில் இல்லை, ஆனால், அவரது உயரமும், குதித்துக் குதித்துப் பேசும் அவரது உடல் மொழியும், புன்னகை பூத்திருக்கும் முகத்தில் மின்னல் தெறிப்பான அந்தத் தேடல் மிகுந்த கண்களும், வித்தியாசமான அந்தக் குரலும் உள்ளத்தில் விசையைத் தட்டினால் காஸெட் போலச் சுழலத் தொடங்கிவிடும். அதென்னவோ, பாண்டியன் கிராம வங்கி என்று சொல்லி அறிமுகம் கிடைத்துக் கொண்டிருந்த எல்லோருமே சராசரிக்கு அதிகமான உயரம், நிர்வாகம் அப்படியொரு விதிமுறை வைத்துத்தான் ஊழியரைத் தேர்வு செய்திருக்குமோ என்று கூடத் தோன்றியதுண்டு. பா கிருஷ்ணகுமார், சோலை மாணிக்கம், மாதவராஜ். 'அக்கினி குஞ்சு' என்ற கையிட்டெழுதி சைக்ளோஸ்டைல் செய்து அனுப்பிய வைக்கும் பத்திரிகை வந்தால் அத்தனை

ஆர்ப்பாட்டமாக வாங்கி வாசிப்போம், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கத்தில்! மணி மணியான கையெழுத்தில் தீப்பொறி பறக்கும் அந்தத் தொழிற்சங்க இலக்கியம் ஒரு மகத்தான பரிச்சயமாக வாய்த்தது. பேசும்போது கூட தீப்பொறிகள், இலக்கியப் பொறிகள், கனிவான

தோழமைப் பொறிகள்! சீர்காழி கோவிந்தராஜன் பாடல் போல, நித்ய ஸ்ரீ சங்கீதம் அல்லது ஷங்கர் மகாதேவன் குரல் போல உரத்து ஒலிக்கும். ஒரு தொழிற்சங்க சுற்றறிக்கை, அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தோழர்களது உரை எப்போதும் உச்ச ஸ்தாயியில் இருப்பது சிறப்பு கவன ஈர்ப்பாக இருக்கும்.  

அந்த நாட்களில் வேதியியல் வகுப்பில் ஒரு கேள்வி கேட்கப்படுவது உண்டு. ஒரு வேதியியல் வினை ஏன் நிகழ்கிறது? அதற்கான பதில் மிகவும் நுட்பமான எளிமை மிக்கது. வினை புரியும் பொருள்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டாலே நிலைப்புத் தன்மை இழந்து விடுகின்றன! ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருந்தால், அவரவர் பத்திரமாக இருப்பர். அதாவது 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே', ஆனால், பார்த்தே தீரவேண்டிய நேரத்தில் வினை நிகழ்ந்தே விடுகிறது.  

அதிகாரி மட்டத்தில் நிர்வாகத் தன்மையைக் கொஞ்சம் மேலதிகம் வெளிப்படுத்தும் யாரும் அதற்கான பதிலைச் சொல்லாமல் அத்தனை இலகுவாக அன்றைய பொழுதைக் கடக்க முடியாது. ஒரு கவித்துவ நியாயம் என்று இலக்கியங்களில் சொல்லப்படுவது உண்டு. விளைவுகளை சந்திக்காமல் போக முடியாது. இதை கிராம வங்கி ஊழியர் சங்கம் இயக்கவியல் விதிமுறையாகவே ஆகிவிட்டிருந்தது.  

தொழிலாளி வர்க்கம் ஆதிக்க வர்க்கத்தையோ, அதிகார வர்க்கத்தையோ தண்டித்து விட முடியாது என்று நினைப்பவர்களுக்கு வேறொரு சாளரம் இருப்பது தெரியாது. நமது நிம்மதியைக் கெடுப்பவர்களை, தாங்களும் நிம்மதியற்றுத் திண்டாட வைக்க, அடிமட்ட வர்க்கத்தால் முடியும். ஆனால், அதற்கான விலையைத் தொழிலாளி வர்க்கம் கொடுக்கத்தான் வேண்டும். அந்த வலியும் வேதனையும் உள்ளத்தை மேலும் திண்மை பெற வைக்கும். உரமூட்டும். ஒற்றுமையை வளர்க்கும். அந்தோலன் ஜீவி என்று, மாண்பு மிகு பாரத பிரதமர் மோடி, அண்மையில் போராட்டக்காரர்களைப் பார்த்து நையாண்டி செய்தார். 'போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையா, இதை ஏற்காதவன் யாரும் மனிதனா' என்றே ஒரு பாடல், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடைகளில் அக்காலத்தில் பாடப்படுவதுண்டு. பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள், விழுப்புண் படாத நாள் எல்லாம் எடுத்து வருத்தத்தோடு எடுத்துப் பார்க்கும் உளப்பாங்கில்தான் தென்பட்டனர். ஒரு மெமோ கூடக் கண்ணில் பார்க்காத நாளில் தேநீர் அருந்துவது இழுக்கு என்று கூட அவர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.  

தொழில் ஆணையர் அலுவலகம், வழக்கறிஞர் அலுவலகம், நீதி மன்றம், வங்கி ஊழியர் சம்மேளன அலுவலகம் இவற்றில் எதில் அதிகம் கிராம வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளைப் பார்க்கலாம் என்று கேள்வி எழுப்பினால், எல்லாவற்றிலும் என்றுதான் விடைத்தாளில் டிக் அடிக்க வேண்டி இருக்கும். 'ஓடிக் கொண்டே இருக்கும் நதியின் நீர் தூய்மையாக இருக்கும்' என்ற வாக்கியத்தை 'முப்பது நாளில் இந்தி' எனும் பாலாஜி பப்ளிகேஷன்ஸ் புத்தகத்தில் எப்போதோ எழுபதுகளில் வாசித்த நினைவு! போராட்டம் ஓர் இயக்கத்தை இயக்கமாக வைத்திருக்கிறது. அந்த பரபரப்பை, துடிப்பை, வேகத்தை ஆசை தீர அள்ளியள்ளிப் பருகி இருக்கிறேன், மாதவ் கண்களில்!  

அவருடைய எழுத்து, கிறங்க வைக்கும் மெட்டில் ஒலிக்கும் ஓர் இசைப்பாடல் மாதிரி இருக்கும். சேகுவேரா, மார்க்ஸ் பற்றிய புத்தகங்கள், உடன் சென்று பயணம் செய்த உயிர்த்தோழன் எழுதிய எழுத்துகள் போல் சிறகடிக்கும். ஒரு காலம் வாய்த்தது, 2005 ஜூன் இதழ் முதல், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழ் அமைப்பாளராக இயங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்கு சில காலமுன்பே, தோழர் கே கிருஷ்ணன், இதழுக்கான அட்டைப்படம் தயாரித்து அனுப்பும் பொறுப்பை மாய்தவராஜ் செய்யக் கேட்டார். எண்ணங்களை அதற்கேற்ற வண்ணங்களில் குழைத்துத் தீட்டியதாய் வரத் தொடங்கியதும் பொலிவு கூடியது. அட்டைப்படம் என்றால் அதற்கான கருப்பொருள் சொன்னால் போதும், மாதவ் அதை அவருக்கே உரிய பார்வையில் நறுக் என்ற கவிதை வரிகளோடு அனுப்பி விடுவார். மும்பை மாநகரில் அங்கே இங்கே என்று திடீர் திடீர் என்று வெடிகுண்டுகள் வெடித்த கோர நிகழ்வுகள் குறித்த பின்னட்டைப் பக்கமும், அதில் பொறித்திருந்த அவரது கவிதையும் வாசகரை

உறைய வைத்தன. அதில் ஒன்று, வீட்டுக்குத் தான் வந்து கொண்டிருக்கிறேன் என்று கைப்பேசியில் மனைவியிடம் பேசிவிட்டு ரயிலேறியவர் பின் ஒருபோதும் வீடு திரும்பாத அதிர்ச்சி வரி!  

'மெயிலில் அனுப்பி விட்டேன், அட்டைப்படம்' என்பார் மாதவராஜ். வந்திருக்கும், ஆனால், இணைப்பே இருக்காது. இருந்தால் திறக்காது. அதிர்ச்சியோடு அழைத்தால், தோழா... தோழா என்று புன்னகையோடு சொல்லித் தருவார், அந்த முனையில், மாதவ். "உங்கள் கம்ப்யூட்டரில் கோரல் டிரா இருக்கா, பாருங்கள் தோழர், இன்ஸ்டால் பண்ணிட்டு, அப்புறம் மெயிலில் இருந்து டவுன்லோட் செய்யுங்கள், அழகா ஓப்பன் ஆகும் தோழா.." என்பார். கோரல் டிரா 12 என்பது ஒரு முறை அவர் 13 வெர்ஷனுக்கு மாற்றி அனுப்பியதும் மீண்டும் தரை தட்டியது என் கப்பல். திரும்பவும், தோழா..தோழா.. !கற்றுக் கொள்வேன் மறுபடியும் அவரிடமிருந்து. சிடியில் அதை நகல் எடுத்துக் கொண்டு திருவல்லிக்கேணி கடை ஒன்றில் நேரே பிரிண்ட் அவுட் எடுத்துப் பார்க்கும்போது, க்டைக்காரர் அப்படி ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் கொடுப்பார் ஒவ்வொரு முறையும். பிரிண்ட்டுக்கு நேரே  போய்விட முடியாது. அந்தத் தொழில் நுட்ப விஷயங்கள் ஒவ்வொன்றிலும் சந்தேகங்கள் எழும், அதிலிருந்து இன்னும் இன்னும் கற்றுக் கொண்டே இருந்தோம்.  

எழுத்து வேறு, இதழ் ஆசிரியர் பணி முற்றிலும் வேறு. நிறைய கற்றுக் கொள்ள இடமிருந்து அந்த நாட்களில், மாதவ் எத்தனை எத்தனை அருமையான விஷயங்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அட்டையில் மட்டுமல்ல, உள்ளே ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்ள, எத்தனை வண்ணங்களில் விரிந்தன அவரது படைப்புலகம். தனது தாயைப் பற்றிய அவரது எழுத்து, இரவு நேரத்தில் மனத்தை வருடும் ஒரு வயலின் இழைப்பு போல் ஒலிப்பது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் தனது மனைவிக்கு நன்றாகப் பாட வரும் என்பது அறியாதிருக்கும் பிரகாஷ்ராஜ் பாத்திரம் தனது பாடலை ரசிக்கும் மகனிடம் நெகிழ்ந்து போகும் தாய் பாத்திரம் எனக்கு மாதவ் எழுத்தையே நினைவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. தன்னோடு பணியாற்றிய எளிய தோழர்களைக் குறித்த அவரது சொற்சித்திரங்கள், கண்ணீரைப் பெருக்குபவை.  

அதன் அடுத்த கட்டம் தான், இருட்டிலிருந்து தொடர்! கிராம வங்கி ஊழியர் தொழிற்சங்க அனுபவத்தை ஓர் இலக்கிய பிரதியாக அவர் வடிக்கத் தொடங்கினார். வின்ஸி (இரா குமரகுருபரண்) அதற்கான அசத்தல் கோட்டுச் சித்திரங்கள் மாதா மாதம் வரைந்தளிப்பார். கெடு தேதி நெருங்க நெருங்க ஆவலோடு காத்திருப்போம், இந்த அத்தியாயம் என்ன சொல்லப் போகிறது என.... பத்திரிகையின் வாசிப்பு தளத்தை கனப்படுத்தியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.  

அவரது அடுத்த பரிமாணத்தை ஆவணப் படங்கள் வருவதற்குக் காத்திருந்தே அறிய முடிந்தது. 'இரவுகள் உடையும்' என்ற தலைப்பை அவர் எப்படி சென்றடைந்தார் என்பது தெரியாது. ஒரே கையெழுத்தில் எப்படி 1.76 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களை ஜெயலலிதா அரசு வேலை நீக்கம் செய்ததோ, அதைப்போலவே, மற்றுமொரு கொடுமை. பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள் தங்களது வேலையை சொடுக்கு போடும் நேரத்தில் அவரது ஒற்றைக் கையெழுத்தில் இழந்தனர். அந்தக் குடும்பங்கள் உடைந்து நொறுங்கின. வேலை இழந்தோர் சிலர் உயிர் துறக்க, கைம்பெண்கள் ஆன மனைவியர் வத்திக்குச்சி அடுக்கி, பீடி சுருட்டி, கண்ணீரை மறைத்துக் கொண்டனர். உயிர் தரித்திருந்தவர்களில் சிலர் பித்துப் பிடித்தவர்கள் போல் கிடந்தனர். அதில் ஒருவர், திக்கு திசை குறிப்பறியாது வேக வேக நடைபோட்டு சாலையின் நீளத்தை அளந்துகொண்டே இருந்தார். அவரது தாய் மனமுடைந்து கதறி அழுத காட்சி, கல்லைக் கரைத்துவிடும். தங்கள் தந்தைக்கு என்ன ஆயிற்று என்றறியாத குழந்தைகள் சிலரை நேர்க்கொண்டு பார்க்க முடியாது. எழுத்தாளர் காமராஜ் கேட்கும் கேள்வியும், அந்த மழலையர் சொல்லும் பதில்களும் இதயத்தை நொறுக்கும். 'சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின் வாதை ...' என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை மேற்கோள் காட்டித்தான், 'புத்தகம் பேசுது' இதழில் அந்த ஆவணப்படத்திற்கு ஓர் அறிமுகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அத்தனை பெரிய பணி முடித்த செருக்கு சிறிதும் இன்றி, 'தோழா...இந்தக் கவிதை வரி முன்பே தொடர்பு படுத்தத் தெரியாம போச்சே, படத்தின் தொடக்கத்திலேயே வச்சிருப்போம்' என்று தான் மாதவ் அழைத்துப் பேசினார். அவரை எப்போது பாராட்டினாலும் 'நிஜமாவா...நிஜமாவா தோழா... நல்லா வந்துருக்கா...நீங்க எப்பவும் ரொம்ப பாராட்டுவிங்க… நிஜமா நல்லா இருந்துச்சா தோழா...' என்று தான் அவரது மறுமொழி இருக்கும். அந்தப் பணிவும், தன்னடக்கமும் அவரது உயரத்தை மேலும் வளர்த்திக் காட்டும் எனக்கு.  

பாப்பாப்பட்டி கீரிப்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் தலித் வகுப்பினர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனாலேயே தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. தேர்தல்கள் ஒரு சமயம் அறிவிக்கப்பட்டு, கீரிப்பட்டியில் எதிர்ப்பு இன்றி பிரதிநிதி தேர்வு செய்யப்பட்டு ஊருக்குள் செல்கையில் அவர் எப்படி இழிவு படுத்தப்பட்டார் என்பதை அருகிருந்து பதிவு செய்திருந்த 'இது வேறு இதிகாசம்' ஆவணப் படம் மிக முக்கியமானது. சாதீயத்தை பாதுகாக்கும் பெரும் பொறுப்பை சமூகம் பெண்கள் தலையில் சுமத்தி இருந்ததை மாதவ் மிக நுட்பமாகப் பதிவு செய்திருந்தார். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறிய சாதி இந்துப் பெண்களில் சிலர், இந்த ஊரில் இன்னுஞ்சாமி எப்படி இருக்கு, அட சாமி, ஒங்கோயில்ல இடி விழ ... இந்த ஊர் நாசமாய்ப் போக என்று மண்ணை வாரி வாரித் தூற்றினர். கேட்கக் கூசும் கொச்சை சொற்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் மீது  நெருப்பை அள்ளிக் கொட்டியது அவர்கள் அல்ல, மரபணுக்களில் நூற்றாண்டுகளாக அழுத்தமாகப் பொதிந்திருக்கும் வன்மமிக்க போதனைகள் தான்.  

'எந்த சமூக மக்களும் புண்படக் கூடாது, அதே நேரம் நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஒரு சமூகக் கடமையாகவே படத்தொகுப்பில் கவனம் செலுத்தினோம்' என்று பின்னர் தமது வலைப்பூவில் எழுதி இருந்தார் மாதவ். எல்லைக்கோடுகளுக்குள் ஒரு சிக்கலான சமூக பிரச்சனையின் மீதான படைப்பை அவர் வழங்கி இருந்தது அருமையான முயற்சி.  

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதுநகர் மாநாட்டை ஒட்டி, புத்தகம் பேசுது இதழுக்காக, மாதவராஜ் அவர்களை நேர்காணல் செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது காலத்தின் கொடை என்றே சொல்ல வேண்டும். 2011 ஆகஸ்ட் மாதம் அதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றது ஒரு வித்தியாசமான அனுபவம். அவருடன் பேசியதை விடவும், அவருடைய தந்தையோடு கூடுதலாக உரையாடி இருப்பேன். மாதவ் காதல் வாழ்க்கை இணையர், பள்ளி ஆசிரியை, காலை டிபன் பரிமாறிவிட்டு, பகல் உணவும் ஏற்பாடு செய்துவிட்டுப் பள்ளிக் கூடத்திற்குப் புறப்பட்டுப் போனார். நண்பகல் திரும்ப உணவு நேரத்தில் வந்து சாப்பாடு பரிமாறிவிட்டுத்தான் போனார். அதற்கு முன்பும், பின்பும் மாதவ் தமது தொழிற்சங்கப் பணிகளுக்காக வெளியே போய்விட்டுத் தாமதமாகத் தான் திரும்ப முடிந்தது.  

வாசல் பக்கம் இருந்த அடர்த்தியான மரங்களின் நிழலில் போய் அமர்ந்தோம். அவர் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தவர், என் மீதான அன்பின் நிமித்தம் அதை முழுவதும் புகைக்காமல் அணைத்துக் கீழே போட்டு நசுக்கினார். மேற்கொண்டும் சில சிகரெட்களுக்கு அதே கதி நேர்ந்தது, அன்றைய பொழுதின் வெவ்வேறு முன்னுரிமைகளுக்கு இடையே இந்த நேர்காணலில் தாம் பொருந்தாதது மாதிரி அவருக்குப் பட்டிருக்க வேண்டும்.  

அன்று என்னை ரயிலேற்றி அனுப்ப வந்திருந்த போது, அவருக்கு முழு சிகரெட்டும் தேவைப்பட்டது. பின்னர், குரல் தழுதழுக்க, "உங்களுக்கு நான் நியாயமே செய்யல தோழா.... ஏதும் கெடச்சுதா உங்களுக்கு எழுத.... " என்று மன்னிப்பு கோரும் முகத்தோடு மாதவ் நேர்ப்பட நின்றது அவரது அளவு கடந்த

பணிவின் பிரதிபலிப்பு. "நீங்கள் பேசினீர்களா இல்லையா என்பதை இதழ் வந்ததும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு நான் விடைபெற்றுக் கொண்டேன்.  

செப்டம்பர் மாத புத்தகம் பேசுது இதழ் வந்தபோது அவர் என்னை அழைக்குமுன் அவருக்கு நிறைய அழைப்புகள் வந்திருந்தன. "தோழா... தோழா... இவ்வளவா நான் அன்னிக்குச் சொன்னேன்... இத்தனை விஷயங்களா விவாதித்தோம்" என்று கேட்டார். அளவு கருதி, முக்கால் பங்கு தான் போட்டிருக்கிறோம், முழு நேர்காணல் என்றாவது புத்தகமாக வரும்போது வெளியிடலாம் என்றேன்.  

தன்னை வெளிப்படுத்துவதை விடவும், பல்வேறு படைப்பாளிகள் பற்றியே அவரது குரல் அந்த நேர்காணலில் நிறைந்திருப்பதை வாசிக்க முடியும். தொழிற்சங்க ஊழியருக்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்களுக்கு, அந்த நேர்காணலில் இந்த பதில் இருக்கிறது: "ஒரு சிறந்த இலக்கியவாதி நல்ல போராட்டக்காரராகவும் இருக்கிறார். ரசனை மிக்கவர்கள் உறவுகளைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். புத்தகங்களைக் கொண்டாடுவோர் சிறந்த தொழிற்சங்கவாதியாக இயங்க முடிகிறது" என அந்த நேர்காணல் வாசித்துவிட்டு, எழுத்தாளர் வண்ணதாசன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.  

அவரது வலைப்பூவில் தொடங்கியதிலிருந்து அவர் பதிவு செய்து வந்திருந்தது அப்போதே 795 இடுகைகள்! அவற்றுக்கு வந்திருந்த சுவாரசியமான பின்னூட்டங்கள் தொகுத்தாலேயே புதிய இலக்கியமாக இருக்கும். மறைந்த தோழர் காஸ்யபன் அத்தனை நேசிப்பார் மாதவ் எழுத்துகளை. ஒரு சமத்துவ சங்கப் பலகையாகவே வைத்திருந்தார், அந்தத் தீராத பக்கங்கள் வலைப்பூவை. தாம் இன்புறுவது பிறர் இன்புறக் கண்டு காமுறும் மாதவ் ரசனையில், எனது கட்டுரைகள், கவிதைகள் பலவும் தாமாகவே ஆசையோடு அறிமுகம் செய்து பதிவிட்டு விடுவார். தர்ப்பண சுந்தரி எனும் என் சிறுகதைக்கு அந்தத் தளத்தில் இன்றும் காணக்கிடைக்கும் பின்னூட்டங்கள் அவரால் கிடைத்த அருமையான அனுபவம்.  

வலைப்பூ கவிதைகளை முதலில் தொகுப்பாகக் கொணர்ந்தவர் அவராகத் தான் இருக்கவேண்டும். முக நூலுக்கு முந்தைய உலகம் அது. 'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது' என்றார் வள்ளுவர். அடுத்தடுத்த தலைமுறை ஊழியர்கள் திறன் குறித்தும், தேடல் பற்றியும், ஆர்வம் தொடர்பாகவும் நிறையவே நம்பிக்கை கொண்டிருக்கும் அரிய தொழிற்சங்கத் தலைவர்களுள் ஒருவர் மாதவ். அடுத்தவர் படைப்புகளைக் கொண்டாடி ரசிக்கும் இலக்கியவாதியான அவருக்கு, தொழிற்சங்கத்தில் சிறப்பாக இயங்கும் வேறு யாரையும் மதிக்கவும், கொண்டாடவும் எளிதில் சாத்தியமாயிற்று. தம்மை அவர் அதனால் இழந்து விடவில்லை.  

அவரோடு நட்பு முரண் நிறைய உண்டு. அவ்வப்பொழுது பேசித் தீர்த்தவையும், விடுங்க தோழா என்ற நிறைவுச் சொல்லில் கடந்து போனவையும் உண்டு இந்த மூன்று பத்தாண்டுகளில்! நேயம் மறக்காத கண்கள், அன்பை மறுக்காத மொழி அவருடையவை. காதல் கொண்டாடி அவர். தான் இணைந்து இயங்கிய பொழுதுகளை, எதிர்ப்பட்ட மனிதர்களை, இலக்கிய இதயங்களைக் காதலித்துக் கொண்டிருப்பவர். வங்கிப்பணி நிறைவு, அவருக்கான வாசல்கள் பலவும் திறந்து வைத்திருக்கும். இடது சாரி சிந்தனையோட்டம், இலக்கிய தாகம், இயங்கிக் கொண்டிருக்கும் வேகம் அவருக்குப் பொருந்தும் ஒரு பக்கத்தை நோக்கி வாழ்க்கையை நகர்த்திக் கொடுக்கும். மேலும் மேலும் வியக்க வைக்கும் விஷயங்களோடு நம்மை அசர வைக்க அப்போது தயாராக இருப்பார் மாதவ்.  

திரும்பிப் பார்க்கையில், வியப்பு மேலிடத்தான் செய்கிறது... எண்பதுகளில், சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் எங்கே புறப்பட்டுப் போகிறோம் என்பதறியாமல் நான் போய்ச் சேர்ந்த இடம், மாதவராஜ் சிறுகதை ரசனைக் களமாக அமைந்தது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, அந்த அருமையான படைப்பாளியின் அருகே சாத்தூர் ரயில் நிலையத்தில் அமர்ந்து புன்னகை பரிமாறிக் கொள்ளும் இடத்திற்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது. காலம்தான் என்னிடம் எத்தனை கனிவாக இருக்கிறது!  

(   2021ல் எனது வங்கிப்பணி நிறைவையொட்டி வெளியிட்ட மலரில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் எழுதிய பதிவு. காலத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.)



Comments

2 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. தோழர் மாதவராஜ் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தொழிற்சங்க பணிகளை, அவரின் எழுத்துக்களின் பேராற்றலை, தோழமையை பற்றி தெரிந்திருந்தாலும் அதை மேலும் உணர வைத்துள்ளது தோழர் வேணுகோபால் அவர்களின் கட்டுரை. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழர். எஸ்.வி.வியின் எழுத்தும், புரிதலும் நெகிழ வைக்கிறது. அவர் யார் என்று அறியாமல் இருக்கும்போது அவரிடம் இருந்து வந்த ‘மண்குடம்’ சிறுகதைக்கான கடிதத்தை அப்போது எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்குச் சொல்ல முடியாது. என் முதல் சிறுகதைக்கு அவந்த முதல் கடிதம். இன்றும் அதனை பாதுகாத்து வைத்திருக்கிறேன். அந்த கடிதம் போன்றுதான் இந்தப் பதிவும். இப்படி மனம் நிறைந்தும், திறந்தும் பாராட்டுகிற மனிதரை பார்ப்பது அரிது. ஆனால் அதுவே அவரது இயல்பாய் இருக்கிறது. அவரோடு இணைந்து BWU பணிகளில் ஈடுபட்ட காலங்கள் அற்புதமான தருணங்கள். வாழ்வெல்லாம் கூட தோழமையும் அன்பும் அவருடையது.

      Delete

You can comment here