1995ம் வருடத்தில் ஒருநாள்.
ஆறுமுகநேரியிலிருந்து அம்மா ரெயிலில் திருநெல்வேலிக்கு வருவதாய்ச் சொல்லி இருந்தார்கள். திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அம்மாவை சாத்தூருக்கு அழைத்து வரச் சென்றிருந்தேன். அம்மாவுக்கு அப்போது அறுபது வயது போலிருக்கும். ரெயில் பெட்டிகளில் தேடி, அம்மாவைப் பார்த்து, அருகில் சென்று, இறங்க ஆதரவாக கையை நீட்டினேன். இரண்டு பைகளை என் கையில் கொடுத்துவிட்டு அம்மா தானாகவே கம்பியைப் பிடித்துக்கொண்டு இறங்கினார்கள்.
“கையப் பிடிச்சுத்தான்
எறங்கினா என்ன?” என்றேன்.
“எனக்கு எறங்க
முடியுதுல்ல” என்றார்கள்.
சட்டென்று சிரிப்பும்,
சந்தோஷமும் வந்தது. இதுதான் அம்மா.
ஊர், உறவினர்கள்
நலம் விசாரித்துக்கொண்டே கூடவே நடந்து வந்தேன்.
கடைசி பிளாட்பாரத்திலிருந்து வெளியே செல்வதற்கு படிகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது. நான் முன் செல்ல, அம்மா பின்னால் வந்து கொண்டு இருந்தார்கள். எதோ யோசனையில் ஆழ்ந்து சில அடிகள் வைத்த என்னை, “மாதவா” என்னும் அம்மாவின் குரல் பரிதாபத்துடன் அழைத்தது. பதற்றத்துடன் திரும்பினேன்.
அம்மா படிகளில்
கவிழ்ந்து விழுந்திருந்தார்கள். சட்டென்று ஊன்றி எழும்ப முடியாமல், கைகள் இரண்டும்
பரப்பிக் கிடந்தன. தலை தூக்கி இருந்தது. கண்கள் மருண்டு என்னைப் பார்த்தன. அடிபட்ட
பறவை போலிருந்தார்கள். அந்தக் கணமும், காட்சியும் வாழ்வு முழுவதும் மறக்காது.
ஓடிச்சென்று
அம்மாவைத் தூக்கினேன். உட்கார வைத்தேன். அம்மாவின் உதட்டிலிருந்து லேசாய் இரத்தம் வழிந்தது.
கைக்குட்டையை எடுத்துத் துடைத்தேன். அம்மா எதுவும் பேசாமல் பெரிதாய் இழைத்துக்கொண்டு
என்னைப் பார்த்தார்கள்.
“பாத்து வரக்
கூடாது?”, “அடி ஒண்ணும் பலமா இல்லய?”, “சார், நீங்க அவங்க பையனா? கையப் பிடிச்சுட்டு
கூட்டி வரக்கூடாதா?” என சுற்றி கூடிய சிறுகூட்டம் பேச ஆரம்பித்தது. ஒருவர் அம்மாவுக்குத்
தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.
துயரமும், அவமானமும்
அலைக்கழித்தன. அம்மாவைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினேன். அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டு
மௌனமாக வந்தார்கள். மெல்ல அந்தக் கை என்னை இறுக்கமாகப் பற்றியதை உணர்ந்தேன். அம்மாவைப்
பார்த்தேன். கன்னங்களில் நீர்க்கோடுகள் வழிந்தபடி இருந்தன.
எத்தனையோ வருடங்களுக்கு
முன்பு, கடுமையான காய்ச்சலில் படுத்திருந்த என் நெஞ்சை அம்மாவின் கைகள் தடவிவிட்டுக்கொண்டு
இருந்தன. அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில் அப்போதும் பார்த்திருக்கிறேன். அம்மாவின்
கன்னங்களில் இதுபோல நீர்க்கோடுகள்.
அம்மா!
( இன்று அம்மாவின் 17வது நினைவு நாள்! )
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்