“தப்பா நெனைச்சுக்காதீங்க, சார்”

marilyn_manson_painting

 

“இவர்தான் குருசாமி. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று பாலு சார்தான்  அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கிளாஸும்,  தண்ணீர் பாட்டிலும் கொண்டு வந்த அந்த மனிதர் ஒப்புக்கு இல்லாமல் கொஞ்சம் கூச்சத்துடனும் சந்தோஷத்துடனும் பார்த்து சிரித்தார். லேசாய் புன்னகைத்தேன்.  “குருசாமி, தலைவருக்கு ஒரு சேர் கொண்டு வரணுமே” என்றார். அவர் “இதோ” என வேகமாய் எடுத்துவரச் சென்றார். ஒட்டலின் பின்பகுதியில் பாலுசாருக்கு ஓட்டல் ஓனர் அப்படி  ஒரு இடத்தை அனுமதித்து இருந்தார். வாழையிலை, காய்கறிகள் ஒரு பக்கம் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தன.  மாவு அரைக்க,  பாத்திரம் கழுவ என தனித்தனியாய் அந்தப் பகுதி விசாலமாக இருந்தது. பக்கத்தில் இரண்டு பெரிய அடுப்புகள். அதைத்தாண்டி, ஒட்டலில் பணிபுரிவர்கள் தங்குவதற்கென்று கூரை வேய்ந்திருந்தது. நாற்பது வாட்ஸ் பல்பாய் இருக்க வேண்டும். வெளிச்சம் மங்கலாய் இருந்தது.

 

சேர் கொண்டு வரவும்,  “குருசாமி, தலைவர் தெரிமா?” என்றார். “சாரை நல்லாத் தெரியும்.” என்றார். அறிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. சொல்வார் எனவும் தெரிந்தது.  “நாலைஞ்சு வருசத்துக்கு முந்தி கே.வி.எஸ்.காம்பவுண்டுல கலை இலக்கிய இரவு நடந்துச்சுல. அப்ப நீங்க பேசுனீங்க. சுடுகாடு பத்தி ஒரு கதை கூடச் சொன்னீங்க..” என்றார். ஒருமாதிரி இருந்தது. சகஜமிழந்தேன்.

 

பாலு சாருக்கு அது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை. “தலைவா, கழுத்து சொல்வமா, விங்ஸ் சொல்வமா?” என்றார். “எதாவது” என்றேன். “ம்.... கழுத்து, நல்லா துண்டு துண்டா வெட்டி, எண்ண அவ்வளவா இல்லாம..... பக்கோடா மாரி இருக்கணும்.” என்றார். தலையாட்டி போய்க்கொண்டு இருந்த குருசாமியைப் பார்த்தேன். வயது நாற்பத்தைந்து மேலிருக்கும் எனத் தோன்றியது. சராசரி உயரம். தாடியுடன் அக்கறையற்ற முகம். கிண்ணென்ற உடம்பில் உழைப்பு வற்றாமல் இருந்தது.  அன்றைக்கு இடையிடையே இரண்டு மூன்று தடவை குருசாமி வந்து போனார். நாங்கள் வேறு விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். கிளம்பும்போது, பாலு சார் இருபது ருபாயை குருசாமிக்குக் கொடுத்ததைப் பார்த்தேன். வெளியே ஒட்டல்  வெளிச்சமாகவும், ஜனசந்தடியாகவும், பரபரப்பாகவும் இருந்தது.

 

அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்துத்தான் அங்கு போனேன். பாலுசார் தினசரி கஸ்டமர். அவரோடு வேறு ஒரு நண்பரும் அன்று வந்திருந்தார். “தலைவா! உங்கள குருசாமி அடிக்கடி கேப்பார்” என்றார் பாலுசார். “என்ன குருசாமி... அப்படியா” என்றேன். “இல்ல சார்....” என்றாலும் முகம் சிரித்துக் கொண்டு இருந்தது. பாலு சார் தேவையானவைகளை குருசாமியிடம் அடுக்கிக்கொண்டு இருந்தார். பெரிய அடுப்பில் தணல் தெரிந்தது. சால்னா வாசம் அடித்தது. பாலுசார், “வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்” என பாட்டு பாடிக்கொண்டு இருந்தார்.

 

அன்று கொஞ்சம் அதிகமாகவே குருசாமி எங்களோடு இருந்தார். “என்ன வெளியே கூட்டமில்லையா?” என்று பாலுசார், குருசாமிக்கும் ஒரு ரவுண்டு கொடுத்தார். இருட்டுக்குள் தள்ளிப் போனவர், சிறிது நேரத்தில் வாயைத் துடைத்துக்கொண்டு வந்தார். “என்ன குருசாமி, தலைவரைப் பாத்து வெக்கமா?” என்று சிரித்தார் பாலுசார். நாங்கள் பேசிக்கொண்டு இருந்ததை குருசாமி ஆர்வத்துடன் கவனித்து  ரசித்துக்கொண்டதையும் கவனித்தேன். கிளம்பும்போது, “சார், தப்பா நெனச்சுக்காதீங்க.... நீங்க எழுதுன புஸ்த்தகம் இருந்தா தரலாமா?” என்றார். அவரது கையைப் பிடித்துக்கொண்டு, “கண்டிப்பா..” என்றேன். திரும்பவும், “சார், தப்பா, நெனச்சுக்காதீங்க” என்றார். “அய்யோ, இதுல என்ன தப்பா இருக்கு.... தர்றேன் குருசாமி” என்றேன்.

 

அதற்குப் பிறகு சந்தித்த இரண்டு மூன்று தடவைகளுமே புத்தகம் கொண்டு போகவில்லை. குருசாமியைப் பார்த்ததும்தான் ஞாபகம் வரும். “மறந்துட்டேன். குருசாமி....”, “அடுத்த தடவக் கொண்டு வந்துர்றேன்..” என்று சொல்லத்தான் முடிந்தது. அப்புறம் ஒருநாள் காலையில் ஞாபகம் வரவும், ‘குருவிகள் பறந்துவிட்டன’ சொற்சித்திரத் தொகுப்பை  குருசாமியிடம் சேர்க்கச் சொல்லி பாலுசாரிடம் கொடுத்தேன்.

 

பிறகு அவரைப் பார்த்தபோது, குருசாமி அந்த புத்தகம் பற்றியே பேசிக்கொண்டு இருந்தார். ரசித்தவைகளைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார். “தலைவா நா சொன்னேன்ல..” என்றார் பாலுசார். குருசாமி  ரொம்ப நெருக்கமாய்த் தெரிந்தார். ஒட்டலில் கூட்டம் அதிகமாய் இருந்திருக்க வேண்டும். “சார் இருங்க, வந்துர்றேன்” என்று சொல்லி ஒடுவார். திரும்ப வருவார். புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்.  “என்ன படிச்சிருக்கீங்க.. குருசாமி?” எனக் கேட்டேன்.  “மெக்கானிக்கலில் டிப்ளமா....” என்றவர் அமைதியானார். போய்விட்டார். நாங்கள் விடைபெறும்போது  “பாடம் படிக்கிறதுக்கும், புத்தகம் படிக்கிறதுக்கும் சம்பந்தம் இருக்கா?” என்றார். எதிர்பார்க்கவில்லை இதை. “என்ன கேட்டீங்க...?” என்றேன். காதில் விழுந்தாலும், சட்டென்று பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படித் திரும்பவும் அதைக் கேட்பது போல யோசிக்க வேண்டியதாகிவிடுகிறது. “சார் பரவாயில்ல... கேட்டதுக்கு தப்பா நெனச்சுக்காதீங்க..” என்று நிறுத்துவது போல கையைக் காட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் குருசாமி. அவரை எப்படி புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை.  “விடுங்க தலைவா.... அவர் அப்படித்தான்” என்றார் பாலுசார். வெளியேறி முன்பகுதிக்கு வந்தபோது, யாருக்கோ தோசைகளை எடுத்துக்கொண்டு குருசாமி ஓடிக்கொண்டு இருந்தார். ஓட்டலின் முன்பகுதி ஒரு பெரும் நாடகத்தின் மேடை போலத் தெரிந்தது.

 

அடுத்த தடவை பார்க்கும்போது “தப்பா நெனச்சுக்காதீங்க சார். அன்னைக்கு அப்படிக் கேட்டுட்டேன்..” என்றுதான் பேசவே ஆரம்பித்தார். அவரைப் பற்றி கேட்பதை நிறுத்திக்கொண்டேன். அவராகவும் எதையும் சொல்ல மாட்டார். ஆனாலும் என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒரு சந்தோஷமும், உற்சாகமும் வருவதை அறிந்துகொண்டேன். ஓட்டலில் வேலை செய்யும் மற்றவர்களும்   “குருசாமி உள்ளே இருக்கார்”,    “வெளியே போயிருக்கார். இப்ப வந்திருவார்”  எனவும் சினேகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த சமயத்தில்தான் பாலுசார் இறந்துபோனார்.

 

ரொம்பநாள் கழித்துத்தான் ஒருநாள் நானும் இன்னொரு நண்பரும் ஒட்டலுக்குச் சென்றோம். எங்களைப் பார்த்ததும், “எப்படிப்பட்ட மனுஷன்....” என ஒட்டல் ஓனரும் துக்கம் விசாரித்தார். பின்பகுதிக்குச் சென்றோம். இருட்டாயிருந்தது. குருசாமி வந்து லைட் போட்டுவிட்டு, “இனும நீங்க வர மாட்டீங்கன்னு நெனைச்சேன்” என்றார். “என்ன..” என்று அவரைப் பார்த்தேன். “தப்பா நெனைச்சுக்காதீங்க  சார்” என்று சொல்லி “என்ன வேணும்?’ எனக் கேட்க ஆரம்பித்தார்.  நாங்கள் பாலு சார் பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். “நீங்க எப்பவாதுதான் வருவீங்க. நான் அவர தெனமும் பாப்பேனா...” என சொல்லும்போதே குருசாமி கண்கள் கலங்கின. குரல் எதோ ஓலம் போலக் கேட்டது. “தப்பா நெனைச்சுக்காதீங்க, சார்..” என அங்கிருந்து போய்விட்டார்.

 

ஒருமுறை போயிருந்தபோது குருசாமி இல்லை. “எங்கே?” என்றோம். “பின்னாலத்தான் கெடக்கான். இப்போல்லாம் ஓவர் தண்ணி. வீட்டுக்குக் காசு குடுக்குறது இல்ல. போன வாரம் அவம் பொண்டாட்டி வந்து ஒரே அழுகை...” என்று சொல்லி வேறு ஒரு பையனை சப்ளை செய்ய அனுப்பினார் ஓனர்.  எங்கள் அருகேதான் பாயில் சுயநினைவற்றுக் கிடந்தார் குருசாமி. எப்போதும்  இதுபற்றி பேசக் கூடாது என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.

 

சில மாதங்களுக்கு முன்பு  அங்கு  நானும் இன்னும் சில நண்பர்களும் பேசிக்கொண்டு இருந்தபோது இடையிடையே வந்து நிற்பதும் போவதுமாக இருந்தார். ஒரு அவஸ்தை தெரிந்தது. “என்ன குருசாமி... “ என்றேன். “இல்ல சார்.... இன்னொருநாள் பேசுவோம்” என்றார். “சும்மாச் சொல்லுங்க” என்றேன். “தப்பா நெனச்சுக்காதீங்க.... ஒரு நோட்டுல கொஞ்சம் கிறுக்கி வச்சிருக்கேன். நீங்க பாக்கணும்” என்றார். “கொண்டு வாங்க” என்றேன். நாற்பது பக்க நோட்டு ஒன்றில் அடித்து அடித்து எழுதி வைத்திருந்தார். மனதில் பதியவில்லை. நாங்களும்  ஒரு முக்கியமான ஒரு விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். அந்த அவசரத்தில் கவிதை என்றால் என்ன, எப்படி இருக்க வேண்டும் என சில விஷயங்களை பொதுவாகச்  சொல்லிவிட்டு, “தொடர்ந்து எழுதுங்க..” என்று நோட்டைத் திருப்பிக் கொடுத்தேன்.

 

நேற்று அது போல ஒரு நோட்டைக் கொண்டு வந்தார்.  இந்த தடவை அடித்தல், திருத்தல் அவ்வளவாக இல்லை. நிறைய எழுதியிருந்தார். அங்கங்கு சில வரிகள்  கவிதைகளாக இருந்தன. அழுத்தமும், வலியும் அதில் இருந்தன.
*

மரத்தின் கீழ் நிற்கையில்
உன் நிழல்கூட
மண்ணில் விழுவதில்லை
*

சீழ்க்கட்டிய புண்ணைச்
சுற்றி சொறிவது போல
புணர்ச்சியும்
சுகமாயிருக்கிறது
*

மண்ணில் காலூன்ற
விதைகள்
தொங்கிக்கொண்டு இருக்கின்றன
*

வாந்தி துடைத்த
கைக்குட்டையாய்
என் கவிதைகள்
*

குறிவைத்த பழமும்
எறிந்த கல்லும்
தரைக்கே வருகின்றன
*

இன்னொருவர் இமை மூட
நான் கண் திறந்திருக்கிறேன்
*


பள்ளத்தில்
விழுந்தவன்  குரல்
விளிம்பு மட்டுமே
*


ஆணி சொல்கிறது:
“சிலுவையில்
நாங்களும்தான்
அடி வாங்கினோம்”
*


“அடேயப்பா...” என்று அவரது கைகளைப் பற்றினேன்.   “இந்த செக்கண்ட் போதும் சார்”  என்று  தழுதழுத்தார். வெளியே ஓட்டல் ஓனர், “குருசாமி” என கத்தியது கேட்கவும் ஒடினார். கொஞ்ச நேரம் கழித்து வேகமாய் வந்தார். “எல்லாம் வேஸ்ட்” என  என் கையில் இருந்த நோட்டை வாங்கி தூக்கி எறிந்தார்.  திரும்பிப் பார்க்காமல் வேகமாய் சென்றவர் நின்றார். “தப்பா நெனச்சுக்காதீங்க சார்..” என  வெளியேறினார்.  அருகில் இருந்த நண்பர் “என்ன ஆச்சு இவனுக்கு. ரொம்பத் தண்ணியாயிருக்கும்” என்று முணுமுணுத்தார். மண்ணில் கிடந்த கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டு  திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தேன்.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Paavam Gurusami. Thiramaigalai veli konara oru uthavikkaram anaivarukkum thevai.

    பதிலளிநீக்கு
  2. கவிதைகள் மண்ணில்தான் கிடக்கின்றன.அதை கையிலும்,நெஞ்சிலுமாய் சுமக்கிற குருசாமிகளை இந்த சமூகமும்,சமூகம் சார்ந்த இயக்கியவாதிகளும் எப்போதும் கைதூக்கி விடுவதில்லை,
    அல்லது "ஜஸ்ட்லைக்தட்" ஒதுக்கிவிட்டு விட்டு போய் விடுகிறார்கள்.நல்ல கவிதைகளை அவர் படிக்கக்கொடுத்ததும்,அதை தாங்கள் பாரட்டியதும்,"இந்த ஒரு செகண்ட் போதும்" என அவர் நெகிழ்வுற்றதும் பின் முதலாளியின் அவசரமான அழைப்பிற்கு அவரின் ஓட்டமும் என கவிதை சுமந்த குருசாமிகளின் வாழ்க்கை இப்படித்தான் ,,,,,,பிழைப்பாய் இழுபட்டுக்கொண்டு/நல்ல படிப்பு வாழ்த்துக்கள்.குருசாமியும் இன்றிலிருந்து நல்ல கவிஞர் ஆகிறார்,அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்/வாழ்த்துக்கள் அவருக்கு மட்டுமில்லை எங்கும் நிறைந்திருக்கிற குருசாமிகளும் சேர்த்தே/

    பதிலளிநீக்கு
  3. சமூகத்தின் சிற்பிகள் இருளில் இருக்க, அவர்களை கை தூக்கி விடாமல் வீணையை புழுதியிலே கிடத்தி இருக்கும் அநியாயத்தை விட வேறு எதுவும் பெரிய அநியாயம் இல்லை... தப்பா நினைச்சுக்காதீங்க சார்..

    பதிலளிநீக்கு
  4. ஆண்டவன் கருணையற்றவன்.(இருந்தால்)
    மரத்தின் கீழ்
    உன் நிழலும்
    உனதில்லை.
    நிலையாமையை மூன்று வரிகளில் உணர்த்திவிட்டார்.
    வறுமையின் நிறம் சிவப்பு கமல் தான் குருசாமி.

    பதிலளிநீக்கு
  5. ஆணி சொல்கிறது:
    “சிலுவையில்
    நாங்களும்தான்
    அடி வாங்கினோம்”

    அருமையான வரிகள்' "அனைத்து கவிதைகளும் அற்புதம்"

    “தப்பா நெனைச்சுக்காதீங்க சார்” மனதில் நிற்கிறார் குருசாமி......

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் நமக்கெல்லாம் குரு சாமி அவர்தான் ! சாத்தூரில் உலவும் ஜென் கவி அவர்தான் ! ஒருவேளை அது மாதவராஜ் தானோ ! எதுவானாலும் குருசமிகளோடு பழகும் மனம் வைத்தவர்கள் பாக்யசாலிகள் !

    பதிலளிநீக்கு
  7. ஓலை!
    ஆம் நண்பரே.

    விமலன்!
    அள்ள அள்ளக் குறையாத அனுபவங்கள் அவர்களிடமே இருக்கின்றன.அவைகளை உணர்வுகளோடு சேர்த்துச் சொல்லத் தெரிந்தால் போதும், அவர்கள்தாம் படைப்பாளிகள்.

    சூரியா ஜீவா!
    நீங்க ஒன்னும் தப்பாகச் சொலவில்லை.

    குமார்!
    உங்கள் பார்வைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி.


    சொர்ணவேல்குமார்!
    தீராத பக்கங்களின் தொடர்ந்த வாச்கனாகி விட்டாய் போலிருக்கிறது:-)))))

    பதிலளிநீக்கு
  8. ஆஹா, கிருஷி அவர்கள் கடைசியாக கமெண்ட் செய்யக் கற்றுக்கொண்டார்:-))))

    சார்வாள், ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

    குரு சாமி நானல்ல.

    பதிலளிநீக்கு
  9. அண்ணா இப்பத்தான் படிச்சேன். இந்த குருசாமியை எனக்கும் தெரியும் தான்.. நீங்கள் ஒருமுறை எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தீர்கள். ஆனால் இப்படி ஒரு குருசாமியாக இருப்பார் என்பதை எதிர்பார்க்கவில்லை. அடுத்தமுறை வரும்போது குருசாமியோடு சேர்ந்து அந்த கீற்றுக்கொட்டகையில் அமரவேண்டும்.

    ஆகா.. க்ருஷி சார் இந்தப் பக்கம் வந்துட்டாரா? சூப்பர்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு மாதவ்

    நீங்கள் எந்த இடத்திற்கு வரப் போகிறீர்கள் என்பது சற்றே நீர்க் கோடாகத் தொடக்கத்திலேயே தெரிந்தது என்றாலும், குருசாமி மிகவும் அறிமுகமாக மனிதர் போல பதிவின் கடைசி வரிகளில் நெஞ்சு நிறைந்ததற்கு உங்களது சொற்கோலம் காரணம். பாலு சார் விடைபெற்ற வருத்தமே இன்னும் வற்றி விடாத சூழலில், அவரது அன்பில் குளித்துப் பழகிய இன்னோர் அன்புள்ளம் தனது இருப்பை வெளிப்படுத்த வழியற்று தடுமாறிக் கொண்டிருப்பதும், அதற்கு இலக்கியம் ஒரு வடிகால் வழங்கிவிடுவதும் ஆஹா..ஆஹா. என்ன அற்புதமான விஷயம்.

    இலக்கியம் கருணையற்றது, கஷ்டப் படுபவன் மடியில் மீது உட்கார்ந்து கொஞ்சுகிறது. அவனைப் பாடாய்ப் படுத்தி எடுக்கிறது.
    அதனாலேயே அது இப்போது கருணை உள்ளதாகவும் ஆகிவிடுகிறது...

    அருமை மாதவ் அருமை..

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  11. புணர்ச்சியும் புணர்ச்சியை தொடர்ந்து, அதன் விளைவு எப்படி என்பதை,
    நாசுக்காக சொல்லிவிட்டார்.

    //என்ன படிச்சிருக்கீங்க.. குருசாமி?” எனக் கேட்டேன். “மெக்கானிக்கலில் டிப்ளமா....” என்றவர் அமைதியானார்.

    தொழில் நுட்பம் படித்தவர் , அதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே படித்திருப்பவர் , ஓட்டலில வேலை செய்கிறார்.

    பதிலளிநீக்கு
  12. பாருங்க மாதுண்ணா!

    இவ்வளவு தத்துவத் தெறிப்புகளப் பாத்த பின்னாடித்தான் ... எழுதவே பயமா இருக்கறது... சிவா/ 8489581932

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!