மாதவராஜ் பக்கங்கள் -37

water

 

இப்போதுதான்  கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டு இருக்கிறது. இனி அடிக்கடி  தீராதப் பக்கங்கள் வரமுடியும் என நினைக்கிறேன். வம்சி சிறுகதைப் போட்டி, பதிவர் ராகவனின் சிறுகதைத் தொகுப்பு ஏற்பாடு, எப்போதும்  இரு(ழு)க்கும் இயக்க வேலைகள், இடையில் சில நாட்கள் தங்கிவிட்டுப் போன வைரல் காய்ச்சல் தாண்டி இந்தப் பக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கவே முடிந்தது. 

 

வம்சி சிறுகதைப் போட்டிக்கு 370க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன. அவைகள் அனைத்தையும் பிரிண்ட் எடுத்து, தொகுத்து  நடுவர்குழுவுக்கு அனுப்பி வைப்பது சிரமமானது. நடுவர்களுக்கு இருக்கும் பல்வேறு பணிகளுக்கு இடையே அனைத்துக் கதைகளையும் படித்துத் தேர்ந்தெடுப்பது மிகச் சிரமமானது. எனவே கதைகள் அனைத்தையும் படித்து, அவைகளில் முக்கியமான கதைகளாகக் கருதியவைகளை வம்சி பதிப்பகம் நடுவர்குழுவுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டது. அதன்பொருட்டு படித்த கதைகளில் கிடைத்த வாசக அனுபவம் அலாதியானது. போட்டி முடிவுகளுக்குப் பிறகு அவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நடுவர் குழுவுக்கு தாமதமாகவே கதைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே முடிவுகள் வரவும் காலதாமதமாகலாம். அன்புடன் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

ஆரம்பத்தில் கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்த நமது பதிவர் ராகவன்  சென்ற வருடத்திலிருந்து சிறுகதை எழுதத் தொடங்கினார். அவரது  கதைகளை மெச்சி  ஏற்கனவே தீராத பக்கங்களிலும் எழுதப்பட்டு இருக்கிறது. வலைப்பக்கங்களில் தொடர்ந்து பல நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். எழுத்தாளர் ஜெயமோகன், அம்பை போன்றவர்கள் அவரது கதைகளை குறிப்பிட ஆரம்பித்தார்கள். எழுத்தாளர் வண்ணதாசன்  ராகவனைக் கொண்டாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது  சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று  ராகவன் விருப்பம் தெரிவித்தார். அந்தப் பணியையும்  சந்தோஷத்தோடு  ஏற்றுக்கொண்டேன்.  எழுதப்பட்ட 36 கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து, எழுத்துப் பிழைகள் சரிசெய்து தொகுத்திருக்கிறேன். வண்ணதாசன்  முன்னுரை எழுதித் தர சம்மதித்து இருக்கிறார். ஒன்றிரண்டு நாட்களில் அனுப்பி வைத்துவிடுவேன். வம்சி பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வர சம்மதித்து இருக்கிறது. ஆண் பெண் உறவுகள் குறித்து, நுட்பமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

 

தீராத பக்கங்களில் எழுதியவற்றிலிருந்து இரண்டு தொகுப்புகள்  இந்த  வருடம் கொண்டு வரவேண்டுமென்று  நினைத்தேன். முடியுமா என்று தெரியவில்லை. சீட்டுக்கட்டு நாவல் நான்கு அத்தியாயங்களோடு நிற்கிறது. இயக்குனர் மகேந்திரன் குறித்த ஆவணப்பட வேலைகளும் தேங்கிவிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசனிடம் பேட்டிக்கு நேரம் கேட்டிருந்தோம். சில மாதங்களுக்கு  முன்பு திடுமென ஒருநாள் அவரது உதவியாளர், “நாளை சென்னைக்கு வாருங்கள். கமல்ஹாசன் நேரம் ஒதுக்கியிருக்கிறார்” என்றார். நாங்கள் சாத்தூர், மதுரை, திருநெல்வேலி என அங்கங்கு இருக்கிறோம். எல்லோரும் இணைந்து உடனடியாக புறப்படுவது  சாத்தியமில்லாமல் போனது. இன்னொருநாள் வருகிறோம் என்றோம். அந்த இன்னொருநாள் வரவேயில்லை. இயக்குனர் மகேந்திரன் அவர்களிடம்  சமீபத்தில் ஒருமுறை போனில் பேசியபோது, “படம் இருக்கட்டும் மாதவராஜ், வீட்டிற்கு வாருங்கள். பேசிக்கொண்டு இருப்போம்” என்று சிரித்தார்.  என்னால் அப்படி இயல்பாய் சிரிக்க முடியவில்லை.

 

முழுதாக எதிலும் ஈடுபட முடியாமல், நாட்கள் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பெரிய பெரிய எழுத்தாளர்களுடன் போட்டிக்கு நானும் நிற்கிறேன் என்பதே எனக்கு கிடைத்த பரிசு...

    பதிலளிநீக்கு
  2. முழுதாக எதிலும் ஈடுபட முடியாமல், நாட்கள் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

    தீராத ஓட்டம்!!

    பதிலளிநீக்கு
  3. முழுதாக எதிலும் ஈடுபட முடியாமல், நாட்கள் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

    தீராத ஓட்டம்!!

    பதிலளிநீக்கு
  4. அண்ணா.. நலம்தானே. பிரமிக்க வைக்கிறது உங்கள் ஷெட்யூல். என்னா ஓட்டம் ஓடுகிறார்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள்.

    நண்பர் ராகவனுக்கும் என் அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. ‘ஓடுகிறீர்கள்’ என்று திருத்தி வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  6. எனதன்பு தோழர்..

    சில பல காரணங்களால் விழுந்த இடைவெளிகளையும் நானே துடைக்கவேண்டியதாகிறது.

    காரணங்களுக்குண்டான ரகஸ்யங்களை பொதுவெளிகளில் வைக்க முடியா இம்சைகளில் சிக்கிவிட்டேன்..

    அது பிரிதொரு சந்தர்ப்பங்களில் நேரில்..

    ஆனாலும் என் மீதான உங்கள் உரிமையை ஏன் விட்டுவிட்டீர்கள்...

    எதுவாயினும் கேட்டிருக்கலாம்தான்..

    அந்த எதுதான் நடுவில் நிற்கிறதென உங்களுக்கும் எனக்கும் புரிபடவில்லையென தோன்றுகிறது..

    ஆகட்டும் இந்த வாழ்வும் அதன் புரிபடா நிகழ்வுக்கும் இடையில் நொடிகளில் மாறிக்கொண்டிருக்கிறது காலம்...

    பதிலளிநீக்கு
  7. ராகவன் சிறுகதைகள் தொகுப்பு வரப் போவது அறிந்து ரொம்பவும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. ராகவன் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. ராகவன் சிறுகதைகள் புத்தகமாவது குறித்து அளவிலா மகிழ்ச்சியும்! வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல கதைகளை எப்படி தேர்ந்தெடுப்பது? என்று ஒரு பதிவு போடுங்க நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. Raagavan sirukathai thoguppu varappovathu kuriththu santhosam.

    370 - migavum santhosamaana seithi.

    பதிலளிநீக்கு
  12. அலுவலக வேலையுடன் இத்தனை வேலைகளையும் செய்ய முடிகிறதே. அதற்காக சந்தோசப் பட்டுக் கொள்ளுங்கள். எல்லோராலும் இப்படி செய்ய முடிகிறதில்லை. அடிக்கடி எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. திரு ராகவன் சிறுகதைத் தொகுப்புகள் நீங்கள் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. எங்கள் ஊர்க்காரர் ராகவனின் சிறுகதைகள் புத்தகமாக வர உள்ளதா!
    மிகவும் மகிழ்ச்சி. வம்சி பதிப்பகத்திற்கும், உங்களுக்கும் நன்றிகள். கமல்ஹாசனை சந்தித்து எப்படியாவது பேட்டி எடுத்து விடுங்கள். மேலும், அவர் வாசித்த புத்தகங்களை குறிப்பிட சொல்லுங்கள். அவர் தொ.பரமசிவன் அய்யாவின் தீவிர வாசகர். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எப்போ சார் ரிசல்டு சொல்வீங்க?
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!