ஒரு குட்டி எழுத்தாளர்!

child

 

‘வம்சி சிறுகதைப் போட்டிக்கு’ என்று குறிப்பிட்டு  குட்டி குட்டியாய் மூன்று கதைகளை மெயிலில் அனுப்பியிருந்தார் பாஸ்கரன்.  தெரிந்த தோழர் அவர். திருநெல்வேலி சின்மயா வித்யாலயாவில் நான்காம் வகுப்பு படிக்கும்  அவரது மகன் கௌதம் எழுதிய கதைகளாம். ஒரு குழந்தையின் மனவுலகம் அவைகளில் நம்பிக்கையோடு விரிந்துகொண்டு இருந்தது. எல்லாவற்றிலும் உதவுவதற்கு என்று யாராவது வந்தபடி இருந்தார்கள்.

 

அவருக்குப் போன் செய்தேன். “இவைகள் இணையத்தில் எழுதப்பட்டதா?’” என சிரித்தேன்.  “எனது ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டவை” என அவர் சிரித்தார். தொடர்ந்து, “இப்படி கதைகளை சொல்லிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறான். உங்களுக்கு அனுப்பி வைக்கத் தோன்றியது. எப்படியிருக்கு?” என்றார்.  “அருமையாக இருக்கிறது. அந்தக் குட்டி எழுத்தாளரை  அவன் போக்கிலேயே விடுங்கள்” என்றேன்.  சினிமா, தொலைக்காட்சியை எல்லாம் மீறும் ஒரு குழந்தையல்லவா அவன்!

 

கௌதம் எழுதிய கதைகள்-


 

(1)

ஒரு நாள். மதிய நேரம். எறும்புகளுடைய உணவு சேகரிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த எறும்புகள் நதியை கடந்திருந்த போது சில எறும்புகள் தண்ணீருக்குள் விழுந்து விட்டன. அப்போது ஒரு குருவி அதைப் பார்த்து உதவி செய்தது. அந்த குருவிக்கு நன்றி சொன்னது அந்த எறும்புகள். அந்த குருவியோட எதிரி ஒரு கழுகு. கொஞ்ச நேரம் கழித்து, ஒரு வேட்டைக்காரன் வந்தான். அந்த வேட்டைக்காரன் குருவியை சுடப்பார்த்தான். அதை ஒரு எறும்பு பார்த்தது. அந்த எறும்பு எல்லா எறும்புகளிடமும் சொன்னது. அப்படி நடக்கக்கூடாது என்று எல்லா எறும்புகளும் வேட்டைக்காரன் காலில் குத்தியது. வேட்டைக்காரனின் குறி தவறி குருவியோட எதிரி கழுகு மேல் சுட்டான். அந்த குருவி அதனுடைய மனைவியிடம் சொன்னது. அந்த எறும்புகள் இன்னும் மறக்கவேயில்லை.


(2)

 

ஒரு இடத்தில் ஒரு பாலைவனம். அதன் பெயர் தார் பாலைவனம். ஒருவன் அந்த பாலைவனத்தில் நடந்து போனான். “ஆகா என்ன சூடு. சாப்பிடவும் குடிக்கவும் எதுவும் இல்லியே”என்றான். அந்த பக்கம் ஒரு சிறிய பாறை இருந்தது. அந்தப் பாறை அருகே மணல் இருந்தது. அந்த மணலை தோண்டி பார்த்தால் தண்ணீர் இருக்கும். அவன் அந்த பாறையைப் பார்த்தான். அந்த மணல் சூடாக இருந்ததால் அவன் அதை தோண்டவில்லை. மதிய நேரமானது. சூடு பயங்கரமாக ஆனது. அவனுக்கு தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அப்படியே சென்ற அவன் காணாமல் போய்விட்டான். “ஆமாம். நான் இப்போது எங்கே இருக்கிறேன். என் ஊர் எங்கே” என்றான். அவன் தண்ணீர் குடிக்காததால் மயக்கமடைந்தான். சில நேரம் கழிந்தது. அப்பொழுது ஒருவன் வந்து அவனுக்கு தண்ணீர் கொடுத்து எழும்ப வைத்தான். “ரொம்ப நன்றி, என் ஊர் ஜெய்ப்பூர். அந்த ஊருக்கு உங்களுக்கு வழி தெரியுமா?”  என்று கேட்டான். அவனும் “ஆ, தெரியுமே. வா நாம் இரண்டு பேரும் போவோம்” என்றான். பிறகு அவர்கள் இரண்டு பேரும் ஊருக்கு சென்றார்கள்.


(3)

 

நூறு வருடங்களுக்கு முன்பு, பூமி என்னும் ஒரு கிரகம் ஒன்று இருந்தது. அப்பொழுது அங்கு மரங்களால் நிறைந்திருந்தது. ஆனால் இப்பொழுது நிறைய வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் வந்து விட்டதால் மரங்கள் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஒரு நாள் ஜப்பான் நாட்டில் டோக்கியோ என்னும் ஊரில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் நோவிட்டா. ஒரு நாள் அவன் ஒரு காட்டுக்குள் சென்றான். அங்கே ஒரு பள்ளம். அந்த பள்ளத்துள் ஒரு கட்டிடம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.  அப்பொழுது அவன் “ஆகா, இப்படி அவங்க கட்டிடம் செய்வதற்காக மரங்களையெல்லாம் இடிக்கிறாங்களே, இப்படி செய்தால் மரங்களோட நிலமை என்னவாகும்” என்று அவன் பரிதாபப்பட்டான். அவன் பக்கம் சிறிய செடி.  அவன் அதை வளர்ப்பதற்கு எடுத்து வீட்டிற்கு சென்றான். அடுத்த நாள் அங்கே ஒரு ஆகாய கப்பல். கப்பலில் மரங்களின் கூட்டம். அதற்கு உயிர் இருந்தது. அந்த மரங்களின் தலைவன் “எனக்கு ரொம்ப கோபமாகி விட்டது. அவங்க இப்படி மரங்களை இடிக்கிறது தப்பு. உடனே பூமியில் உள்ள மரங்களை எல்லாம் எடுத்து விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டான். ஆகாய கப்பலில் இருந்து ஒலி வந்தது. அந்த ஒலி பூமியிலிருந்து மரங்களையெல்லாம்  எடுத்துச்சென்றது. அப்பொழுது அவனும் சேர்ந்து போனான். அவன் அங்கே போனதால் மரங்களின் தலைவன் கோபம் அடைந்தான். “மனிதன் இங்க ஏன் வந்தான்” என்று கேட்டான். “மரங்களுக்குமா உயிர் உண்டு?” என்றான் நோவிட்டா. மரங்களின் தலைவன் “அவனைக் கொன்று விடுங்கள்”என்றான். அவன் வளர்த்த செடி “வேண்டாம்,அப்படி செய்யாதீர்கள். அவனும் மரங்கள் வளரனும் என்று நினைக்கிறான். நீங்கள் பூமியிலுள்ள மரங்களை எல்லாம் எடுத்து விட்டால் எதுவும் உயிர் வாழ முடியாது. அதனால் மரங்களை எடுக்க கூடாது. அவனையும் கொன்று விடாதீர்கள்” என்றது. செடி சொன்ன வார்த்தைக்காகத்தான் அவனைக் கீழே விட்டார்கள். மரங்களையும் தான். பிறகு அவன் மரம் வளர்க்கத் துவங்கினான்.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையான சிந்தனைகள், முதல் கதை சற்று பழி வாங்கும் போக்கில் இருக்கிறது.. கவனித்து கொள்ள சொல்லவும்

    பதிலளிநீக்கு
  2. அந்த குட்டி எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அறிவான கற்பனாசக்தியுள்ள குழந்தை,எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் உள்ள குழந்தை குட்டி எழுத்தாளர் கௌதமிற்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. அசத்தலான கதைகள்.. குட்டி எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதைகள்... அதுவும் அந்த மூன்றாம் கதை... வெகு ஜோர்.... குட்டி எழுத்தாளருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. // சினிமா, தொலைக்காட்சியை எல்லாம் மீறும் ஒரு குழந்தையல்லவா அவன்!//

    மிகப்பெரிய விஷயம் இது. குட்டி செல்லத்திற்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான சிந்தனைகள்...

    குட்டி எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இந்த காலத்து குழந்தைகளுக்கு எவ்வலவு யோசிக்கும் திறன் என்று ஏற்கனவே நாம் அன்றாடம் வீட்டில் நடக்கும் விஷயங்களை கொண்டு வியக்கின்றோம்.
    அவற்றையெல்லாம் தாண்டி இந்த கௌதம் என்ற சிறுவன் பயங்கர அறிவாளியாக இருக்கிறானே...என வியக்கவைக்கின்றது.அவனுடைய கதைகள்.
    எங்கள் சார்பில் அச்சிறுவனுக்கு வாழ்த்தினை தெரிவிக்க சொல்லவும்.
    நன்றி சகோ//

    அன்புடன்,
    அப்சரா.

    பதிலளிநீக்கு
  9. இது போன்ற சிறுவர்களின் கதைகளை எல்லாம் தனியாக தொகுக்க வேண்டும். சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைக்கம்பளம் வாசித்தேன். அவருடைய மகனுடன் இணைந்து சிறுவர்கதைகளை எழுதியுள்ளார். மிக அற்புதமாக இருந்தது. கௌதம் போன்ற குழந்தைகளை நிறைய ஊக்குவிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. 2ம் 3ம் குழந்தையின் நடையில் அழகாக உள்ளது வியப்புடன் வாழ்த்துகிறேன்,

    மன்னிக்கவும் முதல் கதை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறுவர்களுக்கான் கதை தொகுப்பில் உள்ளது(சிறு மாறுதல்களுடன்)

    பதிலளிநீக்கு
  11. ஆச்சர்யமாக இருக்கிறது.. குட்டி எழுத்தாளருக்கு என்னுடைய வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  12. when i clicked oct 2011 archive it shows only 21 posts..but oct 2011 has 25 posts...to see remaining 4 posts there is no link for older posts...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!