உலக இலக்கியவாதிகளை உள்ளூரில் அலைய வைத்தவர்!

konangi 01

 

என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒருவருக்கு ரொம்பவே பொத்துக்கொண்டு வந்துவிட்டது. எழுத்தாளர் கோணங்கியோடு பழகிய காலத்தின் ஈரம் சொட்ட சொட்ட எழுத்தாளர் பவா எழுதியிருந்ததை இங்கு பகிர்ந்திருந்தேன். கோணங்கியின் படைப்பு, அதன் தன்மை குறித்தெல்லாம் பவா அதில் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. சமகால எழுத்தாளன் ஒருவன் மீது பரஸ்பரம் கொள்ள வேண்டிய மரியாதையும், நட்பு கொண்ட சக மனிதனோடு இருந்த நெருக்கமும்தான் அதில் நெகிழ்வோடு சொல்லப்பட்டு இருந்தது.  எழுத்தை நேசிக்க வைக்கும் மொழியாக அது இருந்தது. அவ்வளவுதான். பொங்கி எழுந்துவிட்டார் அந்த ஒருவர். ‘மென்மை தோல் போர்த்திய தடித்தவர்கள்’ என்று எனக்கும் பவாவுக்கும் பட்டம் கட்டினார். கோணங்கியின் கல்குதிரை சாணிகூடப் போடாது என கால்நடை அறிவோடு பின்னூட்டத்தில் அறச்சீற்றம் கொள்ளவும் செய்தார்.

 

நிற்க. இந்த சமயத்தில்தான் எழுத்தாளர் உதயசங்கரும் கோணங்கி பற்றி எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.  “அய்யய்யோ இன்னும் ஒரு மென்மை தோல் போர்த்திய தடித்த மனிதரா!”  என கடகடவென்று சிரித்தேன்.. உதயசங்கர் எழுதியிருந்த ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்திலிருந்து இன்னும் சில நினைவலைகளை பகிர்வதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். இது அவைகளில் ஒன்று.


உலக இலக்கியவாதிகளை உள்ளூரில் அலைய வைத்தவர்!

-உதயசங்கர்

எழுதத் துவங்கும் எல்லா எழுத்தாளர்களும் காண்கிற கனவைத் தான் நானும் கண்டேன். நம் எழுத்தின் மூலம் மிகப் பெரும் பிரளயமே நிகழப் போகிறது என்று ஒவ்வொரு கவிதை எழுதும் போதும், சிறுகதை எழுதும் போதும் நினைத்திருக்கிறேன். அப்படியிருக்க ஒரு சிறுகதை பிரசுரமாகி பலரும் பாராட்டியும் விட்டால் என்ன ஆகும். ஒரு தினுசாக முகத்தை வைத்துக் கொண்டு தரையில் கால் பாவாமல் தலைக்குப் பின்னால் இலக்கிய ஒளிவட்டம் எப்போதும் ஒளிர்ந்து  கொண்டிருக்கிறதா என்று அவ்வப்போது பார்த்துக் கொண்டே சுற்றினேன். இதில் யாருடைய ஒளிவட்டம் ரொம்ப பவர்புல்லானது என்று சர்ச்சை வேறு. நல்ல கூத்து தான்.


1980ஆம் ஆண்டு மார்ச் மாத செம்மலரில் என்னுடைய முதல் கதையான ‘மஞ்சு’ பிரசுரமானது அப்போது தமிழ்ச் செல்வனுக்கும் இரண்டோ மூன்றோ கதைகள் பிரசுரமாகியிருந்தன. எனவே சிறுகதை எழுத்தாளர் என்ற கர்வத்தோடு நான் அன்றாடம் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசிக்கொண்டும், புத்தகங்களை வாசித்துக் கொண்டு மிருந்தேன். தண்டவாளங்களைத் தாண்டி யதும் தனியாக இருந்தது அந்த வீடு. அந்த வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் தமிழ்ச்செல்வனின்  தம்பி ஒருவர் சிரித்து வரவேற்பார். நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது அவரும் அதே பள்ளியில் எனக்கு மூத்த மாணவராக இருந்தார். பேச்சுப்போட்டியில் அடுக்குமொழியில் பேசி பரிசுகளை வெற்றி கொண்டிருக்கிறார். அவர் பேசும்போது கண்களை அடிக்கடிச் சிமிட்டி சிமிட்டிப் பேசுவார். அது தான் அவர் மீதான தனிக் கவனம் கொள்ள வைத்தது என்று நினைக்கிறேன் நான் கல்லூரி முடித்த காலத்தில் அவர் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.


அவரும் புத்தகங்களை வாசித்துக் கொண்டிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சிரிப்பு சில வார்த்தைகள் இப்படித் தான் இருந்தது அவருடனான ஆரம்ப கால உறவு. பின்னால் அவர் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமையாக வருவார் என்றோ எனக்கு மிக நெருக்கமான நண்பராக மாறுவார் என்றோ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் இளங்கோ என்ற இயற்பெயருக்கு சொந்தக்காரரான எழுத்தாளர் கோணங்கி.


மிகக் குறுகிய காலத்தில் மிக முக்கியமான எழுத்தாளராக பரிணமித்தவர் கோணங்கி. தன்னுடைய தனித்துவமிக்க பார்வையினாலும், மொழி நடையினாலும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இலக்கியத்திற்காகவே வாழத் துணிந்தவர். இலக்கியத்தை ஒரு தவமாக இயற்றி வருபவர் கோணங்கி. 80 களில் அவருடைய மிக நெருக்கமான நண்பனாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.


கோவில்பட்டி மாதிரி மிகச் சிறிய நகரத்தில் இத்தனை இலக்கிய ஆளுமைகள் உருவானது அதுவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகவும் ஆச்சரியமளிக்கிற ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது. மிகவும் பயந்த, தயக்கம் கொண்ட, தொட்டாற் சிணுங்கியான என்னை விரல் பிடித்து உலகத்தைச் சுற்றிக் காட்டியவர் கோணங்கி. எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று எல்லோரையும் நேரில் சென்று சந்திக்க வைத்தார். மிகச் சிறந்த ஊர்ச் சுற்றியான அவருடன் பல ஊர்களுக்கும் திடீர் திடீரென கிளம்பிப் போய் விடுவேன். புதிய மனிதர்கள் புதிய நிலப்பரப்பு, புதுப்புது அனுபவங்கள், வாழ்க்கையில் இன்பம் மட்டுமே பொழிந்த நாட்கள் அவை. ஜோதி விநாயகத்தின் மீது அவருடைய பற்று, மரியாதை அன்பு நட்பைத் தாண்டிய ஈர்ப்பு மிக்கது. ஜோதி விநாயகத்தின் ஆளுமையின் விகசிப்பை உணர்ந்த மிகச் சிலபேர்களில் கோணங்கியும் ஒருவர்.

புத்தகங்களைச் சேகரிப்பதற்காகவென்று சென்னை சென்று பசியும் பட்டினியுமாக அலைந்து திரிந்து இரண்டு பெட்டிகள் நிறையப் புத்தகங்களைச் சேகரித்து கோவில்பட்டிக்கு அனுப்பி வைத்தார். அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் அவர் படித்தாரோ இல்லையோ நாங்கள் படித்தோம்.  அதுவரையில் பெயரளவில் கேள்விப்பட்டிருந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள், க.நா.சு, உலகச் சிறந்த இலக்கிய நூல்களாக அறிமுகம் செய்திருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு வந்திருந்தார் கோணங்கி.


அதன் பிறகு கோணங்கியின் வீடு முத்துச்சிப்பி இருந்த தெற்கு திசையை நோக்கி தினமும் எழுத்தாளர்களின் படையெடுப்பு நடந்தது. கோவில்பட்டியின் தெருக்களில் அனடோல் பிரான்ஸூம் ஆர்தர் கொய்ஸ்லரும், நதானியல் ஹாதர்னும், நட் ஹாம்சனும், எமிலிஜோலாவும், மாப்பசானும், செல்மாலாகர்வவ்வும், ஆர்தர் ஜி.வெல்ஸும், தாமஸ்மானும், பால்சாக்கும், யஹர்மன் கெஸ்ஸேயும், அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். மாதாங்கோவில் தெருவில் அனடோல் பிரான்ஸ் நின்று கொண்டிருந்தார் என்றால் வ.உ.சி. நகர் தெருவில் தாமஸ்மான் இரண்டு எழுத்தாளர்கள் பேசுகிற ஒரு சொல்லையும் கேட்காமல் விட்டுவிடக் கூடாது என்று பின்னாலேயே போய்க் கொண்டிருந்தார். ஊரணித் தெருவில் சிகரெட் புகையுடன் சுருட்டின் வாசனையும் கலந்து வந்தது அங்கே நட்ஹாம்சன் சிரித்துக் கொண்டிருந்தார். ரயில்வே ஸ்டே­ன் பெஞ்சில் யாரையோ வழியனுப்ப வந்த மாதிரி செல்மாலாகர்லவ் அந்த எழுத்தாளர்கள் முன்னால் நடை பழகிக் கொண்டிருந்தார். காந்தி மைதானத்து இருளில் மின்னுகிற பச்சை நிறக்கண்கள் பால்சாக்கின் கண்களல்லவா. நடுநிசியில் தெற்கு பஜார் தெருவில் எமிலிஜோலா ஆழ்ந்த சிந்தனையுடன், அங்கே சுற்றிக் கொண்டிருந்த ஒரு பைத்தியக் காரனைக் கவனித்துக் கொண்டிருந்தார். எட்டையபுரம் ரோட்டில் மாப்பசான் அடல்டரி பற்றிய விவாதத்தில் கலந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கங்கே தெருமுக்குகளிலும், டீக்கடையிலும், சிகரெட் புகைமூட்டத்திற்கு நடுவே தங்களுடைய படைப்புகள் குறித்து இளம் எழுத்தாளர்கள் பேசுவதைக் கேட்க நகரெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். அற்புதமான அந்த நாட்கள் உன்னதமான அந்த இலக்கியங்களின் வழி நாங்கள் உலகை அறிந்தோம் கோணங்கி இல்லையயன்றால் இது நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை. கோவில்பட்டிக்கு அவர் நன்றிக்கடன் செலுத்திவிட்டார். உலக இலக்கிய வாதிகளை அழைத்து வந்ததின் மூலம். அதைவிட தன் வாழ்வை இலக்கியத்துக்காக அர்ப்பணித்ததின் மூலம் கோவில்பட்டிக்குப் பெருமை சேர்த்து விட்டார் கோணங்கி.


இதோ இப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் கோணங்கி. அவருடன் இளம் எழுத்தாளர் ஒருவர் கூடவே திரிகிறார். அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அவருடைய ஆளுமையின் மீது, அர்ப்பணிப்பின் மீது உறுதியின் மீது மிகுந்த பொறாமையுணர்வுடன் கூடவே அலைகிறார்கள். அவருடன் பிரயாணம் செய்பவர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் அவர் சற்றும் தளராது சுற்றித் திரிந்து கொண்டேயிருக்கிறார். அவருடைய பரபரப்பான கண்கள் தேடிக் கொண்டேயிருக்கின்றன.


கோணங்கி ! என் அன்பு நண்பா ! உனக்கு தலை வணங்குகிறேன். கோவில்பட்டியும் தலை வணங்குகிறது.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கோணங்கியின் ஆளுமை புரிகிறது!

    பதிலளிநீக்கு
  2. கடந்து பதிவின் சர்ச்சையை முழுமையாகப் படித்தேன். அதிலே ஏதோ அரசியல்தான் மேலோங்கி வருகின்றது. தோழர் உ.ரா.வ மரணத்தின் போது தாங்கள் எழுதிய பதிவின் போதும் இதே வன்மத்தோடு வந்த பின்னூட்டம் ஞாபகத்திற்கு வருகின்றது.

    பதிலளிநீக்கு
  3. //கடந்து பதிவின் சர்ச்சையை முழுமையாகப் படித்தேன். அதிலே ஏதோ அரசியல்தான் மேலோங்கி வருகின்றது//

    திரு. ராமன் சொல்வதுதான் உண்மை அண்ணா.

    பதிலளிநீக்கு
  4. அன்பு மாதவராஜ்,

    பவாவும், நீங்களும் கொண்டாடுவது கோணங்கி என்ற அருமையான மனுஷரை. இது அப்பட்டமாய் இருக்கிறது, நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அவருடைய படைப்புகளை பற்றி எந்தவித கருத்தும் சொல்லாத பதிவை, நெகிழ்வை அன்பை கொச்சை படுத்துவது யாருக்கும் எப்படி சாத்தியம் என்பது எனக்கு விளங்கவில்லை. கோணங்கி உங்களுடன் இருந்தபோது ஒருமுறை நான் உங்களை அழைத்திருந்தேன், நீங்க தடாரென்று அவரிடம் போனை கொடுத்து விட்டீர்கள், அறிமுகமே இல்லாத ஒருவரிடம் பேசுகிறோம் என்ற பிரக்ஞையே எனக்கு இல்லை அவரிடம் பேசியபோது. அத்தனை பேசினார், நிறுத்தாமல், அத்தனை விஷயங்களை சொன்னார். எப்படி வாசிக்க வேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று எல்லாமே! அவருக்கு என்ன தேவை?, அப்படியா? தம்பி எப்படி இருக்கீங்க? இது போதும் சந்தோஷ பட்டிருப்பேன், ஆனால் என்னை பற்றி முழுமையாய் விசாரித்து, நான் எழுதுகிறேன் என்றவுடன், தங்கு தடையில்லாமல் வித்தை கற்று தருபவர் எப்படி பட்டவராய், திறந்த மனதுடையவராய் இருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு நல்ல நண்பனாய், ஒரு வழிகாட்டியாய் இருக்கும் ஒரு மனுஷர் அவர், தேவை உள்ளவர்களுக்கு.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.மின்விசிறிக்கு அடியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு மாதச் சம்பளம் வாங்கும் என்னைப் போன்றவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற குற்றஉணர்வை ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!