இவான் துர்கனேவும் மூன்று காதல் பாட்டுக்களும்!

udhayasankar cover1

இதை எழுதியிருப்பவர் எழுத்தாளர் உதயசங்கர். சமீபத்தில் வம்சி பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கும்  ‘முன்னொரு காலத்திலே’ என்னும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்  அவரது ஞாபகங்களில் ஒன்று.  சிந்தனைகளும், படைப்புகளும், இயக்கங்களுமாய் ததும்புகிறது 1980களின் கோவில்பட்டி.  பதின்மப்பருவம் முடிந்து, வேலை கிடைக்காமல், ஊர் சுற்றிக்கொண்டு, புத்தகங்கள்  படித்துக்கொண்டு, கனவுகண்டுகொண்டு இருந்த இளஞர்களில் ஒருவராய் இருக்கிறார் உதயசங்கர் அப்போது.

உள்ளும் புறமும் இருந்த தகதகப்பில் பிகாஸோ என்னும் மகத்தான ஒவியனின் கண்காட்சியை கோவில்பட்டி போன்ற ஒரு சிறு நகரத்தில் நடத்துகிறார்கள். சிருஷ்டி கலைக்குழுவின்  மூலமாக தமிழகத்தை திரும்பிப் பார்க்கச் செய்கிறார்கள். த்வனி, தேடல் போன்ற சிறுபத்திரிகைகள் நடத்துகிறார்கள். புரட்சியின் நாட்களை எண்ணுகிறார்கள். தமிழ்ச்செல்வன், கோணங்கி, அப்பணசாமி, ஜோதிவிநாயகம், தேவதச்சன், கி.ரா, மாரீஸ், சாரதி, பாலு, தேவப்பிரகாஷ், கிருஷி, அப்பாஸ், முத்துக்குமார், நாறும்பூநாதன் என இன்னும் பலரோடு அலைந்து திரிந்து, இரவு பகல் பாராமல் இலக்கியம் பேசி கடந்த நாட்கள் அவை.  அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றிய ஞாபகங்களில் இருந்து  வெளிப்படும் காலமும், வரலாறும் இழப்பை மட்டும் சொல்லாமல், ஒரு விசாரணையை இந்தக் காலத்தின் மீது வைப்பது போல இருக்கிறது.

“இதில் சொல்லப்பட்டு இருக்கும் நண்பர்களில் சிலர் இப்போது உயிருடன் இல்லை. சிலர் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். சிலர் எல்லாவித நடவடிக்கைகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். சிலர் புலம்பெயர்ந்து போய் விட்டார்கள். பழைய இலக்கிய விவாதங்களின் தேய்ந்து போன எதிரொலியை கற்பனை செய்துகொண்டே நான் கோவில்பட்டித் தெருக்களைக் கடந்துகொண்டு இருக்கிறேன்.” என்று  முன்னுரைக்கும் உதயசங்கர் இப்போது கோவிலபட்டி அருகே குமாரபுரம் என்னும் ஊரில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராய் இருக்கிறார். (குமாரபுரம் என்றால், கு.அழகிரிசாமி நினைவுக்கு வருகிறாரா? )

அவரது இந்தத் தொகுப்பில் இருந்து சில ஞாபகங்களை தீராத பக்கங்களில் பதியலாம் என எண்ணுகிறேன். அதில் ஒன்றாக-

*

அப்போது காதலர் நகரமாக இருந்தது கோவில்பட்டி, வீதியயங்கும் இளைஞர் கூட்டம். காதல் கொள்ளும் போது மட்டுமே தோன்றுகிற அர்த்தமில்லாத சிரிப்பொலிகளோடு அர்த்தம் நிறைந்த சமிக்ஞைகளும், ஒற்றை வார்த்தைகளும், அந்த ஒற்றை வார்த்தைகளுக்குப் பின்னே எழுதப்படாத ஓராயிரம் வரிகளும் நகரின் மீது மேகக்கூட்டங்களைப் போல மிதந்து கொண்டிருந்தன. நகரமே, காதல் தளும்பி நிற்கும் கோப்பை போல் தொட்டால் சிந்திவிடும் பாவனையில் எச்சரிக்கையுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக்கின் மாயமான் நாவலில் வருகிற பாரீஸ் நகரத்து வீதியைப் போல் அங்கங்கே இளைஞர் குழாம். விரல்களில் ரோஜாவை ஏந்திக் கொண்டு ஏதோ எதிரில் நின்று கொண்டிருக்கிற காதலியிடம் இப்போதே கொடுத்துவிடப்போகிற பாவனையில் காதலியைச் சந்திக்க விரைகிற சிறுகதை எழுத்தாளர். காதலியைச் சந்திக்க வேண்டிய நேரம் கடந்து விட்டதென சட்டைப் பையில் காதல் கடிதத்துடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்த ஒரு கவிஞர். உன்னதமான காதல் என்றால் என்ன என்று சிகரெட்டும் டீயுமாக டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்தும் எழுந்தும் ஆவேசமாக உலகக் காவியங்களை உதாரணம் காட்டி மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருந்த ஆரம்ப கட்ட விமர்சகரும் அனுபவமிக்க பத்திரிக்கையாளர்களும் சுற்றிலுமிருந்த உலகையே மறந்து விட்டிருந்தனர்.  "இதெல்லாம் ஹார்மோன் செய்ற வேலையப்பா" என்று தன் சகதொழிற்சங்கஊழியரிடம் விளக்கமளித்துக் கொண்டிருந்த ஒரு தொழிற்சங்கவாதி.


இவர்களிடமிருந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் வசீகரமான முகமும், குரலும் கொண்ட இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய குரலின் ஏற்ற இறக்கத்தையயாட்டி தங்களுடைய தலையை ஆட்டியவாறு இன்னொரு இளைஞர் கூட்டம் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அவர் தனக்கேயுரிய தர்க்க விவரணையுடன் இந்த முதலாளித்துவ அமைப்பில் நிலவுகிற காதலின் போலித்தனத்தைத் தோலுரித்துக் கொண்டிருந்தார். புரட்சிக்குப் பிந்தைய சமூகத்தில் வரப்போகும் காதல்தான் உண்மையான ஜனநாயகப்பூர்வமான. சமத்துவக் காதல் என்று ஆதாரங்களோடு சொல்லிக் கொண்டிருந்தார். பழகிய ஐந்தாவது நிமிடத்திலேயே இளைஞர்களைத் தன்பால் ஈர்த்து விடுகிற அந்த இளைஞர் தோழர் பாலு. இளைஞர்கள் மீதான அவருடைய ஈர்ப்பு இன்னும் குறையவில்லை. இப்போதும் யாரேனும் இளைஞர்களைப் பார்த்தவுடன் அவரது கண்கள் பளபளப்பதைப் பார்த்திருக்கிறேன்.


நாங்கள் நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, நான் தோழர் பாலுவைச் சுற்றி ஈக்களைப் போல மொய்த்துக் கொண்டிருந்தோம். அவருடனான உரையாடலின் காந்தசக்தியில் எங்களை மெய்மறந்திருந்தோம். அவருடைய பேச்சின் தாக்கம் ரொம்ப விஸ்தாரமாக எல்லா ஆதாரங்களையும், உதாரணங்களையும் சுற்றிலும் அடுக்கி விவரித்து ஒரு தேர்ந்த கட்டிடக் கலைஞன் கட்டுகிற கோபுரம் போல உயர்ந்து உயர்ந்து முடிவில் அதன் சிகரத்தைக் கட்டி முடிக்கும். நாங்கள் பேச்சற்று நிற்போம். எங்களுக்கு பிரமிப்பாக இருக்கும். எங்களிடமிருந்து கேள்விகளே எழாது. அப்படியே எழுந்தாலும் மிகவும் பலகீனமானவையாகவோ, அல்லது ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்ட பதிலுக்கான கேள்வியாகவோ முனகும். அவர் ஒரு பெருந்தன்மையான சிரிப்புடன் அதை பலமாக வரவேற்பார். நல்ல கேள்வி என்று பாராட்டுவார் ஆழ்ந்து இரண்டு முறை புகையை இழுத்து விடுவார். எங்களில் மற்றவர்கள் அவரைப் பார்த்துப் பொறாமைப்படுவோம். பின் மறுபடியும் இன்னும் எளிமையாக விளக்கத் துவங்குவார் தோழர் பாலு. உண்மையில் இடதுசாரி சிந்தனைகளை ஊட்டி வளர்த்த ஞானகுருவாக இருந்தார் தோழர் பாலு.


இடதுசாரி சிந்தனைப் பள்ளியுடன் அறிமுகமாகிற எல்லோரையும் போல தாய் தொடங்கி தேர்ந்தெடுத்த வரிசையில் நூல்களை வாசித்தோம். அந்த வரிசையில் நாங்கள் இவான் துர்கனேவையும் சந்தித்தோம். அவருடைய ‘தந்தையரும் தனயரும்’ ‘மூன்று காதல் கதைகள்’ எங்களை மிகவும் ஈர்த்தன. அதிலும் குறிப்பாக முன்று காதல் கதைகள்.


எங்கள் வயது இளைஞர்களைப் போலவே எங்களையும் காதல் தன் மெல்லுணர்வுகளால் ஆட் கொண்டிருந்தது. நாங்கள் நான்கு பேரும் தனித்தனியே காதலிகளைக் கற்பிதம் செய்து கொண்டோம். தினமும் எங்கள் காதலைப் பற்றித் தனித்தனியே ஒருவரையயாருவர் சந்திக்கும் போதும், எல்லோரும் சேர்ந்திருக்கும் போதும் பேசிக் கொண்டோம். அதில் பெருமகிழ்வு கொண்டோம். புதிய சக்தியின் ஊற்றுக் கண்பெருகுவதைப் போலவும், எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும் உற்சாகமாய் அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் எங்களுடைய இந்தக் காதல் வி­யங்களைப் பற்றி தோழர் பாலுவிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை. அவர் ஒரு புரட்சிகர அரசியல்வாதி. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று நினைத்தோம். அதோடு எங்கள் காதல் கனவுக் குமிழ்களை அவருடைய புரட்சிகர கூர் ஈட்டியினால் குத்திக் கிழித்துவிடுவாரோ என்று பயந்தோம். அதனால் நாங்கள் எங்களுக்குள் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். தோழர் பாலுவுக்கு முன்னால் எங்கள் காதலைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.


இவான் துர்கனேவின் ‘மூன்றுகாதல் கதைகள்” புத்தகத்தைப் படித்த பிறகு எங்கள் காதலுணர்வு இருமடங்காகி விட்டது. ஆஸ்யாவைப் பற்றி நாறும்பூநாதன் சிலாகித்தார் என்றால் முதல் காதலை நான் வியந்து போற்றினேன். சாரதி வசந்த கால வெள்ளத்தைப் பற்றிப் பேசினார். முத்துச்சாமி எங்களுடைய உளறல்களைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.


இவான் துர்கனேவ் (1818 - 83) தன்னுடைய கவித்துவ மிக்க நடையினாலும், உணர்ச்சி கொப்பளிக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பினாலும், மனித மனதின் ஆழத்தைத் தன் கூரிய பார்வையால் ஒளியேற்றித் துலங்கச் செய்தவர். தான் வாழ்ந்த காலத்திலேயே பெரும் புகழ் பெற்றவர். டால்ஸ்டாய் போற்றி மகிழ்ந்த ரஷ்ய எழுத்தாளர் துர்கனேவின் பெரும்பாலான படைப்புகள் அவருடைய சொந்த அனுபவங்களே. ஆனால் அந்தக் கலைப் படைப்புகளை வாசிக்கும் போது அவை ஏற்படுத்தும் உணர்வுகள் அபூர்வமானவை. மூன்று காதல் கதைகளை வாசிக்கும் எவரும் உணர்ச்சி ததும்பும் இந்தப் புனைவின் கணங்களை நம் வாழ்வில் பெற மாட்டோமா என்று ஏங்கித் தவிப்பார்கள்.


துர்கனேவ் தம் முதுமைக்காலத்தில் மீண்டும் மீண்டும் வாசித்தது அவருடைய அன்புக்குரிய படைப்பான முதல்காதலை. எதிர்பாராத கணங்களில் ஏற்படும் எதிர்பாரா முடிவுகளில் மீதே இந்தக் காதல் கதைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு அசைவு, ஒரு சொல், ஒரு செயல் இந்த வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிற மாயாஜாலத்தை இவ்வளவு அழகாக யார் சொல்லியிருக்கிறார்கள் ?

பெண்கள் எல்லோருமே ஆஸ்யாவாகவும், ஜெனயீதாவாகவும், ஜெம்மாவாகவும் தெரிந்தனர். இனந்தெரியாத ஒரு மாயக் கவர்ச்சி இந்தக் கதாபாத்திரங்களின் மீது ஏற்பட்டது. இந்தக் கதைகளில் உள்ள தூய அப்பாவித்தனமான ஆனால் ஆவேசமிக்க உணர்ச்சிகளின் வெள்ளத்தில் நாங்கள் சிக்கி அதன் சுழிகளில் ஆழ்ந்து மூழ்கி இன்புற்றோம் என்றால் மிகையில்லை. நான் எனது குறிப்பேட்டில், துர்கனேவின் வரிகளை எழுதிவைத்து அடிக்கடி வாசித்துப் பார்த்து ஒரு செயற்கையான சோகத்தை மனதில் ஏற்படுத்திக் கொள்வேன்.

காதல் என்பது துன்ப உணர்வு, வாழ்க்கையின் மகத்தான மர்மங்களில் ஒன்று. இயற்கையினுடைய உற்பாத சக்தியின் வெளிப்பாடு. இந்த ஆற்றலுக்கு முன் மனிதன் முற்றிலும் பாதுகாப்பாற்வன். புகலற்றவன். காதல் மனிதர்களை விதி போலத் தாக்குகிறது. ஆர்வலாகப் பீரிடுகிறது. வாழ்வில் கவிதை ஓளி பரப்புகிறது. பின்பு துன்பமாக முடிகிறது.

ஆனால் தோழர் பாலுவிடம் இதைப்பற்றியயல்லாம் பேசவில்லை. எங்களுக்கென்றே உரித்தான அந்தரங்கமான ரகசியம் போல துர்கனேவின் மூன்று காதல் கதைகளைப் பற்றிய எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். யாரிடமும் ஒரு வார்த்தை பேசவும் பயந்தோம். அன்று இரவு ஒன்பது மணி இருக்கும். காந்தி மைதானத்தின் இறக்கத்தில் எங்களுக்கு எப்போதும் கடன் தரும் பாய் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தோம். மிக ஆவேசமாக அன்றைய அரசியல் நிலவரம் குறித்து எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் தோழர் பாலு. அப்போது டீக்கடை, ரேடியோவிலிருந்து, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலிருந்து ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ’ என்று பாட்டு ஒலிபரப்பானது.

 

பேசிக் கொண்டிருந்த தோழர் பாலு அப்படியே பேசிக் கொண்டிருந்த வார்த்தையின் நடுவிலேயே ஒலியிழந்து அமைதியாகி விட்டார். முதலில் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. பாலுவையே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது  அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே. ஏற்கெனவே சிவந்த அவருடைய முகம் இன்னும் சிவந்து வசீகரமானது. கண்கள் மின்னின, உதடுகளில் எதையோ சொல்ல வருகிற ஏக்கம். இரத்தம் முழுவதும் முகத்தில் பாய்ந்து உயிர்த்துடிப்புடன் முகம் ஒளிவீசியது. எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. பாட்டு முடிந்ததும் வேறு ஒரு உலகத்திலிருந்து அப்போதுதான் வந்து சேர்ந்ததைப் போல, இன்னும் கண்களில் பொங்கிய உணர்ச்சிகளை மறைக்க முடியாமலேயே,

“துர்கனேவின் மூன்று காதல் கதைகளைப் படிச்சிருக்கீங்களா?” என்றார். எங்கள் விழிகள் வியப்பால் விரிந்தன. காதல் மகத்துவமானது. காதல் உன்னதமானது. எங்கள் இளம் பருவத்துக் காதலே உன்னை வணங்குகிறோம். இவான் துர்கனேவ் உங்களையும்.

- உதயசங்கர்

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அண்ணா இப்பவே படிக்கணும் போல இருக்கே !!!




    அன்புடன் கிச்சான்

    பதிலளிநீக்கு
  2. இவர் கோணங்கியைப் பற்றி எழுதியதை, கவிஞர் நேசமித்ரனின் Buzz-இல் வாசித்தேன். கோவில்பட்டித் தெருக்களில் உலக எழுத்தாளர்களை உலவவிட்ட அந்த எழுத்துநடை என்னை வசீகரித்தது (இலக்கிய ஒளித்திடல்களில் பார்வையாளனாகக் கூடப் பங்குகொள்ள வாய்ப்பில்லாமல் நெடுங்காலம் ஊர் உலகம் சுற்றிப் பிழைப்புவழிகளில் திரிந்த நான் உமாசங்கரை வாசித்திருக்க வாய்ப்பில்லை.)

    அதே நேசமித்ரன் Buzz வழிதான் இந்தத் தொடுப்பும் கிடைத்தது.

    உங்கள் முன்னுரையில், //உதயசங்கர் இப்போது கோவிலபட்டி அருகே குமாரபுரம் என்னும் ஊரில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராய் இருக்கிறார். (குமாரபுரம் என்றால், கு.அழகிரிசாமி நினைவுக்கு வருகிறாரா?)// என்னும் வரிகளை வாசித்த மட்டில் ஒரு விம்முதலில் சில விநாடிகள் எனக்குப் பைத்தியம் பிடித்திருந்தது என்றால் நம்புவீர்க்ளா?

    கோவில்பட்டி என்னும் விளைநிலம் பற்றி இப்போதும் (இற்றைக் கவிஞர் மிருணா வரை) எண்ணி வியப்பவன் நான்.

    துர்கனேவ் பற்றிய இக் கட்டுரையிலும் கோவில்பட்டிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் உதயசங்கர். வாழ்க!

    பதிலளிநீக்கு
  3. சே.குமார்!
    மிக்க நன்றி.

    கிச்சான்!
    தம்பி, அடுத்த பதிவும் வெளியிட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. ராஜசுந்தர்ராஜன் சார்!

    வணக்கம். எப்படியிருக்கீங்க.

    முதலில் நேசமித்திரனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    நமக்குப் பிடித்தவர்கள், பிடித்தது இன்னொருவருக்கும் பிடித்துப் போவது எவ்வளவு சந்தோஷமானது! அந்த இன்னொருவர் ராஜசுந்தர ராஜன் போன்றவராய் இருந்தால்... ரொம்ப சந்தோஷம்.

    குமாரபுரம் என்றதும் எழுந்த உங்கள் விம்மலை, ஒரு தூரத்து ரயிலின் ஓசை போல கேட்க முடிந்தது.

    அப்புறம்.... நாளை பவுர்ணமி இரவு, நான், பிரியா கார்த்தி, கவிஞர் கிருஷி எல்லோரும் குமாரபுரம் ஸ்டேஷன் செல்கிறோம். அங்கு உதயசங்கர் மட்டுமா இருப்பார்?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!