வெயிலோடு விளையாடி......

Sun through the Parsonage Window

மருத்துவரைப் பார்க்க வந்திருந்த அந்த இளம் பெண் எப்போதும் சோர்வும், உடல் வலியும் இருப்பதற்கு எந்த சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை என்று தனது பிரச்சனையை எடுத்துச் சொன்னார். வழக்கமான கேள்விகள், பதில்கள்.. கடந்து போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஒரு கட்டத்தில் மருத்துவர் கேட்டிருக்கிறார்: உடற்பயிற்சி எதுவும் கொஞ்ச நேரமாவது செய்வதுண்டா....?

சரியாய்ப் போச்சு, காலையில் ஆறு மணிக்கு வேலைக்குப் புறப்பட்டா, இராத்திரி பத்து மணிக்கு வந்து அடைய வேண்டியிருக்கு வீட்டுக்குள்ள, இதில் எங்கே சார் உடற்பயிற்சி, கடல் பயிற்சி என்று அலுப்போடு பதில் வந்திருக்கிறது.  கிட்டத் தட்ட நழுவிப் போயிருக்க வேண்டிய ஒரு பொறி சட்டென்று தட்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு பரிசோதனையை செய்துவருமாறு எழுதிக் கொடுத்திருக்கிறார்.  அதன் முடிவு தெரிந்தபோது, மருத்துவர் பார்த்த கோணம் சரி என்றானது. அந்தப் பெண்ணுக்கு வைட்டமின் D சத்து குறைவு.  அதனால் தான் பல வேறு பிரச்சனைகள் தீர்க்க முடியாமல் ஆகிக் கொண்டிருந்தது.  அது சரி, வைட்டமின் D குறைவாக இருக்கக் கூடும் என்ற சிந்தனை மருத்துவருக்கு எதனால், எப்போது ஏற்பட்டது?

காலை விடியலின்போது வீட்டைவிட்டுப் புறப்படுபவர் இரவு நேரத்தில் தான் திரும்புகிறார் என்றால் நேரடி சூரிய வெளிச்சமே அவர் மீது பட்டிருக்க வாய்ப்பில்லையே என்று யோசித்திருக்கிறார். நேரடியாக கதிரவனின் கதிர்கள் மூலம் மட்டுமே உடலுக்கு இலகுவாக வாய்க்கக் கூடிய வைட்டமின் D சத்து இந்த இளம் பெண்ணுக்கு கிடைக்காமலே போய்க் கொண்டிருப்பதன் பிரதிபலிப்பை உடல் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. உணர்ந்து தேடுபவர்களுக்கு பிடிபடும் தடயம் அது. இதற்குப் பிறகு இந்த மருத்துவர் வேறு சில நோயாளிகளுக்கும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இதே போலவே D வைட்டமின் பரிசோதனை எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதிர்ச்சியான விஷயம் ஐம்பது பேரை எடுக்கச் சொன்னதில், இரண்டு பேருக்கு மட்டுமே இந்தச் சத்து உரிய விகிதத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. 

அந்த இளம் பெண்ணுக்கு மருந்துகளோடு முக்கிய அறிவுரையாக மருத்துவர் சொன்னது, கொஞ்சம் வெயில் படுமாறு அன்றாட வாழ்க்கை அட்டவணையில் மாற்றம் செய்யவேண்டும் என்பது. அதிகம் வெயிலில் சுற்றாதே, வேகாத வெயிலில் ஏன் வந்தே, யப்பா மண்டையப் பொளக்குது வெயிலு...என்று நாம் பேச நேரும் இந்த வெயிலில் உடல் தனது முக்கியமான தேவையைப் பெற்றுக் கொள்கிறது என்பது தான் இப்போது நாம் விவாதிக்க இருப்பது.(கைம்மாறு எதுவும் எதிர்பாராது, சூரியன் வழங்கும் இலவச வைட்டமின் D திட்டம் இது!).

தோல் சேகரிக்கும் வைட்டமின் Dயை கல்லீரல் உரிய முறையில் உடலுக்குத் தேவையான சத்தாக மாற்றிக் கொடுக்கிறது. நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கால்சிய சத்து, எலும்புகளுக்குப் போய்ச் சேர வைட்டமின் D பங்களிப்பு முக்கியமானது. வைட்டமின் D பற்றாக்குறை இருக்கும்போது நாம் எவ்வளவு கால்சியம் சேர்த்துக் கொண்டாலும், கால்சியம் மாத்திரைகளாகவே உட்கொண்டாலும்  அதை உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது இயற்கையின் நுட்பமான அம்சம்!
 
அதிக வெயில் மறுக்கப்பட்டிருக்கும் குளிர் நாடுகளில் வைட்டமின் D சத்து உணவோடு சேர்த்து (Food Supplements) சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. நம்மூரில் இதெல்லாம் கிடையாது.(அதற்கும் இப்போது ஒரு லாபவெறி வர்த்தகக் கும்பல் புறப்பட்டிருப்பது இந்தக் கட்டுரை எழுதும் அன்று ஒரு பத்திரிகைச் செய்தியில் தெரியவந்தது...இந்தியாவிலும் பால், வெண்ணை, மாவு ஆகியவற்றில் வைட்டமின் D சத்து கலந்து சிறப்புவகை உணவுப் பொருள்கள்  விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறார்களாம். தற்போது ஆயிரம்  குழந்தைகளுக்கு அந்தச் சிறப்பு பால் கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கிறார்களாம். இதன் பக்க விளைவுகள் பற்றியோ, வெயில் தேசத்தில் இத்தகைய சோதனைகளுக்கெல்லாம் என்ன தேவை என்பது குறித்தோ யாரும் கவலை கொள்வதில்லை. பல ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்து தவறு என்று சொல்வதற்குள் எத்தனை சேதம் நடந்து முடிந்துவிடும் என்பதை இப்போதே எச்சரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது).
 
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய்  போற்றி என்று 'கர்ணன்' போலவே         நாமும்,  'ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான' பகலவன் உதவியை நன்றியோடு பெற்றுக்      கொள்ள வேண்டும்.  மருத்துவர்களுக்குப் பார்வை நேரம் இருப்பது போல் பகலவனின் 'பார்வை நேரம்' நமக்குத் தேவையான சத்து கிடைக்க தோதான நேரம், பத்து மணி முதல் மூன்று வரை என்று எடுத்துக் கொள்ளலாம். நல்ல வெயில் நேரம் என்று நீங்கள் முணுமுணுத்துக் கொள்வது கேட்கிறது. உடலின்  கால் பாகமாவது கதிரவன் பார்வைக்குப் படும்படி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வாரத்துக்கு மூன்று நாளாவது இந்தச் சத்தை நாம் சேகரித்துக் கொள்வது நல்லது. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன?

கொஞ்சம் நமது உடைகளையும், நமது அன்றாட வாழ்நாள் கடந்து போகும் தன்மையையும் ஒரு சேர யோசித்துப் பாருங்கள். இறுக்கமான நமது உள்ளங்களைப் போலவே நமது உடைகளும் அமைந்துவிடுகின்றன. இலேசில் இளகாத வாழ்க்கை நமது வாழ்க்கை. போதாததற்கு வெயிலில் போனால் கறுத்துவிடுவோம் என்ற அச்சம் வேறு நமக்கு. தப்பித் தவறி, நமது முயற்சிகளையும் மீறி வெயில் பட்டுவிடுகிற முகத்தின் மீதும் நாம் பாதுகாப்பு (யாருக்கு?) கிரீம் வகையறாக்களை தடவி வைத்துக் கொள்கிறோம்...இதை எல்லாம் கொஞ்சம் 'மறுவாசிப்பு' செய்வது நமக்கு நல்லது. 

இயற்கையின் வினோதம் பாருங்கள். தோல் வெளுப்பாக இருந்தால் விரைவாக வைட்டமின் D சத்தை சூரிய ஒளியிலிருந்து எடுத்துக் கொண்டுவிடுமாம். கறுப்புத் தோல் இருப்போர் கொஞ்சம் அதிக நேரம் வெயிலில் அலைந்தால் தான் தேவையான சத்தை உறிஞ்சிக் கொள்ள முடியுமாம்.  இப்படி தேவையான அளவு இந்த குறிப்பிட்ட வைட்டமின் சத்து இல்லாவிட்டால் தான் என்ன என்கிறீர்களா? தலை முதல் கால் வரை எத்தனையோ வித நோய்கள் வராது தடுக்கவும், அப்படியே வந்துவிட்டால் அந்த நோய்கள் தீவிரம் அடையாமல் மட்டுப்படுத்தவும் வைட்டமின் D சீருடை அணியாத பாதுகாவலராக இருந்து செயல்படுகிறார். அது மட்டுமல்ல, ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஹார்மோன் வளத்தைப் பெருக்கி  (Fertility Improvement) குழந்தைப்பேறு  இனிதே அமையவும்  உதவுகிறது வைட்டமின் D.

வெயிலை வெள்ளை ஆடையாக வருணித்த நற்றிணைப் பாடலில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் வருகிறது. தலைவனைப் பார்த்து, தோழி கூறுகிறாள்: 'நீ தலைவியைப் பிரிந்தால், பசலை நோய் அவளது அழகைத் தின்றுவிடும்..'  வைட்டமின் D குறைந்தால் உடல் வெளிறி இரத்த சோகை ஏற்பட்டால் வரும் பசலை நோய் போல் ஆகிவிடும்.  அதாவது சூரிய ஒளி மறுக்கப்பட்ட இலைகள் வெளிறிப் போவது போல் வாடிவிடுகிறது  உடல்.
 
உளச் சோர்வு, மனப் பிறழ்வு, நுரையீரல் நோய்கள், அடிக்கடி சளி, தொண்டை அழற்சி, ஈரல் பாதிப்புகள், ஓயாத உடல் வலி, எலும்பு தேய்தல், ரிக்கட்ஸ் நோய் (இதைத் தான் தொடக்கப் பள்ளியிலே கற்றுக் கொடுத்திருக்காங்களே..)...என நீளும் இந்தப் பட்டியல் வைட்டமின் D இல்லாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுகிறது. வியப்புக்குரிய இன்னொரு செய்தியையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள். புற்று நோய் வராது தற்காத்துக் கொள்ளவும், புற்று நோய் இருப்போர்க்கு தீவிரமாகாது கட்டுப்படுத்தவும் கூட வைட்டமின் D அரிய சேவை ஆற்றுகிறது. கொஞ்சம் யோசியுங்கள், செயற்கை கிரீம் வகையாறக்கள் வைட்டமின் D கிடைப்பதையும் கெடுத்து, அவற்றின் பக்க விளைவுகளால் நோய்கள் ஏற்படவும் (புற்று நோய் உள்பட!) காரணம் ஆகின்றன என்று ஆய்வுகள் சொல்லும்போது நமது வாழ்க்கை முறையை இயற்கையோடு ஒத்திசைவாய் மாற்றுவோமே..

இப்போது சொல்லுங்கள், இனி ரயிலிலோ, பேருந்திலோ வெயில் அடிக்கும் இருக்கையைத் தவிர்க்க விரும்புவீர்களா, அடித்துப் பிடித்துப் போய் உட்கார துடிப்பீர்களா!  முழுவதுமாகக் குளிர் சாதன  வசதி செயயப்பட்ட பள்ளிக்கூடம் தேடிக் குழந்தைகளைச் சேர்ப்பீர்களா, வெயிலோடு போய்  விளையாட்டு மைதானம் முக்கியம் என்று முடிவெடுப்பீர்களா? நாற்பது வயதுக்குமேல் உடல் நல பிரச்சனைகளுக்கு யார் தீர்வு கொடுப்பார்கள் என்று தடுமாறிக் கொண்டிருப்பீர்களா, காலா காலத்தில் தேவையான சத்துக்களை முன் கூட்டியே சேகரித்துக் கொள்வீர்களா? வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்து நோய் நொடிகளை முற்ற வைத்துக் கொள்வோமா, வாசல் திறந்து வெளி உலகக் காற்றையும், கதிரையும் பருகி வியாதியிலிருந்து  விடுதலை தேடுவோமா?

இனி, கால் கடுக்க யாராவது அலுவலகத்திற்கு வெளியிலோ, வகுப்பறைக்கு வெளியிலோ நிற்க நேரும்போது, வைட்டமின் D சேகரித்துக் கொள்ளத்தான் இங்கே நிற்கிறேன் என்று சொல்லி சமாளித்துக் கொள்ளலாம். தேர்தலில் அலைந்து வாக்கு கேட்டும் தோல்வியைத் தழுவ நேர்ந்த வேட்பாளரிடம், அட விடுங்க 'வசூல்' (நாம் குறிப்பிடுவது வைட்டமின் D வசூல்) தான் தேத்திக்கிட்டோம்ல....அப்புறம் பார்த்துக்கலாம்..என்று சமாதானம் சொல்லலாம்.

மருத்துவர் பரிசோதனை செய்யச் சொன்ன ஐம்பது பேரில் இரண்டு பேருக்குத் தான் வைட்டமின் D போதுமானதாக இருந்தது என்று பார்த்தோம் அல்லவா.. குறைவாக இருந்தவர்களில்  பள்ளி மாணவர்கள், மாலை நேரத்தில் மட்டும் பயிற்சி செய்யும் ஒரு கால் பந்து வீரர் எல்லோரும் இருந்தனராம். அது தான் நல்ல வெயில் நேரத்தைப்  பயனபடுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வது. உரிய தேவைக்கான வைட்டமின் பெற்றிருந்த அந்த இரண்டு பேர் யார் என்று கேட்கிறீர்களா...ஒருவர் 83 வயது பாட்டி. இன்னொருவர் 55 வயது ஆண் ! பாட்டி  வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டு வேளை தவறாமல் பராமரிப்பவராம். அடுத்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்- வீதி வீதியாய் வசூலுக்கு அலைபவர்.  இதுதான் பெரிசு இரண்டுக்கும் வைட்டமின் சத்துக் குறைவு என்ற பேச்சே எழவில்லை.
 
மண்டை வெடிக்கும் வரை, சன் ஸ்ட்ரோக் வரும் வரை வெயிலில் அலைய வேண்டாம், நியாயம் தான், ஆனால் வெயில் படாத திருமேனி என்ற பட்டம் நமக்கு எதற்கு? 
    
வைட்டமின் D பயன்பாடு பற்றிப் பேசும்போது கல்லீரலும், சிறுநீரகமும்    கூட செயல் திறனுள்ளதாக இருந்தால் தான், அது முழுமையாகப்  பயன்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த இரண்டின்  நலன் காப்பது உடல் நலனைக் காப்பதில் முக்கிய இடம் பெறுகிறது.

குயில் பாட்டின் வசீகர வரிகளில் ஒன்றில், மகாகவி பாரதி, கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே பண் கூத்து என்னும்  இவற்றின் சாரமெல்லாம் ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலில் காய வைத்த கட்டியினால் காதலியின் மேனியைச் செய்தான் பிரமன் என்பதாக எழுதியிருப்பார்.  வெயிலின் உருக்கம் காதலில் கொப்பளிப்பதைப் பார்த்தீர்களா..காதல் வெயில் ஒரு புறம் இருக்கட்டும், வெயிலின் மீது காதல் கொள்வோமாக.


(மருத்துவர் பி வி வெங்கட்ராமன், M .D (ஓமியோபதி)
அவர்களது ஆலோசனைக் குறிப்புகளிலிருந்து எஸ்.வி.வேணுகோபாலன்)

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கருப்பு நிறம் ஒளியை அதிகம் உள்வாங்கும் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன்...

    பதிலளிநீக்கு
  2. //மண்டை வெடிக்கும் வரை, சன் ஸ்ட்ரோக் வரும் வரை வெயிலில் அலைய வேண்டாம், நியாயம் தான், ஆனால் வெயில் படாத திருமேனி என்ற பட்டம் நமக்கு எதற்கு?//

    வெய்யிலின் அருமை தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆரோக்கியமான விஷயம், வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. நான் வெயில் உபாசகன். சிறு வயதில் இருந்தே வெயில் குடித்து வளர்ந்தவன். எங்கள் ஊரில் தெய்வமே வெயில் உகந்த அம்மன் தான். வெயில் என்பது சூரிய வெளிச்சம் மட்டும் இல்லை. அது ஒரு மனநிலை. நினைத்தால் உக்கிரமாகும். மறுநிமிஷமே தணிந்து ஒடுங்கிப் போகும். கோடையில் வெயில் முற்றுகிறது என்று ஊரில் சொல்வார்கள். அப்போது வெல்லப்பாகு காய்ச்சி முறுகும் தருணத்தில் அலாதியான வாசனையும் பிசுபிசுப்பும் உருவாகுமே அது போல, ஒரு நிலையை வெயில் அடையும். அந்த வெயிலை எனக்கு பிடிக்கும். - எஸ்.ராமகிருஷ்ணன்
    'வெயிலோடு விளையாடி' வாசித்ததும் நான் ரொம்ப மகிழ்ந்தேன். ஏனென்றால், நானும் வெயில் உபாசகன்தான். நான் காலையில் அலுவலகத்திற்கு செல்லும் திசை கிழக்கு. எனவே, காலையும் மாலையும் சூரியனின் நேரடிப்பார்வையில் செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது. மேலும், நான் பணிக்கு சைக்கிளில் செல்வதால் சூரியனோடு பேசிக்கொண்டும், உக்கிரம் கொள்ளும் போது திட்டிக்கொண்டும் செல்வேன். சூரியனும் சைக்கிளும் என் கூட வரும் நன்பர்கள் மட்டுமல்ல, தெய்வங்கள்.
    அற்புதமான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. @ germanganeshan!
    @suryajeeva!
    @வை.கோபாலகிருஷ்ணன்!
    @ஓசூர் ராஜன்!
    @சித்திரவீதிக்காரன்!

    நன்றி.

    @எஸ்.வி.வி!
    எழுதிய தங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!