ஒரு கல்விப் போராளியின் கதை

kamalalayan book

ரே ஒரு வாக்கியம் தான் அது. இரண்டு குழந்தைகளுக்கு இடையேயான உரையாடலில் அதன் ஒலியளவு மிக அற்பமானது. அதை ஒரு பெரிய நாவலுக்கிடையே, பத்திரிகைச் செய்திக்கு நடுவே, அலைபேசி குறுஞ்செய்தியின் ஊடே வைத்தால் அதை நீங்கள் எளிதில் கவனிக்காது கடந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகம். 

சரி போகட்டும், இப்போது ஒரு பயிற்சி செய்து பார்ப்போம் வாருங்களேன், "உனக்குப் படிக்கத் தெரியாது..."என்ற வாக்கியத்தை வெவ்வேறு முறையில் உரக்கச் சொல்லிப் பாருங்கள். பெரிதாய்த் தெரியவில்லை இல்லையா.. சரி,  நீங்கள் சொல்ல வேண்டாம், உங்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு சிறுமி என்று கற்பித்துக் கொள்ளுங்கள், உங்களைப் பார்த்து, 'அந்தப் புத்தகத்தை எடுக்காதே, உனக்குப் படிக்கத் தெரியாது...'  என்று உங்கள் எதிரே இருந்துகொண்டு யாரோ சொல்கிறார்கள்........ இப்போது தெரிகிறதா வலி? அந்த வலி உங்களை உங்கள் ஆயுட்காலம் ஆட்டிப்படைத்தால்..? அந்த அவமானச் சொற்கள் உங்கள் வாழ்நாள் முழுமையும் உங்களுக்கு எதிரே இருந்து மறைய மறுத்தால்..?

சாம், பாட்சி மெக்லியூத்  தம்பதியினர் பெற்றெடுத்த பதினேழு குழந்தைகளில் பதினைந்தாவது சுட்டிப் பெண் தான் மேரி. மேலே நீங்கள் வாசித்த, இனி உங்கள் வாழ்விலும் நீங்கள் மறக்க முடியாத, அந்த  இழிவான சொற்களைத் தனது மூளையில், கரங்களில், இதயத்தில் ஊன்றிக் கொண்டு ஆனால் நடைமுறையில் அதை மறுத்துப் பெரிய கல்வியாளராக மலர்ந்து நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்தவர் மேரி பெக்லியூத் பெத்யூன்.

படிக்கத் தெரியாது என்று தனக்குப் பின்னும் எந்தக் கறுப்பின மனிதரும் நிராகரிப்பின் அருவருப்பைச் சுவைக்கக் கூடாது என்று உழைத்து சாதித்தவர். அமெரிக்காவின் அற்புதக் கறுப்பின மனிதர்கள் வரிசையில் முக்கிய இடத்தை அடையாளப்படுத்திக் கொண்ட மேரி அவர்களின் கதை, ஒரு திரைப்படம் உங்களை நம்பவைக்க இயலாத சாகசங்களும், திருப்பங்களும் நிறைந்தது. ஆனால் உண்மையின் ஒளி நிரம்பியது. அதன் மிகச் சுருக்கமான, ஆனால் ஆழத்தை உணர்த்திவிடத் தக்க காத்திரமான பதிவாக வெளிவந்திருக்கிறது, கமலாலயன் ஆக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் பருத்திப்பண்ணை ஒன்றில் காலை கருக்கலில் வீட்டை விட்டு வெளியேறி மதியம் உணவுக்கு ஒரு நடை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் இரவு கவியும் நேரம் வரை உழைக்கும் பெற்றோருக்கு உதவியாகக் களம் இறங்கும் பிள்ளைகளில் ஒருவராக அறிமுகமாகும் மேரியை, அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு வெள்ளைக்காரச் சிறுமி உனக்குப் படிக்கத் தெரியாதென அவமதித்து விடுகிறார். அது தான் அவரது சுயமரியாதை வில்லில் பூட்டிய நாணாக இருந்து அடுத்தடுத்த அம்புகளை வேகமாக எய்துவதற்கு அடிப்படை ஆகிவிடுகிறது.

கேட்டால் உதவி மறுக்க முடியாத கொஞ்சும் கெஞ்சுதலோடும், தாகத்தோடும் எப்படியோ உயர்கல்வி வரை படித்து முடிக்கும் மேரி தனது ஒரே இலட்சியம் கறுப்பினக் குழந்தைகளுக்கு உகந்த மேம்பட்ட கல்வியை வழங்குவது என்று தெளிவாக இருக்கிறார். அவரது பரிசோதனைகள் பின்னர் அழகாக கருக்கொள்ளவும், உருக்கொள்ளவுமாக அமைகிறது அவரது வாழ்க்கை வரலாறு.

ஐந்து சிறுமிகளும், தனது மகனுமாக ஆறே குழந்தைகளோடு பள்ளி தொடங்க  நினைத்தபோது அவரிடம் இருந்தது வெறும் ஒன்றரை டாலர்கள். அடடா...அதற்குப் பின் அவர் திரும்பிப் பார்க்க நேர்ந்ததில்லை. பிச்சை புகாமல், கற்கை நன்றே என்று புதிய கீதம் இசைத்தார் அவர். தனது பள்ளித் தேவைகளுக்காக ஒற்றை ஒற்றை நாணயத்தையும் அவர் வலியோடும், வேதனையோடும் வசூலித்தார்.  அந்த நிறுவனம் இன்று பெரிய பல்கலையாக (பெத்யூன்-குக்மன்  பல்கலைக் கழகம்) பரிணமித்திருக்கிறது.

எந்த வசதியுமற்ற பழங்காலக் கட்டிடம் ஒன்றில் அவர் பள்ளி நடந்துகொண்டிருந்த போது, அங்கே வந்த கனவான் ஒருவர் நீங்கள் சொன்ன அந்தப் பெரிய பள்ளி எங்கே இருக்கிறது என்று கேட்க, எனது இதயத்தில் என்று மேரி பதிலிறுப்பது அத்தனை அழகு. யார் தான் மறுக்க முடியும் உதவிக்கு! பள்ளிக்கு அருகில் இருக்கும் சிறைக்கூடத்தின் கைதிகள் வருகிறார்கள் - பழங்களும் இன்ன பிறவும் பள்ளிக்கு வழங்க! நொந்து போன தமது இதயங்களைக்  குழந்தைகளின் இசைப்பாடல்களால் குளிர்வித்துக் கொண்டவர்கள் அவர்கள். இன்னொருமுறை உள்ளூர் தொழிலாளர்கள் வாசலில் காத்திருக்கிறார்கள், தங்களது எளிமையான ஒரு நன்கொடையோடு. ஒரு கட்டத்தில் மிகப் பெரும் தொகையை ஆர்ப்பாட்டமின்றி ஒரு மூதாட்டி கொடுத்துவிட்டுச் செல்கிறாள்.  மேரியின் கனவுப் பள்ளி எழும்பி நின்றுவிடுகிறது...

மேரியின் வாழ்க்கைக் கதையை வாசிக்கையில் சிங்கிஸ் ஐத்மாத்தவின் அற்புத நவீனமான 'முதல் ஆசிரியர்'  அடிக்கடி நினைவுக்கு வந்து போகிறது. பாப்ளார் மரங்கள் தெரியும் மலைக்குன்றுகள் மீதில் அமைந்தது துய்ஷேனின் எளிய பள்ளி. மேரியின் பள்ளி, பொதுக் குப்பைகள் கொட்டும் இடத்தை விலைக்கு வாங்கி எழுப்பப்படுகிறது.  பள்ளிகளில்  மட்டுமல்ல, மருத்துவமனையிலும் கருப்பர்கள் சந்திக்கும் கசப்பான நிராகரிப்பைக் கண்ணுறும் அவர், ஈரமிக்க மனிதர்கள் பலரது உதவிகளோடு வசதிமிக்க மருத்துவமனை ஒன்றையும் நிறுவுகிறார்.

அடிமையாய்த் தமது வாழ்வின் துயர நதிகளில் மூச்சுத் திணறிய பழைய வாழ்வை மறந்திராத தமது தாயை மேரி வரவழைத்துத் தனது சாதனையைக் கண்கொண்டு பார்க்க வைக்கும் இடமும், சின்னஞ்சிறுமியாய் தாம் இருக்கையில் தமக்கான தொடக்கக் கல்வியின் கதவுகளைத் திறந்து வைத்த வெள்ளைக்காரப் பெண்மணியின் முன்பாகவே பின்பு ஒரு விருதைப் பெரும் அந்த சிலிர்க்கவைக்கும் மேடையும், வெள்ளை நிறவெறி மிக்க 'கு க்ளக்ஸ் கிளான்'(KKK) அமைப்பின் தீவிரவாதப் படையின் அணிவரிசைக்கு அஞ்சாது தமது பள்ளிக்கூடத்தின் விளக்குகளை எரியவைத்துத் துணிச்சலாக வாசலில் நிற்பதும், அடுத்தநாள் தடையை உடைத்துத் தேர்தலில் போய் கருப்பர்களை வாக்களிக்க வைப்பதுமான நிகழ்வும்...என நூல் முழுக்க ஒரு நாவலுக்குரிய பிரமிப்பூட்டும் உண்மை நடப்புகளின் தெறிப்புகளைக்  காண முடியும்.

பருத்திப் பண்ணையின் சாதாரண உழைப்பாளிச் சிறுமி, அமெரிக்க அதிபருடைய  (ரூஸ்வெல்ட்) ஆலோசகராக உயரும் வரலாற்றின் அடிக்கட்டுமானம் எத்தனை சீரிய உழைப்பிலானது, மதிப்பு மிக்கது, வியக்க வைப்பது என்பதை, தன்னடக்கத்தோடு ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் கமலாலயன், மூல நூலின் குரலை  (அதன் விவரங்கள் இல்லாத ஒரே குறை தான் இதில் சொல்லத் தக்கது) இயல்பான தமிழ் வாசிப்புக்கு ஒத்திசைவாக வளமாக வழங்கியிருப்பது சம காலத்தில் நீடித்துக் கொண்டிருக்கும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமிக்க ஓர் இலக்கியக் கொடை.

இணையதளத்தின் சாத்தியத்தில் தேர்ச்சியான கருப்பு-வெள்ளை (சிலேடை தற்செயலானது!) படங்களோடு, மாரிஸ் கை வண்ணத்தில் அசத்தி ஈர்க்கிற அட்டைப்படத்தையும், உள்ளே ஸ்ரீரசாவின் அற்புதமான ஓவியங்களையும் உள்ளடக்கி காலத்தின் பொருத்தமான நூலை வெளியிட்டிருக்கும் 'வாசலுக்கு' வாழ்த்துக்கள்.

 

உனக்குப் படிக்கத் தெரியாது
- கமலாலயன்
96 பக்கங்கள். விலை ரூ.60/-
வாசல் வெளியீடு. மதுரை.
தொடர்பு எண்:98421 02133.

 

-எஸ்.வி.வேணுகோபலன்

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என் தந்தையின் வாழ்க்கை கதை போல் உள்ளது சில பகுதிகள்.. அவர் ஒரு முன்னாள் ஆசிரியர், பலருக்கு.. எனக்கு என்றும் ஆசிரியர்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம்.
    நன்றி.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. புத்தகக்கண்காட்சியில் இந்நூல் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!