எழுத்தாளர் வண்ணதாசனின் எழுத்துக்களில் மாதவராஜ்!


ந்த மாத  ‘புத்தகம் பேசுது’ இதழில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. தீராத பக்கங்களில் அவ்வபோது கவிதைகள், உடல்நலம் குறித்தெல்லாம் எழுதும் தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் சென்னையிலிருந்து இதற்காக சாத்தூர் வந்து ஒருநாள் கூடவே இருந்துவிட்டுச் சென்றார். பேட்டியாக இல்லாமல் இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். அவ்வளவுதான். அதையே ஒரு நேர்காணலாக்கியிருக்கிறார். அத்தோடு  தனக்குப் பிடித்தமானவர்களிடம் அதனை பகிர்ந்துகொள்ளவும் செய்திருக்கிறார். அப்படி அதனை படிக்க நேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள், எஸ்.வி.வேணுகோபாலனிடம் இ-மெயிலில் பகிர்ந்துகொண்டதை எனக்கு அனுப்பியிருந்தார்.  அதை உங்களுடன் பகிரத்  தோன்றியது.

அன்புமிக்க வேணுகோபாலன்,

வணக்கம்.


எனக்கு தமிழ்ச் செல்வன் போல, மாதவராஜையும் பிடிக்கும். அவருக்கு கோவில்பட்டி இடதுசாரிப் பள்ளிக்கூடத்து மாணவர்களிடம் இருப்பதாக நான் உணர்ந்த ஒரு நெகிழ்ச்சிக் குறைவும் இறுக்கமும்  கிடையாது. அவர் கோவில்பட்டிக்காரர் இல்லை, சாத்தூர் காரரும்  இல்லை. அவர் காலில் கழுவமுடியாமல் அப்பியிருக்கும் பிறந்த மண்  திசையன்விளையோ நாசரேத்தோ   அல்லவா. மேலும் தத்துவம் எல்லாம் வாழ்வோடும் உடன் வாழும் சக மனிதரோடும் ஒன்றிப் பொருந்தும்போது அல்லவா முழுமை பெறுகிறது. உண்பது செரித்து ரத்தத்தோடு கலக்க உள் உறுப்புக்களின் அமிலமும் சுரப்பும் செயல்பாடும் தேவைப் படுமே.

மாதவராஜ் தத்துவததைப் புத்தகங்கள் வழி அல்ல, இயங்குவதன் வழி, அப்படி இயங்கும்போது உடனியங்கும் மனிதர் வழியாக அறிந்தவர். அப்பாவும், அண்ணனும், அம்மாவும் தங்கையும், மனைவியும் மகளும் மகனும் என்ற குடும்ப மனிதர்கள், அவருடைய சமூக மனிதர் போலவே அவருக்கு முக்கியமானவர். அவருடைய அறம் ஒழுக்கம் சார்ந்தது மட்டுமில்லை, பலம் சார்ந்தது மட்டுமில்லை. கூட்டு ஒழுக்கம், கூட்டு  பலம் எவ்வளவு தெரியுமோ, அதே அளவுக்கு தனிமனித ஒழுக்கமின்மை,  தனிமனித பலவீனம் பற்றியும் அவர் புரிந்தே இருக்கிறார். நாவல் பழங்களைக் குனிந்து பொறுக்கவும், மணலை ஊதித் தின்னவும் முடிகிற அளவுக்கு அவர் ஒரு உதிர் பழத்தின் கனிவை அவரால் கௌரவிக்க இயலும்.


இவ்வளவையும் அவருடனான சில சிறு அவகாசமே நீடித்த சந்திப்புகளின் மூலமாகவும் அவருடைய வலைப் பூவை எப்போதாவது வாசித்ததன் மூலமாகவும். த.மு.எ.ச ஒழுங்கு செய்த அவருடைய மூன்று வம்சி புத்தகம் தொடர்பான கூட்டத்தில் கலந்து  கொண்டதன் மூலமாகவுமே நான் என் போக்கில் அறிந்துகொண்டேன்.  ஒரு சக மனிதனை மனதார அறிய இதைவிட வேறென்ன முகாந்திரங்கள் வேண்டும். சொல்லப் போனால் முகத்தை விட வேறென்ன முகாந்திரம்?

அவரை நேர்கண்டது மட்டுமின்றி, அதை என் பார்வைக்கும் அனுப்பிய உங்கள் தோழமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும். நேர்காணலுக்கு முந்திய உங்கள் முன் குறிப்புகள். நீங்கள் அவரை நேர்கண்ட அந்த தினத்தின் சாயல்கள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விதம் எல்லாம் , அவருடைய வீட்டில் அவரைப் பார்க்க வந்திருக்கும் என்னை, என்னைப்போலவே அவரைப் பார்க்கவந்து அவருடன் இருக்கும் நீங்கள் எழுந்துவந்து, கதவு திறந்து, (அது சும்மா வெயிலுக்கு சாத்தப் பட்டிருந்திருக்கும்) ,'வாங்க' என்று உள்ளே அழைப்பது போல இருக்கிறது.

 தமிழின் அற்புதமான எழுத்தாளர் வண்ணதாசனின் இந்த வார்த்தைகளை விட வேறென்ன வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேவேளையில், இதற்கு நான் தகுதியானவனா என என்னை  நான் உற்றுப்பார்க்கவும் வைக்கிறது.

Comments

5 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. your polite views and opinions are great

    ReplyDelete
  2. கூகி வா தியாங்கோவின் 'இடையில் ஓடும் நதி' நல்லதொரு தொகுப்பு. அவரது 'தேம்பி அழாதே பாப்பா' குறித்த எனது பதிவு இங்கே
    http://mrishans.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    புத்தகம் பேசுது இதழில் உங்கள் நேர்காணல் படித்தேன்.
    மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Vannadasan sir's letter is so nice.

    ReplyDelete
  5. இப்போதுதான் வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி மாது அண்ணா.

    புத்தகம் பேசுது நேர்காணலை எங்களுக்காக வலையேற்ற முடியுமா?

    ReplyDelete

You can comment here