மாதவராஜ் பக்கங்கள் -36

tha mu ye sa

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு இன்று விருதுநகரில் ஆரம்பிக்கிறது.  மிக அருகில் நடந்தும்கூட இந்த தடவை, மாநாட்டின் ஏற்பாடுகளில் ஒன்றும் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப்போது தோழர்கள் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். நேரம் கிடைக்கும்போது வாருங்கள் என அழைப்பார்கள். புன்னகையோடும், பெருமூச்சோடும் கடந்துவிடுகிறேன். கோரிக்கைகள், உறுப்பினர் சேர்ப்பு, நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வக்கீல் போல பணியாற்றுவது, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைகள், கமிட்டிக் கூட்டங்கள் என வேறு பணிகளில் மூழ்கி இருக்கிறேன். வலைப்பூக்கள், வாசிப்பு, பகிர்வு, இலக்கிய நண்பர்கள் என லயித்துக்கிடக்கும் வெளியிலிருந்து அறுத்துகொண்டு பயணிக்கிறேன். அவ்வப்போது எட்டிப் பார்த்து, எல்லோரும் அங்கே இருப்பதைப் பார்த்ததும் ஒரு நிம்மதி வருகிறது.

 

‘கரிசல் காட்டில் கலை இலக்கியத் திருவிழா’ என்ற  எழுத்தாளர் சங்க மாநாட்டு அழைப்பிதழை அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன். கடந்த மாநாடுகளின் நினைவுகள் வந்து செல்கின்றன. நண்பர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களோடு கூடிக் களித்த தருணங்கள் அவை. மாநாட்டின் நிகழ்வுகளைத் தாண்டி, விவாதங்களைத் தாண்டி அவையே மனதில் சுகமாகவும், அழுத்தமாகவும்  நிறைந்திருக்கின்றன. வரும் மூன்று நாட்களில், அவைகளை மீண்டும் தரிசிக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம்  செல்ல வேண்டும் என இருக்கிறேன்.

 

ஸ் பயணங்களில், காத்திருக்கும் பொழுதுகளில், வெறுமனே சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதை உடைத்து புத்தகம் படிக்க முனைந்திருக்கிறேன். படிக்க வேண்டியவை ஏராளமாய் இருக்கின்றன. ‘இடையில் ஓடும் நதி’ என்னும்  கென்ய நாவல்  இப்போது என்னுடனேயே   இருக்கிறது.  ‘கூகி வா தியாங்கோ’ என்னும் ஆப்பிரிக்க எழுத்தாளர் எழுதியதை, தமிழில் இரா.நடராஜன் மொழி பெயர்த்திருக்கிறார்.  காமனோ மற்றும் மக்குயு என்னும் இரு குன்றுகளின் இடையே ஓடும் ஹோனியோ என்னும் நதி பார்த்துச் செல்கிற மனிதர்களின் கதை இது. ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தில் சிதைந்து போன வாழ்க்கை இது. கூகியை மிக நெருக்கமாக உணர முடிகிறது.

 

இரண்டு சிறுவர்கள் சண்டையிடுவதை அவர் காட்டுகிற விதம் இது: “புதரிலிருந்து தாங்கள் உடைத்துக்கொண்டு வந்த கழிகளோடு அவர்கள் முதலில் சண்டையிட்டார்கள். பலமுறை காற்றில் ஒன்றையொன்று பலமாக அடித்தபடி கழிகள் விரைவில் உடைந்து போயின. சிறுவர்கள் ஆத்திரத்தோடு அவற்றைத் தூக்கியெறிய ஒரு பட்டைக் கழி படுத்திருந்த ஒரு மாட்டைப் போய்த் தாக்கியது. அது பயந்து ஓட்டமெடுத்தது. அதன் ஒட்டம் மேலும் ஒன்றிரண்டு மாடுகளை எழுப்பியதோடு புழுதியையும் கிளப்பியது. பிறகு மாடுகள் சண்டை பற்றி எந்தச் சலனமும் இன்றி எதிர்த்திசையில் பார்த்துக்கொண்டு நின்றன

 

இதுபோன்ற வரிகளே எழுத்துக்களின் மீது வசீகரத்தையும், வற்றாத மோகத்தையும் கொள்ள வைக்கின்றன போலும். முழுமையாக இந்த நாவலைப் படித்துவிட்டு பகிர்ந்துகொள்வேன்.

 

ந்த மாத  ‘புத்தகம் பேசுது’ இதழில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. தீராத பக்கங்களில் அவ்வபோது கவிதைகள், உடல்நலம் குறித்தெல்லாம் எழுதும் தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் சென்னையிலிருந்து இதற்காக சாத்தூர் வந்து ஒருநாள் கூடவே இருந்துவிட்டுச் சென்றார். பேட்டியாக இல்லாமல் இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். அவ்வளவுதான். அதையே ஒரு நேர்காணலாக்கியிருக்கிறார். அத்தோடு  தனக்குப் பிடித்தமானவர்களிடம் அதனை பகிர்ந்துகொள்ளவும் செய்திருக்கிறார். அப்படி அதனை படிக்க நேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள், எஸ்.வி.வேணுகோபாலனிடம் இ-மெயிலில் பகிர்ந்துகொண்டதை எனக்கு அனுப்பியிருந்தார்.  அதை உங்களுடன் பகிரத்  தோன்றியது.

 

அன்புமிக்க வேணுகோபாலன்,

வணக்கம்.


எனக்கு தமிழ்ச் செல்வன் போல, மாதவராஜையும் பிடிக்கும். அவருக்கு கோவில்பட்டி இடதுசாரிப் பள்ளிக்கூடத்து மாணவர்களிடம் இருப்பதாக நான் உணர்ந்த ஒரு நெகிழ்ச்சிக் குறைவும் இறுக்கமும்  கிடையாது. அவர் கோவில்பட்டிக்காரர் இல்லை, சாத்தூர் காரரும்  இல்லை. அவர் காலில் கழுவமுடியாமல் அப்பியிருக்கும் பிறந்த மண்  திசையன்விளையோ நாசரேத்தோ   அல்லவா. மேலும் தத்துவம் எல்லாம் வாழ்வோடும் உடன் வாழும் சக மனிதரோடும் ஒன்றிப் பொருந்தும்போது அல்லவா முழுமை பெறுகிறது. உண்பது செரித்து ரத்தத்தோடு கலக்க உள் உறுப்புக்களின் அமிலமும் சுரப்பும் செயல்பாடும் தேவைப் படுமே.

மாதவராஜ் தத்துவததைப் புத்தகங்கள் வழி அல்ல, இயங்குவதன் வழி, அப்படி இயங்கும்போது உடனியங்கும் மனிதர் வழியாக அறிந்தவர். அப்பாவும், அண்ணனும், அம்மாவும் தங்கையும், மனைவியும் மகளும் மகனும் என்ற குடும்ப மனிதர்கள், அவருடைய சமூக மனிதர் போலவே அவருக்கு முக்கியமானவர். அவருடைய அறம் ஒழுக்கம் சார்ந்தது மட்டுமில்லை, பலம் சார்ந்தது மட்டுமில்லை. கூட்டு ஒழுக்கம், கூட்டு  பலம் எவ்வளவு தெரியுமோ, அதே அளவுக்கு தனிமனித ஒழுக்கமின்மை,  தனிமனித பலவீனம் பற்றியும் அவர் புரிந்தே இருக்கிறார். நாவல் பழங்களைக் குனிந்து பொறுக்கவும், மணலை ஊதித் தின்னவும் முடிகிற அளவுக்கு அவர் ஒரு உதிர் பழத்தின் கனிவை அவரால் கௌரவிக்க இயலும்.


இவ்வளவையும் அவருடனான சில சிறு அவகாசமே நீடித்த சந்திப்புகளின் மூலமாகவும் அவருடைய வலைப் பூவை எப்போதாவது வாசித்ததன் மூலமாகவும். த.மு.எ.ச ஒழுங்கு செய்த அவருடைய மூன்று வம்சி புத்தகம் தொடர்பான கூட்டத்தில் கலந்து  கொண்டதன் மூலமாகவுமே நான் என் போக்கில் அறிந்துகொண்டேன்.  ஒரு சக மனிதனை மனதார அறிய இதைவிட வேறென்ன முகாந்திரங்கள் வேண்டும். சொல்லப் போனால் முகத்தை விட வேறென்ன முகாந்திரம்?

அவரை நேர்கண்டது மட்டுமின்றி, அதை என் பார்வைக்கும் அனுப்பிய உங்கள் தோழமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும். நேர்காணலுக்கு முந்திய உங்கள் முன் குறிப்புகள். நீங்கள் அவரை நேர்கண்ட அந்த தினத்தின் சாயல்கள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விதம் எல்லாம் , அவருடைய வீட்டில் அவரைப் பார்க்க வந்திருக்கும் என்னை, என்னைப்போலவே அவரைப் பார்க்கவந்து அவருடன் இருக்கும் நீங்கள் எழுந்துவந்து, கதவு திறந்து, (அது சும்மா வெயிலுக்கு சாத்தப் பட்டிருந்திருக்கும்) ,'வாங்க' என்று உள்ளே அழைப்பது போல இருக்கிறது.

 

தமிழின் அற்புதமான எழுத்தாளர் வண்ணதாசனின் இந்த வார்த்தைகளை விட வேறென்ன வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேவேளையில், இதற்கு நான் தகுதியானவனா என என்னை  நான் உற்றுப்பார்க்கவும் வைக்கிறது.

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. கூகி வா தியாங்கோவின் 'இடையில் ஓடும் நதி' நல்லதொரு தொகுப்பு. அவரது 'தேம்பி அழாதே பாப்பா' குறித்த எனது பதிவு இங்கே
  http://mrishans.blogspot.com/2010/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு.
  புத்தகம் பேசுது இதழில் உங்கள் நேர்காணல் படித்தேன்.
  மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இப்போதுதான் வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி மாது அண்ணா.

  புத்தகம் பேசுது நேர்காணலை எங்களுக்காக வலையேற்ற முடியுமா?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!