நல்ல செய்திதான் இது. தாதா சாகேப் பால்கே விருது இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு கிடைத்திருக்கிறது. இந்தியச் சினிமாவில் மிக உயர்ந்த கௌரவம் இந்த விருது என்கிறார்கள். வழக்கம்போல ‘அந்த விருதுக்குப் பெருமை’, ‘காலதாமதமான மரியாதை’, ‘தகுதி வாய்ந்தவருக்கு விருது’ என்று குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த விருது அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது, யார் யாரெல்லாம் இதற்கு முன்னால் அந்த விருது பெற்றிருக்கிறார்கள், அவர்களின் சாதனைகள் என்ன என்ற விபரங்கள், தீர்மானங்கள் எதுவும் இன்றி முதலில் சொல்லத் தோன்றுவது “வாழ்த்துக்கள் கே.பி சார்!”.
பாலச்சந்தர் ஒரு நடுத்தர வகுப்பினரின் இயக்குனர். இந்த வகை மனிதர்கள் சந்தித்த அக வாழ்வின் சிக்கல்களைச் சொல்லி, அவர்களையே சுவாரசியத்தோடு பார்க்கச் செய்தார். பிரச்சினகளை மையப்புள்ளியாக்கி, அவைகளைச் சுற்றிச் சுற்றி பார்வையாளர்களை பயணிக்க வைத்தார். சாமானிய மக்களைப் பற்றி அவர் தொட்ட கதைகளென்றால் ‘தண்ணீர், தண்ணீர்’, ‘தப்புத்தாளங்கள்’ போன்றவைகளே தெரிகின்றன. மற்றபடி அவரது கதாபாத்திரங்கள் பலவீனங்களும், சமரசங்களும் நிறைந்த நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும். அதற்கான புத்திசாலித்தனங்கள் கொண்ட அவர்களுக்குள் மற்றவர்களை விடக் கொஞ்சம் அதிகப்படியாய் ஊடுருவி அடிமனதில் இருக்கும் வக்கிரங்கள், ஏக்கங்கள், கனவுகளை சொல்லியபோது, அவை திகைப்பூட்டுவதாய் இருந்தன. அவனது நண்பன், தன் காதலிக்கு வாங்கி வைத்திருக்கும் புடவையை சிகரெட்டால் சல்லடையாக்குபவனாக ஒருவன் இருப்பான். தன்னைக் காதலித்தவனை விதவையான தங்கைக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டு, அடுத்த அறையில் எழும்பும் வளையல் சத்தங்களைத் தாங்காமல் வெதும்புகிறவளாக ஒருத்தி இருப்பாள். குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தாங்கி நிற்பவர்களின் உணர்வுகளை அறியாமல் மற்றவர்கள் இருப்பார்கள்.
பாலச்சந்தரின் சினிமாக்களில் பொதுவாக ஏமாந்தவர்களும், ஏமாற்றுபவர்களுமே கதை மாந்தர்கள். ஏற்றுக்கொண்டு போகிறார்கள் சிலர். ஏற்க முடியாமல் போராடித் தோல்வியுறுகிறார்கள் சிலர். மீறி நிற்கிறார்கள் சிலர். இங்கே ஏமாற்றியவர், ஏமாறியவர் இருவருமே அருகருகே நிற்கிறார்கள். சிரிப்பு, உற்சாகம், வலி, வெறுமை, நம்பிக்கை எல்லாமும் இருக்கும் . முடிவுகளில் பெரும்பாலும் சோகம் பாவித்தவர்களாகவே பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுகிறார்கள். வழக்கமான சுபம் எப்போதாவதுதான். இது அவரது பாணி.
ஒரே ஆட்டத்தைத்தான் திரும்பத் திரும்ப, வெவ்வெறு காலக்கட்டங்களில் வெவ்வெறு மனிதர்களை வைத்து பாலச்சந்தர் ஆடிப்பார்த்திருக்கிறார். எதிரொலி படத்தில் சிவாஜி, வெள்ளி விழாவில் ஜெமினிகணேசன், நூல்வேலியில் சரத்பாபு, சிந்துபைரவியில் சிவகுமார் எல்லாம் ஒரு வகையானவர்கள். அவர்களின் தடுமாற்றங்களில் வாழ்க்கை அலைக்கழிக்கப்படுவதோடு ரசிகர்கள் ஒன்றிப்போனார்கள். நேர்மை கொண்ட மனிதர்களை முன்வைத்து, அவர்களின் போராட்டங்களையும் சொல்லி இருக்கிறார். வறுமையின் நிறம் சிகப்பு, அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்கள் இத்தகையவை. ‘நான் அவனில்லை, ‘மன்மதலீலை’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்கள் தனிமனித வக்கிரங்களை ரசிக்கிற மாதிரிச் சொல்லியவை. சினிமாக் கதாபாத்திரங்களின் மீது மயக்கம் கொண்ட ‘பாமா விஜயம்’, ஒருவகை என்றால் ’வானமே எல்லை’ இன்னொரு வகை. வாழ்வின் நெருக்கடிகளில் புதையுண்டு மீள முடியாதவர்களை அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் போன்றவை காண்பிக்கின்றன. துரோகங்களைச் சொல்லியவாறு மூன்று முடிச்சு, 47 நாட்கள் வெளிவந்தன. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் இன்னொரு பிரதியாக கல்யாண அகதிகள். அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதா என்றால், மனதில் உறுதி வேண்டும் என சுஹாசினி.இவைகளுக்கிடையே அவ்வப்போது நினைத்தாலே இனிக்கும், டூயட், புன்னகை மன்னன் போன்ற காதல் படங்கள்.
இப்படியான சுழற்சிகளுக்குள் இருந்து வெளிப்பட்ட காட்சிகளாய் பாலச்சந்தரின் சினிமாக்கள் இருக்கின்றன. ஆனால் எத்தனை தடவை ஆடினாலும், ஆட்டம் ஒரே மாதிரியாகி இருப்பது அவருக்கு ஆடத்தெரியாததையே காட்டுகிறது. இன்னொருத்தியைக் காப்பாற்ற சொல்லத்தான் நினைக்கிறேனில் தன் உடலை இழக்கும் ஜெயசித்ராவின் உத்தியையே இருபது வருடங்களுக்குப் பிறகு வந்த அவரது கல்கியின் கதாநாயகியும் பின்பற்றுகிறாள். இருகோடுகளில் சௌகார் ஜானகிக்கு நேர்ந்ததுதான் சிந்துபைரவியில் சுஹாசினிக்கும். மரோசரித்திராவில் இறந்த காதலர்கள், புன்னகை மன்னனிலும் பிழைக்க மாட்டார்கள். இப்படிப் பார்த்தால், பெரிதாக எந்த கலகத்தையும் மீறலையும் செய்யாத, புதுமைகள் புரியாத இயக்குனர் பாலச்சந்தர் என்பதை அறியலாம்.
“மற்றவர்களைப் போல பெண்களின் உடலை நம்பி, அவர் படம் எடுக்க மாட்டார்தான், ஆனால் தவறாமல் அவரது படங்களில் கதாநாயகி மாராப்பு விலகி நிற்பதாய் ஒரு காட்சியாவது இருக்கும்” என நண்பர் ஒருவர் சீரியஸாகவே பாலச்சந்தர் படம் குறித்து அபிப்பிராயம் சொன்னார். இது ஒரு குறியீடு போல இப்போது தெரிகிறது. எதாவது ஒரு கணத்தில் ஒரு ஆணிடம் விரும்பி உடலைப் பகிர்ந்துகொள்கிற பெண்களே மையமாகிறார்கள். மேஜர் சந்திரகாந்த்திலிருந்து ஆரம்பித்து, இருகோடுகள், நூற்றுக்கு நூறு எனத் தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, பட்டினப்பிரவேசம், நூல்வேலி, சிந்துபைரவி என வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் பாலச்சந்தருக்கு முக்கியப் பிரச்சினையாக தெரிந்திருக்கிறது. அடுத்தது ஒருவனுக்கு இரண்டு பெண்களோடு உறவு இருப்பதில் நேரும் சிக்கல்களைப் பற்றிய கதைகள். இவைகளுக்கும் ஒரு பட்டியல் தயாரிக்கலாம். இவைகளோடுக் கலந்து கூட்டுக்குடும்பம், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வார்.
உடலையோ மனதையோ இழந்த பெண்கள், குடும்பத்துக்காகத் தேய்கிற பெண்கள் என வலம் வரும் இவர்கள் கேள்விக்குறியாகப் போகிறார்கள். ஆண்களுக்கு அக்கதி ஏற்படவில்லை. காவியத்தலைவி சௌகார் ஜானகியும், நிழல் நிஜமாகிறது ஷோபாவுமே தலை நிமிர்ந்து ஆச்சரியக் குறிகளாகிறார்கள். இந்த இருபடங்களும் முக்கியமானவை. இவைகளும் பிற மொழிப்படங்களின் தழுவல்கள், அல்லது அப்பட்டமான பிரதிகள் என்று சொல்கிறார்கள். அவரது பல படங்களின் காட்சிகள் வங்காளப் படங்களிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டவை, ஒரிஜினாலிட்டியும், கிரியேட்டிவிட்டியும் இல்லாதவர் என்ற விமர்சனமும் அவர் மீது படிந்தே இருக்கிறது.
அவரது படங்கள் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம், வசனங்கள்தாம். வார்த்தைகளில் வெளிப்படும் பொறிகளும், அர்த்தங்களும் புதிதாக இருந்தன. காட்சியமைப்புகளில் இருக்கும் பலவீனங்களைச் சரிக்கட்டி, பார்வையாளர்களை பாத்திரங்களோடு ஒன்றச் செய்தன. அவர் வந்த நாடக உலகிலிருந்து சுவீகரித்துக் கொண்ட வித்தை இது. அதில் மேலோங்கி இருக்கும் ஒரு‘புத்திசாலித்தனத்தை’ நடுத்தர வகுப்பினர் சிலாகித்தார்கள். அதில் இருந்த தெறிப்புகளைக் கொண்டாடினார்கள். சினிமா என்பது காட்சி ஊடகம். அதற்கு என்ன நியாயம் பாலச்சந்தர் செய்தார் என்பது விவாதத்திற்குரியது.
ஆனாலும், சந்தேகமில்லாமல் அவர் தமிழில் முக்கிய இயக்குனர். அவரது பல படங்களில், சமகாலத்தின் நிகழ்வுகளும், போக்குகளும் பிரதிபலித்திருக்கின்றன. தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது போன்ற நல்ல படங்களைத் தந்த அவரின் மாஸ்டர் பீஸ் என்றால் ஒரு வீடு இரு வாசல்தான். சினிமாவின் துணை நடிகர், நடிகையரின் வாழ்வை மிக நெருக்கத்தில் காட்டிய படம் அது. சாபம் படிந்த அந்த மனிதர்களின் வாழ்வை தமிழ்ச்சினிமாவில் அதற்கு முன்னும், பின்னும் யாரும் அவ்வளவு வலியோடுச் சொல்லவில்லை.
அவர் இயக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். யாரின் இயக்கத்திலும் இவ்வளவு படங்களை பார்த்திருக்கவில்லை. முடியாது என்றும் நினைக்கிறேன். இந்த அளவுக்கு யாரேனும் இப்படிதொடந்து இயக்கி இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. இது ஒரு சாதனை. 1970களிலிருந்து முப்பது வருடங்கள் போல தமிழ்ச்சினிமா உச்சரித்துக்கொண்டே இருந்த பேர் ‘கே.பாலச்சந்தர்’. அவரது படங்களை வைத்து விமர்சனம் செய்வதற்கு இருந்த போதிலும், நினைப்பதற்கும் கொண்டாடுவதற்கும் செய்திகள் இருப்பதாகவே இச்சமயத்தில் உணர்கிறேன். வெறும் நாயகத்தன்மைக்கு இடமளிக்காமல், கதைகளை நம்பி சினிமா எடுத்திருக்கிறார். சினிமா என்னும் அற்புதத்தையும் சக்திவாய்ந்த ஊடகத்தையும் தமிழில் சீரழித்துக் குட்டிச்சுவராக்கிய எம்.ஜி.ஆரின் காலத்திலேயே இதை அரவமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறார். முதன்முதலாக எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதிய அவர் பிறகு இயக்கிய படங்களில் ஒன்றில் கூட எம்.ஜி.ஆருக்கு இடமில்லை. இது தற்செயலாக மட்டுமே பார்க்க முடியாதவாறு அவரது கதைகளும், பார்வையாளர்களும் இருந்திருக்கின்றனர்.
மீண்டும் “வாழ்த்துக்கள் கே.பி சார்”.
எல்லோரும் ஒருவாறாக பாராட்டிக்கொண்டிருக்கும் தருவாயில், அவரது படைப்புகளின் மறுபக்கத்தை சற்று அலசியிருக்கிறீர்கள். கருத்து வேறுபாடுகளை மீறி சிந்திக்க வைக்கும் பதிவு.அருமை அங்கிள்.
பதிலளிநீக்குநல்ல பதிவுகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அருமையான பதிவு,நன்றி
பதிலளிநீக்குநான் மனதில் எண்ணியதை அப்படியே வடித்திருக்கிறீர்கள்.மிக நாகரீகமாக பலச்சந்தரின் மேல் விமர்சனம் செய்துள்ளீர்கள்.தண்ணீர் தண்னீர் தவிர அனைத்துமே காப்பி.நிழல் நிஜமாகிறது படத்துக்கு மட்டும் ஒரிஜினல் மலையாளப்படத்துக்கு டைட்டில்லில் முகவரி கொடுத்தார்.ரித்விக் கதக்கின் மேகத்தக்கதாராவை அப்படியே ஜெராக்ஸ் செய்து காசு பார்த்தார்.அந்த மகாக்கலைஞன் தனக்குறிய மரியாதையை பெறாமலேயே மரித்துப்போனான்.
பதிலளிநீக்குநல்ல பதிவு மாதவ்...
பதிலளிநீக்குஒரு வீடு இரு வாசல் அவரது அருமையான படைப்பு. அந்த அளவுக்குப் பேசப்படாததும் கூட. நீங்கள் எடுத்து எழுதியிருந்தது பிடித்திருந்தது..
ஆனால் வசனம் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அதீத தேவையற்ற செயற்கையான சவுக்கடி வசனங்கள் அவரது சொந்த மேதைமையிலிருந்து பாத்திரங்களுக்கு மாறுவது எரிச்சலாக இருக்கும். அவர்கள் படம் உண்மையில் க்ளாஸ்.
கே பி யின் இன்னொரு முத்திரை, கவிஞர்களையும், இசையமைப்பாளர்களையும் செமத்தியாக வேலை வாங்குவது. அவரது படங்களில் பாடல்கள் எப்போதும் கவனத்தையும், நெஞ்சத்தையும் ஈர்ப்பதாக அமையும். கண்ணதாசனும், வாலியும் அவரது மனத்திலிருந்து வார்த்தைகளைப் பிடித்துவிடுவார்கள். ஆனால் ஒரே ஆளை நம்பாமல், வாலி, கண்ணதாசன், வி குமார், எம் எஸ் வி, இளையராஜா அப்புறம் ரெஹ்மான் என எல்லோரையும் மாற்றிப் பார்த்து ரசனையின் வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு போகும் முனைப்பு இருக்கும் அவரிடம்...
வக்கிரமான முடிவுகளில் என்ன தேட்டமோ இவருக்கு...மரோ சரித்ரா, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்,....எல்லா எப்படி முடியும் என்று பாருங்கள்...
பாமா விஜயம் ஆணாதிக்கத் தெறிப்பு நிறைந்த படம். அவள் ஒரு தொடர்கதை, சுகி சுப்பிரமணியன் அவர்களின் அருமையான சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தது. அவர் படைத்த அந்த மிடுக்கான சுஜாதாவை அப்புறம் அண்டா அண்டாவாகக் கண்ணீர் வடிக்க வைத்து காலி செய்து மகிழ்ந்தனர் அடுத்தடுத்த இயக்குனர்கள்...
அண்மையில் மறைந்த சுஜாதா வித்தியாசமான வரவு தமிழ்த் திரைக்கு, அதற்கு கே பி முக்கிய காரணம்.
எஸ் வி வேணுகோபாலன்
பாலச்சந்தர் பார்ப்பனர் என்பதற்காகவே இந்த விருது கிடைத்து உள்ளது. .அவர் அறிமுகம் செய்ததும் பெரும்பாலும் பாரப்பனர்களே .முற்போக்கு என்ற பெயரில் தமிழ் பண்பாட்டுக்கு எதிராகவே பரப்புரை செய்து உள்ளார் .பார்பனர்கள் உரையாடலை பெரும்பகுதி பயன்படுத்தியவர் .பார்பன நடிகர்களையே ஆகா ஓகோ எனப் பாராட்டும் இனப் பற்று மிக்கவர் .நாடக ஆசிரியர்களின் கதையை உல்ட்டா செய்தவர் .இரா .இரவி
பதிலளிநீக்குமிக விரிவான விமர்சனம். எனக்கும் பாலச்சந்தர் படங்கள் ஒரு காலத்தில் பிடித்தது. பின் அதில் இருக்கும் நாடகத்தன்மை புரிய ஆரம்பித்ததும் விருப்பம் குறைந்து விட்டது
பதிலளிநீக்குஎனக்கும் அவரின் படஙகளிலேயே ஒருவீடு இருவாசல் முதலிடம் பெறுவது.மிகவும் இயல்பான கதையும் நடிப்பும்.
பதிலளிநீக்குசினிமாவில் பாடல்கள் என்பதில் உடன்பாடு எனக்கு இருந்ததில்லை. ஆனாலும் எஸ்விவி சொன்னது போல அவரின் பாடல்கள் கதைக்கு மிக நெருக்கமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்வார்.
அதே போல மிகச் சராசரியான காதாபாத்திரம் கூட மின்னுவது போலப் பார்த்துக்கொள்வார்.அவரின் படங்களில் நாடகத் தன்மையும் அளவுக்கதிகமான பேச்சின் கூர்மையும் அலுப்பூட்டக்கூடியவை.
நல்ல நடிகர்களும் நடிகைகளும் இவரால் கூர் தீட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
உங்களின் பதிவு பாரபட்சமில்லாமல் உண்மையைச் சொல்கிறது மாதவ்.
தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத ஒருபக்கமாக (பார்ப்பன)ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு பேசவைக்கப் பட்டவர், அரசியலாக்கப் பட்டவர். அவருடைய “மேதமை” இரவல்களால்
பதிலளிநீக்குவடிவமைக்கப்பட்டது.அது அவாள்களுக்கு
மட்டுமே வாய்க்கப்பெற்றது, புத்தர் காலந்தொடங்கி!
அவருடைய மேதமைகள் எல்லாமுமே
மனுதர்மத்தின் நவீன வடிவங்கள்தான்.
அதை சினிமாவாகப் பார்க்காமல் அதனுள் உள்ள அரசியலுடன் பார்த்தால் உணரமுடியும்.
நெற்றிக்கண்’ தயாரிப்பு மட்டும் KB..
பதிலளிநீக்குஇயக்கம் SP முத்துராமன் ,திரைக்கதை -விசு !
அவர் படங்களில் தமிழர் அல்லது தமிழை கேவலபடுத்தும் வசனம் ஒன்றாவது இருக்கும்.
பதிலளிநீக்குநாம் எப்போதுமே விளிம்புகளில் நிற்பவர்களாகவே இருக்கிறோம். ஒன்று விருது பெற்றதை பாராட்டித்தள்ளுவது. இன்னொன்று விமர்சனம் செய்தே நோகடிப்பது. உங்கள் பதிவு இயல்பாக விமர்சனத்தோடு கூடிய வாழ்த்தாக இருக்கிறது. அருமை.
பதிலளிநீக்குஅன்புடன்,
அ.உமர் பாரூக்
வழக்கம்போல் தங்களின் ஆணித்தரமான வாதங்களுடன் கூடிய நல்ல பதிவு, பாராட்டுக்கள். திரு எஸ்.வி.வேணுகோபாலன் தமது கருத்துரையில் அவள் ஒரு தொடர்கதை சுகி.சுப்பிரமணியன் அவர்களின் அருமையான சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தது என்று தெரிவித்திருக்கிறார். அவள் ஒரு தொடர்கதையின் மூலக்கதாசிரியர் சுகி.சுப்பிரமணியன் அல்ல; அவரது மகன் திரு எம்.எஸ்.பெருமாள். எம்.எஸ்.பெருமாள் கலைமகளில் எழுதிய ஒரு குறுநாவலைத்தான் அவள் ஒரு தொடர்கதையாக அருமையாக மாற்றியிருந்தார் கே.பி. எம்.எஸ்.பெருமாளின் தம்பிதான் சுகி சிவம் என்பதும் பெரும்பாலானோர்க்குத் தெரிந்திருக்கலாம்.
பதிலளிநீக்குமாதவ் ஜி! வரலாற்றை பதிவு செய்யும் பொது பாரபட்சமின்றி இருக்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்.மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். பாலசந்தர் படைப்புகளைப் பற்றி முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்த மாணவி ஒருவரை எனக்குத்தெரியும். அவருக்கு எனக்குத்தெரிந்த தகவல்களை அளித்தேன். அவரைப்பற்றி ,அவர் படைபுகளைப்பற்றி நிறைய சர்ச்சைகள் உண்டு. கிட்டத்தட்ட 19 படைபுகளாவது நகல்கள்.
பதிலளிநீக்கு"அபூர்வ ராகங்கள்" தமு எ.ச வின் மூதத எழுத்தாளர் மறைந்த என்.ஆர். தாசன் ," கண்ணதாசன்" இதழில் எழுதிய நாடகத்தின் நகல். வழக்கு சென்னை உயர் நிதி மன்றத்தில் நடந்தது. தாசனுக்கு சாதகமாய் தீர்ப்பு வந்தது. த.மு.எ.ச தலைவர் செந்தில்நாதன் தான் வக்கீல். பாலசந்தர் மேல் முறையீடு செய்தார். நிச்சயமாக தாசன் வெற்றி பெருவார் என்ற நிலமையில், கோமல்சுவாமிநாதன் தலையிட்டு சமரசமானது. பாலசந்தர் நட்டஈடாக ரூ7000 மொ 8000 கொடுத்ததாக நினைவு.
பார்ப்பனர் என்பது எல்லாம் அபத்தம்.
குறைந்த பட்சம் Star System உடைக்கப் பட்டதில் பாலசந்தருக்கு ஒரு சிறிய பங்கு நிச்சயமாக ஊண்டு.---காஸ்யபன்
கே பி இயக்கிய திரைப்படப் போஸ்டர்கள் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் . எல்லாத் திரைப்படங்களும் வண்ண வண்ணமாக முழுதாக ஆக்கிரமிக்கும்படி அமைந்தபோது அவரது படங்கள் பரணி டிசைனில் வெறும் வெண்மையாக கருப்பு வெள்ளை ஸ்டில்லை ஒருபகுதியில் மட்டும் நிரப்பி ஓரங்களில் மட்டும் சிறிய எழுத்தில் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர்கள் இருக்குமாறு அமைவதை நடுத்தர வர்க்க அழகியல்வாதிகள் மிகவும் ரசித்தனர்! பரணி இன்று நம்மிடம் இல்லை...
பதிலளிநீக்குஎனது பின்னூட்டத்தில் இருந்த முக்கிய தவறினைத் திருத்திக் கொடுத்த அமுதவனுக்கு நன்றி..எம் எஸ் பெருமாள் எழுதியதை, நினைவோடையில் அவரது தந்தையின் பெயரோடு பதிவாகி இருந்ததில் நழுவிப் பிசகி வந்து விட்டது. தவறாகக் குறிப்பிட்டதை வாசகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஎஸ் வி வேணுகோபாலன்
கலாச்சார சீர்கேட்டுக்கு முக்கிய பங்காற்றினார் என்பதை யாருமே சொல்லவில்லை.
பதிலளிநீக்குஒரு சில படங்கள தவிர அனைத்துமே பண்பாட்டிற்கு எதிரான படங்கள்.