ஒன்றுமில்லை அது

paper weight2

 

தனியாக சிந்திக்கும்போதும், இன்னொருவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போதும்  நீங்கள் அதனை கைகளால் வெறுமனே உருட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்.  உங்களுக்கு ஒன்றுமில்லை அது.

 

குழந்தைகளோ கண்கள் விரிய பார்க்கிறார்கள். மேகங்கள், பூக்கள், நீர்ச்சுழிவுகள் எல்லாம் அசையாமல் உள்ளே இருக்கின்றன. வண்ணச் சிதறல்கள் வெடித்து அழகழகாய் சிந்திக் கிடக்கின்றன. அவற்றைப் பிடித்துவிட குழந்தைகளின் விரல்கள் தடவுகின்றன. அப்படியே அதை  விழுங்கிவிட ஆசை கொள்கிறார்கள்.  உறைந்த நீர் போலிருக்கும் அதற்குள் புகுந்து  அதிசயங்களைக் காணத் துடிக்கிறார்கள்.  மீன்களாகவும், பறவைகளாகவும் உருமாறுகிறார்கள்.

 

பெரும் ஆர்வத்தோடு உங்களிடம் கேட்கிறார்கள், “இது என்ன முட்டை” என்று. பெரியவர்கள் நீங்கள் அவசரம் அவசரமாய் திருத்துகிறீர்கள், “அது பேப்பர் வெயிட்” என்று.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமை மாதவ்...

    வெகு நாட்களுக்குப் பின் உங்களுக்குப் பிடித்தமான குழந்தைகள் உளவியல் மீதான வண்ணச் சித்திரத்தை உரிய படத்தோடு முன் வைத்து விவாதத்தைத் தூண்டுகிறீர்கள்..

    குழந்தைகள் என்று கூட விட்டுவிடுங்களேன்...இன்னும் சற்று விரிந்த விவாதத்திற்குள் கூட நுழையலாம்.

    தேடல் என்பதே மனித ஜீவிதத்தின் சுவாரசியமாகப் படுகிறது. கேள்விகளிலிருந்து மேலும் கேள்விகள். அதிலிருந்து இன்னும் ஆழமான அடுத்தடுத்த கேள்விகள். ஒரு கேள்வியை மூடிய கதவைக் காட்டினால் அதைத் திறந்து வைக்கிற பதில் அதோடு கவனத்தைத் திருப்ப முனைந்தால், திறந்த கதவுக்குப் பின்னால் அடுத்தடுத்த மூடிய கதவுகள் புலப்படாமலே போய் விடுகின்றன. மாயா ஜாலக் கதைகளில் வருவதுபோல, ரகசியம் ரகசியம் ரகசியம் என்று புதிர்கள் அவிழ்வதும், மேலும் புதிர்கள் சேர்வதுமாக வாழ்வைப் பார்ப்பது ஒரு அம்சம். ஞானியைப் போல் கருதிக் கொண்டு இத்தோடு முடிந்தது, மேலே ஒன்றும் கிடையாது என்று விட்டுவிடுவது இன்னோர் அம்சம்.

    படைப்பாளி முடித்த கதையையே வாசகர் முடியாத கதையாகத் தொடர்ந்து சிந்திக்க முடியும் என்கிற போது, பேப்பர் வெயிட் என்று முற்றுப் புள்ளி வைப்பது ஆர்வமிக்க விரிந்த கண்களையுடைய குழந்தைகளுக்கு எதிரான வலுவான வன்முறை அன்றி வேறென்ன...

    தெளிவைத் தருவது எது என்பது தத்துவார்த்தக் கேள்வி.

    குழந்தைகளுக்கு அவர்கள் படிக்கட்டில் ஏறி நின்று (பலரும் இறங்கி நின்று என்று நினைக்கிறார்கள்!) அவர்களது கனவுகளை மேலும் விரித்து வைத்தபடி பொருள்களின் அறிமுகத்தைச் செய்வது பதட்டமான உலகில் சாத்தியமில்லை.
    பதட்டத்தை வரவேற்கும் உலகிற்கு குழந்தைகளாக வந்திறங்கும் புதிய மனிதர்கள் அதே நூல் பிடித்து நடப்பதையும் தவிர்ப்பதற்கில்லை..

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  2. அப்பா வேலை பார்த்த வங்கியில் நான், என் அக்காக்கள் மிகவும் விரும்பும் பொருள்கள் இவை
    கண்ணாடி பேப்பர் வெயிட், குண்டூசி குத்தி வைக்க உதவும் பஞ்சு கலந்த தப்பா.

    கணினி மயமாக்கலுக்குப் பிறகு இப்போது நான் செல்லும் எந்த private அலுவலகங்களிலும் பார்க்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு தோழர்.

    தோழமையுடன்,
    அ.உமர் பாரூக்

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகளை எல்லா சமயங்களிலும் திருத்த முயற்சிப்பதை விடுத்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சித்தால் கொஞ்சம் உருப்படலாம். நாம் கற்றுக் கொள்வதற்கு குழந்தைகளிடம் ஏராளம் இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் மாதவராஜ், இது மாதிரி குட்டிப் பதிவுகளை உடனே தொகுத்து விடுங்கள். அல்லது ஒரு தொகுதிக்கு தேறுமளவுக்கு உடனே எழுதி விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகளின் கேள்விகளில் நிரம்பியிருக்கும் வண்ணமயமான பலூன்களின் உற்சாகக் காற்று பெரியவர்களின் வறண்ட பொருத்தமில்லாத பதில்களால் வெளியேற்றப்பட்டு கனவுகளை அழிப்பதாய் இப்பதிவின் ஊற்றுக்கண் அபாரம் மாதவ்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு.
    உங்களுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. எஸ்.வி.வி!

    எவ்வளவு அர்த்தங்களோடு சொல்கிறீர்கள். பதிவை விட உங்கள் பின்னூட்டத்தையே ரசித்துக்கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி தோழா!

    பதிலளிநீக்கு
  8. ராம்ஜி!
    ஆம், உங்கள் அனுபவம் வரும் தலைமுறைக்கே வாய்க்காது. நன்றி வருகைக்கும், பகிர்வுக்கும்.

    உமர் பாரூக்!
    தொடர் வருகைக்கும், உற்சாகமளிப்புக்கும் நன்றி தோழர்.


    இரா.எட்வின்!
    உண்மைதான். நீங்கள் சொல்வது. விரைவில் மூன்று அல்லது நாண்கு தொகுப்புகள் வரும்.


    நாகசுப்பிரமணியன்!
    நன்றி.


    சுந்தர்ஜி!
    ஆஹா, மிக்க நன்றி.


    ஓலை!
    நன்றி.

    ரத்தினவேல்!
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு பொருளும் ஆயிரம் பொருள் சொல்கிறது நம் வாழ்க்கையில்...நிறைய சிந்திக்கவைத்த பதிவு இது..நன்றி தோழரே...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!