மாதவராஜ் பக்கங்கள் - 34

Jeyakandhan

 

பெங்களூரில் அண்ணன் மகன் திருமணத்திற்குச் சென்றுவிட்டு நேற்றுதான் சாத்தூர் வந்தேன். இடையில் ஒருநாள் சென்னையையும் எட்டிப்பார்த்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது வீட்டிற்குள் நுழையும்போது உள்ளே படுத்திருந்தார் . என்னையும், அம்முவையும் பார்த்ததும், ‘வாங்க’ என்று படுத்திருந்தபடியேச் சொன்னார்.  மேலும் அங்கிருப்பது தொந்தரவாக இருக்கக் கூடும் என அங்கிருந்து மாடியில்  தீபாவின் வீட்டிற்குச் சென்றோம். பகற்பொழுதுகள் குழந்தைகளோடு கழிந்தனவென்றாலும் பெரும்பாலும் தூங்கிக்கொண்டுதான் இருந்தேன். சாயங்காலம் ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கும்போது, ஜே.கே போன் செய்தார். “இன்னிக்கே கிளம்புறீங்களா...  கீழே வருவீங்கதான?” என்றார். ஆச்சரியமாய் இருந்தது. இப்படியெல்லாம் அழைத்துப் பேசுகிறவர் இல்லை அவர். சென்றேன்.

 

ஹாலில் உட்கார்ந்திருந்தார்.  அண்ணன் மகன் திருமணம், அப்பாவின் உடல்நலம் எல்லாம் விசாரித்தார். கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தார். அதுபோன்ற சாயங்காலங்கள், அவரது வசீகரமான உலகமாயிருந்த காலங்கள் தெரியும்.  வீட்டு மொட்டைமாடியில் இருந்த  கீற்றுக்கொட்டகையில் அவரது சபை கூடும்.  சிலசமயங்களில் நானும் கூட இருந்திருக்கிறேன்.“ஜே.கே”, “ஜே.கே”வென்று நண்பர்கள் வந்துகொண்டும், சென்றுகொண்டும் இருப்பார்கள். புகையை ஆழமாய் உறிஞ்சிவிட்டு, தீர்க்கமாய் எல்லோரையும் பார்ப்பார். பெரும்பாலும் அவரேதான் பேசிக்கொண்டு இருப்பார். ஒரு கேள்வி அவரிடமிருந்தே வரும். ஒரு அமைதி ஆட்கொள்ளும். சட்டென்று உடைத்துக்கொண்டு பதிலும் அவரிடமிருந்தே வரும். அதில் இருக்கும் தர்க்கங்களும், நகைச்சுவையும் சுவாரசியமாக இருக்கும். அங்கு ஆட்டோ டிரைவர்கள் இருப்பார்கள். எழுத்தாளர்கள் இருப்பார்கள். வைர வியாபாரிகள் இருப்பார்கள். டாக்டர்கள், ஆசிரியர்கள் என்று பலவகை மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். ஆரவாரமும், கொண்டாட்டமுமாய் நேரங்கள் கழியும்.

 

இப்போது எல்லாம் வடிந்து வீடும், சாயங்காலமும் அமைதியாக இருக்கிறது. மது, புகை எல்லாம் விட்ட பிறகு ஜே.கே தியானத்தில் ஆழ்ந்திருப்பது போன்று இருக்கிறார். பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரைப் பார்க்க வருகிறவர்களும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொண்டுவிட்டார்கள். “யாரும் இப்போ வர்றதில்ல” என்றார்கள் ஜே.கேவின் துணைவியார்.  “நான்தான் பேசுறது இல்லய. பிறகு அவர்கள் வந்து என்ன செய்யப் போகிறார்கள்” என்றார் ஜே.கே.  என்னிடம் திரும்பி, “இவ்வளவு காலம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். இப்போது சிந்தித்துக்கொண்டு மட்டும் இருக்கிறேன்” என்று சொல்லி  கண்களை  கொஞ்ச நேரம் மூடிக்கொண்டார்.  ஜே.கேவின் பேச்சுக்கள், எழுத்துக்கள், சில முக்கியமான சம்பவங்கள் குறித்து அவரது துணைவியார் சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

 

பேச்சு, தீபாவின் மகள் நேஹா குறித்து வந்தது. வீட்டின் அலமாரிகளில் இருக்கும் புத்தகங்களை நேஹாவிடம்  காட்டி, “இதுல்லாம் ஜே.கே தாத்தா எழுதிய புத்தகங்கள்” என்று ஒருமுறைச் சொன்னார்களாம். இப்போது அவளே அந்த அலமாரிகளிடம் போய், “தாத்தா எழுதியது”, “தாத்தா எழுதியது” என்று எல்லோரிடமும் காட்டிக்கொண்டு இருக்கிறாளாம். ஜே.கேவின் முகம் மலர்ந்து, லேசாய் சிரித்ததைப் பார்த்தேன்.

 

பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டபடியால் புறப்பட எழுந்தேன்.  “கொஞ்சம் அடிக்கடி போனிலாவது பேசுங்க” என்றார்கள் ஜே.கேவின் துணைவியார். நான் ஜே.கேவைப் பார்த்தேன். புன்னகைத்தார்.  விடைபெறும்போது கைகொடுத்து அனுப்பினார். அந்த ஸ்பரிசத்தில் ஜே.கே நிறைய பேசியது போலிருந்தது.

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. முன்பு வாய் திறந்து பேசினார். இப்போது மௌனமாய் பேசுகிறார். பாருங்களேன் ஸ்பரிஷத்தையும் புரிந்து கொள்கிற மாப்பிள்ளை ஜே.கே வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. மணிஜி சொல்வது போல, சென்னை வருவது குறித்து சொல்லி இருக்கலாமே , சந்தித்திருப்போம் உங்களை.

    இன்று காலை ஒரு வங்கியில் ஊழியர் தனது கணினி, பண டப்பா எல்லாம் சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது உங்கள் ஞாபகமும், வண்ணதாசன் ஞாபகமும் தான் வந்தது.

    ஜூனில் சாத்தூர் வந்து சந்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. மிக நெகிழ்வான பகிர்வு மக்கா. மாதவராஜ் பக்கங்களை மாது பக்கங்கள் என ஒருமுறை உச்சரித்துக் கொண்டேன்.

    ரொம்ப பக்கமா இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. பெங்களூர் வந்தால் சொல்லுங்களேன் ... சந்திக்கலாமே ...

    பதிலளிநீக்கு
  5. நல்ல நெகிழ்வான பதிவு. JK சார் பற்றி படிப்பது எல்லாம் ஒரு அலாதியான சுகம்.

    பதிலளிநீக்கு
  6. அன்பு மாதவராஜ்,

    மொழியற்ற சம்பாஷனைகள்... தேவை போது கைபிடித்து கொள்ளவும், தேவைப்படும் போது தள்ளி நின்று பார்க்கவும், தேவைப்படும் போது தனியே விடுவதும் ஒரு உறவில் எப்படி சாத்தியப்படுகிறது...

    இந்த புரிந்துணர்வு எல்லாருக்கும் வாய்க்குமா என்று தெரியவில்லை. பரஸ்பர மரியாதையும், அன்பும் ஒருமிக்கும் இடங்களில் வாழும் ஒரு உறவு அற்புதமானது...

    வார்த்தைகள் தேவையே இல்லை மாதவராஜ்... ஒரு சின்ன பார்வையும், உள்ளங்கை சூடும் சொல்லும் விஷயங்கள் உயிர்மொழி...

    நெகிழ்வும்... அன்பும்...

    ராகவன்

    பதிலளிநீக்கு
  7. தியானத்திற்குப் பிறகு மீண்டும் பேச்சும் எழுத்தும் அவருள்ளிருந்து பிரவாகமாய் பொங்கி வரும் எனக் காத்திருப்போம்... இன்று மீண்டும் அவர் தேவைப்படுகிறார்.

    பதிலளிநீக்கு
  8. திரு ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய செய்திகளைப் படித்ததும் சந்தோசம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

    பதிலளிநீக்கு
  10. ஜெயகாந்தன் ஐயா'வெ பத்தி கேள்விபடவே சந்தோசமா இருக்கு,,,

    பதிலளிநீக்கு
  11. நல்லாரைக் காண்பதும் நன்றே!
    நல்லாரின் உறவென்பதும் நன்றே!
    நல்லாரின் வழிகொள்வதும் நன்றே!
    நல்லோரிடம் இணங்கியிருப்பதும் நன்றே!
    நல்லாரின் மெளனமொழிகூட ஒரு நல்லசெயலாகச் சொல்லும் நன்றே!
    நல்லாரைக் கண்டதைத் தானும் கேட்பதும் நன்றே!
    நல்லாரின் அனுபவங்கள்,படைப்புக்களை
    நலமுறப் படித்து அடுத்தவர்க்கு தெரிவிப்பதும் நன்றே!
    அந்தவழியினில் ஜெயகாந்தன் அவர்களின் அமைதியும் ஒரு நாள் ஒரு புதியபடைப்புகளை உருவாக்கும் வழிகாட்டுதலை இந்த மக்கள் இலக்கிய உலகத்திற்கு ஒரு துவங்குதலாக ஏற்றுக்கொள்ளும்!

    தோழமையுள்ள மாதவராஜ் அவர்களுக்கு தோழமையுடன் ,
    கவிஞர்,தமிழ்பாலா------

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு அங்கிள். நேஹாவைப் பற்றி எழுதி இருப்பது எனக்கே இப்போது தான் தெரிந்தது!

    நிற்க,
    அம்முவுடன் சேர்ந்து தான் இவ்விடுகையைப் படித்தேன். "பஸ்ஸுக்கு நேரமாச்சு" என்ற இடத்தில், "எந்த பஸ், நீங்க நெட்ல ஏதோ எழுதுறீங்களே அந்த பஸ்ஸாமா?" என்று கேட்கிறாள்! :))

    பதிலளிநீக்கு
  13. மாதவ்ஜி! அவரை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்.இடப்பெயர்ச்சி ஒரு வேளை அவரை இன்னும் குஷிப்படுத்துமோ! யோசியுங்கள்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  14. அன்பு மாதவராஜ்,

    சிப்பியின் வயிற்றில் முத்து என்ற நாவலை பற்றி எனது விமர்சனம்..
    http://jebamail.blogspot.com/2011/06/blog-post.html

    கண்டிப்பா படித்து விட்டு என்னையும் உங்கள் வாசகர் வட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்..
    நான் பல்லவன் கிராம வங்கியில் பணிபுரிகிறேன்.

    ஜெபா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!