நெடுநேரமாய் யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லையென்பது உறைத்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். திரை இருண்டிருந்தது. தானாக அணைந்திருக்க வேண்டும். சக்தி கொடுக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான். காத்திருந்த ஐந்தாறு குறுஞ்செய்திகள் சத்தமிட்டுக்கொண்டே ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுந்தன. அவைகளைப் பார்க்குமுன்னர் நண்பனின் அழைப்பு இடைமறித்தது. ஏற்றுக்கொண்டு காதில் வைத்தேன். “எத்தனை தடவை போன் செஞ்சேன். சுவிட்ச் ஆப் பண்ணிட்டியா” கத்தினான்.
“ஸாரி”
“என்ன ஸாரி. இதே வழக்கமாப் போச்சு. உனக்கெல்லாம் ஒரு செல்போன்..” எரிச்சலடைந்தான். “சென்னைக்கு வந்தேன். காவேரி லாட்ஜ் அட்ரஸ் வேண்டியிருந்துச்சு. அதுக்குத்தான் உனக்கு போன் செஞ்சேன். எடுக்கல. அப்புறம் சங்கருக்கு போன் செஞ்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.
அவன் வைக்கவும் அலுவலக மேலாளரிடம் போன். “சாயங்காலத்திலிருந்து போன் செய்றேன். சுவிட்ச் ஆப் சுவிட்ச் ஆப்னு வருது” என்றார்.
“ஸாரி”
“இன்னிக்கு ஒரு பார்ட்டிக்கிட்ட அம்பது லட்சம் டெபாசிட் வாங்கியாச்சு. அதை உடனே உங்கக் கிட்ட ஆசையா சொல்லணும்னு பாத்தா...” என்று சந்தோஷம் வடிந்த மனநிலையிலிருந்தார்.
ஒருவழியாய் அவரைப் பாராட்டியும் தேற்றியும் போனை வைத்தேன். திரும்பவும் ஒலித்தது. வேறு மாநிலத்திலிருக்கிற அண்ணன்.
“என்னடா போனை சுவிட்ச் ஆப் செஞ்சுட்ட”
“ஸாரி. என்னண்ணா?”
“ஒண்ணுமில்லை. பேசி ஒரு வாரத்துக்கும் மேல ஆச்சேன்னு போன் பண்ணேன். அப்புறம் எப்படியிருக்கே?”
கொஞ்ச நேரம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தேன். அதுபாட்டுக்கு இருந்தாலும், யார் யாரெல்லாமோ என்னைப் பார்த்துக்கொண்டு இருப்பதாய்த் தெரிந்தது.
அன்பு மாதவ்.....
ReplyDeleteஎன்னை
ஒரு அளவுகள் சுருக்கிய பரிமாணத்தில்
அப்படியே இறக்கி வைத்தேன் அலைபேசிக்குள்
பிறகு அதைப் பொருத்திக் கொண்டேன் வெளியிலிருந்தபடி..
அதனுள் நுழையவும், மீளவும்
பேசவும், பேச்சு கேட்கவும்
பேசிப் பேசி கேட்டுக் கேட்டு
அலுத்துச் சலித்த பொழுதொன்றில்
இளைப்பாற வெளியேறினேன்....
காற்றின் வாசம்
அமைதியின் ரசம்
நிம்மதியின் பெருமூச்சு
அடங்கிய பேராசையால் விடுவிக்கப்பட்ட
மெல்லோசைகளின் சுரம் ...
என்ற இனிமையில் நீந்தத் தொடங்கிய நேரம்
நீண்டு வரும் கரங்கள்
உச்சி முடியைப் பற்றி மீண்டும்
வெறியோடு அடைக்கின்றன அலைபேசிப் பெட்டிக்குள்..
இப்போது வெறுப்பாய் ஓங்கி எழும் குரல்
அதன் உள்ளிருக்கும் என்னிடமிருந்தா
வெளியில் இருக்கும் என்னிடமிருந்தா...
எஸ் வி வேணுகோபாலன்
Nice. No life for us if mobile has no life.
ReplyDeleteஅன்பு மாதவராஜ்,
ReplyDeleteஉங்கள் பதிவுக்கு வேணுவின் கவிதை... அற்புதமாய் இருந்தது... உங்கள் பதிவின் நீட்சியாய் இருந்தது...
ஆயிரம் கண்ணுடையாள்... உளன்... இலன்...
அன்புடன்
ராகவன்
பதிவு அருமை! வேணுவின் கவிதை அதை விடவும் அருமை!
ReplyDeleteMama neenga phone Switch On panni vachirunthale eduka mattenga. Ithula Switch Off veraya. Nice......
ReplyDelete