பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 3

வீரப்பன் காடான சோளகர் நிலம்
 

காலம் விசித்திரங்களால் வடிவமைக்கப்பட்டது. தற்செயலான நிகழ்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் திரும்பத் திரும்ப நிகழும் போது அவை மனித மனங்களால் தன்னுடைய நம்பிக்கையாக பின்னாளில் அவையே குலங்களின், குடிகளின் தொன்மமாக, சடங்கியலாக வடிவமைக்கப்படுகிறது. தொல்குடிகளின், பழங்குடிமக்களின் இனவரைவியல், சடங்குகள், வாழ்வியல் கூறுகள், வழக்காறுகள் இவையாவும் மானுடவியலாளர்களால் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை காலமும், காடும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

பழங்குடிமக்கள், வனம், கனிமவளம், அந்நியக்கம்பெனிகள், வாழ்வியல் ஆதாரம், அரசுத்துரோகம், நிலத் தைவிட்டு வெளியேற்றல், மாவோயிஸ்ட் கொலைவெறித் தாக்குதல் போன்ற சொற்குறிகள் அறிவுத்தளத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலமிது. எனவே இந்த உரையாடலையும், விவாதத்தையும் தர்க்கித்து தொடர உதவிடும் கூறுகளைக் கொண்டதான சோளகர் தொட்டி எனும் நாவலுடன் வாசகன் உரையாடிப் பார்ப்பது அவசியம் என்று படுகிறது.

ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி எனும் நாவல் தமிழ் வாசகப் பரப்பிற்குள் வந்து சேர வேண்டியதன் அவசியத்தையும் படைப்பாளிக்கு காலமே உணர்த்தியது. அரசியல் அதிகாரத்தை தக்க வைத்திடும் துருப்புச் சீட்டென வீரப்பன் வேட்டையை அரசதிகாரவர்க்கம் பயன்படுத்தத் துடித்ததை நாம் அறிவோம். தமிழக புலனாய்வு வார இதழ்கள் தன்னுடைய ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான பணியையும் தாண்டி அதிகார வர்க்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரகராக உருமாறிப் போனதையும் காலம் தன்னுள் கணித்தே வைத்திருக்கிறது.

உலக நிகழ்வுகள் யாவும் வெகு மக்களால் நேர்எதிரான இரட்டை எதிர்வுகளாகத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என சகல அதிகாரம் கொண்ட மின்னணு ஊடகங்கள் விரும்புகின்றன. அப்படித்தான் காட்சிகளை கட்டமைக்கின்றன. முந்நாட்களில் அமெரிக்கா-சோவியத் ரஷ்யா என்றிருந்த இரட்டை எதிர்வு இப்போது அமெரிக்கா-இஸ்லாமிய பயங்கரவாதம் என மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பின்லேடன் எதிர்நிலை கதாநாயகனாக குழந்தைகளின் மனதிலும் குடியேற்றப்பட்டுள்ளான். வீரப்பன் தமிழ் நிலத்தின் அதீத வீரன் என நம்பப்படுகிறான். வீரப்பன் உயிருடன் இருந்தவரை ஒகேனக்கல் பிரச்சனை எழவேயில்லை என தமிழ்த்தேசிய வாதிகள் என தம்மை அழைத்துக் கொள்பவர்களும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இரட்டை நேர் எதிர்வுகளைக் கட்டமைத்து அவற்றிற்கு இடையிலான மோதலின் வழி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அதன் மீது வாசகனுக்கு ருசி ஏற்படுவதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தமிழ்மொழியின் பெரும்பாலான கதைப் பிரதிகள் யாவும் நல்லது/கெட்டது, தூய்மை/அசுத்தம், கதாநாயகன்/வில்லன் என்பவற்றிற்கு இடையேயான மோதலின் வழியே புரிந்துணரப்படுகிறது. இப்படியே தேவாரம்/வீரப்பன் என்ற இரட்டை எதிர்வுகளாக்கப்பட்ட தமிழ் நிலத்தின் பெரும் நிகழ்வொன்றின் காட்சிப்படுத்தப்படாத பகுதியே சோளகர் தொட்டியெனும் நாவலாக விரிகிறது.

பின் நவீனத்துவம் இலக்கிய வெளிகளில் அறிதலுக்குட்பட்ட பிறகே படைப்பாளிகளின் கவனத்திற்குரியவரானார்கள் unsung heroes (பாடப் படாத கதாநாயகர்கள்) எனப்படும் வெகுமக்கள். அப்போது பெரும் கதையாடலுக்கு மாற்றாக குறுங்கதையாடல்கள். மையத்திற்கு மாற்றாக விளிம்பு நிலைக் கதையாடல்கள் என கதைகள் மாற்றம் பெறத் துவங்கிய நாட்களில் வெளிவந்ததே சோளகர் தொட்டி.

வனமே தன் வாழ்விடம் என வரித்துக் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வினை எளிய மரபான அழகியலோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சோளகர் எனும் பழங்குடி இனமக்களின் வாழ்வில் வீசிய சூறைக்காற்று நாட்களைப் பதிவுசெய்து தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் பாலமுருகனின் நோக்கம். மனித உரிமைக்குழுக்களில் பணிசெய்ததன் மூலமாக பழங்குடிமக்களின் துயருறு நாட்களை உரியதகவலோடு கட்டுரையாக எழுதியிருக்க முடியும். கட்டுரைகள், எழுதப்பட்ட நாட்களின் செய்தியாக தேங்கி விடுகின்றன. வாசக மனதினுள் ஊடாடும் வல்லமை புனைவிற்கே உண்டு என்பதால் படைப்பாளி நாவல் எனும் விஸ்தாரன புனைவுப்பரப்பை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

வாழ்வின் முழுமையைச் சொல்வதுதான் நாவல். சோளகர்களின் வாழ்க்கை அதிரடிப்படையினராலும் வீரப்பனாலும் நிர்மூலமாக்கப்பட்ட அந்த வலிமிகு நாட்களை நாவல் எனும் புனைவே சுமக்கும் வல்லமை பெற்றது என படைப்பாளி நம்புகிறார்.

சோளகர் தொட்டியில் இருவிதமாக கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்பகுதியில் சோளக இனக்குழுவின் வாழ்விடமான சோளகர் தொட்டி குறித்த காட்சிப்படம். பழங்குடி மக்களின் தொன்மங்கள், அவர்களுக்கு மட்டுமேயான தனித்த வாழ்வியல் கூறுகள், சடங்குகள், குலதெய்வ வழிபாடு, திருமணம், மண முறிவு என சகலமும் மிக எளிமையான சொற்களால் வலிமையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வனத்தோடு வாழ்வதென்றான பிறகு வேட்டை அவர்களின் அடையாளமாகி விடுகிறது. அப்படியான வேட்டைநாள் ஒன்றில் பெருநரியிடம் (புலி) இருந்து தன்னைக் காப்பாற்றிய சோளகனிடம் வெள்ளைக்காரன் காட்டில் எவ்வளவு இடம் வேண்டுமானாலும் கேள், எழுதித் தருகிறேன் என செம்புப் பட்டயம் எடுக்கிறான். பதிலாக எங்களுக்கு காடே சொந்தந்தானுங்க, பட்டயம் எதற்கு? என்கிறான் சோளகன். காடு தன்னுடையது என நம்பிக்கிடக்கிறார்கள் வனமக்கள். எல்லோமே அவர்களுக்கு காடுதான். அதிலும் குறிப்பாக பாங்காட்டிலேயே தனித்திருந்து தன் குழந்தைகளைத் தானே பெற்றுத்திரும்பும் சோளகத்தின் தமிழ் வாசகன் அறிந்திடாத பகுதி. நாவலில் ஆதித்தாயென அடையாளப்படுத்தப்படுகிற ஜேக்கம்மாவும், வாழ்வின் சிக்கல்களை அசாத்தியமாக எதிர்கொள்ளும் மாதியும் காவியத் தன்மையிலான படைப்புகள். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வாசகன் நாவலில் வாசித்துக் கடந்திட முடியாது நிலைகுலைவான். எத்தனை கடினமானது வாழ்வு என அவர்களும் கூட சமதளத்தில் அதிரடிப்படையால் அச்சுறுத்தப்படும் போதே உணர்கிறார்கள்.

சமதளமக்கள் கணவனை இழந்தவளை விதவையென புனிதச்சடங்குகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கிறார்கள். ஆனால் பழங்குடி இனமோ வேட்டையில் கிடைத்த பொருட்களை பங்கிட்டு தொட்டியில் (ஊர்) உள்ள விதவைக்கு முதல் பங்கைத் தருகிறார்கள். இந்த நாவலில் பதிவாகியுள்ள கொத்தல்லி எனும் பழங்குடியின் வார்த்தைகள் தெறித்து விழுகின்றன அதிகார வர்க்கத்தின் முகத்தில் திருடனைப் போலவா நாம் வேட்டையாடனும்? ஒரு சமயம் நாம ஆண்ட பூமியடா இந்தக் காடு. இந்தக் காட்டுத் தாயின் குழந்தைகள் நாம் இன்றைக்கு திருடனாட்டம். இதுக்கு உளவாளி வேறு. கொத்தல்லி, கோல்காரன், சிவண்ணா, சென்நெஞ்சான் என தனித்த அடையாளத்துடன் இனத்தின் வாழ்வியல் கூறுகளை பதிவுறுத்தியிருக்கும் பாத்திரங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு எங்கும் பார்த்திட இயலாதது. மணிராசன் கோயில் திருவிழாவும் அங்கு நிகழ்த்தப்படும் சாமியாட்டத்தில் தன் மூதாதையர் விரும்பி வந்து பலிகேட்பதும், அருள் தருவதுமென நிகழும் அவர்களின் நம்பிக்கை வாழ்வது குறித்த அச்சத்துடன் தன்நாட்களை நகர்த்திடும் சமதளமக்களின் வாழ்விய லுக்கு நேர் எதிரானது.

நாவலின் பின் பகுதியில் வீரப்பனின் தேடுதல் வேட்டைக்காக வனம் புகுந்த தமிழக கர்நாடக அதிரடிப்படையும், காவல்துறையும் நிகழ்த்தியுள்ள வன்முறையும், கொடூரமும் ரத்தமும், சதையுமாக பதிவாகி உள்ளது. அதிரடிப் படையினர் எந்தவிதமான சட்ட ஒழுங்குகளையோ, ஜனநாயக நடைமுறைகளையோ காட்டில் பின்பற்றவில்லை என்பதும், அவர்கள் நிகழ்த்திய மனிதப்படுகொலைகளும், மனிதாபிமானமற்ற தண்டனை முறைகளும் வாசித்துக் கடக்க முடியாதவை. தந்தையும், மகனும் பிடிக்கப்பட்டு முகாமிற்கு கொண்டு வரப்பட்டால் தந்தை மகனை செருப்பால் அடிக்க வேண்டும். மகன் தந்தையை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிற குரூரதண்டனை காவல் துறைக்குள் நிரவியிருக்கும் சேடிசத்தை அடையாளப்படுகிறது. தாயின் முன் மகளை, மகளின் கண் எதிரே தாயை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது தண்டனை முறைகளில் ஒன்றாக பின்பற்றப்படுகிறது. அதுவும் எங்கே? வனத்தின் மக்கள் புனித இடமாக கருதும் கோயிலின் அருகில். பண்ணாரி கோயிலுக்கு அருகில் வடிவமைக்கப்பட்ட முகாம் ஒரு வன்முறைக் கூடாரமென நம்முள் இறங்குகிறது சோளகர் தொட்டியின் வழியாக.

வெகுமக்களின் பார்வைக்கு எட்டியிராத வாழ்வியல் பகுதிகளை தொட்டுச் செல்கிறது சோளகர் தொட்டி. வீரப்பன் காடென நாம் அறிந்து வைத்திருக்கும் நிலப்பகுதியின் பூர்வ குடிகளான சோளகர்களின் வாழ்வியல் கூறுகளைப் பதிவுறுத்தியிருக்கிறார் பாலமுருகன். வீரப்பன் வேட்டை எனும் பெயரில் அதிரடிப்படையாலும் காவல் நாய்களாலும் நிகழ்த்தப்படுகிற வன்முறைகளும், பெண் உடலின் மீது அவர்கள் எழுதிச் சென்ற வக்கிர குரோதங்களையும் எந்த வாசகனும் வாசித்துக் கடக்க முடியாது. நாவலை முதன் முதலில் வாசித்த நட்களில் வாளி நிறைந்த தண்ணீரைப் பார்க்கிற போதெல்லாம் ரத்தமும், நிணமுமாக அவை கொப்பளித்ததையும் கண்டு சகிக்க முடியாமல் கிடந்தேன். மனதை ஊடறுத்து யாவரையும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிற பெரும்படைப்பு சோளகர் தொட்டி. அதை வாசித்து மட்டுமே உணர முடியும்.

-ம.மணிமாறன்

(இன்னும் கேட்போம்…..)

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சோளகர் தொட்டி, பிற்பாதியை வாசிக்க வாசிக்க உயிரை உலுக்கியது.

    ஒரு மனிதன் இன்னொரு மனிதனை இவ்வளவு கொடூரமாக சித்திரவதை செய்ய முடியுமா? என அலற வைத்த எழுத்து

    பதிலளிநீக்கு
  2. அன்பின் மாதவராஜ்

    ம. மணிமாறன் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.

    எனக்கு வேல. ராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை நாவலும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!