மிக்க நன்றி, எழுத்தாளர் வண்ணதாசன்!

னிக்கிழமை சாயங்காலம் லேசான மழைத் தூறலில் நனைந்துகொண்டுதான் திருநெல்வேலிக்கு பஸ் ஏறினேன். ஜன்னலோர இருக்கை கிடைக்காமல் போனதில் சின்ன ஏமாற்றமிருந்தாலும், அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரைத் தாண்டி ஈரம் படர்ந்த வெளி அழகாய்த் தெரிந்தது. எவ்வளவோ முறை பார்த்த அதே  மரங்கள், அதே கட்டிடங்கள், அதே கரிசல்காடு என்றாலும் புதுசாய் காட்சியளித்தன. மிகவும் நேசிக்கிற எழுத்தாளர் ஒருவரை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப் போகிறேன் என்பதும், இன்று அவர் என் எழுத்துக்கள் குறித்து பேசப்போகிறார் என்பதும் படபடப்பையும், சிலிர்ப்பையும் வீசிக்கொண்டு இருந்தன.

ழுத்தாளர் வண்ணதாசனை ஆறேழு தடவைக்கும் மேலாக நேரில சந்தித்து இருக்கிறேன். எதாவது கூட்டங்களாய்த்தான் அவை இருந்திருக்கின்றன. ஒன்றிரண்டு சமயங்களில் நானும், அவரும் ஒரே மேடையில் பேசவும் செய்திருக்கிறோம். சில வார்த்தைகள், புன்னகை தவழும் விசாரிப்புகளாய் இருப்பினும் அவை என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் தந்தையார் சண்முகம் அவர்கள் எழுதிய பெரிய வயல் நாவல் வெளியீட்டு விழாவின் கூட்டத்தில் அவரும், கவிஞர் சமயவேலும் வந்து அமர்ந்திருந்த்னர். அவர்களுக்கு நேர் பின்னே நான், காமராஜ், கார்த்தி இருந்தோம். “நல்லா இருக்கீங்களா” எனத் தொட்டு கேட்கத் தோன்றி, அந்தக் கூட்டத்திலும் அவர்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் தனிமையை உலுக்கி, உதிர்த்துவிட மனமில்லாமல் போனேன். அதிகமாய் வண்ணதாசனோடு  பேசியதில்லை என்றாலும் அவர் மிகவும் தெரிந்தவராகவும்  நெருக்கமானவராகவுமே உணர்ந்திருக்கிறேன்..

அவரது எழுத்துக்கள் அப்படியானவை. இலக்கியச் சிந்தனை தொகுப்பில் வந்த அவரது ‘தனுமை’தான் நான் முதலில் படித்த அவரது கதை. தனு நடந்து சென்ற அந்தப் பாதையை ஏக்கத்தோடும், தவிப்போடும் பார்த்துக் கிடந்தேன். அதற்குப் பிறகு அவரது பல கதைகளை படித்ததில், தமிழ் இலக்கியப் பரப்பில் வண்ணதாசனும், வண்ணநிலவனும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தார்கள். வண்ணதாசன் ஒரு மரநிழலில் உட்கார்ந்து வாசிப்பவனின் அந்தராத்மாவோடு அமைதியாகவும், சாவகாசமாகவும் உரையாடிக் கொண்டு இருப்பார்.  அறிந்த வாழ்க்கையில், அறியத் தவறிய அழகுகளையும், அர்த்தங்களையும் நமக்கு காட்டிக் கொண்டு இருப்பார். அன்பும் இதமும் படர்ந்த வெளியில் நம்மை சஞ்சரிக்க வைப்பார். மென்மையான, நுட்பமான தருணங்களைக் கடக்க முடியாமல் உள்ளமெல்லாம் ததும்பும்.

கதைகள் எழுதத் துவங்கிய காலத்தில், எழுத்தாளர். கந்தர்வன் “மாது உன்னிடமும், ஷாஜஹானிடமும் வண்ணதாசனின் ஏரியா இருக்கு” என்று ஒருமுறை சொன்னது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நண்பர்களோடு கதைகள், கவிதைகள் குறித்து பேசுகிறபோதெல்லாம் அவரது பெயர் வராமல் இருக்காது. எழுத்தாளர் தனுஷ்கோடி, தனக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்களையெல்லாம் வாசித்துக் காட்டுவார்.  பிரியத்தில் விளைந்த அந்த சொற்களின் பின்னால் என்னை மறந்து சென்று கொண்டிருப்பேன்.

ஆரவாரமில்லாமல்,  தொலைவில் இருந்தபடியே  வண்ணதாசனால் எப்படி நமக்குள் நிறைந்து போக முடிகிறது என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஒருமுறை எழுதியதைப் படித்த பிறகு அதில் ஆச்சரியம் இல்லை, இயல்பானது ஒன்றுதான் எனத் தோன்றியது. மதுரையில், எழுத்தாளர் வண்ணதாசன் வீட்டுக்குச் சென்று, எஸ்.ராமகிருஷ்ணன் ஒருநாள் மொட்டைமாடியில் உட்கார்ந்து பேசி இருந்திருக்கிறார். சில காலத்தில் வண்ணதாசன் அலுவலகம்  நிமித்தம் வேறு ஊருக்கு மாறுதலில் சென்று விட்டாராம்.  மதுரையில் வண்ணதாசன் இருந்த வீட்டிற்கு அருகில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, தானும், வண்ணதாசனும் பேசிக்கொண்டு இருந்த அந்த மொட்டை மாடியை ஒரு இரவில் பார்த்துக்கொண்டு இருந்தாராம் எஸ்.ராமகிருஷ்ணன்.  அப்படி வந்து நமக்குள் தங்கிக் கொள்கிற மனிதராய் வண்ணதாசன் இருக்கிறார்.

குருவிகள் பறந்துவிட்டன்” சொற்சித்திரங்களின் தொகுப்பு வந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகி விட்டிருந்தது. விமர்சிகரும்,  நல்ல சிந்தனையாளருமான எஸ்.ஏ.பெருமாள் ஒருமுறை வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டு இருக்கும்போது “நல்லா இருக்கு மாது. ஆனா நீ ஒரு எழுத்துச் சோம்பேறி. இதில் பல நல்ல சிறுகதைகள் இருக்கின்றன. நாவலே இருக்கிறது. அதையெல்லாம் எழுதாமல் இப்படித் துணுக்கு போல எழுதுகிறாய்” என பிரியத்தோடும், உரிமையோடும் கடிந்து கொண்டார். ‘மாவீரனின் கதையும்’, ‘வயதாகி பிறகு வந்த காமமும்’ அற்புதம் என்று பாராட்டவும் செய்தார்.

எழுத்தாளர் ஷாஜஹானுக்கும் கிட்டத்தட்ட இதே கருத்து இருந்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது முக்கியம் என்றும்,  குழந்தையை மையமாக வைத்து எழுதப்பட்ட சொற்சித்திரங்கள் ’கிளாசிக்”  என்றும் சொன்னார். எழுத்தாளர் உதயசங்கர், “ரொம்ப பொறாமையா இருக்கிறது” என ஆரம்பித்து,  “ இந்தச் சூழலுக்கு பொருத்தமான  புதுசான ஃபார்ம் இது” என்பதை திரும்பத் திரும்பச் சொன்னார். இவர்கள் தவிர வேறு யாரும் இந்த புத்தகம் குறித்து என்னிடம் பேசவில்லை. வெளியிலும் யாரும் பேசியதாகத் தெரியவில்லை.  எழுத்தாளர். வண்ணதாசன் இப்போது  பேச இருக்கிறார்.

நெல்லை ஜங்ஷனிலிருந்து சிந்துபூந்துறையில் உள்ள மூட்டா அலுவலகத்தை நெருங்கிய போது எதிரே, கவிஞர் கிருஷியும், எழுத்தாளர் வண்ணதாசனும் எதோ பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்கள். முகமெல்லாம் சிரிக்க, “வாங்க மாதவராஜ்” என்று கைகளை கெட்டியாய் பற்றினார் வண்ணதாசன். “ஒரு காபி சாபிட்டுவிட்டு கூட்டம் ஆரம்பிபோம்” என்றார் கிருஷி. எழுத்தாளர் ஜெயகாந்தனை விசாரித்தார் வண்ணதாசன். தீராத பக்கங்களை படிப்பதாகச் சொன்னார். ‘கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டை, ஒரு மூட்டை’யை ரசித்துப் பேசினார். அவரது அன்பும், வெளிப்படுத்தும் பண்பும் என்னை ஆட்கொண்டிருந்தது.

மொத்தம் இருபது பேர் போல வந்திருந்தார்கள். நான்கைந்து பேர் புத்தகம் படித்திருந்தார்கள். ”சம்பிரதாயமாக இல்லாமல், எல்லோரும் பேசலாம்”  என்றார் கிருஷி. ஒன்றிரண்டு கருத்துக்களோடு, அவரவர்கள் புரிதலில் பேசினார்கள். சில சொற்சித்திரங்கள் புரியவில்லை என்றர்கள்.  செல்வகுமார் திலகராஜ் தனக்கிருக்கும் விமர்சனங்களைச் சொன்னார். ”பூனைக் குட்டி போடும்போது ஒரே இடத்தில் இருக்காது, நான்கைந்து இடங்களுக்கு மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த விஞ்ஞானப் புரிதல் இல்லாமல் எழுதப்பட்டு இருக்கிறது” என்றும், “மாதவராஜை மிக நெருக்கமாகத் தெரியும் என்ப்தால் அவரது பல சொற்சித்திரங்களில் அவரது குழந்தைகள் தெரிகின்றனர்”  என்றும் சொன்னார். கொலைகாரன், குழந்தை மொழி, கீரைக்காரி, பிள்ளை நிலா என ஒவ்வொன்றாய் கவிஞர் கிருஷி வாசித்துக் காட்டி, சிலாகித்தார். இடையிடையே வண்ணதாசனும் குறுக்கிட்டு, அந்த சொற்சித்திரங்களுக்கு  மேலும் அர்த்தம் தந்து கொண்டிருந்தார். ஒரு கலந்துரையாடல் போல இருந்தது..

தொடர்ந்து, புத்தகம் குறித்து, தான் எழுதிக்கொண்டு வந்திருந்தை வாசித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் வண்ணதாசன். உற்சாகமாய்  இருந்தார். “குருவிகள் என்றால் குருவிகள் மட்டுமல்ல, பூனை என்றால் பூனை மட்டுமல்ல. ஒரு படைப்பை அப்படியே நாம் அணுகிவிட முடியாது. அது சொல்லும் செய்திகள் எராளம்” என்றவர் தொடர்ந்து, ”ஒருவன் தன் சொந்த வாழ்விலிருந்துதான் எழுதுகிறான்,  அவை பொதுத்தன்மை கொண்டிருப்பதாலேயே படைப்புகளாகின்றன.” என்றும் வந்த விமர்சனங்களுக்கு அவரே விளக்கங்கள் தந்தார்.  பிரியத்திற்குரிய அந்த எழுத்தாளர் புத்தகத்தையும், அதில் உள்ள எழுத்துக்களையும் தூக்கிவைத்துக் கொண்டாடினார் என்பது கூட குறைவான விவரிப்பாய்த்தான் இருக்க முடியும்.

வரிகளை, வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி ரசித்தார். எழுதிக்கொண்டு இருக்கும் போது, அதன் போக்கில் சில சொற்கள் சட்டென்று வெளிவர, அதன் அர்த்தத்திலும், வசீகரத்திலும் எழுதுகிறவன் அடைகிற படைப்பின் சுகம் மிக மிக பிரத்யேகமானது, அற்புதமானது.. எப்போதோ எழுதும்போது பெற்ற அந்த தருணங்களையெல்லாம் எழுத்தாளர் வண்ணதாசனின் வார்த்தைகள் எனக்கு அந்த நேரத்தில் மீட்டித் தந்தன. குழந்தைக்ளை சித்தரிக்கிற மாதவராஜால் முதியவர்களையும் தொட்டுப் பேச முடிகிறது என்றார்.அவரது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இங்கு அப்படியே எழுதுவதைவிட,  ஒரு சிறந்த படைப்பாளி, இன்னொருவனின் படைப்பை  மெச்சிய, போற்றிய விதத்தை குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.  தமிழ் இலக்கியச் சூழலில் காணக் கிடைக்காத அரிதான காட்சி அது.

எதுவும் பேசமுடியாமல், போதும், போதும் என்று நான் உட்கார்ந்திருந்தேன். ஏற்புரையில் என்ன பேசினேன் என்று சரியாகத் தெரியவில்லை. குழந்தைகள் குறித்து பேசியது நினைவிலிருக்கிறது..  வலைப்பக்கங்கள் குறித்தும் பேசினேன். விடைபெறும்போது, “வாங்க மாதவராஜ், ஜானகிராமில் போய் ஒரு டீ சாப்பிடுவோம்” என என்னையும், வண்னதாசனையும் கிருஷி அழைத்தார். சென்றோம். ”உங்கள் புத்தகத்தைப் படித்து ஆறு மாதங்களாகின்றன. இதைப் பற்றி, எங்காவது வெளிப்படுத்த காத்திருந்தேன். அதை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷிக்கு நன்றி” என்றார் வண்ணதாசன்.  “நிறைய தொடர்ந்து எழுதுங்கள் மாதவராஜ்” என கைகளை அழுத்திப் பிடித்து விடை பெற்றார். “இதுபோன்ற கூட்டங்களில் வந்து அமைதியாக உட்கார்ந்து, சில வார்த்தைகள் பேசிச் செல்வார். இன்று முழுக்க கரைந்து, நெகிழ்ந்து போயிருந்தார் வண்ணதாசன்” என்றார் கிருஷி.

நண்பர்களுடன் சென்று சாப்பிட்டு விட்டு, சாத்தூர் திரும்பினேன். ஜன்னலோரம் இடம் கிடைத்தது.. மூச்சு முட்ட் குளிர்ந்த காற்று முகத்திலடித்தது. என் வாழ்வின் முக்கிய நாட்களில் ஒன்று என்னைச் சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தது.  வாழ்வின் கவிதையொன்று இருட்டிலிருந்து பிரிந்து சின்னச் சின்ன வெளிச்சத் துளிகளாய் தூரத்தில் சிந்திக்கொண்டு இருந்ததை நான் பார்த்தேன்.

நேற்று ஞாயிறு காலையில் விழித்த போது, மொபைலில் எழுத்தாளர் வண்ணதாசனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆசையோடு பார்த்தேன்.

“நன்றி மாதவராஜ். நேற்று நான் சந்தோஷமாக வீடு திரும்பினேன். சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை”  - கல்யாண்ஜீ

அவருக்கு போன் செய்தேன். குரல் கேட்டதும், “நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்” என்றேன். சிரித்தார். ஞாயிறு போற்றுதூஉம்! ஞாயிறு போற்றுதூஉம்!!

கருத்துகள்

26 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒளி வீசுகிற நட்பு. நிறைவான பயணம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான நிகழ்வு சார். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. com,

    very nice to read... I have problem in typing tamil.. I could feel your emotions with your words.. congrats..

    பதிலளிநீக்கு
  4. வண்ணதாசனுடனான சந்திப்பையும் உங்கள் நூல் பற்றிய அறிமுகக் கலந்துரையாடலையும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணா.

    வாசிக்கும்போது எனக்கும் அந்த ஜன்னலோர பயணத்தின் சுகமான அனுபவம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மாதண்ணா,
    சந்தோஷமாயிருக்கிறது.
    \\ஞாயிறு போற்றுதூஉம்! ஞாயிறு போற்றுதூஉம்!!\\
    :-)))

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது மாது சார்

    வண்ணதாசன் பிரியமே வடிவான மனுஷர்

    பதிலளிநீக்கு
  7. After a long time u r in u r elements. I am seeing the old Mathavji now. Thanks to Krishi and Vannadasan.....kashyapan.

    பதிலளிநீக்கு
  8. நேற்று பேசியதில் விட்டுப்போனவைகளும்,
    முன்னதாக விட்டுப்போனவைகளயும் இட்டு நிரப்புகிறது இந்த பதிவு.
    வானம் பளீரென்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. //எழுதிக்கொண்டு இருக்கும் போது, அதன் போக்கில் சில சொற்கள் சட்டென்று வெளிவர, அதன் அர்த்தத்திலும், வசீகரத்திலும் எழுதுகிறவன் அடைகிற படைப்பின் சுகம் மிக மிக பிரத்யேகமானது, அற்புதமானது..//

    கை தட்டுகிறேன்... அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. மாது,

    ரொம்ப சந்தோசமாய், நிறைவாய் இருக்கிறது. வாழ்த்துகள் மாது! :-)

    பதிலளிநீக்கு
  11. //எழுதிக்கொண்டு இருக்கும் போது, அதன் போக்கில் சில சொற்கள் சட்டென்று வெளிவர, அதன் அர்த்தத்திலும், வசீகரத்திலும் எழுதுகிறவன் அடைகிற படைப்பின் சுகம் மிக மிக பிரத்யேகமானது, அற்புதமானது..//
    நிதர்சனம்.
    சமீபத்தில் அவரது இல்லம் சென்றிருந்தேன்.அற்புதமானதொரு சந்திப்பு. வரும்போது அவரது பைக்கில் பேருந்துநிலையம் வந்து விட்டுச்சென்றார். தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளனுடன் பயணிக்கிறேன் என்று கத்த வேண்டும் போலிருந்தது.

    நல்லதொரு அனுபவக்குறிப்புகள் அண்ணா.நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் நெல்லையில் பறந்து கொண்டிருந்த அந்த அற்புதமான அதே நேரத்தில் நான் உங்கள் சாத்தூரில் மாதுவும் ஏன் காமராஜும் இல்லாத ஒரு தெருவில் செம்மோழி மாநாடு பற்றிய பொதுக்கூட்டத்தில் இரவு 11 மணிக்கு மேடையை விட்டிறங்கி மாதுவும் காம்சும் தனுஷ்கோடியும் இல்லாத சாத்தூர்தான் எனக்கு விதிக்கப்பட்டதா என்கிற கழிவிரக்கம் தோன்ற 12 மணிக்கு லட்சுமிகாந்தன் பஸ் ஏற்றிவிட பயணம் தொடர்ந்தேன் மாது.உங்கள் சந்தோஷத்தை அப்படியே உள்வாங்கி என் மனம் தளும்பும் அதே கணத்தில் என் ....யும் உங்களிடம் சொல்லத்தோன்றியது.இதுதான் வாழ்வின் நகைச்சுவை போலும்.

    பதிலளிநீக்கு
  13. வாசிக்கும் போதே... உடன் இருந்தது போல் இதமானதோர் உணர்வு...

    அருமையான பகிர்வு..

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவு...கவிதை நிறைத்த மனம் போல...நட்பு நிறைத்த தீராத பக்கங்கள்...வாசித்தேன்...உணர்தேன்...

    பதிலளிநீக்கு
  15. அழகான பயணம், அழகான நிகழ்வு...

    பதிலளிநீக்கு
  16. அருமையான சந்திப்பு. அது குறித்த பதிவு மிக அழகாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  17. பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

    இரவு உணவு எங்கே, ஜானகிராம் ஹோட்டல் அல்லது வசந்தம்.

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அங்கிள்! You deserve all this and more.
    :)

    பதிலளிநீக்கு
  19. க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்க‌ள் பாக்கிய‌வான்க‌ள்.
    //வீட்டுக்கு வெளியில் இத்த‌னை தூர‌ம் ப‌ற‌ந்த‌து//
    வான‌த்தை வச‌ம் செய்த‌தால் அங்கும் வாச‌மா?
    இப்ப‌டியான‌ கூட்ட‌த்தைத்தான்,
    "சர்க்க‌ரை ப‌ந்த‌லில் தேன் மாரி" என்பார்க‌ளோ?

    பதிலளிநீக்கு
  20. பெரிய நட்பு வட்டம்...

    ஏராளமான நண்பர்கள்...

    மாதவராஜ் பாக்யவான்.

    பதிலளிநீக்கு
  21. what do you think of this ?

    http://lawforus.blogspot.com/2010/06/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  22. கடற்கரை சாலையில் செல்லும்போதும் கடலை ஒரு முறை திரும்பிப்பார்க்காத பெருநகர அவசரக்காரர்களில் ஒருவனான எனக்குப் பொறாமை ஏற்படுத்துவது இதுபோன்ற உங்கள் அனுபவங்கள். இதில் க்ருஷியும் சேரும்போது... ஆஹா.....

    vijayasankar

    பதிலளிநீக்கு
  23. மாது, ஜுன் 19 கூட்டத்தை தவற விட்டவர்களில் நானும் ஒருவன்.ஒரு தொழிற்சங்க கூட்டத்துக்கு சென்றவன் வர இயலாமல் போய் விட்டது.உங்கள் நூல் குறித்து நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருந்தேன்.இந்த புதிய வடிவத்திலும் மாதுவின் சித்திரங்கள் மனதை நெகிழ வைக்கின்றன.அது எப்படி அய்யா உங்களுக்கு மட்டும் குழந்தைகளின் மொழி தெரிந்து இருக்கிறது? சின்னஞ்சிறு வயதில் ,அந்த கெட்ட வார்த்தை ,போன்ற சித்திரங்களில் மட்டும் அல்ல கொலைகாரன் , போன்ற கதைகளில் கூட குழந்தைகளின் உணர்வு அற்புதமாய் வெளிபட்டிருக்கிறது என்று தான் சொல்வேன். தாய் வலி படித்து விட்டு மேலே படிக்க முடியாமல் அழுதேன். வலி பெண்களுக்கு மட்டும் தானா ? எனது கனவில் உதிர்ந்த பூ படித்து விட்டு நெடு நேரம் நீங்கள் தொலைபேசியில் பேசியது நினைவுக்கு வந்தது...வயதாகி வந்த காமம் படிக்க சுவாரசியமான கதை.தொகுப்பை படித்து முடித்ததும் நாமும் இந்த வடிவத்தில் எழுத முயற்சிக்கலாமா என்று தோணியது.
    உங்கள் கைகளை கொடுங்கள் மாது. இன்னும் எழுதுங்கள் .
    நாறும்பூ நாதன்.நெல்லையில் இருந்து.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!