இராவணன், மக்கும் குப்பையா, மக்காத குப்பையா?

எப்போதும் போல பஸ்ஸிற்காக காத்திருக்கவோ அல்லது பஸ்ஸின் நெரிசலில் சிக்கி பயணித்தபடியோ இருக்கலாம் நீங்கள். எதையோ முணுமுணுத்தப்படி பஜாரில் காய்கறி அல்லது, மளிகைச் சாமான்கள் வாங்கிக்கொண்டோ இருக்கலாம். டாஸ்மார்க்கில் உட்கார்ந்து ஒரு பீரை அல்லது குவார்ட்டரை காலிசெய்து கொண்டோ இருக்கலாம்.. சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவியில் சீரியல் பார்த்து காலாட்டிக்கொண்டோ இருக்கலாம். ‘இராவணன் படம் பார்க்கணுமே’ என்னும் அவஸ்தைகள் யாருக்கும் வரவேண்டியதில்லை. பார்க்காததால் எதையும் இழக்கவோ, பெறவோ போவதில்லை.

ராகினியான ஐஸ்வர்யாராய் பச்சனை கவர்வதற்காக மலைமேலிருந்து நீரில் குதித்து செல்கிறான் வீரா என்னும் விக்ரம் முதலில். கவர்ந்த ராகினியை விடுவித்து, அவளது கணவன் எஸ்.பியால் சுடப்பட்டு மலை மேலிருந்து கீழே விழுந்து மரிக்கிறான் வீரா கடைசியில். இதுதான் படத்தின் ஒருவரிக் கதை. ரொம்பச் சாதாரண இந்தக் கதைக்கு மேலும் அர்த்தங்களைக் கற்பிக்கவும், ஒரு காவிய அந்தஸ்தைச் சேர்க்கவுமே ‘இராவணன்’ என்னும் பெயரிடப்பட்டு இருக்கிறது. அனுமான், விபீஷணன், கும்பகர்ணன் என்னும் இதிகாச மாந்தரோடு அடையாளம் காணும்படி பாத்திரங்கள் திணிக்கப்பட்டு இருக்கின்றன. ரிலையன்ஸும் மணிரத்னமும் சேர்ந்து தங்கள் 120கோடி ருபாய் சரக்கை விற்றுத் தள்ளுவதற்கு கையாண்டிருக்கும் வியாபார யுக்தியே இது. படமோ பரிதாபகரமாய் தோற்று, பெரும் நையாண்டிக்கு உரியதாகிவிட்டது.

ஐஸ்வர்யாராய் தண்ணீரில் விழுந்து, வாட்டர் புருஃப் மேக்கப்போடு  அன்றலர்ந்த பூவாக எழுகிறார். அவருக்கும், பிரியாமணிக்கும் மேலாடை எதாவது ஒருபக்கம் எப்போதும் விலகியே இருக்க வேண்டும் என விதி இருக்கும் போலும். மலைவாசிகளின் திருமணம் அரண்ம்னையில் நடக்கிறது. துப்பாக்கி வெடித்து ”வீரா” என பிரித்திவி ராஜூம், கண்களில் கோபமும் நெற்றியில் சுருக்கமும் தெறிக்க “எஸ்.பி” என விக்ரமும் காடும், தியேட்டரும் அதிர்ந்து எதிரொலிக்க கத்தி கத்தி வெறிகொள்கிறார்கள். இயக்குனர் கர்ணனின் பழைய படங்களே தேவலாம் போலிருக்கிறது. உடலெல்லாம் கருப்பில், மஞ்சளில், வெள்ளையில் சாந்துகளை அப்பிக்கொண்டு ஆடிக்கொண்டும், சண்டையிட்டும் கொண்டும் மக்கள் காணப்படுகிறார்கள். எப்போது பார்த்தாலும் இந்த பிரபு, ஐஸ்வர்யாராய்க்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார். பெரும் காவல் படையே கண்டுபிடிக்க முடியாத விக்ரமை, சாதாரணமாக ஒரு பஸ்ஸில் வந்து இறங்கி ஐஸ்வர்யாராய் கண்டுபிடித்து விடுகிறார். இராவணன் இருக்கும் இடம் சீதைக்குத்தான் தெரியும் போல. இது தெரியாமல் அந்த இராமன்  அனுமான்களையும், அணில்களையும் வைத்து கஷ்டப்பட்டு இருக்கிறாரே?

படம் முடிந்து வெளியே வரும்போது ஒருவர் படத்தில் ‘இலக்குவன் இல்லையே?’ என்றார், இன்னொருவர் ‘யார்தான் இருந்தார்கள்’ என்றார். உண்மைதான். சீரியசான படத்தின் பெரும்பாலான காட்சிகளும், வசனங்களும் சிரிப்பை வரவழைக்கிற அளவுக்கு மணிரத்னம் எடுத்திருப்பது காலியாய்ப்போன அவரது பெருங்காய டப்பாவை எல்லோருக்கும் காட்டுகிறது. அவரது பகல்நிலவும், மௌனராகமும் இப்போதும் நினைவுகளில் சஞ்சரிக்கின்றன. அப்புறம் பம்பாய், உயிரே, ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் என சூடான பிரச்சினைகளோடு அவரது சரக்கை கலந்து கொடுத்தார். அவைகளில் விமர்சனங்கள் இருப்பினும் அவரது கதை சொல்லும் பாங்கும், சில காட்சிகளும் மனதில் நிற்கத்தான் செய்தன. இந்தப்படத்தில் அப்படியும் எதுவுமில்லை.

படத்தில் புரிந்துகொள்வதற்கும், புரியாமல் போவதற்கும் ஒன்றுமில்லை. பெரும் ஆராய்ச்சிகள் நடத்தி, ‘அது அப்படி’, ‘இது இப்படி’ என கற்பித்து தூற்றவும், போற்றவும் எதுவுமில்லை. காதல், காமம்  என உளவியல் குறித்த ஆழமான சித்தரிப்புகள் இல்லை. இது போன்ற கதைகளை ஆக்கம் செய்யும்போது, நவீன காலத்தின் சூழலோடு மீள்வாசிப்புச் செய்வதாக இருக்க வேண்டும். முந்தையதில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளின் மீது புதிய வெளிச்சத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் எந்த மெனக்கெடலும் இந்தப் படத்தில் இல்லை. படத்தில் மலைவாழ் மக்களின் பிரச்சினைகளையோ, அவர்களுக்காக போராடுபவராக விக்ரமையோ காட்சிபடுத்தவில்லை. அடிக்கடி மேட்டுக்குடி என்று ஒரு வார்த்தை வந்து போகிறது. அவ்வளவுதான். அதுவே மணிரத்னத்துக்கு புரட்சி போலும்.

படத்தில் ஒரு இடத்தில் பெருமாள் சிலை முன்பு நின்று ஐஸ்வர்யாராய் “கெட்டவர்களை ஏன் எப்போதும் கெட்டவர்களாகவே காண்பிக்க மாட்டேன்கிறாய்” என்று புலம்பும் காட்சி ஒன்று வருகிறது. படம் இதைச் சுற்றி அழுத்தமாக நகர்வதாக இருந்திருந்தால், கதையும், காட்சிகளும் சிறப்பாய் வெளிப்பட்டு இருக்கக் கூடும். 

கதை சொல்ல வேண்டுமென இதயசுத்தியோடு பார்த்தால், ஆயிரம் கதைகள் நம்மைச் சுற்றிலும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு இரமாயணத்தில் இருந்து ஒரு பிட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஏகமாய் பில்டப் கொடுத்து, ஏராளமாய் செலவு செய்து, கொள்ளை கொள்ளையாய் லாபம் சம்பாதிப்பதே நோக்கமாயிருக்கும் போது, அது குப்பையாகத்தான் போகும். அற்புதமான லோகேஷன், அதன் அற்புத அழகையெல்லாம் அள்ளித் தரும் காமிரா, இசை, நடிப்பு, ஏராளமானோரின் மனித உழைப்பு இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் தெரிகின்றன. அவை வேண்டுமானால் இந்த குப்பையை மக்காமல் இருக்கச் செய்யலாம்.

Comments

25 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. kuppaiyilum kuppai keduketta kuppai !

    ReplyDelete
  2. I think this too a failure for Mani rathanm like Iruvar, Guru (ambani)..

    ReplyDelete
  3. விமர்சனம் நன்றாக இருக்கிறது. தாங்கள் மணியின் மாயைக்குள் விழவில்லை! மணிக்கு எப்போதுமே கதை வறட்சி இருந்து கொண்டிருக்கிறது, நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய் என்று அவருடைய படங்களில் கதை என்பது ஏதோ ஒன்றின் தழுவலாகவே இருக்கும், அவருடைய சாமர்த்தியமான திரைக்கதையே படங்களைப் பேச வைக்கிறது. மற்றபடி, அவருடைய படங்கள் (குறிப்பாக ரோஜாவிற்கு பின் வந்தவை) எல்லாம் டெக்னிக்கலாகச் சொல்லப்பட்ட குப்பைகளே! தேசிய வர்த்தகத்திற்கு அற்புதமான பாடல் காட்சிகள் தரமான காட்சியமைப்பு ஒளிப்பதிவு இசை அகியவை போதும் என்று மணி நினைத்திருக்கலாம், ஒரு இயக்குனராக மவுனராகம், நாயகனுக்குப் பின்பு (கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை ஓரளவுக்கு சொல்லலாம்) மணி இன்னும் தன்னை வெளிப்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன்!

    ReplyDelete
  4. விமர்சனம் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. பதிவு நன்றாக இருந்தது.

    ReplyDelete
  6. எல்லோரும் போற்றுவதை நாம் தூற்றினால் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள் என்பதை தவிர உங்கள் விமர்சனத்தில் ஆழமாக ஒன்றும் இல்லை

    ReplyDelete
  7. katchi keralavukku aatharavu thondan kerala cinemavukku vaazhka pothuvudamai iyakkam

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மாதவ ராஜ் , எந்த வித compromise உம் செய்து கொள்ளாமல் மிக சரியாக விமர்சனம் செய்துள்ளீர்கள். மணிரத்னம் படங்கள் என்றால் மெத்த படித்தவர்களுக்கான படம். சாமான்யர்களுக்கு விளங்காது என்று மீடியாக்கள் இவரை பற்றி ஒரு மாயையை உருவாக்கி வைத்துள்ளன.இதை வைத்துகொண்டே மனிதர் நன்றாக கல்லா கட்டி வந்துள்ளார் இது வரை. இனிமேல் இந்த பப்பு வேகாது என்றே தெரிகிறது . இதுவரை வந்த விமரிசனங்களிலேயே இது தான் மிக சரியாக உள்ளது

    ReplyDelete
  9. // ஏராளமாய் செலவு செய்து, கொள்ளை கொள்ளையாய் லாபம் சம்பாதிப்பதே நோக்கமாயிருக்கும் போது, அது குப்பையாகத்தான் போகும்//

    if u know this then why you go and watch? did maniratnam or the production asked u to come and watch

    ReplyDelete
  10. கதை சொல்ல வேண்டுமென இதயசுத்தியோடு பார்த்தாலல், ஆயிரம் கதைகள் நம்மைச் சுற்றிலும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு இரமாயணத்தில் இருந்து ஒரு பிட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஏகமாய் பில்டப் கொடுத்து, ஏராளமாய் செலவு செய்து, கொள்ளை கொள்ளையாய் லாபம் சம்பாதிப்பதே நோக்கமாயிருக்கும் போது, அது குப்பையாகத்தான் போகும்.//

    விமர்சனம் சுரீர்!

    ReplyDelete
  11. நான் மணிரத்னத்தின் ரசிகன், அவர் கதை சொல்லல் எனக்கு பிடிக்கும். ஆனால் ராவணனை பொறுத்த வரை நீங்கள் சொல்வதையே நானும் உணர்ந்தேன்.

    ReplyDelete
  12. இன்று தான் பார்த்து வந்தேன்... தலைப்பிலேயே உண்மையைச் சொல்லிவிட்டீர்கள்...

    ReplyDelete
  13. S.Raman, Vellore

    சமூகப் பிரச்சினைகள் பற்றிய படம் என்ற முலாமோடு மணிரத்னத்தின் சில படங்கள் வந்தாலும் உண்மையை உள்ளபடி சொல்லும் தைரியமோ நேர்மையோ அவருக்குக் கிடையாது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் எப்படி பாட்டு, சண்டை, கதாநாயகிகள் எல்லாம் எப்படி சமமாக வைப்பார்களோ அது
    போல மணிரத்னத்தின் தராசில் இரண்டு தரப்பின் தவறும் சமமாகவே இருக்கும்.

    அவரது தயாரிப்பில் அவரது மனைவியின் இயக்கத்தில் வெளிவந்த இந்திராவில்
    கேரளா அக்ரஹாரம் போலவே சேரி இருக்கும் என காண்பித்த யதார்த்தவாதிகள் அல்லவா?

    ReplyDelete
  14. ///இராவணன் இருக்கும் இடம் சீதைக்குத்தான் தெரியும் போல. இது தெரியாமல் அந்த இராமன் அனுமான்களையும், அணில்களையும் வைத்து கஷ்டப்பட்டு இருக்கிறரே?///

    Super,,,,Super,,,,,,

    ReplyDelete
  15. முன்பு சினிமா பார்ப்பதும் எழுதுவதும் என் தொழிலாகவே இருந்தது. ஓராண்டு காலமாக அதை நிறுத்திவிட்டேன். நல்லதாகப் போயிற்று என்று உங்கள் விமர்சனம் படித்துத் தெரிந்துகொண்டேன்.
    இந்தப் படம் பழங்குடி மக்களைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது என்று ஒரு நண்பர் கூறினார். அப்படித்தானா என்று படம் பார்க்க எண்ணினேன். அப்படிப் பார்த்தால் கூட மணிரத்னர்களுக்கு வெற்றியாகிவிடுமோ?

    ReplyDelete
  16. இப்பதிவில் நீங்களும் பின்னூட்டமிட்ட நண்பரில் ஒருவரும் கூட மெளனராகம் படத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள், ஆனால் அதுவே ஒரு ரீமேக் தான். அதில் ரேவதிக்கு பதிலாக அவரது மனைவி (திருமணத்திற்கு முன்) நடித்திருந்தார். படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. இயக்குனர் திரு. மகேந்திரன் என்பது நினைவு. மற்றொரு பின்னூட்டத்தில் முழு விவரம் தர முயற்சிக்கிறேன். வேறொன்றும் நான் சொல்லத் தேவையிருக்காது என்பதே என் எண்ணம்.

    ReplyDelete
  17. உங்கள் பதிவை படித்த பின்,முழு திரைபடம் பார்த்தது போல் இருந்தது
    விக்ரம் நல்ல திறமையான நடிகர் தான் ஆனால் நொ லக், பாவம்....

    ReplyDelete
  18. அன்பு மாதவ்

    இராவண் விமர்சனத்தை கொல்கத்தா சென்றிருந்தபோது அங்கு சங்க அலுவலகத்தில் வைத்து வேகமாக வாசிக்க நேர்ந்தது. அவ்வளவுதான் நேரம் வாய்த்தது. உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அவ்வளவு காத்திரமாகவும் , அழுத்தமாகவும் சொல்லவேண்டியதைச் சொல்லியிருந்தீர்கள். தினரத்தினங்கள் குறித்த செறிவான பதிவும், ஒப்பீடும் அந்த இடுகையின் கனத்தைக் கூட்டியது. ஆனந்தம் பொங்க உங்களை அலைபேசியில் அழைத்துப் பாராட்ட வெகு முயற்சி எடுத்துத் தோற்றேன். இன்று வரை நீங்கள் எனது அழைப்பை எடுப்பதாகக் காணோம். எண்னை மாற்றி விட்டீர்களோ...

    அப்புறம், ஜீஎஸ்கே கருத்தோடு எனக்கும் ஒருமிப்பு உண்டு. அவர் குறிப்பிட்டிருக்கும் படம், நெஞ்சத்தைக் கிள்ளாதே.

    பம்பாய், ரோஜா உள்பட மணிரத்தினத்தின் படங்களில் அவருக்கு பார்வையாளர் மீதான மரியாதையின்மையும், வரலாறு குறித்த அலட்சியமும் வெளிப்பட்டிருப்பதாக நான் உணர்ந்ததுண்டு. நீங்கள் ஒன்றும் அவரைக் கடுமையாகச் சாடி விட்டதாக யாரும் குறை சொல்ல முடியாது. டெலிகிராப் பத்திரிகையின் விமர்சகர், 'எனது நேயத்திற்குரிய மணி பேசாமல் தமிழிலேயே படம் எடுத்து ஹிந்தியில் டப் செய்தது அனுப்பட்டும். ஹிந்தியில் எடுத்து எங்கள் ரசனையைச் சோதனை செய்ய வேண்டாமே....' என்றும், "பரிச்சயமற்ற கடலில் டைட்டானிக் செலுத்தி அது நொறுங்கச் செய்ய வேண்டாம் " என்றும் அடித்து விட்டிருந்தார்.

    திரைப்படத்தின் காட்சிப் படிமத்தின் வசீகரங்களை, அதன் நுட்ப ரசனை தடயங்களை, எங்கு தட்டினால் பார்வையாளர் சொக்கிப் போவார் என்ற விவரங்களை அறிந்தவர் என்ற ரீதியில், மணியைப் பாராட்டுவோர் அடிப்படை விஷயங்களில் அவர் செய்யும் அதிரடி வேலைகளை அறிய மாட்டார்கள்.

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  19. மெளனராகத்தின் அசல் பெயரைக் (நெஞ்சத்தைக்கிள்ளாதே) குறிப்பிட்டு உதவிய திரு. எஸ்.வி.வி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. தோழர் மாதவ், ராவணன் இன்னும் பார்க்கவில்லை. அதனால் உங்கள் விமர்சனத்தை படித்ததோடு நிறுத்திக்கொள்கின்றேன். ஆனால் உங்களிடமிருந்து இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் பற்றிய விமர்சனத்தை எதிர்பார்த்தேன், ஏன் செய்யவில்லை? அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளையும் அதனால் கொள்ளை அடிக்கப்படும் மூன்றாம் உலகநாடுகளையும் குறித்த அற்புதமான கேலியும் கிண்டலும் செய்கின்ற அந்த சீரியசான படத்தை இனியும் பார்க்காதவர்கள் உடனே பார்க்க வேண்டுகின்றேன். ஒவ்வொரு காட்சியிலும் கதை மாந்தர்களின் வேடத்திலும் காட்சி பின்னணிகளிலும் வசனங்களிலும் எத்தனை கவனம்! எத்தனை நேர்த்தி! நமது பத்திரிக்கைகளோ சமூக சீரழிவுகளை விமர்சிக்கின்ற காரித்துப்புகின்ற 23 ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை....போன்ற படங்களை திட்டமிட்டே வெறும் சிரிப்பு படம் என்று ஒத்தைவரியில் சொல்லிவிட்டு ஓடுகின்றன. செம்மொழி முத்தமிழ் அறிஞரின் ஆட்சி மட்டும் என்னவாம்? ரஜினிகாந்தின் குப்பைப்படங்களுக்கு ஆண்டுதோறும் தவறாமல் விருதுகளை (அதாவது தமிழர்களின் பணத்தை) கொடுப்பதுதான் முத்தமிழை வளர்ப்பதாகும் என்றாகி ஆண்டுகள் பலவாகி விட்டன. அத்திபூத்தாற்போல ஒரு சில புதிய இயக்குனர்களின் நல்ல படங்கள் மிகுந்த சிரமப்பட்டு வரும்போதெல்லாம் ரஜினியின் குப்பை படம் ஒன்று வெளியாவதும், முத்தமிழ் அறிஞர் அதை பிரத்தியேகமான அரங்கில் பார்த்து பாராட்டுவதும், இந்த விளம்பர வெள்ளத்தில் புதிய இயக்குனர்களின் நல்ல படங்கள் சுவடு தெரியாம அடித்துக் கொண்டு போவதும்தான் தமிழகத்தின் கேடுகெட்ட வரலாறு. ஒரு காலத்தில் நாடக திரைப்படத் துறைகளை தேசியம் பேசிய காங்கிரசுக்கு எதிராக பலமான பிரச்சார மேடையாக பயன்படுத்திய திராவிட இயக்கத்தின் எஞ்சிய மூத்த அரசியல்வாதி கருணாநிதி விழிப்புணர்வு கொண்ட அரசியல் பேசும் திரைப்படங்களை அடித்து வீழ்த்த ரஜினி படங்களை மிக கவனமாக பயன்படுத்தும் நுட்பத்தை நாம் புரிந்து கொள்வோமாக.
    இக்பால்

    ReplyDelete
  21. தோழர் குமரேசன் அவர்களின் கருத்தோடு எனக்கு உடன்பாடு உண்டு,
    முதலில் மணிரத்னம் யாரோடு கூட்டூச் சேர்ந்து படம் எடுத்துள்ளார் என்று பார்த்தால் உலகத்திருடன் ரிலையன்ஸ்யோடு இதிலிருந்தே படத்தின் தன்மை எப்படி இருக்கும் என தெரிந்து விடுகிறது,
    காதல் என்பது வறுட வறுட சுகமானது அதை மூலதனமாக கொண்டுதான் இந்த படமும் வந்துள்ளது.
    மாதவராஜ் அவர்கள் சொன்னதை போல் மிகத்திறமையானவர்களின் உழைப்புகள் எல்லாம் நிறைய இருந்தும் படம் கதையில்லாமல் அலைகழிக்கிறது.

    ReplyDelete
  22. மணி என்ற கதைத் திருடர் ரிலையன்ஸ் திருடர்களோடு சேர்ந்து படம் பண்ணினால் அது அப்படித் தான் இருக்கும். படம் நூறு சதா விகிதம் குப்பை இல்லையாமே, ஒளிப்பதிவு, இசையமைப்பு, படமெடுக்கப் பட்ட இடங்கள் இதுக்காகவே படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொன்னார்களே?

    ReplyDelete
  23. ///
    எப்போதும் போல பஸ்ஸிற்காக காத்திருக்கவோ அல்லது பஸ்ஸின் நெரிசலில் சிக்கி பயணித்தபடியோ இருக்கலாம் நீங்கள். எதையோ முணுமுணுத்தப்படி பஜாரில் காய்கறி அல்லது, மளிகைச் சாமான்கள் வாங்கிக்கொண்டோ இருக்கலாம். டாஸ்மார்க்கில் உட்கார்ந்து ஒரு பீரை அல்லது குவார்ட்டரை காலிசெய்து கொண்டோ இருக்கலாம்.. சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவியில் சீரியல் பார்த்து காலாட்டிக்கொண்டோ இருக்கலாம். ‘இராவணன் படம் பார்க்கணுமே’ என்னும் அவஸ்தைகள் யாருக்கும் வரவேண்டியதில்லை. பார்க்காததால் எதையும் இழக்கவோ, பெறவோ போவதில்லை.///


    ///குறைகள் இருப்பினும், ‘அங்காடித் தெருவை’ தமிழின் முக்கிய படங்களில் ஒன்றாகச் சொல்லலாம். இன்னும் சிறப்பாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கம் வந்தபோதிலும், இயக்குனர் வசந்தபாலனை தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.
    அதேச் சண்டைகளையும், அதே காதல் குலுக்கல்களையும் நிரப்பி கூச்சநாச்சமில்லாமல் “இட்ஸ் எண்டயர்லி எ டிஃபரண்ட் மூவி” என உளறிக்கொட்டுபவர்களை நோக்கி “பாரடா, பாரடா..... இதோ கதை, இதோ வாழ்க்கை, இதோ சினிமா... பாரடா” என உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கிறது இந்தப் படம். தினம்தினம் பார்த்தும் பாராமல் கடக்கும் மனிதர்களை “எங்கே போகிறீர்கள்” என உலுக்கி நிறுத்துகிறது//////.

    .

    .

    ராவணனில் குறைகளை மட்டும்..அங்காடித்தெருவில் நிறைகளை மட்டும்
    சொல்லியிருக்கிறீர்கள்
    .வசந்த பாலன் உங்க ஊர் காரரா? மணிரத்னம் வடக்கத்து மனுசனா?

    எது என்னவாக இருந்தாலும்..

    படத்துக்கு விமர்சனம் எழுதுங்க பாஸ். டைரக்டர்க்கும்,புரோடியூசர்க்கும் எதுக்கு?
    எல்லாம் வியாபாரம் தானே..வியாபாரம் எப்படின்றத விட்டுட்டு சரக்கு எப்படின்னு சரியா சொல்லல நீங்க..

    தியேட்டரில் கைதட்டல்..
    பதிவுகளில் கமென்ட் ...

    அவங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தெரியல.


    முரன்பாடு உங்கள் விமர்சனத்தில் ..

    ReplyDelete
  24. அய்யோ! அய்யோ! வீம்பா படிக்காம் இருந்தனே இந்த விமர்ச்னத்தை! வீணாப் போன படத்தைத் துட்டுக் குடுத்துப் பாத்துட்டு வந்தமே! (ஒப்பாரி ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  25. சுஹாசினியின் வசனத்திலேயே படத்தின் விமர்சனத்திற்க்கான மையக்கூறு கிடைத்துவிடுகிறது. இது பழங்குடி மக்களை மேட்டுக்குடி எப்படிப் பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டும் படம். ஆய்த எழுத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு வாலிபர்கள் (மாணவர்கள்) ஜன கண மன பாடி கிராமங்கள் நோக்கிச் செல்வது. இருவரில் திராவிட இயக்கம் பேச்சு எழுத்து நடிப்புத் திறமைகளால் வளர்ந்த இயக்கம், அதற்க்கு சமூக வரலாற்று பின்புலம் இல்லை என்ற பார்வை. குருவில் ஒரு பகாசுர முதலாளியின் அபார வளர்ச்சி. இப்படி ஒரு உயர்நடுத்தர வர்க்க (மேட்டுக்குடி என்ற சொல் வர்க்கங்களின் சமூக வேர்களையும், அடையாளங்களையும் சாமர்த்தியமாக மறைக்கிறது) அரசியல் பார்வையில் ஆதிவாசிகள் இப்படித்தான் இருப்பார்கள். படத்தில் மேட்டுக்குடியின் பிரதிநிதி போலீஸ் அதிகாரியின் மனைவிதான். காட்டு மரங்களை கடத்துபவர்களும், மலையை வெட்டிக் கனிமச் சுரங்கங்களைக் கொள்ளையடிக்கும் முதலாளிகளும், இவர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இந்த அக்கிரமகளைக் கண்டுகொள்ளாமலும், கேள்விக்கு உள்ளாக்காமலும், அல்லது அவற்றுக்கும் துணை நின்றும் வாழும் 'படித்தவர்களும்' அறிவுஜீவிகளும் - இப்படி மேட்டுக்குடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் ஒரு படத்தில் சொல்லியிருக்க முடியாதுதான. அப்படியென்றால் இந்த பிரச்சினையை தொடாமலே படம் எடுத்திருக்க முடியுமே. எதார்த்தத்தை சிதைத்து படம் எடுப்பதை விட
    கற்பனை உலகை அழகாக காட்டி படம் எடுத்திருக்கலாம். வாழ்க்கையோடு ஒட்டாத படம் நம் மனதில் ஒட்டாமல் நிற்பதில் வியப்பில்லை.
    அது சரி.... உங்கள் பதிவில் குப்பை என்று சரியாகவே தூக்கி எறிந்ததை செம்மலர் அங்கீகரித்து வெளியிட, தீக்கதிர் தலை மேல் தூக்கி வைத்திருக்கிறதே......

    ReplyDelete

You can comment here