மாதவராஜ் பக்கங்கள் - 24

டந்த இரண்டு வாரங்களுக்குள், சென்னை சென்று, திரும்பி, சென்று, திரும்பி பத்து நாட்களுக்கும் மேலாக சென்னைவாசியாகி மீண்டு இருக்கிறேன். மகள் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க விருப்பம் கொண்டு இருந்தாள். இப்போது லயோலா கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. சென்னை நகரவாசியாகப் போகிறாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இவள் எப்போதோ வரும் நாட்களை எதிர்பார்த்து இனி இந்த வீடு காத்திருக்கும் என்னும் நினைப்பு தவிப்பாய் இருக்கிறது. எத்தனை எத்தனை பெற்றவர்கள், இதுபோன்ற உணர்வை ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு நாட்களை கழித்துக்கொண்டு இருப்பார்கள். குடும்பமாய் கூடிச் சிரித்து, சண்டைகளிட்டு வாழும் நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது இந்நாட்களில்.

விஷூவல் கம்யூனிகேஷன் இண்டர்வியூக்காக மகள் தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தாள். தான் வரைந்த ஓவியங்கள், எடுத்த புகைப்படங்கள் என தொகுத்துக் கொண்டு இருந்தாள். நான்காம் வகுப்பு படிக்கும் மகன், தன் அம்மாவிடம் சென்று, இவையெல்லாம் எதற்கு என்று கேட்டான். “இப்படி திறமையெல்லாம் இருந்தாத்தான் காலேஜ்க்கு போக முடியும்.” என்று அவள் சொல்லிவிட்டாள். இவனுக்கு பெருத்த கவலையாய்ப் போய் விட்டது. “எனக்கு என்ன திறமை இருக்கு. நான் எப்படி காலேஜ்க்கு போவேன்?” என வாய்விட்டுச் சொல்லி வருத்தப்படவும் ஆரம்பித்து விட்டான். படங்களாய் வரைந்து தள்ளிக்கொண்டு இருக்கிறான்.. எனது கம்ப்யூட்டரில் அவைகளை சேமித்து வைக்கவும் சொல்லியிருக்கிறான்.

சென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன். பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது. அவனது கைகளை இறுகப் பற்றி இருந்தேன். “நாலைஞ்சு வருசத்துக்கு முன்னால எதோ தப்பு செஞ்சான்னு கையில் கிடைத்த கம்பையெடுத்து அடி அடின்னு அடிச்சுப்புட்டேன். அப்பா, அடிக்காதீங்கப்பா, அப்பா அடிக்காதீங்கப்பான்னு கதறினான் பிள்ளை. நான் அடிச்சுக்கிட்டே இருந்தேண்டா” எனச் சொல்லியபடி வாய்வெடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். நானும் அழுதேன். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும், மூலைமுடுக்கும் ரஞ்சித்தின் நினைவுகளை சுமந்து கொண்டுதானே இருக்கும்? அன்று முழுக்க அவனோடுதான் இருந்தேன். இரவில் விடைபெறும்போது, “அடிக்கடி பேசுடா” என்றான்.

யாரிடமும் எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்போது அதிகமாய்ப் பேசுவதில்லை . அவருக்கு விருப்பமாயிருந்த வஸ்துக்களையெல்லாம் துறந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. குழந்தை போலவும் தெரிகிறார். பெரும் ஞானியாகவும் தெரிகிறார். முன்னர் அவரோடு இருக்கும் நேரங்களில் அரசியல், இலக்கியம் எல்லாம் பேசுவார். இப்போது முகத்தில் புன்னகை தவழ, “ஊர்ல அப்பா, எப்படி இருக்காங்க”, “சாப்பிட்டீங்களா?” போன்ற விசாரிப்புகள் மட்டும் வருகின்றன. ஆச்சரியமாய் இருக்கிறது. கண்களில் வெப்பம் கொண்டு, பெருங்குரலெடுத்து பேசிய அவரா என்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. உட்கார்ந்து கொண்டிருப்பவர், சில சமயம் அப்படியே தலையில் கைவைத்து, கண்களை மூடிக்கொள்வார். எதோ கதை சொல்ல வருகிறார் போலத் தெரியும் அப்போது.

தீராத பக்கங்களில் எழுதி வந்திருந்த சொற்சித்திரங்களைத் தொகுத்து வம்சி புக்ஸ் வெளியிட்டு இருந்த ‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம் நாளை திருநெல்வேலியில், எழுத்தாளர் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. சிந்துபூந்துறையில் மூட்டா (மதுரை காமராஜ் பலகலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) அலுவலகக் கட்டிடத்தில் மாலை 6 மணிக்கு என திட்டமிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி போன்றவர்களோடு இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்டு புத்தகம் பற்றி பேசவிருக்கிறார் எழுத்தாளர் வண்ணதாசன். ஆவ்லோடு இருக்கிறேன்.

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //
  சென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன். பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது. அவனது கைகளை இறுகப் பற்றி இருந்தேன். “நாலைஞ்சு வருசத்துக்கு முன்னால எதோ தப்பு செஞ்சான்னு கையில் கிடைத்த கம்பையெடுத்து அடி அடின்னு அடிச்சுப்புட்டேன். அப்பா, அடிக்காதீங்கப்பா, அப்பா அடிக்காதீங்கப்பான்னு கதறினான் பிள்ளை. நான் அடிச்சுக்கிட்டே இருந்தேண்டா” எனச் சொல்லியபடி வாய்வெடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். நானும் அழுதேன். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும், மூலைமுடுக்கும் ரஞ்சித்தின் நினைவுகளை சுமந்து கொண்டுதானே இருக்கும்? அன்று முழுக்க அவனோடுதான் இருந்தேன். இரவில் விடைபெறும்போது, “அடிக்கடி பேசுடா” என்றான்.
  //
  கண் கலங்க வைத்து விட்டீர்கள் தோழர்.

  பதிலளிநீக்கு
 2. கவலையின் கலப்பில் இது ஒரு வகை... கைப்பேசி தான் ஆறுதல்...

  பதிலளிநீக்கு
 3. /‘குருவிகள் பறந்துவிட்டன”/
  பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. //‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம் //
  வாழ்த்துகள் அங்கிள்!

  பதிலளிநீக்கு
 5. //
  சென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன்.பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது.
  //
  இழப்பின் வலி பகிர தோழமை தவிர ஒரு உபாயமும் இல்லை.

  பதிலளிநீக்கு
 6. தந்தை மகள் உறவு பற்றி எஸ் ராமகிருஷ்ணன் எழுதியதை ஞாபகப் படுத்தியது .

  All the best!!!

  பதிலளிநீக்கு
 7. கலவையான உணர்வுகளை தந்தது இந்த இடுகை!

  மகளுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. இன்னதென்று அறுதியிட இயலாத மன நிலையை தருகிறது இந்த இடுகை மாது.

  இதற்குதான் ஆசைப் பட்டீங்கலான்னு தெரியல. :-)

  any how,

  மகளுக்கு என் வாழ்த்துகள்! மகனுக்கும்தான். அவசரம் வேணாம். எல்லாம் வரும்போது வரும் என நான் சொன்னதாக சொல்லுங்கள். :-)

  ஜெ, அருமையான இடம் நகர்ந்திருக்கிறார், என்று உணர தருகிறீர்கள்.

  நண்பர் அழகு வேலின் கைகளை நானும் பற்றிக் கொள்ளனும் போல வருது. அதே இறுக்கத்துடன்.

  புத்தக வெளியீடுக்கு வாழ்த்துகள், மாது!

  வண்ணதாசனை விசாரித்தேன் என சொல்லவும்.

  நினைவு இருந்தால்,

  "பா.ராஜாராமிற்கு 'போஸ்ட் கார்டில்' எழுதிய கடிதங்கள் நினைவு இருக்கா,கல்யாணி அண்ணாச்சி?"என்று நான் விசாரித்ததாக கேட்கவும்.

  இப்பின்னூட்டம் உங்களுக்கும் கலவையான மன நிலையை தரலாம்.

  தந்தால்,

  நீங்கள் எய்த இலக்கை தைத்திருக்கிறது, அம்பு! அல்லது அன்பு!

  பதிலளிநீக்கு
 9. //இவள் எப்போதோ வரும் நாட்களை எதிர்பார்த்து இனி இந்த வீடு காத்திருக்கும்//

  சரியான வார்த்தைகள் மனதின் உணர்வுகளை எளிமையாக சொல்லியிருக்கிறாய் மாது!

  பதிலளிநீக்கு
 10. 01)ப்பிரித்துவுக்கு வாழ்த்துக்கள்!!!

  02) ரஞ்சித்தின் நினைவுகள் மனதை கலஙக வைத்த்து!!!

  03)‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம்

  தஙகளுக்கு வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 11. மகளுக்கு வாழ்த்துகள்

  அழகுவேலின் வலி புரிகிறது

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் மாதவ்; முதலுக்கும் கடைக்கும்.

  பதிலளிநீக்கு
 13. This one post has all mixed feelings.

  Nice to know about your daughter's admission. I was also a ex-Loyolite. Congrats to her.

  Very sad to hear the feelings of Ranjan's parents. Time alone will heal the loss.

  I wish JK Sir bounce back to normal. Hope some Munnabai movie style will work on him.

  Thanks for sharing all.

  பதிலளிநீக்கு
 14. \\எத்தனை எத்தனை பெற்றவர்கள், இதுபோன்ற உணர்வை ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு நாட்களை கழித்துக்கொண்டு இருப்பார்கள். குடும்பமாய் கூடிச் சிரித்து, சண்டைகளிட்டு வாழும் நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது இந்நாட்களில். \\
  சர்வ நிச்சயமான உண்மை தோழர்! அப்பா அமமாவோடு தொடர்ந்து ஒரு வாரம் தங்கியிருந்து வருடங்கள் பலவாகிவிட்டது. சம்பாதித்து ஒரு புன்னியமுமில்லை.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் எங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்.
  இக்பால்

  பதிலளிநீக்கு
 16. உங்கள் அன்பு மகளுக்கு நன்கு படிக்க நல்வாழ்த்துக்கள்.
  உங்கள் நண்பருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  வணக்கம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!