பூமியெங்கும் மலர்ந்த கதைகள்

”எல்லா மனிதர்களும் ஒருகாலத்தில் நாடோடிகளாய்த் திரிந்தவர்களே. நிலைத்த வாழ்வு என்பது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளே. நாடோடி வாழ்க்கையில் மனிதர் வாழ்வை நெறிப்படுத்தவும், உலகின் போக்கு குறித்து எச்சரிக்கவும் கதைகள், பாடல்கள் புனைந்தனர். கற்பனைகளுக்கும் குறைவில்லை. இவை பூமியெங்கும் மலர்ந்தன”

“புதிர்கள் நிறைந்த மனித வாழ்வில் ஒரு பழமொழி ஒரு பேருண்மையை எடுத்துக் கூறிவிடும். ஒரு நாடோடிக்கதை அதைவிடத் தெளிவாகக் கூறும்.”

“ஆண்டாண்டு காலமாய் வாய்வழியாய் சொல்லப்ப்பட்டு வந்த இந்தக் கதைகள் எழுத்தும் ஏடும் கண்டபின் வரிவடிவம் பெற்றன”

இப்படியான விளக்கங்களோடு, உலகெங்குமுள்ள நாடோடிக் கதைகளில் பலவற்றைத் தொகுத்து எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் “உலக நாடோடிக் கதைகள்” என்னும் புத்தகத்தைத் தந்துள்ளார். இந்தக் கதைகள் ஒவ்வொன்றுமே நம் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாய் இருக்கின்றன. அவற்றிலிருந்து மூன்று கதைகள் இங்கே!

 

1. மரண நடனம் (பிரெஞ்சுக்கதை)

ரத்தம் உறிஞ்சும் ஈ ஒன்று ஒருநாள் சிங்கத்தைக் கடித்தது. சிங்கம் ஈயைப் பார்த்து “என்னையே கடிக்கிறாயா. இன்னொரு முறை கடி பார்ப்போம். உன்னைத் துண்டு துண்டாய்க் கிழித்தெறிவேன்” என்று கர்ஜித்தது.

ஈ மீண்டும் பறந்து சிங்கத்தைப் பல இடங்களில் கடித்தது.

வலி பொறுக்க முடியாமல் சிங்கம் தன் கால் நகங்களால் ஈயைப் பலமுறை அடிக்க முயன்றும், முடியவில்லை. தொடர்ந்து ஈயை அடிக்க முயற்சித்து சிங்கம் களைத்து விழுந்துவிட்டது.

”நான் சிங்க ராஜாவையே ஜெயித்து விட்டேன்” என்று கூறி வெற்றிக் களிப்பில் ஈ நட்னமாடியது. தறிகெட்டுப் பறந்தது. அது ஒரு சிலந்த வலையில் போய்ச் சிக்கிக் கொண்டது.

சிலந்தி ஈயை விழுங்கியது.

 

2. கிணறும் நீரும் (பெர்ஸியக் கதை)

ஒரு விவசாயிக்கு ஒரு வியாபாரி தனது கிணற்றை விற்றான். அதில் விவசாயி தண்ணீர் எடுக்கப் போனான். வியாபாரி அவனைத் தடுத்தான். “ உனக்கு கிணற்றை மட்டுமே விற்றிருக்கிறேன். தண்ணீர் எடுக்க வேண்டுமானால் அதற்குத் தனியாக பணம் தர வேண்டும்” என்றான்.

விவசாயி பணம்தர மறுத்து நீதிமன்றத்தில் புகார் செய்தான்..

இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதி வியாபாரியைப் பார்த்து “நீ கிணற்றை விற்றுவிட்டால், அதற்குள் உனக்கு உரிமையான தண்ணீரை வைத்திருக்க முடியாது. எனவே நீ தண்ணீரை கிணற்றில் வைத்து இருப்பதற்கான வாடகையை விவசாயிக்குத் தரவேண்டும். அல்லது உனக்கு உரிமையான தண்ணீர் முழுவதையும் எடுத்துக் கொண்டு போய்விடவேண்டும்” என்றார்.

வியாபாரி தலைகுனிந்தவாறே, தனக்கு ஒன்றும் வேண்டாமென வெளியேறினான்.

 

3. அழுகை (ரஷ்யக் கதை)

சின்னஞ்சிறுவனான ஓல்கா தன் கைவிரல்களை நசுக்கிக் கொண்டான். ஆனால் அழவில்லை.

அவனுடைய விரல் பலமாக நசுங்கிவிட்டாதால் விரல் பூராவும் சிவந்து ரத்தம் கன்றிப் போய்விட்டது. ஒன்றுமே நடக்காத மாதிரி சும்மா இருந்தான்.

வெளியே போயிருந்த அவனது அம்மா வந்ததும், சிறுவன் அழ ஆரம்பித்தான்.

அம்மா ”என்ன விஷயம்” என்று கேட்டாள்.

பையன், ”விரல் நசுங்கி விட்டது” என்றான்.

“எப்போது?”

“வெகு நேரமாகிவிட்டது”

“அப்போதே அழாமல் இப்போது ஏன் அழுகிறாய்?”

”நீ வெளியே போயிருந்தாயே, அதனால்தான்” என்றான் சிறுவன்.

*

உலக நாடோடிக் கதைகள்
நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்
விலை ரூ.60/-

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மிக எளிமையான கதை...கருத்து வலிமை....

  பதிலளிநீக்கு
 2. கதைகள் அனைத்தும் அருமை!!

  பதிலளிநீக்கு
 3. இக்குட்டிக்கதைகளில் பொதிந்துகிடக்கும் கருத்துக்கள் மனதில் நிற்கிறது..

  பகிர்விற்கு நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 4. படித்தேன்.. சுவைத்தேன்.. இரண்டாவது கதை நாட்டுநடப்பை எடுத்துச் சொல்வது போல் இருக்கிறது... இடம் கொடுத்த ஏழை இந்தியர்களிடமே - கட்டிடத்தைக் கட்டி குடிக்கூலிக்கு விட்டுப் பணம் பறிக்கும் சிறப்புப் பொருளியல் மண்டிலங்களின் நினைவு சட்டென வந்துபோனது அக்கதையைப் படித்தவுடன்...

  பதிலளிநீக்கு
 5. என்னுடைய புத்தகம்!
  எனக்கு முன்னால் நீங்கள் முழுதும் படித்து அழகாய்ப் பதிவும் போட்டு விட்டீர்கள். :)
  இன்று போய் முழுதும் ப‌டித்து விடுகிறேன்!

  (தேர்வு செய்த கதைகள் மூன்றும் உண்மையிலேயே அருமை.)

  பதிலளிநீக்கு
 6. Last night my son asked for a bedtime story. I remembered your blog post and narrated the same.
  Thanks for sharing.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!