இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்

ணுக்கும், பெண்ணுக்குமான பிரத்யேக ரகசியங்கள் காலம்பூராவும் புதைந்து கிடக்கும் வெளி அது. உடல் ரீதியான மர்மங்களில் கிறுகிறுத்து, கள்ளம் பிறக்கும் விழிகளைத் திறந்து வைத்து, தரையில் கால் பாவாத காலத்தை ஒவ்வொருவரின் பதின்மப்பருவமும் கொண்டு வருகின்றன. அதில் பித்துப் பிடித்துப் போகிறவர்களும் உண்டு. எச்சரிக்கையோடும், பயத்தோடும் நின்று நின்று போகிறவர்களும் உண்டு. இன்னதென்று அறியாமலேயே பாரங்களைச் சுமந்து ஓடிக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. அனுபவித்தவை அல்லது அனுபவிக்க முடியாமல் போனவை நிலைபெற்று சுகமான அல்லது வலிநிறைந்த நினைவுகளாகின்றன. சூழல்களுக்கு பெரும்பங்கு இருக்கின்றன.

எல்லாவற்றையும் அப்படியேச் சொல்வதில் தடைகளையும், மனத்தடைகளையும் அமைப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறது. விதிக்கப்பட்ட புரிதல்களே அளவுகோல்களாக நின்று கொண்டு இருக்க அதன் உயரத்திற்கு எல்லோரும் தங்களை குறுக்கிக் கொள்ள அல்லது நிமிர்த்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வேறு அபிப்பிராயங்களுக்கு இழுத்துச் சென்று விடுமோ என்னும் தயக்கங்கள் முன்வருகின்றன. இதில் ஆண்கள் புனைவுகளோடும், வெளிப்படையாகவும் சொல்வதற்கு வசதியிருக்கிறது. அவைகளை சாகசமாகவும், தீரமாகவும், வலியாகவும் புரிந்துகொள்ள மனிதர்கள் பழக்கப்பட்டு இருக்கின்றனர்.  உள்ளாடையின் கறைகள் பற்றி ஒரு ஆணுக்கு எழுத சாத்தியமாகிறது. பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இடம் அது. மோனிகாலிவின்ஸ்கியின் உள்ளாடைக் கறையை மோப்பம் பிடித்துக்கிடந்த உலகம்தானே இது.

விடுங்கள். பதின்மப்பருவத்து அனுபவங்கள் எல்லோருக்குமானதுதான். எல்லோரும் கடந்து சென்றவைதான். இந்தத் தெளிவோடு அந்தப் பருவத்தை மீள்வாசிப்பு செய்வோமானால், அவை அழகாகவேத் தோன்றக்கூடும். எனக்கு அப்படியானதை மட்டுமே நான் இங்கு சொல்லத் துணிகிறேன். இது என் அளவுகோல். என் ஜன்னல்.

 

ரசியலிலும், சினிமாவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தினூடே அதன் பிரக்ஞைகளற்று எனது பதின்மப்பருவம் நகர்ந்திருக்கிறது. நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று ஏற்பட்டது. காமராஜர் இறந்தார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார். இந்திரா காந்தி தவிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்களின் பெயர்களை மக்கள் உச்சரித்தார்கள். சினிமா புதுப்பரிணாமம் கொண்டது. பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல், ரஜினி, வைரமுத்து என ஒவ்வொருவராக கனவுகளோடும், கனவுகளை விதைத்தபடியும் வந்தனர். எல்லாம் அழகாகவும், புதிதாகவும் விரிந்த காலம்.

 

னக்கே உரிய தனிமுறையில் ஒருகாலத்தில் நான் இன்பத்தை சுவைத்த இடங்களை இப்போது நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்ட நாட்களில் இவ்விடங்களுக்கு மீண்டும் போய்வர ஆசைப்படுகிறேன். திரும்பப்பெற முடியாதபடி மறைந்து விட்ட கடந்த காலத்துக்கு எனது நிகழ்காலத்தை இசைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.”

பனிபொழியும் பீட்டர்ஸ்பர்க் நகரத்து வெண்ணிற இரவுகளை படித்திருக்கவில்லையென்றாலும் கூட, தஸ்தாவஸ்கியின் இதுபோன்ற ஒரு வரியையாவது என்னாலும் எழுதி இருக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேகக்கூட்டங்கள் தரையில் விழுந்து கிடப்பது போல உப்புக் குவியல்கள், காற்றில் எப்போதும் இருக்கும் லேசான கரிப்பு இவைகளோடு என் பதின்மப் பருவத்து நாட்கள் ஆறுமுகனேரியில் பத்திரமாய் இருக்கின்றன. இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி என வாழ்ந்த சிறுவீடும்,  குறுகலான தெருக்களும் இதிகாசங்களில் பார்த்தனவாய் தெரிகின்றன. 

பூவரச மரங்களும், வேப்ப மரங்களும், வாடாச்சி மரங்களுமான தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாசல் தெளிக்கும் தாவணிப் பெண்ணை அளந்து செல்கிறேன். டைரியில் அண்ணன் எழுதிய கவிதைகளைப் படித்து, நானும் எழுதிப் பார்க்கிறேன். வெயில் தகதகக்கும் தருவைக்காட்டில் மதியச் சாப்பாட்டை மறந்து, விக்னேஷ்வரன் போட்ட பந்தை ஏறியடிக்க முயன்று, ஏமாந்து ஸ்டம்ப் அவுட்டாகிப் போகிறேன். மூங்கில் தட்டியடைத்த வராண்டாவில் உட்கார்ந்து ரஞ்சன் புல்புல்தாரா வாசிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். “பெரியவர்களுக்கு அப்படி வருமாம்” என நண்பர்கள் சொல்ல, மொட்டை மாடியின் இருட்டில் போய் முயற்சித்து முயற்சித்து தண்டுவடத்தில் சுண்டிய வலியில் விம்மியும், பயந்தும் அப்புறம் அடங்கியும் போகிறேன். நகைகளை ஒவ்வொன்றாய் எங்கள் படிப்புக்காக கனரா வங்கியில் வைத்துவிட்டு கவரிங் நகைகளோடு வலம் வரும் அம்மாவைத் திடுமென அணைத்து கண்கள் மல்க விலகுகிறேன். ஒருமுறை கணக்கில் நூறுமார்க் வாங்காமல் 98 வாங்கியதற்காக அழுகிறேன். முதன்முறையாக தனிப்பைனி (தனிப்பதனீர் அதாவது ‘கள்’) இரண்டு மூன்று சொக்குகள் அடித்துவிட்டு தலைக் கிறுகிறுத்து பனைமரத் திரட்டில் நின்று சத்தம் போட்டு சிரிக்கிறேன். வாரம் ஒருமுறையோ, இருமுறையோ முக்காணி ரைஸ்மில்லில் இருந்து அப்பா வரும் இரவில், அம்மாவைத் தவிர  வீடே உட்கார்ந்து ரம்மி விளையாட, அம்மா நடுவில் வைக்கும் அச்சுமுறுக்கை வேகமாக ஆளுக்கு முதலில் எடுக்கிறேன். நூலகம் சென்று குமுதம், ஆனந்தவிகடன், கல்கியில் வரும் அத்தனை சுஜாதா தொடர்கதைகளைப் படிக்கிறேன். அதில் வரும் ஜெயராஜ் படங்களின் பெண்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே...”, “செந்துராப் பூவே செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே..”, “ஆனந்த ராகம் கேட்கும் காலம்” பாடல்களில் காற்றாக கரைகிறேன். இதுதான் பதின்மப்பருவத்தில் நான்.

maathu teen age

ன்பதாம் வகுப்பு படிக்க உயர்நிலைப்பள்ளி காயல்பட்டினம் போகிற ரோட்டில் பேயன்விளையில் இருந்தது. முதன்முதலாய் கோஎஜுகேஷன். வகுப்பில் அடிவாங்கக் கூடாது, முட்டி போடக்கூடாது என்பதில் பையன்கள் கவனமாயிருப்பார்கள். அங்கு படித்ததில் ஒரு பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் நினைவில் இப்போது இல்லை. அந்தப் பெண்ணை என் நண்பன் ஒருவன் காதலிப்பதாய் சொல்லிக்கொண்டான். அப்போதுதான் படித்து முடித்து, ஒருமாதமோ இரண்டு மாதமோ டிரெயினிங்கிற்கு வந்த ஒரு இளம் வாத்தியார் மீது அவள் கிறங்கிப் போயிருந்ததைப் பார்த்தேன்.

இன்னொன்றும் நினைவிலிருக்கிறது. அம்மன்புரத்தில் இருந்து வந்த திடகாத்திரமான மாணவன் ஒருவனை ஒரு வாத்தியார் அடிக்க, பெண்கள் முன்னால் பட்ட அவமானம் தாங்காமல், அவரைக் கீழே தள்ளி நையப்புடைத்து விட்டான் அவன். பள்ளியை விட்டு அனுப்பப்பட்டாலும் எங்களுக்குள் காவியத் தலைவனாக கொஞ்சகாலம் இருந்தான்.

ரம்பத்தில் கபடி விளையாட்டில் மும்முரம். தெருவுக்குத் தெரு டீம்கள் இருக்கும். பெரியவர்கள் டீமும் இருக்கும். சிறியவர்கள் டீமும் இருக்கும். நானும், தம்பியும் எங்கள் தெருவின் சிறியவர்கள் டீமில் முக்கிய விளையாட்டுக்காரர்கள். பாடிப் போவதிலும், பிடிக்க வந்தால் குதித்து, லாவகமாக தப்பிப்பதிலும், பாடிவந்தவனை முட்டித் தூக்குவதிலும் என் தம்பி வல்லவன். எனக்கும், அவனுக்கும் அதுபற்றியே பேச்சு இருக்கும். கபடி விளையாட்டில் தொடர் போட்டி நடத்துவார்கள். பெரிய பெரிய டீமெல்லாம் வரும். அப்பா, அண்ணன்கள், நான், தம்பி எல்லோரும் பார்க்கப் போவோம். “தேக்கரு ஹம் திவானா ஹை...”, “சுராலியே கே தும் நே..” இந்திப் பாடல்களுக்கு நடுவில், “இன்னும் சிறிது நேரத்தில் கபடி விளையாட்டு ஆரம்பிக்கப்படும்” என அறிவிப்புகள் கொடுக்கப்படும். டியூப் லைட்டின் பிரகாசமான வெளிச்சங்களுக்கு மத்தியில் அம்பயர் வந்து விசில் ஊதும் சத்தத்திற்காக, கயிறுகள் கட்டி வைத்திருக்கும் முன் வரிசையில் காத்து இருப்போம்.

த்தாம் வகுப்பில் சங்கரராம சுப்பிரமணியன், நரசிம்மன் என்னும் இரண்டு பேர் அறிமுகமானார்கள். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் அவர்களது தந்தைகள் முறையே சீப் எஞ்சினியராகவும், டாக்டராகவும் இருந்தனர். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசுவார்கள். வேறொரு உலகத்து மனிதர்கள் போல இருக்கும். பள்ளியில் அவர்களுக்குத் தனிமரியாதை. காலாண்டுத்தேர்வில் விஞ்ஞானம், வரலாறு, பூகோளம், ஆங்கிலம் எல்லாவற்றிலும் அவர்களே முதல், இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். தமிழில் நான் முதல் மதிப்பெண் வாங்கினேன். அதைப் பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இப்ராஹிம் சார் வந்தார். கணக்கில் நான் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தேன். அவர்கள் தொண்ணூற்று ஐந்தோ, தொண்ணூற்று ஆறோதான் எடுத்திருந்தார்கள். நம்ப முடியாமல் என் பேப்பர்களை வாங்கிப் பார்த்தார்கள்.அதிலிருந்து நான் அவர்களுக்கு போட்டியானேன். என்னையும் தங்களோடு பழகுவதற்கு லாயக்கானவன் போல நடத்தினார்கள். பிரியமான நண்பர்களுமாயினர். அவர்களது வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் முன்னறையில் இருந்தார். பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். “யார்” என்றேன். சங்கரராமனின் அப்பாவின் அப்பாவாம். அப்போதே கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்றார். என் தாத்தாவை, என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். இடைவெளி புரிந்தது. கடைசி வரையிலும் கணக்கில் என்னை  முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும்  இருநூறுக்கு இருநூறுதான்.

தினொன்று படித்து முடிக்கும் வரை கால்ச்சட்டைதான். முதன்முதலாய் கைலி கட்டிக்கொண்டு வாசலைத் தாண்டி தெருவில் கால்வைக்க கூச்சமாயிருந்தது. தெருக்களின் அக்காக்கள் “இந்தா பாருங்களேன் மாதுவ..பெரிய மனுஷனாய்ட்டான்” என்று சிரித்தார்கள். பெருமையும் இருந்தது. வெட்கமும் இருந்தது. நடக்கும்போது தென்னியது. மடித்துக் கட்டினாலும் நன்றாக இருக்காது. ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.

தினாறு, பதினேழு வயசான பிறகும் மெலிதான கருப்பில் பூனைமுடிகளோடுதான் மீசை இருந்தது. தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னின்று ஓரிரவில் எதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா என்பது போல பார்த்து முகம் சுருங்கிப் போவேன். நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன். யாரோ சொன்னது கேட்டு இரவுகளில் படுக்கப் போவதற்கு முன் தேங்காய் என்ணெய் தேய்த்து தவமாய் தவமிருந்தேன். இருபது வயதுக்கப்புறமே மீசையென்று ஒன்றானது. (“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)

ரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான். அவன் புண்ணியத்தில் பல பட்சிகள், அணில்களை சாப்பிட்டு இருக்கிறேன். அவனோடு ரெயில்வே லைனைத் தாண்டி நாங்களெல்லாம் காட்டுக்குள் (வேலிக்கருவேல மரங்கள் நிறைந்த பகுதி) போவோம். சில நேரங்களில் ஏழு, எட்டு அணில்களை அடித்து விடுவான். வீட்டிற்கு வந்து அவனே உரித்து, இடித்து, உருண்டைகளாக்கி, பொரித்து தருவான். அவனிடம் எப்போதுமே ஒரு பயம் இருக்கும். ஒருதடவை எதோ கிண்டல் செய்துவிட்டேன் என்று என்னை அடிக்கத் துரத்தினான். அங்குமிங்கும் ஓடி, கடைசியில் மாடிக்கு ஓடினேன். துரத்தி வந்தான். செத்தோம் என்றிருந்தது. பக்கத்தில் வந்துவிட்டான். “அய்யோ” என கத்தி மாடியிலிருந்து குதித்து விட்டேன். கால்களில் லேசான அதிர்ச்சி. அப்படியே விழுந்துவிட்டேன். வேறொன்றுமாகவில்லை. கேள்விப்பட்டு ஓடிவந்த அம்மா “ஏ...பாவி, எம்புள்ளயக் கொன்னுப்புட்டியே..” எனக் கத்த, அண்ணன் விக்கித்துப் போனான். எழுந்து உட்கார்ந்த பிறகு வீடு மட்டுமல்ல, தெருவே சிரித்தது.

ம்மாவைப் பெற்ற தாத்தாவும், ஆச்சியும் ஆறுமுகனேரியில்தான் அடுத்த தெருவில்தான் இருந்தார்கள். நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம். தாத்தா இறந்ததும், அந்தப் பெரிய வீட்டில் ஆச்சி தனியாய் இருந்தார்கள். இரவுகளில் துணைக்கு நான் படுக்கப்போவேன். வீட்டுத்திண்ணையில் ஆச்சியிடம் பழக்கம்விட மேலும் சில பாட்டிகள் வருவார்கள். ஊர்க்கதைகளைக் கேட்கலாம். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற பெரிய நாவல்களையெல்லாம் படித்தது அந்த நாட்களில்தான். படுத்திருந்த முற்றத்திலிருந்து பார்த்தால் வானம், நட்சத்திரங்கள் தெரியும் அப்போது.

கோடை வாசஸ்தலம் என்றால் சாயர்புரம் அருகில் உள்ள நடுவக்குறிச்சியில் உள்ள எங்கள் பெரியம்மா வீடுதான். புத்தகங்களின் வீடு அது. பெரியம்மா மகன் முருகேசன் அண்ணன் தமிழில் வெளிவரும் அத்தனை தின, வார, மாத இதழ்களுக்கும் சந்தா கட்டியிருப்பர்கள்.சுற்றி பூஞ்செடிகளும், மா, கொய்யா, பலா மரங்களும் அடர்ந்திருக்கும். லீவெல்லாம்  அங்குதான். தமிழ்வாணன் எழுதிய ஆண் பெண் உறவுகளுக்கான புத்தகங்கள் ஒரு அலமாரியில் ரகசியமாக அடுக்கி வைக்கப்பப்ட்டு இருந்தன. எதையோத் தேடிக்கொண்டு இருக்கும்போது அவை கண்ணில் பட, யாருக்கும் தெரியாமல் இதயம் படபடவென அடிக்க படித்தேன். காய்ச்சல் அடித்த மாதிரி இருந்தது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை.

ரியாக பதினைந்து முடிந்து பதினாறாவது வயதில் உயர்நிலைப்பள்ளி முடித்து, P.U.C படிக்க, திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரிக்குச் சென்றேன். அங்குதான் B.B.Aவும் படித்தேன்.  போவதும், வருவதும் டிரெயினில்தான். சரியாக இருபத்தைந்து நிமிடங்களாகும். சிரிப்பும், கும்மாளமுமாக இருக்கும். எல்லாவற்றையும் வேல்ராஜ் கெடுத்தான். முகமெல்லாம் பருக்கள் நிரம்பி கரடுமுரடாய் இருப்பான். எங்கு நான் அமர்ந்திருந்தாலும் பக்கத்தில் வந்து பாடாய் படுத்துவான். அணைப்பான். “டார்லிங்” என்பான். நான் திமிறி விலகினாலும் விடமாட்டான். “உன்னை ரேப் செய்றேன்” என்பான். கூடியிருந்து சிரிப்பார்கள். அசிங்கமாய் இருக்கும். சட்டையெல்லாம் கசங்கிப் போகும். சிலசமயம் பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிடுவான். ச்சீய் என்று தள்ளிவிடுவேன். ஒருநாள் அவன் சட்டையைக் கிழித்து கோபம் கொள்ளவும் செய்தேன். அதற்கும் சிரித்தான். அவன் ஏறுகிற கம்பார்ட்மெண்ட்டைத் தவிர்க்க ஒவ்வொருநாளும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கும். “ஒன்னோட ஆளு அங்க இருக்கான்” என்று காட்டிக்கொடுக்கவும் சிலர் இருந்தார்கள். P.U.Cயிலேயே பெயிலாகிப் போனான். அப்பாடாவென்றிருந்தது. கல்லூரியெல்லாம் முடித்த பிறகு ஒருதடவை அவனை சந்தித்தேன். பெரிய ஆளாய் இருந்தான். அச்சாபீஸ் நடத்திக்கொண்டு இருந்தான். கல்யாணமெல்லாம் முடிந்திருந்தது. ரொம்ப பாசமாய் கையைப் பிடித்துக்கொண்டு “அவனா இவன்” என்பது போல பேசினான்.

மூத்த அண்ணன் B.B.A  முடித்துவிட்டு துத்துக்குடியில் ஒரு ஆடிட்டரிடம்  C.A  படித்துக்கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டிகாரனாய் இருந்தாலும் எந்நேரமும் பத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பான். கவிதைகள் எழுதுவான். அதில் ஒரு கவிதை மறக்கமுடியாதது. வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. விஷயம் இப்படி இருக்கும்.

”நான் அந்த மாந்தோப்பில் தினந்தோறும் நடந்து செல்கிறேன். தாழ்வான கிளையில் பூவொன்று பிஞ்சு பிடித்திருப்பதைப் பார்த்திருந்தேன்..  காயாகும், கனியாகும் என காத்திருந்தேன். ஒருநாள் அதனைக் காணவில்லை. வெம்பிக் கீழே உதிர்ந்து கிடந்தது”

அதில் இருந்த காதல் கதை நானறிவேன். பின்னாளில் ‘அழகி’ படம் பார்த்தபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.

முதலில் பனைமட்டை, தென்னை மட்டைகளை செதுக்கி, ரப்பர் பாலில் விளையாடினோம். முருகேசன், விக்னேஷ்வரன், நான், என் தம்பி தான் வெறிகொண்டு நிற்போம். நாளாக, நாளாக என் அண்ணன்கள், அண்ணனின் சில நண்பர்கள், விளையாட்டிலேயே ஈடுபாடு இல்லாத ரஞ்சன் என ஒரு செட் சேர்ந்தோம். ராஜ் கிரிக்கெட் கிளப் என சொல்லிக்கொண்டோம். கிரிக்கெட் மட்டையும், கார்க் பாலும் வாங்கினோம். பேடு கிடையாது. பந்துகள் முழங்காலுக்குக் கீழே பட்டால் உயிரே போய்விடும். ஜெயசீலனுக்கு ஒருதடவை ‘அங்கேயே’ பட்டுத் துடித்து விழுந்தான். அப்புறம் குதிக்க வைத்து மூத்திரம் எல்லாம் போகச் சொன்ன பிறகு சரியானது. இப்படியான கடும் பயிற்சிகளுக்குப் பிறகு ஒருதடவை சங்கரராம சுப்பிரமணியனிடம் சவால் விட்டோம். தாரங்கதாரா கெமிக்கல்ஸில் உள்ள பையன்களுக்கும் எங்களுக்கும் போட்டி வைத்தோம். கம்பெனிக்குள் கிரிக்கெட்டுக்கு என்று கிரவுண்டு இருந்தது. சிலோனில் இருந்து வந்த ராயப்பன் என்கிறவர்  அவர்களின் கோச்சாக இருந்தார். விளையாடுவதற்கென்று  தேவையான அனைத்து உபகரணங்களும் இருந்தன. எங்களை எளிதில் வென்றுவிட்டார்கள். நாங்கள் போட்ட பந்தையெல்லாம் சங்கரராமன் நொறுக்கிவிட்டான். கடும் சோகத்தோடு திரும்பினோம். நாங்களாகவே ‘அப்படி அடிக்கணும்’, ‘இப்படி அடிக்கணும்’, ‘இதுதான் ஸ்கொயர் கட்’,  ‘இப்படி லாஃப்ட் செய்யணும்’  என்று சொல்லிக்கொள்வோம். நேரம் காலம் இல்லாமல் விளையாடுவோம்.  இரண்டு மாதம் கழித்து அடுத்த போட்டி. தாரங்கதாராவை வீழ்த்தினோம். என் இரண்டாம் அண்ணன் ஒபனிங் பேட்ஸ்மேனாகப் போய் கடுமையாக டிஃபன்ஸ் செய்ய,  என் தம்பி, நான், விக்னேஷ்வரன் அடுத்து அடுத்து விளாசிவிட்டோம். அதன்பிறகு என்னையும், விக்னேஷ்வரனையும் தாரங்கதாரா கிரிக்கெட் டீமீல் சேர்த்துக் கொண்டார்கள். பிராக்டிஸெல்லாம் கொடுத்தார்கள்.

முதலாமாண்டு படிக்கும்போது, இறுதியாண்டு படித்த ஒரு மாணவர் ஒருவர் கல்லூரியில் தனித்து தெரிவார். அவரது ஸ்டைலும், மேனரிசமும் பிடிக்கும். கிரிக்கெட், டேபிள் டென்னிஸெல்லாம் பிரமாதமாக விளையாடுவார். பிரமிப்பாய் இருக்கும். எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்போது “ஹலோ” என்று புன்னகை உதிர்த்து அவர் பாட்டுக்கு போவார். லைப்ரரியில் வைத்து நெருக்கமானார். இலக்கியம் பேசுவார். மிகுந்த மரியாதையோடு இருப்பேன். கல்லூரியில் விழா நடந்த நாளின் இரவில் அவரோடு ஹாஸ்டலுக்குச் சென்று தங்கினேன். காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது.  எதுவும் பேசாமல் அங்கிருந்து வீட்டிற்கு வந்தேன். பிறகு என்னைப் பார்ப்பதையே தவிர்த்தார். நேர் எதிரே வந்தாலும் மௌனமாக கடந்து செல்வார். பாவமாக இருந்தது. ஆரோக்கியமான உறவுகளைச் சின்னச் சின்ன பலவீனங்கள் கொன்று விடுகின்றன.

வீட்டில் பணக்கஷ்டம். முக்காணியில் அப்பா குத்தகை எடுத்து நடத்தி வந்த ரைஸ்மில்லில் நிறைய பிரச்சினைகள். நிறைய கடன்கள் ஆகிவிட்டன. அப்பா எல்லாவற்றையும் அப்படியே பாதியில் விட்டு விட்டு சென்னைக்குச் சென்று விட்டார்கள். பி.யூ.சி முடித்திருந்த இரண்டாவது அண்ணன் ரைஸ்மில்லுக்குச் சென்று, நிர்வாகம் செய்து, கடன்களை அடைத்துக்கொண்டு இருந்தான்.

வீட்டுக்கு பக்கத்தில் நாங்கள் படித்த நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பழைய மாணவர்கள் என்னும் தோரணையில் நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். ‘குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தையெடுத்து...’ பாடல் ஒலித்த உற்சாகமான வேளையில் கூட்டத்திற்குள் அவளைப் பார்த்தேன். ஒல்லியாய் அழகாய் இருந்தாள். அவளும் பார்த்தாள். பிறகு  காலைகளில் பஸ் நிறுத்தத்தில் நின்று  அவள் பள்ளிக்குப் போவதைப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தனை கூட்டத்திலும் சட்டென ஒரு பார்வை தந்து போவாள். என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். நான் “நீ நின்ற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கும், நீ பார்த்த இடத்தில் பசுமை பூத்தொடுக்கும்” என கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்தேன். ஒருநாள் கூட பேசியது இல்லை. அவளது மாமன் பையன் ஒருநாள் சில பயல்களோடு அடிக்க வந்தான். அவன் கட்டிக்கிற போகிறவளாம். நான் ஒழுங்காய் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பின்னாட்களில் அவனை சென்னை அமைந்தகரையில் ஒரு ஒயின்ஷாப்பில் பார்த்தேன். அங்கே அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவளையும் பார்த்தேன் ஊரில். குழந்தையோடு பெரியவளாய் திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தாள்.

ண்ணன்  B.B.A படித்தான் என்று நானும் படித்திருக்கக் கூடாது என நினைத்துக் கொள்வேன். எனக்கு விருப்பமான கணிதத்தையே தேர்வு செய்திருக்க வேண்டும்(எதைப்படித்தால் என்ன, படித்தவைகளுக்கு ஏற்பவா வேலை பார்க்கிறோம்!) . Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law  வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும். ஜன்னல் வழியே தூரத்துக் கடலைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். பிரபாகர் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டு இருப்பான். செஸ் விளையாடும் சுப்பிரமணிய ஆதித்தனுடனும், பாலசுப்பிரமணியனுடனும் நெருக்கமானேன். சாய்ங்காலங்களில் அடர்ந்த புங்கை மரங்களடியில் உட்கார்ந்து சுஜாதாவையும், பாலகுமாரனையும் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.

ல்லூரிக்குப் பின்னால் உள்ள கடற்கரையில் எங்கள் கல்லூரியின் கடைசி நாளன்று பைத்தியம் பிடித்துப் போனோம். பாடினோம். ஆடினோம். அழுதோம். இரவெல்லாம் கிடந்து விடிகாலையில் வீட்டிற்கு வந்தேன். பேதலித்துப் போனேன் சில நாட்கள்.

ல்லாம் சட்டென கலைந்து போனது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. Air forceல் வேலைக்குச் சேர்ந்து இராஜஸ்தான் போய்விட்டான் தம்பி. இரண்டாவது அண்ணனுக்கு  தினத்தந்தியில் வேலை கிடைத்து கோயம்புத்தூர் சென்றிருந்தான். மூத்த அண்ணனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருந்தது. தங்கையோ தூத்துக்குடியில் பி.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தாள். வீடு வெறிச்சோடி இருந்தது. நண்பர்களும் பலர் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இரண்டு மூன்று வங்கித் தேர்வுகள் எழுதினேன். தெருக்களில் தனியனாய் நடந்து திரிந்தேன். புதுக்குளத்தில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. சாயங்காலத்தில் பச்சைச் சம்புகளில் தூக்கணாங்குருவிகள் அடைந்து கத்திக்கிடந்தன. சிகரெட் பிடிக்கப் பழகினேன். நூலகத்திலேயே கிடந்தேன். இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ படித்து இழப்பின் வேதனைகளை அனுபவித்தேன். சென்னையில் மாமா வீட்டில் தங்கியிருந்த அண்ணன் என்னை அழைத்தான். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் ஏஜண்ட்டாக சில மாதங்கள் இருந்தேன். பிடிக்கவில்லை. தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். தகராறில் மார்க்கெட்டிங் மேனேஜர் சட்டையைப் பிடித்து சுவரில் தள்ளிவிட்டு வந்தேன். பாண்டிச்சேரியில் சிங் ஒருத்தர் நடத்திய ஒயின்ஷாப்புகளுக்கு இரண்டு மூன்று வருடக்கணக்குகளை எழுதிக்கொடுக்க அண்ணன் அனுப்பி வைத்தான். பத்து நாட்கள் போல இருந்தேன். தண்ணியடிக்கப் பழகினேன். கே.கே.நகரில் வாடகை வீடு பார்த்து அம்மாவையும் ஊரிலிருந்து அழைத்து வந்து  தங்கினோம்.  ராம் தியேட்டரில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது.

ந்தத் தொடருக்கு என்னை அழைத்த ராகவனுக்கு நன்றி. இபோது நான் அழைக்க விரும்புவது.... அவர்கள் விரும்பினால்..... சுரேஷ்கண்ணன், தமிழ்நதி, ரிஷபன் ஆகியோரை!

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மீள முடியாமல் அமர்ந்திருக்கிறேன்.
  எழுத்தின் மூலம் உங்கள் அனுபவங்களுக்குள் ஆழமாக இழுத்துச் சென்று விட்டீர்கள்.

  தொடங்கிய விதமும் முடித்த விதமும் கவிதை!

  பதிலளிநீக்கு
 2. அன்பு மாதவராஜ்,

  ஒரு சின்ன தொடர்பதிவுக்கு அழைத்து விட்டு எனக்கு கிடைத்ததை கையில், மனசிலும் கொள்ளாமல் சுமக்கிறேன். அம்மா சிலிர்க்கிறது மாதவராஜ், என்ன மாதிரியான பதிவு, ரொம்ப கர்வமா இருக்கு, நான் கேட்டு கொடுத்ததை ஒரு பொக்கிஷமாய் வைத்து கொள்ள தோன்றுகிறது. நேர்மையான எழுத்து மாதவராஜ்!

  அம்பிகா அவர்கள் தொடர்பதிவுக்கு கேட்ட போது எனக்கு சந்தோசமாய் இருந்தது. என்னை தொடர்பதிவுக்கு அழைத்த ஒரே நபர் அவர் அல்லது இரண்டாவது நபராகவும் இருக்கலாம். அந்த ஒரு அங்கீகாரதிர்க்காக தான் அதை எழுதினேன். நான் அழைப்பது ஜாம்பவான்களாய் இருக்க வேண்டும் அப்போ தான் நெல்லுக்கு இறைக்கிற நீர், எனக்கும் கிடைக்கும் என்று உங்களையும், காமராஜையும், பாராவையும் அழைத்தேன்.

  நீங்கள் ரெண்டு பேருமே எவ்வளவு சத்தியமாய் எழுதியிருக்கிறீர்கள், இது எனக்கு வரம்.

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமை.. பல இடங்களில் என்னையும் பொறுத்திப் பார்த்து பழைய நினைவுகளை நினைத்து மகிழ்ந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. நான் ரசித்தவைகள்...

  //ஒருமாதிரி தூக்கிப் பிடித்துக்கொண்டே நடப்பேன். எப்போதும் அவிழ்ந்துவிடுவதுபோல பயமிருக்கும். அதெல்லாம் அப்போது முக்கியமான சங்கடங்கள்.//

  //நண்பர்களுக்கெல்லாம் மீசை நன்றாகத் தெரியும்படி இருந்தன. மூன்று வயது குறைந்த என் தம்பிக்குக்கூட என்னைவிட மீசை தெளிவாய் இருந்தது. “ஒனக்கு முளைக்கவே முளைக்காது” என்பார்கள். குமைந்து போவேன்//

  //இரண்டாவது அண்ணன் முரடனாகவும், வம்புகள் இழுப்பவனாகவும் இருந்தான். தெருவே பார்த்து பயப்படும் எங்கள் வீட்டுக்காரராக இருந்த கமலாக்காவுக்கே என் அண்ணனிடம் ஒரு பயம் இருக்கும். யாரையும் சட்டென்று கையை நீட்டிவிடுவான். பெரும் வேட்டைக்காரன். கேட்வார் எடுத்துவிட்டால் ஓணான், அணில், காக்கா, குருவி, கொக்கு என எதன் ஒன்றின் ரத்தமும் பார்க்காமல் விட மாட்டான்.//

  //அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் போயிருந்த போது அந்த அலமாரியில் புத்தகங்கள் இல்லை. நானும் எங்கெல்லாமோ தேடினேன். கிடைக்கவில்லை. //

  //காலையில் என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கூசிப்போனார். அவமானத்தில் வலித்துக்கிடந்த அவரது முகம் பார்க்கவே கண்றாவியாய் இருந்தது//

  //என் தங்கைக்கு தெரிந்து கிண்டல் செய்தாள். “அவ ஒரு மக்கு” என்றாள். “ஒனக்கு செவப்பா ஒரு பொண்ணப்பாத்தா போதுமே..” கிண்டல் செய்தாள். //

  //‘பயணங்கள் முடிவதில்லை’ படம் பார்க்க புறப்பட்ட மாலையொன்றில் பக்கத்து வீட்டு மாடியில் அம்முவைப் பார்த்தேன். என் பதின்மப் பருவத்தின் நாட்களை சுவீகரித்தபடி, அதன் வசீகரங்களை சுமந்தபடி அவள் தெரிந்தாள். அடுத்த அத்தியாயம் பிறந்தது//

  உங்கள்
  ‘பயணங்கள் முடிவதில்லை’
  தொடருங்கள்.....

  வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!!!

  பதிலளிநீக்கு
 5. //"என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு//

  இந்த வரிகள் அழகோ அழகு.. காதல் நிறைந்து வழிகிறது

  பதின்மப் பருவத்தையும் ஒரு காவியம் போல எழுத முடியுமா.. அப்பாடி!!!

  பதிலளிநீக்கு
 6. தோழா... சொல்லுவாயென நினைத்ததை சொல்லவில்லை.
  சொல்லாதவற்றையெல்லாம் புதிதாக இப்போதுதான்
  படிக்கிறேன். அந்த நிழற்படம் பார்க்கிற போது ஏர்படுகிற
  பூரிப்போடு,

  பதிலளிநீக்கு
 7. மாதண்ணா,
  காலையிலேயே பதிவை படித்துவிட்டேன். சந்தோஷமாக இருந்தது. நம் பழைய நாட்களை `ரீவைண்ட்’ செய்து பார்த்த மாதிரி இருந்தது.

  உன் திருமணத்துக்கு பின் நான் உன் `பழைய ப்ரெண்ட்’ ஐ எங்கேயோ பார்த்து விட்டு வந்து,`அது இப்போ நல்லாவே இல்லை, வயசான மாதிரி ஆயிட்டு ‘ என்றதும், அம்மு உன்னிடம், ஏங்க அது நல்லாவே இல்லயாமே’ என்று கேலி செய்து சிரித்ததும் நினைவு வந்து மீண்டும் சிரிப்பு வந்தது.
  நிறைய அறிந்தவை, சில புதிதானவை.
  பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 8. நிரம்ப அருமையாகப் பொழிந்திருக்கிறது இளைய நிலா!தெரிந்த ஊர்களாய் இருப்பதனால்....இன்னும் நன்றாக இருந்தது!

  பதிலளிநீக்கு
 9. அம்பிகா அக்கா!

  உங்க பின்னூட்டத்தைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.. அக்காவிடமும் உடனே பகிர்ந்து கொண்டபடி!
  :-))

  பதிலளிநீக்கு
 10. ஆஹா..எங்க ஊருல இருந்து இப்படி ஓர் எழுத்தாளரா..நீங்க, காமராஜ் சார்...

  என் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு..'எங்க ஊருல (திருநெல்வேலி) இருந்து எத்தனை எழுத்தாளர்கள் வந்திருக்காங்கனு..' அப்பலாம் நான் கோவில்பட்டி, மல்லாங்கிணறு ஊர்களையலாம் சாத்தூர் 'வட்டத்தில்' சேர்த்துக்கொள்வதுண்டு ...
  இனிமேல் நானும் சாத்தூரைப் பத்தி கொஞ்சம் பெருமையா சொல்லிகலாம்ல....

  உங்களை, காமராஜ் சாரை இங்கே 'சந்தித்ததில்' மிக்க மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 11. உங்கள் பதிவு வாசகர்களை கட்டிபோட் வைக்கிறது......அசத்தல் எங்கிருந்து இந்த வரிகள் கொட்டுகின்றன ......வலைதளத்தில் நீங்க பெரிய ஆளு.....This means you are great .

  பதிலளிநீக்கு
 12. ரசித்து படித்தேன்....எத்தனை விஷயங்கள்..சுவாரசியமான வாழ்க்கை..சுவாரசியமான எழுத்து!

  பதிலளிநீக்கு
 13. தீபா!
  நன்றி.


  ராகவன்!
  புதையல்தானா!
  வாழ்வின் அழகான தருணங்களை உங்களால்தான் பகிர முடிந்தது.சந்தோஷம் நண்பா!  உழவன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. அனுபவங்கள் பிரத்யேகமானவையாக இருக்கலாம். ஆனால் சுகமான நிழலாடல் எல்லோருக்கும் பொதுவானவைதானே!


  பொன்ராஜ்!
  ரசித்தமைக்கு நன்றி.  புபட்டியான்!
  காவியமா.....! சந்தோஷம் நண்பரே!

  பதிலளிநீக்கு
 14. காமராஜ்!
  புரியவில்லை. உன்னிடம் சொல்லியதை எதை நான் பகிரவில்லையென்று.
  சொல்லாததை வேண்டுமானால் சொல்லியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 15. பதிவு அருமை.

  அப்படியே என்னை ஆறுமுகநேரி, சாஹுபுரம்,குரும்பூர், பேயன்விளை, காயல்பட்டினம் கொண்டு சென்று விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. அம்பிகா!
  :-)))))
  அம்மு படித்துச் சிரித்தாள்!


  அன்புடன் அருணா!
  ஆஹா.... சந்தோஷமுங்க.


  தீபா!
  :-)))))  பாபு!
  உங்களை கண்டடைந்ததில் எங்களுக்கும் சந்தோஷம்.  நிலாமதி!
  ரொம்ப நன்றி. ஆனால் நான் பெரிய ஆளாக எனக்குத் தெரியவில்லை.  சந்தனமுல்லை!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ப்பா.., படிக்க ஆரம்பிச்சவுடனே முடிச்சது கூடத் தெரியலை. ஒரு மாதிரி பிரமிப்பு ஆரம்பம் முதல் முடிவு வரை.

  (“என்னைப் பார்த்தபிறகுதான் உங்களுக்கு மீசையே முளைத்தது” என்று அம்மு சொல்வதுண்டு.)

  :))))))))))))))

  பதிலளிநீக்கு
 18. பல இடங்கள் என்னை நானே பார்த்தது போல் உணர்ந்தேன். நேர்மையான பதிவு. உங்கள் பதிவுகளில் மிகச்சிறந்த படைப்பு இது தான்.

  பதிலளிநீக்கு
 19. சுவாரசியம்.. அருமையான பகிர்வு

  பதிலளிநீக்கு
 20. என்ன மாது இப்படி பண்ணிட்டீங்க?

  தொலைந்து போனது போல இருக்கு.அல்லது கண்டெடுத்தது போலவும்.

  சுட்டி சுட்டி சொல்லலாம்.சொல்லாமலும் இருக்கலாம்.

  "வலை உலகில் வாழ்வை எழுதி செல்பவன்'

  என கூப்பிட ப்ரியமாய் இருக்கிறது

  .மஞ்சனத்தி பழம் சுவை மாது.

  பதிலளிநீக்கு
 21. குப்பன் யாஹு!
  உண்மையாகவா...!மிக்க நன்றி.

  அமிர்தவர்ஷிணி அம்மா!
  நன்றி.


  கார்த்திகேயன்!
  அப்படியா....!!!
  சந்தோஷம்.


  அமுதா!
  நன்றிங்க.


  பா.ரா!
  ஆஹா....
  நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 22. // Cost analysis, Industrial psychology, Environment of business வகுப்புகளெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாமலேயே இருந்தன. அதிலும் Law வகுப்பு வந்துவிட்டால் தூக்கம் தூக்கமாய் வரும் //

  உங்களுக்கும் அப்படித்தானா? ரசித்துச் சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 23. வெயிலான்!
  ஆமாங்க..... நீங்களும் பி.பி.ஏவா! கஷ்டம்தான்!!!
  :-)))))))

  பதிலளிநீக்கு
 24. //கடைசி வரையிலும் கணக்கில் என்னை முந்த விடவில்லை. P.U.C யில் கூட அவனும் நானும் இருநூறுக்கு இருநூறுதான்//
  தோற்றதே இல்லை என்பதை தன்னடக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை புரிய வைத்த வரிகள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!