காமிராக்களில் படியாத பெண்முகங்கள்

வரும் வழியெல்லாம் யோசித்துப் பார்த்தான். கண்கள், புருவம், அதற்கு மேல் இருந்த சிறு மச்சம், விளக்கு வெளிச்சத்தில் கழுத்துக்கும் தோள்பட்டையில் இடையில் தெரிந்த மினிமினுப்பு என ஒவ்வொன்றாய் கவனம் செலுத்திப் பார்த்தான். மௌன ஆழம் கொண்ட கண்களும், மெல்லிய சிரிப்பு கொண்ட இதழ்களும் தந்த பெரும் கிறக்கம் அவனை வாட்டிக்கொண்டு இருந்தன. கைவிரல்களிலும் கால்விரல்களிலும் இருந்த மருதாணி அவனுக்கு பிடித்தமான எதோ ஒன்றை சொல்லியது போல் அப்போதும் உணர்ந்தான். அலம்பிய தண்ணீருக்குள் அசைந்துகொண்டு இருந்ததாய் முகம் மட்டும் ஒரு வடிவமாக நிலைக்க மாட்டேன்கிறது. சிரித்துக்கொண்டுதான் இருந்தாள் அவள் என அவனே படம் பிடித்து, பிடித்துப் பார்த்துக்கொண்டான்.

 

எத்தனையோ பெண் முகங்களை சுற்றி சுற்றி  காமிராவில் பார்த்தவனின் கண்கள் இன்று சாயங்காலத்திலிருந்து சிறுகுழந்தையின் கைகால்கள் போல தவிப்போடு இப்படி அசைந்து கொண்டிருந்தன. அருகில் நிற்பவனின் தோளோடு ஒட்டி நிற்பதில், கைப்பற்றும் சிறுதருணத்தில் அந்த பெண்களின் உடல்மொழி சில கதைகளை அவனுக்குச் சொல்லிவிடும். தவிக்கும் பார்வையில் பல அர்த்தங்கள் புரிந்துவிடும். வாழ்வின் கண்ணாமூச்சி ஆட்டங்களை ரசித்துக்கொண்டே திருமண நிகழ்ச்சிகளில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருப்பான்.

 

வெளிச்சம் அணைந்ததும், சில கணங்கள் மிச்சமிருக்கும் ஓளியை கண்ணுக்குள் பத்திரப்படுத்திப் பார்த்து ஏமாந்தவனாய் காரில் டிரைவர் அருகில் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தான் இப்போது.  பின்னிருக்கையில் இருந்த அண்ணனும் அண்ணியும் பயணம் முழுவதும் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாய் வீடு வந்து தனது அறைக்குள் நுழையப்போனவனை அண்ணி அழைத்து, “இந்தாங்க... ஒங்களுக்கு வரப்போறவளை இன்னும் நல்லாப் பாத்துக்கிடுங்க..” என்று அந்த போட்டோவைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அண்ணன்  ”அவந்தூக்கத்தை கெடுத்திட்டியா..” என்று சிரிக்கும் சத்தம் ஹாலில் கேட்டது. கண்ணாடி முன் போய் நின்று லேசாய் சிரித்தபடி தன்னைப் பார்த்துக்கொண்டான்.

 

வெளியே கதவைத் தட்டும் சத்தமும், அண்ணன் யாரோடோ பேசிக்கொண்டு இருப்பதும் கேட்டது. “இல்ல சார்... இப்பத்தான் தென்காசியிலிருந்து எல்லோரும் அவனுக்கு பெண் பாத்துட்டு வந்திருக்கோம்... ஒரு நல்ல நாளுமதுவா கூப்புடுறீங்களே..சார்..” என்று அண்ணன்  சொன்னதையே சொன்னான். அறைக்கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தான். ஸ்டூடியோவுக்கு அடிக்கடி வரும் கான்ஸ்டபிள்தான். எதாவது ஆக்சிடெண்டோ, மர்டரோ உள்ளூரில் நடந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. போட்டோ எடுத்துக் கொடுக்க வேண்டியதிருக்கும். “இதுல என்ன இருக்கு... வர்றேண்ணா..” அவன் கான்ஸ்டபிளோடு புறப்பட்டான். சட்டையைப் போடும் போது படுக்கையில் அவள் சிரித்துக்கொண்டு இருந்தாள் சின்ன உருவமாக.

 

அந்த வீட்டின் முன் அங்கங்கு கூட்டம் அந்த இரவில் நின்றிருந்தது. காமிராவைத் தயார் செய்துகொண்டு உள்ளே நுழைந்தான். வரும் போதே 
‘ஸ்யூசைட் கேஸ்’என்று கான்ஸ்டபிள் சொல்லியிருந்தார். பெரும் வீறிடலாய் ஒற்றைக்குரலில் அந்த அம்மா அழுதுகொண்டு இருந்தார்கள். யாரோ அவர்களைப் பிடித்துக்கொண்டார்கள். கொஞ்சம் சலசலப்பு இருந்தாலும் பெரும் சோகம் இறங்கியிருந்தது. அந்த அறைக்குள் இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.  அவர் தலைக்கு அருகில் கொலுசு அணிந்த பெண்ணின் கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தன. முகம் பார்க்க சகிக்காமல் இருக்க அவன் காமிராவால் அமைதியாய் அங்குமிங்கும் சென்று படம் பிடித்துக்கொண்டு இருந்தான். அறைக்குள் பிளாஷ்கள் வெட்டிக்கொண்டு இருந்தன.

 

வெளியே  வந்தபோது “இன்னைக்குச் சாயங்காலந்தான் பொண்ணுப் பாக்க வந்திருந்தாங்க... அப்பக்கூட ஒண்ணும் சொல்லலையே..” என்று ஒருவர் சொல்லி அழுது கொண்டிருந்தார். இந்தப் பெண்முகத்தை ஒருமுறை கண்களால்  பார்க்க வேண்டும்போல் இருந்தது. அவன் திரும்பவும் அந்த அறைக்குள் போய்ப் பார்த்தான். இவள் கைகளிலும், கால்களிலும்கூட மருதாணி இருந்தது.

 

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இவன் பெண் பார்த்த பெண் தான் இறந்து போன பெண்ணா.

    நன் கட்சி பத்தியில் இருந்து மேலே படித்து விட்டேன்,. என்ன செய்ய, இணையம் வந்த பிறகு சிறுகதை, நாவல்கள் எல்லாம் சுச்பென்சொடு படிக்க எல்லாம் ஆர்வம் இல்லை. ஒரு பக்கம் ஒஎஸ்ரா ஹெலிகாப்டர் செய்தி வேறு தொலைகாட்சியில்

    பதிலளிநீக்கு
  2. //இதழ்களும் தந்த பெரும் கிறக்கம் அவனை வாட்டிக்கொண்டு இருந்தன//

    //அந்தப் பெண்முகத்தை கண்களால் பார்க்க வேண்டும்போல் இருந்தது//

    எங்கேயிருந்து எங்கே கோர்க்கிறீர்கள்.
    வழக்கம்போல் அற்புத நடை
    மற்றும்....
    உணர்வுகளை தூங்க விடாத கனமான பதிவு

    பதிலளிநீக்கு
  3. நான் அந்த பொண்ணாகத்தானிருக்கும் என்று யூகித்தேன்.

    நீங்கள் அப்படியும் இருக்கலாம் என்று முடித்திருக்கிறீர்கள்.பிடித்திருக்கிறது எழுத்தும் கதையும் !!

    பதிலளிநீக்கு
  4. மாதவன்,உங்களை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா?
    வயது குறித்தான குழப்பம் இல்லை.கிட்டதட்ட தினம் ஒரு பதிவும்,
    உங்கள் அதீத எழுத்தும்,தீவிர இயக்கமும்,அவசரப்பட்டு முதலில்
    பெயர் சொல்லி அழைத்துவிட்டோமோ என்று இருக்கு.மேலும்,என் சித்தப்பா வேறு
    அவர்,"எனக்கு தெரிஞ்சு வலை உலகின் அதிக பதிவு செய்தவர்டா.அவர் வந்து உன்
    அனுபவ நீதி கதை படித்து விட்டு,"ரசித்தேன்"என சொல்வது உன் பாக்யம்"என்பது போல்
    சொல்லிவிட்டார்.கொஞ்சம் ஆடிப் போய்விட்டேன்.மனசுக்கு புடிச்சுட்டா எனக்கு பெயர் சொல்லி
    அழைக்கணும் மாதவன்.எப்படி தொடங்குகிறேனோ அப்படி முடிக்கத்தான் விரும்புவேன்.அறிமுக காலம்
    தொட்டு அப்பாவை,அப்பா என்று அழைக்க நேரிட்டுவிட்டது.சற்று தாமதகமாக அழைக்க அப்பாவோ,அப்பா மாதிரியான காலமோ அனுமதித்திருக்குமாயின்,"பாலு"எனவே அழைத்திருப்பேன்.அவ்வளவு இஷ்ட்டம் அப்பா.அப்படி இஷ்ட்டப்பட்ட பிறகு அறிமுகம் கிடைத்தது என்றே உங்களை இது வரையில்,"மாதவன்"என அழைத்து வருகிறேன்.இப்படியே இருக்கட்டுமா நான்?இது குறித்து எழுதுங்கள்,இங்கோ,மின் முகவரியிலோ.(rajaram.b.krishnan@gmail.com).

    இந்த சிறுகதை குறித்து,
    நண்பர் செய்யது,"நான் அந்த பெண்ணாகத்தான் இருக்கும் என யூகித்தேன்,நீங்கள் அந்த பெண்ணாகவும் இருக்கலாம் என்று முடித்திருக்கிறீர்கள்"என்பதில் எனக்கு லாஜிக் சிக்கல் இருக்கு.நாம் பார்த்து விட்டு வந்த பெண்ணுக்கும் இது மாதிரியான "சுயவிருப்பு"கேட்க்க பட்டிருக்குமா?என்கிற மன சுண்டுதல் கதாநாயகனுக்கு ஏற்பட்டதை காட்டுகிறீர்கள் என்பதாகவே என்னால் புரியப்பட்டது.
    மற்றபடி,நிறைய இடங்களில் உங்களுக்கே உரித்தான தனி அடையாளம்(ஒரு கதைதான் வாசித்திருக்கிறேன்.ஆனால் தீர வாசித்திருக்கிறேன்.)வழி எங்கும் கிடைத்தது.சிறுகதை எழுதுபவர்களுக்கு நல்ல பயிலரங்கம் நீங்கள்.ரமதான் ஆகையால் சற்று வேலை பளு.பிறகு மெதுவாக பேசுவோம்.என் தனிப்பட்ட விருப்பு குறித்து எழுதுங்கள் மாதவன்.என்னால் மாற்றிக்கொள்ள இயலும்.

    பதிலளிநீக்கு
  5. பெண் பார்த்து விட்டு வந்தவனின் தவிப்பைச் சொல்லும் ஒரு எளிய, அழகிய தொனி அருமை.

    எனன்பான பா ராஜாராம் அவர்கள் சொல்வதைப் போலதான் நானும் உணர்கிறேன்.

    ஒரு விதமான சூன்யத்துடன் இக்கதை முடிகிறது

    பதிலளிநீக்கு
  6. அ.மு.செய்யது said...
    நான் அந்த பொண்ணாகத்தானிருக்கும் என்று யூகித்தேன்.

    நீங்கள் அப்படியும் இருக்கலாம் என்று முடித்திருக்கிறீர்கள்.பிடித்திருக்கிறது எழுத்தும் கதையும் !!


    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ராம்ஜி!

    அவள் இவள் இல்லை. அவசரமாக படித்ததால் குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

    கதிர்!
    நன்றி.

    செய்யது!
    அவள் இவள் இல்லை. எழுத்து பிடித்ததற்கு நன்றி.

    அனானி!
    நன்றி.

    தீபா!
    நன்றி.


    மண்குதிரை!
    புரிதலுக்கு நன்றி.

    அமிர்தவர்ஷிணி அம்மா!
    செய்யது அவர்களுக்கு சொன்னதுதான்:
    அவள் இவள் இல்லை. கதை சொன்னதில் எதோ பிசகியிருக்கிறேன் எனத்தான் இப்போது தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. பா.ராஜாராம்!
    கதையை மிகச் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் நீண்ட பின்னூட்டம் வலையுலத்தில் நான் அடைந்த சந்தோஷங்களில் ஒன்று. மாதவன் என்று அழைக்கலாம். இன்னும் நெருக்கமாய் மாது என்றும் அழைக்கலாம். உங்கள் ப்ரொஃபைலில் குறிப்பிட்டு இருக்கும் உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை நான் பைத்தியம் போல படித்துக் கிடந்திருக்கிறேன். இன்னும் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  9. அவள் இவள் இல்லை என நீங்கள் பின்னூட்டத்தில் விளக்கியதால் இப்போது குழப்பமில்லை.

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  10. சாத்தியங்கள் எனப்பார்த்தால்
    அவனுக்கு கல்யாணமாகி சிலநாளிற்குள்ளேயே அது சரிவராது என்று விவாகரத்திற்குக் காத்திருக்கவேண்டும்,
    அவனுக்கும் அவன் அண்ணிக்குமிடையில் உறவு இருந்திருக்கவேண்டும்,
    அண்ணி இரண்டாவது திருமணத்தையும் குழப்பியிருக்கலாம்!
    தனது போட்டோவை அண்ணி அவனுக்கு கொடுத்திருக்கலாம்!

    சின்னத்திரை வாடை அடிக்குதோ?

    பதிலளிநீக்கு
  11. பாதி கதையிலேயே இதுதான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தாலும் அந்தப் பெண்தான் இந்தப் பெண் என்று சொல்லாமல் விட்டது நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!