சுதந்திர இந்தியா!

பிரிக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளை வரையறுப்பதில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக லட்சக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். கொலையும், கொள்ளையும், கற்பழிப்புகளுமாய் மனித நாகரீகத்தின் அடையாளங்களையெல்லாம் உரித்து போட்டுவிட்டு தலைவிரித்தாடியது மதவெறி. முன்னொரு நாளில் வங்காளப்பிரிவினையை சேர்ந்து எதிர்த்த இந்துக்களும் முஸ்லிம்களும் தேசப்பிரிவினைக்கு குரல் கொடுத்த கொடுமையான காட்சி அது. கலவரங்களை அடக்குவதற்கு 55000 சிப்பாய்கள் பஞ்சாபில் அணிவகுத்து நிற்க, கல்கத்தாவில் காந்தி மட்டும் தனிமனிதராய் குரல் கொடுத்தார். சுதந்திர நாட்டுக்குள்ளேயே மக்கள் வீடு வாசல் இழந்து அகதிகளாயினர். காந்தி அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆறுதல் சொன்னார். “சகல் மக்களுக்கும் இந்த நாடு சொந்தமானது, சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என அரசு உறுதி கொடுத்தபடி இருந்தது. மக்கள் ஒற்றுமைக்கான ஈடு இணையற்ற போராட்டத்தை நடத்தினார் காந்தி.

 

 
கல்கத்தாவில் இருந்து டில்லி வந்த காந்தி பிர்லா மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு ஆதரவாக இருந்தார். பிரிவினை சமயத்தில் பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக ஒப்புக்கொண்ட 55 கோடியை இந்தியா தர மறுத்தது. அதிருப்தி அடைந்த காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்தார். நிலைமையின் விபரீதம் உணர்ந்த படேல் பாகிஸ்தானுக்கு அந்த பணத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

 


அடங்காத மதவெறியர்களுக்கு காந்தியின் மீது கோபம் ஏற்பட்டது. காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு எறிந்தனர். குண்டு குறி தவறி காம்பவுண்டுச் சுவரைத் தாக்கியது. இது நடந்து 15 நாட்களுக்குப் பின்பு 1948 ஜனவரி 30 வெள்ளியன்று டில்லியிலுள்ள பிர்லா மாளிகையில் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்துமகா சபையின் பூனா நகர செக்ரட்டரியான நாதுராம் கோட்சே என்பவன் காந்தியைச் சுட்டுக்கொன்றான். “நமது காலத்தின் ஒளி போய்விட்டது” என பிரதமர் நேரு கலங்கினார். சுதந்திர இந்தியாவின் முதல் அரசு மரியாதை பெற்ற இறுதி ஊர்வலமாக காந்தியின் சடலம் டெல்லி வீதிகளில் கொண்டு போகப்பட்டது. இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய் கலந்து கொண்டனர்.

 

 

வ்வளவோ நடந்து முடிந்திருக்கின்றன. மக்களின் உழைப்பில், வரியில் பொதுத்துறை நிறுவனங்கள் பிரம்மாண்டமாய் நம் கண்முன்னே எழுந்து நிற்கின்றன. உனவு உற்பத்தியில் தேசம் தன்னிறைவு அடைந்திருக்கிறது. விண்ணிலும் இன்று நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம். விஞ்ஞானத்தின் சாதனங்கள் வீட்டை வந்து தட்டுகின்றன. நினைத்துப் பார்க்கும் அதே நேரத்தில் கசப்பான உண்மைகளும் இங்கே நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் இருட்டு அப்பிக்கொண்டுதான் இருக்கிறது.

 


நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ் கனவுகள் ஏதுமின்றி பிளாட்பார குடிமக்கள் அயர்ந்து தூங்கிய இரவில் இன்றைய பிரதமர் நாடாளுமன்றத்தில் ஐம்பது வருட மலரும் நினைவுகளை உரையாற்றிக் கொண்டிருந்தார். “சாப்பிட்டு இரண்டு நாளாச்சு” பலகீனமான குரலில் பரட்டைத்தலையோடு சிறுமி கைநீட்டி நிற்க, கொஞ்சம் தள்ளி சாலையில் சுதந்திரக் கொடியை சட்டையில் குத்தியபடி பெப்பர்மெண்ட் சுவையோடு நகரும் கான்வெண்ட் குழந்தைகள். ‘இந்தியா எனது நாடு’ சொல்லி டி.வியில் மார்தட்டிக் கொள்பவரே இன்றைக்கும் ‘வரிகொடா இயக்கம்’ நடத்தும் கோட்டும் சூட்டும் போட்ட கனவான். சுதந்திரதினச் செய்தி சொல்லிக் கொள்ள ஏதுமில்லாமல் வாழ்க்கை முழுவதையும் மண்ணோடு கழித்து தரிசு நிலமாகவே இருக்கும் கிராமத்து ஏழ விவசாயி. ஐம்பதாண்டு காலத்தின் இறுதியில் இப்படித்தான் சுதந்திர இந்தியாவைப் பார்க்க முடிகிறது.

 

அந்நிய நாட்டின் ராட்க்ஷச கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு ’ஆகஸ்ட் 15’ பொன்விழாவை கொண்டாடுகிற ‘தாராளமயத்தின்’ பரந்த மனப்பன்மையில் இந்தியர்களே பிரமித்துப் போகிறார்கள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆட்டிப்படைக்கும் அவர்களது ஆற்றல் கண்ணுக்குப் புலனாகாத மாயாவிகளின் ஜாலமாகும். மூளையை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளாய் வான் வழியே வந்து குவியும் ஆயிரமாயிரம் விளம்பரங்கள், உள்ளூர், அயலூர் வித்தியாசம் இல்லாமல் எல்லா முதலாளிகளும் இந்தியாவை வெறும் சந்தையாக மட்டுமே பார்க்கிற வியாபாரவெறி. மனிதனின் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை தேவைகளையும், பொருட்களையும் யாரோ நிர்ணயிக்க, வாங்க முடியாதவர்களோ வாழத் தகுதி இல்லாதவர்கள் ஆகிறார்கள்.

 

தனது முட்டைகளை தானே உடைத்து ஜீவனை உறிஞ்சும் பாம்புகளாய் ‘சுதந்திர இந்தியா’ பற்றிய கனவுகளை விதைத்தவர்களே சிதைத்து விட்டார்கள். சாதாரண மக்களிடம் கனவுகளைத் திணிக்கவும், பிறகு திருடவும் இந்த ஜனநாயகத்தில் நிறைய ஏற்பாடுகள் இருக்கின்றன. அங்குமிங்குமாய் முட்டி மோதி இறுதியில் தன் கூட்டை அறிந்துவிடுகிற குளவிகளின் திறன்கூட பாமரர்களிடமிருந்து விலக்கப்பட்டு இருக்கிறது. தன்னுடைய கனவைத் தானே காண்கிற சுதந்திரம் இன்னும் அவர்களுக்கு வந்து சேரவே இல்லை. சிந்திக்க வேண்டியதைச் சிந்திக்க விடாமல் மனிதர்களின் கவனம் முழுவதையும் திசை திருப்பி விடுகிற காரியமாய் கலாசாரமே ஒரு போதை வஸ்துவாக்கப்பட்டு இருக்கிறது. பிரிட்டிஷ்காரனும், பழைய சனாதன முறைகளும் புதைத்து வைத்த கண்ணி வெடிகளாய் மதவெறியும், ஜாதிவெறியும் அங்கங்கே வெடித்துக் கொண்டிருக்கின்றன. நமது புல்வெளிகள் சாம்பல் பூத்துக் கிடக்கின்றன.

 

எல்லாவற்றையும் இந்த மண் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வஞ்சிக்கப்பட்டு நிற்கும் மக்களின் துயரக்குரல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.


கடந்த காலத்தின் வீரப்புதல்வர்களை விதைகளாய் தனக்குள் உள்வாங்கி வைத்திருக்கிறது. அவர்களது மகத்தான தியாகங்களும், கனவுகளும் சருகாக உதிர்ந்து விடப் போவதில்லை.


தொழிலாளர்களாய், விவசாயிகளாய் வீரியத்தோடு அவர்கள் துளிர் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.


அசைக்க முடியாத நம்பிக்கையோடு காலத்தின் காலடியோசையை இந்த மண் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.


எல்லோருக்குமான சூரியவரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது..... இந்தியா!


நமது இந்தியா!

 

(இந்த இடத்தில் நம்பிக்கையோடு முடிவடைகிறது)

 

முந்தைய பகுதிகள்:

வீர சுதந்திரம் வேண்டி - முதல் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - இரண்டாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - மூன்றாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - நான்காம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஐந்தாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஆறாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - ஏழாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி  - எட்டாவது பகுதி

 

*

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஒருமணிநேரம் ஒதுக்கி, மொத்த பகுதிகளையும் ஒன்றாக படித்து பின்னூட்டமிடுகிறேன்!

  பதிலளிநீக்கு
 2. ஐயா
  தங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்

  //எல்லோருக்குமான சூரியவரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது..... இந்தியா//

  அந்த திருநாளின் அவசியத்தையும் புரிதலையும் இந்த தொடர் ( வீர சுதந்திரம் வேண்டி) செய்தது. இதனை ஒரு தொகுதியாக ( புத்தகம்) வெளியிட்டால் இன்னும் பலர் புரிதல் அடைவார்கள் என்பது என்னுடைய விருப்பம். (எப்போது ஐயா ?)
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. அண்ணா!காலத்திற்கு ஏற்ற ஒரு அவசியமான தொடர் பதிவை பதிந்து முடித்துள்ளீர்கள்.ஒரு உள்ளார்ந்த தேடலின் வெளிப்பாடே இது போன்ற தன்னலமற்ற காரியங்களில் முழு ஈடுபாட்டோடு செயல்பட வைக்கும்.உங்களின் இந்த முயற்சி மிகவும் பாரட்டுதலுக்குரியது...

  நிச்சயம் நமது நம்பிக்கை ஒருநாள் நிறைவேறும்.முதலாளித்துவ சிந்தனையாளர்கள் விரித்துள்ள மாயவலையை இந்த சமூகம் ஒருநாள் உணரும்.அதன் கொடூர கரங்கள் உடைத்து எரியப்பட்டு நிலையான சமத்துவ சமூகம் ஒருநாள் மலரும்...

  அதன் அடிகற்களாய் நிச்சயம் நாம் இருப்போம்.....

  பதிலளிநீக்கு
 4. \\அந்நிய நாட்டின் ராட்க்ஷச கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு ’ஆகஸ்ட் 15’ பொன்விழாவை கொண்டாடுகிற ‘தாராளமயத்தின்’ பரந்த மனப்பன்மையில் இந்தியர்களே பிரமித்துப் போகிறார்கள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே........................பொருட்களையும் யாரோ நிர்ணயிக்க, வாங்க முடியாதவர்களோ வாழத் தகுதி இல்லாதவர்கள் ஆகிறார்கள்\\
  \\சிந்திக்க வேண்டியதைச் சிந்திக்க விடாமல் மனிதர்களின் கவனம் முழுவதையும் திசை திருப்பி விடுகிற காரியமாய் கலாசாரமே ஒரு போதை வஸ்துவாக்கப்பட்டு இருக்கிறது\\
  mugaththil araiyum avalamaana unmai.
  \\(இந்த இடத்தில் "நம்பிக்கையோடு" முடிவடைகிறது)\\
  izhappatharku ethuvumillaatha nilaiyilum kuda nammidam irunthe aaga vendiya vishayamthaan. aanaal vidumurai thinaththil vanthuvittathaal suthanthira thinaththai kuda kondaada manamillaamal irukkum corporate adimaikalai ninaiththaal santhekamaaiththaan irukkirathu.

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு தொடர் பதிவு. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
 6. வால்பையன்!

  படித்து விட்டீர்களா....!


  கண்ணன்!
  12 வருடங்களுக்கு முன்பு புத்தகமாக ஏற்கனவே எழுதியதைத்தான் இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

  அண்டோ!
  ஆமாம். அந்த நம்பிக்கையை நாம் சுதந்திரப் போராட்ட அனுபவங்களிலிருந்தே பெற முடியும். நசுக்க, நசுக்க, பீறீட்டு எழும் காலங்களை புரிந்து கொள்ள முடியும்.


  பொ.வெண்மணிச்செல்வன்!
  எப்படியிருக்கீங்க. ரொம்ப நாளாய் பார்க்க முடியலை.
  நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. வரலாறு அதைத்தான் சொல்கிறது.

  நாஞ்சில்நாதம்!

  மன்னிக்கணும். மறந்துவிட்டேன். புத்தகம் அனுப்பி வைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. பொறுமையாக பதிவிட்டமைக்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 8. //சாதாரண மக்களிடம் கனவுகளைத் திணிக்கவும், பிறகு திருடவும் இந்த ஜனநாயகத்தில் நிறைய ஏற்பாடுகள் இருக்கின்றன//
  முத்தான வார்த்தைகள் தோழர் முழுவதும் படிக்கதுவங்கியுள்ளேன் பிறகு பதிகிறேன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!