ஷோபா என்னும் அழியாத கோலம்னவு காணும்
வேலைக்காரியாய்த்தான்
முதலில் ஷோபாவைப்
பார்த்தேன். தெருவில், கோவிலில்,
கடைவீதியில் பார்க்கும் ஒரு
சாதாரணப்பெண் போல இருக்கிறார்
ஷோபா என ஆனந்தவிகடன் சொன்னது மிகச் சரியானதுதான். அறிமுகம் செய்த கே.பாலச்சந்தருக்கு

இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அங்குமிங்கும் பார்த்து, சரத்பாபுவின் செண்ட்டைத் திருட்டுத்தனமாய் போட்டுக்கொண்டு கண்ணாடியில் தன்னுடலைப் பார்க்கும் அந்த நேரத்தில் மிக நெருக்கத்தில் உணர்ந்தேன். எந்தப் பின்னணியிசையுமின்றி,  சரத்பாபுவிடம் அந்த உடலைப் பகிர்ந்து கொண்ட போது எதையோ இழந்துபோனவனாய் பார்க்கமுடியாமல் பார்த்து உட்கார்ந்திருந்தேன். அனுமந்துவின் வலி என்னிடம் இருந்தது. நிழல் நிஜமாக தெளிந்த பிறகு ஷோபாவின் முகத்தில் இருக்கும் நிதானத்தையும், பக்குவத்தையும் காணும் கமல்ஹாசனிடம் இருக்கும் பிரமிப்பு என்னிடம் இருந்தது. கடைசியில் சரத்பாபுவை மறுக்கிறபோது ஷோபாவைத் தூக்கிக் கொண்டாடி இருக்கிறேன். அன்று ஷோபா ஒரு நல்ல நடிகையாக மட்டுமேத் தெரிந்தார்.

 

 

வானவில் பின்புறம் மலர்ந்திருக்க ‘அடி பெண்ணே...” என மலையடிவாரத்தில்  ஒடிவருகிற போதுதான் என் பதின்மப் பருவத்தின் சிலிர்ப்போடு ஷோபாவை நேசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பெரிய குங்குமப் பொட்டும், மூக்குத்தியும் எவ்வளவு அழகானவையாக இருந்தன.  செந்தாழம் பூவென்று அப்போது சரத்பாபு காதலித்துக்கொண்டு இருந்தார்.

 

 

பிறகு குடையோடு வந்தது இந்து டீச்சர். வெளி யாவையும் நிழல் போலாக்கி மயங்கி நிற்கும் அந்த மாலைச்சூரியனிலிருந்து உணர்வுகள் சுதிகொள்ள ஆரம்பிக்கும். பஞ்சுக்கதிர்களாய் காற்றில் உற்சாகமாய் பொங்கிக்கொண்டு இருக்கும் புற்கூட்டத்திலிருந்து சலீல் சௌத்தரியின் இசை எழும்பும் அந்த தருணத்தில் சட்டென பரவசமாகிறது உள் பூராவும். வாய்க்கால்களும், வரப்புகளும், மரத்தடிகளுமாய் கிராமத்தின் அழகெல்லாம் காட்சிப்பறவைகளாய் இசையில் சிறகு விரிக்கும். “பூவண்ணம்.... போல நெஞ்சம்.... பூபாளம் பாடும் நேரம்...” என்னும் வரிகளில் உடல், உள்ளம் எல்லாம் லேசாகி விட, வாழ்க்கை எவ்வளவு சுகமானதாகவும், ரம்மியாகவும் ஆகிப்போகிறது. அதோ, ஆர்கண்டிச் சேலையில் தேவதையாய் ஷோபா ஒற்றை வரப்பில் நடந்துவர, திரவம் போல கசிந்துருகிப் போகிறேன். இசை, பாடல், குரல், காட்சி, உருவங்கள் என அனைத்தும் ஒன்றிப்போய் மிதக்கும் அந்தக் காலப்பரப்பில் போதைகொண்டு இன்னும் என் இளமை வாடாமல் கிடக்கிறேன்.

 

 

தொடர்ந்து ஏணிப்படிகள், ஒரு வீடு ஒரு உலகம், பசி என்று வேறு வேறு பிம்பங்களில் வந்தாலும் எனக்குள் எல்லாம் அழியாத கோலமாகவே மீட்டிக்கொண்டு இருந்தது. law of diminishing utility பற்றி உதாரணங்களுடன் புரொபசர் பொன்ராஜ் வகுப்பறையில் விளக்கிக்கொண்டு இருக்கும் போது ஷோபாவின் கண்ணை வரைந்து கொண்டு இருப்பேன். பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் முழுக்க ஷோபாவின் முகங்களே முளைத்திருந்தன.  சிரிக்கும்போது குழந்தையும், மௌனமாய் இருக்கும்போது முதிர்ச்சியும், எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் புத்திசாலித்தனமும், குறுகுறுப்பும்தான் ஷோபா. வேகம் கூடிய நடையும் தெறிப்புகளாய் வந்து மறையும் சிறுவெட்கமும் அழகு. அந்த உருவம், அசைவுகள்,  உரையாடும் பாவம் எல்லாம் என் பிரியத்திற்குரியச் சாயல்களாயிருந்தன. என் தேவதைக்குரியவையாக இருந்தன. புல்வெளிகளில், கடற்கரையில் நான் ஷோபாவுடன் நடந்து கொண்டு இருந்தேன். நான் எதோ சொல்ல ஷோபா வெட்கப்பட்டுச் சிரிப்பதை உணர்ந்தேன். என் இனிய பொன் நிலாவாக வான்வெளியில் வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விளக்குகள் அணைக்கப்பட்ட இருளில் இருந்து ஷோபா வெளியேறி நாளாகியிருந்தது.

 

 

அது எப்படி என்று தெரியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. இனக்கவர்ச்சி என்பதெல்லாம் தாண்டிய உறவாக அதை வரித்துக்கொண்டேன். வெதுவெதுவென எப்போதும் ததும்பிக்கொண்டு இருக்கிற நினைவுகள் என்னை மிருதுவாக வருடிக்கொண்டிருந்தன. தொலை தூரத்து நட்சத்திரமே என்பதை புரிந்து கொண்டாலும், அது என் பாதையில் மட்டும் சிந்திய ஒளியை எல்லாம் பத்திரமாக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.

 

 

ஒருநாள் வானொலியில் ஷோபா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பெண் சொன்னாள். பத்திரிகையில் படங்களுடன் செய்திகள் வந்தன. அன்று நான் சாப்பிடவில்லை. பைத்தியம் போலக் கிடந்தேன். மரணம் குறித்து வந்த செய்திகளும், சர்ச்சைகளும் எனக்கு முக்கியமானதாய் படவில்லை. அருமையான ஒன்றை இழந்த சோகம் மட்டுமே என் நாட்களில் அப்பிக்கொண்டிருந்தது. இனி இந்த உலகில் எந்தப் பெண்ணும் அழகானவளாய், ரசனைக்குரியவளாய் இருக்க மாட்டாள் என்றெல்லாம் தோன்றியது. ச்சீப் பைத்தியம் என்று என்னையே நான் கோபப்பட்டாலும், அதுதான் உண்மையென்று அழுத்தமாக உறைத்துக் கொண்டிருந்தது.

 

 

ஆனால் ஷோபா எங்கும் போய்விடவில்லை. திரும்பவும் உயிரோடு எழுந்து வந்திருக்கும் செய்தியை ரகசியமாக வைத்துக் கொண்டேன். நான் வரைந்த ஷோபாக்கள் என்னைச் சுற்றி நடமாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். கால அமைதி கொண்டு நிற்கிற ஷோபா இப்போது.

 

 

ஆமாம், கு.ப.ராஜகோபாலனுக்கு ஷோபா எப்படித் தெரியும்? கள்ளங்கபடமற்ற நூருன்னிஷாவாக வடிவம் பெற்று எழுந்து நின்றது ஷோபாவேதான். அப்புறம் பார்த்தால் ஸ்டெப்பி புல்வெளிகளில் பாடித்திரிந்து கொண்டிருந்த என்னருமை ஜமிலாவும், “இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாபு” என்று தலையைக் கோதிவிட்ட யமுனாவும் ஷோபாதான். பிலிம் சுருள்களுக்குள்ளிருந்து விடுபட்டு, நான் நேசிக்கிற பெண்களுக்குள் எதோ ஒரு வார்த்தையின், அசைவின் வழியாக ஷோபா கூடு பாய்ந்து விடுவதை அறிந்து கொண்டேன். 

 

 

அந்த இடத்தை நிரப்ப முடியாத பெண் ஷோபா. ‘மேகமே... மேகமே’ என்று சுஹாசினி புல்வெளியில் உட்கார்ந்திருக்கிற நாட்கள் சில வந்தன. “பூவே பூச்சுடவா” என நதியா துள்ளித் திரிந்த நாட்கள் சில வந்தன. அவர்கள் போன சுவடு தெரியவில்லை. நான் தேடவுமில்லை. ஷோபா மட்டும் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்க முடிகிறது. நேற்று கூட ஷாஜஹானின் எழுத்தில் அண்ணியாக வந்து “நாளை இந்த நேரம் பார்த்து” என்று பாடிக்கொண்டு இருந்ததைக் கேட்டேனே.

 

 

காலம் எவ்வளவோ கடந்து போனாலும், எந்த அற்புதத்தையும், அழகையும் நாம் இழந்து போவதில்லை. ரசனைகளின் சித்திரங்கள் வயதுகள் தாண்டியும் கூடவே வருகின்றன. எப்போது பார்த்தாலும் வான்வெளியில் சட்டென்று  கண்ணில் படுவதாய் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு நட்சத்திரம் வைத்திருக்கிறார்கள். அறிவு பூர்வமான புரிதல்களுக்குள்ளும், பக்குவங்களுக்குள்ளும் அடைபடாத அழியாத கோலங்கள் இவை.

 

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்சினைகள் குறித்து நாங்கள் எடுத்திருந்த ‘இது வேறு இதிகாசம்’ ஆவணப்படத்தை வெளியிட மதுரைக்கு பாலுமகேந்திரா வந்திருந்தார். விமான நிலையத்தில் வரவேற்றதிலிருந்து கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க அவரோடு ஒரு ஓட்டல் அறையில் கூடவே இருந்தேன். நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தார். எழுத்தாளர்கள் தமிழ்ச்சினிமாவிற்குள் வரவேண்டியதன் அவசியம் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, “நீங்களும் நன்றாக எழுதுவீர்களே” என்றேன். “நான் எழுத்துக்களை வாசிப்பேன். எங்கே எழுதினேன்?” என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் “ஷோபா அவர்கள் இறந்தபோது குமுதத்தில் அந்த நினைவுகளை ஒரு தொடராக எழுதினீர்களே... நான் அதை விடாமல் படித்திருக்கிறேன். ரொம்ப நல்லாயிருந்தது” என்றேன். பதில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். தர்மசங்கடமாயிருந்தாலும், நானும் அமைதியாயிருந்தேன். நீண்ட அந்த மௌனத்தில் இருந்து எழுந்து வந்து கொண்டிருந்தார் ஷோபா! 

 

 

பி.கு:

 

லிப்டில் ஏறி, ஆபிஸ் அறைக்குள் புகுந்து கொண்ட அந்த இளைய கமல், அன்று வந்த கடிதங்களை பார்வையிடுவார். எங்கோ இருக்கும் அவரது கிராமத்திலிருந்து பால்ய கால சினேகிதனின் கடிதம் வந்திருக்கும். ஆபிஸ் பியூனை அழைத்து  “யாரையும் கொஞ்ச நேரம் உள்ளே விடவேண்டாம்” என்று சொல்லிவிட்டு, கடிதத்தை படிக்க  ஆரம்பிப்பார். “நம்ம இந்து டீச்சர் இல்ல, இந்து டீச்சர் அவங்க இறந்துட்டாங்க..” என்ற வரிகளோடு கடிதமும், ‘அழியாத கோலங்களும்’ ஆரம்பிக்கும். நானும் என் கதவுகளை கொஞ்ச நேரம் பூட்டிக்கொண்டிருக்கிறேன். அதுதான் இந்த 300வது பதிவு.

 

*

கருத்துகள்

41 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. பின்குறிப்பு படிக்கும் முன்னரே நினைச்சேன்!

  இந்த பதிவுக்காக ரொம்ப நாளா காத்துகொண்டிருந்தா மாதிரி!

  300க்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. மலரும் நினைவுகள் மிக அழகானதாய் நெகிழ்வாகவும் பிரமிக்கவைக்கின்றது.

  300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சி.முருகேஷ் பாபு13 ஆகஸ்ட், 2009 அன்று 9:05 PM

  எத்தனை கண்ணீர் திவலைகள் வந்தாலும் அழியாத கோலம் அவர்...

  எனக்கு பிரதாப் போத்தன் மீது இருக்கிற மிகப் பெரிய பொறாமை அவர் ஷோபாவை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார் என்பதுதான்...

  என்னைப் பிரதி எடுத்ததுபோல இருந்தது பதிவு.

  நெகிழ்வுடன்

  சி.முருகேஷ் பாபு

  பதிலளிநீக்கு
 4. ஷோபா ஒரு நல்ல, யதார்த்தமான நடிகை என்ற முறையிலும், சின்ன சிலை போன்ற அழகு என்றும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நிழல் நிஜமாகிறது என்ற படமும் தான். ஆனால் உங்களுக்குள் இவ்வளவு தாக்கங்கள் ஏற்படுத்தி இருக்கிறாரா?
  :-)

  //ஆமாம், கு.ப.ராஜகோபாலுக்கு ஷோபா எப்படித் தெரியும்? கள்ளங்கபடமற்ற நூருன்னிஷாவாக வடிவம் பெற்று எழுந்து நின்றது ஷோபாவேதான். அப்புறம் பார்த்தால் ஸ்டெப்பி புல்வெளிகளில் பாடித்திரிந்து கொண்டிருந்த என்னருமை ஜமிலாவும், “இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாபு” என்று தலையைக் கோதிவிட்ட யமுனாவும் ஷோபாதான்.//

  ஆஹா! இந்த இடம் அற்புதம்.
  ஆம், ஜமீலாவுக்கு ஷோபா எவ்வளவு அழகாகப் பொருந்துவார்!

  பதிலளிநீக்கு
 5. மூன்று செஞ்சுரிக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துபவன்13 ஆகஸ்ட், 2009 அன்று 9:41 PM

  என்னாது, 299வது பதிவுக்கு அப்புறம் 300வது பதிவு வந்திருச்சா என்னா அதிசயம்....?வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அண்ணா!வாழ்த்துக்கள்.....
  உங்கள் பதிவால் நான் தவறவிட்ட எனது ’ஷோபா’களின் நினைவுகள் எனக்குள் மீண்டும் ஒருமுறை மீட்டப்பட்டுள்ளது...அதற்கு நன்றி.

  இன்னும் பல CENTURIES-களை காண ஆவலாக உள்ளேன்...

  பதிலளிநீக்கு
 8. ஷோபாவை என்னால் எந்தப் பாத்திரத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியவில்லை.ஷோபாவைப் போல ஷோபாவால் மட்டும்தான் இருக்க முடியும்.

  ”என் வாழ்வில் கொஞ்ச நாள் மட்டுமே வந்து விட்டுப் போன தேவதை” என பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் நெஞ்சடைத்துச் சொன்ன போது அவரின்மீது பொறாமையும் பரிதாபமும் ஒருங்கே எழுந்தது.

  வசீகர மரணங்களைப் பற்றிச் சில நாட்களுக்கு முன்பு யோசித்துக் கொண்டிருந்தேன்.சில்வியா பிளாத் மட்டுமல்ல ஷோபாவும் ஸ்மிதாவும் கூட மரணத்தை அற்பமாக்கியவர்களே..

  பதிலளிநீக்கு
 9. லு மகேந்திர காபி வித் அனு வில் சொன்னார்.

  வசந்தம் போல ஷோபா வந்தார், குறுகிய காலத்தில் என்னை விட்டு போய் விட்டார். அந்த நினைவை தான் நான் மூன்றாம் பிறை ஆக்கினேன் என்றார்.

  ஷோபா, ராதா ,மாதவி, ரூபினி, கௌதமி, சுஹாசினி, ரேவதி, ரோசினி, ரஞ்சிதா, கீதா குஷ்பூ, சிம்ரன், த்ரிஷா, நமீதா, ஸ்ரேயா

  பதிலளிநீக்கு
 10. //ஷோபா, ராதா ,மாதவி, ரூபினி, கௌதமி, சுஹாசினி, ரேவதி, ரோசினி, ரஞ்சிதா, கீதா குஷ்பூ, சிம்ரன், த்ரிஷா, நமீதா, ஸ்ரேயா //

  இவர்களெல்லாம் உங்கள் கனவு .........ளா? ராம்ஜி!?

  பதிலளிநீக்கு
 11. சீக்கிரம் 500 அடிக்க வாழ்த்துக்கள்.

  அமைதியான,ஆர்ப்பாட்டமில்லாத, இயல்பான நடிப்பை கொண்ட சிறந்த நடிகை.அவர் செய்த பாத்திரங்களை அவரைப்போன்று யாரும் சிறப்பாக செய்திருக்கமுடியாது.

  என்ன செய்ய,விதி வலியது.

  பதிலளிநீக்கு
 12. 300-க்கு வாழ்த்துகள்!!
  நல்லாருந்துது இடுகை..படிக்க படிக்க..ஆனால் கடைசியில் சோகமாய்! என் சிறுவயதில் இளைஞர்களாக நான் பார்த்தவர்களின் டைரிகள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்! :-)
  நீங்கள் குறிப்பிட்ட படங்களில் ஷோபா நடித்த 'பசி' மட்டுமே பார்த்திருக்கிறேன்...!!!

  பதிலளிநீக்கு
 13. சட்டுன்னு ஷோபாவோட நினைப்பை எல்லாரோட மனசிலயும் கிளறி விட்டூட்டீங்க....!

  பதிலளிநீக்கு
 14. ஷோபாவை உள்ளிருந்து கிளப்ப வைத்த பதிவு.. அட போங்கப்பா.. நானும் என் கதவை மூடிக்கிறேன்.:(

  பதிலளிநீக்கு
 15. நினைவலைகள் நெஞ்சை அடைக்கின்றன..

  "நிழல் நிஜமாகிறது" திரைப்படத்தில் "இலக்கணம் மாறுதோ" பாடலின்போது காலண்டரில் இருக்கும் ஒரு குழந்தை போல தன் முகத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பார் பாருங்கள்..!

  அற்புதம்..! பிறவிக் கலைஞர் அவர்..

  நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!

  பதிலளிநீக்கு
 16. முதலில் 300 வது பதிவுக்கு வாழ்த்துகள்,

  எனக்கு அந்த பேருந்து பயண இரவு நினைவுக்கு வந்து விட்டது, அன்று நீங்கள் எனக்கும் பிடித்த ஷோபாவைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தீர்கள், அப்போதே புரிந்தது உங்களுக்கு ஷோபாவை எவ்வளவு பிடிக்குமென்று.

  அவங்க குரல், அதை எப்படிச் சொல்வது,,,,,,

  பாலுமகேந்திரா அவர்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை நான் எப்படி சொல்வது,,,,,,,

  ஷோபா அவர்களின் அந்த குழந்தைமை நிரம்பிய உதட்டுச் சுழிப்பில் வழியும் புன்னகை,,,,,,

  இப்படி நிறைய,,,,,,

  முதலில் பாடல்களில் பாடலுக்கு வாயசைக்காமல் பேசி சிரித்து நடந்து ஓடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ரசித்ததும் பாலு மகேந்திரா படங்களில் ஷோபாவும் பிரதாப் போத்தனும் வருகிற பாடல் காட்சிகளில் தான்.

  உங்களின் இந்தப் பதிவு என்னையும் ஷோபா ஷோபா என புலம்ப வைத்துக் கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. ”பசி” என்ற படத்தில், கதாநாயகிகள் ஏற்ற தயங்கும் குப்பை பொருக்கும் பெண்ணாக நடித்திருப்பாரே,


  மறக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 18. பதிவு 300,க்கு வாழ்த்துக்கள்.
  ஷோபா
  கனவுகளின் விதை
  கதையாடல்களிண் பிரதானப் பேசுபொருள்,
  கவிதைகளுக்கு வண்ணமிட்ட பெண்.

  பதிலளிநீக்கு
 19. அருமையான பகிர்வு.

  வழக்கமாக தீவிர தளத்தில் இயங்கும் உங்கள் எழுத்துக்களையே வாசித்த எனக்கு,

  உங்களின் இன்னொரு பக்கம் ரசிப்புக்குறியதாய் இருந்தது.

  300க்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. தமிழில் எனக்கு பிடித்த ஒரே நடிகை ஷோபா
  முடுபனி ராஜாவிற்கு 100 வது படம்
  உங்களுக்கு 300 பதிவு இவுலங்கும்
  புகழ் பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. 300க்கு வாழ்த்துகள் மாதவராஜ்..

  ஷோபா மனதில் ஒரு அழியாத கோலம்தான்..

  ஷோபாவின் மரணம் குறித்து நீண்ட நாட்களுக்கு முன் பாலகுமாரன் எழுதியது நினைவிற்கு வருகிறது

  பதிலளிநீக்கு
 22. நிழல் நிஜமாகிறது,முள்ளும் மலரும் படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

  அற்புதமான நடிகைக்கு மேலும் சிறப்பு
  சேர்க்கும் வகையில் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 23. எனக்கும் மிகவும் பிடித்த நடிகை.

  அவ்வளவு யதார்த்தமாக தமிழில் வேறுயாரும் உள்ளார்களா..?? இதுவரை நான் பார்க்கவில்லை.
  பார்க்க போவதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

  இன்றைய தமிழ் சினிமாவை பார்க்க்கும் போது ஷோபா.. என்றுமே ஒரு அழியாத கோலம்தான்.

  அருமையான 300க்கும் வாழ்த்துகள்.

  தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 24. 300க்கு வாழ்த்துகள் :-)

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  பதிலளிநீக்கு
 25. ஷோபாவின் நினைவு - வண்ணங்களை எடுத்து விசிறியடித்த அழகான 300 வது பதிவு!

  வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 26. மூன்று சதத்திற்கு வாழ்த்துக்கள்

  எனக்கும் ஷோபா ரொம்ப பிடிக்கும், காரணம் பாசாங்கில்லாத அந்த எளிமை.

  பதிவு முழுக்க ஷோபாவே உடன் வந்தாற் போல ஒரு பிரமை.

  பதிலளிநீக்கு
 27. enakkum pika pitiththa natikai

  shobha vaipparriya pakirvu arumai.

  balumahendravoda irunthathu kanmunne virikirathu.

  300vathu pathivukkum en vazhththukkal sir.

  பதிலளிநீக்கு
 28. சுவாரசியமான பதிவு. சில நடிகைகளை நாம் ஆபாசமான கண்ணோட்டத்தில் பார்க்கவே முடியாது. அவ்வாறானவர்களில ஷோபாவும் ஒருவர். தமிழில் மிக அப+வர்மாகவே நிகழும் இயல்பான நடிப்பிற்குச் சொந்தக்காரர். முள்ளும் மலரும்'வில் அவருடைய நடிப்பு மிக அற்புதம். அதுவும் பாலுவின் ஒளிப்பதிவில் தலைமுடியை விரித்துப் போட்டபடி வானத்தைப் பார்த்து வரும் ஷாட்டில் தேவதை போலவே இருப்பார்.

  பதிலளிநீக்கு
 29. காஃபி வித் அனு சீசன் 2 ல் பாலுமகேந்திரா, மூன்றாம் பிறை - ஷோபா உறவை சொல்கிறார். எனக்கு சட்டுன்னு இந்த பதிவு நினைவு வந்திச்சு.

  வாழ்த்துக்கள் தோழர்.

  பதிலளிநீக்கு
 30. மலரும் நினைவுக்லாக் அந்த காலத்தில் பல இளம் உள்ளங்களை தன நடிப்பால் கவர்ந்தவர். அவருக்கென ஒரு தனி இடம் இருந்தது. மீண்டும் ஞாபகமாய் அடி மனதில் பதிவுக்கு நன்றி ........

  பதிலளிநீக்கு
 31. வந்து படித்தவர்களுக்கும், 300க்கு வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கும், ஷோபாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. நீ...ண்ட காலதாமதத்திற்க்கு மன்னிக்க தோழர்.வேட்டி நுனி மட்டுமல்லாமல் பனியன் ஜட்டிகளை கூட இந்த துறை பல் சக்கரங்கள் மிஞ்சவிடாது போலிருக்கிறது.
  அதை அப்புறம் பார்ப்போம்.

  பதிவினை படித்த, இளமைக்கால நினைவுகளின் லேசான மனக்கிலேசங்களுடன் பின்னூட்டங்களை வாசித்தேன்.


  சி.முருகேஷ் பாபு said...

  எத்தனை கண்ணீர் திவலைகள் வந்தாலும் அழியாத கோலம் அவர்...

  எனக்கு பிரதாப் போத்தன் மீது இருக்கிற மிகப் பெரிய பொறாமை அவர் ஷோபாவை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார் என்பதுதான்...

  என்னைப் பிரதி எடுத்ததுபோல இருந்தது பதிவு.

  நெகிழ்வுடன்

  சி.முருகேஷ் பாபு.

  இந்த பின்னூட்டத்தினை அப்பட்டமாக வழிமொழிகின்றேன்.

  மீண்டும்,

  என்னைப் பிரதி எடுத்ததுபோல இருந்தது பதிவு.


  அது ஒரு சுகமான அனுபவம்.ஒரு சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் மனதிலிருந்து மறைந்துவிடுகிற மின்மினி நினைவுகளல்ல அந்த திரைப்படங்கள்.

  எத்தனை ஆண்டுகளானாலும் மனதிலிருந்து அகலாத ஒரு மென்மையான உணர்வினை ஒரு வீரிய விதையினை போல மனதில் விதைத்து சென்ற திரைப்படங்கள்.

  ஏக்கங்கொள்ள மட்டுமே முடிகிறது நம்மால்.
  முள்ளும் மலரும் படத்தில் அந்த க்ளைமாக்ஸ்....ரஜினியின் வார்த்தைகளற்ற பார்வையும், ஷோபாவின் நடிப்பும்.....பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணீரை வரவழைத்த நினைவலைகள் அது.

  அதே போல ஷோபாவின் அண்ணியாக நடித்திருந்த படாபட் ஜெயலட்சுமியின் இயல்பான போக்கும் படம் முழுதும் பிசிறின்றி அமைக்கப்பட்டிருக்கும்.

  ஷோபாவினை பற்றி யாதொன்றும் சொல்ல இடமேயில்லாமல் பதிவிட்டுவிட்டீர்கள் உங்கள் பாணியில்.

  சினிமா என்னும் மாபெரும் ஊடகம் 80களில் நமக்களித்த அந்த உண்ணதமான பொழுதுகளையும்,மறக்கவியலா நினைவுகளையும்,உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்த பாடல்களையும்.,

  இப்போதைய நாயகர்கள், உறவுகளையும் சமூக கட்டுமானங்களையும் எள்ளி நகையாடுவதுடன் ஒரே நேரத்தில் 10, 20 என்ற எண்ணிக்கையிலிருந்து படிப்படியாக முன்னேறி 100,200 என்ற அளவில் ஒரே நேரத்தில் வில்லனுடைய அடியாட்களை பந்தாடிக்கொண்டிருப்பதையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்கிறேன்.

  இப்போதிருக்கும் இளைய தலைமுறை சினிமாவினை வாழ்வியலோடு சம்மந்தப்படாத ஒரு பொழுது போக்கு அம்சமாகவே பார்த்தாலும் கூட., அதன் தாக்கங்கள் பேச்சு மற்றும் உடை இன்னபிற வழக்குகளில் நிச்சயம் உண்டென்றே கருத தோன்றுகிறது.

  சற்று நீண்ட பின்னூட்டத்திற்க்கு மன்னிக்க.

  என்றும் மாறா அன்புடன்,
  கும்க்கி.

  பதிலளிநீக்கு
 33. உங்கள் பதிவில் ஒரு மலரின் பயணம் என்ற திரைப்படத்தினை குறிப்பிட மறந்துவிட்டதாக தோன்றுகிறது.

  ஷோபாவின் உண்மையான இறுதி ஊர்வல காட்சிகள் கதையுடன் சேர்த்து காண்பிக்கப்பட்டிருக்கும்.

  பதிலளிநீக்கு
 34. கும்க்கி!
  தங்கள் வருகைக்கும், நினைவுகளின் பகிர்வுக்கும் நன்றி.
  அந்தப் படத்தின் பெயர் மலரின் பயணம் அல்ல, சாமந்திப்பூ.

  பதிலளிநீக்கு
 35. ஷோபா.. ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் தேவதையாகவே இருந்தார்.. மிக அழகான பதிவு தோழர்..

  ஒரு பெண்ணின் பார்வையில் ஷோபா.. http://katrilalayumsiraku.blogspot.com/2009/10/blog-post_9434.html

  பதிலளிநீக்கு
 36. Yes...She is/was a perfect actress.
  We can not forget the "Indira teacher".

  Here an Orkut Community for her.

  http://www.orkut.com/Main#Community?cmm=84091213.

  Anybody know who gave voice for her?

  பதிலளிநீக்கு
 37. ஷோபா அவர்களைப் போலவே இந்தியில் ஒரு நடிகை இருந்தார். அவர் பெயர் 'ஜரினா வஹ்ஹாப்'
  சிட் சோர், கரோண்டா என்ற படங்களில் நடித்தவர். தற்போது மை நேம் இஸ் கான் படத்தில் ஷாருக்கானின் அன்னையாக நடித்திருந்தார். ஹைதரபாத்தை சேர்ந்தவர் தான். அவரின் நடிப்பு உங்களுக்கு பிடிக்குமா?

  பதிலளிநீக்கு
 38. "சட்டென்று கண்ணில் படுவதாய் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு நட்சத்திரம் வைத்திருக்கிறார்கள்"

  உணர்வுகளை வார்த்தையாக்குவதில் தனித்து நிற்கிறீர்கள் 300 ஐ கடந்துவிடீர்கள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!