முதல் இந்திய சுதந்திரப் போர்

"இங்கிலாந்தின் பொருளாதாரத் திட்டம் உறிஞ்சும் பஞ்சு மாதிரி. கங்கை நதிக்கரையிலிருந்து எல்லா நல்ல பொருள்களையும் எடுத்துக்
கொண்டு போய் ஜேம்ஸ் நதிக்கரையில் பிழிந்து விடுகிறது
-வருமான வாரியத் தலைவராக இருந்த ஜான் சல்லிவன்


east india company 





பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ- நாங்கள் சாகவோ அழுது கொண்டிருப்போமோ- ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ

-மகாகவி பாரதி



ஆற்றில் காற்று
சுழன்று அடிக்குது
ஆங்லில நாடோ
தொலைவில் இருக்குது
வேகமாய் வேகமாய்
வெளியேறு
வெள்ளைப் பரங்கியரே
வெளியேறு
மீரட் நகரின்
வீதியிலே
மிதித்தே
வீழ்த்தினர்
வெள்ளையரை
மக்களே
மக்களே
வாருங்கள்!
வந்து
இக்காட்சியினைப்
பாருங்கள்!

-இந்த நாட்டுப்புறப்பாடல் யுத்தத்தின் வேகத்தை இன்றும் உணர்த்துவதாய் இருக்கிறது.










Mangal_pandey_gimp
மங்கல் பாண்டே



meerut 1857
மீரட் எழுச்சி





nana saheb army 
நானாசாகேப் படை


delhi seige  
டெல்லியைக் கைப்பற்றுதல்





bahadur shah arrest
பகதூர்ஷா கைது



rebels hanging

கிளர்ச்சிக்காரர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள்



jansi rani

ஜான்சி ராணி



 
காசியை ஒட்டிய பகுதிகளில் அமைதியப் பாதுகாக்கும் நடவடிக்கையாக நீல் என்னும் ஆங்கிலேய தளபதி ஏராளமான மக்களைக் கொன்று குவித்தான். 1861ல் இந்த நீலுக்கு சென்னையில் பிரிட்டிஷார் சிலை நிறுவினர்

justice cartoon
ஆங்கிலேயரின் இரக்கமற்ற அடக்குமுறை விவரித்து பஞ்ச் பத்திரிகையில் வந்த கார்ட்டூன்.



சிப்பாய்களும், சாதாரண மக்களும் உயிரற்றுத் தரையெங்கும் எல்லாத் திசைகளிலும் கிடந்தார்கள். குடலைப் புடுங்குகிற நாற்றம் காற்றில்” -நேரில் பார்த்த கிரி பித்ஸ் என்பவர் தனது seige of delhi என்னும் நூலில்.

 

 

 

queen-victoria

ராணி விக்டோரியா

 

கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இங்கிலாந்து சென்று ஏராளமான செல்வங்களோடு வாழ்ந்தார்கள். பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டு அரசாங்கம் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தில் தனது அதிகாரத்தையும், பிடியையும் இறுக்கமாக்கிக் கொண்டது. ராணுவத்தின் மூலமும், காவல்துறை மூலமும் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது ஆட்சியை இந்தியாவில் நடத்தியது. ராணுவத்தில் பிரிட்டிஷ் ஆபிசர்களுக்கு கீழே இந்திய சிப்பாய்கள் இருந்தனர். அரசு நிர்வாகத்துறை முழுவதும் வெள்ளையர்களே. இந்தியாவின் செல்வம் அனைத்தையும் பிரிட்டனுக்கு அள்ளிக்கொண்டு போனார்கள். அவர்கள் நாட்டின் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன. அந்நிய நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா ஒரு சந்தையாகிப் போனது. மெல்ல மெல்ல இந்தியா ஒரு பின்தங்கிய விவசாய நாடாகவும், பிரிட்டன் தொழில்துறையில் முன்னேறிய நாடாகவும் உருமாறின.


புராணக் கதையில் வரும் அரக்கனாய் பிரிட்டிஷ்காரன் வல்லமை கொண்டு இருந்தான். அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் இந்த மண்ணின் சரித்திரம் ரத்தத்தால் எழுதப்பட்டு இருந்தது. வியாபாரத்திற்காக வந்தவன் நமது அருமைத் தாயகத்தையே அடிமை கொண்டு விட்டான். எதிர்த்து வீரமரணம் அடைந்த புதல்வர்களை நெஞ்சில் தாங்கிக் கொண்டு நின்றது இந்த மண். மீண்டும், மீண்டும் புதுப்புது தளிர்களை உலகுக்கு அடையாளம் காட்டியது. உள்ளுக்குள் அடங்காத தவிப்போடும், தீராத கோபத்தோடும் காத்திருந்த இந்த மண்ணிற்கு இருந்த ஒரே நம்பிக்கை அதன் மக்கள்தான். அவர்கள் எப்படியும் தனக்கென்று ஒரு நாளைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்பது அதற்குத் தெரியும்.

 
இந்தியச் சிப்பாய்கள் அந்த நாளைக் குறித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த தேசத்தில் தங்கள் கொடியைப் பறக்கவிட்டு நூறு ஆண்டுகள் ஆகியதைக் கொண்டாட வெள்ளையர்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்த நேரம் அது. அதேநாளில்தான் ஆங்கிலேய ஆட்சியை சுத்தமாகத் துடைத்தெறிய நமது சிப்பாய்களும் திட்டமிட்டு இருந்தனர். அவர்கள் கடுமையான பாதிப்பும், அதிருப்தியும் கொண்டு இருந்தனர்.


இந்தியச் சிப்பாய்களும், வெள்ளைச் சிப்பாய்களும் ஒரே படையில் இருந்த போதும், வெள்ளைச் சிப்பாய்களுக்கு நல்ல ஊதியம், வீடு, உணவு என்று கவனிக்கப்பட்டார்கள். நமது சிப்பாய்கள் அவர்கள் குடும்பங்களோடு ஒரே கொட்டடியில் ஆடு மாடுகளைப் போல தங்க வைக்கப்பட்டிருந்தனர். தரிசு நிலத்துக்கும் வெள்ளியர் வரி விதித்தனர். இந்தியச் சிப்பாய்களுக்கும் வரிதான். ஆனால் பென்சன் கிடையாது. அவர்கள் எந்த மதச்சின்னங்களும் அணியக் கூடாது. இதன் உச்சக்கட்டமாக நமது சிப்பாய்களைக் கோபமடைய வைத்த விஷயம் ஒன்று இருந்தது. புதிதாக வந்த புதிதாக வந்த என்பீல்டு துப்பாக்கியின் தோட்டாவில் பசுக்கொழுப்பும், பன்றிக் கொழுப்பும் தடவப்பட்டிருக்கிறது என்னும் செய்திதான் அது. பசு இந்துக்களுக்கு புனிதமானது. பன்றி மூஸ்லீம்களுக்கு ஆகாது. நாடு பூராவும் விவசாயிகளிடமும், தொழிலாளர்களிடமும், ராஜ்ஜியங்களை இழந்த மன்னர்களிடமும் ஆங்கிலேயருக்கு எதிரான கனல் மூண்டிருந்தது. நானாசாகிப் , பகதூர்ஷா போன்ற மன்னர்கள் இதில் பெரும் பங்கு வகித்தனர்.


குறிக்கப்பட்ட தேதிக்கு முன்பே போர் துவங்கியது. 1857 மார்ச் 29 ஞாயிறன்று பராக்பூரில் வங்காளப்பிரிவு சேனையில் இருந்த சிப்பாய் மங்கல் பாண்டே புதுவகை என்பீல்டு துப்பாக்கியை உபயாகிக்க மறுத்தார். ஆங்கிலேய சார்ஜெண்ட் அவரைக் கைதுசெய்ய முயல, கைகலப்பும், தகராறும் ஏற்பட்ட்ன. சார்ஜெண்டும், மங்கல்பாண்டேவும் காயமடைந்தார்கள். 1857 ஏப்ரல் 8ம் தேதி மங்கல் பாண்டே தூக்கிலிடப்பட்டார். செய்தி வேகமாகப் பரவ, நமது சிப்பாய்கள் கொதித்துப் போனார்கள். 1857 மே 10ம் தேதி மாலை 6.30 மணிக்கு மீரட்டில் யுத்தத்தை துவக்கினார்கள். கனன்று எரிந்திருந்த இந்திய சிப்பாய்களின் கோபத்தை எதிர்பார்த்திராத ஆங்கிலேயே ஆபிசர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு இடமாய் மீட்டுக்கொண்டு சிப்பாய்கள் அணிசேர்ந்து “டெல்லி சலோ” என முழக்கமிட்டு குதிரைகளில் விரைந்தார்கள்.
ஆங்காங்கு இருந்த படைப்பிரிவுகளிலிருந்து மேலும் மேலும் சிப்பாய்கள் டெல்லியைக் கைப்பற்றும் இந்த எழுச்சிமிக்க பயணத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள்.


அவத்தும் பைரேலியும் மீட்கப்பட்டன. மே மாதம் 11ம் தேதி டெல்லி நமது சிப்பாய்களின் வசமானது. இரண்டாம் பகதூர்ஷாவை மன்னராக்கி, கிராம பஞ்சாயத்து மாதிரியில் ‘ஜல்ஜா’ கமிட்டி அமைத்தனர். ஒவ்வொரு படைப்பிரிவிலும் இருந்து அதற்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. அந்தக் கமிட்டிக்கே முழு அதிகாரமும்.


“உழுபவர்களுக்கே நுலம் சொந்தம்”
“கந்துவட்டிக்காரர்களை விசாரணையின்றி நடுவீதியில் தண்டிப்பது”
“இந்தியருக்கு மட்டுமே வாணிபம் செய்யும் உரிமை”
“அரசு அலுவலகங்களில் இந்தியருக்கே பணீ”
“சிப்பாய்களுக்கு நியாயமான ஊதியம்”
போன்ற புரட்சிகரமான, முற்போக்கான பனிரெண்டு கட்டளைகள் அறிவிக்கப்பட்டன.

 
வெகு சீக்கிரத்தில் ஆங்கிலேயர்களுக்கு இருந்த தகவல் தொடர்பு சாதன வசதிகள் மூலம் இந்தப் புரட்சியை ஒடுக்கினர். மெட்ராஸ், கூர்க்கா, பஞ்சாப் படைப்பிரிவுகளால் ஆங்கிலேயர் இந்த முறியடிப்பை செய்ய முடிந்தது. கடுமையான போரில் இறுதியில் 1857 செப்டம்பர் 20ம் தேதி ஆங்கிலேயர் மீண்டும் டெல்லியை கைப்பற்றினர். மன்னர் பகதூர்ஷா கைது செய்யப்பட்டு ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு அங்கேயே மரணமடைந்தார்.


இந்தக் கிளர்ச்சியை நசுக்கிய வெள்ளையர்கள் நாடெங்கிலும் கோரத் தாண்டவம் ஆடினர். கண்ணில் பட்ட சிப்பாய்கள், சாதாரண மக்கள் அனைவரையும் ரத்த வெறி பிடித்து கொன்று குவித்தனர். மரங்களில் தூக்கிலிட்டனர். ஆங்கிலேயருடன் ஜான்சிராணி லஷ்மிபாய் வீரத்துடன் போர் புரிந்தார். இந்திய மக்கள் தூக்கில் தொங்குகிற கொடூரமான காட்சியைக் காண சகிக்காமல் தனது ராஜ்ஜியத்து மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்க்க உத்தரவிட்டார்.


ஜான்சிராணியும் போரில் கொலை செய்யப்பட்டார். தாந்தியா தோப் சிறையில் அடைக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். மௌலி அகமத்துல்லாவை துரோகமிழைத்துக் கொன்று ரத்தம் சிந்த அவரது தலையை ஒரு இந்திய மன்னன் பிரிட்டிஷாரிடம் கொடுத்து 50,0000 ருபாயை வெகுமதியாக வாங்கினான். திரும்பிய பக்கமெல்லாம் இந்திய மக்களின் சடலங்கள். உயிரற்ற உடல்களால் நிரப்பபெற்ற கிணறுகள். அவெத் மாகாணத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மக்களும், காசியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டனர்.


உலகத்தின் பல நாடுகள் பிரிட்டிஷ் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை கடுமையாக கண்டனம் செய்தன. ஆனால் கலவரத்தை வீரத்தோடு அடக்கியதாய் ஆங்கிலேய அரசு தனது வீரர்களுக்கு மெடல்கள் கொடுத்தது.

 

இந்த மகத்தான் எழுச்சியை-  130 நாட்கள் ஆங்கிலேய ஆட்சி அகற்றப்பட்ட வீரத்தை இந்த மண்ணுக்குத் தேவையான பல முக்கியத் திட்டங்களை அறிவித்த ஆட்சியை ‘சிப்பாய் கலவரம்’ என பிரிட்டிஷ்காரன் கொச்சைப்படுத்தினான். ஆனால் இதைத்தான் ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்’ என காரல் மார்க்ஸ் உலகுக்கு உணர்த்தினார்.


ஒரு வெள்ளி பூத்ததைப் பார்த்த சிறிய சந்தோஷம் அது. அந்த அழகில் மேலும் திளைப்பதற்குள் நட்சத்திரங்களையெல்லாம் வானம் இழந்து நின்றது. அடிவயிறு பதைபதைக்க பெருந்துக்கத்தின் சாட்சியாய் கிடந்தது இந்த மண். இனி இங்கு சூரியனே உதிக்கக் கூடாது என துப்பாக்கியின் குண்டுகள் ஆணையிட்டன. மனித இரத்தம் உறைந்து காய்ந்து போனது. அருமை மக்களின் எலும்புகூடுகளை அடைகாத்துக்கொண்டது. வெட்டுப்பட்டு வீழ்ந்த மரங்களின் வேர்களில் ஆத்திரமும், வேகமும் பூத்திருந்தன.


வெள்ளையர்கள் இந்தியாவில் தங்கள் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார்கள். 1858ல் இந்தியாவின் மீது கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இருந்த அதிகாரத்தை- தனக்குரியதாய் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து பிரிட்டிஷ் அரசாங்கம் மாற்றிக் கொண்டது. இராணுவத்தை பெரிதாக்கி அதில் பிர்ட்டிஷ் சிப்பாய்களை அதிகமாகத் தருவித்துக் கொண்டனர். ஜமீந்தார்களும், நிலப்பிரபுக்களும் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்தனர். பிரிட்டிஷ் இந்தியாவாகவும், குட்டி சமஸ்தானங்களாகவும் இந்தியாவை வரையறுத்துக் கொண்டனர். இந்துக்களுக்கும், மூஸ்லீம்களுக்கும் மாறி மாறி சலுகைக் காட்டி மக்களைப் பிரித்தனர். இந்திய உடல்களோடும், பிரிட்டிஷ் மூளையோடும் மனிதர்களைச் சிதைக்கிற மெக்காலே கல்விமுறை புகுத்தப்பட்டது.ஆங்கிலேய நாட்டின் தொழில்களுக்கு தேவையான விளைநிலங்களாக இந்திய மண்ணை மாற்றினர். 1857 லிருந்து 1900க்குள் மூன்று கோடி இந்தியர் குடும்பம் குடும்பமாக பட்டினியாலும், நோயாலும் இறந்து போனார்கள். இத்தனைக்கும் மத்தியில் 1877ல் விக்டோரியா மகாராணி டெல்லியில் நடந்த ஒரு தர்பாரில் கலந்துகொண்டு தானே இந்நாட்டின் அரசியாக முடிசூட்டிக்கொண்டார்.

முந்தைய பகுதிகள்:

வீர சுதந்திரம் வேண்டி - முதல் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - இரண்டாம் பகுதி

*

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சுதந்திர தினத்தை ஒட்டி நமது விடுதலை போராட்டம் குறித்து பேசி விட்டு பன்னாட்டு கம்பெனிகளிடம் விலை போகும் தலைவர்களின் கயமைக்கு நடுவே / உண்மையான அக்கறையுடன் வரலாற்றை பதிவு செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    பவித்ரா

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நட்பை போற்றுவோம்

    பவித்ரா

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு கஷ்டபட்டு அவனுங்க கிட்ட வாங்கின விடுதலைய, இவனுங்க (அரசியல்வியாதி) கிட்ட பரிகொடுத்துட்டமே!

    பதிலளிநீக்கு
  4. பவித்ரா அவர்களுக்கும், PR அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!