நீறுபூத்த நெருப்பு

“குண்டுகளினால் இறப்பது என்றாலும் பரவாயில்லை, இண்டிகோ விதைகளை இந்த மண்ணில் தூவ விட மாட்டோம்” என ஒரு விவசாயி சொன்னார்.

-வங்காளக் கவர்னர் கிராண்ட் 1860 செப்டம்பர் 17ல் வெளியிட்ட அறிக்கையிலிருந்து....

 

mercy killing
‘கருணைக்கொலைகள்’

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ- நாங்கள் சாகவோ அழுது கொண்டிருப்போமோ- ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ

-மகாகவி பாரதி


 

 

 

rajaram

ராஜாராம் மோகன்ராய்

 

 

 

 

உங்கள் சாத்திரங்களை கங்கையில் தூக்கி எறிந்துவிட்டும் பாமர ஏழை மக்களுக்கு முதலில் உண்ண உணவும், உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுத் தாருங்கள்”

-விவேகானந்தர்hume 
ஆலன் ஆக்டோவியன் ஹியூம்

“மகாராணியின் அனுகூலமான், என்றும் மறப்பதற்கு அரிய கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருஷம் முடிவெ பெற்றது குறித்து சக்கிரவர்த்தினியார் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்த இந்த பிரதிநிதிகள் அடங்கிய மகாசபை அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆள வேண்டுமென வாழ்த்துகிறது”

-இரண்டாம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றிய முதல் தீர்மானம்

 “ஜாதிமத பேதமற்று கல்கத்தாவின் அனைத்து மக்களும் துயரத்தில் ஆழ்ந்து போயினர். ஹூக்ளி நதிக்கரையில் பரந்து கிடந்த மனித முகங்கள் அலைபாயும் கடலெனவே தோன்றியது. சாலைகளும், வீதிகளும் அதுவரைப் பார்த்திராத காட்சியைத் தந்தன. வாங்குபவர்களும் இல்லை. விற்பவர்களும் இல்லை. ஊர்வலங்கள் மாறி மாறி நதிக்கரை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தன. “வந்தே மாதரம்” என்கிற முழக்கம் மட்டுமே ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது”

-1905 அக்டோபர் 17, அமிர்தபஜார் பத்திரிகையிலிருந்து...

 

 surat congress

சூரத் மாநாடு

“திடிரென எதோ ஒன்று பறந்து வந்தது.... செருப்பு! ஒரு மராட்டியச் செருப்பு! சுரேந்திரநாத் கன்னத்தில் அது அறைந்தது”
-சூரத் காங்கிரஸை நேரில் பார்த்த ஹென்றி நேவின்சன்

 

 

 

 

 

 

thilgar 

திலகர்

“தங்கள் எழுத்தாளர்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் இந்திய மக்கள் போராடத் துவங்கி விட்டனர். இந்திய ஜனநாயகவாதி திலகரை பிரிட்டிஷ் நரிகள் கைதுசெய்யுமாறு மிக இழிந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டமும், வேலைநிறுத்தமும் செய்திருக்கிறார்கள்”

-திலகர் கைதானதையொட்டி லெனின்.

 

 

 

 

 

 

 

VOC 

வ.உ.சி

 

SubramaniyaSiva

சுப்பிரமணியம் சிவா

"மடிந்த கேழ்வரகை மண்ணோடு காய்ச்சிய கூழை கொணர்ந்தான்; குடியாது கொட்டினோம்"
வ.உ.சி

 

 

 

 

நீறுபூத்த நெருப்பாக இருந்த மக்கள் மீண்டும் சுடர்விட ஆரம்பித்தார்கள். வங்காளத்திலும், வடக்கு பீகாரிலும் பிரிட்டிஷ்காரர்கள் விவசாயிகளை இண்டிகோ என்னும் ஒருவகை நீலச்சாயம் தயாரிப்பதற்கான பயிரை விளைவிக்கக் கட்டாயப் படுத்தினார்கள். அந்தப் பயிருக்கு பிரிட்டிஷ்காரர்களே விலையை மிகக்குறைவாக நிணயித்தனர். இதனை எதிர்த்து விவசாயிகள் மிகக்கடுமையான போராட்டம் நடத்தினார்கள்.

பஞ்சாபில் குர்க்கா கிளர்ச்சி 1857க்குப் பிறகு ஆரம்பித்தது. குருராம்சிங் என்பவர் இதற்குத் தலைமை தாங்கி புதிய நம்பிக்கைகளை மக்களுக்கு ஊட்டினார். குருசரண்சிங் என்பவரிடம் கடிதம் கொடுத்து ரஷ்ய உதவியை நாடினார். பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. மாற்று நிர்வாக அமைப்போடும், ஆயுதம் தாங்கிய புரட்சிக்கான திட்டத்தோடும் இருந்தார்கள். பிரிட்டிஷ் அரசு குர்க்கா கிளர்ச்சிக்காரர்களை 1872ல் பீரங்கிகளில் கட்டிவைத்து அடித்துக் கொன்றார்கள். இதனை ‘கருணைக்கொலைகள்’ (mercy killings) என்று வெள்ளையர்கள் வர்ணித்தார்கள்.

மகாராஷ்டிரத்தில் பாசுதேவ பல்வந்த் பட்கே என்பவர் ஆதிவாசிகளையும், மூஸ்லீம்களையும் திரட்டி கந்துவட்டிக்காரர்களையும், பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் எதிர்த்து கொரில்லா முரையில் போராடினார். 1880ல் அவருக்கு ஆயுள்தண்டனை கொடுத்து நாடுகடத்தினார்கள். கோர்ட்டில் “எனது இலட்சியம் பிரிட்டிஷ்காரர்களை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதுதான்! எனது தேசத்து மக்களே! நான் தோற்றுப் போவதற்கு என்னை மன்னியுங்கள்” என்றார். நிலப்பிரபுக்களையும், பிரிட்டிஷ்காரர்களையும் எதிர்த்து விவசாயிகள் 1872ல் வங்காளத்திலும், 1874ல் மகாராஷ்டிரத்திலும், 1879ல் ஆந்திராவிலும் கிளர்ந்து எழுந்தார்கள்.

 

ன்னொருபுறம் பின்தங்கி நின்ற இந்திய சமூகத்தையும் அதைச் சீர்படுத்த வேண்டிய அவசியத்தையும் உனர்ந்த சிந்தனையாளர்கள் பகுத்தறிவான, மனிதநேயமிக்க கருத்துக்களோடு வெளிப்பட்டனர். சமூக கலாசாரத்தில் விழிப்புணர்வு ஊட்டுபவையாக அவர்களது குரல்கள் இருந்தன.
கணவன் இறந்ததும்- அவனோடு சேர்ந்து அவனோடு சேர்ந்து அவன் மனைவியையும், எரித்துக் கொன்றுவிடும் ‘சதி’ எனப்படும் மூடப்பழக்கத்தை எதிர்த்து ராஜாராம் மோகன்ராய் கடுமையான பிரச்சாரம் செய்தார். சமஸ்கிருதக் கல்லூரிகள் நிறுவப்படுவதை எதிர்த்து மேலைநாடுகளில் கொடுக்கப்படும் விஞ்ஞானக் கல்வியை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் விதவை மறுமணத்திற்கான சட்டரீதியான தடைகளை அப்புறப்படுத்துவதில் முனைந்தார்.

சையது அகமதுகான் மூஸ்லீம்கள் கல்வி கற்பதற்கான அலிகாரில் கல்லூரி துவங்க ஏற்பாடு செய்தார்.

 
1875ல் தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜம் ஆரம்பித்து இந்துமதத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முயற்சி செய்தார். சுவாமி விவேகானந்தரின் உரைகளும், கட்டுரைகளும் இந்திய மக்களுக்கும், இளைஞர்களுக்கும் வீரத்தையும் தேச பக்தியையும் ஏற்படுத்துவதாக இருந்தன.

தமிழில் வள்ளலார், மலையாளத்தில் நாராயன குரு, தெலுங்கில் வீரேசலிங்கம் ஆகியோர் மனிதநேயம் மிக்க சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பினார்கள்.

 

ந்தச் சூழலில்தான் 1885ல் இந்திய தேசீய காங்கிரஸ் உருவானது. இதனை ஆரம்பித்ததில் பெரும்பங்கு வகித்தவன் ஆலன் ஆக்டோவியன் ஹியூம். ஏற்கனவே 1857ல் நடந்த முதல் சுதந்திரப் போரில் இந்தியச் சிப்பாய்கள் வரும் வழியில் குழி தோண்டியவன் இவன்தான்! இவனோடு வெட்டர்ன் பிரபு மற்றும் தாதாபாய் நௌரோஜி என்கிற இந்தியரும் காங்கிரஸை உருவாக்குவதில் சேர்ந்து கொண்டனர்.


புகைந்து கொண்டிருக்கும் சீர்திருத்தக் கருத்துக்களும், கோபாவேசத்தோடு திரண்டு நிற்கும் மக்களின் எழுச்சியும் எங்கே ஒருங்கிணைந்து மீண்டும் ஒரு பெரிய அபாயமாக மாறிவிடுமோ என்கிற பயத்தில் அந்த அழுத்தத்தை மெல்ல வடிய வைக்கும் ஒரு ஏற்பாடுதான் ஆங்கிலேயரே உருவாக்கிக் கொடுத்த இந்திய தேசீய காங்கிரஸ்! தங்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு அமைப்பு இருந்தால் கூட மக்கள் அமைதியாகி விடுவார்கள் என்கிற ஒரு மனோவியல் ரீதியான அணுகுமுறைதான் இது.
அந்த நாளில் காங்கிரஸ் சபையில் ராஜபக்தியை வற்புறுத்திய பின்தான் தேசபக்தி குறித்து பேசுவார்கள். சர்க்காருக்கு விண்ணப்பம் செய்து கொள்வார்கள். அதிஜாக்கிரதையாக மரபு தவறாத இங்கிலீஷில் சின்னச் சின்ன கண்டன தீர்மானங்களையும் எழுதிப் படிப்பார்கள். பிரார்த்தனையும் செய்து கொள்வார்கள்.
எனவே, காங்கிரஸ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே இருந்தது.

 

மகாராஷ்டிரம், வங்காளம் மற்றும் சில பகுதிகளில் ரகசியக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களும், இளைஞர்களும் ஆயுதப் பயிற்சி செய்து வந்ததும் இந்தக் காலத்தில்தான்.


1905 ஜூலை 19ம் தேதி வங்காள கவர்னராக இருந்த கர்ஸன் வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கப் போவதாக அறிவித்தான். வங்காளத்தில் பெருகிவரும் புரட்சிகர நடவடிக்கைகளை பலவீனப்படுத்தவே இப்படியொரு நடவடிக்கை. மக்களின் எதிர்ப்புக்கிடையில் அக்டோபர் 16ல் வங்காளப் பிரிவினையை அரசாங்கம் நடத்தி முடித்தது. அதே நாளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கங்கை நதிக்கரையில் கூடி ரவீந்திரநாத் தாகூர் தலைமையில் கல்கத்தாவில் ஊர்வலம் சென்றனர்.

வங்காளப் பிர்வினையொட்டி சுதேசி இயக்கம் வலுவடைந்தது. நாடெங்கிலும் ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. “அன்னியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்” என்றும் “அதற்காக நாம் எப்பேர்ப்பட்ட தியாகத்தையும் செய்யத் தயாராக வேண்டும்” என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப் பட்டன. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டால் வெளியேற்றப்படுவீர்கள் என மாணவர்கள் அரசாங்கத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டனர். ‘வந்தே மாதரம்’ பாடல் தடை செய்யப்பட்டது. ‘யுகாந்தர்’ பத்திரிகையில் எழுச்சிமிக்க கட்டுரைகள் எழுதிய காரணத்தால் அதன் ஆசிரியர் பூபேந்திரநாத் தத்தாவுக்கு ஒரு வருட தண்டனை விதிக்கப்பட்டது. பின்னாளில் இந்தப் பத்திரிகையோடு தொடர்புடைய யாவரும் ‘யுகாந்தர் கட்சியினர்’ என்றே அறியப்பட்டார்கள்.


காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. மிதவாத அணுகுமுறையை எதிர்த்து திலகர் தலைமையில் ஒரு பகுதியினர் போர்க்குரல் எழுப்பினர். மக்களிடம் அவர்களுக்குப் பேராதரவு பெருகியது. நிர்ப்பந்தம் காரணமாக மிதவாதியாய் இருந்தபோதிலும், ‘முழுச்சுதந்திரம்’ என்பதை உதட்டளவிலாது தாதாபாய் நௌரோஜியும் முன்வைக்க வேண்டியலாயிற்று. இருந்தபோதிலும், 1907ல் நடந்த சூரத் மாநாட்டில் இரு பிரிவினரும் வெளிப்படையாக மோதிக்கொண்டு கைகலப்பில் இறங்கினர். திலகர் மீது செருப்பு வீசப்பட்டது. பாரதியார் திலகரை மறைத்து நின்று காப்பாற்றினார். திலகரும் அவரைச் சார்ந்தவர்களும் தீவீரவாதிக்குழுவினர் என அழைக்கப்பட்டர்கள். அவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறித் தங்களது இயக்கத்தையும், பிரச்சாரத்தையும் தொடர்ந்தார்கள். காங்கிரஸ் மிதவாதிகளின் தலைமையிலேயே இருந்தது.

1908ம் ஆண்டு ஏப்ரல் 13ம் முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்டிரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு மீது இளைஞர்கள் குதிராம் போஸும் பிரபுல்ல சகியும் குண்டு வீசினர். கிங்ஸ்போர்டு தப்பிவிட்டான். போலீஸிடம் பிடிபடாமல் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பிரபுல்ல சகி இறந்து போனார். குதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் 11 காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

மணிக்டாலாவில் உள்ள முராரி புகுர் தோட்டத்தில் வைத்து புரட்சிக்காரர்கள் ஆயுதப் பயிற்சி செய்து வந்தனர். 1908 மே 2ம் நாள் உபேந்திரநாத பண்டோபாத்யா, பரிந்திர குமார் கோஷ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அலிப்பூர் சதிவழக்கில் ஏற்கனவே அவர்கள் தேடப்பட்டு வந்தவர்கள். இவர்களுக்கு முதலில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் ஆரம்பமாகியது. லாலா லஜபதி ராயும், பகத்சிங்கின் மாமா அஜித்சிங்கும் வழி நடத்தினார்கள். இருவரும் கைதுசெய்யப்பட்டு மண்டேலா சிறைக்கு அனுப்ப்பப்பட்டனர். கேசரி என்னும் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக திலகர் 1908 ஜூலை 22ம் தேதி கைது செய்யப்பட்டு மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார். இதனை எதிர்த்து பம்பாயில் தொழிலாளர் ஆறு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர்.

 

பிபின் சந்திர பாலின் தென்னகச் சுற்றுப்பிரயாணத்திற்குப் பிறகு வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரது நடவடிக்கைகள் தீவீரமடைந்திருந்தன. காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்று வந்த பாரதியாரின் கவிதைகளில் தேசப்பற்றும், விடுதலை உணர்வும் உயிர்மூச்சாய் வெளிப்பட்டன.

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் தலைமையில் கோரல் மில் வேலைநிறுத்தம் நடந்தது. இந்தியாவின் முதல் அரசியல் வேலைநிறுத்தம் இது. இரவெல்லாம் மக்கள் தூங்காமல் வந்தே மாதரம் முழக்கமிட்டபடி தெருக்களில் கூட்டம் கூட்டமாய் அலைந்தனர். வெள்ளையருக்கு அரிசி, பால் தர மறுத்ததோடு முடி வெட்டக்கூட மறுத்தனர்.

1907ல் வெள்ளையருக்குப் பொருளாதார ரீதியான போட்டியாக தூத்துக்குடிக்கும், இலங்கைக்குமிடையே ‘சுதேசிக்கப்பல்’ ஓடச்செய்தார் வ.உ.சி. 1908ல் வ.உ.சிக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. மார்ச் 12ம் தேதி வ.உ.சி கைது செய்யப்படுகிறார். திருநெல்வேலி வீரராகவபுரத்தில் பாலத்தில் மக்கள் கூடினர். எம்.டி.டி கல்லூரி மாணவர்களும் இதில் சேர்ந்து கொண்டனர். 5000 பேருக்கு மேல் ஊர்வலமாக புறப்பட்டனர். சி.எம்.எஸ் (இன்றைய சாப்டர் ஸ்கூல்) துணைமுதல்வர் தாக்கப்பட்டார். அரசாங்க மண்ணெண்னெய் கிடங்கு தீ வைக்கப்பட்டது. மூன்றுநாள் எரிந்தது. கலகத்தீயும்தான். மக்களைச் சுட மறுத்தனர் போலீஸார். மறுநாள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் மரணமடைந்தனர். இவர்களில் ஒருவர் பறையர். ஒருவர் முஸ்லீம். ஒருவர் கோவில் பூசார். மற்றொருவர் ரொட்டிக்கடை தொழிலாளி. எல்லாவற்றுக்கும் வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும்தான் காரணம் என்று சொல்லி 1908 ஜூலை 7ம் தேதி வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனையாக 20 ஆண்டுகளும், சிவாவுக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி எழுச்சியை நசுக்கி, மக்களைக் கொல்ல ஆணிப் பிறப்பித்த கலெக்டர் ஆஷை மணியாச்சி ரயில்வே நிலையத்தில் வைத்து வாஞ்சி என்னும் இளைஞர் 1911 ஜூன் 17 சனிக்கிழமை கொன்றார். தன்னையும் சுட்டுக்கொண்டு இறந்தார். 1907 சர்வதேச சோஷலிச மாநாட்டில் லெனின் உரை கேட்டு மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மேடம் ருஸ்தம் பிகாஜி காமாவோடு தொடர்பு கொண்டவர் வாஞ்சி. மேடம் காமா அனுப்பிய துப்பாக்கியால்தான் வாஞ்சி, ஆஷை சுட்டுக் கொன்றார். வாஞ்சிக்கு துப்பாகி சுடும் பயிற்சியை வ.வே.சு.அய்யர் அளித்தார்.


இந்த வழக்கில் முதல் குற்றவாளியாய் தேடப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழுவருடம் சிறைத்தண்டனை கிடைத்தது. இதேபோல நாசிக் மாவட்ட கலெக்டர் ஜாக்சனும் கொல்லப்பட்டான். கொன்ற கணேஷ் தாமோதார், நாராயணன் தேஷ் பாண்டே, கிருஷ்ண கோபால் கார்வே ஆகியோர் 1910 ஏப்ரல் 10ம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.


முந்தைய பகுதிகள்:

வீர சுதந்திரம் வேண்டி - முதல் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - இரண்டாம் பகுதி

வீர சுதந்திரம் வேண்டி - மூன்றாம் பகுதி

 

*

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சார்
    இந்த புக் எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  2. நன்றி நாஞ்சில் நாதம்.
    மொத்தம் 40 புத்தகங்கள் போல என்னிடம் இருக்கின்றன. வேறு எங்கும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. 12 ஆண்டுகளுக்குள் நாங்கள்தான் வெளியிட்டோம். புத்தகம் வேண்டுமானல் எனது இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!