எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் நம் தேசத்தின் வளங்களைச் சொந்தம் கொண்டாடுவதற்கு, இங்கேயே சண்டையிட்டுத் தீர்த்ததை இந்த மண் பார்த்துக் கொண்டு இருந்தது. தந்திரங்களும், பேராசையும் கொண்ட வியாபார உலகில் நேர்மைக்கும், இரக்கத்திற்கும் ஒரு பொட்டுகூட இடமில்லை என்பதை புரிந்து கொண்டது. ராஜாக்கள் வெறும் பகடைக் காய்களாக மாற்றப்பட்டிருந்தார்கள். இருட்டு மேலே கவிந்து கொண்டு இருந்தது. மூன்று பக்கமும் கடல் அலைகள் புலம்பிக்கொண்டு இருந்தன. 1746ல் பிரெஞ்சுக்காரர்கள் சென்னை மீது போர் தொடுத்து ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றிக்கொண்டனர். கர்நாடகத்தின் பழைய நவாப்பைக் கொன்றுவிட்டு பிரெஞ்சுக்காரர்களின் உதவியோடு 1749ல் சந்தாசாகிப் புதிய நவாப் ஆனான். திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒளிந்திருந்த பழைய நவாப்பின் புதல்வன் முகம்மது அலிக்காக இராபர்ட் கிளைவ் ஆங்கிலேயப்படை திரட்டி, பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்து ஆற்காட்டைக் கைப்பற்றினான். வங்காளத்தின் புதிய நவாப்பான சிராஜ் உத்தௌலா 1756ல் ஆங்கிலேயரின் கெடுபிடிகளைப் பொறுக்க முடியாமல்- அவர்களை கல்கத்தாவை விட்டு விரட்டினான். கைதுசெய்யப்பட்ட ஆங்கிலேயர்களை சிராஜ் உத்தௌலா மோசமாக நடத்துவதாக குற்றம் சாட்டி, நவாப்பின் படைத் தளபதியான ஜாபர் அலிகானுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து, ஜூன் 23, 1757, வியாழக்கிழமை இராபர்ட் கிளைவ், சிராஜ் உத்தௌலாவுடன் போர் தொடுத்தான். அந்த பிளாசி யுத்தத்தில் கிளைவ் வெற்றி பெற்றான். ஆங்கிலேயர் இந்த மண்ணில் வேரூன்றுவதற்கு இந்த வெற்றிகள் அடித்தளமிட்டன. இந்தக் காலத்தில்தான் ஆங்கிலேயரையும் அவர்களுக்கு ஆதரவாய் நின்ற சக்திகளையும் எதிர்த்துப் போராடக்கூடிய மனோபாவமும், வைராக்கியமும் சிறு சிறு பொறிகளாய் தெறித்தன. கான்சாகிபு சரித்திரம் அதைச் சொல்லும். மருதநாயகம்பிள்ளை என்னும் இயற்பெயரை ‘யூசுப்கான்’ என்று முஸ்லிமாக மாற்றிக் கொண்டார். இவர்தான் பிறகு கான்சாகிபு என அழைக்கப்பட்டார். சந்தாசாகிபுக்கும், முகம்மது அலிக்கும் நடந்த போரில் கான்சாகிபு முதலில் சந்தாசாகிபுக்கு ஆதரவாக போரிட்டார். பின்பு ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டார். இக்காலத்தில் மதுரை மற்றும் திருநெல்வேலிப் பகுதி பாளையக்காரர்கள் நவாபுக்கு வரிசெலுத்த மறுத்து கலகம் செய்தனர். அதே வேளையில் பாளையக்காரர்கள் கடுமையான கெடுபிடிகளால் மக்களைத் துன்புறுத்தி மக்களிடமிருந்து அன்னியப்பட்டும் போயிருந்தனர். கான்சாகிபின் தீரம் அறிந்த ஆங்கிலேயர் அவரை மதுரைப் பகுதிக்கான அதிகாரியாக்கி அனுப்பி வைத்தனர். கான்சாகிபு பாளையக்காரர்களின் கலகத்தை அடக்கினார். பாளையக்காரர்களிடம் தொடர்ந்து வரி வசூலித்துத் தரும் பொறுப்பு கான்சாகிபிடமே ஒப்படைக்கப்பட்டது. நாளடைவில் கான்சாகிபு ஆங்கிலேயருக்கும், நவாபுக்கும் அடிபணிய மறுத்து அவர்கள் கொடியை எரித்தார். பெரும்படை திரட்டி மதுரையைக் கைப்பற்றினார். 1764ல் வெள்ளையர்கள் அவரை முற்றுகை இட்டனர். துரோகிகளின் சூழ்ச்சியால் காட்டிக் கொடுக்கப்பட்ட கான்சாகிபு பிடிபட்டார். பின்பு தூக்கிலிடப்பட்டார். அவர் இறந்த உடலை கண்ட துண்டமாக்கி, முண்டத்தை மதுரையிலும், தலையை திருச்சியிலும், கைகளை பாளையங்கோட்டையிலும், கால்களை பெரியகுளத்திலும் புதைத்தான் வெள்ளைக்காரன். நெல்கட்டும் செவல் பாளையக்காரனாய் புலித்தேவன் இருந்தார். மதுரையில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து கலகம் செய்தார். மூன்றுமுறை போர் நடந்தது. இறுதியில் வெள்ளையர் பீரங்கிகள் வென்றன. சிதறிக்கிடக்கும் நெல்கட்டும் செவல் கோட்டையை இன்றும் காணலாம். ஒண்டிவீரன் என்று அழைக்கப்படும் ஒண்டிப்பகடை செருப்புத் தைக்கும் தொழிலாளி. புலித்தேவனின் அந்தரங்க ஒற்றன். பூட்ஸ் தைக்கும் வேலையாக வெள்ளையர் பாசறையில் புகுந்து செய்தி திரட்டுவார். குதிரை லாயத்தில் ஒளிந்திருந்தபோது இவரது கை துண்டிக்கப்பட்டது. அது முதல் ஒண்டி வீரன் என்னும் பெயர் பெற்றார். வீரன் அழகுமுத்து எட்டையபுரம் மன்னனின் படைத்தளபதி. கான்சாகிபு வெள்ளையர் கூட்டு இருந்தபோது எட்டப்ப நாயக்கர் பதவியிலிருந்து நீக்க்ப்பட்டு குருமலை துரைநாயக்கர் முடிசூட்டப்பட்டார். எட்டையபுரம் மன்னன் பெருநாழிக்காட்டுக்குள் தலைமறைவானார். வீரன் அழகுமுத்து படைதிரட்டி எட்டையபுரம் நோக்கி விரைந்தார். பெத்தாநாயக்கனூர் கோட்டையில் பெரும் யுத்தம் மூண்டது. கோட்டை சரிந்தது. அழகுமுத்து கைதானார். அழகுமுத்துவைக் கட்டி பீரங்கி வாயில் வைத்துச் சுட்டனர். உடல் சிதறி வீழ்ந்தார் அழகுமுத்து.
வங்காளத்திலும் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிர்ப்புத் தோன்றியது. ஏற்கனவே இராபர்ட் கிளைவ் உதவியோடு நவாபான மீர்காசிம், பிறகு மோசமான அனுபவங்களை சந்தித்தார். கம்பெனியின் ஏஜெண்டுகள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் நெசவாளிகளிடமிருந்து பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய விலையைக் கொடுப்பதில்லை. கொடுத்தாலும் பகுதி பகுதியாய் கொடுத்துத் துன்புறுத்தினர். கம்பெனிக்கு மட்டும் வரிவிலக்கு கொடுக்கப்பட்டு வந்ததால் உள்ளூர் வியாபாரிகள் கம்பெனியோடு போட்டி போட முடியாமல் திண்றினார்கள். எனவே மீர்காசிம் 1763ல் வரிவிலக்கு எல்லோருக்குமானதாக அறிவித்தார். கம்பெனியரால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 1764ல் பக்சரியில் நடந்த போரில் மிர்காசிமும் அவரது கூட்டாளிகளும், தோற்றுப்போயினர். வங்காளக் கவர்னராக இருந்த கிளைவ் 1765ல் இரண்டாம் ஷா அலாம் மன்னனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன்படி மன்னனுக்கு கம்பெனி வருடத்திற்கு 27 லட்சம் ருபாய் கொடுப்பது எனவும், அதற்குப் பதிலாக வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பிரதேசங்களின் அனைத்துவகையான வரிகளையும் வசூலிப்பதற்கான உரிமையை கம்பெனி எடுத்துக்கொள்வது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் பொருளாதாரம் மற்றும் நிர்வாக அதிகாரங்களை உறிஞ்சிக்கொண்டார்கள்.. நிலங்களுக்குத் தாறுமாறான வரி விதிக்கப்பட, விவசாயமும், மக்களும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டனர். நெற்களஞ்சியமான வங்காளம் வெறும் தரையானது. பட்டு இழைகள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதியாகி, பட்டுப்பொருள்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆயின. நெசவாளர்கள் வேலை இழந்தார்கள். 1770. வங்காளத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், கைத் தொழிலாளார்களும், சன்னியாசிகளும், பிச்சைக்காரர்களும் பல சமயங்களில் இணைந்தும், தனித்தனியாகவும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்தனர். ப்வானிபதக், தேபி சௌத்ராணி, மஞ்சுஷா ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். குட்லேண்ட் என்னும் கலெக்டரால் நியமிக்கப்பட்ட தேபிசின்கா என்னும் கொடுமையான வரி வசூலிப்பவனை எதிர்த்து ரங்பூர் பகுதி விவசாயிகள் தீவீரத்தோடு போராடினார்கள். 1783 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பரவிய இந்த சிறுபுரட்சி இரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். விவசாயிகள் இந்துக்களும் மூஸ்லீம்களுமாய் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் நின்றனர். திர்ஜி நாராயணன், கேனா சர்க்கார், நூருல்தீன், இஸ்ரேல்கான் ஆகியோர் இவர்களில் பிரசித்தி பெற்றவர்கள். வங்காளம், பீகார் எல்லைப்பகுதி சந்தால் ஆதிவாசி மக்கள் அந்தக் காடுகளை சுதந்திரமாக அனுபவித்து வந்தனர். அந்த உரிமை வெள்ளையரால் பிடுங்கப்பட்டது. கோபமடைந்த சந்தால் மக்கள் எதிர்த்து நின்றார்கள். பாபா தில்கா மஜி தலைமை தாங்கினார். 1784ல் பெரிய அளவில் பிரிட்டிஷ் சேனை காட்டை வளைத்தது. உறுதியோடு நடந்த போராட்டத்தில் நிறைய சந்தால் ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர். காயமடைந்த நிலையில் பிடிபட்ட தில்கா குதிரை வாலில் கட்டப்பட்டு பகல்பூர் செல்லும் வழிநெடுக இழுத்துச் செல்லப்பட்டார். தசைகளெல்லாம் கிழித்தெறியப்பட்ட தில்காவை தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.
தங்கள் கொடுங்கரங்களை தேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் வெள்ளையர் நீட்டி வந்த சமயத்தில் மைசூர் சுல்தானாக இருந்த ஹைதர் அலியின் புதல்வர் திப்பு சுல்தான் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து இருந்தார். பிரான்ஸ் நாட்டுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. துருக்கி சுல்தானின் உதவியைப் பெற்றார். ஆயுத உற்பட்தி செய்ததோடு, சொந்தக் கப்பலும் வைத்திருந்தார். தொழிற்சாலைகள் அமைக்க ஆரம்பித்தார். ஆங்கிலேயரோடு தொடர்ந்து பல போர்கள் நடத்தினார். 1799 ஏப்ரல் 28ல் நடந்த போரில் திப்பு கொல்லப்பட்டார். திப்புவின் வாரிசுகளான குழந்தைகள் கைதாகி வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். திருநெல்வேலிப்பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு வரி கொடுப்பதில்லை என அறிவித்தார். 1798ல் மேஜர் பானர்மென் தலைமையில் பெரும்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டுத் தகர்த்தது. சுந்தரலிங்கமும், வெள்ளையத்தேவனும் கட்டபொம்மனின் முக்கிய தளபதிகளாயிருந்தனர். கட்டபொம்மன் தப்பினார். புதுக்கோட்டை மன்னரின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு 1799 அக்டோபர் 16ம் நாள் புதன்கிழமை கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
கட்டபொம்மனின் ஆதரவாளர்கள் தலைமறைவாகி 1801ல் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை விடுவித்தனர். திரும்பவும் ஊமைத்துரை ஏழேநாளில் கோட்டையை எழுப்பி ஆங்கிலேயரை எதிர்த்தான். மீண்டும் கோட்டை சின்னாபின்னமாக்கப்பட்டது. த்ப்பிய ஊமைத்துரை மருது சகோதரர் ஆதரவுடன் மீண்டும் மேலூர், நத்தம், திருப்பத்தூர் பகுதிகளில் ஆங்கிலேயரை எதிர்த்தார். இறுதியாக 1801 செப்டம்பர் மாதம் திண்டுக்கல்லில் நடந்த போரில் சிறைப்படுத்தப்பட்டு, பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி வெள்ளையருக்கு கிஸ்தி கட்ட மறுத்தார். வெள்ளையர் கப்பலுக்கு சுங்க வரி போட்டதால், ஆங்கிலேயர் படை முற்றுகையிட்டது. சேதுபதி மன்னர் சிறைப்பட்டார். 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு 1809 ஜனவரி 24ல் மாண்டார். இராமநாதபுரம் சீமையில் முக்குளம் கிராமத்தில் மொக்கை பழனி சேர்வயின் மகன்களான சின்ன மருதுவும், பெரிய மருதுவும் சிவகங்கை மன்னனிடம் அந்தரங்கப் பணியாளர்களாக இருந்தனர். 1780ல் சிவகங்கை ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். அவர்களது நடவடிக்கையில் ஆங்கிலேய எதிர்ப்பு இருந்தது. 1801ல் வெள்ளையர்களோடு போர் ஏற்பட்டது. அக்டோபர் 24ல் தூக்கிலிடப்பட்டனர். 1806 ஜூலை 10ம் நாள் வியாழன் நள்ளிரவு இரண்டு மணியளவில் வேலூர் கோட்டையில் 1800க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் சேர்ந்து கோட்டையைக் கைப்பற்றினர், 9 வெள்ளை அதிகாரிகலையும், 100 வெள்ளைச் சிப்பாய்களையும் கொன்றனர். குறிப்பிடத்தக்க விஷயம் ஒரு ஆங்கிலேயக் குழந்தை கூட கொல்லப்படவில்லை. ஒரு ஆங்கிலேயப் பெண்கூட சீரழிக்கப்படவில்லை. சிப்பாய்கள் திப்பு சுல்தானின் மகன் மைதீனைத் தங்கள் தலைவர் ஆக்கினர். இதன் தொடர்ச்சியாக பாளையங் கோட்டையிலும் கலம் மூண்டது. ஒரேநாளில் ஒடுக்கப்பட்டு 800 இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திப்புவின் வாரிசுகள் கல்கத்தாவுக்கு கொண்டு போய் சிறை வைக்கப்பட்டனர். ஆங்கிலேயர் திருவாங்கூர் சமஸ்தானத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். வேலுத்தம்பி பின்னால் மக்கள் திரண்டு எதிர்த்தார்கள். தாக்குப் பிடிக்க முடியாமல் வேலுத்தம்பி சரணடைவது போல பாவனை செய்து பிரிட்டிஷ் தளபதியைக் கொல்ல முயன்றார். பலிக்கவில்லை. கொல்லத்திற்குத் தப்பிச் சென்றார். புதிய படையொன்றை அங்கு அமைக்க முயன்றார். நீடித்த சண்டையின் இறுதியில் திருவனந்தபுரம், ஆங்கிலேயரால் பீடிக்கப்பட்டது. வேலுத்தம்பி காயமடைந்து பக்கத்தில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் சென்று தங்கினார். கொஞ்சநாள் கழித்து அவரது உயிரற்ற உடல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடாகாவில் இருந்த சிற்றரசான கிட்டூர் மீதும் வெள்ளையரின் கொடூரமான கண்கள் விழுந்தன. இராணி சென்னம்மா ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தானே குதிரை ஏறி படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். போரில் தோல்வியுற்று 1824 டிசம்பரில் கைதானார். தன்னை விடுவிக்க எப்படியும் தன் நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து வருவார்கள் என்று ஐந்தாண்டுகள் கனவுகளோடு இருந்து, சிறைக்குள்ளேயே 1829 பிப்ரவரியில் இறந்து போனார். அரசியுடன் கைதான சங்கொலி ராயண்ணா விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு ஏராளமான மக்கள் ஆதரவு இருந்தது. பம்பாய்க்கும், தார்வாருக்கும் இடையில் இருந்த கடிதப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தார். 1830 ஏப்ரலில் ராயண்ணா தூக்கிலிடப்பட்டார். 1757க்குப் பிறகு நூறு ஆண்டுகளுக்குள் இது மாதிரி இந்தியாவில் 77 பெரும் கிளர்ச்சி ரத்தம் சொட்டச்சொட்ட ப்திவாகி இருக்கின்றன. வரலாற்றில் பதிவாகாத எண்ணற்ற சிறு சிறு எழுச்சிகளும் உண்டு. 1818ல் மராட்டியத்தையும், 1843ல் ராஜபுதனத்தையும், 1849ல் பஞ்சாபையும் வெள்ளையர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்திருந்தனர். 1831ல் தோன்றிய ‘கோல்’ ஆதிவாசிகளின் எழுச்சியை 5000 சதுரமைல் பரப்பளவுக்கு காட்டையழித்து ஆங்கிலேயர் அடக்கி இருந்தனர். 1855ல் சிதோ மற்றும் கானு ஆகியோர் தலைமையில் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றியே தீருவது என்ற சபதத்தோடு வீறுகொண்டு எழுந்த எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட சந்தால் எழுச்சி கொடூரமான முறையில் பிரிட்டிஷ் ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஏறத்தாழ இந்தியா முழுவதையும் அடிமைப்படுத்தியிருந்தனர்.
(சுவடுகள் நீள்கின்றன.....) |
பதிவின் நீளம் கூடுகிறது என்று வரலாற்றின் பதிவில் வார்த்தைகளை சுருக்க வேண்டாம்.உங்கள் எழுத்தின் ஆளுமையும்,இந்திய பேரரசின் வீர வரலாறும் தொடர்ந்து படிக்க தூண்டத்தான் செய்கிறதே ஒழியே களைப்படைய வைக்கவில்லை.
பதிலளிநீக்குஇது போன்ற பதிவுகள் மிகவும் அவசியம்.வாழ்த்துக்கள் அண்ணா....
நிச்சயம் குறைக்க மாட்டேன் அண்டோ. நன்றி.
பதிலளிநீக்குஉயர்மட்ட படைப்பு. புகழ்வதற்கு கூட எனக்கு ஞானம் இல்லை. ஆயினும் வயதில் பெரியவள் என்ற சுதந்திரத்தில் வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குவாழ்க.