இன்று வந்தவள்

சாவடியின் அந்தப் பெரிய ஆல மரத்துக்கடியில் தலையை மண்ணில் கிடத்தி ஆழ்ந்த லயிப்பில் இருந்த கருப்பு சட்டென்று நிமிர்ந்து ஊருக்கு வந்து சேரும் சரளைக்கல் சாலையை  கூர்மையாய் பார்த்தது. காதுகள் விறைத்துக் கொள்ள, அருகில் இருந்த நடமாட்டங்கள், சத்தங்கள் எல்லாம் தாண்டி புளியமரங்களாய் தெரியும் தூரத்து வளைவில் தனது புலன்களை செலுத்தி தயாரானது. கண்களில் மையமிட்டிருந்த மொத்த ஆவலும் ஒரு சிறு இரைப்போடு உடல் முழுவதும் பரவ வாலில் இதயம் கிடந்து துடித்தது. வேட்டியும் துண்டுமான உருவம் புளிய மரங்களடியில் வந்து கொண்டிருந்தது. உவ்வென்று திமிறிய கருப்பன், கால்கள் புழுதி கிளப்ப சிட்டாக பறந்து போனது. அந்த திடீர்ப் பாய்ச்சலில் லேசாக பதறிய நவ்வாப்பழப் பாட்டி "அதானப் பாத்தேன்.... மாசாணம் வந்துட்டாம் போலுக்கு" என்று முணுமுணுத்தாள்.

நெருங்க நெருங்க வேகம் கூடியது. கட்டுப்படுத்த முடியாமல் முட்டித்தள்ளுகிற மாதிரி சென்று மாசாணத்தின் காலை உரசியபடி கடந்து , மின்னலாய்  திரும்பி அவன் காலை நக்கியது. நீர் இறைக்கிற துலாவின் சப்தங்களோடு முகர்ந்தது. கால்கள் எழுப்பி அவனது கைகளை நக்கியது. "ம்..ம்..கருப்பா" என அடிக்கிற பாவனை செய்தான் மாசாணம். அந்தச் செல்லத்தில் கண்கூசி  தலை சாய்த்து சுற்றி சுற்றி வந்தது. அந்தப் பெண் அழுக்கு மூட்டையோடு மாசாணத்தின் அருகில் இருந்து ஒதுங்கி நின்றாள். "ஏலக் கருப்பா...இது யார் தெரியுமா" அவளைக் கைகாட்டினான். கருப்பன் ஒருதடவை அவளைப் பார்த்துவிட்டு அவன் கால்களுக்குள் அலைபாய்ந்தது. அவன் நடக்க ஆரம்பித்ததும் கருப்பன் முன்னுக்கு ஓடியது. நின்று திரும்பிப் பார்த்து மேலும் இரண்டடி பாய்ந்தவாறு மிகுந்த உற்சாகத்தோடு ஊருக்குள் அழைத்துக் கொண்டு வந்தது.

சாவடியில் எல்லோரும் அதிசயமாய் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவனைப் போலவே அந்தப் பெண்ணும் பரட்டைத்தலையும், அழுக்காகவும் இருந்தாள். கொஞ்சம் உயரம். தாடை, தோள் எலும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு, வதங்கி ஒடிசலாய் இருந்தவளுக்கு சம்பந்தமில்லாமல் மார்புகள் இருந்தன. கண்களில் பூழை. பெட்டிக்கடையில் அவன் சர்பத் வாங்கிக் கொடுக்கும் போது தரையில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் டம்ளர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரே மூச்சில் சர்பத் குடித்து வாயைத் துடைத்துக் கொண்டாள். கருப்பன் அங்குமிங்குமாய் சுற்றி சுற்றி சந்தோஷம் கொண்டாடிக் கொண்டு இருந்தது.

"ஏலே மாசாணம் யார்ல இவ" பூவலிங்கம்தான் லேசான கனைப்போடு கேட்டான். மற்றவர்கள் பதிலுக்கு  காத்திருந்தார்கள். அவள் அவனைப் பார்த்தாள். மாசாணம் கீழே உட்கார்ந்து தோளில் கிடந்த மூட்டையை பிரிக்க, கருப்பன் தொணதொணவென்றிருந்தது. "இருல..." "ம்..பாத்தியா" "தர்றேன்ல" குரல்கள் கொடுத்தபடி சுருட்டி வைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பையை அவிழ்த்தான். "ம்...இந்தா குரங்கணியம்மன் கோயில் கறிச்சோறு" கீழே வைக்க, எதோ சண்டைக்கு போற மாதிரி தாவி அவுக் அவுக்கென்று சாப்பிட ஆரம்பித்தது. ஆலமரத்திலிருந்து இரண்டு  காகங்கள் கரைந்தபடி டீக்கடைக் கூரையில் வந்து உட்கார்ந்து நோட்டம் பார்த்தன. "ஏலே..மாசாணம் நாங்கேட்டிட்டுருக்கேன்ல.. யார்ல இவ?' கொஞ்சம் கடுமையாய் பூவலிங்கம் அதட்டினான். மாசாணம் அவனைத் திரும்பி பார்த்தான். உணர்ச்சியற்ற அந்தப்பார்வையும், முகமும் மிரட்டியிருக்க வேண்டும். தினமும் வாசலில் வந்து நின்று "யம்மோவ்...நா மாசாணம் வந்திருக்கேன்" என்று குரல் கொடுத்தவன் இவன் இல்லையோ என்றிருந்தது. ஐந்து வரைக்கும் தன்னோடு படித்த பழக்கத்தையும் தாண்டிய பயம் இப்போது பூவலிங்கத்திற்கும் லேசாய் தொத்திக்கொண்டிருந்தது. மறைத்துக்கொண்டு "ஒக்கால ஓலி. பதில் சொல்லாமப் பாக்குறாம் பாரு" என்று முறைத்தான். 'உடப்பா, மாசாணத்துக்கும் குடும்பம் பன்னணும்னு ஆச வந்துருக்கு. எத்தன நாள்தான் சாமியாராவே இருப்பான்' என்று டிரக்கர் டிரைவர் அம்புரோஸ் கிண்டலோடு சமாதானப்படுத்தினார். எல்லோரும் சொல்ல நினைத்ததை மாசாணத்துக்கு தெரிவித்துவிட்டதாய் தன்னையும் சமாதானப்படுத்திக்கொண்டார். எலும்புத் துண்டோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த கருப்பனை மாசாணம் பார்த்தவாறு சிரித்துக் கொண்டான். "வாடா, கருப்பா நம்ம வீட்டுக்கு போவோம்" என்று சொல்லியபடி நடக்க ஆரம்பித்தான்.

தெரு நாய்கள் வாள் வாளென்று குரைத்தும், கொஞ்சம் தூரம் பின்னால் வந்தும் அடங்கின. கருப்பன் அவைகளை உவ்வென்று ஊன் தெரிய உறுமி முறைத்தது. இடையிடையே வாலாட்டிக்கொண்டு மாசாணத்தின் கால்களை உராய்ந்து கொண்டது. அதற்கு  பெருமை அடங்கவில்லை. இசக்கியம்மன் கோயில் பக்கத்தில் அந்த பெரிய வேப்பமரத்துக்கடியில் பேன் பார்த்துக்கொண்டும், பழக்கம் விட்டுக்கொண்டும் இருந்த பெண்மக்கள் சட்டென்று அமைதியானார்கள். பிறகு குசுகுசுவென்று பேசினார்கள். மைனாக்களின் சத்தங்கள் மட்டும் விடாமல் மரத்தில் கேட்டுக்கொண்டிருந்தன. ஒலைத்தட்டிகளுக்குப் பின்னால் யாரெல்லாமோ ரகசியமாய் சிரித்த மாதிரி இருந்தது. மாசாணம் தாடியை நீவிக்கொண்டு ஓரக்கண்ணால் கூட வந்தவளைப் பார்த்தாள். அவள் கருப்பனையே பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள். மைனாக்கள் தின்று உதிர்த்த வேப்பங்கொட்டை ஒன்று அவள் பரட்டைத்தலையில் சிக்கிக்கொண்டது. அதைத் தட்டி விட கையை நீட்டினான்.  சிரித்துக்கொண்டே அவன் கையை அவள் தட்டி விட்டாள். மேலத்தெரு வளைவில் சைக்கிளில் வந்த மைக்செட்டுக்காரன் கெதலைமுத்து அடக்கமாட்டாமல் "இதப் பாருடா" என்று கத்தினான். திரும்பவும் மாசாணம் கைநீட்டி வேப்பங்கொட்டையை தட்டிவிடப் போனான். அதைப் பார்த்த கருப்பன் அவளை உவ்வென்று முறைத்தது. "அடச் சீ.." என்று அவள் அதட்டினாள். மாசாணமும் "ஏல..சும்மாயிருல" என்று கையை ஒங்கி செல்லமாக அடிக்கப் போனான். பெரிய வளவுக்காரர் கிணற்றடியில் தேங்கியிருந்த தண்ணீரை பின்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகள் இரண்டு நக்கிக் கொண்டிருந்தன. ஊர்க்கோடியை நெருங்கிவிட்டிருந்தார்கள்.

தேரிக்காடு செல்லும் பாதையில் அவனது குடிசை தனியே இருந்தது. முன்னால் ஒரு பெரிய பூவரச மரம் அடர்ந்து நின்றிருந்தது. தரையோடு வளைந்து பிறகு உயர்ந்து அலையும் அதன் கிளைகளில், பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள்.  பொந்துகளாய் வெடித்துப் போயிருக்கும் செதில் கிளம்பிய அந்த வயதான மரத்தின் தாழ்ந்த கிளைகளில் உட்கார்ந்து இலையை சுருட்டி "பீப்பீ...பீப்பீ.." என்று ஊதிக்கொண்டிருப்பார்கள். மஞ்சள் மஞ்சளாய் குலுங்கிக் கிடக்கும் பூக்களைப் பறித்து தண்ணீரில் பிய்த்துப் போட்டு, உடம்பெல்லாம் அந்த மஞ்சள் தண்ணீரைச் சிந்திக்கொண்டு  வேப்பிலை ஏந்தி சாமியாடி குறி சொல்வார்கள். மாசாணம் அந்தக் குடிசையின் தாவாரத்தில் இருக்கும் கயிற்றுக்கட்டில்லில் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ அந்தப் பக்கமே அண்ட மாட்டார்கள். கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு, திரிதிரியாய் சடை தொங்க, உடம்பெல்லாம் விபூதி பூசிக்கொண்டு, பெண்கள் உடுக்கிற சட்டை பாவாடை மாதிரி, ஒரு ஜிகினா உடுப்போடு வந்து ஆங்காரக் குரலில் "நா ஆறுமுகமங்கலம் சாமி சுடலமாடன் வந்திருக்கேன்" என்று வீட்டு வாசலில் கையில் திருவோடோடு வந்து நிற்கும் அவனைப் பார்த்து வீறிட்டு அலறிய குழந்தைகள் நிறைய அந்த ஊரில் உண்டு.

மாசாணம் அவனது மூட்டைகளை போய் திண்ணையில் வைத்தான். அந்தப் பெண் விறுவிறுவென்று போய் பையா அல்லது மூட்டையா என்று அறியமுடியாத அவளது சுமையையும் வைத்துவிட்டு, உட்கார்ந்து கைகளை உயர்த்தி நெட்டி முறித்துக் கொண்டாள். சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். கருப்பன் அங்குமிங்கும் மூச்சுத் தெறிக்க ஓடி அந்தக் கட்டிலில் கிடந்த பழைய துணிகளில் படுத்து விளையாட ஆரம்பித்தது. மாசாணம் துரத்தினான். கதவைத் திறந்து உள்ளே சென்றான். விளக்குமாற்றை எடுத்து பெருக்க ஆரம்பித்தான். புகை புகையாய் உள்ளே இருந்து தூசி வாசல் வழியே பெருகியது. குடங்களை எடுத்துக்கொண்டு பெரிய வளவுக்காரர் கிணற்றடிக்குச் சென்றான். அவள் அப்படியே தனது சுமையை தலைக்கு வைத்து தூங்கிப் போனாள். மாசாணத்துக்கு நிறைய வேலைகள் இருந்தன. தேரிக்காட்டில் இருந்து முள் அடித்து விறகுச்சுமையோடு சென்றுகொண்டிருந்த செல்லக்காள், "இதென்ன ஒருநாளும் இல்லாத திருநாளா" என்று படலையை விலக்கி மாசாணத்தைப் பார்த்தாள். அவன் வேர்க்க விறுவிறுக்க தரையை கழுவி விட்டுக் கொண்டிருந்தான்.

"யாருல இவ"

"பாத்தா எப்படித் தெரியுது?"

"ரொம்ப வௌக்கமாத் தெரியுது. எந்த ஊரு இவளுக்கு?"

"தெரியாது. குரங்கணியம்மங் கோயில்லப் பாத்தேன். ரெண்டு நா கூடவே இருந்தா. வர்றியான்னேன். வந்துட்டா"

"எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கே.."

"அடப் போக்கா.... மத்தியானம் சாப்பாட்டுக்கு எதாவது கிடைக்குமா"

"ஆமா... இவிய பவுசுக்கு கலியாணச் சாப்பாடு வேற போட வேண்டியதுதான்" சொல்லிக்கொண்டே படலையை மூடி விட்டுச் செல்ல ஆரம்பித்தாள் செல்லக்காள். "சாகுற வரைக்கும் இவனுக்கு ஒரு கலியாணம் பண்ணிரனும்னு சித்திரவள்ளியக்கா எவ்வளவோ அழுது பாத்தாங்க. தெருத் தெருவா ஊர் ஊரா அலைஞ்சவனுக்கு அப்பல்லாம் புத்தி வரல்ல. இன்னிக்கு எவளவோ ஒருத்தியைக் கூட்டி வந்து நிக்கான். பெத்த தாய அந்தப் பாடு படுத்திட்டு பேசுற பேச்சப் பாரு. இப்ப எந்தச் சாமி வந்து இவன் மேல வந்து நின்னு ஆடுதுன்னு தெரில்ல...." காற்றில் கரைந்து போன அவள் குரலின் திசையில் கழுத்தைத் திருப்பி காதை உயர்த்தி உட்கார்ந்து கொண்டிருந்தது நாய். 'இதற்கு உன் பதில் என்ன' என்பதாய் மாசாணத்தைத் திரும்பி பார்த்தது. அவன் அவ்வப்போது தூங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி அந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

"உள்ளே வந்து கட்டிலில் படுத்துக்க.... திண்ணையைக் கழுவணும்" என்று அவளை மாசாணம் எழுப்பினான். எரிச்சலும், சோம்பலுமாய் தள்ளாடி அவள் உள்ளே சென்றாள். புருவத்தை உயர்த்தியபடி கருப்பனும் வீட்டிற்குள் நுழைந்து அந்த நார்க்கட்டிலுக்கு கீழே சுதந்திரமாக படுத்துக் கொண்டது. ச்சீ... நாயே  என்று மாசாணம் அதை விரட்டினான். அதிர்ச்சியோடு வாலை சுருட்டிக்கொண்டு அவனருகே அருகே வந்தது. கையில் கம்பை எடுத்து விரட்டினான். வீட்டிற்கு வெளியே சென்று வான் நோக்கி தலையைத் தூக்கி ஊளையிட்டது கருப்பன்.

*

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. 2009 ஜீலை மாதத்திற்கான சிறந்த தமிழ் வலைப்பதிவுக்கான விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். விருதுக்கான இமேஜை http://tamilblogawardsinternational.blogspot.com/2009/07/2009.html என்ற லிங்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. கதாபாத்திரங்களை கண்முன் தோன்றவைத்த இயல்பான நடை.

    பதிலளிநீக்கு
  3. ஜூலை இரண்டாயிரத்துஒன்பது க்கான சிறந்த வலைப்பதிவு விருது உங்களுக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. அருமையா இருந்துது கதை...!! நல்ல விளக்கம்....!!! அழகான தெளிவு....... !!

    பதிலளிநீக்கு
  5. சொற்களின் அழுத்தமும் அதைக்கொண்டு அழகாகவும் வலிமையாகவும் விவரித்து செல்லும் தடங்கலற்ற எண்ண ஓட்டமும் அற்புதம். கருப்பன் இயல்பாக உயிரோட்டமாக காண்பிக்கப்படுவது கண்களை விரியசெய்கிறது. மொத்தத்தில் என்னை கவர்ந்த உயிரோட்டமான சிறுகதை. விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ரசித்தேன்..கண்முன் காட்சிகள் விரியும் நடை! அழகான சொற்சித்திரம்!

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான எழுத்து. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. மண்குதிரை!
    தமிழ் வலைப்பதிவு விருதுகள்!
    துபாய் ராஜா!
    ஜவர்லால்!
    தமிழ் வெங்கட்!
    லவ் டேல் மேடி!
    கக்கு மாணிக்கம்!
    சந்தன்முல்லை!
    சுகிர்தா!

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஐயோ!மாதவன்.இது அபாரம்.சிலாகிக்க நேரமில்லாது இருக்கு.கட்டிக்கிரனும் போல் இருக்கு என் மாது!

    பதிலளிநீக்கு
  10. Ithu Meelpathiva?
    Munpee padithirukkiren enge ninaivillai? aanal tholamai thedum manitha subaavam arumaiyaai vilakkapatta sarala nadai
    saamnyan

    பதிலளிநீக்கு
  11. ராகவன்!
    ரொம்ப இயல்பாய் மாது என்றது பிடித்திருக்கிறது. உங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

    saamnyan!
    மீள் பதிவு இல்லீங்க.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அழகான நடை.
    உங்கள் எழுத்தோட்டம் ரசிக்கத் தூண்டுகிறது.

    இன்னும் கலாய்ங்கோ...!

    பதிலளிநீக்கு
  13. தங்கள் விபரிப்பு அருமை!
    கருப்பன் என் காலைச் சுற்றியது போல் இருந்தது.
    மிகரசித்தேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!