எனது முதல் சிறுகதை!

இருபத்து நான்கு வருஷங்கள் ஆகிவிட்டன இந்தக் கதையை எழுதி. அப்போது எனக்கு இருபத்து மூன்று வயது. செம்மலர் பத்திரிகையில் அச்சில் பார்த்ததும் வந்த சந்தோஷம் இருக்கிறதே.... ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் நெஞ்சு முட்ட சந்தோஷம் நிரம்புகிற அந்த அற்புதத்தை நானும் அனுபவித்தேன். கொஞ்ச நாளைக்கு செம்மலரும் கையுமாக மிதந்து கொண்டு இருந்தேன்.  எத்தனை தடவை திரும்பத் திரும்பப் படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. அந்த மாதத்தில் தமிழ் பத்திரிகைகளில் வந்த சிறந்த சிறுகதையாக ’மண்குடத்’தை இலக்கியச் சிந்தனை தேர்தெடுத்து அறிவித்தபோது பறக்க ஆரம்பித்தேன். பாவண்னனின்  ‘முள்’ளும், வண்ணதாசனின் ‘தனுமை’யும் வந்திருந்த, அந்த வருடம் இலக்கியச் சிந்தனையினால் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் மண்குடமும் இடம்பெற்றிருந்தது. சுஜாதா தனது கணையாழியின் கடைசிப் பக்கத்தில் இந்தக் கதையைப் பாராட்டி எழுதியிருந்தார். ரொம்ப நாளைக்கு அதை வைத்திருந்தேன். தொடர்ந்து கதைகள் எழுதினேன்.

சில வருடங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவீரமாக ஈடுபட எழுத்தும், வாசிப்பும் எப்போதாவது வாய்க்கிற விஷயங்களாகி விட்டன. இப்போது இலக்கியச்சிந்தனை வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பும் இல்லை. அந்தக் கணையாழியும் இல்லை. தொலைத்துவிட்டேன். ஆனால், இந்தச் சிறுகதையொட்டி எழும்பும் நினைவுகள் பத்திரமாக இருக்கின்றன. ஒரு இரவில் வைப்பாறு மணலில் வைத்து “இது என்ன கதை... சின்ன வயசுல, பனைமரம், மாடு எல்லாம் தன் வரலாறு கூறுவதைப் பள்ளிக்கூடத்தில் எழுதியிருப்பது போல இருக்கிறது...” என்று எழுத்தாளர் கோணங்கி சொன்னது உட்பட. எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்தக் கதையைப் படித்துவிட்டு கவிதை போலிருக்கிறது எனச் சொல்லி, முடிவை மட்டும் ரசிக்க முடியவில்லை என்று சொன்னதும் என் காதருகே கேட்டுக்கோண்டே இருக்கிறது....எல்லாமே சுவையானவை.

 

மண்குடம்

 

இப்போல்லாம் அனேகமா நா கவுந்தே கெடக்கேன். செம்பகம் என்ன அப்படித்தான் வச்சிருக்கா. அவ மேல கொஞ்சங்கூட கோபமில்ல. அவதான் என்ன செய்வா?. பாவம் அவ படுற கஷ்டத்தப் பாக்காம கண்ண மூடிட்டு கெடக்குறதும் ஒரு வகைல வசதிதான். மனச எப்படி மூடிக்கிட. மனசாட்சிய எப்படி மறைக்க. எனக்குள்ள ஒரே வெப்பக்காத்து. ஒலகஞ்சுருங்கி இருண்டு போய்க் கெடக்கு. புழுங்கிப் போனேன். இந்த வீட்ல குடிக்கத் தண்ணியில்ல... குளிக்கத் தண்ணியில்ல... பத்துப்பாத்திரம் தேய்க்கத் தண்னியில்ல... சோறு பொங்க, ஆத்திர அவசரத்துக்கு கால அலம்ப.... எதுக்குமே தண்ணியில்ல. ரொம்ப ஒதவாக்கரையாய்ட்டேன். கைகால்லாம் சூம்பிப் போயி வயிறு மட்டும் வீங்கித் தெரிற பலவீனமான பையனப் போல இருக்கேன். வீட்டுக்குள்ள அடைஞ்சு போய்க் கெடக்கேன்.

முன்னாலெல்லாம் எப்பிடி இருப்பேன். எப்பவும் நெரம்பி வழிஞ்சு குளிச்சு வந்த கன்னிப் பொண்ணுமாரி இருப்பேன். நெறமாசக் கர்ப்பிணியாட்டம் தாய்மையோட விழிப்பேன். அதுலயும் செம்பகத்தோட இடுப்புல உக்காந்துட்டா போதும்.... சின்னக் கொழந்தையாட்டம் மழலப் பேசிட்டு உற்சாகமா சிரிப்பேன்.

நா உக்கார்ற் அவ இடுப்புத்தான் எனக்கு இந்த ஒலகத்துலயே புடிச்ச இடம். எனக்குன்னே செஞ்சாப்பல உள்வாங்கி வளைஞ்சு இருக்கும். பூக்கள்ளாஞ் சேந்து என்னயத் தூக்கிட்டு போறாப்பல இருக்கும். அவ அப்பிடியே ஆசையா ஏங்கழுத்த எடது கையால கட்டி அணைச்சுக்கிடுவா. அக்குள் பக்கத்துல வர்ற வேர்வை வாசனைல சொக்கி கெறங்கிப் போவேன். அப்பப்ப அவளோட மாரை ஒரசிப்பாத்து ‘க்ளுக்’னு சிரிப்பேன். செலநேரம் குலுங்கிச் சிரிச்சு அவ சேலைல தண்ணிய வாரியெறச்சு விளையாடுவேன். அவ கோபமேப்பட மாட்டா. அண்ணாந்து அவ மொகத்தையப் பாப்பேன். அவ கண்ண... மூக்க.... ஒதட்ட.... கழுத்த எல்லாம் எத்தன தடவப் பாத்தாலும் அலுக்காது.

செம்பகம் ரொம்ப லச்சணமாயிருப்பா. நல்லவ. இப்பத்தா சிரிக்க மாட்டேங்குறா. முன்னாலெல்லாம் எப்பப்பாத்தாலும் சிரிப்பா. அவ புருஷன் சொக்கனும் அப்பிடித்தான். இங்கதா உள்ளூர்ல எதோ ஒரு ஸ்கூல்ல வாட்ச்மேனா இருக்கான். அவங்க ரெண்டு பேர் மட்டுந்தா அந்தக் குடிசைல.

என்னயப் போலவே இந்தக் குடிசைல இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க. ஒருத்தி பித்தள. இன்னொருத்தி எவர்சில்வர். அவங்களல்லாம் செம்பகம் வீட்ட விட்டு வெளியே கூட்டிட்டுப் போக மாட்டா. என்னய மட்டுந்தா.

குடிசைய விட்டு வெளியே வர்ற அந்தக் காலை நேரத்துக்காக ராத்திரியெல்லாம் காத்துக்கிட்டேயிருப்பேன். சேவல் கூவினவுடன சந்தோஷம் புடுங்கிட்டுப் போகும். காக்காச்சத்தம், பசுமாட்டு ‘ம்மா...’ தொடந்து கன்னுக்குட்டியோட உயிர் சுண்டி இழுக்கும் பாசமான ‘ம்மா...ம்மா’, சைக்கிளின் கிங்கிணிங், தெருவுல மனுஷங்க புழங்குற சத்தம் எல்லாம் கேக்க கேக்க என்னோட துடிப்பு அதிகமாகும். செம்பகம் முழிச்சிருவா. சொக்கன் களைச்சுப் போனமாரி படுத்திருப்பான். இவ மொகத்த அலம்பி, பல்லத் தேச்சிட்டு என்னயப் புழக்கடைல வச்சு நல்லா அழுக்குத் தேச்சு குளிப்பாட்டுவா. பெறகு குழந்தையமாரி இடுப்புல தூக்கி வச்சுட்டு வாசக்கதவச் சாத்திட்டு வீதிக்கு வருவா.

வெளியே வந்ததும் அண்ணாந்திருக்கும் எம்மொகத்துல படுறது ஆகாயந்தான். இருட்டு அப்பத்தான் மறஞ்சு வானம் சாம்பல் நெறத்துல இருக்கும். கெளக்குப் பக்கம் அடிவானத்துல யாரோ அடுப்பப் பத்த வச்சிட்டிருக்கிறமாரி வெளிச்சமும், பொகையுமா இருக்கும். அங்கயும் இங்கயுமா பறவைங்க உல்லாசமாப் பறக்கும். குளுந்த காத்து ஒடம்புக்குள்ள புகுந்துக்கிடும். மனசெல்லாம் நெறஞ்சிருக்கும்.

கொழாயடியில ஒரே சத்தந்தான். சளசளன்னு பேச்சு. செம்பகம் அப்பிடி கன்னாபின்னான்னுல்லாம் பேச மாட்டா. யார்ட்டயும் சண்டைக்குப் போக மாட்டா. அந்தக் குழாய் மடுவாட்டம் இருக்கும். நானும் கன்னுக்குட்டி மாரி வயித்த நெரப்பிக்குவேன். பித்தளைக்கும், எவர்சில்வருக்கும் கூட நா சொமந்துதான் தண்ணி குடுப்பேன். ம்.... அதுல்லாம் ஒரு காலம்.

கோடைக்காலம் ஆரம்பிச்சுது. குடிசைக்கு வெளியே நிக்கிற வேப்ப மரத்து இலைங்க அசைற சத்தம் எப்பவாவது மட்டும் லேசா கேக்கும். குடிசையோட ஓட்டைங்கள்ளாம் பளீர்னு ஜொலிக்கும். காத்தெல்லாம் தீ நாத்தம். என்னைக்கூட சுடுது. எனக்குக் கீழே மெத்த மாரி போட்டிருக்குற ஈரமண் மத்தியானம் ஆய்ட்டாக் காஞ்சிருது. சுத்தி சுத்தி போகுற எறும்புகளையும் காணோம். நாய்க சத்தம் ராத்திரி மட்டுந்தா கேக்குது. மனுஷங்க நடமாட்டமே கொறைஞ்சு போச்சு.

யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. தெனமும் வர்ற நல்ல தண்ணி கொழாய்ல ஒருநா விட்டு ஒருநா தான்னு வர ஆரம்பிச்சுது. தண்ணி வர்ற அன்னிக்கு மட்டும் நா, பித்தள, எவர்சில்வர் மூனுபேரும் நல்ல தண்ணியோட இருப்போம். தண்ணி வராத அடுத்த நா மட்டும் கெணத்து தண்ணியோட இருப்பேன். அவங்க ரெண்டு பேரும் நல்ல தண்ணியோடயிருப்பாங்க. செம்பகம் தண்ணியப் பாத்து பாத்துச் செலவு பண்ணுவா. குடிக்க, சோறு பொங்க மட்டுந்தா நல்ல தண்ணி. மத்ததுக்கெல்லாம் கெணத்து தண்ணிதான். சொக்கங்கூட காலைல துண்ட தோள்ளப் போட்டுக்கிட்டு, பயோரியாப் பல்பொடியோட பிள்ளையார் கோவில் கெணத்துக்குத்தான் குளிக்கப் போறான்.

செம்பகம் இஞ்சீனிரு வீட்டு கெணத்த்துக்கு என்னய இப்ப அடிக்கடி அழச்சிட்டுப் போறா. அங்கயும் ஒரே மனுஷங்கதான். இந்த வருஷம் மழ வருமான்னு பொலம்புறாங்க. அவங்க கண்ணுல்லாம் சோகம் பாஞ்சு கெடக்கும். மூச்செல்லாம் பரபரன்னு இழுத்தாப்பல இருக்கும். ஒவ்வொரு வாளிக்கும் கெணத்த எட்டிப் பாத்து தண்ணி கீழேயேப் போய்ட்டிருக்குன்னு மருகுறாங்க. செம்பகம் மாங்கு மாங்குன்னு தண்ணியெறச்சு எனக்குத் தருவா. இந்த மனுஷங்க தண்ணிக்காக இப்படி ஆலாப் பறக்குறத என்னாலப் பொறுக்க முடில. மனசுக்குள்ள ஊமையா அழுதேன்.

ஒரு மாசம்.... ஒண்ணரை மாசந்தா இந்த நெலம. அப்புறம் வாரத்துக்கே ரெண்டு நா மட்டுந்தா தண்ணி வந்துச்சு. மொத நா மூணு பேரும் நல்ல தண்ணியோட. ரெண்டாவது நா பித்தளயும், எவர்சில்வரும் நல்ல தண்ணியோட. மூணாவது நா பித்தள மட்டுந்தா நல்ல தண்ணியோட. சோறு போங்க மட்டுந்தா நல்ல தண்ணி. குளிக்க ஆத்துத் தண்ணின்னு ஏற்பாடாச்சு.

அந்த சமயத்துல ஒரு வறண்ட போன நாள்ள என்னய செம்பகம் ஆத்துக்கு தூக்கிட்டுப் போனா. அந்த நாள என்னால மறக்கவே முடியாது. நா அதுவரைக்கும் அத மாரி பரந்து விரிஞ்சுக் கெடந்த பெரிய எடத்தப் பாத்ததே இல்ல. செம்பகத்தோட கஷ்டங்கள்ள நா சோர்ந்து போய் இருந்தாலும், அந்த நேரத்துக்கு சந்தோஷமாத்தான் இருந்துச்சு. தண்னி ஓடல்ல. பாலைவங்கணக்குல இருக்கு. அங்கயும் மனுஷங்க கூட்டந்தான். ஆத்துல அங்கங்க பள்ளங்களத் தோண்டி தண்ணி ஊற ஊற எடுத்தாங்க. எங்கேயிருந்துல்லாமோ எறும்பு போல சாரி சாரியா பொம்பளைங்க வர்றாங்க. மாட்டு வண்டிங்க தண்ணி எடுக்க வர்றாங்க. பாக்கவே க்‌ஷ்டமாயிருக்கு. இந்த அழகான உலகத்துல வாழுறது இத்தனைக் கஷ்டமா.

செம்பகம் வரவர ரொம்ப இளைச்சுப் போய்ட்டா. அவ இடுப்புல உக்கார்றதே பாவமாயிருக்கு. கடவுளே! எனக்கு ரெண்டு றெக்கயக் குடுத்துப் பறக்குற சக்தியையும் குடுக்க மாட்டியான்னு வேண்டிக்குறேன். சொக்கனும், செம்பகமும் தண்ணிக் கஷ்டம் பத்தியேப் பேசுறாங்க.

ஊர்ல கெணத்துலல்லாம் தண்ணி வத்திப் போச்சாம். சாயங்காலம் வந்தவுடன் பக்கத்து வீட்டுல சக்கிள் எரவல் வாங்கி, பித்தளையையும், எவர்சில்வரையும் கயித்துலக் கட்டி, சைக்கிள்ள ரெண்டு பக்கமும் தொங்கப் போட்டு சொக்கன் எங்கயோ தண்ணியெடுக்கப் போறான். ஊரே தவிச்சுப் போயிருக்கு. இப்ப ஆத்துல காலயில, மத்தியானம், சாயங்காலம்னு எப்பவும் கூட்டந்தானாம். ஒரு மாட்டு வண்டி ஆத்துத்தண்ணி ஏழு ருபாயாம். மாட்டு வண்டிச் சத்தம் ஊர் பூராவும் கேக்கு. “அய்யோ, எம்மார்லயும் தண்ணி வத்திட்டேப் போகுதே.... இந்தப் புள்ளைங்க இப்படி அழுறாங்களேன்னு ஆறும் உருகுது. இந்த மனுஷங்க இல்லாமே நாம இருந்து என்னத்துக்கு என்று அழும்.

கோடப்போயி மழக்காலம் ஆரம்பிச்சுட்டுன்னுச் சொன்னாங்க. அதுக்கான அறிகுறியே காணோம். இன்னும் வெப்பந்தான். குத்தாலத்துல தண்ணி கொட்டுது, சீசன் ஆரம்பிச்சிட்டுன்னுச் சொன்னாங்க. அங்க மழ இங்க மழன்னுல்லாம் சொன்னாங்க. இங்கயோ நல்லக் காத்தக்கூட காணம். திடீர்னு ஒருநா மழ வர்ற மாரி வானம் இருண்டு போச்சு. குளுந்த காத்தடிச்சுது. ஈரவாசம். எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. சத்தம் போடாம மெல்ல ஆடினேன். ஆனா வானம் மூசிலத் துப்பிட்டு போறாப்பல ரெண்டு சின்னத் தூறல மட்டுந்தா போட்டுச்சு. மேகமெல்லாம் போய்ட்டு.

இது நடந்து அஞ்சாறு நாள்ள வாரத்துக்கு ரெண்டு நா வந்த தண்ணியும் நின்னு போச்சு. லாரில்ல தெருத்தெருவா வந்து முனிசிபல்காரங்க தண்ணி குடுக்கறாங்கன்னு பக்கத்து வீட்டு சந்திரா செம்பகத்துட்ட அவசரமா வந்து சொன்னா. செம்பகம் என்னய.... பித்தள...அப்புறம் எவர்சில்வர்னு எல்லாத்தயும் தூக்கிட்டுத் தெருவுக்கு ஓடினா. அங்க அதுக்குள்ள என்னயப் போல நெறையா பேரு வரிசயா ஒக்காந்துருந்தாங்க. செம்பகம் எங்களயும் உக்கார வச்சிட்டு பக்கத்துல நின்னுக்கிட்டா. எனக்குப் பின்னாலயும் வரிச நீண்டு போச்சு. ஆம்பிளைங்க, பொம்பிளைங்கன்னு வரிசயா காத்துக்கிட்டு இருந்தாங்க. அவங்கள்ளாம் பிச்சைக்காரங்க மாரியும்,  நாங்கள்ளாம் திருவோடுங்கமாரியும் தான் எனக்குத் தோணிச்சு.

சத்தம். ஒரே அறிபறி. இப்ப வந்துரும்னு சொல்றாங்க. செம்பகம் அலங்க மலங்க விழிக்கிறா. வீட்டுல அடுப்பு பத்த வைக்கல. உக்காந்து பாக்கா.... நின்னு பாக்கா. ‘ஐயோ... ஏந்தாயி..’ன்னு சத்தம் போடுறேன். சூரியன் எம்மூஞ்சிலயா அடிக்குது. கீழயும் சூடு. புழுதி வேற. அழுக்காயி, காஞ்ச கருவாடாய்ப் போனேன். உயிரக் கையிலப் புடிச்சிட்டுருந்தேன்.

மூனுமணி நேரம் கழிச்சு லாரி வந்துச்சு. அவ்ளதான். மக்கள்ளாம் லாரிய மொய்ச்சாங்க. ஒவ்வொருத்தரா த்ண்ணியப் பிடிச்சுட்டுப் போக போக செம்பகம் எங்களயும் முன்னால நகத்திட்டுப் போறா. ஒரே இரைச்சல். அம்மா! லாரி பக்கத்துல வந்துட்டோம். செம்பகத்துக்கு மூஞ்செல்லாம் சந்தோஷம். அந்த லாரி எங்களுக்கு உயிர் கொடுத்துச்சு. செம்பகம் வயித்துலப் பால வார்த்தது மாரி இருந்திருக்கணும். ‘நாளைக்கு’ன்னு அவ முணுமுணுத்தா.

இந்த லாரித் தண்ணியும் அஞ்சுநா தான் கெடைச்சுது. ஊரே தீப்பிடிச்ச மாரி இருக்கு. மரங்களுக்கு எலும்புருக்கி நோய் வந்த மாரி இருக்கு. செம்பகத்தோட தோல் வறண்டு போச்சு. நா கொமைஞ்சுட்டேன். என்னயக் கவுத்திப் போட்டுட்டு செம்பகம் அழுதுட்டு இருக்கா. சொக்கன் யாரையெல்லாமோ ஏசுறான்.

இதோ... நா மொடமா கெடக்கேன். செம்பகம் அவசரமா உள்ள வர்றா. வேதனையா என்னயப் பாக்குறா. பொலம்புறா. கண்ணுல்லாம் வீங்கியிருக்கு. என்னயத் துக்கிட்டு தெரு ரோடுல்லாங் கடந்து முனிசிபல் ஆபிச நோக்கிப் போறா. இன்னிக்கு இங்க தண்ணி கொடுக்கப் போறாங்கன்னு நானும் போறேன். அங்கயும் மனுஷங்க.... மனுஷங்க... மனுஷங்கதான். அப்புறம் என்னயப் போல நெறைய. பித்தள இல்ல... எவர்சில்வர் இல்ல... நாங்க, நாங்க மட்டுந்தான்.

முனிசிபல் ஆபிசுக்கு முன்னாலப் போயி ஒவ்வொரு பொம்பளையா எங்களக் கீழே போட்டு ஒடைக்கிறாங்க. செம்பகம் என்னயும் தூக்கிட்டுப் போறா. எதோ கோஷங்க போடுறாங்க.

எனக்குப் புரிஞ்சு போச்சு. சந்தோஷமாயிருக்கு. ஒன்னுக்கும் ஒதவாமப் போயிருவேனோன்னு பயந்திருந்தேன். போருக்குப் போற வீரன் மாரி... பெருமையோடப் போறேன். சிலிர்க்குது.... இதோ....

‘யே! ராசா’ன்னு கூவிட்டே என்னயத் தூக்கி செம்பகம் கீழே போடுறா....

அம்மா...! வலி தாங்க முடியல. சுக்கல் சுக்கலா இதோ என்னோட உயிர் போகுது. செம்பகத்தோட பேசணும் போல இருக்கு. அவளைப் பாத்து கத்துறேன்...

ஏ.... தாயீ! எனக்கு அடுத்தப் பெறப்புன்னு ஒன்னு இருந்தா நா ஒன் வயித்துல பெறக்கணும்.... ஒம்மார்ல பாலக் குடிக்கணும்.... ஒன்னோட இடுப்புல உக்காரணும். நீ என்னய வளக்கணும். இந்த மனுஷங்களுக்கு அப்பமும் நா என்னால ஆனதச் செய்யணும்.... ஆறு ஏங்கிட்ட நெறையச் சொல்லியிருக்கு.

கருத்துகள்

25 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இக்கதை படித்த ஞாபகம் உண்டு. மேலாண்மை பொன்னுசாமி மாதிரி! என் அண்ணன் அப்போ செம்மலர் வாங்குவார். (இப்போ தெரியலே) சில சமயம் வரா விட்டால், அப்போ பார்டி ஆள் இப்போ எம்.எல்.ஏ. கோவிந்தசாமியிடம் வாங்கிகொள்வோம்.

    சிலோனுக்கு இரண்டு வருடமும், துபாய், அஜ்மனுக்கு சுமார் இரண்டு வருடங்களும் செம்மலர் வாங்கிய ஒரே ஆள் என் அண்ணன் தான்!

    பதிலளிநீக்கு
  2. //இப்போது இலக்கியச்சிந்தனை வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பும் இல்லை. //

    இலக்கியச்சிந்தனையின் அந்தத் தொகுப்பு என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.நண்பர்கள் யாருக்கும் கொடுத்து நான் மறந்துவிடாமல் என்னிடமே இருந்தால், அடுத்தமுறை இந்தியா வரும்போது உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன்.

    அன்புடன்,
    பி.கே. சிவகுமார்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமை. ரசித்தேன்! வட்டார வழக்கு சுவை!

    பதிலளிநீக்கு
  4. முத்துலட்சுமி!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    விஜய்சங்கர்!
    ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது.

    சந்தனமுல்லை!
    மிக்க சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள pks!
    ஆஹா...! மிக்க மகிழ்ச்சி...! ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  6. என்ன சொல்றதுன்னே தெரியல.

    ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிடுகிறேன்.

    நான் இதுவரை படித்த சிறுகதைகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தி பெஸ்ட் சிறுகதை.

    அதுவும் // ஆறு ஏங்கிட்ட நெறையச் சொல்லியிருக்கு // இந்த வரிகள் கிளாஸ்.

    மண்குடத்தின் பேச்சு சத்தம் என் காதில் அடங்க சில நாட்கள் பிடிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கதை பெற்ற சிறப்புக்கள் எல்லாம் எற்கனவே அறிந்திருந்தாலும் இப்போது படிக்கும் போது ரொம்பப் பெருமையாக இருக்கிறது!

    நானும் இதை எத்தனை தடவை திரும்பத் திரும்பப் படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. :-)

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப நல்லா இருக்கு. முதல் கதை மாதிரி தெரியவில்லை. அவ்வளவு முதிர்ச்சி கதையிலே..

    23 வருடங்களுக்கு முன்னாடி கூட பானை உடைப்புப் போராட்டமெல்லாம் இருந்திச்சா?

    பானை செண்பகம் மேலே வெச்ச பாசத்தின் அளவு செண்பகம் பானை மேலே வெக்கலியோ?

    செண்பகங்களே இப்படித்தான், இல்ல?

    பதிலளிநீக்கு
  9. அ.மு.செய்யது!
    தங்களது வருகையும், பகிர்வும் உற்சாகமளிக்கிறது. புதிதாய் எழுதுவதற்கு உத்வேகமளிக்கிறது. மிக்க நன்றி.

    தீபா!
    நன்றி.


    seemachu!
    செண்பகங்களா.... மனிதர்களா?
    வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமை, பகிர்தலுக்கு மிக்க நன்றி.

    வாழ்த்துக்களுடன்

    குப்பன்_யாஹூ

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஐயா, இந்த கதையை உங்களுடைய சிறுகதை தொகுப்பிலே படித்திருக்கிறேன். அனேகமாக அந்த தொகுப்பிலும் இதுதான் முதல் கதை என்று நினைகிறேன், சரியா? நானும் ஒருசில கதைகள் எழுதியிருக்கிறேன், நேரம் இருந்தால் படித்துவிட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள். உங்கள் அனுபவம் எனக்கு கற்றுகொடுக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக்கதை, தங்களின் முதல் கதை என்பதை நம்ப முடியவில்லை. அருமையாக இருக்கிறது. உயிரற்ற மண்குடம் என் மனதில் உயிர்ப்பெற்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. பலவருடங்களுக்கு முன்னால் தொகுப்பில் இந்த கதை படித்த ஞாபகம். மண்குடத்தின் கதை சொல்லல் பிடித்திருந்தது. மண்பானை குமைதல் என்றால் என்ன என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்ததாய் நினைவிருக்கிறது. எப்படி முயற்சி செய்தாலும் "க்ளுக்" என்று சத்தத்தோடு சிரிப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் மண்பானையின் தண்ணீர் தளும்பல் சிரிப்பிற்கு அந்த சத்தம் சாத்தியம்தான். நன்றாயிருக்கிறது. நன்றி!.

    பதிலளிநீக்கு
  14. குப்பன் யாஹு!
    நன்றி.

    முரளிகுமார் பத்மநாபன்!
    அவசியம் வந்து படிக்கிறேன்.
    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    குடந்தை அன்புமணி!
    மிக்க நன்றி.


    பரிசல்காரன்!
    நட்சத்திரத்தின் வாழ்த்துக்களுக்கு நன்றி.


    பொ.வெண்மணிச்செல்வன்!
    செம்மலரில் உங்கள் கவிதையைப் படித்தேன்.நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. இந்தச்சிறுகதை ஒரு சின்ன வரலாற்றின் தொடக்கம்.
    அது சாத்தூரை மையப்படுத்திய இலக்கிய மற்றும்
    இடது சிந்தனயின் டேக் ஆப். அப்படித்தான் இதை
    நினைவுகூறவேண்டும். அந்தச்சிறுகதையை கையெழுத்தில்
    படித்த மூன்றுபேரில் நானும் ஒருவன் எனும் பெருமை
    கொள்வேன். எனது மட்டுமல்ல இன்னும் பல முதல் கதைகளின்
    துவக்கப்புள்ளி மண்குடம். இன்று கேலிப்பொருளான கிழவிபோல்
    கிடக்கும் ஜோல்னாப்பைகளின் தாய்மை நிறம்பிய
    நாட்கள் அவை.
    நெடுநாள் கழித்து அந்த உயரமான மனிதன்,
    கிருஷ்ணகுமாரை நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதை.

    கதையை சொல்றது யாருன்னு யோசிச்சிட்டே இருந்தேன். ஆஹா, இப்படி மண் பானை கதை சொல்ற மாதிரி கூட யோசிக்கலாமா என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.

    கொடுமை என்னவென்றால், 24 வருடங்களுக்குப் பிறகும் நம்ம நாட்டில பல கிராமங்களில் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

    பதிலளிநீக்கு
  17. ஆகா உங்கள் 24 வருடங்களுக்கு முன் சென்று வந்தேன், கதையை முழுக்கவும் கவிதையாகவே எழுதியிருக்கிறீர்கள்,இந்த உத்தி மிகவும் பிடித்திருக்கிறது, காட்சிகள் நுட்பமாக சித்தரிக்கப்பட்டு, எளிமையான மொழியில் அழகாக கண்முன் விரிகிறது. மண்குடத்தை இனி நான் எங்கு பார்க்க நேர்ந்தாலும் இந்தக் கதை தான் நினைவு வரும், செம்பகம் பானையை சுமந்து செல்லும் இடங்களை, பானை விவரிப்பது போன்று எழுதியிருந்தது மிகவும் பிடித்திருந்தது, முழுமையான கவிதை இந்தக் கதை.

    பதிலளிநீக்கு
  18. காமராஜ்!
    அந்த அற்புதமான நாட்களை உனது எழுத்துக்கள் மீட்டுகின்றன. நன்றி.

    ஜோ!
    ஆமாம். முன்பைவிட மோசமானதாய் இருக்கிறது. இப்போது ஆற்றிலும் தண்ணீர் பிடிக்க முடியாது. மணலைத்தான் லாரி லாரியாய் கொள்ளையடிக்கிறார்களே!

    யாத்ரா!
    கவிஞரின் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அண்ணா!எனக்கு மீண்டும் நமது அந்த இரவு உரையாடல் தான் ஞாபகம் வருகிறது.மாமா சொன்னது போல் எனக்கும் அந்தக் கதை ஒரு துவக்கப்புள்ளி தான்.என்னை மிகவும் பாதித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  20. யாத்ராவின் பின்னூட்டம்தான் நான் சொல்வதும்..

    கவிதை மாதிரி இருக்கு...

    பதிலளிநீக்கு
  21. அண்டோ!

    தமிழன் கறுப்பி!

    இருவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. ஆச்சரியமாய் இருக்கு மாதவன்.இது முதல் கதையா!அருமை.

    பதிலளிநீக்கு
  23. ராஜாராம்!
    முதல்கதைதான்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!