அந்த இரவில் தன் ஐந்து வயது மகன் ஜோஷ்யாவை சுமந்தவாறே அந்த இத்தாலிய நாட்டு சிப்பந்தியான யூதன் கைடோ நடந்து செல்கிறான். தோளில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனிடம் 'இதெல்லாம் வெறும் கனவுதான் மகனே, நாளைக் காலை விடிந்துவிடும். அம்மா வந்து உன்னை எழுப்புவாள்.' என்று சொல்லிக் கொண்டே கைடோ வந்து நிற்கிற இடம் உறைய வைக்கிறது. பனி மூட்டத்திற்குள்ளே மிக மங்கலாக, நாஜிக்கள் முகாமில் ஆயிரம் ஆயிரமாய் கொல்லப்பட்ட யூதர்களின் எலும்புகளின் குவியல் தெரிகிறது. மொத்த திரைப்படத்திலும் நாஜிக்களின் கொடூரத்தைப்பற்றிய நேரடியான காட்சி சித்தரிப்பு என்றால் இது ஒன்றுதான். ஆனால் பல காட்சிகள் நம்மை மௌனமாய் கதற வைக்கின்றன. முற்பகுதியில் இத்தாலியில் பள்ளி ஆசிரியை டோராவை காதலிக்கிற காட்சிகளில் நம்மை ரசித்து ரசித்து சிரிக்க வைக்கிற கைடோ, பிற்பகுதியில் ஜெர்மனியின் நாஜிக்கள் முகாமிலும் அதே கலகலப்பாய்த்தான் இருக்கிறார். ஆனால் நாம் தவித்துப் போகிறோம்.
'வாழ்க்கை அழகானது (life is beautiful)'. ரொபர்ட்டோ பினைனியின் படம் இது. பினைனியே கதைவசனம் எழுதி, இயக்கி கைடோவாக நடித்து இருக்கிறார். 1998ல் வெளிவந்த படம். எட்டு இத்தாலி ஆஸ்கார் பரிசுகளையும், கேன்ஸ் கிராண்ட் ஜூரி விருதினையும் பெற்று இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளில் ஒரு சிறு துளியை காண்பிக்கிறது. கைடோ வேலை தேடி ரோம் நகரம் வருகிறான். அவனது சித்தப்பாவின் தயவில் ஒரு ஓட்டலில் சிப்பந்தி வேலை செய்கிறான். பள்ளி ஆசிரியை டோராவின் மீது காதல் கொள்கிறான். இவனது கலகலப்பும், புத்திசாலித்தனமும் அவளை கவர்கின்றன. நிச்சயம் செய்யப்பட்ட கனவானிடமிருந்து தப்பி டோரா கைடோவோடு இணைகிறாள் .தனது கனவுகளில் ஒன்றான புத்தகக் கடை ஒன்றை கைடோ ஆரம்பிக்கிறான். துறுதுறுவெனை இருக்கும் ஜோஷ்யா பிறக்கிறான். சைக்கிளில் குழந்தையையும், டோராவையும் வைத்து நகரத் தெருக்களில் ஒரு காலை வேளையில் சிட்டாக கைடோ பறக்கிற காட்சி வரை படம் முழுவதும் நகைச்சுவைதான். தொப்பியை மாற்றுவதும், கேட்டதும் சாவி மேலிருந்து விழுவதும், டோராவின் பள்ளிக்கு ஆய்வாளராக சென்று லூட்டி அடிப்பதும், ஓட்டலில் எல்லாம் தீர்ந்து போன பிறகு வருகிற ஒரு அரசு அதிகாரிக்கு, பக்கத்து டேபிளில் சாப்பிடாமல் வைத்திருக்கிற உணவை எடுத்து பரிமாறுவதும், மெஸ்மரிசம் பழகுவதும் சிரிக்க சிரிக்க நிறைந்த நிகழ்வுகள் சட்டென மாறுகின்றன.
டோராவை பள்ளியில் இறக்கிவிட்டு, ஜோஷ்யாவோடு புத்தகக் கடையைத் திறக்கிறான்.'யூதனுக்கும் நாய்க்கும் அனுமதி இல்லை' என்ற வாசகங்கள் குழந்தையை கேள்வி கேட்க வைக்கின்றன. 'அவரவர் இஷ்டம் போல இப்படி சொல்லிக்கொள்வார்கள். நாளை சிலந்திகளுக்கும், தூசிகளுக்கும் அனுமதி இல்லை என்று நாம் சொல்லலாம்’ என கைடோ அந்த பயங்கரத்தை மிகச் சாதாரணமாக குழந்தையிடம் தெரிவிக்கிறார். இந்த இடத்திலிருந்து குழந்தைக்கு ஒரு தளத்திலும், பார்வையாளனுக்கு இன்னொரு தளத்திலும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் பினைனி. ஒரு தந்தையாகவும், ஒரு யூதனாகவும் காட்டுகிற சித்தரிப்பில்தான் படத்தின் ஆன்மாவும், அர்த்தமும் இருக்கிறது.
ஜோஷ்யாவுக்கு அன்று பிறந்தநாள்.சின்ன பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு காலையில் டோராவிடம் விளையாடுகிறான். பள்ளிக்குச் சென்றுவிட்டு டோரா திரும்பி வரும்போது வீடே அலங்கோலமாய் கிடக்கிறது. கைடோவும், ஜோஷ்யாவும் இல்லை. விஷயமறிந்து பதறி டோரா புகைவண்டி நிலையத்திற்கு விரைகிறாள். கைடோ, கைடோவின் சித்தப்பா, ஜோஷ்யா, இன்னும் பல யூதர்களும் ஒரு டிரக்கில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. 'உன் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு' என்று கைடோ சொல்கிறான். டிரக்கிலிருந்து இறக்கப்பட்டு புகை வண்டி ஒன்றில் சரக்குகள் ஏற்றும் அறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார்கள். யூதப்பெண் இல்லையென்றாலும் டோரா தானும் அந்த வண்டியில் இன்னொரு அறையில் ஏறிக்கொள்கிறாள். கைடோவும், ஜோஷ்யாவும் அதைப் பார்க்கிறார்கள். கொலை நெடி வீசும் நாஜிக்கள் முகாம் ஒன்றை நோக்கி அவர்கள் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த முகாமிலும் குழந்தைக்கு ஒரு அழகான உலகத்தை காட்டுவதிலேயே சித்தமாயிருக்கிறான் கைடோ. அங்கு ஒரு விளையாட்டு நடக்கும் என்றும், அதில் 1000 புள்ளிகள் எடுத்தால் கடைசியில் ஒரு டாங்கியை பரிசாக தருவார்கள் என்றும் குழந்தையின் கற்பனை உலகத்தை தனதாக்கிக் கொள்கிறான். வயதானவர்களும், குழந்தைகளும் தேவையில்லையென்று நாஜிக்கள் கொன்று விடுவார்கள் என்ப்தால் குழந்தையை அந்த கொட்டடிக்குள் ஒளித்து வைக்கிறான்."நீ யார் கண்ணிலாவது பட்டால் நாம் விளையாட்டில் தோற்றுவிடுவோம்." என்று நம்பவைக்கிறான். மரணத்தின் விளிம்பில் நின்று, குழந்தையின் சித்திரத்தை தக்க வைப்பதற்கு ஒவ்வொரு பிரச்சினைகளையும் கைடோ சமாளிக்கும் விதத்தில் நகைச்சுவையைத் தாண்டி இறுக்கமான துயரங்களே பொதிந்து இருக்கின்றன.
பகலெல்லாம் தீக்கொழுந்துகள் வீசும் உலைக்களத்தில் கடினமான வேலைகளை செய்து களைத்து இருந்தாலும், கொட்டடிக்கு வந்ததும் மகனிடம் உற்சாகமாக தனக்கு அன்றைக்கு கிடைத்த புள்ளிகள் எவ்வளவு என்பதை பிரஸ்தாபிக்கிறான் கைடோ. டோராவின்னைவில் வாடி சுவர்களைத் தாண்டி காற்றின் வழியாக அவளது நினைவுகளை வருடிக் கொடுக்க அவனால் முடிகிறது. வயோதிகரான அவன் சித்தப்பாவின் கடைசிக் கணங்கள் ஒரு சிறு காட்சியில் புரிய வைக்கப்படுகிறது. சாப்பட்டுத் தட்டினை வைத்துக் கொண்டு மூடப்பட்ட கொட்டடிக்குள் தனியாக விளையாடிக்கொண்டு டாங்கியின் கனவில் இருக்கிறான் ஜோஷ்யா.
ஒருநாள் எங்கும் பரபரப்பாக இருக்கிறது. நாஜிக்கள் அங்குமிங்குமாய் விரைந்துகொண்டு இருக்கிறார்கள். உலகப்போரின் கடைசிக்கணங்கள் அவை. இதுதான் தருணம் என கைடோ ஜோஷ்யாவை பத்திரமாக வெளியே அழைத்து வந்து பீரோ மாதிரி இருக்கும் சின்ன பெட்டிக்குள் ஒளிந்து கொள்ளச் சொல்கிறான். ஜோஷ்யாவை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் 60 புள்ளிகள் கிடைக்கும் என்றும், தாங்கள் இதுவரை 940 புள்ளிகள் எடுத்தாகிவிட்டது என்றும் சொல்கிறான். டோராவை பார்க்க புறப்படுகிறான். நாஜிக்களால் பிடிக்கப்படுகிறான். துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்படும்போதும் அது ஒரு விளையாட்டு என்பது போலவே, ஒளிந்து பார்த்துக்கொண்டிருக்கும் மகனுக்கு சித்தரித்து கடக்கிறான். கொஞ்சதூரம் நடந்து இருட்டிற்குள் சென்ற பிறகு இயந்திரத்துப்பாக்கியின் சத்தம். அமைதி.
நாஜிக்கள் ஓடிவிடுகிறார்கள். உயிரோடு இருக்கும் யூதர்கள் நடக்க முடியாமல் அங்கிருந்து செல்கிறார்கள். எங்கும் அமைதி. இப்போது அங்கு யாருமில்லை. ஜோஷ்யா மெல்ல வெளிப்படுகிறான். தனியாக நிற்கிறான். தூரத்தில் எதோ வாகன சத்தம் கேட்கிறது. மிகுந்த அலறலோடு அது பக்கத்தில் வருகிறது. டாங்கி! அவனது கனவு டாங்கி. கைடோவின் கற்பனை நனவாகி ஜோஷ்யா முன்னால் வந்து நிற்கிறது. உள்ளிருந்து யாரோ வேறோரு நாட்டு வீரன் அவனைப் பார்த்து இறங்கி டாங்கியின் மீது உட்கார வைத்துக் கொள்கிறான். புறப்படுகிறார்கள். கொஞ்சதூரத்தில் டோரா கூட்டத்தில் செல்வதைப் பார்த்து 'அம்மா' என்று கூவி அழைக்கிறான். டாங்கியிலிருந்து தாவி அம்மாவின் மீது பாய்கிறான். "அம்மா..நாம் ஆயிரம் புள்ளிகள் எடுத்துவிட்டோம். கடைசியில் ஜெயிச்சிட்டோம். " மூச்செல்லாம் வாங்க சந்தோஷத்தில் கத்துகிறான். அந்த சிரிப்போடு படம் முடிவடைகிறது. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யாரும் பக்கத்தில் இருப்பவரோடு பேச முடியாத உறைந்து போன கனம் நிலவுகிறது. தொண்டை அடைக்கிறது. வேதனை நிறைந்த அனுபவங்கள் நிழலாடுகிறது. ஆனால் கைடோ தனது குழந்தைக்கு 'உலகம் அழகானது' என்று மட்டுமே புரிய வைத்திருக்கிறான்.
நாஜிக்களின் கொடுமையை சித்தரிக்காமல், அந்த கொடுமையை கேலி செய்வது போல இருக்கிறது என்றெல்லாம் இந்த படத்திற்கு பின்னாளில் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் பார்வையாளர்களின் மனிதத்தன்மையை சோதித்து வெல்லக்கூடிய அற்புதமான படமாகவே இருக்கிறது. உறைந்திருக்கும் பாறைகளை உருகவைக்கிறது. டோராவையும் ஜோஷ்யாவையும் உட்காரவைத்து சைக்கிள் ஒட்டுகிற கைடோ கடைசியில் இல்லை. ஆனால் நம் எல்லோர் நெஞ்சிலும் இருக்கிறான்.
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் .இப்போதும் இனவெறி கொண்ட நிலங்களிலெல்லாம் கைடோக்களும், டோராக்களும், ஜோஷ்யாக்களும் இருக்கிறார்கள். உண்மைகளை உயிரோட்டமான வாழ்க்கையே வலிமையாக உணர்த்துகின்றன. வாழ்க்கை அழகானது என்பது ஒரு கனவாக மட்டும் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
பி.கு : பழைய டைரியின் பக்கங்களிருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
*
படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்...உங்கள் விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது! பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குகலங்க வைக்கும் நிகழ்வுகள் கொண்ட படம்.. சிறந்த விமர்சனப் பார்வை உங்களுடையது. பகிர்வுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குபடத்தை கொஞ்ச நாள் முன்னாடிதான் நானும் பார்த்தேன். மொழி தெறியாவிட்டாலும் செழியன் அவர்களின் புத்தகத்தில் கதை படித்து பார்த்த படம்.
பதிலளிநீக்குபடம் பார்த்து விட்டு அது ஏற்படுத்திய வெறுமை அடுத்த நாள் வரை இருந்தது. ஒரு கொடுமையை, சோகத்தை, நகைச்சுவை பின்னணியில் கொடுக்கபட்ட மிக அற்புதமான படம்.
//அந்த இரவில் தன் ஐந்து வயது மகன் ஜோஷ்யாவை சுமந்தவாறே அந்த இத்தாலிய நாட்டு சிப்பந்தியான யூதன் கைடோ நடந்து செல்கிறான். தோளில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனிடம் 'இதெல்லாம் வெறும் கனவுதான் மகனே, நாளைக் காலை விடிந்துவிடும். அம்மா வந்து உன்னை எழுப்புவாள்.' என்று சொல்லிக் கொண்டே கைடோ வந்து நிற்கிற இடம் உறைய வைக்கிறது. பனி மூட்டத்திற்குள்ளே மிக மங்கலாக, நாஜிக்கள் முகாமில் ஆயிரம் ஆயிரமாய் கொல்லப்பட்ட யூதர்களின் எலும்புகளின் குவியல் தெரிகிறது.//
உண்மையிலே இந்த காட்சியில் உறைந்து போவோம்.
Yes Sir.. it was a fine film..
பதிலளிநீக்குWatched Tamil dubbed version. Courtesy:: Vijay tv
நல்லதொரு அறிமுகத்தைச் செய்திருக்கிறீர்கள், படம் இன்னும் பார்க்கவில்லை, தேடி பாக்கறேன் சார், மிக்க நன்றி
பதிலளிநீக்கு'வாழ்க்கை அழகானது' ஓர் உன்னதமான படைப்பு. அரசியலின் அற்பங்களுக்கு அப்பால் சிக்கலான சமூகத்தில் வாழ்க்கையை அழகாக நடத்திச் செல்ல முடியும் என்று உணர்த்திய சினிமா.
பதிலளிநீக்கு// கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இப்போதும் இனவெறி கொண்ட நிலங்களிலெல்லாம் கைடோக்களும், டோராக்களும், ஜோஷ்யாக்களும் இருக்கிறார்கள். உண்மைகளை உயிரோட்டமான வாழ்க்கையே வலிமையாக உணர்த்துகின்றன.
வாழ்க்கை அழகானது என்பது ஒரு கனவாக மட்டும் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.//
நீங்கள் நினைவூட்டியுள்ள தருணம் மிகச் சரியானது. நீங்கள் கூறியிருக்கும் கருத்தும் யதார்த்தம் நிரம்பியவை.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
இப்படம் அப்போதே பார்த்தேன்; பலதடவை பார்த்துவிட்டேன்.
பதிலளிநீக்குநாசிகளின் கொடுமைகளையும் விபரணங்களில் பார்த்துள்ளேன்.
பெரிதாக "நாயகனுக்கு உரிய நிர்ணயிக்கப்பட்ட லட்சணங்கள்" இல்லாமல் ரொபர்ட்டோ பினைனி
எல்லோரையும் வசப்படுத்தியிருந்தார்.
ஏதோ நமது படங்களில் வெற்றுக் காட்சிகளும்; நமது நாயகர்கள் அடிக்கும் லூட்டிகளும்
வீணாக ஞாபகத்தில் வந்து தொலைகிறது.
"வாழ்க்கை அழகானது" ;துரதிஸ்டவசமாக அனைவருக்கும் அது கிட்டுவதில்லை.
நல்ல விரிவான விமரிசனம்
பதிலளிநீக்குஇந்தப்படம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கட்டாயம் பார்க்கவேண்டும் என நினைத்திருக்கும் படம்.
பகிர்வுக்கு நன்றி
சந்தனமுல்லை!
பதிலளிநீக்குசென்ஷி!
முத்துராமலிங்கம்!
கார்த்திகேயன்!
யாத்ரா!
குலோபன்!
யோகன் பாரிஸ்!
கதிரவன்!
அனைவரின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
அன்புத்தோழர் மாதவராஜ் அவர்களுக்கு,
பதிலளிநீக்கு”நாளை சிலந்திகளுக்கும் தூசிகளுக்கும் அனுதியில்லை என்று நாம் சொல்லலாம்”
அங்கேதுவங்கிய பிரமிப்பு!!
நம்முடைய வாழ்கையில் நாம் பிள்ளைகளுக்கு என்ன கொடுத்துக்கொண்டிருக்கிறோம், நம்முடைய ஏமாற்றங்களையும்,
இயலாமை, தோல்வி, எதிர்காலத்தைப்பற்றிய பயம், இன்னும் எளிமையாய் சொல்லப்போனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நாஜிகளாக அல்லவா உள்ளோம்?
”வழியில் நடந்து போகிறவனை திரும்பிப்பார்க்க வைப்பது மட்டுமே கவிதையின் வேலையல்ல, அவனை சிந்திக் வைப்பதுடன், எத்தனை காலம் கடந்தாலும் மனதைப்பாதித்த கவிதை மறக்காது”
ஒரு விமர்சனமும் அந்தவேலையைச்செய்யும் என்பதை மிகத்துல்லியமாக நிருபித்திருக்கிறீர்.
இன்னமும்கூட எனது மகளுக்கோ அல்லது மகனுக்கோ நான் ஒரு கைடோவாக இருக்கமுடியுமா? என்று கூட நினைத்துப்பார்க்கவே மலைப்பாயிருக்கிறது.
உங்கள் விமர்சனத்தால் எனது தூக்கம் கெடுத்தமைக்கு நன்றி.
என்னைப்பற்றி,
செம்மலர் இதழில் உங்கள் கட்டுரையைப் படித்து வலைப்பக்கம் வந்தவன் நான். இன்னும் பல காலமாக நான் படித்துப் பிரமித்து வரும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களையும் தெருப்பக்கம் (அவருக்கு வலையும் தெருதானாமே?) வாசிக்க நேர்ந்தது இன்னுமொரு இன்ப அதிர்ச்சி! சக தோழர்கள் அனைவரையும் எழுதச்சொல்லுங்கள்.
நானும் வருகிறேன்.
நன்றி.
சோ.கிருஷ்ணகுமார்!
பதிலளிநீக்குதங்கள் அறிமுகமும், பகிர்வும் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். நேரம் கிடைக்கும் போது இந்த வலைப்பக்கங்களில் எழுதி வருகிறேன். சீக்கிரம் நீங்களும் வாருங்கள். காத்திருக்கிறேன்.