எப்போதாவது ஒரு கணம் இதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதன்முதலாய் பள்ளியில் சேர்ந்த அன்று, பக்கத்தில் உட்கார்ந்து கூடவே அழுதவன்/ள் எத்தனை வகுப்புகள் கூடவே வந்தான்/ள் என்று தேடியிருக்கிறீர்களா? முதல் வகுப்பில் “உள்ளேன் ஐயா” என்று கையைத் தூக்கியவர்களில், எத்தனை பேர் எட்டாவது வகுப்பிலும் உள்ளே இருந்திருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்திருக்கிறீர்களா? மீதமிருக்கிறவர்களில் எத்தனை பேர் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தார்கள் என்று தேடியிருக்கிறீர்களா? அப்புறம் இருக்கிறது கல்லூரி, மேலும் கல்லூரி...இத்யாதி எல்லாம் முடிந்து பார்க்கிறபோது முதலாம் வகுப்பில் இருந்து கூடவே வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? சிலர் வேறு ஒரு பள்ளியில், கல்லூரியில் படித்திருக்கலாம். மற்றவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்? ஏன் போனார்கள்? எதாவது ஒரு ஓட்டலில் டீக்குடிக்க உட்காரும்போது ”என்ன சார் வேணும்” என்று மேஜையைத் துடைத்துக் கொண்டே கேட்கிறானே, அவனைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள். ஆறாம் வகுப்பில் இரண்டாவது பெஞ்ச்சின் இடது பக்க ஓரம் உட்கார்ந்திருந்த சுப்பையா மாதிரி இல்லை?
இதையெல்லாம் யோசிக்க வைத்தது முப்பத்தாறு பக்கங்களே உள்ள “எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?” புத்தகம். பின்னட்டையில் சொல்லப்பட்டிருந்த குறிப்பு சட்டென்று புத்தகத்தை நெருக்கமாக உணரவைக்கிறது. டாக்டர்.ராமானுஜம் எழுதியிருக்கும் முன்னுரையில் உள்ள வரிகள் இவை.
‘பள்ளி மணியடிக்கும் ஓசையும், அதன்பின் கேட்கும் மாணவர்களின் இரைச்சலான மகிழ்ச்சியும் ஒன்றுதான். பாடங்களிலிருந்து அன்னியப்படுத்தப்பட்டு எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சோகமாக நீளும் மாணவரின் கண்ணீரும் வேதனையும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான். ‘கல்வி மறுக்கப்படுகிறது’ என்ற நமது குற்றச்சாட்டை மழுங்கடித்து ‘இல்லை, உங்கள் எல்லோருக்கும் கல்வி இலவசமாய்த் தருகிறோம். இருந்தும் நீங்கள் கற்கவில்லையென்றால் உங்களுக்கும் இதற்குத் தகுதியில்லை’ என்று புறக்கணிப்பை நியாயப்படுத்தும் ஏற்பாடுதான் இது. மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனை பள்ளிக்கு வரவழைத்து ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று சான்றிதழ் தரும் ஒரு செயல். இந்த நூல் இத்தாலியில் உள்ள பார்பினியா பள்ளியின் மாணவர்கள் தங்களை பெயிலாக்கிய பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.’
பார்பியானா என்பது மலைப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி. அங்குள்ள தேவாலயத்திற்கு வ்ந்த பாதர் மிலானிதான் பார்பினியா பள்ளியின் நிறுவனர். அந்தக் குடியிருப்பைச் சுற்றி பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதிருப்பதைக் கண்டார். அவர்கள் தேர்வுகளில் தவறியோ, ஆசரியர்களின் கண்டிப்புகளால் வெதும்பியோ பள்ளியை விட்டு வெளியேறியவர்கள் என அறிந்தார். பதினொன்று முதல் பதிமூன்று வயதுள்ள பத்து மாணவர்களை வைத்து பள்ளியை உருவாக்கினார். மூத்த மாணவர்கள் இளையவர்களுக்கு அல்லது அறிந்த மாணவர்கள் அறியாதவர்களுக்கு கற்பித்தனர். கற்பித்துக் கொண்டே கற்றனர். ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு சூழலில் ஆசிரியனாகவும் செயல்பட்ட விசித்திரமான பள்ளியாக அது இருந்தது. அங்கு படித்த எட்டு மாணவர்கள், தங்களை ஏற்கனவே பெயிலாக்கிய பழைய பள்ளியின் டீச்சருக்கு எழுதிய கடிதம்தான் Letter to a Teacher ! உலகெங்கும் உள்ள சிந்தனையாளர்களைத் தொட்ட புத்த்கம். அதை தமிழுக்கு அறிமுகம் செய்யும் உன்னத நோக்கத்தோடு ‘எங்களை ஏன் பெயிலானிக்கினீர்கள்’ என்று எழுத்தாளர் ஷாஜஹான் எழுதியிருக்கிறார்.
அன்புள்ள மிஸ்!
உங்களுக்கு எங்களின் பெயர்கள் நினைவிருக்காது. எங்களை நீங்கள்தான் பெயிலாக்கினீர்கள். நாங்கள் உங்களையும் பிற ஆசிரியர்களையும், நீங்கள் பெயிலாக்கியவர்களையும், அந்தப் பள்ளியையும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. நீங்களோ எங்களை பெயிலாக்கி தொழிற்சாலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் அனுப்பிவிட்டு மறந்து போனீர்களே, மிஸ்.
என்று ஆரம்பிக்கும் கடித்தின் முதல் வரியில் நம் தொண்டை அடைத்துப் போகிறது. கடினமான உழைப்பும், தொடர்ந்த புறக்கணிப்பும் மிக்க குடும்பத்தில் இருந்து வந்த தங்களைப் போன்றவர்களுக்கு பள்ளியில் ஏற்படும் உணர்வுகள், மனத்தடைகள் குறித்து பேசுகிறார்கள்.
சிறுவயதிலிருந்தே எனக்குக் கூச்சம் உண்டுதான். எப்போதும் குனிந்து தரையையே பார்த்துக் கொண்டிருப்பேன். யாரையும் நேரில் பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு பலநேரம் சுவரைப் பார்த்திருப்பேன்.
நகரத்தின் தொழிலாளர்களும், மலைப்பகுதியில் வசிக்கும் எங்களைப் போன்றவர்கள்தான். ஏழைகளின் கூச்சம் ஒரு பழந்துயரம். அது கோழைத்தனம் அல்ல. பிடிவாதமாக இருக்க முடியாததால் கூட அத்தகைய கூச்சம் இருக்கலாம்.
மொழி, கணிதம், ஆங்கிலம், புவியியல், வரலாறு, உடற்பயிற்சி என அனைத்துப் பாடங்கள் குறித்தும், அவை நடத்தப்படும் விதம் குறித்தும் மிக ஆழமான விமர்சனங்களை அனுபவரீதியாக இந்தக் கடிதம் எழுப்புகிறது.
“நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு, ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக பள்ளி செயல்படுவது சரியாகுமா?”
“கற்றுக் கொள்வதன் தன்மையறிந்து தேர்வுகளில் கடினப்பகுதிகள் கேட்கப்பட வேண்டும். தொடர்ந்து கடினமானவையே கேட்கப்பட்டால், உங்களுக்கு எங்களை சிக்க வைக்கும் மனோபாவம் இருப்பதாகத்தான் அர்த்தம். அதுவும் திட்டமிட்டுச் சிக்க வைக்கும் சூழ்ச்சி மனோபாவம்”
“இலக்கணம் என்பது எழுதுவதற்குத்தான் பயன்படுகிறது. வாசிப்பதற்கோ, பேசுவதற்கோ இலக்கணமின்றி ஒருவரால் இயங்க முடியும். மெல்ல மெல்ல கேட்டும், எழுதியும் புரிந்து கொள்ளப்பட்டு ஆழமான இலக்கண அறிவு பெற முடியும்.”
“மாணவர்களுக்கு இலக்கு என்பது பெரும் துயரம்தான். ஒவ்வொரு நாளும் அவர்கள் மதிப்பெண்ணுக்காக, தேர்வுக்காக, சான்றிதழுக்காக வேகவேகமாகப் படிக்கிறார்கள். அந்த வேகத்தில் அவர்கள் கற்கும் விஷயங்களில் சிறந்த, நுட்பமான விஷயங்களைத் தவற விட்டிருக்கிறார்கள்.”
“உடற்கல்வி ஆசிரியர் கூடைப்பந்து விளையாடச் சொன்னார். எங்களுக்குத் தெரியவில்லை. மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என்றார். எங்களுக்கு ஓக் மரத்தில் ஏற முடியும். இருநூறு பவுண்டு எடை உள்ள கிளையை வெட்டி பனிபடர்ந்த மலைப்பகுதியில் இழுத்துச் செல்ல முடியும்”.
இப்படியே மிக நுட்பமான பார்வைகளோடு நகரும் கடிதத்தின் இறுதியில் தங்கள் மனதுக்குப் பட்ட சில தீர்மானகரமான முடிவுகளையும் முன்மொழிகிற்து கடிதம்.
“மாணவர்களை பெயிலாக்காதீர்கள். பின் தங்கிய மாணவர்களுக்கு முழு நேரப் பள்ளி நடத்துங்கள்”
“முழு நேரப் பள்ளி எனப்து ஆசிரியத் தம்பதியினரால் நடத்தப்பட முடியும். கணவன் மனைவி இருவரும் தங்கள் வீடுகளிலேயே நேரக் கட்டுப்பாடின்றி கற்பிக்கிற பள்ளி சிறப்பான முழுநேரப் பள்ளீயாக இருக்கும்”
“பாராளுமன்றம் இரு குழுக்களாக விவாதித்தது. வலதுசாரிகள் பாடத்திட்டத்தில் ஒன்றைத் திணிக்க முடிவு செய்தார்கள். இடதுசாரிகள் வேறொன்றைச் சேர்க்க குரல் எழுப்பினார்கள். உங்களைப் போன்ற ஆசிரியர்களால் பெயிலாக்கப்பட்டு பள்ளிக்கனவுகள் தகர்ந்து, கல்வியை இழந்து வெளியேற்றப்படும் எங்கள் நிலையை ஒருவரும் உணரவில்லையே, மிஸ்”
தவிப்பாக இருக்கிறது. வாழ்வின் போக்கில் நாம் தவற விட்ட நம் பள்ளித் தோழர்களை உட்கார்ந்து கண்ணீர் மல்க யோசிக்க வைக்கிறது இந்தப் புத்தகம். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் நாமெல்லாம் எங்கு வேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
மொழி பெயர்த்த எழுத்தாளர் ஷாஜஹான், தன் முன்னுரையில் “கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஆசிரியப்பணி செய்துகொண்டிருக்கும் நான் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளானேன்.” எனக் குறிப்பிடுகிறார். வாசிக்கும் நமக்கும் ஏற்படுகிறது.
புத்தகம் வெளியீடு:
வாசல் பதிப்பகம்
40, D/4 முதல் தெரு,
வசந்த நகர்
மதுரை- 625003
விலை ரூ.20/-
*
நல்லதோரு அறிமுகம்..
பதிலளிநீக்குநன்றி ஸார்.
'பாராளுமன்றம் இரு குழுக்களாக விவாதித்தது. வலதுசாரிகள் பாடத்திட்டத்தில் ஒன்றைத் திணிக்க முடிவு செய்தார்கள். இடதுசாரிகள் வேறொன்றைச் சேர்க்க குரல் எழுப்பினார்கள். உங்களைப் போன்ற ஆசிரியர்களால் பெயிலாக்கப்பட்டு பள்ளிக்கனவுகள் தகர்ந்து, கல்வியை இழந்து வெளியேற்றப்படும் எங்கள் நிலையை ஒருவரும் உணரவில்லையே, மிஸ்'
பதிலளிநீக்குஇது மிஸ்ஸுக்கு மட்டுமல்ல,
இந்திய இடதுசாரிகளுக்கும் பொருத்தமானதுதான்.இவான்
இலிச்,பாலோ பியரே போன்றவர்களை
இடதுசாரி கட்சிகள் தமிழில்
அறிமுகம் செய்திருக்கிறார்களா?.
ஜித்து கிருஷ்ணமூர்த்தி கல்வி,கற்றல்
பற்றி எழுதியுள்ளவைகளை
படித்துப் பாருங்கள்.
அருமையான அறிமுகத்திற்கு நன்றிசார்.
பதிலளிநீக்குஆரம்ப வரிகள் நெகிழ்வு.
Please give the publisher address in English, such that from Bangalore we can buy. To whom should the DD be made payable to? Is there some extra charge for shipping?
பதிலளிநீக்குஅருமையான அறிமுகம்..நன்றி
பதிலளிநீக்குபடிக்கப்படிக்க மனதெல்லாம் எதையோ தேடுகிறது...
பதிலளிநீக்குஇந்த புத்தகத்தின் விலைதான்..... ரொம்பவும் குறைச்சலா இருக்கு!!!
அறிமுகத்திற்கு நன்றிங்க
//கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஆசிரியப்பணி செய்துகொண்டிருக்கும் நான் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளானேன்//
பதிலளிநீக்குஒவ்வொரு டீச்சரும் இவ்வகை குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள்....
அன்புடன் அருணா
வாசித்த பின்பும் நீண்ட நாட்களுக்கு நம்மைச் சுற்றும் கடிதங்களுள் இதுவும் ஒன்று. நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉன்னதமான புதகமாக தோன்றுகின்றது
பதிலளிநீக்குஅதை அறிமுகத்திற்கு நன்றி. சென்னையில் கிடைத்தால் நிச்சயம் வாங்கி படிப்பேன்.
//“நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு, ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக பள்ளி செயல்படுவது சரியாகுமா?” //
இவ்வரிகளின் கேள்விகள்
சிந்திகப்பட வேண்டிது.
நல்லதொரு புத்தக அறிமுகம்... பல நினைவுகளை கிளருகின்றது..
பதிலளிநீக்கு//மூத்த மாணவர்கள் இளையவர்களுக்கு அல்லது அறிந்த மாணவர்கள் அறியாதவர்களுக்கு கற்பித்தனர். கற்பித்துக் கொண்டே கற்றனர். ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு சூழலில் ஆசிரியனாகவும் செயல்பட்ட விசித்திரமான பள்ளியாக அது இருந்தது. //
ஆசிரியர்கள் போதாத பெரும்பாலான நமது கிராமப் பள்ளிகளில் இது சாதாரண நிகழ்வு. எனக்கும் இந்த ஆசிரிய அனுபவம் இருக்கின்றது !!!!
//“நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு, ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக பள்ளி செயல்படுவது சரியாகுமா?//
இப்பொழுதும் சில தனியார் பள்ளிகளைப் பார்த்து நான் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்...
//தன் முன்னுரையில் “கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஆசிரியப்பணி செய்துகொண்டிருக்கும் நான் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளானேன்.” எனக் குறிப்பிடுகிறார். வாசிக்கும் நமக்கும் ஏற்படுகிறது.//
உண்மை...
அருமையானதொரு அறிமுகமும்,கருத்துக்களும் மாதவ்.
பதிலளிநீக்குவாழ்க்கையின் அரைவாசிக்கு கொஞ்சம் குறைவானதொரு காலத்தை முழுவதுமாய் முழுங்க கூடிய, இளமைக்காலம் முழுவதையும் ஆக்கிரமிக்க கூடிய,எல்லாவற்றையும் எளிதாக உள்வாங்குகின்ற உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் வெகு வேகமாக இயங்கக் கூடிய, ஒரு நீண்ட பருவத்தை கல்வி என்னும் ஒரு மாயப்பிசாசிடம் இழக்கவேண்டியதாகிறது.
யாராலோ எந்த நோக்கத்துடனோ உருவாக்கப்பட்ட கொத்தடிமைகளை உருவாக்கும் இந்த கல்வி முறையால் நிர்பந்தங்கள் மற்றும் போட்டி மனப்பான்மையால் ஆசிரியர்களும் எப்பாடு பட்டேனும் சூழ்நிலைக்கு தகுந்த நல்லதொரு களிமண் பொம்மையை உருவாக்க,மானவர்களின் சுயத்தை மழுங்கடிக்க வேண்டியதாகிறது.
என்று தீருமோ தெரியவில்லை.
//மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனை பள்ளிக்கு வரவழைத்து ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று சான்றிதழ் தரும் ஒரு செயல்//
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி !
உங்கள் சிறுகதைகள் தொகுப்பட்டிருக்கிறதா ? அப்படியானால் அவை எங்கு கிடைக்கும்?
பதிலளிநீக்குகொஞ்சம் சொல்லுங்கள்.
மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதாக சொன்னேர்கள். மகிழ்ச்சி.
பகிர்தலுக்கு நன்றி...புத்தகம் வாங்கி படிக்க வேண்டும் ...
பதிலளிநீக்குநோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு, ஆரோக்கியமானவர்களை சேர்த்துக் கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக பள்ளி செயல்படுவது சரியாகுமா?”//
பதிலளிநீக்குஅருமை
கடலூர் மாவட்டத்தில் இந்திய ஜனனாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இரவுபாடசாலைகள் நடத்திக்கொன்டிருந்த போது அதன் மாணவ ஆசிரியர்களுக்கு இரண்டு நிபந்தைகள் விதிக்கப்பட்டது. அதில் ஒன்று வகுப்பறையில் பேசாதே என்று சொல்லக்கஊடாது. இரண்டு கையில் குச்சி வைத்துக்கொள்ளக் கூடாது. இதைக்கேட்ட நமது மாணவ ஆசிரியர்கள் குழப்பிதான் போனார்கள். இது இரண்டும் இல்லை என்றால் அது வகுப்பறை இல்லையே என்று. அப்போது நாங்கள் அவர்களுக்கு கொடுத்த புத்தகங்களில் சில 1.டேஞ்சர் ஸ்கூல். 2. எங்கள ஏன் டீச்சர் பெயிலாக்கினிங்க. 3. பகல் கனவு. 4.ஜன்னலருக்கு அருகே ஒரு சிறுமி இவை அனைத்துமே வகுப்பறைக்குள் குழந்தைகளை மனிதத்தன்மையுடன் பார்க்கின்ற புத்தகங்கள் அவைகளையும் அறிமுகம் செய்யலாம் மாதவராஜ்
பதிலளிநீக்குஅருமையானதொரு பகிர்வு.
பதிலளிநீக்கு//தவிப்பாக இருக்கிறது. வாழ்வின் போக்கில் நாம் தவற விட்ட நம் பள்ளித் தோழர்களை உட்கார்ந்து கண்ணீர் மல்க யோசிக்க வைக்கிறது இந்தப் புத்தகம். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் நாமெல்லாம் எங்கு வேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.//
விடைதெரியாமல் எனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது.
///மொழி பெயர்த்த எழுத்தாளர் ஷாஜஹான், தன் முன்னுரையில் “கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஆசிரியப்பணி செய்துகொண்டிருக்கும் நான் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளானேன்.” எனக் குறிப்பிடுகிறார். வாசிக்கும் நமக்கும் ஏற்படுகிறது.///
பதிலளிநீக்குஉங்களின் பல பதிவுகள் குற்ற உணர்ச்சி ஏற்படுத்துகிறது. இப்பதிவைப் படிக்கத்தொடங்கும் முன்னே இன்று என்ன இருக்குமோ என்று எண்ணியவாறு படித்தேன், அட என்ன ஆச்சரியம் நீங்களும் அதே மனநிலையில் கட்டுரையை முடித்துள்ளீர்கள்.
Such books should be translated into Tamil. Kodos for the translator and publisher.Radical pedagogy is a much neglected topic in Tamil.We need more books and debates on this.
பதிலளிநீக்குஒரு பேரிலி நண்பர் இவான் இலிச்,பாவ்லோ பிரையர் போன்றவர்கலை இடதுசாரிகள் தமிழில் அறிமுகம் செய்திருக்கிறார்களா என்று கேட்டுள்ளார். தமிழில் இவர்கலை மட்டுமல்ல டோட்டோஜானையும்,கிஜுபாய் ப்கேகேயையும்,இந்த Letter to Teacher ஐயும் கிருஷ்ணகுமாரின் கல்விசார் படைப்புகளையும்,லெனினின் கல்விச்சிந்தனைகளையும்,காந்தியின் கல்விச்சிந்தனைகலையும் ஜான் ஹோல்ட்டின் பல நூல்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கல் இடதுசாரிகல்தான் என்பதை ஒரு தகவலாக இங்கு பதிவு செய்கிறேன். இந்திய மாணவர் சங்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து கல்வி பற்றி 25 அற்புதமான புத்தகங்களை ஒருசேர வெளியிட்டுள்ளார்களே அது கூட அறியவில்லையா தாங்கள்?
பதிலளிநீக்குஇங்கு வந்து, இந்த புத்தகம் குறித்த அறிமுகம் பெற்று, கருத்துப் பகிர்வு செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றி.
பதிலளிநீக்குநாம் இழந்ததை, நம் சந்ததியினராவது பெற்றுக் கொள்ள யோசிப்போம்.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சொன்னது போல, கல்வி குறித்து மறு சிந்தனைகளையும், மாற்று முன்மொழிவுகளும் கொண்ட புத்தகங்களை பாரதி புத்தகாலாயம் பொறுப்புடன் குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது.
Hats off.:)
பதிலளிநீக்குசென்ற ஏப்ரலில் முப்பது ருபாய் டிடி அனுப்பினேன். பணம் எடுத்துவிட்டார்கள். சிடிபேன்க் சொன்னது. இரண்டு முறை கால்செய்தேன். இன்னும் புத்தகம் வரவில்லை. ஏமாந்துவிட்டேன்.
பதிலளிநீக்குvijayashankar.india @ gmail