வெயில்

lost hope

ஓட்டமும் நடையுமாய் மெயின் ரோட்டுக்கு வந்து பெட்டிக்கடையில் போய் நின்று “திருச்செந்தூர் பஸ் போய்ட்டா” கேட்டேன்.

“இப்பத்தா அஞ்சு நிமிசத்துக்கு முன்னால போச்சு”

“அடுத்த பஸ் இனும எப்ப”

“முக்கா மண்ணேரத்துக்கும் மேல ஆவுமே தம்பி”

என் ஏமாற்றம் பெட்டிக்கடைக்காரரை பாதித்திருக்க வேண்டும். பாவமாய்ப் பார்த்தார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இதே இடத்தில் வந்து இறங்கும் போது அவரிடம்தான் ஊருக்குள் பூவலிங்கம் வீட்டை விசாரித்தேன். கூடவே திருச்செந்தூருக்கு அடுத்த பஸ் எப்போது வரும் என்று கேட்டும் வைத்திருந்தேன். இந்த சின்ன நெருக்கத்தில் அவரிடமிருந்து இரக்கம்.

வெயில் இரக்கமே இல்லாமலிருந்தது. கண்களை எப்போதும் போல் போல் விரித்துப் பார்க்க முடியாதபடிக்கு உக்கிரம். காலையில் ஷேவ் செய்தது காந்தலெடுத்தது. காய்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திய நாக்கில் கரிப்பு. தலைமுடிக்குள்ளிருந்து வேர்வை வழிந்து புருவத்தில் நிதானித்தது. மூக்கு நுனியில் வந்து சொட்ட நின்றது. காதோரம், பிடரி பூராவும் கசகசவென்றிருந்தது. தொப்பலாய் சட்டை. எரிச்சலூட்டும் பிசுபிசுப்பு. கைக்குட்டையால் அழுந்த துடைத்தேன். காலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது சுத்தமாய் மடித்து வைத்திருந்த கைக்குட்டை கசங்கி ஈரமாய். வேர்வை நின்றபாடில்லை.

இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள். சொல்ல முடியாது. ஒரு மணி நேரம் கூட ஆகலாம். நாம் தாமதமாகும் போது பஸ்கள் சரியான நேரத்துக்கு வந்துவிடுகின்றன. நாம் சரியான நேரத்துக்கு வரும்போது பஸ்கள் தாமதமாகின்றன. பூவலிங்கம் வீட்டிலிருந்திருந்தால் இன்னேரம் பஸ்ஸை பிடித்திருக்கலாம். வீட்டில் விசாரித்து சொஸைட்டிக்கு முன்னால் வேப்ப மரத்தடியில் நாலைந்து பேரோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவரை கண்டுபிடிப்பதற்குள் லேட்டாகிவிட்டது. சரி... பஸ்தான் போனது, பணமாவது வசூலானதா என்றால் அதுவுமில்லை. லோலோவென்று அலைந்ததுதான் மிச்சம்.

நிழலுக்கு என்று இடம் இல்லை. ரெண்டு பெட்டிக்கடை. புகை மண்டிய டீக்கடை. வரிசையாய் வேப்பமரம். காகரஸ் மரங்கள். அவைகளில் சுடுகுஞ்சு கூட இல்லை. கிழேச் சின்னச்சின்னதாய் பேருக்கு நிழல்கள். இப்போது பார்க்கும் வேலையும் இது போலத்தான். சிட்பண்டில் தரும் நானூறு ருபாயில் அப்பா, அம்மா, தம்பி, நான். இப்படி வெளியூருக்கு போனால் பஸ் காசோடு பேட்டா ஐந்து ருபாய். இன்று இந்த சொற்பக் காசைத் தரும்போது முதலாளி எரிச்சலடைவார். வசூலாயிருந்தால் கொஞ்சம் சிரிப்பு முகத்தில் இருக்கும்.

டீக்கடையில் ‘யமுனை ஆற்றிலே... ஈரக்காற்றிலே... கண்ணன் இல்லையோ பாட’ பாட்டு. சோமுவின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு சாயங்காலம் மிதந்து வந்த இதே பாட்டு எவ்வளவு அமைதியையும், சாந்தத்தையும் தந்தது. தாயின் உள்ளங்கையிலிருந்து குழந்தைக்கு கிடைக்கும் அனுபவம் அது. இசையின் இனிமையையும் வெயில் உறிஞ்சி விடுகிறது.

விசுக்கென்று ஒரு சின்ன சத்தத்தில் மாருதி கார். சரியாக பார்ப்பதற்குள் தூரம் போய் விட்டது. கண்ணாடி ஏற்றிவிட்ட மாதிரி இருந்தது. ஏ.சி செய்யப்பட்டிருக்க வேண்டும். வெயிலையே உறிஞ்சி விடுகிற சக்தி. உள்ளே இருப்பவர்களுக்கு வெளியுலகம் சாயங்காலமாய் இருக்கும். ரோட்டின் குறுக்கே அலைஅலையாய் மிதக்கிற தோற்ரம். வெயில் காட்டும் ஜாலம். எங்காவது போய் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து கிடக்க வேண்டும் போலிருக்கிறது.

யோசித்துப் பார்க்கும் போது சவுகரியங்களும், சொகுசுத்தனங்களும் கற்பனைகளில் மட்டுமே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு பருவமும் கஷ்டங்களில் கழிந்தாலும் ஒன்றுக்கொன்று மோசமாகிக்கொண்டே வருகிறது. சின்ன வயசில் பட்டன் அறுந்த கால்ச்சட்டை போட்டுக்கொண்டு ஊர்க்காடெல்லாம் சைக்கிள் டயரை ஒட்டிக்கொண்டு திரிந்த காலங்கள் என்னவோ சுகமாய்த்தான் இருக்கின்றன. நாளுக்கு நாள் வெயில் ஏறிக்கொண்டே இருக்கிறது. இரவுகளில் கூட வெயிலின் நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. ரோட்டில் உருகிய தாரின் வெக்கை முகத்தலடிக்கிறது.

ரோட்டின் மறுபக்கம் நீண்டு பரந்த வயல்வெளி. அறுப்பு முடிந்து வெறும் நிலம் பாத்தி பாத்தியாய். மூனு பேர் காய்ந்து போன வரப்புகளில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். போன மழைக்காலத்தில் பூவலிங்கம் கடன் வாங்கியிருந்தார். இப்போது நான் என்ன செய்ய என்று இந்த நிலம் போல விழிக்கிறார். பணம் தரவில்லையென்றால் மரியாதையில்லாமல் பேசிவிட்டு வா என்று சொல்லியிருந்தார் முதலாளி. எப்படிப் பேச. பூவலிங்கத்திற்கு அப்பா வயசு இருக்கும்.

“யப்பா... என்ன எழவு வெயில் இது” வெறும் மார்பில் துண்டு துடைத்தபடி மூனுபேரில் ஒருவர் ரோட்டுக்கு ஏறி வந்தார்.

“சர்பத் போடுங்கண்ணே” பனை ஓலை விசிறியால் காற்று ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த கடைக்காரர் உற்சாகமானார். வெயில் வியாபாரம்.

“நல்லா வெயிலடிக்கட்டும் அப்பத்தான் இந்த வருசம் விதைப்புக்கு மழை வரும்”

வீடு இப்படித்தான் என்னையும் நம்புகிறது. அழுகையாய் வந்தது. மங்கிய நிலாவொளியில் ஒரு பெரிய கல்லின் மீது கைவைத்தபடி மோன நிலையில் அமர்ந்திருக்கிற ஏசுவின் படமும், கொஞ்சம் தள்ளி ‘வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே... என்னிடம் வந்து இளைப்பாறுங்கள்’ என்னும் வாசகத்தோடு இருக்கும் வீட்டின் முன்னறையும் ஞாபகத்துக்கு வந்தன.

டீக்கடை முன்னால் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து உட்கார்ந்து, அந்த பழைய பெஞ்ச் வழுவழு என்றாகியிருந்தது. வெயிலில் பளபளத்தது. வாட்சைப் பார்த்தேன். பத்து நிமிஷங்கள்தான் ஆகியிருந்தது.

கடகடவென அந்தப் பிரதேசமே அதிரும்படி லாரி ஒன்று ரோட்டில் போனது. பின்னால் குவிந்திருந்த மணலில் கைகால்களை பரத்திப் போட்டு வானம் பார்க்க ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வெயிலிலா! எங்கிருந்து வருகிறான்..! கண்ணிலிருந்து லாரி மறைந்த பிறகும் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதனுக்கு எது வெயில்?

பி.கு: 1992ல் நான் எழுதிய சிறுகதை இது.

 

***

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல கதை தல

    //மணலில் கைகால்களை பரத்திப் போட்டு வானம் பார்க்க ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வெயிலிலா! எங்கிருந்து வருகிறான்..! கண்ணிலிருந்து லாரி மறைந்த பிறகும் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்//

    நாங்க் வெயிலில் கிரிக்கெட் விளையாடி தான் இப்படி கருத்துபோய்ட்டோம் ( இல்லைனா மட்டும்னு சொல்ல பிடாது)

    பதிலளிநீக்கு
  2. வாசிக்கும்பொழுது சித்திரமாய் காட்சிகள் கண்முன்னால் எழுகின்றன. வெய்யிலின் வெக்கை சுடுகிறது. நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. என்ன திடீர்னு கமெண்ட் மாடெரேஷன் போட்டிருக்கீங்க...

    கதை படித்தபிறகு இன்னும் வெயில் மட்டும் மறக்கவேயில்லை. அதன் தாக்கம் இன்னும் சுளீர் என்று அடித்தபடியே இருக்கிறது...

    மிக அருமையாக இருக்கிறது மாதவராஜ் சார்

    பதிலளிநீக்கு
  4. இந்த கதைக்கு நெகட்டிவ் ஓட்டுக்களா////

    என்ன கொடுமைங்க இது!!!இந்த கதைக்கு நெகட்டிவ் ஓட்டுக்களா////

    என்ன கொடுமைங்க இது!!!

    பதிலளிநீக்கு
  5. நல்லா இருக்கு படிக்க!

    // கண்ணிலிருந்து லாரி மறைந்த பிறகும் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதனுக்கு எது வெயில்? //

    ஹ்ம்ம்ம்!!

    //உள்ளே இருப்பவர்களுக்கு வெளியுலகம் சாயங்காலமாய் இருக்கும்//


    //நாம் சரியான நேரத்துக்கு வரும்போது பஸ்கள் தாமதமாகின்றன.//

    ரசித்தேன்! :-)

    பதிலளிநீக்கு
  6. /* நாம் தாமதமாகும் போது பஸ்கள் சரியான நேரத்துக்கு வந்துவிடுகின்றன. நாம் சரியான நேரத்துக்கு வரும்போது பஸ்கள் தாமதமாகின்றன.*/
    :-)) மர்ஃபியின் விதி...

    நல்ல கதை.
    /*அந்த மனிதனுக்கு எது வெயில்?*/
    என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே படித்தேன்...அருமை...

    பதிலளிநீக்கு
  7. காட்சிகளாய் விரியும் நடை அருமை:)

    பதிலளிநீக்கு
  8. முன்பே படித்திருந்தாலும் இப்போது படித்தாலும் பாதிக்கிறது

    பதிலளிநீக்கு
  9. // “திருச்செந்தூர் பஸ் போய்ட்டா” கேட்டேன். //

    எந்த பக்கம்.. தெக்க குலசையிலருந்தா இல்லாடி வடக்க ஆறுமுகநேரியில இருந்தா...

    சும்மா கேட்டேன்.

    கதை வெயிலின் பழுத்த கரங்களால்
    நம்மை தொட்டுப் பார்கின்றது.
    இந்த வெயிலையும் வெக்கையையும்
    அனுபவித்தவன் நான், அந்த வெயில் இன்னமும் எங்கள் தோலில் கருத்து கிடக்கின்றது.
    //“நல்லா வெயிலடிக்கட்டும் அப்பத்தான் இந்த வருசம் விதைப்புக்கு மழை வரும்”

    வீடு இப்படித்தான் என்னையும் நம்புகிறது.//

    இப்படிதான் இன்னமும் நம்பிக்கிட்டிகின்றது அப்பகுதி.
    போன வருசம் பரவாயில்ல நல்ல மழை!

    பதிலளிநீக்கு
  10. வெயிலின் சூட்டையும் அந்த கசகசப்பையும் உங்கள் எழுத்து அனுபவிக்க தந்தது. வெயிலில் விளையாடி வளர்ந்த உடம்பு a/cயின் இதத்தை ஓரளவினை மீறினால் மறுக்கிறது. அலுவகத்தில் ஏன் இப்படி அதிக அளவிற்கு குளுமையூட்டுக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் suit/coat அணிவதால் குளிர் தெரியாது போலும்.
    உங்கள் கதை வெயிலின் தாக்கத்தை பிறர்க்கு உணர்த்த, எனக்கு மட்டும் ஏக்கத்தை உண்டாக்கிவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. கண்டிப்பாக உங்கள் கதை பழைய நினைவுகளை கிளரிவிடுவதை மறுபதற்கில்லை. பல சமயங்களில் வெயிலில் போய் விளையாடி விட்டு அம்மாவிடம் வந்து வாங்கி கட்டியது (அடி தான்)ஞாபகம் வருகிறது. அம்மா அடிக்கும் வயதை தாண்டிய பிறகும் இப்பொழுதும் வேலை நிமித்தமாக வெளியில் கிளம்பினால் வெயில் ஜாஸ்தியா இருக்கு பார்த்து போய்ட்டுவா என்று சொல்லும் அம்மாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நல்லா இருக்கு சார் கதை, காட்சிகளின் நுட்பமான விரிவும், வெக்கைச் சூழலும், மனவோட்டமும் அருமை, அகத்திலும் புறத்திலும் இந்த வெக்கையோடு தான் வாழவேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. நல்ல நுட்பமாக பதிவு செய்திருக்கிறேர்கள். ஆனால் 92ல் எழுதிய கதையை இப்போதுதான் வாசிக்கிறேன் என்பது குற்ற உணர்வாக இருக்கிறது. சோ தர்மனை வாசித்திருக்கிறேன். தனுஷ்கோடி ராமசாமியை வாசித்திருக்கிறேன். உங்களை இதுவரை வாசித்ததில்லை. உங்கள் கதைகளை வாசிக்க வேண்டும்.இம் முறை நாட்டுக்கு வரும் போது வாங்க வேண்டும். கோவில்பட்டி கரிசல் புத்தக நிலையத்தில் கிடைக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  14. வார்த்தைகளின் மூலம் காட்சிப்படுத்தும் கலை உங்களுக்கு அற்புதமாய் வருகிரது. அதிலும் இது போன்ற விஷயங்களில் சொல்லவே தேவை இல்லை.

    92 லேயே எழுதிய கதை எனும் போது இன்னும் சந்தோசம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான சிறுகதை. வாசகரும் கதைமாந்தரோடும் வெயிலோடும் கூட நடக்கும்படியான மொழிநடை.
    பாராட்டுக்கள். தொடருங்கள் நண்பரே !

    பதிலளிநீக்கு
  16. மாது கோடை பற்றி என் blog இல் எழுதியபோதே இக்கதை மனசில் மின்னியது.தலைப்பு நினைவில்லாத்தால் எழுதாமல் விட்டேன்.கோடை -வெயில்- வாழ்க்கை பற்றிய அற்புதமான படைப்பு இது.

    ம்... அந்த மாதுவை மீட்டெடுங்க சார்.

    250 ரூபாய் செலவில் என் கணிணி பழுது நீக்கிட்டேன் மாது.

    thanks for your efforts and pain taken to set right my laptop

    பதிலளிநீக்கு
  17. சுரேஷ்!
    ராமச்சந்திரன் உஷா!
    ஆதவா!
    விழியன்!
    சந்தனமுல்லை!
    அமுதா!
    வித்யா!
    அமுதா!
    தீபா!
    முத்துராமலிங்கம்!
    பாண்டியன் புதல்வி!
    வெங்கடேஷ் சுப்பிரமணியம்!
    யாத்ரா!
    மண்குதிரை!
    நந்தா!
    ரிஷான் ஷெரிப்!

    அனைவரின் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. தமிழ்!

    தொடர்ந்து என்னிடம் அக்கறையுடன் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
    திரும்பவும் சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. நேரம் வாய்க்கிறது,இப்பல்லாம் குதிரை கொம்பா இருக்கு மாதவன்.உங்கள்,காமராஜ் தளம் போவது,அப்பா இருந்த வானியங்குடி வீட்டுக்கு போவது மாதிரி.அந்த ஒட்டு வீட்டில்தான் இப்படி வாசனை கமாளிக்கிற வெயிலை பார்க்க முடியும்.பட்டா சாலை கமருதுன்னு திண்ணைக்கும்,வாசிலில் இருக்கிற வேம்புக்கும் வீட்டு மனிதரெல்லாம் நகர்ந்து கொண்டே இருப்பதை உணர வாய்த்தது இந்த கதை எங்கும்.

    மனசும்,உடலும் சோர்ந்து வருகிற தருணங்கள் உங்கள் தளம் வந்து,ஒரு சிறுகதை வாசித்தால் போதும்.மனசு நிறைய ஊர் வாசனைகளை,மனிதர்களை,நிரப்பிக்கொண்டு போயி,புள்ளை பொண்டாட்டி நினைப்பில்லாமல் தூங்க முடிகிறது.ஒரு நிம்மதியான பயணமாக இருக்கு மாதவன் இந்த மாதிரி எழுத்துக்களை வாசிப்பது-தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு.

    எப்பவும் போல மனிதர்களோடு இழைகிறது மாதவன் இந்த சிறுகதையும்.நம்மை மாதிரியான மனிதர்களுக்கு தான் தூக்கம் ஒரு விஷயம்.சட்டி,சட்டியாய் மணல் அள்ளி லாரி நிரப்புவனுக்கு,வெயிலாவது,கருமாதியாவது...

    //நாளுக்கு நாள் வெயில் ஏறிக்கொண்டே இருக்கிறது. இரவுகளில் கூட வெயிலின் நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. ரோட்டில் உருகிய தாரின் வெக்கை முகத்தலடிக்கிறது. ரோட்டின் மறுபக்கம் நீண்டு பரந்த வயல்வெளி. அறுப்பு முடிந்து வெறும் நிலம் பாத்தி பாத்தியாய். மூனு பேர் காய்ந்து போன வரப்புகளில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். போன மழைக்காலத்தில் பூவலிங்கம் கடன் வாங்கியிருந்தார். இப்போது நான் என்ன செய்ய என்று இந்த நிலம் போல விழிக்கிறார். பணம் தரவில்லையென்றால் மரியாதையில்லாமல் பேசிவிட்டு வா என்று சொல்லியிருந்தார் முதலாளி. எப்படிப் பேச. பூவலிங்கத்திற்கு அப்பா வயசு இருக்கும். “யப்பா... என்ன எழவு வெயில் இது” வெறும் மார்பில் துண்டு துடைத்தபடி மூனுபேரில் ஒருவர் ரோட்டுக்கு ஏறி வந்தார்.//

    இந்த வரிகளை இப்பவும் நீங்கள் வாசித்து பாருங்களேன்...இதைவிட அருமையாய் வெயிலை காட்சி படுத்தி விட முடியுமா மாதவன்.வெறும் மார்பில் துண்டு துடைத்த படி,மூணு பேரில் ஒருவர் ரோட்டுக்கு ஏறி வந்தார் என்பதை எல்லாம் என்னால் பார்க்க வாய்த்தது மாதவன்.வித்தை மக்கா இது.

    அன்பு நிறைய மாதவன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!