சொல்ல வேண்டும் போல இருந்தது - 17.12.2009


முந்தா நாள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு இதோ இன்று விடிகாலை ஹௌரா வந்து சேர்ந்து விட்டேன். 

தொழிற்சங்கப் பணிகள் நிமித்தமான பயணம் இது. இந்த இருபது வருடங்களில் பலமுறை டெல்லிக்கும், சிலமுறை கல்கத்தா,ஹைதராபாத், ஹௌகாத்தி, புத்தகயா, கட்டாக் என தேசத்தின் முக்கிய பிரதேசங்களில் பயணம் செய்ய இப்படி வாய்த்திருக்கிறது. ஒவ்வொன்றும் வாழ்வை புதுப்பிக்கிற  நிகழ்வுகள்தாம். புதிய மனிதர்களோடும், ஜன்னலோரம் கடந்து கொண்டே இருக்கும் புதிய புதிய நிலப்பரப்புகளோடும் நமது லௌகீக வாழ்வின் இறுக்கங்கள் உடைந்து போகின்றன. லேசாகி போகிறோம். எல்லைகள் விரிவடையும் போது மனதும் விசாலமாகிறது.

000

வாழ்வின் மிக முக்கியமான தருணங்களோடு ஒடிக்கொண்டிருக்கிறது ரெயில். "ஏளா.. பதினோரு மணி வண்டி அப்பமே வந்துட்டு, கொழம்புக்கு தேங்காய அரை” என்று ஆச்சி சொல்வதைப் போல ஊரில் பலர் நேரம் கணிப்பதே ரெயில் சத்தத்தை வைத்துத்தான்.  கல்லூரி படிக்கும் போது ஆறுமுகனேரியிலிருந்து திருச்செந்தூர் வரை தினந்தோறும்  ரெயில்தான். படித்து முடித்த பிறகு சென்னைக்கு தனியே முதன்முதலாய் போனது ரெயிலில்தான். ஒன்றரை வருடமாக வேலையில்லாமல் சென்னையில் அவதிப்பட்டு, சாத்தூரில் பாண்டியன் கிராம வங்கியில் வேலை கிடைத்ததும், அப்பாடா என்று பெரும் சந்தோஷத்துடன் ஊருக்குப் புறப்பட்டதும் ரெயிலில். கல்யாணமான அன்றே அம்முவை அழைத்துக் கொண்டு ஊருக்குச் சென்றதும் ரெயிலில்.

வேலைக்குச் சேர்ந்து, சாத்தூரில் நாங்கள் தங்கியிருந்த இடம் வைப்பாற்றை ஒட்டிய பகுதியில் இருந்தது. பாலத்தின் மேல் தடதடக்கும் முத்துநகர், நெல்லை, அனந்தபுரி, கன்னியாகுமரி எகஸ்பிரஸ்களை மாடியிலிருந்து பார்க்க முடியும். இப்போது சாத்தூரில் நாங்கள் குடியிருக்கும் குயில்தோப்பை ஒட்டித்தான் ரெயில்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. நண்பர்கள் ரெயில் தோப்பு என்றும் கிண்டல் செய்வார்கள்.

ரெயிலோடு நானும், என்னோடு ரெயிலும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

000

ங்களோடு பெட்டியில் central industrial security force காவலாளிகள் பயணம் செய்தனர். முடியை ஒட்ட வெட்டிய ஹரியானா இளைஞர்கள். செல்போனில் பேசியது, கால்ச்சட்டையோடு காலை மடக்கிக்கொண்டு தூங்கியது தவர அவர்களைப் பற்றிய சித்திரங்கள் பதியவில்லை. கட்டாக்கில் இறங்கிக் கொண்டார்கள். என்னோடு வந்திருக்கும் தோழர்.சோலைமாணிக்கம் தவிர இந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் வேறு மொழி பேசுபவர்கள்தாம். எனக்கு இந்தி தெரியாது. ‘ஏக்’கிலிருந்து உன்னீஸ், பீஸ் வரை எண்கள் தெரியும். சாய், கேளா, அச்சா என சிற்சில வார்த்தைகளைக் கொண்டு சமாளிக்க வேண்டும். அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையை பரிமாறிக் கொள்வோம். பெட்டியுடன் ஹௌராவில் இறங்கும் போது பிரியமுடன் கைகொடுத்துக் கொண்டோம். நாங்கள் உட்கார்ந்திருந்த இடங்கள் காலியாக இருந்ததில், பிரிவின் வெறுமை உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மொழி என்ன ஊர் என்ன, எல்லோரும் மனிதர்கள்தானே!

000

நேற்று சாயங்காலம் முடிந்த போது ஒரு ரெயில் நிறுத்தத்தில், வேகமாக வந்த ஒரு பையனும், பெண்ணும் ஏறினார்கள். கதவருகே நின்றிருந்த என்னிடம், "புவனேஸ்வரம் போகுமா” என்றனர். அது தெரியாமலா ஏறியிருக்கிறார்கள் என்ற வியப்புடன் நான் “யெஸ்” என்றேன். அங்கேயே நின்று கொண்டார்கள். central industrial security force  காவ்லாளி ஒருவன் அருகில் வந்து அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்தான். அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து, அங்கேயே உட்கார்ந்து கொண்டார்கள். இருட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் மிக அலட்சியமாக அவன் தோள் மீது கைபோட்டுக்கொண்டாள். அந்தக் காவலாளி என்னைப் பார்த்து சிரித்தான். நான் என் இருக்கையில் வந்து அமர்ந்து “காவல் கோட்ட்ம” படிக்க ஆரம்பித்தேன். புவனேஸ்வரம் வந்ததும் அவர்கள் இருவரின் ஞாபகம் வந்தது. வாசலருகே வந்தேன். அவர்களைக் காணவில்லை. இறுக்கமான முகத்துடன் அந்தக் காவலாளி மட்டும் அங்கேயே இருந்தான்.

000

காலையில் 4.15 மணிக்கு ஹௌரா வந்து சேர்ந்தோம். மனிதச் சந்தடிகளோடும், சாயாக்களோடும் வெளிச்சமாக ரெயில்வே ஸ்டேஷன். வெளியே மஞ்சள் நிற வாடகைக்கார்கள் வரிசையாக நின்றிருக்க, எங்களை வந்து டிரைவர்கள் அப்பிக்கொள்ள ஆரம்பித்தனர். வாடகை பேசி, காரில் ஏறி உல்ட்டடங்காவுக்கு பயணம் செய்தோம். ஹுக்ளிநதியின் தொங்குப் பாலத்தின் மீது செல்லும்போது வங்கத்தின் கடந்தகாலம், சரித்திர நினைவுகளாக மேலெழும்பின. சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் பழமையான கட்டிடங்கள் புராதனச் சித்திரங்கள் போல நின்றிருந்தன. கார் நின்றதும், எல்லாம் கலைந்தது. இறங்கும் போது பார்த்தேன். தரையெல்லாம்  கிழிக்கப்பட்ட பான் பீடா பாக்கெட்டுகள். டீ குடிக்கச் சென்றோம். சிறு மண்குப்பியில் தந்தார்கள். குடித்துவிட்டு மண்குப்பியை கீழே போட மனம் வரவில்லை. ஒரு டீ ஒன்றரை ருபாய். நான் கொல்கத்தாவில் நின்று கொண்டிருக்கிறேன்.


Comments

26 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. தாதா.. சாஆஆ !! நியாபகப்படுத்திவிட்டீர்கள் :-)

    ReplyDelete
  2. தொடருங்கள் பயணக் கட்டுரையை.


    சிறு விண்னப்பம்

    என் பெயர் முரளிகண்ணன். முரளிகிருஷ்ணன் என வந்துள்ளது

    ReplyDelete
  3. பயணப் பதிவை எதிர்நோக்கி..

    ReplyDelete
  4. சுவாரசியமான பதிவு! ரயில் பயணங்கள் எப்போதுமே அலாதியான அனுபவத்தைத் தருகின்றன.

    ReplyDelete
  5. அனைத்திலும் வித்தியாசமான பதிவு.

    ReplyDelete
  6. கொல்கத்தாவின் வீதிகள் எப்போதும் மனதுக்கு மிகவும் தெரிந்த பழக்கப்பட்ட வீதீகளாகவே எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. முதன் முறையாக அவ்வீதியின் வழியே செல்ல நேரும்போது கூட இந்த உணர்வை உணரத்தவறுவதில்லை. மூச்சுமுட்டும் அளவுக்கு நெருங்கிய கட்டிடங்களும், மிகவும் பழமையானதும் அழுக்கானதுமான சுவர்களும், இருந்தும் கூட தனக்கான கலாச்சார சின்னங்களை அழிந்துவிடாமல் காப்பாதில் ஆர்வம் மிக்க மனிதர்கள். நல்ல பல அனுபவங்கள் வாய்க்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தொடருங்கள் உங்கள் பயணத்தை..

    ReplyDelete
  8. உங்கப் பயணம் பற்றி கேட்கும்போதே ஆசையாயிருக்குது.இந்தி தேரியாதுன்னு சொல்லிட்டு, இவ்ளோ தெரிஞ்சுருக்கே!
    ஜோடிகளின் புதிர்,ஆவலாய்,அழுத்தமாய் நெஞ்சில்.

    தோழரே, கொல்கத்தா ஏன் இவ்வளவு அழுக்காகவும்,பழமையில் ஊறி, முன்னேறாமலும், மனிதனை மனிதனே இழுக்கும் நிலையென்றும்
    கேட்டுத் தெரிந்து வாருங்கள். (நல்லவிதமாத்தான் வம்பு வாங்கறேன்)

    ReplyDelete
  9. உங்க கூட பயணிச்ச மாதிரி இருக்கு

    ReplyDelete
  10. யாத்ரீகன்!
    முரளிக்கண்ணன்!
    நரசிம்!
    தீபா!
    வெயிலான்!
    கேபிள் சங்கர்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. கிருத்திகா!
    //நல்ல பல அனுபவங்கள் வாய்க்க வாழ்த்துக்கள்.//

    பல அனுபவங்கள் வாய்க்க நேரமில்லை. இன்ரே கிளம்புகிறேன். ஆனாலும் சொல்வதற்கு நிறைய இருக்கு.

    ReplyDelete
  12. முத்துவேல்!
    //மனிதனை மனிதனே இழுக்கும் நிலையென்றும்
    கேட்டுத் தெரிந்து வாருங்கள்//

    இது எனக்கும் தோன்றியது. கேட்டேன். இங்கு கை ரிக்‌ஷாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், பெரும்பாலும் பீகாரிகள்தான் இங்கு வந்து இந்த்த் தொழில் செய்கின்றனராம். வங்கிகளுக்கு, அவர்களுக்கு கடன் கொடுத்து வேறு தொழில் பார்க்க அரசு பரிந்துரை செய்தாலும், வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனவாம். கேட்டால் அவர்களுக்கென்று ரேஷன் கார்டு, முகவரிகள் இருப்பதில்லையாம்.

    ReplyDelete
  13. யாத்ரா!

    ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  14. உங்கள் வார்த்தைகளோடு நானும் இரயிலில் வந்ததைப் போன்று இருக்கிறது!

    எஸ்ராவோடு உண்டான உங்கள் நட்பைக் காணும்பொழுது, உங்கள் பதிவில் எழுதுவதை நினைத்து உவகையுறுகிறேன்.

    ReplyDelete
  15. சுவாரஸ்யமான பதிவு!

    //நான் கொல்கத்தாவில் நின்று கொண்டிருக்கிறேன். //
    அட்டகாசமான கடைசி வரி. இதன் பிறகு அங்கே பார்த்த இடங்கள், பழகிய மனிதர்கள் குறித்தும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  16. நீங்க சாத்தூரா?
    நானும் சாத்தூர் தான்.
    உங்க எழுத்துக்கள்
    ரொம்ப நல்லா இருக்கு.
    நிறைய எழுதுங்க. தொடர்ந்து படிக்க ஆவலா இருக்கேன்.

    ReplyDelete
  17. உங்கள் மற்ற ரயில் பயணங்களையும் அதன் அனுபவங்களையும் கூட எழுதுங்களேன்.

    ReplyDelete
  18. ஆதவா!
    //எஸ்ராவோடு உண்டான உங்கள் நட்பைக் காணும்பொழுது//

    அவருக்குச் சாத்தூருக்கு அருகில்தான் சொந்த ஊர். அவர் அண்ணன் சாத்தூரில்தான் இருக்கிறார். அதனால் பழக்கம். அவருடன் பேசிக்கொண்டே இருக்காலம். அலுப்புத்தட்டாது.

    ReplyDelete
  19. ஜோ!

    ஒருநாள்தான் கல்கத்தாவில் இருந்தேன். ஆனாலும் எழுத நிறைய இருக்கின்றன. எழுதுவேன்.

    ReplyDelete
  20. தீப்பெட்டி!

    ரொம்ப சந்தோஷம். சாத்தூருக்கு வரும்போது சொல்லுங்க. சந்திப்போம்.

    ReplyDelete
  21. பட்டம்பூச்சி!

    எழுத நிறைய இருக்கின்றன. நேரம்தான் வாய்க்கணும்.

    ReplyDelete
  22. //ஒரு டீ ஒன்றரை ருபாய். நான் கொல்கத்தாவில் நின்று கொண்டிருக்கிறேன்//
    கவனிக்கப்படவேண்டிய வரிகள். அருமையான பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  23. கதிர்!

    கவனித்து விட்டீர்களா?

    ReplyDelete
  24. போஸ்டன் பாலா!

    நன்றிங்க.

    ReplyDelete

You can comment here